Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
KeetruLiteratureArticle
கட்டுரை

பாம்புக்குத் தலையும், மீனுக்கு வாலும்
சு.வெங்கடேசன்

உத்தப்புரம் தீண்டாமைச்சுவர் இடிக்கப்பட்ட 40வது நாளில் (15.6.2008) மதுரை பிடிஆர் மஹாலில் தமிழ்நாடு அனைத்து வெள்ளாளர் முதலியார் மற்றும் வ.உ.சி. பேரவை சங்கங்களின் ஒருங்கிணைப்பு மாநாடு நடந்தது. அதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கொடியை எரித்து தங்களின் ஆத்திரத்தை வெளிப்படுத்தியுள்ளனர். சுவர் இடிப்பிற்கும் கொடி எரிப்புக்கும் இடைப்பட்ட இந்த நாற்பது நாட்களில் நடந்துள்ள முக்கிய நிகழ்வுகளை இங்கே பதிவு செய்ய விரும்புகிறேன்.

A.C.Sanmugam meeting மலையடிவாரத்து தலித்துகள் தங்களின் விவசாயத்தை நாசப்படுத்தியவர்களின் மீது நடவடிக்கை எடுக்கக் கோரியும் உரிய நஷ்டஈடு வழங்கக் கோரியும் புகார் கொடுத்து 36 நாட்கள் முடிந்து போனது. ஆனால் இன்றைக்கு வரை புகார் மனுக்கள் எதன் மீதும் நடவடிக்கை இல்லை.

மே 6ம் தேதி சுவர் இடிக்கப்பட்டு உருவாக்கப்பட்ட பாதையை தலித்மக்கள் பயன்படுத்துவது ஒவ்வொரு நாளும் பிரச்சனையாகவே இருக்கிறது. அந்தப் பாதையில் இருக்கிற திண்டுக்களை அகற்றவும், பாதையின் நடுவில் இருக்கிற குடிநீர்க் குழாயை சில அடிகள் தூரம் தள்ளி ஓரத்தில் வைக்கவும், ஊராட்சி மன்றத்தில் முடிவு செய்யப்பட்ட பிறகும் மாவட்ட நிர்வாகம் அதனை செய்துதரத் தயாராக இல்லை. மிக மிக குறுகிய அந்தப் பாதையில் தங்களது டிராக்டர்களை தலித்மக்கள் பெரும் வித்தைக்காரனின் நுட்பத்துடனே தினமும் ஓட்டிச் செல்ல வேண்டி இருக்கிறது.

இதற்கிடையில் ‘ரோட்டில் கிடக்கும் உரலைத் தட்டிவிட்டாய், எனது ஈயச்சட்டியை நசுக்கிவிட்டாய்’ எனச் சொல்லி தினமும் சிலர் பிரச்சனையை உருவாக்கியபடி இருக்கின்றனர். அவ்வாறு பிரச்சனை செய்து பாதையில் செல்வதைத் தடுக்க முயற்சிப்பவர்கள் மீது இதுவரை காவல்துறையிடம் மூன்று புகார் மனுக்கள் தரப்பட்டுள்ளன. ஆனால் அந்தப் புகார்கள் எதன் மீதும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

அந்தப் பாதையில் பாதுகாப்பிற்குப் போடப்பட்ட போலீசாரின் நியாயங்கள் ஆதிக்க சாதியினரின் குரலைவிட ஓங்கியதாக இருக்கிறது. ‘தலித்துகள் வெறும் டிராக்டரை வேண்டுமென்றே ஓட்டி வருகின்றனர்’ என்று சொல்கின்றனர். டீசல் விற்கிற விலையில் வெறும் டிராக்டரை வேண்டுமென்றே ஓட்டுகிற வெட்டி வேலையை தலித்துகள் ஏன் செய்யவேண்டும்? சரி, அப்படியே ஓட்டினால்தான் என்ன? பொதுப்பாதையில் வெறும் டிராக்டரை ஓட்டக்கூடாது. சுமையோடு தான் ஓட்டவேண்டுமென்று எந்தச் சட்டம் சொல்கிறது? என்று கேட்டபின்தான் கொஞ்சம் அமைதிப்படுகின்றனர். ஆனாலும் அவர்களின் கோபமும், வெறுப்பும் இறங்குகிற இடமாக பொதுப்பாதையை பயன்படுத்தும் தலித்துகளே இருக்கின்றனர்.

