Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
KeetruLiteratureArticle
கட்டுரை

கடவுளை கொன்றபின்....
செல்வன்


கடவுள் இல்லாவிட்டால் நீதியும் நேர்மையும் பிழைத்திருக்குமா? மனிதர்கள் தப்பு செய்யாமல் வாழ்வார்களா? கடவுள் ஆதரவாளர்கள் (Apologetics ) நாத்திகத்துக்கெதிராக முன்வைக்கும் ஒரு வாதம் இது. "கடவுள் இல்லையென்றால் நீதியும் நேர்மையும் அழிந்து விடும். மனிதன் தப்பு செய்யத் துவங்குவான்" என்ற ஒரு வாதத்தை முன்வைப்பார்கள். ஒரு விதத்தில் அவர்கள் சொல்வதும் உண்மைதான். "நீதியும் நேர்மையும் புனித நூல்களில் இருப்பவை" என்பது உண்மை என்றால் கடவுள் செத்துவிட்டால் நீதியும் நேர்மையும் செத்துவிடும் என்பதும் உண்மைதான்.

Fight ஒரு உதாரணம் பார்க்க வேண்டுமென்றால் "பாவத்தில் மிகப் பெரிய பாவம் திருமணத்துக்கு முன் உறவு" என்று X மதம் மட்டும் சொல்லுகிறது என வைத்துக் கொள்ளுங்கள். அம்மதக் கோட்பாட்டின்படி வளர்க்கப்பட்டவர்கள் கன்னித் தன்மை என்பது ஒரு மிகப்பெரும் கொள்கை என்ற எண்ணப்படி வளர்வார்கள். அக்கோட்பாட்டை ஏற்காத பிற மதத்தவர்களோ, நாத்திகர்களோ X மதத்தவர்கள் அளவுக்கு அக்கோட்பாட்டை பின்பற்ற மாட்டார்கள். ஏனெனில் கன்னித் தன்மையை பற்றி அவர்களுக்கு இருக்கும் எண்ணங்களும், சித்தாந்தங்களும் வேறு. ஆக X மதத்தின் கடவுள் அழிந்தால் அக்கடவுளின் வார்த்தைகளை அடிப்படையாய் கொண்ட அக்கோட்பாடும் அழிந்துவிடும்.

இவ்வாதத்தை எதிர்கொள்ள நாத்திகர்கள் எடுத்து வைக்கும் வாதம் இருவகைப்படும். ஒன்று "திருமணத்துக்கு முன் உறவு தப்பில்லை" என்பது. இரண்டு "கடவுள் இல்லாமலே திருமணத்துக்கு முன் உறவை தடுக்க முடியும்" என்பது.

இரண்டாம் வாதத்தை இப்போதைக்கு ஒதுக்கி விடலாம். முதலாம் வாதத்தை எடுத்துக் கொள்ளலாம். ஒரு செயல் தப்பு அல்லது தப்பில்லை என்பதை எப்படி நிர்ணயிப்பது? ஒரு செயல் தப்பு என நிருபிக்க ஒரு சட்டம் மீறப்பட்டிருக்க வேண்டும். உதாரணமாக மணிக்கு 100 கி.மீ வேகத்தில் காரோட்டுவது தப்பு என சொல்ல வேண்டுமானால் அந்த இடத்தில் அனுமதிக்கப்பட்ட அதிகபட்ச வேகம் 100 கி.மீக்கும் குறைவாக இருக்க வேண்டும். அப்படி ஒரு சட்டம் இருந்து அது மீறப்பட்டிருக்குமானால் தான் அச்செயல் தப்பு/குற்றம்/பாவம் என கருதப்படும்.

நம் செயலை ஒப்பிட பல சட்டங்கள் உள்ளன. உதாரணமாக இந்திய அரசியல் சட்டம் உள்ளது. அடுத்தவனை கொலை செய்வதை இந்திய அரசியல் சட்டம் தடுக்கிறது. ஆனால் இந்திய அரசியல் சட்டம் தடுக்காத பல "தப்புக்கள்" உள்ளன. உதாரணமாக மனைவியை விவாகரத்து செய்தல். இந்த விவாகரத்து அப்பெண்ணை மிகவும் கொடூரமாக பாதிக்கலாம். ஆனால் சட்டப்படி அது சரிதான்.

சட்டம் அனுமதிக்கும் தப்புக்களை நாம் ஏன் செய்வதில்லை என்று கேட்டால் கடவுள் என்றொரு மிகப்பெரும் போலீஸ்காரனை ஆத்திகர்கள் கைகாட்டுவார்கள். இறப்புக்கு பின்நிற்க வைத்து கடவுள் கேள்வி கேட்பான். அதனால் நான் தப்பு செய்வதில்லை என்பார்கள். அப்படி நிற்க வைத்து கேள்வி கேட்க யாரும் இல்லை என்றால் என்ன ஆகும்?

ஒன்றும் ஆகாது.

