Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
KeetruLiteratureArticle
கட்டுரை

வஞ்சிக்கப்படும் நெல் விவசாயிகள்
சதுக்கபூதம்


நெல் தமிழக விவசாயிகளின் ஜீவாதார பயிர். தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் பயிரிடப்படும் பயிர். தமிழகத்தின் 85% உணவு தானிய பயிர் பரப்பையும், 34% மொத்த பயிர் பரப்பையும் தன்னகத்தே கொண்டுள்ளது. நெற்பயிரின் மகசூலை நம்பி பல லட்சம் விவசாயிகளும்,விவசாய கூலி தொழிலாளிகளும் உள்ளனர்.

விவசாயிகள் வறட்சிக் காலத்தில் அண்டை மாநில அரசுகளை, ஆற்று பாசனத்திற்காக நம்பியும்,பருவ மழை குறுகிய காலத்தில் அதிக அளவில் பெய்யும் போது அந்த மழை நீரில் மூழ்கி கிடக்கும் பயிரைப் பார்த்தும் தங்களுடைய பெரும்பாலான நாட்களை கழிக்க வேண்டி உள்ளது. மேலும் விதை, உரங்கள் மற்றும் பூச்சி மருந்துகளின் விலை வெகுவாக உயர்ந்து வருகிறது. கூலித் தொழிலாளர்களின் எண்ணிக்கை வெகுவாக குறைந்து வருவதால், அவர்களுக்கான கூலியும் அதிகரித்து வருகிறது.இப்படிப்பட்ட சூழ்நிலையில் எதாவது ஒரு பருவத்தில் கிடைக்கும் லாபத்தைக் கொண்டு பிற பருவங்களில் ஏற்படும் இழப்பை சரிகட்டி விவசாயம் செய்து வருகின்றனர்.

இவ்வாறு பல பிரச்சனைகளுக்கிடையே விவசாயம் செய்துவரும் நெல் விவசாயிகளுக்கு மத்திய அரசு மாபெரும் வஞ்சனை செய்து வருகிறது. விவசாயிகளின் நலனை கருத்தில் கொண்டும், பொது வினியோக தேவையை கருத்தில் கொண்டும் அரசாங்கம் விவசாயிகளிடம் வாங்கும் உணவு பயிர்களுக்கு குறைந்த பட்ச ஆதார விலை அதாவது Minimum Support Price(MSP) அறிவிக்கும்.விவசாயிகள் தங்கள் பயிரை இந்த விலைக்கு அரசாங்கத்திடமோ அல்லது தனியாரிடம் வேறு விலைக்கோ விற்கலாம்.

அரசாங்கம் நிர்ணயிக்கும் இந்த ஆதார விலை மறைமுகமாக வெளிச்சந்தை விலையையும் பாதிக்கிறது. இந்த ஆதார விலையை பயிர் உற்பத்தி செலவு, அந்த பயிரின் தேவை மற்றும் உற்பத்தி, இடு பொருள்களின் விலை உயர்வு மற்றும் பல காரணிகளைக் கொண்டு நிர்ணயிக்கின்றனர். இதன் மூலம் விவசாயிகள் தங்கள் பயிருக்கு குறைந்த பட்சம் ஆதார விலை கிடைக்கும் என்ற நம்பிக்கையில் பயிரிடலாம்.

1994ம் ஆண்டு இந்த ஆதார விலை குவிண்டாலுக்கு கோதுமைக்கு 360 ரூபாயாகவும், நெல்லுக்கு 340 ரூபாயாகவும் இருந்தது. அதாவது ஏறத்தாழ ஒரே அளவு இருந்தது. இந்த வித்தியாசம் ஒவ்வொரு ஆண்டும் அதிகமாகி கடந்த ஆண்டு கோதுமைக்கு 850 ரூபாயும் நெல்லுக்கு 650 ரூபாயும் நிர்ணயிக்கப்பட்டிருந்தது. இந்த வேறுபாடே மிகவும் அதிகம் என்றும், இந்த நிலை மாறவேண்டும் என்றும் விவசாயிகளும், வேளாண் அறிஞ்சர்களும் கூறி வந்தனர். இப்படிப்பட்ட சூழ்நிலையில் இந்த வேறுபாட்டை இந்த ஆண்டாவது மத்திய அரசு குறைத்து நெல் விவசாயிகளுக்கு நல்ல கொள்முதல் விலையை கொடுக்கும் என்று நம்பியிருந்த விவசாயிகளின் நம்பிக்கையை தகர்க்கும் வகையில் அமைந்துள்ளது இந்த ஆண்டுக்கான ஆதாரவிலை அறிவிப்பு. இந்த ஆண்டு கோதுமையின் குறைந்த பட்ச ஆதார விலை 1000 ரூபாயாகவும் நெல்லின் ஆதாரவிலை 695-725 ஆகவும் நிர்ணயித்து உள்ளது. 1994ல் 20 ரூபாயாக இருந்த வித்தியாசம் இன்று 300 ரூபாயாக வளர்ந்துள்ளது.