மே 6ம் தேதி சுவற்றின் ஒரு பகுதி இடிக்கப்பட்ட கொஞ்ச நேரத்தில் அங்கு வந்த மாவட்ட ஆட்சியர், இன்னும் இருக்கிற இரண்டு பொதுப்பாதைகளை திறந்துவிடுவது, நிழற்குடை உருவாக்குவது, சாக்கடையைத் தடுப்பு போட்டு திருப்பி விடுவது உள்ளிட்ட கோரிக்கைகளை ஒவ்வொன்றாக நிறைவேற்றித் தருவதாக சொல்லிச் சென்றார். அதன்பின் இன்றுவரை அவர் தலித் பகுதிக்கு வரவில்லை. காவல்துறையைப் பொறுத்தவரை, தலித்மக்கள் கொடுக்கும் எந்தப் புகாரின் மீதும் நடவடிக்கை எடுக்கக்கூடாது என்ற மேலிடத்து உத்தரவை ராஜ விசுவாசத்தோடு அமல்படுத்தி வருகிறது.

உத்தப்புரத்தில் துவக்கப்பட உள்ள புறக்காவல் நிலையம் பொது இடத்தில்தான் அமைய வேண்டுமென மார்க்சிஸ்ட் கட்சி தொடர்ந்து வலியுறுத்தி வந்தது. ஆனால் இப்போது துவக்கப்பட்டுள்ள புறக்காவல் நிலையம் வேளாளர் உறவின்முறை கட்டிடத்திலேயே துவக்கப்பட்டுள்ளது. 89ம் ஆண்டு கலவரத்திற்கு பின் காவல்துறை செயல்பட்ட விதத்திலிருந்து அது தன்னை மாற்றிக்கொள்வதாக இல்லை.

தலித்மக்கள் தங்களின் உரிமைக்காகப் போராடினால் அந்தப் போராட்டத்தின் மூலமாகக்கூட ஆதிக்க சாதியினரே பலனடைகின்றனர். நீண்ட போராட்டத்திற்குப் பின் தீண்டாமைச் சுவற்றின் ஒரு பகுதி இடிக்கப்பட்ட உடன் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து மலையேறியவர்கள் எங்களின் முத்தாலம்மன் கோவிலுக்கு பட்டா கொடுத்தால்தான் இறங்குவோம் என்றனர். போராடியது என்னவோ தலித்துகள். ஆனால் அந்தப் போராட்டத்தின் மீது ஏறி நின்று அரசோடு பேரம் பேசியது ஆதிக்க சக்திகள்.

செய்யக்கூடாததை செய்துவிட்டோம். அதற்கு பிராயச்சித்தத்தை உடனே செய்யவேண்டும் எனத் துடித்த அரசு நிர்வாகம் ‘அவர்களுக்கு பாதை, உங்களுக்கு பட்டா’ என்ற ரகசியத் திட்டத்தை தயாரித்தது. அதனை அவர்களிடம் வாய்மொழி உறுதியாகச் சொன்னபோது அவர்கள் ஏற்கவில்லை. பின்னர் மாவட்ட ஆட்சியர் எழுத்துப்பூர்வமாக உறுதியளித்தார். அவர்கள் மலையைவிட்டு இறங்கி வந்தனர்.

பிள்ளைமார் தரப்பின் போராட்டக்குழுத் தலைவர் சி.ஏ.எஸ்.பி.முருகேசன் முத்தாலம்மன் கோவில் வளாகத்திற்கு பட்டா கேட்டு 02.06.2008 அன்று அரசுக்கு விண்ணப்பித்துள்ளார். விண்ணப்பத்தை பெற்ற உடனே பேரையூர் வட்டாட்சியர் இம் மனு மீது உரிய விசாரணைகள் மேற்கொண்டு உரிய பிரேரணைகளை உடனடியாக அனுப்பிவைக்கும்படி எழுமலை வருவாய் ஆய்வருக்கு உத்தரவிட்டார். அவரும் உடனடியாக இதன் மீது நடவடிக்கை எடுக்க துவங்கினர்.

