Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
KeetruLiteratureArticle
கட்டுரை

லசந்தா விக்ரமதுங்காவின் மரண சாசனம்
சுந்தரராஜன்

(இலங்கையிலிருந்து வெளியாகும் சண்டே லீடர் என்ற ஆங்கில வாரப்பத்திரிகையின் முதன்மை ஆசிரியராக பணியாற்றிய லசந்த விக்ரமதுங்க 11-01-2009 வெளியாக வேண்டிய இதழுக்காக கடந்த ஜனவரி 7ம் தேதி எழுதிய தலையங்கம் இது. இதை எழுதிய அடுத்த நாளே அவர் அடையாளம் தெரியாத நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார். தனது மரணத்தின் பாதையை அறிந்திருந்த அவருடைய மரண சாசனமாக இந்த தலையங்கம் அமைந்துள்ளது.)

Lasantha Wickramatunga ராணுவத்தைத் தவிர வேறு எந்த ஒரு தொழிலும் - தொழில் நிமித்தமாக - அந்த தொழில் புரிபவர்களின் உயிரை பலியாக கேட்பதில்லை; இலங்கையில் இந்த வகையில் பத்திரிகைத் தொழிலும் இருக்கிறது. கடந்த சில வருடங்களாக ஊடக சுதந்திரத்தின் மீதான தாக்குதல்கள் அதிகரித்து வருகிறது. மின்னணு மற்றும் அச்சு ஊடக நிறுவனங்கள் எரிக்கப்படுவதும், வெடிகுண்டு தாக்குதலுக்கு உள்ளாவதும், மூடப்படுவதும், பலவந்தமாக நிறுத்தப்படுவதும் தொடர்கதையாகி வருகிறது. எண்ணற்ற செய்தியாளர்கள் தாக்கப்படுகின்றனர், மிரட்டப்படுகின்றனர், படுகொலை செய்யப்படுகின்றனர். இந்த அனைத்தும் - கடைசி அம்சம் உட்பட - எனக்கும் பொருந்தும் என்பது எனக்கு மிகவும் சிறப்பு செய்வதாக உள்ளது.

பத்திரிகைத் தொழிலில் மிக நீண்ட காலமாக நான் இருந்து வருகிறேன். உண்மையில், இந்த 2009ம் ஆண்டு, சன்டே லீடர் பத்திரிகையின் 15ம் ஆண்டாகும். இந்த காலக்கட்டத்தில் இலங்கையில் பல மாறுதல்கள் நடந்துள்ளன. அவற்றில் பெரும்பாலான மாற்றங்கள் விரும்பத்தக்கவை அல்ல என்பதை நான் உங்களுக்கு சொல்லித் தெரிய வேண்டியதில்லை. எல்லையில்லா ரத்த தாகம் கொண்டவர்களால் இரக்கமற்று தொடுக்கப்பட்ட உள்நாட்டுப்போரின் மத்தியில் நாம் இருக்கிறோம். பயங்கரவாதிகளாலோ, அரசாங்கத்தாலோ ஏவப்படும் பயங்கரவாதம் என்பது நமது அன்றாட நிகழ்ச்சியாகிவிட்டது. சுதந்திரத்தை முடக்க விரும்பும் அரசு முக்கிய நடவடிக்கையாக படுகொலைகளை நிகழ்த்தி வருகிறது. இன்று பத்திரிகையாளர்கள் கொல்லப்படுகின்றனர். நாளை நீதிபதிகள் கொல்லப்படுவார்கள். இந்த இரு தரப்பினருக்கும் ஆபத்துகள் அதிகரிக்கின்றன. நம்பிக்கைதான் குறைந்து வருகிறது.

