Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
KeetruLiteratureArticle
கண்ணகியின் தன் அடிமைத்தனம் - ஓர் உளவியல் ஆய்வு
அ. சன்னத் ரோஜா, முதலாமாண்டு, ஆசிரியர் பட்டயப் பயிற்சி மாணவி,
உ. பாஸ்கரன் உளவியல் விரிவுரையாளர், விவேகானந்தா மகளிர் ஆசிரியர் பயிற்சி நிறுவனம், எளையம்பாளையம், திருச்செங்கோடு.


முன்னுரை

"யாமறிந்த புலவரிலே கம்பனைப்போல்
வள்ளுவர் போல் இளங்கோவைப் போல்
பூமிதனில் யாங்கணுமே பிறந்ததில்லை"

என தேசியகவி சுப்பிரமணிய பாரதியரால் போற்றப்பட்ட கடைச்சங்கப் புலவர் இளங்கோவடிகளால் இயற்றப்பட்டது சிலப்பதிகாரம். நெஞ்சையள்ளும் சிலப்பதிகாரம் என்றோர் மணியாரம் படைத்த தமிழ்நாடு என தமிழ்நாட்டிற்கு அணி சேர்க்கும் சிறப்புடையது இக்காப்பியம்.

சிலப்பதிகாரத்தின் வாயிலாக பண்டைய தமிழகத்தின் செல்வச் செழிப்பும், இயற்கை வளமும், கலைத்திறனும், வாணிபத் தொடர்பும், அரசியல் முறையின் சிறப்பும் சிறப்புற்று இருந்ததை தெளிவாக விளக்குவதை எண்ணி மகிழும் அதே வேளையில் அக்காலச் சூழ்நிலையில் வாழ்ந்த பெண்களின் நிலை நம்மை கவலைக்கு உள்ளாக்குகிறது.

கண்ணகியை பத்தினித் தெய்வமாய் படம்பிடித்து கவிபடைத்தது, சிலை வடித்து, வணங்கி புகழும் வேளையில் கண்ணகி பெண் அடிமைத்தனத்தின் ஒட்டுமொத்த உருவமாய் இருப்பது மறைக்கப்பட்டுள்ளது. பெண்ணியப்பார்வை வளர்ந்து விட்ட இக்காலத்தில் கண்ணகியைப் பற்றிய ஒரு மறு பார்வையின் தேவையை உணர்ந்து இவ்வாய்வுக் கட்டுரை பயணிக்கிறது.

இயற்கையின் படைப்பில் வேறுபாடின்றி காணப்படும் மனித உயிர்களில் ஆண், பெண் பேதம் வருத்தத்தை அளிக்கிறது. சமுதாயத்தை உற்றுநோக்கும் போது ஆளுமையில், நடத்தையில் சமூகப் பொருளாதாரச் சுதந்திரத்தில், குண இயல்புகளில் ஆண், பெண் வேறுபாடானது, மொழி, இன வேறுபாடு இன்றி உலகின் எல்லாப் பாகங்களிலும் நீக்கமற நிறைந்துள்ளது.

மனிதனின் நடத்தையைத் தீர்மானிப்பது மரபா? சூழ்நிலையா? எனும் கேள்வி, உளவியல் அறிஞர்களின் விவாதத்திற்கு உரிய ஒன்றாகவே இன்று வரை உள்ளது. சமுதாயமானது ஆணுக்கு எனவும், பெண்ணுக்கு எனவும் சில நடத்தைக் கோலங்களை வகுத்துள்ளது.

பிரெஞ்ச் பெண்ணியவாதி சைமன்-டி-பௌவாயர் என்பவர் "பெண் பிறப்பதில்லை உருவாக்கப்படுகின்றாள்" என்று கூறுவதன் மூலம் உளவியல் அறிஞர்களின் விவாதத்திற்கு முற்றுப்புள்ளி வைத்து பெண்ணுக்கான குணமும், நடத்தைக் கோலமும், ஆணாதிக்க சமுதாயத்தின் விருப்பப்படியே உருவாக்கப்படுகின்றது என்பதைத் தெளிவாக்குகின்றார்.

