Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
KeetruLiteratureArticle
கட்டுரை

தெருவோரக் குறிப்புகள்
பாமரன்


டி.ஜி.எஸ். தினகரனின் புல்லரிக்கும் பேட்டி வார இதழ் ஒன்றில் வெளியாகியுள்ளது.

‘என் மகன் இயேசுவின் வாரிசு’ என்பதும் அதில் அடக்கம்.

அது சரி...

நம்ம தினகரன் எப்போது கெஜட்டில் ‘இயேசு’ என்று பெயர் மாற்றம் செய்து கொண்டார் என்பதுதான் புரியவில்லை.

.................................................

உலகின் தலைசிறந்த தத்துவவாதிகளுக்கும், சமூகவியலாளர்களுக்கும் ஏற்பட்ட கதிதான் ஒஷோவினது கருத்துக்களுக்கும் ஏற்படும் போலிருக்கிறது. எப்படி பெரியார் வெறுமனே கடவுள் மறுப்பாளராக மட்டுமே குறுக்கப்பட்டு அவரது பெண் விடுதலை, தலித் விடுதலைக் கோட்பாடுகள் அவரது வழிநடப்பதாகக் கூறிக்கொள்பவர்களாலேயே புறந்தள்ளப்பட்டு, இருட்டடிப்பு செய்யப்பட்டனவோ அப்படி ஒஷோவினது தமிழ் மொழிபெயர்ப்பு நூல்களைப் பற்றி கேட்கவே வேண்டாம். அண்மையில் வந்துள்ள அவரது நூல்கள் சிலவற்றைப் பார்க்கும் போது நமது கருத்து நிரூபணமாகிவிடும் போலிருக்கிறது. ஓஷோ தன்னை எந்தவொரு நாட்டோடோ, கண்டத்தோடோ பிணைத்துக் கொண்டவர் அல்ல என்பதும், I am not an Indian nor an Italian என்றுமே சொன்னதாகத்தான் ஞாபகம். ஆனால் அவர் அங்கொன்றும் இங்கொன்றுமாய் சொன்னவைகளைத் தொகுத்து ‘நான் விரும்பும் இந்தியா’ என்று ஒரு புத்தகமே போட்டுவிட்டார்கள் கம்யூன்காரர்கள். இதே ரீதியில் போனால் ‘நான் விரும்பும் உஸ்பெஸ்கிஸ்தான்’, ‘நான் விரும்பும் கும்மிடிப்பூண்டி’ என்கிற ரகத்தில்கூடப் புத்தகங்கள் வரலாம். பாவம் ஓஷோ.

....................................

கொஞ்சம் பழசுதான் என்றாலும்...

மெமரி ப்ளஸ் சாப்பிடுபவர்களாகட்டும் அல்லது சாப்பிடாமலேயே பல நூற்றாண்டு விஷயங்களை நினைவில் வைத்திருப்பவர்களாகட்டும். இந்தியப் பொருளாதாரத்தையே வாயில் போட்டு ஏப்பம் விட்ட ஹர்ஷத் மேத்தாவை மறந்திருக்க வாய்ப்பில்லை. ‘பாற்கடலை பாயாய்ச் சுருட்டிய கதையாய்...’ பங்குச் சந்தையில் பல்லாயிரம் கோடிகளைச் சுருட்டிய அந்த ‘மாமனிதருக்கு’ விதிக்கப்பட்ட ‘கொடூரமான’ தணடனையை(?) நினைத்துப் பார்த்தால் அடி வயிறு கலங்குகிறது.

நன்னடத்தை...

சுதந்திர தின தள்ளுபடி...

குடியரசு தின தள்ளுபடி போக,

ஓரிரண்டு ஆண்டுகளிலேயே வெளியில் உலா வரலாம் மனிதர். இது.. இப்படி இருக்க.. விழுப்புரம் பக்கத்தில் தொடர் கொள்ளைகளை நடத்தியதாகக் குற்றம் சாட்டப்பட்ட சிலருக்கு ஏறக்குறைய 250 ஆண்டுக்கு மேல் சிறைத் தண்டனை வழங்கப்பட்டுள்ளது. இவர்கள் சராசரியாக பத்தாயிரம் வீதம் முப்பது இடத்தில் கொள்ளையடித்திருந்தால்கூட (10,000*30 = 3,00,000) மூணு லட்சத்தைத் தாண்டப்போவதில்லை மொத்தப்பணம். பேசாமல் இவர்கள் திருடப்போவதற்கு முன்பு கரஸ்பாண்டென்சிலாவது பங்குச் சந்தை பற்றி படித்துத் தொலைத்திருக்கலாம் அல்லது ‘இந்திய ஜனநாயகம்’ குறித்த குறைந்த பட்சப் பார்வையாவது இருந்திருக்கலாம். எதுவுமில்லாமல் தவணை முறையில் திருடப்போனால் இந்த கதிதான். ஆயிரம் கோடிக்கு மேல் அல்வா கொடுத்தவருக்கு எட்டே எட்டு வருடம். சில்லரைக்கு ஆசைப்பட்டு பல இடத்தில் கை வைத்தவர்களுக்கு நூற்றுக் கணக்கில்...

ஆக.. இதிலிருந்து தெரிய வரும் ‘இந்திய நீதி’ யாதெனில்.

சிறு திருட்டைத் தவிர்க்க. பெருந்திருட்டைப் பெருக்குக.

..........................................................

‘நல்ல மெசேஜ் சொல்றேன்...மசாஜ் செய்கிறேன்’ என்று தமிழகத்தில் கால் வைத்துள்ள ராஜீவுக்கு (அட.. ராஜீவ் ‘மேனனுக்கு’த்தான்..) தமிழகத்தின் மெசேஜ் ஒன்றும் உண்டு. அதுவாக்கப்பட்டது யாதெனில்.. வித்தியாசமான ‘கதைக்கோணம்’...

ரயில் விடுவது...

கப்பல் விடுவது..

எல்லாம் ஒருபுறம் இருக்கட்டும். அதற்கு முன்னதாக பெயருக்குப் பக்கத்தில் வாலாய்த் துருத்திக் கொண்டுள்ள அந்த ‘மேனனை’க் கொஞ்சம் வெட்டி வீசி விட்டு வேலையைச் செய்தால் நன்றாக இருக்கும் என்பதுதான். மேனன், நாயர், நம்பூதிரிப் பட்டங்களோடு படையெடுப்பது.. படமெடுப்பது என்கிற மாதிரியான கேரளத்து வழக்கங்களை அங்கேயே கழட்டி வைத்துவிட்டு தமிழகத்தில் புர்ர்ர்ர்ச்சி செய்தால் வல்லியதாயிட்டு இருக்குந்தன்னே.. தமிழகத்து டைரக்டர்களில் ஒருவர் கூட இந்த வாலோடு இல்லை என்பதை யாராவது இந்த ‘அமைதிப்படை’(?)யின் கடைசி வீரருக்குப் புரிய வைத்தால் சரி.




- பாமரன் [email protected]

இவரது மற்ற படைப்புகளைக் காண இங்கே அழுத்தவும்


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com