Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
KeetruLiteratureArticle
கட்டுரை

அமெரிக்காவிடமிருந்து இந்தியா கற்க மறுக்கும் பாடம்
சதுக்கபூதம்

"Too Big to Fail " இது தான் அமெரிக்கர்கள் அனைவராலும் வெறுப்பாக பேசப்படும் பாடம். "Too Big to Fail" என்றால் என்ன? கடந்த எழுபது ஆண்டுகளாக அவ்வப்போது நடைபெற்ற பொருளாதார பின்னடைவின் காரணமாக அமெரிக்க வங்கித் துறையில் சிறிய, நடுத்தர மற்றும் பெரிய வங்கிகளை எல்லாம் ஒரு சில வங்கிகள் முழுங்கி விட்டன. அதன் விளைவு தற்போது அமெரிக்காவில் மூன்று மாபெரும் வங்கிகளும் சில சிறிய வங்கிகளும், பல மிக சிறிய வங்கிகளும் மட்டும் நிலைத்து நிற்கின்றன. அமெரிக்காவில் மூன்று வங்கிகள் மட்டும் 30 சதவிதத்துக்கும் மேற்பட்ட சேமிப்புகளை வைத்துள்ளன. அதன் விளைவு - இந்த மூன்று வங்கிகளில் ஒன்று வீழ்ந்தாலும் அமெரிக்கப் பொருளாதாரமே நிலை குலையும் நிலையில் உள்ளது. எனவே மிக பெரிய வங்கிகள் விழவே கூடாது (Too big to fail) என்ற நிலை ஏற்பட்டது. அதை நன்கு உணர்ந்த பெரிய வங்கிகளும் பொறுப்பில்லாமல் பெரிய அளவில் ஆபத்தான முடிவுகளை குறுகிய கால அதிக லாபத்துக்கு எடுக்கத் தொடங்கின. நீண்ட கால அளவில் அது பெரும் நட்டத்தை ஏற்படுத்தும் என்று தெரிந்தும், நட்டத்திலிருந்து அரசாங்கம் தங்களை காத்து ஆக வேண்டும் என்ற கட்டாயத்தில் இருப்பதை நன்கு பயன்படுத்திக் கொள்ள ஆரம்பித்தன. அமெரிக்க அரசாங்கமே பெரிய வங்கிகளின் கட்டுப்பாட்டில் வந்தது போன்ற நிலை ஏற்பட்டுள்ளது.

Indian Bank இதிலிருந்து இந்தியா கற்றுக் கொள்ள மறுக்கும் பாடம் என்ன என்று கேட்கிறீர்களா? இந்தியாவின் வங்கித் துறையில் அரசுத் துறை வங்கிகள் மிக முக்கிய பங்கை வகிக்கின்றன. அரசுத் துறை வங்கிகளும் ஒன்றாக இல்லாமல் பலவாக உள்ளன.

தற்போதைய மத்திய அரசோ அனைத்து அரசுத் துறை வங்கிகளையும் ஒன்றிணைத்து ஒரு சில பெரிய வங்கிகளாக உருவாக்க வேண்டும் என்றும் அரசுத் துறை வங்கிகளில் தனியாரின் (முக்கியமாக தற்போது சிக்கலில் சிக்கித் தவிக்கும் மேல் நாட்டு வங்கிகளின்) முதலீட்டை அதிகரித்து சிறிது சிறிதாக முடிவில் அவர்களிடமே விற்று விடவும் முயற்சி செய்கிறது. (அதை உடனே நிறைவேற்றா விட்டால் கூட அது தான் அரசின் அனுகுமுறை என்று பலமுறை கூறப்பட்டுள்ளது) அதற்கு அரசு கூறும் முக்கிய காரணம் வங்கிகளை நடத்தும் செலவைக் குறைத்து பல வங்கிகளின் கிளையை மூடி லாபத்தை அதிகரிக்கச் செய்ய வேண்டும் என்பதே.

இதனால் ஏற்படும் விளைவுகளை இப்போது பார்ப்போம்:

1. சிறு சிறு வங்கிகளை ஒன்றிணைத்து பெரிய வங்கிகளாக ஆக்குவதன் மூலம் ஒவ்வொரு பெரிய வங்கியும் இந்தியப் பொருளாதாரத்தில் ஏற்படும் தாக்கம் மிக அதிகமாகும். ஒரு வங்கியின் தலைவர் தவறு செய்பவராக இருந்து அதன் மூலம் அந்த வங்கி வீழும் நிலைக்கு தள்ளப்பட்டால், அந்த வங்கியை காப்பாற்றுவது என்பது அரசுக்கு மிக பெரிய சுமையாகவும், அதே சமயத்தில் அதைக் காப்பாற்றியே ஆக வேண்டிய நிலைக்கும் தள்ளபடும். அதுதான் அமெரிக்காவில் தற்போது நடக்கிறது. இதுவே சிறிய வங்கியாக இருந்தால் அதன் தாக்கம் சிறிதாக இருப்பதாலும் அதைக் காப்பாற்ற அரசுக்கு ஆகும் செலவும் குறைவாக இருக்கும். உதாரணமாக இந்தியன் வங்கி கோபால கிருஷ்ணனின் தலைமையில் பல்லாயிரம் கோடி நட்டமடைந்து மூடும் நிலைக்கு வந்தபோது அதை அரசால் காப்பற்ற முடிந்தது. அதுவே பல வங்கிகளை ஒன்றிணைத்த பெரிய வங்கியாகி வீழும் சூழ்நிலை ஏற்பட்டால் அதைக் காப்பாற்ற பல லட்சம் கோடி தேவைப்படும். இதுவே அமெரிக்காவாக இருந்தால் மிகக் குறைந்த பின் விளைவில் பல்லாயிரம் கோடி ரூபாய் அச்சிட்டுக் கொள்ளலாம். ஏனென்றால் அமெரிக்க டாலர் இப்போது உலக சேமிப்பு நாணயமாக உள்ளது. ஆனால் இந்தியாவின் நிலை அப்படி இல்லை என்பதால் அதன் விளைவு மிக மோசமானதாக இருக்கும். (பொதுத் துறை வங்கி என்று இல்லை, பெரிய தனியார் துறை வங்கி வீழ்ந்தாலும் அரசு காப்பாற்றித் தான் ஆக வேண்டும்). வங்கிகளின் நடவடிக்கையை முழுமையாக நெறிமுறைப்படுத்துவது என்பதும் தற்போது நடைமுறையில் சாத்தியம் இல்லாத செயல்.