இருந்தபோதிலும் ஏன் இந்த தொழிலை தொடர்ந்து செய்கிறோம் என்று நான் அவ்வபோது ஆச்சரியப்படுவதுண்டு. நானும் ஒரு கணவன்தான். எனக்கும் மூன்று அருமையான குழந்தைகள் உள்ளனர். எனக்கும் கடமைகளும், பொறுப்புகளும் உள்ளன, நான் சட்டம் அல்லது பத்திரிகை ஆகிய எந்தத் துறையில் இருந்தாலும். ஆபத்துகளை விலை கொடுத்து வாங்குவது தேவைதானா? தேவையில்லை! என்றே பலரும் கூறுகின்றனர். நண்பர்கள் என்னை வழக்குரைஞர் தொழிலுக்குத் திரும்புமாறு கூறுகின்றனர். அத்தொழில் எனக்கு மேம்பட்ட மற்றும் பாதுகாப்பான வாழ்வைத் தரும் என்று அவர்கள் நம்புகின்றனர். மற்றவர்கள், குறிப்பாக இரு தரப்பிலும் உள்ள அரசியல் தலைவர்கள் அரசியலுக்கு வருமாறு என்னை அழைக்கின்றனர், நான் விரும்பும் துறைக்கு என்னை அமைச்சராக்குவதாகவும் கூறுகின்றனர். இலங்கையில் பத்திரிகையாளர்கள் சந்திக்கும் ஆபத்துகளை உணர்ந்த வெளிநாட்டுத்தூதர்கள், என்னை இலங்கையிலிருந்து வெளியேறுமாறும் - அவர்கள் நாட்டில் பாதுகாப்பாக வசிக்குமாறும் அழைக்கின்றனர். எனக்கு முன்னால் பல வாய்ப்புகள் இருந்தாலும், அதில் ஒன்றைக்கூட நான் செய்வதாக இல்லை.

உயர்ந்த பதவி, புகழ், செல்வம், பாதுகாப்பு போன்றவை அழைத்தாலும், அவற்றிற்கெல்லாம் மேலாக உள்ளுணர்வின் அழைப்பே முக்கியமாக இருக்கிறது.

நாங்கள் என்ன பார்க்கிறோமோ அதை, அவ்வாறே மண்வெட்டி என்றோ, திருடன் என்றோ, கொலைகாரன் என்றோ அப்படியே எழுதுவதால் சண்டே லீடர் பத்திரிகை சர்ச்சைக்குரிய ஒன்றாக விளங்குகிறது. நாங்கள் வார்த்தை விளையாட்டுகளுக்கு பின்னே பதுங்குவதில்லை. நாங்கள் வெளியிடும் புலனாய்வு செய்திகள் அனைத்தும் உரிய ஆதாரங்களுடன் வெளியிடப்படுகின்றன. அதற்காக ஆபத்து வரும் வாய்ப்புகள் இருப்பது தெரிந்தும் எங்களுக்கு ஆதாரங்களை வெளிப்படுத்தும் சமூகப்பொறுப்புள்ள மக்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறோம். நாங்கள் பல ஊழல்களை வெளிக்கொணர்ந்து இருந்தாலும் கடந்த 15 ஆண்டுகளில் நாங்கள் தவறு செய்துவிட்டதாக யாரும் நிரூபித்தது இல்லை. அதேபோல எங்களுக்கு எதிரான எந்த வழக்குகளும் வெற்றிகரமாக முடிக்கப்பட்டதும் இல்லை.

சுதந்திரமான பத்திரிகை என்பது கண்ணாடியாக இயங்கி ஒப்பனை இல்லாத உண்மையான சமூகத்தின் முகத்தை மக்களுக்குக் காட்டும். பத்திரிகைகளின் மூலமாகத்தான் நாட்டின் நிலை குறித்தும், நாட்டை நிர்வகிக்க தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர்கள் குறித்தும் மக்கள் அறிந்துகொள்ள முடியும். இந்தத் தலைவர்கள்தான் குழந்தைகளுக்கு நல்ல எதிர்காலத்தை கொடுப்பதற்காக தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள். சில நேரங்களில் இந்த கண்ணாடியின் மூலம் நீங்கள் பார்க்கும் உருவம் மகிழ்ச்சி அளிப்பதாக இல்லாமல் இருக்கிறது. இந்நிலைக்காக நீங்கள் முணுமுணுத்துக் கொண்டிருக்கும் வேளையில், உங்களுக்காக அந்தக் கண்ணாடியை தாங்கிப் பிடித்துக் கொண்டிருக்கும் பத்திரிகையாளர்கள் மிகப்பெரும் ஆபத்தில் இருக்கின்றனர். இதுதான் எங்களுக்கான அழைப்பு - நாங்கள் புறக்கணிக்க முடியாத அழைப்பு.

