Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
KeetruLiteratureArticle
கட்டுரை

கங்கைகொண்டான் - கண்ணீர் கண்டான்
ரசிகவ் ஞானியார்


தலைமுறைகளாய் ஜீவன்களின் தாகம் தீர்க்கின்ற தாமிரபரணி ஆறு ஓடுகின்ற திருநெல்வேலியில் கங்கை ஆற்றின் பெயர்தாங்கிய அந்தப்பகுதி கங்கைகொண்டான். ஒவ்வொரு வருடமும் பொழிகின்ற மழையைப் பொறுத்துதான் அந்த மண் மக்களின் உணவு தீர்மானிக்கப்படுகிறது. ஆம் கடவுளுக்கு அடுத்தபடியா ய் மழையை மட்டுமே நம்பி விவசாயம் செய்கின்ற உழவர்களின் பூமி அது.

Coke bottle ஒரு சில வசதியான விவசாயிகள் கிணறு வைத்திருந்தாலும் திருநெல்வேலி உள்ள பெரும்பான்மையான விவசாயிகள் நம்பியிருப்பது தாமிபரணித் தண்ணீரை மட்டுமே. விவசாயத்திற்கும் குடிநீருக்கும் தாமிரபரணித் தண்ணீர்தான் தாய்ப்பாலைவிடவும் அந்த மக்களுக்கு முக்கியத்துவமாய் இருக்கின்றது. தாகம் தீர்வதற்கு தாமிரபரணித் தண்ணீரை குடிக்கத் தேவையில்லை அந்த ஆற்றை நினைத்தாலே போதும். தாகம் பறந்து விடும்.

ஒன்று தெரியுமா..? திருநெல்வேலி அல்வாவின் புகழுக்கு காரணமே தாமிரபரணித் தண்ணீர்தான். அதே அல்வா செய்யும் பக்குவத்துடன் அதே ஆட்களை வைத்து மற்ற பகுதிகளில் அவர்கள் அல்வாவைத் தயாரித்தாலும் அந்த தண்ணீரின் தரத்தில் கிடைக்கும் சுவை வேறு எந்தத் தண்ணீரிலும் கிடைக்காது என்று நம்பப்படும் அளவிற்கு காரம் மணம் குணம் நிறைந்தது தாமிரபரணித் தண்ணீர்.

எனக்கு ஞாபகம் தெரிந்த வரையிலும் அந்த ஆறு வற்றியதை நான் கண்டதேயில்லை. எனது ஊரில் தண்ணீர்ப்பஞ்சம் வந்தபொழுதெல்லாம் சைக்கிளின் பின்புறம் நான்கு குடங்களை கேரியரில் வைத்துக்கொண்டு நண்பர்களுடன் தாமிரபரணிக்குச் சென்று குளித்தும் குடத்தில் தண்ணீரப் பிடித்தும் வந்திருக்கிறேன். அந்த ஆற்றில் தண்ணீர் வற்றப்போகிறது என்ற செய்தியைக் கேள்விப்பட்டு பசுவின் தாய்ப்பாலை விற்பதற்காய் வியாபாரிகள் கறந்து விட்ட பிறகு எஞ்சியுள்ள காம்பில் பால் சுரக்குமா என்று ஏங்கும் கன்றின் நிலைதான் எங்களுக்கு.

அப்படி அச்சப்படும் அளவிற்கு என்னதான் நடக்கப்போகிறது..?

சுமார் 15 வருடங்களுக்கு முன்பு 2017 ஏக்கர் பரப்பளவை உள்ளடக்கி ஆரம்பிக்கப்பட்டது சிப்காட் என்னும் தொழிற்சாலைப்பகுதி. அங்குள்ள சிமெண்ட் தொழிற்சாலைக்கு தாமிரபரணி ஆற்றிலிருந்துதான் தண்ணீர் குழாய் மூலமாக எடுத்துச் செல்லப்பட்டு வருகின்றது. அந்த சிமெண்ட் தொழிற்சாலையின் வெளிப்புறத்தில் லஷ்மி மில் நிறுவனத்தால் நடைபெறுகின்ற மாவு மில் ஒன்று இருக்கிறது.