இதனை அறிந்த மார்க்சிஸ்ட் கட்சி ‘குறிப்பிட்ட சாதிக்கு அல்லது தனி நபருக்கு கோயில் உள்ள நிலங்களை பட்டா போட்டு தருவது சட்டத்திற்கும், சமூகநீதிக்கும் எதிரானது இதனை நாங்கள் ஒருபோதும் ஏற்கமாட்டோம்’ என அறிவித்தது. முதலமைச்சரிடம் நேரில் சென்று வலியுறுத்தியுள்ளது. இந்நிலையில் மார்க்சிஸ்ட் கட்சியின் உறுதியான நிலைபாட்டிற்கும் மலையேறிகளிடம் கொடுத்த வாக்குறுதிக்கும் இடையில் மாட்டிக்கொண்டு நிற்கிறது அரசு நிர்வாகம்.

ஜூன் 15 அன்று மதுரையில் கூட்டப்பட்ட ஒருங்கிணைப்பு மாநாட்டில் உத்தப்புரம் பிரச்சனை சம்பந்தமாக பேசிய சி.ஏ.எஸ்.பி.முருகேசன், ‘மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேண்டுமென்றே சாதிச்சண்டையை அரசியல் ஆதாயத்திற்காக தூண்டிவிட்டது, ரத்தச் சகதியில் நாம் சிக்கிக்கொள்ளக் கூடாது. உயிரை பறிகொடுக்கக் கூடாது என்றுதான் எட்டு நாட்கள் வனவாசம் போனோம். இந்த போராட்டத்தின் முடிவு என்ன என்ற கேள்வி எழுகிறது. திமுகவைச் சேர்ந்த தளபதியும், ஏ.சி.சண்முகமும் நம்முடைய கோரிக்கைகளை பெற்றுத்தர ஏற்பாடு செய்துதருவதாக கூறினர். இன்றைக்கு சில வேலைகள் மறைமுகமாக நடக்கிறது. சில வேலைகள் நேரடியாக நடக்கிறது. சில விஷயங்களை வெளிப்படையாக வெளியே சொல்லக்கூடாது. அதுவரை அமைதி காப்போம்’ என்று கூறியுள்ளார்.

இவர்களின் நம்பிக்கை அரசின் அணுகுமுறையை வெட்டவெளிச்சமாக்குகிறது. பாம்புக்கு தலையும் மீனுக்கு வாலும் காட்டுகிற வேலையை அரசு செய்கிறது. இது ஒன்றும் புதிதல்ல. ஆனாலும் உத்தப்புரம் விஷயத்தில் மார்க்சிஸ்ட் கட்சியின் நிலைபாட்டைக் கடந்து ஒரு முடிவை அமல்படுத்துவது ஒன்றும் எளிதல்ல.

களத்தில் இவ்வளவு பிரச்சனைகள் நடந்துகொண்டிருக்கிற இந்தக் காலங்களில் பெரும்பாலான அரசியல் கட்சிகள் இதைப்பற்றி வாயைத் திறந்து எதுவும் பேசவில்லை. சிபிஐ மட்டுமே ‘தீண்டாமைச்சுவர்’ என்ற அடிப்படையையே கேள்வியெழுப்பி, சுமூகமாக இருந்த சகஜ நிலையை குலைத்தவர்களுக்கு எதிராக தொடர்ந்து வாதாடிக் கொண்டிருக்கிறது. குன்றக்குடி ஆதீனம், தோழர்.தா.பாண்டியனுடன் சேர்ந்து உத்தப்புரம் போனதும் அதன்பின் தோழர். தா.பா.சொன்னது அவருடைய கருத்து எனத் தெரிவித்ததும், மதுரை ஆதினம் மதுரையில் நடைபெற்ற ஒருங்கிணைப்பு மாநாட்டில் கலந்து கொண்டதும் அதன்பின் அங்கு பேசப்பட்ட மார்க்சிஸ்ட் கட்சி எதிர்ப்பு கருத்துக்கும் எனக்கும் சம்பந்தமில்லை எனத் தெரிவித்ததும் இந்தக் காலத்தில் நடந்துள்ள நிகழ்வுகள்.