ஒவ்வொரு பத்திரிகைக்கும் ஒவ்வொரு பார்வை இருக்கும், எங்கள் பார்வையை நாங்கள் மறைத்ததில்லை. இலங்கையை ஒரு வெளிப்படையான, மதசார்பற்ற, சுதந்திர ஜனநாயக நாடாக நாங்கள் பார்க்க விரும்பினோம். இந்த வார்த்தைகளுக்கு உள்ளே இருக்கும் பொருளை கவனியுங்கள். வெளிப்படையாக என்றால் அரசு என்பது மக்களுக்கு பதில் சொல்ல கடமைப்பட்டதாக, அரசு மீது மக்கள் வைத்துள்ள நம்பிக்கையை தவறாகப் பயன்படுத்தாததாக இருக்க வேண்டும். மதசார்பின்மை என்பது, பல்வேறு தேசிய இனங்களைக் கொண்ட - பல கலாசாரங்களைக் கொண்ட நம்முடைய சமூகத்தில் நாம் அனைவரும் ஒன்றிணைவதற்கான முக்கியமான கருத்தாகும். சுதந்திரம் என்பது, மனிதர்கள் பலவிதங்களில் வித்தியாசமாக படைக்கப்பட்டுள்ளனர் என்பதையும், அவர்கள் இருக்கும் முரண்பட்ட விதங்களிலேயே ஏற்றுக்கொள்வதுமாகும். நாம் விரும்பும் விதத்தில் அவர்கள் இருக்க வேண்டும் என்று கூறுவதல்ல. மேலும் ஜனநாயகம் என்பது... இது ஏன் முக்கியமானது? என்பதையும் நான் விளக்க வேண்டும் என்று எதிர்பார்த்தால், மன்னிக்கவும்! நீங்கள் இந்தப் பத்திரிகையை வாங்குவதை நிறுத்திவிடுவதே நல்லது.

பெரும்பாலானவர்கள் ஆதரிக்கிறார்கள் என்பதற்காக ஒரு கருத்தை கேள்வி கேட்காமல் எழுதுவதன் மூலம் - பிரதிபலிப்பதன்மூலம் சண்டே லீடர் பத்திரிகை பாதுகாப்பு தேடியதில்லை. கருத்து முரண்பாடுகளை எதிர்கொள்வதன் மூலமாகவே இதுவரை பத்திரிகையை நடத்தி வந்திருக்கிறோம். இத்தனை ஆண்டுகளாக நாங்கள் கூறிய கருத்துகள் மக்களில் பலருக்கும் சுவை அளிப்பதாக இல்லை என்பது தெரியும். உதாரணமாக, தனிநாடு கேட்கும் தீவிரவாதத்தை ஒடுக்கும் அதே நேரத்தில், பயங்கரவாதத்திற்கான மூல காரணங்களை கண்டறிந்து அவற்றையும் களைய வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். மேலும் இலங்கை இனப்பிரசினையை பயங்கரவாத பூதக்கண்ணாடி மூலமாக மட்டுமே பார்க்காமல், வரலாற்று நோக்கிலும் இந்தப் பிரச்சினையை பரிசீலிக்க வேண்டும் என்றும் கூறிவருகிறோம். பயங்கவாதத்திற்கு எதிரான போர் என்று கூறிக்கொண்டு சொந்த நாட்டு மக்கள் மீதே குண்டுகளை வீசி படுகொலை செய்வதை வழக்கமாக கொண்டுள்ள நாடு உலகிலேயே இலங்கை ஒன்றுதான் என்பதையும் எடுத்துக்கூறி அதை எதிர்த்து வருகிறோம். இத்தகைய கருத்துகளுக்காக நாங்கள் தேசவிரோதிகள் என்று முத்திரை குத்தப்படுகிறோம். இது உண்மையிலேயே தேசவிரோதம் என்றால் அதைப் பெருமிதத்துடன் ஏற்கிறோம்.