மூன்றாவதாக அடியெடுத்து வைத்திருக்கிறது சிப்கால் தொழிற்சாலை. சவுத் இண்டியன் பாட்டிலிங் கம்பெனி (South Indian Bottling Company - SIBCL) என்னும் பெயரில் வரப்போகும் அந்த தொழிற்சாலையினால் தங்களின் விவசாயம் பறிபோய் விடும் குடிதண்ணீர்த் தட்டுப்பாடு தோன்றும் மற்றும் அந்த ஆலையத்தில் கழிவு நீர்களினால் புற்றுநோய் வரக்கூடும் என்று அச்சத்தில் தூக்கமிழந்து தவிக்கிறார்கள் அப்பகுதி மக்கள். இது திருநெல்வேலியிலிருந்து மதுரை செல்லுகின்ற குறுக்குவழிச்சாலையிலிருந்து 3.5 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது.

Thamiraparani இந்த சிப்கால் தொழிற்சாலை எழுப்பும் பொறுப்பு சென்னையில் உள்ள சிசி லிமிடெட் (South Indian Bottling Company - SIBCL) என்ற நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. தாமிரபரணி ஆற்றிலிருந்து தினமும் 5 லட்சம் தண்ணீர் உறிஞ்சப்படுவதற்கு அனுமதியளிக்கப்பட்டிருக்கிறது. ஆனால் 5 லட்சம் 50 லட்சமாக மாறி தங்களின் கண்ணீர்களை தண்ணீராக்கிவிடுவார்களோ என்றும் குளிர்பானத்திற்காக வந்து பின்னர் கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீர் பாக்கெட்டுகள் விற்பனையையும் ஆரம்பித்து தங்களின் சந்ததியினருக்கு சாவு மணி அடித்திடுவார்களோ என்ற பயமும் மக்களை மிகவும் வாட்டுகிறது.

பின்னர் என்ன..? நம் வீட்டு தோட்டத்தில் பூப்பறித்து நம் காதில் சூடிவிடுவார்கள்.

வீ லஷ்மிபதி - சிப்கால் சூபர்வைசர் கூறியதாவது:

சென்னையில் இருக்கும் என்னுடைய சீனியர் அலுவலகர் எங்களிடம் கூறினார். எந்தப் பத்திரிக்கைகளும் இந்த விசயத்தை பெரிதுபடுத்தவே இல்லை..ஒரு சில பத்திரிக்கைகள்தான் திரும்ப திரும்ப எங்களுக்கு எதிரான கருத்துக்களைப் பரப்பி வருகின்றது

அந்த நிறுவனம் அங்கே ஆரம்பிக்கப்பட்டால் நாங்கள் தாமிரபரணி தண்ணீரை முழுவதுமாக உறிஞ்சி எடுத்துக் கொள்வோம் என்று. அதுமட்டுமல்ல நாங்கள் ஆழ் கிணறுகள் தோண்டி கூட தண்ணீர் எடுத்துக்கொள்ள அனுமதிக்கப்படவில்லை. ஒரு நாளைக்கு 5 லட்சம் லிட்டர் மட்டும்தான் சிப்காட் மூலமாக எங்களுக்கு தருவதாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது

கங்கைகொண்டானின் ஊராட்சி மன்ற உறுப்பினர் வி. கம்சன் கூறியிருப்பதாவது:

தண்ணீர் [PWD] Public Water Department லிருந்துதான் அவர்களுக்கு வழங்கப்படப்போகிறதே தவிர அவர்களுக்கு இங்கு கிணறு தோண்டுவதற்கு அனுமதியளிக்கப்படவில்லை. அதுமட்டுமல்ல இந்த கோகோ கோலா நிறுவனத்தால் உள்ளூர் மக்களுக்கு பல ஆயிரக்கணக்கான வேலைவாய்ப்புகள் கிடைக்கும்.