2. சிறு வங்கிகளை ஒன்றாக்குவதால் முதலில் மூடப்போவது கிராமப்புறங்களைச் சேர்ந்த வங்கிகளைத் தான். இதன் விளைவாக ஏழை விவசாயிகள், சுய தொழில் தொடங்கும் ஏழை மற்றும் நடுத்தர மக்கள் போன்றோர் மிகவும் அதிக அளவில் பாதிக்கப்படுவர். தற்போதைய உலகமயமாதல் சூழ்நிலையில் இது போன்ற மிகப் பெரிய வங்கிகள் பெரிய கார்ப்பொரேட்டுகளுக்கும் பணக்காரர்களுக்கும் மட்டுமே கடன் கொடுத்து லாபம் செய்ய முனைவர்.

3. ஒவ்வொரு வங்கியும் நாட்டின் ஒவ்வொரு குறிப்பிட்ட பகுதியில் அதிக கவனம் செலுத்தி வருகின்றனர். உதாரணத்திற்கு பார்த்தால் இந்தியன் வங்கியும் இந்தியன் ஓவர்சீஸ் வங்கியும் தமிழகத்தில் அதிக அளவு கவனம் செலுத்துகிறது. அதன் தலைமையகமும் தமிழ் நாட்டில் உள்ளது. அது தமிழகத்தில் உள்ளவர்களின் தேவையை உடனுக்குடன் அறிந்து அதற்கேற்ற சேவையை வழங்குகின்றது. இந்தியன் வங்கியை மற்ற வங்கியுடன் சேர்த்தால் இந்த தனித்தன்மை முழுமையாக பாதிக்கப்படும் (முழுமையாக அழியாவிட்டால் கூட பாதிப்பு அதிகம் இருக்கும்). பின் வரும் காலங்களில் வங்கிக்கு வரும் அதிகாரிகளின் தனிப்பட்ட விருப்பு வெறுப்புக்காக அந்த வங்கியின் கவனிப்பு இருக்கும் இடமும் மாறிப் போக வாய்ப்புள்ளது.

4. அதிகாரப் பரவலாக்கத்தின் (Decentralization) மூலம் தான் எந்த ஒரு துறையின் செயல்பாட்டின் திறனையும் அதிகரிக்க முடியும் என்பது இத்தனை நாள் அனுபவத்திலிருந்து கிடைத்த உண்மை. தற்போது வங்கிகள் அதிகார பரவலாக்கத்தோடு நன்கு செயல்பட்டு வருகின்றன. வங்கிகளை ஒன்றிணைப்பது மூலம் அதிகாரப் பரவலாக்கம் என்பது மாறி அதிகரம் ஒருமுனைப்படுத்தப்பட்டு அதன் செயல் திறன் குறைய வாய்ப்புள்ளது.

5. வங்கிகள் என்பது ஒவ்வொரு நாட்டின் வளர்ச்சியின் ஆணிவேர். அதை குறுகிய லாப நோக்கம் கொண்ட பன்னாட்டு தனியார் கம்பெனிகளின் கையில் கொடுத்தால் இன்று அமெரிக்கா அடைந்த நிலையை இந்தியாவும் அடையும்.

6. பன்னாட்டு வங்கிகள் சமூகத்தில் பின் தங்கியவர்களின் வளர்ச்சியைப் பற்றி கவலைப்பட போவது இல்லை. அவர்களுக்கு லாபம் மட்டுமே குறிக்கோள். பசுமைப் புரட்சியின் மூலம் உணவு உற்பத்தியில் தன்னிறைவு அடைந்ததிற்கு வங்கிகளின் பங்கு முக்கியம். தற்போதைய வளர்ந்து வரும் மக்கள் தொகை சூழ்நிலையில், விவசாய உற்பத்தியைப் பெருக்க வங்கியின் சேவை மிகவும் தேவை இக்கணம். மத்திய அரசின் தற்போதைய முயற்சியால் அது தடைபெற அதிக வாய்ப்புள்ளது.

இதை உணர்ந்து மத்திய அரசாவது ஒரு சில தனிப்பட்டவர்களின் நன்மையைப் பார்க்காமல் இந்தியாவின் வளர்ச்சியைக் கருத்தில் கொண்டு செயல்பட்டால் நன்றாக இருக்கும்.

- சதுக்கபூதம், ([email protected])

இவரது மற்ற படைப்புகளைக் காண இங்கே அழுத்தவும்


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com