சண்டே லீடர் பத்திரிகைக்கு அரசியல் நோக்கம் இருப்பதாக பலரும் கருதுகின்றனர். ஆனால் உண்மையில் அப்படி இல்லை. எதிர்கட்சிகளை விமர்சனம் செய்வதைவிட தீவிரமாக அரசை விமரிசனம் செய்வது ஏனென்றால், கிரிக்கெட் விளையாட்டில் பேட்ஸ்மேனை தவிர்த்து, பீல்டிங் பகுதியில் பந்து வீசுவதில்லையோ, அதேபோல் ஆட்சியில் உள்ளவர்களுக்கு எதிராகத்தான் தீவிரமாக விமர்சனங்களை வைக்க முடியும்; எதிர்கட்சிகள் மீதல்ல. கடந்த காலத்தில் ஐக்கிய தேசியக் கட்சி ஆட்சியில் இருந்தபோதும், அந்த ஆட்சியின் அத்துமீறல்களை, ஊழல்களை வெளிக்கொணர்ந்து அன்றைய ஆட்சியின் தொண்டையில் சிக்கிய முள்ளாக நாங்கள் இருந்தோம். இத்தகைய எங்களின் போக்கும் அந்த ஆட்சி வீழக் காரணமாக இருந்தது.

போரை நாங்கள் எதிர்க்கிறோம் என்பதற்காக நாங்கள் தமிழீழ விடுதலைப்புலிகளை ஆதரிக்கிறோம் என்று அர்த்தமில்லை. உலகில் உள்ள மிகவும் இரக்கமற்ற - ரத்தவேட்கை கொண்ட இயக்கங்களில் ஒன்றாக அந்த இயக்கம் இருக்கிறது. அந்த இயக்கம் அழிக்கப்படவேண்டும் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. ஆனால் அவ்வாறு கூறுவதால், தமிழ் மக்களின் மனித உரிமைகளை பறிப்பதையும், அவர்கள் மீது இரக்கமற்று துப்பாக்கிச்சூடு மற்றும் குண்டுமழை பொழிவதையும் ஏற்க முடியாது. ஏனெனில் அது தவறானது மட்டுமல்ல, புத்தரின் தம்மத்தை பாதுகாப்பதாகக் கூறும் நாம் வெட்கப்படவேண்டியதும் ஆகும். இத்தகைய அத்துமீறிய தாக்குதல்கள், செய்தித்தணிக்கை காரணமாக பொதுமக்களுக்கு உரியமுறையில் சென்று சேர்வதில்லை.

இதைவிட நாட்டின் வடக்கு-கிழக்குப் பகுதியில் குவிக்கப்பட்டுள்ள ராணுவத்தின் காரணமாக அப்பகுதியில் வசிக்கும் தமிழ் மக்கள், அவர்களின் சுயமரியாதையை இழந்து, நிரந்தரமாக இரண்டாம்தர குடிமக்களாக வசிக்க வேண்டிய அவலமும் ஏற்பட்டுள்ளது. போர் முடிந்த பின்னர், அப்பகுதியில் மறுசீரமைப்பு மற்றும் மேம்பாட்டு பணிகளை மேற்கொள்வதன்மூலம் சீற்றத்தை தணிக்கமுடியும் என்று கனவு காணக்கூடாது. இந்தப்போரின் ரணங்கள் நிரந்தர வடுக்களை ஏற்படுத்திவிடும். இதன் விளைவாக தமிழ் மக்களிடம் மேலும் கசப்புணர்வும், வெறுப்புணர்வுமே ஏற்படும். அதை சமாளிப்பது எளிதல்ல. அரசியல் ரீதியாக தீர்வு காணக்கூடிய ஒரு பிரச்சனை, அனைத்து தரப்பு மக்களையும் துன்புறுத்தக்கூடிய சீழ்ப்பிடித்த கொடுங்காயமாக மாறிவிடும். நான் கோபமடைந்தும், சலிப்புற்றும் இருக்கிறேன் என்றால், எனது நாட்டு பெரும்பான்மை மக்களும் - முழு அரசும் - வெளிப்படையாகத் தெரியும் இந்த உண்மையை பார்க்கத் தவறுவதால்தான்.

நான் இரண்டு முறை தாக்கப்பட்டதும், எனது வீடு துப்பாக்கி குண்டுகளால் துளைக்கப்பட்டதும் அனைவருக்கும் தெரியும். இந்த சம்பவங்கள் குறித்து உரிய விசாரணை நடத்துவதாக அரசுத்தரப்பில் உறுதி அளிக்கப்பட்டாலும், இந்த தாக்குதல் குறித்த விசாரணை நடத்தி, இந்தத் தாக்குதலுக்கு காரணமானவர்கள் கண்டுபிடிக்கப்படவில்லை. இந்த அனைத்து சம்பவங்களும் அரசின் தூண்டுதல் காரணமாகவே நடந்தது என்று நான் நம்புவதற்கு காரணங்கள் உள்ளன. இறுதியில் நான் கொல்லப்பட்டால், அரசுதான் என்னை கொன்றிருக்க வேண்டும்.