இத்தனை நாட்களாக ஆதார விலை நிர்ணயிக்க உற்பத்தி செலவை மட்டும் கணக்கில் எடுத்து கொண்டிருந்த மத்திய அரசு,இப்பொழுது நெல்லிலிருந்து அரிசியாக மாறும் போது ஏற்படும் இழப்பையும் கணக்கில் கொண்டு விலை நிர்ணயம் செய்துள்ளதாக கூறி உள்ளது. ஆனால் அரிசியின் விலை மற்றும் உற்பத்தி செலவு போன்றவற்றை பின்னுக்கு தள்ள முயலுகிறது மத்திய அரசு. இந்த நிலை தொடர்ந்தால் அரிசி இந்தியாவில் இரண்டாம் தரப் பயிராக மாற்றப்பட்டு விடும். வடநாட்டு விவசாயிகள் நெல்லுக்கு பதிலாக கோதுமை பயிரிட்டு நல்ல லாபம் அடைவார்கள்.ஆனால் தமிழ் நாட்டு தட்பவெப்ப நிலைக்கு கோதுமை பயிரிட முடியாது. எனவே தமிழக விவசாயிகள் நெல் பயிரிட்டு குறைந்த லாபம் அடைவர் அல்லது நட்டம் அடைவர். தமிழக விவசாயிகளின் பொருளாதார வளர்ச்சி குறைந்து விடும்."வடக்கு வளர்கிறது! தெற்கு தேய்கிறது!" என்ற வாக்கு உண்மையான வாக்காக மாறிவிடும்.

தமிழகத்தின் ஜீவாதார பிரச்சனையாக உள்ள இந்த பிரச்சனையை தமிழக அரசியல் கட்சிகள் அணுகும் விதம்தான் மிகவும் கவலைக்குரியதாக உள்ளது. மாநில அரசோ வெறும் கடிதத்தை மத்திய அரசுக்கு அனுப்பிவிட்டு வேறெந்த முயற்சியும் எடுக்காமல் உள்ளது. எதிர்கட்சிகள் வெறும் அறிக்கையோடு நின்று விட்டனர். இந்தப் பிரச்சனைக்கு ஆந்திர முதல்வர் கொடுக்கும் முக்கியத்துவம் கூட தமிழ்நாட்டில் யாரும் கொடுக்கவில்லை.அதைவிட வருத்தபட வேண்டிய விஷயம் தமிழக விவாயிகளின் அணுகுமுறை.இதை எதிர்த்து ஒரு கடுமையான போராட்டம் கூட அவர்கள் நடத்தவில்லை.

இன்றே இந்த பிரச்சினையை அனைவரும் ஒன்று சேர்ந்து தீர்க்காவிட்டால், பிற்காலத்தில் இதுவும் ஒரு காவிரி பிரச்சனையை போல தீராத பிரச்சனையாக உருவெடுக்கும். பிற்காலத்தில் இதற்க்காக பந்த், உண்ணாவிரதம் என்று எதிர்ப்பை காட்டுவதை விட்டு இன்றே அதை செய்யலாமே.தமிழக அரசியல் கட்சிகளே!இந்த ஜீவாதார பிரச்சனையை அனைவருக்கும் தெரியப்படுத்தி, அனைத்து வகையிலும் மத்திய அரசை நிர்பந்தித்து ஒரு நல்ல தீர்வை உருவாக்குங்கள்.அது நாளைய விவசாயிகளின் தற்கொலையையும், பட்டினி சாவையும் நிச்சயம் தடுக்கும்.

- சதுக்கபூதம், ([email protected])

இவரது மற்ற படைப்புகளைக் காண இங்கே அழுத்தவும்


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com