Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
KeetruLiteratureArticle
கட்டுரை

தமிழகத்தின் ஆதரவு “மன மாறுதலுக்கா அல்லது மாறாத நடிப்புக்”கா?

சர்வசித்தன்

ஆறரைக் கோடி தமிழர்களை ஆளுபவர்களாகட்டும், அவர்கள் சார்பாக நடுவண் அரசில் அங்கம் வகித்து, தமிழர்தம் தேவைகளுக்காக குரல் கொடுக்கும் நாடாளுமன்ற உறுப்பினர்களாகட்டும், அவர்கள் பெயரளவில் தமிழர்களாக மட்டுமன்றித் தமிழுணர்வு படைத்தவர்களாகவும் இருத்தல் அவசியம்.

தமக்குத் தாமே “தமிழினக் காவலர்கள்” என்றும், “தமிழினத் தலைவர்கள்” என்றும் பெயர் சூடிக் கொண்டு, தங்களுக்கென்று பாவலர்களையும், அடிப்பொடிகளையும் உருவாக்கி- அதன் மூலமாக ஓர் ‘சினிமாத்தனமான’ பகட்டினை, விளம்பரத்தை ஏற்படுத்திக் கொண்டிருப்பவர்களை இனங் கண்டு புறந்தள்ளும் ஆற்றலைத் தமிழர்கள் பெற்றால் மட்டுமே தமிழர்களுக்கும் தமிழகத்துக்கும் விடிவு ஏற்படும்.

இல்லையேல் , அண்டை நாடொன்றில் நமது இனத்தவர்கள் அழிந்து கொண்டிருக்கும் போது- வெறும் வாய்ப்பேச்சில் காலங்கடத்துகிற கூட்டம் மீண்டும் தங்கள் குடும்ப நலன்களுக்காகவும், உற்றம் சுற்றத்துக்காகவும் மட்டுமே குரல் கொடுத்து--அதற்காகப் பேரம் பேசும் இழிநிலை தொடர வாய்ப்பளித்தவர்களாவோம்!

இங்கே நமது தலைவர்கள் சிலரிடம் திறமை உள்ளது. ஆனால் அவர்களோ தங்கள் திறமைகளைச் சுயலாபங்களுக்காகப் பயன்படுத்துபவர்களாய், ஏதோவோர் காரணத்தால் நடுவண் அரசிடம் சரியானவற்றைக்கூடத் துணிந்து கேட்கும் திராணியற்றவர்களாய், அவர்களது ‘கைப்பாவைகள்’ போன்று செயல்படுவதைக் காண்கிறோம். இவர்கள் தன்மானத்தை, மனிதாபிமானத்தை, இன உணர்வைக் கைவிட்டுப் பேடிகளாய்...... தன்னலப்பித்தர்களாய் மாறிவிட்டிருந்ததை அண்மைக் கால நிகழ்ச்சிகள் எமக்கு உணர்த்தியுள்ளன.

தமிழாராய்ச்சி மாநாடுகள், திருமண நிகழ்வுகள், அரசியல் மேடைகள் என வாய்ப்புக் கிட்டிய இடங்களிலெல்லாம் தமிழுணர்வு கொப்பளிக்க வார்த்தைஜாலம் புரியும் தலைவர்கள், உற்ற நேரத்தில் எதுவும் செய்யாது ஒதுங்கிக் கொள்வதையும், தந்திரமாகச் செயல்படுவதில் முனைப்புக்காட்டுவதையும் இப்போது நாம் காணமுடிகிறது. அவர்களை இனங் காணும் மிகப் பெரும் பொறுப்பு தமிழக வாக்காளர்களின் கைகளில்தான் உள்ளது.

மற்றொரு புறத்தில் உண்மை நிலையினைத் தெரிந்து கொள்ளாமல் அல்லது தவறான தகவல்களின் அடிப்படையில் சில காலங்கள் எதிரிகளாகச் செயல்பட்டவர்கள் கூடப், பின்னர் அவைபற்றித் தெரிந்து மனம் மாறி உரிய சமயத்தில் உதவிக்கரம் நீட்டுவதை நாம் பார்க்கிறோம். ஆனால், தமது சாதுர்யமான பேச்சால். செயலால் தொடர்ந்து இனமான வேஷம் போடும் சிலர், உரிய சமையத்தில் கைவிட்டுவிடும் துரோகத்தையும் நாம் கண்டிருக்கிறோம், காண்கிறோம்.

இவர்களுள் முன்பு எதிரிகளாக இருந்தாலும் நடைமுறை நிகழ்வுகளை அறிந்து மன மாற்றம் பெற்று இன்று நண்பர்களாக மாறியவர்களா ? அல்லது........ மிக நீண்ட காலமாக தமிழினத்தின் பாதுகாவலர்களாகத் தம்மைக் காட்டிக் கொண்டிருந்து , உலகத்தமிழர்களது மனங்களில் ‘சிம்மாசனமிட்டு’ அமர்ந்திருந்தபோதிலும், உற்ற வேளையில் அதுவும் உதவிபுரிகின்ற நிலையைப் பெற்றிருந்தும் எதுவும் செய்யாதிருந்த தன்னலத் தலைவர்களா சிறந்தவர்கள் என்பதைத்தீர்மானிக்கும் கடமை இன்று தமிழக மக்கள் மீது சுமத்தப் பட்டிருக்கிறது.