இதில் துயரமான வேடிக்கை என்னவென்றால், நானும் மஹிந்தாவும் கடந்த கால்நூற்றாண்டாக நண்பர்களாக இருப்பது பொதுமக்களில் பலருக்கும் தெரியாது. அவரை அவரது முதல் பெயரான ‘மஹிந்தா’ என்ற பெயரிலும், சிங்கள மொழியில் அழைக்கும் ‘ஓயா’ என்று அவரை இன்றும் அழைக்கும் மிகச்சிலரில் நானும் ஒருவனாக இருப்பேன். அதிபர் மாதத்திற்கு ஒருமுறை பத்திரிகை ஆசிரியர்களை சந்திக்கும் கூட்டத்திற்கு நான் செல்வதில்லை. எனினும் சில பின்னிரவு நேரங்களில் தனியாகவோ, நெருங்கிய நண்பர்கள் சிலருடனோ அதிபரின் இல்லத்திலேயே சந்தித்து அரசியலைப்பற்றியும், பழைய இனிமையான நாட்களைப் பற்றியும் பேசுவதுண்டு. இந்த இடத்தில் சில குறிப்புகளை கூற விரும்புகிறேன்.

நண்பர் மஹிந்தா! கடந்த 2005ம் ஆண்டில் இலங்கை சுதந்திரக் கட்சியின் அதிபர் வேட்பாளராக நீங்கள் உருவெடுத்தபோது, எங்கள் பத்திரிகையைப்போல இதமான வரவேற்பு உங்களுக்கு வேறு எங்கும் கிடைக்கவில்லை. உண்மையில் உங்கள் முதல் பெயரை குறிப்பிடுவதன்மூலம் பல்லாண்டாக நடைமுறையில் இருந்த சம்பிரதாயங்களை உடைத்தோம். மனித உரிமைகள் மற்றும் சுதந்திரம் மீது அப்போது நீங்கள் கொண்டிருந்த கொள்கைகளுக்காக உங்களை நாங்கள் வரவேற்றோம். ஆனால் ‘ஹம்பன்டோடா’வுக்கு உதவும் முறைகேட்டில் நீங்கள் முட்டாள்தனமாக ஈடுபட்டபோது நாங்கள் கனத்த இதயத்தோடு அதை வெளியிட்டோம். மேலும் முறைகேடு செய்யப்பட்ட பணத்தை திருப்பி அளிக்கும்படியும் வலியுறுத்தினோம். அதை நீங்கள் பல வாரங்கள் கடந்து செய்தீர்கள். உங்கள் மீதான நன்மதிப்பில் மிகப்பெரும் தீயவிளைவை அது ஏற்படுத்தியது. அது உங்களை இன்றளவும் துரத்தி வருகிறது.

Rajapakse அதிபர் பதவி மீது உங்களுக்கு ஆர்வமில்லை என்று நீங்களே என்னிடம் கூறி இருக்கிறீர்கள். நீங்கள் அதிபர் பதவியைத்தேடி செல்லவில்லை: அப்பதவி தங்கள் மடியில் விழுந்தது. உங்கள் மகன்களே உங்களின் மகிழ்ச்சி என்றும், அரசு நிர்வாகத்தை உங்கள் சகோதரர்களிடம் ஒப்படைத்துவிட்டு, உங்கள் மகன்களோடு நேரத்தை செலவிடுவதே உங்களுக்கு விருப்பமானது என்றும் நீங்கள் கூறியிருக்கிறீர்கள். இப்போது எனது மகனுக்கும், மகளுக்கும் தந்தை இல்லாது போகும் சூழலில் அரசு நிர்வாகத்தை செம்மையாக நடத்துவது யார் என்பது அனைவருக்கும் தெரியவருகிறது.