செம்மலர், உயிர்மை, காலச்சுவடு, புதியபார்வை, புதியகாற்று, போன்ற பத்திரிகைகள் இந் நிகழ்வினை முக்கியத்துவத்துடன் பதிவு செய்துள்ளன. இந்தக்காலத்தில் எழுதப்பட்ட ஆதவன் தீட்சன்யா, இன்குலாப், அருள் எழிலன், ஸ்டாலின் ராஜாங்கம், அருண்பாரதி, மதுக்கூர் ராமலிங்கம், அ.முத்துக்கிருஷ்ணன் ஆகியோரின் கட்டுரைகள் குறிப்பிடத்தக்கது.

உத்தப்புரம் தீண்டாமைச்சுவர் பிரச்சனை துவங்கிய காலத்திலிருந்து அதற்கென தனிப்பகுதியை ஒதுக்கி உடனுக்குடன் அனைத்து கட்டுரைகளையும் வெளியிட்டு வருகிற கீற்று இணையதள இதழின் பங்கு முதன்மையானதாக குறிப்பிடப்பட வேண்டிய ஒன்று.

இவ்வளவுக்கும் நடுவில் தலித் முரசு பத்திரிகை மே மாத தலையங்கத்திலும், ஜூன் மாத தலையங்கம் மற்றும் கட்டுரைகளின் மூலமும், தீண்டாமைச் சுவர் இடித்த நிகழ்வின் மீதும், மார்க்சிஸ்ட் கட்சி மீதும் கடும் தாக்குதலை தொடுத்துள்ளது. தங்களது பட்டா நிலத்தில் அந்நியர்கள் நுழைந்த பதற்றமா? அல்லது தாங்கள் திட்டி எழுதும் பட்டியலில் ஒரு பெயர் குறைந்து விடுமோ என்ற அச்சமா? எதுவெனத் தெரியவில்லை.

Uthappuram pipe ‘கட்சி தொடங்கி அரை நூற்றாண்டுகளுக்குப் பிறகு தீண்டாமையை மட்டும் ஒழிக்க கிளம்பியுள்ளவர்கள் அம்பேத்கரின் கொள்கையை ஏற்று சாதி ஒழிப்பை மையமாகக் கொண்டு அணி திரளும் தலித் இயக்கங்களை விமர்சிப்பது கடைந்தெடுத்த சந்தர்ப்பவாதம்’ என்கிறது இவ்விதழின் தலையங்கம்.

தீண்டாமைக்கு எதிரான நடவடிக்கையில் அதற்கு ஆதரவாக நிற்காமல் எதிர் நிலை எடுப்பதுதான் சாதி ஒழிப்புக்கொள்கையா? இதுதான் அண்ணல் அம்பேத்கரின் வழியா? இதைப்பற்றி விமர்சிப்பதுதான் சந்தர்ப்பவாதமா? தலித் முரசுக்கு இதுதான் சந்தர்ப்பவாதத்திற்கான அர்த்தமென்றால் தலித் மக்களின் விடுதலைக்கான போராட்டத்தில் இந்த ‘சந்தர்ப்பவாதம்’ தவிர்க்க முடியாதது.

கட்சித் தொடங்கி அரை நூற்றாண்டல்ல முக்கால் நூற்றாண்டுக்கு மேலாகிவிட்டது. இந்த நெடிய காலம் முழுவதும் கம்யூனிச இயக்கம். சாதி ஒழிப்பிற்கும் தீண்டாமைக்கும் எதிராக நடத்தியுள்ள போராட்டங்களைப் பற்றியும், அது இந்திய மண்ணில் குறிப்பிட்ட பகுதிகளில் நிகழ்த்தியுள்ள மாற்றங்களைப் பற்றியும் விமர்சனங்களை நேர்மையுடன் முன்வைக்கப்பதில் இருந்து முற்றிலும் விலகி மூன்றாம் தர வசவுகளை செய்வது எதன் பொருட்டு?

