Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
KeetruLiteratureArticle
கட்டுரை

மின்வெட்டு : பற்றாக்குறையா? மோசடியா?
சுப்பு

குப்புறத் தள்ளிய குதிரை குழியையும் பறித்த கதையாக, ஏற்கெனவே தமிழகத்தில் கடும் மின்வெட்டு நிலவுவது போதாதென்று, வீடுகள் மற்றும் தொழிற்சாலைகளுக்கு வழங்கப்படும் மின்சாரத்துக்குக் கட்டுப்பாட்டு முறையைக் கொண்டுவர தமிழக அரசு முடிவு செய்துள்ளது.

Karunanidhi and Arcot Veerasamy ஏற்கெனவே நிலவி வரும் கடுமையான மின்வெட்டின் காரணமாக, தமிழகத்தின் தொழிலும் விவசாயமும் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. உணவுப் பொருட்களின் உற்பத்தி மூன்றில் ஒரு பங்கு குறைந்து விட்டது. கோவை, சேலம், ஈரோடு, கரூர், விருதுநகர், தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் ஜவுளித் தொழிலும், ஆயத்த ஆடை தயாரிப்புத் தொழிலும் ஏறத்தாழ முடங்கி விட்டன. தீப்பெட்டி, உப்பு, மீன் பதப்படுத்தல், அச்சகம் முதலான சிறு தொழில்கள் அனைத்தும் நசிந்து விட்டது. பல்லாயிரக்கணக்கான குடும்பங்கள் வேலையிழந்து வாழ்விழந்து நிற்கின்றன. பல கிராமங்கள் மின்வெட்டால் வாரக்கணக்கில் இருளில் மூழ்கிக் கிடக்கின்றன. மின்வெட்டால் குடிநீர் விநியோகம் பல நாட்களுக்குத் தடைப்பட்டு மக்கள் அவதிப்படுகிறார்கள்.

இந்நிலையில் கிராமப்புறங்களில் 10 முதல் 14 மணி நேரமும், பெருநகரங்களில் 4 மணி நேரமும், சிறு மற்றும் பெரிய ஆலைகள், வணிக வளாகங்களில் 40 சதவீதமும் மின்வெட்டைச் செயல்படுத்தப் போவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. இதன் விளைவாக ஏற்கெனவே நசிந்து கிடக்கும் சிறு தொழில்கள் தற்போதைய கட்டுப்பாட்டு முறையால் முற்றாக முடங்கிப் போகும். இச்சிறுதொழில் நிறுவனங்களில் பணியாற்றும் பல்லாயிரக்கணக்கானோரின் வாழ்வு இருண்டு போய்விடும்.

தொடரும் இம்மின் பற்றாக்குறைக்கான காரணம் என்ன? புதிய தொழிற்சாலைகள் அதிக அளவில் தொடங்கப்பட்டுள்ளதாலும், ஏ.சி., ஃப்ரிட்ஜ் முதலானவற்றால் வீடுகளில் பயன்படுத்தப்பட்டு வரும் மின்சாரத்தின் அளவு 50% அதிகரித்துள்ளதாலும் மின்பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது என்கிறார் அமைச்சர் ஆற்காடு வீராசாமி. தற்போது தமிழகத்துக்குக் குறைந்தபட்சம் 9500 மெகாவாட் மின்சாரம் தேவைப்படுகிறது. ஆனால் கிடைப்பது ஏறத்தாழ 7500 மெகாவாட் மட்டுமே. அதாவது, ஏறத்தாழ 2000 மெகாவாட் அளவுக்குப் பற்றாக்குறை நீடிக்கிறது.

1996 முதல் 2006 வரையிலான பத்தாண்டு காலத்தில் தி.மு.க.வும், அ.தி.மு.க.வும் மாறி மாறி ஆட்சி செய்தபோது உபரியாக மின் உற்பத்தி இருந்ததால், புதிய மின் திட்டங்களை அவை உருவாக்கவில்லை. மின்துறையில் தனியார்மயம் புகுத்தப்பட்டு, தனியார் காற்றாலை நிறுவனங்களிலிருந்து கூடுதல் தொகைக்கு மின்சாரத்தைப் பெற்று, அதையே உபரியான மின் உற்பத்தி என்று கழக ஆட்சிகள் பீற்றிக் கொண்டன. ஆனால், காற்றின் வீச்சு குறைந்து, இத்தனியார் காற்றாலைகளில் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டதும், நட்டத்தைத் தவிர்க்க அந்நிறுவனங்கள் தொழிலையே நிறுத்தி விட்டன. அத்தனியார் நிறுவனங்களை மின் உற்பத்திக்குச் சார்ந்திருந்த தமிழக அரசு, இப்போது பற்றாக்குறை பல்லவி பாடுகிறது.