எனக்கு மரணம் ஏற்படும்போது, நீங்கள் வழக்கமான சடங்குச் சொற்களை கூறுவதோடு, முழுமையான விசாரணை செய்யுமாறு காவல்துறைக்கு உத்தரவிடுவீர்கள் என்பது எனக்குத் தெரியும். ஆனால் இதே போன்ற மற்ற சம்பவங்களில் நடந்ததைப்போல இந்த விசாரணையிலும் எந்த உண்மையும் வெளிவராது என்பதும் எனக்குத் தெரியும். ஆனால் உண்மையைச் சொன்னால், எனது மரணத்திற்குப் பின்னால் யார் இருப்பார்கள் என்பது நாம் இருவருக்கும் தெரியும், அந்த பெயரைச் சொல்லும் துணிவு உங்களுக்கு இல்லாவிட்டாலும்கூட. ஏனெனில் என் வாழ்க்கையோடு, உங்கள் வாழ்க்கையும் அந்த உண்மையில் சிக்கியிருக்கிறது.

இலங்கை தேசம் குறித்து நீங்கள் இளமையில் கண்ட கனவுகள், நீங்கள் அதிபராகப் பதவியேற்ற இந்த மூன்று ஆண்டுகளில் உடைந்த செங்கற்களைப்போல தூள்தூளாகி விட்டது. தேசபக்தி என்ற பெயரில் மனித உரிமைகளைப் பறிப்பதிலும், ஊழல் சாம்ராஜ்யத்தை உருவாக்கியதிலும், பொதுமக்களின் வரிப்பணத்தை சூறையாடியதிலும் மற்றெந்த அதிபரையும்விட நீங்களே மிஞ்சி இருக்கிறீர்கள். உண்மையைச் சொல்லப்போனால், பொம்மை கடையில் இறக்கிவிடப்பட்ட குழந்தையைப்போல நீங்கள் இருக்கிறீர்கள். ஆனால் அந்த உதாரணம்கூட உங்களுக்குப் பொருந்தாது. ஏனெனில் நீங்கள் இந்த மண்ணில் ஏற்படுத்திய ரத்தக்கறையையும், குடிமக்களின் மனித உரிமைகளைப் பறித்ததையும்போல எந்தக் குழந்தையாலும் செய்ய முடியாது. நீங்கள் பதவி போதையில் மூழ்கி இருப்பதை உங்களால் உணரமுடியாது: இந்த போதை தலைக்கேறிய நிலையில் உங்கள் மகன்கள் இருப்பதைப் பார்த்து நீங்கள் வருந்தும் நிலை ஏற்படலாம். அது துயரத்தையை கொண்டுவரும். என்னைப் பொறுத்தவரை, தெளிவான மனநிலையில் என்னைப் படைத்தவனிடம் நான் செல்கிறேன். உங்களுக்கான நேரம் இறுதியாக வரும்போது, நீங்களும் அதையே செய்வீர்கள் என்று நம்புகிறேன். அதை விரும்புகிறேன்.

என்னைப் பொறுத்தவரை, நான் எந்த தனிமனிதனுக்கும் பணியாமல், தலை நிமிர்ந்து வாழ்ந்த நிறைவு இருக்கிறது. நான் இந்தப் பாதையில் தனியே பயணம் செய்யவில்லை. சக பத்திரிகையாளர்களும் என்னோடு பயணம் செய்துள்ளனர். அவர்களில் பலர் கொல்லப்பட்டுள்ளனர்; விசாரணையின்றி சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்; தூர தேசங்களுக்கு நாடு கடத்தப்பட்டுள்ளனர். அதிபரான நீங்கள் முன்னொரு காலத்தில் எந்த பத்திரிகை சுதந்திற்காக பாடுபட்டீர்களோ, அதே பத்திரிகை சுதந்திரத்திற்காக தற்போது பாடுபடும் மேலும் சில பத்திரிகையாளர்கள் மரணத்தின் நிழலில் உள்ளனர். எனது மரணம் தங்கள் கண்காணிப்பின் கீழ் நிகழ்வதை நீங்கள் மறக்கவே முடியாது. எனது கொலையாளிகளை நீங்கள் பாதுகாப்பதைத்தவிர வேறு வாய்ப்பில்லாத நிலையில் நீங்கள் இருப்பீர்கள் என்பது எனக்குத் தெரியும். அவர்கள் எப்போதும் தண்டிக்கப்படாத வகையில் நீங்கள் பார்த்துக்கொள்வீர்கள் என்பதும் எனக்குத் தெரியும். உங்களுக்கு வேறு வழியே இல்லை. உங்களுக்காக நான் வருந்துகிறேன். உங்களைப் பதவியில் அமர்த்தியுள்ள உங்கள் குடும்பத்தினர், உங்கள் பாவங்களுக்காகவும் கடவுளிடம் நீண்ட நேரம் முழந்தாளிட்டு பாவமன்னிப்பு கேட்பார்கள்.