அதே இதழில் கட்டுரையாளர் மீனா மயில் கீழ்க்கண்டவாறு எழுதுகிறார். “இடிக்கப்பட்ட 15 அடி சுவரைப்பற்றி பேச நமக்கு எதுவும் இல்லை. எங்கே சாதி இந்துக்களுக்கு வலித்துவிடப் போகிறதோ என்று பார்த்து பதமாக உடைக்கப்பட்ட சுவர் அது. உடைக்காத சுவர் பற்றியும் பேச நமக்கு எதுவும் இல்லை. ஏனெனில் அது இருந்தாலும் இல்லாவிட்டாலும் தலித் மக்களின் நிலைமை ஒன்றும் மாறிவிடப்போவதில்லை.” உத்தப்புரம் தீண்டாமைச் சுவர் விஷயத்தில் தலித் முரசின் நிலைபாடு ஏறக்குறைய இதுவே என்று அறிய முடிகிறது.

சுவரின் வலிமையை, அது இடிக்கப்பட்டதன் முக்கியத்துவத்தை உத்தப்புரத்தின் தெற்கு தெருவின் வழியாகவோ, அல்லது வடக்குத்தெருவின் வழியாகவோ பார்த்தால்தான் புரியும். சாதி இந்துக்களுக்கு வலித்து விடாமல் பதமாக இடிக்கப்பட்டிருந்தால் ஏன் அவர்கள் ஊரையே காலி செய்து மலையடிவாரம் போகவேண்டும். உசிலை, பேரையூர் தாலுகாக்கள் முழுவதும் கடையடைப்பு, மறியல், முற்றுகை என பத்துநாட்கள் கொந்தளிக்கும் பிரச்சனையாக ஏன் மாறவேண்டும். 1600 போலீசார் ஏன் குவிக்கப்படவேண்டும்? இந்தக் கட்டுரை எழுதப்படுகிற இந்த நிமிடம் வரை அந்தச் சின்னஞ்சிறு கிராமத்தில் 400 போலீசார் ஏன் முகாமிட்டிருக்க வேண்டும். இதுவெல்லாம் பதற்றமற்ற பதமான நிகழ்வின் வெளிப்பாடு என்றால் உங்கள் அகராதியில் பதற்றத்திற்கான விளக்கமென்ன?

மோதலும், அதன் மூலமான இழப்புகளும், மரணங்களும் தான் உங்கள் அகராதியில் சாதிக்கு எதிரான உண்மையான போராட்டம் என்றால், அது நிகழ்ந்துவிடாமல் அதே நேரத்தில் முன்னோக்கி நகர்வதற்கான வழிமுறைகளை மிகுந்த நிதானத்துடன் கடைப்பிடிக்கிற மார்க்சிஸ்ட் கட்சியைப் பார்த்து நீங்கள் வைக்கும் குற்றச்சாட்டுகள் முற்றிலும் நியாயமே.

பத்து எட்டில் போகவேண்டிய தூரத்தை ஒரு கி.மீ. சுற்றியபடி பதினெட்டு ஆண்டுகளாக கடந்துள்ளனர் உத்தப்புரத்து தலித் மக்கள். தூரத்தையும் அலைச்சலையும் விட வேதனையானது அது ஏற்படுத்துகிற அவமானத்தின் வலி. இந்த அலைச்சலும் வலியும் ஒரு பகுதி தீருகிறபோது ஏற்படுகிற உணர்வை, எதுவும் இல்லை என்று சொல்பவர்கள் உத்தப்புரத்தின் வடக்குத்தெருவில் மட்டும் தான் இருப்பதாகக் கருதுவது பெருந்தவறு.