தமிழனின் தேசியக்காப்பியமாக கருதப்படுகின்ற சிலப்பதிகாரத்தின் கதைநாயகி, தமிழக மக்களின் கற்புக்கடவுள் கண்ணகி பெண்ணியப் பார்வையில் பெண்ணடிமைத்தனத்தின் முழு உருவமாக தெரிகின்றாள். கண்ணகி ஏன் அடிமையானாள்? என்பதை உளவியல் அணுகு முறையில் இக்கட்டுரையில் காண்போம்.

இவ்வாய்வுக் கட்டுரையின் நோக்கம்

சிலப்பதிகாரத்தில் கண்ணகியின் பாத்திரப்படைப்பை அறிதல்.
கண்ணகியிடம் காணப்படும் பெண் அடிமைத்தனத்திற்கான கூறுகளை அறிதல்.
கண்ணகி தனக்குள் அடிமையாய் இருப்பதற்கான சமூக உளவியல் காரணங்களை அறிதல்.
கண்ணகியின் வாயிலாக அக்காலச் சூழ்நிலையில் வாழ்ந்த ஒட்டுமொத்தப் பெண்களின் நிலையை அறிதல்.

பெண்ணியப் பார்வையில் கண்ணகியின் பாத்திரப்படைப்பு

அழகிலும், கற்பு நெறி தவறாமையாலும், தன் கணவன் கள்வன் அல்லன் என மெய்ப்பித்து மதுரையை எரித்தாலும், இலக்கிய பார்வையில் கதைநாயகியாக சித்தரிக்கப்படும் கண்ணகி பல்வேறு காரணங்களால் பெண்ணியப்பார்வையில் பெண் அடிமைச்சின்னமாகவே பார்க்கப்படுகின்றாள்.

பெண்ணானவள் ஆணுக்குரிய குணங்களாகிய வீரம், கொடை, கல்வி, அறிவுத்திறன் தலைமையேற்றல் போன்ற எல்லாத் திறன்களையும் பெற்று இருந்தபோதிலும், காலங்காலமாய் கவிஞர்களாலும் கதாயாசிரியர்களாலும் ஓர் போகப் பொருளாகவே பார்க்கப்படுகின்றாள், படைக்கப்படுகின்றாள்.

சிலப்பதிகாரத்தில் “மாசறு பெண்ணே ! வலம்புரிமுத்தே !
காசறு விரையே ! கரும்பே ! தேனே !
.........................................யாழிடைப் பிறவா இசையே என்கோ ?"

என கண்ணகியைப் புகழும் இளங்கோவடிகள் எந்த இடத்திலும் கண்ணகியின் அறிவுத்திறத்தையோ, வீரத்தையோ, கொடையையோ வெளிப்படுத்தவில்லை.

அழகுப் பதுமையாகவும், புகழ்ச்சிக்கு அடிபணியும் பேதையாகவும் சிலப்பதிகாரத்தில் உலாவரும் கண்ணகி பெண்ணியப் பார்வையில் அடிமைப்பெண்ணே ஆவாள். "பெண்கள் பெருமை, வருணை ஆகியவற்றில் பெண்கள் அங்கம், அவையங்கள், சாயல் ஆகியவற்றைப் பற்றி ஐம்பது வரிகள் இருந்தால் அவர்களது அறவு, அவர்களால் ஏற்படும் பயன், சக்தி, திறமைப் பற்றி ஓர் ஐந்து வரி கூட இருக்காது. பெண்களின் உருவை அலங்கரிப்பது, அழகை மெச்சுவது, சாயலைப் புகழுவது ஆகியவை பெண்கள் சமுதாயத்திற்கு அவமானம், இழிவு, அடிமைத்தனம் என்பதை ஆயிரத்தில் ஒரு பெண்ணாவது உணர்ந்திருக்கிறாள் என்று சொல்ல முடியுமா?" என்று கேட்கிறேன், எனும் தந்தை பெரியாரின் கேள்வி இங்கே ஒப்புநோக்கத்தக்கது.

