Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
KeetruLiteratureArticle
கட்டுரை

சோவுக்கு நெல்லை கண்ணன் மடல்


வாழ்க தமிழுடன்

பெறுநர்

சோ
ஆசிரியர்
துக்ளக்
சென்னை.

என்றென்றும் தமிழுக்கும் தமிழருக்கும் எதிரான சோவே தங்களின் 26.09.2007 தேதியிட்ட துக்ளக் தலையங்கம் கண்டேன். வெளிப்படையாகவே தமிழை, தமிழினத்தை தாங்கள் அவமானப்படுத்தியுள்ளீர்கள். இந்தத் தமிழர்களும் சூடு சொரணையற்றவர்களாக இதனையும் பார்த்துக் கொண்டு சும்மாத்தான் இருக்கப் போகின்றார்கள்.

00

இராமர் குறித்துத் தமிழக முதல்வர் கருத்துச் சொன்னால் தாங்கள் தமிழினத்தையே கேவலப்படுத்த முனைந்துள்ளீர்கள். உங்கள் உள்ளத்திற்குள்ளே நீண்ட நாட்களாக தொல்காப்பியத்தையும், திருக்குறளையும் குறித்து என்ன எண்ணம் கொண்டுள்ளீர்களோ அதனை மிகத்திறமையாக தங்கள் தலையங்கத்திலே எழுதித் தமிழினத்தைக் கொச்சைப் படுத்தியுள்ளீர்கள்.

இராமன் என்று ஒருவன் இல்லை என்றால் அதற்குத் தொல்காப்பியனையும் திருவள்ளுவரையும் இழுக்க வேண்டிய அவசியம் என்ன.

கடலினைத்தாவும் குரங்கும் வெங்
கனலிடைப் பிறந்த செவ்விதழ்ப் பெண்ணும்
வடமலை தாழ்ந்ததனாலே தெற்கே
வந்து சமன்செய் குட்டைமுனியும்
நதியினுள்ளே மூழ்கிப் போய் அந்த
நாகர் உலகில் ஒரு பாம்பின் மகளை
விதியுறவே மணம் செய்த திறல்
வீமனும் கற்பனை என்பது கண்டோம்
ஒன்று மற்றொன்றைப் பழிக்கும்
ஒன்று உன்மையொன்றோதி மற்
றொன்று பொய்யென்னும்
நன்று புராணங்கள் செய்தார் அதில்
நல்ல கவிதைகள் பலபல தந்தார்
கவிதை மிக நல்லதேனும் அக்
கதைகள் பொய்யெனத் தெளிவுறக் கண்டோம்

என்கின்றான் எங்கள் எட்டையபுரத்தான் பாரதி.

நண்பர் மாலன் குமுதம் இதழில் ஆசிரியராக இருந்த காலம் அதன் கடைசிப்பக்கத்தில் ஒருமுறை இந்தக்கவிதையினை வெளியிட்டிருந்தார். இந்தக் கவிதையைத் தாங்கள் படித்திருக்க வாய்ப்பில்லை. இது உண்மைக்கவிஞன் பாரதியின் வரிகள். வடமொழியை காசிச் சர்வகலாசாலையிலே கற்றவனின் கூற்று. இதற்கு என்ன பதில் சொல்வீர்கள்.

வள்ளுவன் தன்னை உலகினுக்கே தந்து வான்புகழ் கொண்ட தமிழ்நாடு என்கின்றான் பாரதி.

நேரு நாத்திகர் என்று சொல்லி உள்ளீர்கள். அது நாடறிந்த உண்மை. ஆனால் பாரதி நாத்திகனா சோ!?..

கண்ணகியைப் பற்றி நீங்கள் கூறியதை ஏற்றுக்கொள்கின்றேன். அது அதீத கற்பனை. ஆனால் வாழ்வாங்கு வாழ்ந்த வள்ளுவப்பேராசானையும், தொல்காப்பியனையும் நாங்கள் சொல்ல மாட்டோம் நாங்கள் சொல்லமாட்டோம் என்றே நரித்தனமாக கொச்சைப்ப்டுத்தியுள்ளீர்களே.

தமிழின் மீது இத்தனை வெறுப்போடு ஏன் தமிழில் வார இதழ் நடத்துகிறீர்கள். தங்களின் மொழியான வடமொழியில் நடத்த வேண்டியதுதானே.

வான்மீகத்தைத் தமிழில் மொழிமாற்றம் செய்தபோது தமிழர் பண்பாட்டிற்கேற்றபடி கம்பன் மொழிமாற்றம் செய்தான்.வான்மீகத்தை அப்படியே தமிழில் தாங்கள் தந்தால் அந்த நாகரிகத்தைத் தமிழர்கள் கேட்டுச் சிரிப்பார்கள்.

எல்லை தாண்டுகிறீகள் சோ.

தங்களைத் தாங்களே அறிவாளி என்றும் மேதை என்றும் மகுடம் சூட்டிக்கொள்கின்ற அறியாமையில் இருந்து விடுபடுங்கள்.

நல்ல தமிழர்கள் வீறுகொண்டு எழும் வரை தாங்கள் இந்த அறியாமையில் இருந்து விடுபட மாட்டீர்கள். தொல்காப்பியனையும், வள்ளுவனையும் தொட்ட உங்களை விடப் போவதில்லை தமிழர்கள்.

பார்ப்பீர்கள் விரைவில்..


-நெல்லை கண்ணன்
20/09/2007
நெல்லை நகரம்



நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com