சண்டே லீடர் பத்திரிகையின் வாசகர்களுக்கு சொல்ல விரும்புவது என்னவென்றால், எங்கள் பணியில் துணை நின்றதற்காக உங்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். சிறுபான்மையினரின் நலன்களுக்காக, குரல் எழுப்பக்கூட நாதியற்றவர்களுக்காக குரல் கொடுத்திருக்கிறோம். வேர்களை மறந்துவிட்டு தலை கொழுத்துத் திரிபவர்களின் ஊழல்களை வெளிப்படுத்தி உங்கள் வரிப்பணம் விரயமாக்கப்படுவதை அம்பலப்படுத்தி இருக்கிறோம். அரசுத்தரப்பில் கூறப்படும் பிரச்சாரங்களுக்கு மாற்றாக உண்மை நிலையை உணர்த்தி இருக்கிறோம். இதற்கான விலையை ஒரு நாள் கொடுக்க வேண்டும் என்று எனக்கு எப்போதும் தெரியும். அதனை நானும் - என் குடும்பத்தினரும் தற்போது கொடுக்கிறோம். நான் அதற்கு எப்போதும் தயாராகவே இருக்கிறேன். இதனைத் தடுக்க நான் எதையும் செய்யவில்லை; முன்னெச்சரிக்கையோ, பாதுகாப்போ இல்லை. ஆயிரக்கணக்கான படுகொலைகளைக் கண்டிக்கும்போது மனித கேடயங்களின் பின் பதுங்கிக்கொள்ளும், எனது கொலையாளியைப்போல நான் கோழை இல்லை என்பதை அவன் உணர வேண்டும் என்று விரும்புகிறேன். எனது உயிர் யாரால் எப்படி கவரப்படும் என்பது முன்னரே தீர்மானிக்கப்பட்டுவிட்டது. அது எப்போது நடைபெறும் என்பதுதான் மீதமுள்ள கேள்வி.

சண்டே லீடர் பத்திரிகை தனது அறம் சார்ந்த யுத்தத்தை தொடர்ந்து நடத்தும் என்பதும் ஏற்கனவே எழுதப்பட்டுவிட்டது. நான் இந்தப்பணியில் தனித்து செயல்படவில்லை. இந்த பத்திரிகை வீழ்த்தப்படுவதற்கு முன்னர் எங்களில் பலர் கொல்லப்படவேண்டும் - கொல்லப்படுவார்கள். அதுவரை சண்டே லீடர் பத்திரிகை மக்களுக்காகப் போராடும். எனது கொலை பத்திரிகை சுதந்திரத்தின் மீதான தாக்குதலாக கருதப்படாமல், கருத்துரிமைக்காக தொடர்ந்து பணியாற்றும் பத்திரிகையாளர்களுக்கான தூண்டுதலாக செயல்படும் என்று நம்புகிறேன். இன்னும் சொல்லப்போனால் எனது கொலை, இலங்கையில் மனித விடுதலைக்கான புதிய யுகத்தை படைப்பதற்காக போராடும் சக்திகளை இணைக்க உதவி செய்யும் என்றும் நம்புகிறேன். தேசபக்தியின் பெயரால் பல படுகொலைகள் நடந்தாலும், மனிதநேயம் மேலும் செழித்து வளரும் என்றும் அது அதிபரின் கண்களைத் திறக்கும் என்றும் நம்புகிறேன். எத்தனை ராஜபக்சேக்கள் சேர்ந்தாலும் மனிதநேயத்தை அழித்துவிட முடியாது.