கற்பு நெறி

"அச்சமும், நாணும் மடனும் முந்துறுதல் நிச்சமும்
பெண்பாற் குரிய"

எனும் தொல்காப்பிய இலக்கணத்தினைக் கடைபிடித்தும், தன் கணவன் மாதவியிடம் இருந்து பிரிந்து வந்தபோது, எந்த ஒரு கேள்வியும் கேட்காமல் ஏற்றுக்கொண்டு சிலம்பினை கொடுத்து உதவி, எழுக என்றவுடன் எழுந்து செல் என்றவுடன் சென்று கணவனின் சொல்லிற்கு கட்டுப்பட்டு நடந்து

"தெய்வம் தொழா அள்கொழுநன் தொழுதெழுவாள்
பெய்யெனப் பெய்யும் மலை"

எனும் வள்ளுவரின் வாக்கிற்கிணங்க வாழ்ந்ததன் மூலம் இலக்கிய உலகில் கற்பரசி பட்டத்தைப் பெற்ற பொழுதும், தன் கணவன் மாதவியிடம் சென்ற பொழுது தட்டிக் கேட்காததினாலும் பிரிந்திருந்த காலத்தில் தனக்கான ஒரு நல்வாழ்வை அமைத்துக் கொள்ளாத குற்றத்திற்காகவும், மீண்டும் வந்த பொழுது கேள்வியே கேட்காமல் ஏற்றுக் கொண்ட காரணத்தினாலும் பெண்ணியப் பார்வையில் கண்ணகி பெண் அடிமையாகவே தெரிகின்றாள்.

கண்ணகியின் ஆழ்மன எண்ணங்கள்

கோவலன் தன்னை விட்டு விலகி மாதவியுடன் வாழ்ந்த காலத்தில் கூட கண்ணகி கற்புநெறி தவறாமல் தன் கணவனை எண்ணி, உருகியும், பிற ஆடவரை கணவிலும் நினைத்துப்பாரா பதிவிரதியாய் இருந்ததன் மூலம் பத்தினி தெய்வமாய் இலக்கியம் காட்டுகிறது. கோவலனைப் பிரிந்து வாடும் கண்ணகியின் எண்ணங்களை அந்திமாலை சிறப்பு செய் காதையில் "கூடினார் பால் நிழல் ஆய், கூடார்பால் வெய்யது ஆங்கு
......................................................................................................................
.....................................................................................................................
போதவிழ்க்கும் கங்குல் பொழுது"
என இளங்கோவடிகள் விவரிக்கின்றார்.

பெண்ணியமானது ஒரு பெண் தனக்கு வாழ்க்கையில் சிக்கல்கள் ஏற்படும்போது அதனை சமாளிக்கவும் யாரையும் சாராமல் இயங்கக் கூடிய ஆற்றல் பெற்றவளாகவும் இருக்க வேண்டும். ஆனால் கண்ணகியின் சிந்தனையில் ஊடலும், கூடலுமே காணப்படுவதால், கண்ணகி பெண் அடிமையாகவே கருதப்படுகின்றாள்.

கனவு

மனிதனின் ஆழ்மன பதிவுகளில் உள்ள எண்ணங்கள் எதிர்பார்ப்புகள், நிறைவேறாத ஆசைகள் போன்றவையே கனவுகளாக வெளிப்படும். சிலப்பதிகாரத்தில் கண்ணகி, கோவலன் தன்னை ஒரு நகரத்திற்கு அழைத்துச் சென்றது போலவும், அங்கு கோவலனுக்கு தீங்கு நேர்ந்தது போலவும், பிறகு கண்ணகி காவலனிடம் நீதிகேட்டது போலவும், அதனால் அந்த நகருக்கு பெருந்தீங்கு ஏற்பட்டது போல் கனவு ஒன்றை காண்கிறாள். இதனை தனது தோழியிடம் கூறும்பொழுது அதற்குப்பின் நடந்தவற்றை கேட்டால் சிரிப்பு தான் வரும் என்று கூறுகின்றாள். ஆனால் அது என்ன என்று கூறுவதில்லை.

