Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
KeetruLiteratureArticle
கட்டுரை

அமெரிக்க ஊடுருவலைத் தடுக்கப் போராடும் புலிகள்
இந்திய அரசு துணை நிற்க வேண்டும்
பழ. நெடுமாறன்


இலங்கையில் சிங்களப் பேரினவாத அரசுக்கு ஆதரவாக அமெரிக்கா செயல்பட்டு வருகிறது. ஈழத்தமிழர்களின் பாதுகாவலனாகவும் அவர்களின் விடுதலைப் போராட்டத்திற்கு தலைமை தாங்கி நடத்தி வரும் விடுதலைப் புலிகளை அமெரிக்க வல்லாதிக்க அரசு மிரட்டுகிறது. இலங்கையில் அமெரிக்காவின் தலையீடு என்பது ஈழத்தமிழர்களுக்கு எதிரான தலையீடு என்று கருதுவது அறியாமையாகும். இன்று நேற்றல்ல, நீண்ட காலமாகவே சிங்களப் பேரினவாதத்திற்கு ஆதரவாக இராணுவ உதவி, பொருளாதார உதவி ஆகியவற்றை அமெரிக்கா செய்து வருகிறது. திரிகோணமலை துறைமுகத்தில் அமெரிக்கக் கடற்தளம் அமைக்க பெரும் முயற்சி செய்தது. மன்னாரில் சக்திவாய்ந்த அமெரிக்க வானொலி நிலையத்தை அமைத்து அதன் மூலம் இந்தியாவில் உளவறியவும் திட்டமிட்டது. ஆனால் அப்போதைய பிரதமர் இந்திராகாந்தியின் கடும் எதிர்ப்பின் விளைவாக அமெரிக்கா பின்வாங்கியது.

Indra Gandhi இந்தியா விடுதலைப் பெற்ற உடனேயே அதைப் பணிய வைக்கத் திட்டமிட்ட அமெரிக்கா பாகிஸ்தானுக்கு இராணுவ உதவியை வாரி வாரி வழங்கியது. மூன்று முறை இந்தியா பாகிஸ்தான் போர் மூண்டதற்கு அமெரிக்கா அளித்த இராணுவ உதவியே காரணமாகும். இன்னமும் இந்தியா பாகிஸ்தான் பகைமைத் தொடர்வதற்கும் அமெரிக்காவே பொறுப்பாகும். மற்றொரு அண்டை நாடான பர்மாவில் உள்ள இராணுவ ஆட்சிக்கு முட்டுக் கொடுத்து நிறுத்தும் பணியை அமெரிக்காதான் செய்து வருகிறது. நேபாளத்தில் கொடுங்கோல் மன்னராட்சிக்கு எல்லாவகையான உதவியும் செய்து, அந்த நாட்டு மக்களைக் கொன்று குவிக்க அமெரிக்காதான் உதவுகிறது. இப்போது இலங்கையிலும் காலூன்றுவதன் மூலம் இந்தியாவை சுற்றி வளைத்து தனக்குப் பணிய வைக்க அமெரிக்க முயலுகிறது.

புலிகளின் கை ஓங்குவதைத் தடுப்பதற்காக, சிங்கள அரசிற்கு ஆயுதங்களை அள்ளித் தந்தது அமெரிக்கா. தமிழர் துறைமுகமான திரிகோணமலையில் அமெரிக்கத் கடற்தளம் அமைய வேண்டுமென்று சொன்னால் விடுதலைப் புலிகளைத் தோற்கடித்தால்தான் முடியும் எனக் கருதி அமெரிக்கா சிங்கள அரசை ஆதரித்தது.

அமெரிக்காவின் திட்டத்தை விடுதலைப் புலிகள் தங்களின் வீரத்தினாலும், தியாகத்தினாலும் முறியடித்தார்கள். இதன் மூலம் இந்தியாவிற்கும் தென்னாசிய நாடுகளுக்கும் வரவிருந்த பேராபயத்தைத் தடுத்து நிறுத்தினார்கள்.