(இவர் தற்போது உயிரோடு இல்லை. சமீபத்தில் மஞ்சள் காமாலை நோயால் தாக்கப்பட்டார்)

Plachimada இவரின் கூற்றுப்படி பல மக்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்க வழிவகுக்கும் என்றாலும் இரத்தம் உறிஞ்சுவதற்கு கூலி கொடுக்கிறார்களோ என எண்ணத் தோன்றுகிறது. மாவட்ட ரெவின்யு அலுவலர் திரு ஜி லோகநாதன் அவர்கள் கோக் ஆலை எதிர்ப்பாளர்களிடமிருந்தும் அதற்கு ஆதரவாளர்களிடமிருந்தும் கருத்துக்களைப் பெற்று மாவட்ட ஆட்சித்தலைவர் திரு அதுல் ஆனந்த் மூலம் மத்திய அரசிடம் சமர்ப்பிப்பதற்காக முயற்சி மேற்கொண்டார்

கோக் எதிர்ப்பு குழுவும் அவர்களின் நியாயங்களும்

இந்த கோக் ஆலை எதிர்ப்பு அமைப்பானது தாமிரபரணி கூட்டு நடவடிக்கை குழு (Joint Action Group for Thamiraparani – JAGT) மற்றும் நிலத்தடி நீர் பாதுகாப்பு அமைப்பும் (Ground Water Conservation) இணைந்து உள்ள அமைப்பாகும்.

இந்த எதிர்ப்பு குழுவோடு முன்னால் எம் எல் ஏ ஆர் கிருஷ்ணன் - மானூர் பஞ்சாயத்து யூனியன் கவுன்சிலர் சி.எஸ் மணி - தமிழ்நாடு அறிவியல் குழுமத்தின் மாவட்ட செயலாளர் முத்துகமாரசாமி (District Secretary of Tamilnadu Science Forum) - திருநெல்வேலி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் நிர்வாகி அருணா பாக்யராஜ் ஆகியோர் இணைந்து டி ஆர் ஓ திரு ஜி லோகநாதன் அவர்களை சந்தித்து கோகோ கோலா நிறுவனத்தினால் நேரப்போகும் தீமைகளை விளக்கினர்

திரு மணி அவர்கள் இதுபோல கேரளாவில் உள்ள பிலாச்சிமடா என்னுமிடத்தில் உள்ள கோகோ கோலா நிறுவனத்தை பார்வையிட்டு வந்து கூறியதாவது:

அந்தத் தொழிற்சாலை அருகே தங்கியிருக்கும் கிராம மக்கள் பெரும் பாதிப்புள்ளாகின்றார்கள். இங்கு வெளியேற்றப்படும் கழிவு நீர்களினால் மனரீதியான மற்றும் உடற்ரீதியான பிரச்சனைகள் ஏற்படுகின்றன. பிறக்கின்ற குழந்தை - பெண்கள் மற்றும் சிறுவர்- சிறுமிகள் அதிகமாக பாதிப்புக்கு உள்ளாகிறார்கள்.

Plachimada strike கோக் ஆதரவு குழுவும் அவர்களின் நியாயங்களும்

இதற்கிடையில் அந்த தொழிற்சாலை வருவதற்கு ஆதரவு தெரிவிக்கும் அமைப்பில் முன்னாள் திராவிட முன்னேற்றக் கழக எம்எல்ஏ கருப்பையா மற்றும் சிப்கால் நிறுவன துணை மேலாளர் எஸ் கண்ணன் மற்றும் சிலர் டி ஆர் ஓ லோகநாதனிடம் சாதகமான கருத்துக்களை தெரிவித்துள்ளனர்

கங்கை கொண்டான் பகுதி சரியான நீர்வரத்து இன்றி வறட்சி பூமியாக மாறிவிட்டதால் அவை தற்பொழுது விவசாயத்திற்கு ஏற்புடையதாக இல்லை. அங்கு விவசாய பூமிகள் அழிந்து கொண்டு வருகின்றது. பல நவீன புதிய கருவிகளை பயன்படுத்தப்போவதால் அதனால் சுற்றுப்புற சூழ்நிலைக்கு எந்த வித பாதிப்பையும் ஏற்படுத்தாது

தமிழ்நாடு சுற்றுப்புற மாசுக்கட்டுப்பாடு மூலம் முறையான சோதனைகளும் அடிக்கடி மேற்கொள்ளப்படும். பல வேலையில்லா உள்ளூர் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கப்படுதல்.

இரண்டு தரப்பு வாதங்களையும் கருத்தில் கொள்வதற்கு முன் திரு மணி அவர்கள் கூறிய பிலாச்சிமடா பகுதி..? அது என்ன..? அங்கு என்னதான் நேர்ந்தது..? அங்கே ஆரம்பிக்கப்பட்டுள்ள கோகோ கோலா கம்பெனியை மூடவேண்டும் என மக்களும் சில சமூக அமைப்புகளும் போராடுவதற்கான காரணம் என்ன..?