உளவியல் அடிப்படையில் இக்கனவினை நோக்கும் பொழுது, கண்ணகி தன்னுடைய வாழ்வை எதிர்நோக்கும் திறமையற்றவளாக, தனது வாழ்க்கையைப் பாதுகாப்புமின்மையாக கருதும் ஒரு கோழைப் பெண்ணாகவும் மீண்டும் கோவலனுடன் இணையமாட்டோமோ என ஏங்கும் பேதைப் பெண்ணாகவும் சித்தரிக்கப்படுகின்றாள்.

கண்ணகியின் அறிவுத்திறன்

தனது காதல் கணவன் கள்வன் எனக் குற்றம் சாற்றப்பட்டு கொலையுண்ட செய்தியை அறிந்து கொதித்தெழுந்து, தனது கணவன் கள்வன் அல்லன் என மெய்ப்பித்து மதுரையை அழித்தன் மூலம் மண்ணில் சிலை வைக்கும் அளவிற்கு மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளாள். கண்ணகி மேலும் இலக்கிய உலகம்

"தெய்வம் தொழாஅள் கொழுநன் தொழவாளைத்
தெய்வம் தொழுந்தகையை திண்ணிதால் தெய்வமாய்
மண்ணக மாதர்க்கு அணியார் கண்ணகி
விண்ணக மாதர்க்கு விருந்து"
எனப் புகழ்கின்றது.

பெண்ணானவள் சூழ்நிலையை சமாளிக்கும் திறனுடையவள். சிக்கல்களை அறிவின் அடிப்படையில் சிந்தித்து செயல்படுபவள். ஆனால் தன் கணவன் கொலையுண்டதற்கு தேவையும் இன்றி, காரணமும் இன்றி அந்தணர், அறவோர், பத்தினிப் பெண்டிர் மூத்தோர், குழந்தைகள் நோயாளிகள் தவிர ஒட்டுமொத்த மதுரையையும் அழித்தது கண்ணகியின் அறிவின்மையையும், மன எழுச்சி முதிர்ச்சியின்மையையும், பெண்புத்தி பின்புத்தி என்னும் அடிமைத்தனத்தையும் காட்டுவதோடு மட்டுமல்லாமல், இளங்கோவடிகளின் பர்ப்பணியத்தையும் காட்டுகின்றது.

கண்ணகி ஏன் அடிமையானாள் - ஓர் உளவியல் அணுகுமுறை

பெண்ணியப் பார்வையில் பார்க்கும் போது கண்ணகியை யாரும் அடிமைப்படுத்தவில்லை. ஆனால் அடிமை புத்தி அவளுடைய ஆளுமையில் பதித்துள்ளது. சமூக உளவியல் கோட்பாட்டின்படி ஒரு மனிதனின் ஆளுமை அமைப்பில் சமக அமைப்பும், வளர்ப்பு முறையும், கருத்தோற்றங்களும், முன் மாதிரிகளும் முக்கியப்பங்கு வகிக்கின்றன.

கண்ணகியின் கதாபாத்திரமானது அக்காலச் சூழ்நிலையில் வாழ்ந்த ஒட்டுமொத்த பெண்களின் நிலையைச் சித்தரிக்கின்றது. அக்காலத்தில் கற்பு நெறி பெண்ணுக்கு மட்டுமே உடையதாகவும், அதை கடைப்பிடிப்பதை பெருமையாகவும், கடமையாகவும் கருத வேண்டும் என்ற கருத்தோற்றம் பெண்களின் நனவிலி மனத்தில் பதிவு செய்யப்பட்டுளளது.

அக்காலச் சமுதாயம் பெண்கள் கற்புநெறி தவறாமல் வாழ வேண்டும். அவ்வாறு வாழ்ந்தால் பெண்களுக்கு சிறப்புசக்தி கிடைக்கும் என கருத்தோற்றம் செய்ததோடு மட்டுமல்லாமல் கண்ணகி தனக்கு முன் மாதிரியாக ஏழு பத்திப் பெண்களை கொண்டிருக்கின்றார். இதுவே கண்ணகியின் ஆளுமையில் பெண்ணடிமைத்தனம் ஏற்பட காரணமாயிற்று.