திரிகோணமலை துறைமுகத்தில் அமெரிக்கா கால் ஊன்றுவது என்பது இந்தியாவைக் குறிவைத்துச் செய்யப்பட்டதாகும். இந்தத் திட்டத்தை முறியடித்த விடுதலைப் புலிகளுக்கு இந்தியா நன்றி தெரிவித்திருக்க வேண்டும். ஆனால் உதவி புரிந்த விடுதலைப் புலிகளுக்கு எதிரான நிலையை இந்தியா எடுத்தது.

இலங்கை இனப்பிரச்சனையில் நடுவராகச் செயல்பட்டு சிங்களர் - தமிழர் ஒற்றுமையை ஏற்படுத்த வேண்டிய இந்தியா நடுநிலையிலிருந்து பிறழ்ந்து சிங்களப் பேரினவாத அரசுடன் தன்னிச்சையான உடன்பாடு ஒன்றைச் செய்தது. இந்த உடன்பாட்டிற்கு தமிழர்களின் சம்மதம் தேவையில்லை என இந்திய அரசு கருதியது. உடன்பாட்டை எதிர்க்க முனைந்த விடுதலைப் புலிகளையும் ஈழத் தமிழரையும் ஒடுக்க இந்திய இராணுவம் அனுப்பப்பட்டது. இதன் விளைவாக பல்லாயிரக்கணக்கான தமிழர்கள் உயிரிழந்தனர். குடியிருப்புகள், மருத்துவமனைகள், கல்வி நிலையங்கள், கோவில்கள் போன்றவை இந்திய இராணுவத் தாக்குதலுக்கு இலக்காயின. இந்திய இராணுவத்திலும் ஆயிரக்கணக்கான வீரர்கள் உயிரிழந்தார்கள்.


நேரு, இந்திரா காந்தி ஆகியோர் காலங்களில் உலகில் விடுதலைக்காகப் போராடிய மக்களுக்கு இந்தியா ஆதரவு அளித்தது, சர்வதேச மன்றங்களில் அவர்களுக்காகப் போராடியது. ஆனால் நேருவின் பேரன் இராசீவ் காலத்தில் ஈழத் தமிழர்களின் விடுதலையை ஒடுக்க இந்திய இராணுவத்தினை அனுப்பியதன் மூலம் இந்தியாவின் மதிப்பில் பெரும் சரிவு ஏற்பட்டது.

இத்துடன் நிற்கவில்லை, நேசக்கரம் நீட்டிய புலிகளின் கரங்களை உதறித் தள்ளிய இந்திய அரசு மேலும் மேலும் அவர்களுக்கு எதிரான நடவடிக்கைகளை மேற்கொண்டது. இராசீவ் கொலை வழக்கில் வேண்டுமென்றே விடுதலைப் புலிகளின் இயக்கத் தலைவர் பிரபாகரன் பெயரையும் சேர்த்தது. ஆனால் தொலைநோக்கு படைத்த இந்திய அதிகாரிகள் சிலர் இதற்கு எதிர்ப்புத் தெரிவித்தனர். எதிர்காலத்தில் பிரபாகரனுடன் பேச்சுகளில் ஈடுபடவேண்டிய கட்டாயம் ஏற்படும் என்றும், இவ்வாறு அவரைக் குற்றம் சாட்டுவதன் மூலம் பேச்சுக்கான வாயில்களை மூடிவிட வேண்டாம் என்றும் எச்சரித்தனர். ஆனால் அவை யாவும் செவிடன் காதில் ஊதிய சங்காயிற்று. இத்துடன் நிற்காமல் இந்தியாவில் இல்லாத புலிகள் இயக்கத்தின் மீது தடைவிதித்தது.