பிலாச்சிமடா :

கேரள மாநிலம் கொச்சினில் இருந்து 150 கிலோமீட்டர் வடக்குப்பகுதியில் உள்ளது இந்த பிலாச்சிமடா என்ற பகுதி. பெருமாச்சி என்னும் கிராமத்தின் ஆளுமைக்கு உட்பட்ட இந்தப் பாலக்காட்டுக்கு அருகே உள்ள இந்த பிலாச்சிமடாப் பகுதியில் மார்ச் 2000 ம் வருடம் மெல்ல மெல்ல கோகோ கோலா நிறுவனம் உள்ளே நுழைந்தது. அந்த ஆலை ஆரம்பிக்கப்பட்ட கொஞ்ச நாட்களிலையே அப்பகுதி மக்கள் குடிதண்ணீரின் நிறம் சிறிது மாற்றமடைவதைக் கண்டுள்ளார்கள்.

Gangai Kondan strike தண்ணீருக்காக அப்பகுதி மக்கள் சுமார் 5 கி.மீ தொலைவு பயணப்படவேண்டியதாக இருக்கிறது. இந்தச் சூழ்நிலையில் இந்தச் தொழிற்சாலை வேறு தண்ணீரை உறிஞ்சுவதால் தேவையான அளவு தண்ணீர் தங்களுக்கு மறுக்கப்பட்டுவிடுமோ என்ற அச்சத்தில் சுமார் 2000த்துக்கும் மேற்பட்ட மக்கள் அமைதியான முறையில் போராட்டத்தை தொடர்ந்தனர்.

நிர்வாகம் அங்குள்ள கிராமமக்களுக்கு தினமும் தண்ணீர் சப்ளை செய்வதாக உறுதியளித்தது. ஆனாலும் அப்பகுதி மக்களுக்கு அது திருப்தியளிக்கவில்லை. அந்த தொழிற்சாலை முன்பு 130 ஆண்கள் மற்றும் பெண்கள் கைது. 1000 பேர் தொழிற்சாலையை முற்றுகை என்று போராட்டங்கள் தொடர்ந்து கொண்டேயிருந்தது.

பிலாச்சிமடா பகுதி ஊராட்சி ஒன்றியம் கோகோ கோலா உரிமையை மறுபடியும் புதுப்பிப்பதற்கு அரசு அனுமதி அளிக்க கூடாது என்று போராடியது. இந்திய ஆராய்ச்சி மையத்தின் அறிக்கைப்படி அந்த நிறுவனத்தின் 8 நீர் உறிஞ்சி இயந்திரங்களால் சுமார் 1 மில்லியன் தண்ணீர் உறிஞ்சப்படுகின்றது. மேலும் அந்தப்பகுதியில் உள்ள தண்ணீர் அங்குள்ள சுமார் 20000 மக்களுக்கு தேவையான அளவு இல்லை என்று அறிக்கை அளித்து.

ஆனால் அந்த நிறுவனமோ 6 நீர் உறிஞ்சி இயந்திரங்களால் 0.3 முதல் 0.6 மில்லியன் நீர் மட்டும்தான் உறிஞ்சப்படுவதாகவும் மேலும் தண்ணீர் தட்டுப்பாட்டுக்கு தேவையான அளவு மழை பொழிவு இல்லாததே காரணம் என்றும் பதில் அளித்தது. பிலாச்சிமடா பகுதி 'பெருமாட்டி' ஊராட்சி ஒன்றியத்தின் தலைவர் ஏ.கிருஷ்ணன் அவர்களுக்கு இந்த நிறுவனம் சுமார் 30 கோடி வரை கொடுப்பதற்கு முன் வந்திருக்கிறது.