இது ஒருபுறமிருக்க, ஏறத்தாழ 20 சதவீத மின் பற்றாக்குறையால் தமிழகத்தின் தொழிலும் விவசாயமும் இவ்வளவு பாதிப்படையக் காரணம் என்ன? சிறுகுறுந்தொழில்களை நம்பியுள்ள பல லட்சக்கணக்கான குடும்பங்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டு கடன் சுமையில் தத்தளிக்கக் காரணம் என்ன?

இந்துக் கடவுளாகிய சிவன், பிள்ளைக் கறி வேண்டுமென கேட்டபோது சொந்த மகனின் குரல்வளையை அறுத்து பக்தியோடு கறி விருந்து படைத்த சிறுதொண்ட நாயனாரைப் போல, தற்போது பன்னாட்டுக் கம்பெனிகளின் நலனுக்காக தமிழகத்தின் தொழிலையே நசிய விட்டு பக்தியோடு சேவை செய்கிறது தி.மு.க. அரசு. பன்னாட்டுக் கம்பெனிகளுக்கு மின்வெட்டின் பாதிப்பு சிறிதும் இல்லாமல் தடையின்றி மின்சாரம் தாராளமாக வழங்கப்படுகிறது. அதுவும் ஒரு யூனிட்டுக்கு ரூ. 1.60 வீதம் வழங்கப்படுகிறது. இதுதவிர, கட்டணச் சலுகைகள் தனி. ஆனால், உள்நாட்டுத் தொழில் நிறுவனங்களுக்குத் தொடர் மின் வெட்டு. கட்டணமோ ஒரு யூனிட்டுக்கு ரூ. 4.85 வீதம் வசூலிக்கப்படுகிறது.

மறுபுறம், ஏறத்தாழ 20% ஆக உள்ள மின் பற்றாக்குறையை உயர்மின்அழுத்தம், தாழ்மின் அழுத்தம் ஆகியவற்றுக்குச் சமமாகப் பிரிக்காமல், மொத்த பற்றாக்குறையும் தாழ்மின் அழுத்தத்தில் இயங்கும் துறைகளின் தலையில் சுமத்தப்படுகிறது. பன்னாட்டு பெருந்தொழில் நிறுவனங்கள், தரகுப் பெருமுதலாளிகளின் சிமெண்ட் உருக்காலைகள், ஐந்து நட்சத்திர விடுதிகள், தகவல்தொழில் நுட்பத்துறை நிறுவனங்கள் முதலானவற்றுக்கு உயர் மின் அழுத்தம் மூலம் மின்சாரம் விநியோகிக்கப்படுகிறது. வீடுகள், கடைகள், உணவு விடுதிகள், சிறு தொழிற்கூடங்கள், பொது மருத்துவமனை, விவசாயம், குடிநீர் விநியோகம் முதலானவை தாழ்மின் அழுத்த மின்சாரத்தின் மூலம் இயக்கப்படுகின்றன. மொத்த மின் உற்பத்தியில் உயர் மின் அழுத்தத்தின் மூலம் ஏறத்தாழ 85% மின்சாரமும், தாழ்மின் அழுத்தத்தின் மூலம் ஏறத்தாழ 15% மின்சாரமும் விநியோகிக்கப்படுகின்றன.

தற்போது கிடைக்கும் 7500 மெகாவாட் மின்சாரத்தை மேற்கூறிய விகிதப்படி, உயர்மின் அழுத்த விநியோகத்துக்கு 6375 மெகாவாட், தாழ்மின் அழுத்த விநியோகத்துக்கு 1125 மெகாவாட் என பங்கிட்டு மின்சாரத்தை விநியோகிக்க வேண்டும். ஆனால், தாழ்மின் அழுத்த விநியோகத்துக்கு ஏறத்தாழ 250 மெகாவாட் மின்சாரமே ஒதுக்கப்பட்டு, எஞ்சிய அனைத்தும் உயர்மின் அழுத்த விநியோகத்துக்கு அள்ளி வழங்கப்பட்டு வருகிறது. இதனால் தாழ்மின் அழுத்த விநியோகம் ஏறத்தாழ 78% அளவுக்குப் பற்றாக்குறையாகி, தமிழகத்தின் விவசாயமும் சிறு தொழில்களும் இருண்ட காலத்திற்குள் தள்ளப்பட்டு வருகின்றன.