இதனைச் சரியாக ஆற்றுவதன் மூலம் ஓர் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வினுக்கு அடித்தளம் இடும் பணி அவர்களுக்குக் கிட்டியிருக்கிறது. உலக வரலாற்றைப் புரட்டிப் பார்த்தால், எதிரிகளால் ஏற்பட்ட தீமைகளை விடவும், துரோகிகளால் உருவான வீழ்ச்சிகளே அதிகம் என்பதைத் தெரிந்து கொள்ளமுடியும்.

அதிகம் ஏன், இன்று ஈழத்தமிழர்களுக்கு நேர்ந்திருக்கும் இந்த மிக மோசமான சீரழிவிற்கும், ஈழப் போராளிகளின் பின்னடைவிற்கும் அங்கு அண்மைக் காலத்தில் நடந்த ஓர் துரோகமே காரணம் என்பதைத் தமிழுலகு அறியும்.

தென் தமிழ் ஈழத்தின் (கிழக்கிலங்கை) முடிசூடா மன்னன் போன்று விளங்கிய முன்னாள் போராளியான “கருணா’ வின் கதையை அறியாதவர் இருக்க முடியாது. சுயலாபம் கருதி ‘விபீஷண அவதாரம்’ எடுத்த அவரால் அவர் வழங்கிய போரியல் தகவல்களால் சிங்கள ராணுவம் சுலபமாக கிழக்கு மாகாணத்தைக் கைப்பற்றிக் கொண்டது. அதன் தொடர்ச்சியே இன்றுவரை அங்கு நடைபெற்றுக்கொண்டிருக்கும் அவலங்கள்.

பொறுப்பில் உள்ள ஒருவர் செய்யும் துரோகம் ஓர் இனத்தினையே வேரோடு சாய்த்துவிடும் என்பதற்கு சாட்சிகளைத்தேடி நாம் வேறெங்கும் போகவேண்டாம். எம்மிடமே அதற்குப் போதிய சாட்சிகளுண்டு! துரோகத்தால் விளைந்த கேட்டினுக்கு இது ஓர் சிறு எடுத்துக்காட்டு, அவ்வளவே!

சுமார் இருபத்திரெண்டு வருடங்களுக்கு முன், மலேசியாவில் நடைபெற்ற உலகத்தமிழ் ஆராய்ச்சி மாநாட்டில், சிறப்புப் பேச்சாளராகக் கலந்து கொண்ட கலைஞர் “முறத்தால் புலியை விரட்டிய தமிழச்சி எங்கே இருக்கிறாள்?” எனக் கேட்டுப் பின் தென்னிலங்கைப் பக்கம் தன் கையைக் காட்டி ‘அங்கே இருக்கிறாள்’ என்று உணர்ச்சி பூர்வமாக முழங்கியதை எமது காதுகள் குளிரக் கேட்டவர்கள் நாம். இன்று அதே கலைஞர் ஈழம் பற்றி எரிகின்றபோது சோனியாவுக்கு “அன்னை” ப் பட்டம் வழங்கி மகிழ்வதில் கருத்துடன் செயல்படுகிறார்.

இதனை என்னவென்பது? தமிழுணர்வு என்பதா? தன் மானம் என்பதா / அல்லது துரோகம் என்பதா? ‘நகைச்சுவையாளர் வடிவேலு’ பாஷையில் வேண்டுமானால் ‘கண்ணைக் கட்டுகிறது’ என்று சொல்லலாமா?

உலகிலேயே மிகவும் மோசமான செயல் ‘நம்பிக்கைத்துரோகம்’. பிறரை நம்பவைத்து அல்லது நம்பிக்கைக் குரியவராக நடந்து (நடித்து) இறுதியில் அவர்களது கழுத்தை அறுப்பது என்பது இதன் பொருள்.

எதிரிகளிடம் நாம் காட்டும் எச்சரிக்கையுணர்வினை, நாம் நம்பிக்கை கொண்டவர்களிடம் காட்டுவதில்லை. காரணம், நம்பிக்கைக்குரியவர்கள் எமது உணர்வினைக் கொண்டிருப்பவர்கள், எமது இயல்பினையும் உணர்வுகளையும் பிரதிபலிப்பவர்கள்- என்னும் அசைக்க முடியாத நம்பிக்கை! ஆகையால் இவர்களே நம் காலை வாரிவிடும்போது நாம் நிலைகுலைந்து போகிறோம்.