அது மட்டுல்ல அந்தப் பகுதியில் சாலை மின் விளக்கு கழிப்பறை வசதிகளும் கட்டித்தர ஒப்புதல் அளித்தும் அவர் மக்களின் எதிர்ப்பை கண்டு பயந்து ஒப்புதல் அளிக்க மறுத்துள்ளார். மக்களின் போராட்டமோ தொடர்ந்த வண்ணம் இருந்தது. 2004 ம் ஆண்டு ஏப்பிரல் 3 ம்நாள் கிளர்ச்சியடைந்த கிராமத்து மக்கள் கோகோகோலா ஆலைக்கு தண்ணீர் சுமந்து செல்லும் லாரியை வழிமறித்து அங்கு ஏற்கனவே தயாராக சாலையில் காத்துநின்ற தங்களது கிராமத்து பெண்களின் குடத்தில் அந்த தண்ணீரை நிரப்பிச் செய்தனர்.

பின்னர் காவல்துறையினர் அந்தக் கிராமத்தை முற்றுகையிட்டு 7 சிறுவர்கள் உட்பட சுமார் 42 ஆண்கள்; மற்றும் பெண்களை கைது செய்தனர். மாவட்ட கலெக்டர் சஞ்சிவ் கௌசிக் கூறியதாவது

எங்களது பகுதியில் உள்ள நல்ல தண்ணீரை பாழ்படுத்த நாங்கள் விரும்பவில்லை. தண்ணீர் தட்டுப்பாடு உள்ள இந்தப்பகுதியை விட்டுவிட்டு வேறு எந்த இடத்திலிருந்தாவது தண்ணீர் கொண்டு வர நிர்வாகம் ஏற்பாடு செய்தால் நாங்கள் அவர்களுக்கு உதவுவதற்கு தயாராக இருக்கின்றோம். நாங்கள் உற்பத்தியை நிறுத்துவதற்காகப் போரடவில்லை..தண்ணீரை இந்த இடத்திலிருந்து எடுக்க வேண்டாம் என்றுதான் கேட்டுக்கொள்கிறோம்

இந்த தண்ணீர்ப் பிரச்சனைக்காகப் போராடும் மயிலம்மா என்ற குடும்பப் பெண்மணி கூறுகிறார்:

எங்களது பூமியிலிருந்து குடிதண்ணீரை இவர்கள் இரண்டு வருடமாக திருடிக்கொண்டு வருகிறார்கள். அதனால்; இங்குள்ள கிணறுகள் எல்லாம் வற்றிக்கொண்டு வருகின்றது.

பிலாச்சிமடா பகுதி அமைந்துள்ள சித்தூர் என்ற ஏரியாவில் ஒரு விவசாயி தண்ணீர் பாசனம் இன்றி தவிக்கும் நிலையை தாங்க முடியாமல் விவசாய நிலங்கள் வறண்டு போனதாலும் கடன் தொல்லை காரணமாகவும் தற்கொலை செய்து கொண்டார்.

டிசம்பர் 16 - 2003 அன்று கேரள உயர்நீதி மன்ற நீதிபதி பாலகிருஷ்ணா நாயர் தலைமையில் தீர்ப்பு கூறியதாவது

நிலத்தடி நீரை கண்டிப்பாக அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிகமாக உறிஞ்சுவதற்கு அனுமதி இல்லை. இயற்கை வளத்தை இவ்வாறு சீரழிப்பது சட்டப்படி குற்றம்

இப்படியாக மக்கள் சக்தி மற்றும் பஞ்சாயத்து யூனியன் மற்றும் நீதிமன்றம் மூலமாக அந்த கோகோ கோலா ஆலை மார்ச் 2004 ம் நாள் மூடப்பட்டது. பின்னர் 07.04.2005 அன்று நீதிபதி ராமச்சந்திரன் மற்றும் பாலச்சந்திரன் தலைமையிலான குழு அந்த தடையை மறுபரிசீலித்து கூறியதாவது

Palayankottai Strike பொதுச்சொத்துக்களின் சில பகுதிகளை யாரேனும் உரிமை எடுத்துக் கொண்டால் அவர்கள் அதற்கு உரிமையாளராக இருந்தால் அதனை அவர்கள் உபயோகித்துக் கொள்வது சட்டப்படி குற்றமல்ல. அவர்களுடைய சொந்த நிலத்திலிருந்து நீரை உறிஞ்சுவது எப்படி குற்றமாகும்? ஆகவே அவர்களுக்கு சொந்தமான நிலத்திலிருந்து நீரை உறிஞ்சுவதற்கு பஞ்சாயத்து யூனியனின் அனுமதி வாங்கத் தேவையில்லை.