சுவரை இடித்தால் தீண்டாமை போய்விடுமா? சாதி ஒழிந்துவிடுமா? என்று தோழர் தா.பாண்டியன் முதல் தலித் முரசு வரை எழுப்புகிற கேள்விகள் ஒன்றும் புதிதல்ல. எல்லாச் சாதியினரும் அர்ச்சகர் ஆகவேண்டும் என்ற குரல் மேலெழும்பிய போது “எல்லோரும் அர்ச்சகராகி விட்டால் சாதி போய்விடுமா?” என்று எதிர்க்கேள்வி கேட்டவர்களும், எளக்காரம் பேசியவர்களும் உண்டு. எல்லோரும் அர்ச்சகராகிவிடுவதன் மூலம் சாதி போய்விடாது என்று நன்கு தெரியும். எல்லோரும் போதகராக முடிந்த கிறித்துவத்தில் சாதி போய்விடவில்லை என்பது ஊருக்கே தெரியும். சாதி ஒழிப்பை பேசுகிறவர்கள் உடனடிப் பிரச்சனைகளையும், பாகுபாடுகளையும் எதிர்த்துப் போராடுவதன் மூலமே அடிப்படை லட்சியத்தை வென்றெடுக்கும் அரசியலை நோக்கி மக்கள் திரளை தயார்படுத்த முடியும்.

தீண்டாமைக்கு எதிராகவும், சமூக பாகுபாடுகளுக்கு எதிராகவும் நடக்கிற போராட்டமே சாதி ஒழிப்பை நோக்கி சமூகத்தை உந்திச் செல்கிற திசைவழி. 15 அடி சுவர் இடிக்கப்பட்டதால் ஏற்பட்ட பலன் பாதை கிடைத்தது மட்டுமல்ல, மொத்த ஊரும் காலிசெய்து மலையடிவாரத்திற்கு போனதும்தான். தீண்டாமையை கடைப்பிடிக்கிற எங்களின் பிறப்புரிமையை கைவைக்காதே என அவர்கள் கொக்கரித்தது மாநிலமெங்கும் எதிரொலித்தது. அதனையொட்டி அது பொது வெளியில் விவாதத்திற்குள்ளாகிறது.

சமமாகவும், சகஜமாகவும் இருப்பதாகச் சொல்லப்படுகிற போலித்தனத்தின் முகமுடியை அவர்களின் கரங்களைக் கொண்டே கழற்றி எறியவைக்கிற வேலையை செய்ய முடிகிறது. அந்தக் கோர முகம் ஜனநாயகத்தின் பேரில் சிறிதளவாவது பற்று கொண்டவர்களையும், மனித நேய சிந்தனை கொண்டவர்களையும் ஏதாவது ஒரு விதத்தில் தொந்தரவு செய்கிறது. சமூக பாகுபாடுகளுக்கு எதிரான எந்த ஒரு சிறு அசைவும் அதனளவிலான தாக்கத்தை ஏற்படுத்தவே செய்யும். இவைகளைப் போன்ற தொடர் நிகழ்வுகளே அளவு மாற்றங்களை உருவாக்கும். அந்த அளவு மாற்றமே குணமாற்றத்திற்கு இட்டுச்செல்லும். சாதியப் பிடிமானத்திலிருந்து ஜனநாயக நடைமுறைக்கு சமூகத்தை நகர்த்திச் செல்லும் பெரும்பணிக்கு இவைகளெல்லாம் உதவி செய்பவைகளே.

உடனடி முழக்கங்கள், பாகுபாடுகளுக்கு எதிரான போராட்டங்கள் எதுவும் தேவையில்லை. என்று வானத்தைப் பார்த்து அண்ணாந்து பேசுகிற வீரவசனங்களால் ஆகப்போவது எதுவுமில்லை. கண்ணுக்கு முன்னால் நிலவுகிற பாகுபாடுகளை எதிர்த்து செயல்படுவதன் மூலமே கற்புலனாகாமல் சிந்தனையில் கெட்டிப்பட்டு கிடக்கிற சாதிக்கு எதிராக சமூகத்தை தயார்படுத்த முடியும். சாதி ஒழிப்பையும், தீண்டாமை ஒழிப்பையும் எதிரெதிரானதாக முன்வைப்பவர்கள் சமூக எதார்த்தை நிராகரிப்பவர்களாகவே இருக்கின்றனர். இத்தகைய நிராகரிப்புகளால் பயனடைபவர்கள் யார் என்ற கேள்வி எழுகிறது? ஒருபோதும் அது தலித்துகளுக்கு பலனளிக்கும் நடவடிக்கை அல்ல என்பதை மட்டும் சொல்லமுடியும்.

- சு.வெங்கடேசன் ([email protected])

இவரது மற்ற படைப்புகளைக் காண இங்கே அழுத்தவும்


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com