இறைவன் இறந்தால் தப்புகள் பெருகும். ஆனால் தப்பு என்பது என்ன, சரி என்பது என்ன என்ற கோட்பாடுகள் பெரும் மாறுதலுக்குள்ளாகும். சமூகம் செழிப்பது தொடர்ந்து நடக்கும். இறைவன் இறந்தால் திருமணத்துக்கு முன் உறவு தப்பு எனும் கோட்பாடும் அழியும். ஆனால் சமூகம் அந்த உறவையே தப்பாக பார்க்காது. அதை கண்டுகொள்ளவே செய்யாது. குற்ற உணர்வோடு தற்போது அச்செயலில் ஈடுபடுவோர் குற்ற உணர்வின்றி அச்செயலில் ஈடுபடுவர்.

கடவுள் இறந்தால், மனைவியை தற்போது விவாகரத்து செய்ய அஞ்சுவோர் அதன்பின் தைரியமாக விவாகரத்து செய்வார்கள். ஆனால் அப்போது மனைவியர் பாதிக்கப்பட மாட்டார்கள். வெகு எளிதில் இன்னொரு கணவனை தேடிக்கொள்வர். ஆக கடவுள் இறந்தொழிந்தால் நீதியும் நேர்மையும் அழியாது. மறுவர்ணனைக்குள்ளாகும். சரி என்றால் என்ன, தப்பு என்றால் என்ன என்பதை அதன் பின் மனிதன் தன் சக மனிதனிடமிருந்து பெறுவான். சட்டம் படித்த மனிதர்கள் உட்கார்ந்து பேசி தப்பு எது, சரி எது என நிர்ணயிப்பார்கள்.

இன்னொரு கேள்வியும் எழக்கூடும். சட்ட வல்லுனர்கள் சொல்வதை நான் ஏன் கேட்கவேண்டும்? "ஒரு தப்பு செய்தால் எனக்கு பெரும் நன்மை கிடைக்கிறது எனும்போது சட்டத்தை மீறுவதில் என்ன தப்பு?" என்று கேட்டால் தெருக்கோடியில் இருக்கும் போலிஸ்காரன் பிடிப்பான் என்பதுதான் பதில்.

"போலிஸ்காரன் பிடிக்க மாட்டான் என உறுதியாக தெரியும்போதும் நான் ஏன் சட்டத்தை பின்பற்ற வேண்டும்?" என்று கேட்டால்....

Fight "துப்பாக்கியின் சரியான முனையில் நீ இன்று இருக்கிறாய். தப்பான முனையில் நாளை நீ நிற்கலாம். அப்போது உன் எதிரி எப்படி நடந்துகொள்ள வேண்டும் என நீ நினைக்கிறாயோ அப்படி நீ இப்போது நடந்துகொள்" என்பதுதான் பதில். ஒருவிதத்தில் இந்த பதில் தப்புதான். நான் சைவ உணவு சாப்பிடுபவன் அதனால் என்னை காட்டில் உள்ள சிங்கம் சாப்பிடக்கூடாது என்று சொல்வதுபோல் தான் இதுவும். இன்று அடுத்தவனுக்கு நான் கருணை காட்டினால் நாளை எனக்கு இன்னொருவன் கருணை காட்டுவான் என்று எந்த உறுதிமொழியும் கிடையாதுதான்.

"...கடவுள் இல்லை என்றால் போலிஸ்காரன் பிடிக்க மாட்டான் என உறுதியாக தெரியும்போதும் நான் ஏன் சட்டத்தை பின்பற்ற வேண்டும்...?”

பெரிதாக ஒன்றும் இக்கேள்விக்கு பதில் இல்லை. ரிச்சர்ட் ரோர்ட்டி சொன்னதுபோல் "நான் ஏன் கொடூரம் இழைக்கக்கூடாது?" என்ற கேள்விக்கு பதில் கிடையாது. "லிபெரல் என்பவன் கொடூரத்தை வெறுப்பவன்" என்ற பதிலை தான் பரம நாத்திகரான ரிச்சர்ட் ரோர்ட்டி தந்தார். "கிறிஸ்துவன் என்பவன் அயலானை நேசிப்பவன்" என்ற பதிலுக்கும் இதற்கும் பெரிய வித்யாசம் இல்லை தான்.

கொடூரத்தை இழைக்காமல் மனிதனை தடுக்க மதத்தால் முடியாது. நாத்திகத்தால் அது முடியும் எனவும் ரோர்ட்டி சொல்லவில்லை. மதம் அழிந்தால் சட்டப் புத்தகங்களும் மறுவர்ணனைக்குள்ளாகும். "நல்லவன் வாழ்வான்" எனும் விதிமுறைக்கு பதில் "வல்லவன் வாழ்வான்" எனும் விதிமுறை அமுலுக்கு வரும். ஆனால் சமூகம் அதனால் பாதிக்கப்படுமா என்றால் இல்லை. புதிய விதிமுறைகளுக்கு மனித இனம் பழகிவிடும். புதிய விதிமுறை பழையதை விட மனித இனத்தை முன்னேற்றவும் செய்யலாம். போர்க்குணத்தோடு வாழும் உத்வேகத்தை, "A hunter who hesitates is lunch" எனும் மனப்பக்குவத்தை மானுட சமூகத்துக்கு அது தரவும் கூடும்.

கடவுள் ஒழிந்தால் புதிய விதிகளை அமைத்து சமூகம் வெற்றி நடை போட்டு தொடர்ந்து முன்னேறுமே தவிர பின்னடைவை அடையாது

- செல்வன்([email protected])



நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com