மக்கள் நடத்திய போராட்டம் மற்றும் அந்த மண் பிரச்சனையையை மையமாக வைத்து பாபுராஜ் மற்றும் சரத் சந்திரன் இயக்கத்தில் 2003 ம்ஆண்டு கைப்பு நீரு (The Bitter Drink) என்ற 28 நிமிடம் ஓடக்கூடிய டாகுமெண்டரி படம் வெளியானது.

பிலாச்சிமடாவிலிருந்து திருநெல்வேலி

இப்படி பிரச்சனைகள் நடந்து கொண்டிருக்கும் சூழ்நிலையில்தான் அந்த நிறுவனத்தின் பார்வை தண்ணீர் பிரச்சனையின்றி இருக்கின்ற திருநெல்வேலி பக்கம் திரும்பியிருக்கின்றது. South Indian Bottling Company யின் உரிமத்தை ரத்து செய்யக் கோரி, மக்கள் கலை இலக்கிய கழகம் மற்றும் அனைத்து மாணவரணி அமைப்பும் இணைந்து செப்டம்பர் 23 -2005 அன்று பாளையங்கோட்டையில் ஊர்வலமும், கங்கை கொண்டானில் மறியலும் நடத்தியது. இதில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு கங்கை கொண்டானில் வைத்து கைது செய்யப்பட்டனர். அதற்கு முன்னரே ஏன் இந்த மறியல் என்ற விளக்கக் கூட்டங்கள் வேறு ஆங்காங்கே நடத்தப்பட்டன.

இதற்கு இவ்வளவு எதிர்ப்பு வருமென்று மத்திய அரசு கண்டிப்பாய் உணர்ந்திருக்காது. விவசாய பாதிப்பு கழிவுநீர் கலப்பினால் சுகாதாரக் கேடு, மண்ணின் வளம் குறைதல், தண்ணீர்ப் பற்றாக்குறை போன்ற காரணிகள்தான் அந்த நிறுவனம் அமைய எதிர்ப்பு அலைகள் வருவதற்கு காரணமாகும். இவற்றிற்கு உரிய பதிலளிக்குமா நிர்வாகம்.?

கோகோ கோலா நிறுவனத்தால் திருநெல்வேலியில் தண்ணீர் தட்டுப்பாடு வருகிறதோ இல்லையோ அந்த குளிர்பானத்திற்கு ஏன் உலகெங்கிலும் இத்தனை போராட்டங்கள் நடைபெறுகிறது என்பதையும் நாம் சிந்தித்துப் பார்க்கவேண்டும்.

அமெரிக்காவின கனெக்டிக் மாநில சட்ட மன்ற உறுப்பினர்கள் கோகோ கோலா உட்பட உடலுக்கு தீங்கு விளைவிக்கும் சோடா ரகங்களை பள்ளிகளில் விற்பனை செய்வதை தடைசெய்யவேண்டும் எனத் தீர்மானம் கொண்டு வர அதனை ஆளுநர் மறுத்துவிட்டார். சுமார் 25000 டாலர்கள் அந்த நிறுவனம் செலழித்துள்ளது அந்தத் ர்மானம் தனக்கு சாதகமாக கிடைப்பதற்காக.

நமது நாடாளுமன்ற வளாகத்தினுள் கோக் விற்க அனுமதி மறுப்பு, கனடா கலிபோர்னிய பல்கலைக்கழகங்கள் மற்றும் க்வீன்ஸ் பல்கலைக்கழக மாணவர்கள் கோக்கை புறக்கணித்துப் போராட்டம். என்ன செய்யப் போகிறோம் நாம்..? வறண்ட பூமியில் வேலைவாய்ப்புகள் கிடைக்கப்போகிறதே என்று அதற்கு ஆதரவு தெரிவிக்கப் போகிறோமா?

சமீபத்தில் கூட தண்ணீர் இல்லாமல் விவசாய நிலங்கள் வறண்டு போனதால் தற்கொலை செய்துகொண்ட விவசாயிகளின் கண்ணீர்கதைகள் நடந்துகொண்டிருக்கின்றன.