"1. கரிகாலன் பெருவளவன் மகள்கேள்வன் கடல்புக்கான்
திருவேயோ என அழைத்துத் திரைக்கரத்தால் தரக்கொண்டான்
வரைகேள்வன் கலம்நோக்கி வருமளவும் கல்லானாள்
புரைதீரப் பிறந்தபதி பூம்புகார்ப் பட்டினமே.

2. வன்னி மடைப் பளியோடு சான்றாக வரவழைத்தான்
பன்னியகா விரிமணல்வாய்ப் பாவையை நுன்கnள் வனெனும்
கன்னியர்களொடும் போகாள் திரை கரையா வகைகாத்தாள்
பொன்னனையாள் பிறந்தபதி பூம்புகார்ப் பட்டினமே

3. கூவலில் போய் மாற்றாள் குழவிவிழத் தன் குழவி
ஆவலின் வீழ்ந் தேற்றெடுத்தாள் அயல் நோக்கம் வேறென்று
மேவினாள் குரக்குமுகம் வீடுடையோன் வரவிடுத்தாள்
பூவின்மேல் பிறந்தபதி பூம்புகார்ப் பட்டினமே

4. முற்றாத முலையிருவர் முத்துவண்டல் அயர்விடத்துப்
பெற்றாற்றா மாண்பெண் பிறர்மணம் செய்யாவண்ணம்
சொற்றார்கள் பிறந்தபெண் நாயகனைத் தலை சுமந்தாள்
பொற்றாலி பறிந்தபதி பூம்புகார்ப் பட்டினமே."

எனும் கண்ணகியின் கூற்று மூலம் கண்ணகியின் ஆழ்மனதில் பொதிந்துள்ள கற்புநெறி இலக்கணமும், தான் முன் மாதிரியாய் கொண்டுள்ள ஏழு பத்தினிப் பெண்கள் மீது வைத்துள்ள முன்மாதிரியாக கற்பிப்பது பெண் அடிமைத்தனத்திற்கு வழிவகுக்கும்.

தீர்வுகள்

கண்ணகி தவறான கற்பிதங்களாலும், முன்மாதிரிகளாலும் பெண் அடிமையாக்கப்பட்டுள்ளாள். இன்றையச் சூழ்நிலையில் கண்ணகியை நமது பெண்களுக்கு முன்மாதிரியாக கற்பிப்பது பெண் அடிமைத்தனத்திற்கு வழிவகுக்கும்.

முடிவுகள்

1. பெண்ணியப் பார்வையில் கண்ணகி அடிமையாக உள்ளாள்.
2. கண்ணகி அக்காலச் சூழ்நிலையில் வாழ்ந்த பெண்களின் அடிமைத்தனத்தின் முழு உருவம்.
3. இக்கால சூழ்நிலையில் முன் மாதிரியாக காட்டுதல் அடிமைத்தனத்திற்கே வழிவகுக்கும்.
4. இன்றைய பாடத்திட்டம் மற்றும் கற்பித்தலில், இக்காலச் சூழ்நிலைக்கு ஏற்ற ஒரு புதியபார்வை சிலப்பதிகாரத்திற்கு தேவை.

இவ்வாறு பயணித்த இக்கட்டுரையின் நோக்கம், முடிவு கீழ்காணும் கவிப்பேரரசு வைரமுத்துவின் வைரவரிகளால் நிறைவு செய்யப்படுகிறது.

"தாய்க்குலமே தாய்குலமே தங்கமன் சொல்லுகிறேன்
வாச்சாலக் காரனென்றன் வார்த்தையினைத் தள்ளாதீர்
கற்பொன்றில் மட்டும் கண்ணகியை போலிருங்கள்
மற்றவற்றில் அந்த மடமகளை மறந்திடுங்கள்".

மேற்கோள் நூல்கள்

சிலப்பதிகாரம் : வித்வான் - டாக்டர் துரை இராஜாராம்
பெரியார் களஞ்சியம் : தொகுதி 6 - தொகுப்பாசிரியர் கி. வீரமணி,
தமிழ் இலக்கியமும், பெண்ணியமும் : முனைவர் அரங்க மல்லிகா
கருப்பு நிலா : கவிப்பேரரசு வைரமுத்து.

- அ. சன்னத் ரோஜா([email protected])


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com