ஆனால் இந்தக் கொலையில் பிரபாகரனைச் சம்பந்தப்படுத்துவதன் மூலம் தமிழ்நாட்டு மக்கள் மத்தியில் புலிகள் மீதான வெறுப்பை வளர்க்க முடியும் என்று இந்திய அதிகார வர்க்கம் மனப்பால் குடித்தது. இதன் விளைவாக தானே விரித்த வலையில் இந்திய அரசு சிக்கிக் கொண்டது. இலங்கை இனப்பிரச்சனையில் நடுவராக விளங்கும் தகுதியை இந்தியா இழந்தது. தொலை தூரத்தில் இருந்த நார்வேக்கு அந்தப் பெரும் பொறுப்பு கிடைத்தது.

Rajiv Gandhi இலங்கையின் தேசிய ஒருமைப்பாட்டிற்குப் பங்கம் விளைவிக்காத வகையில் இனப்பிரச்சனைக்கு தீர்வு காண வேண்டும் என்று அமெரிக்கா கூறுகிறது. அதையே இந்தியாவும் கிளிப்பிள்ளைப் போல திரும்பக் கூறுகிறது. வங்காள தேச பிரச்சனை மூண்ட போது இந்தியப் பிரதமராக இருந்த இந்திரா நாடாளுமன்றத்தில் 26.05.1971 அன்று பேசிய போது முழங்கியதை கீழே தருகிறோம்.

“பாகிஸ்தான் இராணுவ ஆட்சியாளர்களால் கிழக்கு வங்காளத்தில் நிகழ்த்தப்படும் அட்டூழியங்களைத் தாங்கள் ஏற்கவிடினும் பாகிஸ்தான் பிரிந்து போவதற்குத் தாங்கள் ஆதரவாக இருக்க முடியாது என்று சில நாடுகள் கூறுகின்றன. பாகிஸ்தான் பிளவுபட வேண்டுமென்று நாங்கள் விரும்புவதாக அவர்கள் கருதுகிறார்களா? ஒவ்வொரு கட்டத்திலும் பாகிஸ்தானுடன் எங்களுக்குள்ள நட்புறவை நாங்கள் சுட்டிக் காட்டியே வந்திருக்கிறோம். பாகிஸ்தானில் உள்ள இரு பகுதிகள் தங்களுக்குள் போராடுகின்றன என்றால் அது எங்களால் ஏற்பட்டதல்ல, பாகிஸ்தானிய ஆட்சியாளர்களால் ஏற்பட்டதாகும். திட்டமிட்ட இனப்படுகொலை நடத்தி பல்லாயிரக்கணக்கான ஆண், பெண், குழந்தைகளை கொன்று குவித்து இலட்சக்கணக்கானவர்களை அகதிகளாக இந்தியாவிற்கு விரட்டி அடித்தவர்கள் யாரோ அவர்கள் தான் இதற்குப் பொறுப்பாவாவர்கள். இந்தியாவிற்கு மட்டுமல்ல தென்னாசிய நாடுகளின் அமைதிக்கும் பாதுகாப்பிற்கும் ஆபத்தை விளைவிக்கும் பிரச்சனையாக இது உள்ளது’’.

அன்றைக்கு பிரதமர் இந்திரா வங்காள தேசப் பிரச்னையில் கூறிய கருத்து இலங்கைக்கும் பொருந்தும். 30 ஆண்டு காலத்திற்கு மேலாக இலங்கையில் சிங்களப் பேரினவாதத்தின் விளைவாக 80 ஆயிரத்திற்கும் மேலான தமிழர்கள் உயிர் இழந்திருக்கிறார்கள். 10 இலட்சத்திற்கும் மேற்பட்ட தமிழர்கள் அகதிகளாக இந்தியாவிற்கும் மற்றும் உலக நாடுகளுக்கும் சென்று தஞ்சம் புகுந்திருக்கிறார்கள். சிங்கள இனவெறியின் விளைவாகத்தான் தமிழர்கள் தனிநாடு கேட்பதற்குத் தலைப்பட்டார்கள். இலங்கையில் பிரிவினை விதையை விதைத்தது சிங்களரே தவிர தமிழர்கள் அல்லர். அமெரிக்கா இதை உணர மறுப்பதில் அர்த்தமுள்ளது. இந்தப் போராட்டத்தின் விளைவாகதான் அங்கு தலையிடுவதற்கு வழிப் பிறக்கும் என்று அமெரிக்கா கருதுகிறது. அதையே இந்தியாவும் பின்பற்றுவது எந்த வகையிலும் சரியானதல்ல.