Plachimada Strike அன்று
நஞ்சையுண்டு வாழ்ந்தார்கள்
இன்று
நஞ்சுண்டு வாழ்கிறார்கள்
- யாரோ

சில பத்திரிக்கைகள் (ஒரு சிலப் பத்திரிக்கைகள் தவிர) புத்தாண்டுக்கும்; சுதந்திரதினத்திற்கும் நடிகையின் தொப்புளைக் காட்டும் படத்தை பிரசுரிப்பதில் முக்கியத்துவம் காட்டுகிறார்களே தவிர இதுபோன்ற சமூக பொறுப்புள்ள பிரச்சனைகளை ஒதுக்கிவிடுகிறார்கள். ஏன் அரசியல் மற்றும் அமெரிக்கச் சக்திகளுக்கு அடிபணிந்துவிட்டனவா..?

இன்றும் சில தனியார் தொலைக்காட்சி நிறுவனங்கள் அந்த நிறுவனத்தின் பெயரைக் கூறாமல் ஒரு தனியார் குளிர்பான கம்பெனியை எதிர்த்து மக்கள் போராட்டம் என்று மறைமுகமாக அதற்கு ஆதரவு அளிப்பதை பார்க்கும் போது ரூபாய் நோட்டின் மீது டாலர்கள் அமர்ந்து கொண்டு கை கொட்டிச் சிரிக்கின்றதோ எனத் தோன்றுகிறது..?

"டேய் அங்க வேலை கொடுக்க அப்ளிகேஷன் வாங்குறாங்களாம் ..நீ வர்றியா " என்று பயோடேட்டா சுமந்துகொண்டு கங்கை கொண்டான் நோக்கி எதிர்பார்ப்புடன் மகிழ்ச்சியோடு பயணப்பட்டுக்கொண்டிருக்கும் இளைஞர்களைப் பார்க்கும் போது மனம் கனத்துப் போகிறது.

இளைஞர்களே! நம் வயிற்றுக்கு அரிசி தருபவர்களின் நன்றிக்கடனாகவா அவர்கள் வாயில் அரிசி இடப்போகிறீர்கள்.?

தண்ணீர் அதிகமானதால் தற்கொலை செய்து கொண்டவர்களையும் கண்டிருக்கின்றோம் தண்ணீர் கிடைக்காமல் தற்கொலை செய்து கொண்டவர்களையும் கண்டிருக்கின்றோம். சில அரசியல் சக்திகள் இதனால் விளையப்போகும் நன்மை தீமைகள் என்ன என்பதைப்பற்றி சிறிதும் ஆராயாமல் அரசியல் லாபத்திற்காகவும் மற்றவர்கள் எதிர்க்க ஆரம்பிக்கிறார்களே நாமும் எதிர்ப்போம் என்ற சுய விளம்பரத்திற்காகவும் சமூகப் பொறுப்புக்காக போராடுவதாக நடிக்கின்றன.

சில இயக்கங்கள் மட்டும்தான் இதனால் என்னென்ன தீமைகள் நேரக்கூடும் என்று மக்களுக்கு விழிப்புணர்வுகள் ஊட்டிக் கொண்டிருக்கின்றது. நமக்குப் பின் வரும் நமது சந்ததியினர்களுக்கு இந்தத்திட்டம் பயனுள்ளதாக இருக்குமா..? இதற்கு மாற்று வழி ஏதேனும் இருக்கின்றதா..? இதனால் ஏற்படப்போகும் விளைவுகளை தொலைநோக்குப் பார்வையில் சிந்திக்க வேண்டும். இதனால் நேரப்போகும் நன்மை தீமைகளை மக்கள் குழுவின் முன் வைத்து விவாதிக்க வேண்டும்.

கங்கை கொண்டான் கண்ணீர் கொண்டானாக மாறிவிடுமோ..?

உறிஞ்சப்படப் போவது
தண்ணீரா..? இரத்தமா..?
புதைக்கப்படப்போவது
விதைகளா..? மனிதர்களா..?

எப்போதும் எழுதி முடித்தப் பிறகு தூக்கம் வரும். இப்பொழுது ஏனோ தெரியவில்லை இதனை எழுதி முடித்த பிறகு எனக்கு தாகம் வருகின்றது.

- ரசிகவ் ஞானியார் ([email protected])

இவரது மற்ற படைப்புகளைக் காண இங்கே அழுத்தவும்


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com