நான் இத்தகைய ஆபத்தான முயற்சிகளில் இறங்க வேண்டுமா என்று பொதுமக்கள் பலரும் என்னிடம் கேட்டுள்ளனர். காலம் மாறும்போது இந்த அநீதிகளும் மாறிவிடும் என்றும் அவர்கள் கூறுகின்றனர். எனக்கும் அது தெரியும்: அது தவிர்க்கமுடியாததும்கூட. ஆனால் இப்போது நாம் பேசாவிட்டால், பின்னர் பேசுவதற்கு யாரும் மிஞ்சாமலே போய்விடக்கூடும். அவர்கள் சிறுபான்மையினராக, ஒடுக்கப்பட்டவர்களாக, வாய்ப்பு மறுக்கப்பட்டவர்களாக இருக்கலாம்.

ஜெர்மானிய மதத் தத்துவாதியாகிய மார்ட்டீன் நீய் மொல்லர் என்பவரின் வாழ்க்கை அனுபவமே எனது பத்திரிகை வாழ்க்கை முழுக்க எனது உந்து சக்தியாக செயல்பட்டு வந்தது. யூதர்களுக்கு எதிரான கருத்து கொண்ட இவர், இளமைக்காலத்தில் ஹிட்லரின் ஆதரவாளராக இருந்தார். ஹிட்லர் தலைமையிலான நாஜிக்கள் ஜெர்மனியை கைப்பற்றியவுடன், ஹிட்லரின் கொள்கை யூதர்களை மட்டுமே அழிப்பதல்ல என்பதையும், ஹிட்லருக்கு எதிரான கருத்து கொண்ட அனைவரையும் அழிப்பதே ஹிட்லரின் நோக்கம் என்பதையும் புரிந்து கொண்டார். ஹிட்லருக்கு எதிரான கருத்துகளைக் கூறிய மார்ட்டீன் நீய் மொல்லரும் நாஜிப்படையால் பிடிக்கப்பட்டு1937 முதல் 1945 வரை சித்திரவதை செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்டார். அவர் படுகொலை செய்யப்படுவதற்குமுன் எழுதிய கவிதையை நான் என் இளம்பருவத்தில் படித்தேன். என் நெஞ்சில் நிலைத்த அந்த கவிதை இதோ:

முதலில் அவர்கள் யூதர்களைப் பிடிக்க வந்தனர்.
நான்பேசவில்லை: ஏனெனில் நான் யூதன் அல்ல.
பின்னர் அவர்கள் கம்யூனிஸ்டுகளைப் பிடிக்க வந்தனர்.
நான் பேசவில்லை: ஏனெனில் நான் கம்யூனிஸ்ட் அல்ல.
பின்னர் அவர்கள் தொழிற்சங்கவாதிகளைப் பிடிக்க வந்தனர். அப்போதும்
நான் பேசவில்லை: ஏனெனில் நான் தொழிற்சங்கவாதியும் அல்ல.
பின்னர் அவர்கள் என்னைப் பிடிக்க வந்தனர்.
அப்போது எனக்காக பேச யாருமே இல்லை.

நீங்கள் எதை மறந்தாலும் இதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள். சண்டே லீடர் பத்திரிகை உங்களுக்காக உள்ளது. நீங்கள் சிங்களராக, தமிழராக, இஸ்லாமியராக, தாழ்த்தப்பட்ட சாதியினராக, ஓரினப்புணர்ச்சியாளராக, எதிர்கருத்து கொண்டவராக அல்லது ஊனமுற்றவராக இருக்கலாம். உங்களுக்காக போராடுவதற்கு, அதிகாரத்திற்கு அடிபணியாமல் - அச்சமில்லாமல், தைரியமாக செயல்படுவதற்கு சண்டே லீடரின் உறுப்பினர்கள் இருக்கிறார்கள். இது வெறும் வார்த்தையல்ல. பத்திரிகையாளரான எங்கள் தியாகங்கள் எங்கள் பெயருக்கும், புகழுக்கும் செய்யப்பட்டதல்ல; அது உங்களுக்காக செய்யப்பட்டது. அந்த தியாகத்திற்கான தார்மீகத்தகுதி உங்களுக்கு இருக்கிறதா என்பது வேறு விவகாரம். என்னைப் பொறுத்தவரை நான் அதற்கு முயற்சி செய்தேன் என்பது கடவுளுக்குத் தெரியும்.

மூலம்: http://www.thesundayleader.lk/20090111/editorial-.htm

ஆங்கிலத்திலிருந்து தமிழுக்கு மொழிபெயர்த்தவர்: சுந்தரராஜன்([email protected])


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com