தமிழக அரசியல் வரலாற்றில் ஜெயலலிதா ஈழத்தமிழர் விடயத்தில் அக்கறையற்றவராயும், ‘புலி’ எதிர்ப்பாளராயும் விளங்கியவர் என்பதில் சந்தேகமில்லை. ஆனால், இன்று மனமாற்றம் பெற்று ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாக குரல் எழுப்பிவருகிறார். இதற்குத் தேர்தல்தான் காரணம் என்று சொல்பவர்களிருக்கிறார்கள். ஆனால், இதே தேர்தலைச் சந்திக்கும் நிலையில் இருக்கும் தி.மு.க வும் அதன் தோழமைக் கட்சியும், ஈழத்தமிழர்களின் இன்றைய அவலங்களுக்கெல்லாம் காரணகர்த்தாவுமான இ.காங்கிரஸ¤ம் அது பற்றி வாயேதிறக்காதபோது ஜெயலலிதா ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாகப் பேசிவருவதுடன், தமது தலைமையில் அமைந்துள்ள கூட்டணி வெற்றி பெற்றால் அவர்களது கனவினை நிறைவேற்றும் வகையில் தனி ஈழம் ஏற்பட உதவுவதாயும் கூறிவருகிறார்.

இது எந்தளவுக்குச் சாத்தியம் என்பது தெரியவில்லையாயினும் , கொள்கையளவில் அங்கு ஒரு தனி நாடு - அதுவும் தமிழருக்கென ஓர் நாடு - உருவாவதில் தமிழகம் முழுமனதுடன் செயல்படும் நிலை தோன்றும் என்பது உறுதி. ஜெயலலிதாவின் இன்றைய மனமாறுதலுக்கு, எம்.ஜி..ஆர் மீது அவருக்குள்ள பற்றுதலும், மிக அண்மையில் அவரைச் சந்தித்துப் பேசிய சிறீ சிறீ ரவிசங்கர் அவர்கள் ஈழத்தில் நடப்பவற்றை நேரில் கண்டு வந்து கூறிய தகவல்களும் காரணம் எனச்சொல்கிறார்கள்.

எது எப்படியிருப்பினும், ஈழத்தமிழர்கள் பற்றிய நிலையில், அவர் இப்போது ஓர் மிகப் பெரும் மனமாறுதலுக்கு உள்ளாகியிருக்கிறார் என்பது, அவர் செல்லும் இடங்களிலெல்லாம் ஈழத்தில் தமிழர் படும் துயரங்கள் பற்றிக் குறிப்பிடுவதிலிருந்தே தெரிகிறது.

நாளை அவரது கூட்டணி வெற்றிபெற்றால் இயன்றவரை தாம் வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றிடப் பாடுபடுவார் எனவும் நம்பலாம். ஆனால், தமது அரசியல் வாழ்க்கையில் ஈழத்தமிழர் விடயத்தில் மத்திய அரசின் நிலைப்பாட்டினை ஒட்டியும், மத்திய-மாநில அரசுகளின் உறவினுக்கு முக்கியத்துவம் அளித்தும்; அவ்வப் போது தமது தமிழ் உணர்வினை அதிகரித்தும், குறைத்தும் வித்தைகாட்டும் ஒருவரால், துணிந்து உறுதியான முடிவினை எட்ட இயலாது என்பதே உண்மை.

எம்.ஜி.. ஆர் விடுதலைப் புலிகளை ஆதரித்தபோது அவர்களுக்கு எதிரான இயக்கங்களைத் தான் ஆதரிப்பது; வைக்கோ வுடன் முரண்பட்ட சமையத்தில், ‘விடுதலைப் புலிகளால் தமது உயிருக்கு மிரட்டல்’ என்று அறிக்கை வெளியிடுவது; பின்னர் திடீரென ‘சூரப் புலி’யாகச் சீறி எழுவது, அந்த வேகம் தணியும் முன்பாகவே ‘பெட்டிப் பாம்பாக’ அடங்கிப் போவது....... என வித்தை காட்டும் வித்தகரை விடவும்- அவரது தலைமையினை விடவும், துணிவும், சுய கௌரவத்தின் காரணமாக விட்டுக்கொடுக்காத இயல்பும் கொண்ட ஜெயலலிதாவைத் தமிழக மக்கள் நம்பலாம்.

இன்று தமிழக மக்களிடையே எழுந்துள்ள முக்கியமான கேள்வி, (‘மில்லியன் டாலர் கேள்வி?!) எதிரியாக இருந்திருப்பினும் உண்மை நிலை தெரிந்து நண்பனாக மாறியவரை ஆதரிப்பதா அல்லது நண்பனாக நடிப்பதிலும் ‘டாக்டர்’ பட்டம் பெறும் ஆற்றல் வாய்ந்தவரை மீண்டும் ஆதரிப்பதா என்பதுதான்.

மே 13ல் தமிழக மக்கள் வழங்கப்போகும் தீர்ப்பு, தமிழகத்தின் எதிர் காலத்தை மட்டுமல்ல, ஈழத் தமிழர்களது தலைவிதியையும் நிர்ணயம் செய்யப்போகிறது என்பதில் சந்தேகமேயில்லை.

- சர்வசித்தன் ([email protected])


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com