1973-74இல் தமிழகத்தில் 30% மின்வெட்டு நடைமுறைக்கு வந்தது. இருப்பினும், சிறு தொழில்கள் வீடுகளுக்கான மின்சாரம் மிகக் குறைந்த மின்வெட்டுடன் தடையின்றிக் கிடைத்தது. உயர்மின் அழுத்தம், தாழ்மின் அழுத்தம் ஆகியவற்றுக்குச் சமமாக பற்றாக்குறையைப் பங்கிட்டதால், அப்போது பாதிப்பு கடுமையாக இல்லை. மேலும், உயர்மின் அழுத்த மின்சாரத்தைப் பயன்படுத்தும் பெருந்தொழில் நிறுவனங்கள் அனைத்திற்கும், மின்வெட்டுக்கு முந்தைய ஓராண்டு காலத்தில் பயன்படுத்திய மின்சாரத்தின் சராசரியைக் கணக்கிட்டு அதில் 30% அளவுக்குக் குறைத்து மின்சாரம் வழங்கப்பட்டது. இதனைக் "கோட்டா'' முறை என்று குறிப்பிட்ட அரசு, அனைத்து உயர்மின் அழுத்த மின் இணைப்புகளுக்கும் கோட்டாவைத் தீர்மானித்து, பயனீட்டாளர்களுக்கு முன்கூட்டியே அறிவித்ததோடு, அதை மீறினால் மின் இணைப்பு துண்டிக்கப்படும் என்றும் எச்சரித்தது.

ஆனால், இன்று அத்தகைய கோட்டா முறை கூட இல்லாமல், பன்னாட்டுக் கம்பெனிகளுக்கும் தரகு முதலாளிகளின் பெருந்தொழில் நிறுவனங்களுக்கும் எவ்விதத் தடையோ, கட்டுப்பாடோ இல்லாமல் தாராளமாக மின்சாரம் வழங்கப்படுகிறது. மறுபுறம், தமிழகத்தின் சிறுகுறுந் தொழில்களை அரசு இருளில் மூழ்கடித்து வருகிறது.

"கடந்த 10 மாதங்களாக மின்சாரம் சீராகக் கிடைப்பதில்லை. குறுந்தொழிலை நம்பியுள்ள பல லட்சக்கணக்கான குடும்பங்கள் இன்று கடனில் தத்தளிக்கின்றன. நசிந்துவிட்ட இத்தொழில்களைக் காப்பாற்ற இலவச மின்சாரம் வழங்க வேண்டும்'' என்கிறார், தமிழக ஊரகத் தொழில் மற்றும் குறுந்தொழில் முனைவோர் சங்கத்தின் தலைவர் ஜேம்ஸ். தமிழ்நாடு வணிகர் சங்கப் பேரவைத் தலைவர் வெள்ளையன், பன்னாட்டுக் கம்பெனிகளுக்கு வழங்கப்படும் மின்சாரம் மற்றும் உள்நாட்டுத் தொழிலுக்கு ஒதுக்கப்படும் மின்சாரம் ஆகியன பற்றி அரசு பகிரங்க அறிக்கை தர வேண்டும் என்கிறார். ஆனால், தி.மு.க. அரசு இவை பற்றி மௌனம் சாதிப்பதோடு உள்நாட்டுத் தொழில் முனைவோரின் அதிருப்தியைச் சாந்தப்படுத்த பேச்சுவார்த்தை நாடகமாடுகிறது. மறுபுறம், மின்துறையைத் தனியார்மயமாக்கும் நோக்கத்துடன் இத்துறையை மூன்றாகப் பிரிக்கவும் திட்டமிட்டு வருகிறது.

தொடரும் மின்வெட்டுக்கு எதிராக உள்நாட்டு தொழில் முனைவோரும் உழைக்கும் மக்களும் போராடி வரும் நிலையில், மக்களின் அதிருப்தியைச் சாதகமாக்கிக் கொண்டு அரசியல் ஆதாயமடையும் நோக்கத்துடன் ஓட்டுக் கட்சிகளும் கோமாளித்தனமான போராட்டங்களை நடத்தி வருகின்றன. ஆனால், இக்கட்சிகள் எவையும் பன்னாட்டுக் கம்பெனிகளுக்கு தடையின்றி மின்சாரம் வழங்கப்படுவதைப் பற்றியோ, உள்நாட்டுத் தொழில்கள் புறக்கணிக்கப்படுவதைப் பற்றியோ வாய் திறப்பதில்லை. தி.மு.க. அரசின் காலைச் சுற்றிவரும் தி.க. வீரமணியோ, மின்வெட்டுக்கு எதிரான உழைக்கும் மக்களின் திடீர் சாலை மறியல் போராட்டங்களைத் தடை செய்து ஒடுக்க வேண்டும் என்று குரைக்கிறார். இத்துரோகிகளை அம்பலப்படுத்தி, உள்நாட்டுத் தொழிலை நாசமாக்கும் தி.மு.க. அரசின் மின் கொள்கைக்கு எதிராக உழைக்கும் மக்கள் ஐக்கியப்பட்டு தொடர்ந்து போராடுவதே இன்றைய உடனடித் தேவையாக உள்ளது.

நன்றி: புதிய ஜனநாயகம்


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com