இலங்கையில் அமெரிக்கா காலூன்றுவதைத் தடுக்க வேண்டுமானால் விடுதலைப் புலிகளுடன் இந்தியா மீண்டும் நல்லுறவு கொள்ள வேண்டும். இந்தியாவுடன் பகைமை பாராட்டிய, நாடுகளுடன் நட்புறவு பூண்டு இராணுவ உதவி பெற சிங்கள அரசு ஒரு போதும் தயங்கியதில்லை. ஆனால் இந்தியாவின் எதிரிகளுடன் விடுதலைப்புலிகள் ஒரு போதும் கைகோர்த்தது இல்லை.

திரிகோணமலைத் துறைமுகத்தில் கடற்தளம் அமைக்க விடுதலைப்புலிகள் ஒப்புக்கொண்டிருந்தால் அமெரிக்கா அவர்களை ஆதரித்திருக்கும். ஆனால் அவ்வாறு செய்வது தங்கள் நலன்களுக்கும் இந்தியாவின் நலன்களுக்கும் ஏற்றதல்ல என்பதால் அவ்வாறு செய்ய மறுத்தனர். எனவே புலிகளுக்கு எதிராக சிங்களருக்கு அமெரிக்கா ஆதரவு அளித்தது. அமெரிக்க வல்லாதிக்கத்தை உறுதியாக எதிர்த்து நிற்கும் புலிகளை ஆதரிக்க வேண்டிய இந்தியா சிங்கள பேரினவாதம் பக்கம் நிற்பது வருந்தத்தக்கதாகும்.



அரசு தயவிலேயே கருணா குழு இயங்குகிறது: கண்காணிப்புக் குழுவின் குற்றச்சாட்டு

இலங்கை அரசாங்கம் கருணா குழுவென்ற ஒன்று இருப்பது தனக்குத் தெரியாது, அதனுடன் தொடர்பு எதுவுமில்லை என தெரிவித்தது. எனினும் கிழக்கு மாகாணத்திற்கு சென்று கருணாவை எங்கு சந்திக்கலாம் எனக் கேட்ட போது அதற்கு இராணுவமே வழி காட்டியது. இதன் மூலம் இராணுவத்திற்கு கருணா எங்கிருக்கின்றார் என்பது தெரிந்திருப்பது புலனாகிறது என இலங்கை யுத்த நிறுத்த கண்காணிப்பு குழுவின் பேச்சாளர் ஹெலண் ஒல்வாபற்ரியர் தெரிவித்துள்ளார்.

அரசாங்கத்திற்கு இவ்வாறான ஆயுதக் குழு குறித்து தெரிந்துள்ள போதிலும் அதற்குத் தீர்வு காண முயற்சிகளை அது மேற்கொள்ளவில்லை. இதன் காரணமாக எமது பணிகள் கடினமாகியுள்ளன எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். ஆங்கில வாரப் பத்திரிகைக்கு அளித்துள்ள பேட்டியிலேயே அவர் மேலும் கூறியதாவது:

வடகிழக்கில் தொடரும் வன்முறைகள் மத்தியில் யுத்த நிறுத்த உடன்படிக்கை எவ்வாறு தொடர்கின்றது என்பது குறித்து நாங்களும் கவலை கொண்டுள்ளோம். பணிகளைக் கைவிடாமலிருப்பது மாத்திரமே நாங்கள் செய்யக்கூடியது. இரு தரப்பும் எங்களைப் போகுமாறு கூறும்வரை நாங்கள் இங்கிருப்போம். யுத்த நிறுத்த உடன்படிக்கை எம்மால் அல்ல இரு தரப்பாலுமே முடிவிற்குக் கொண்டு வரப்படவேண்டும். பாதுகாப்பு நிலவரம் எங்களது பணிகளைச் செய்வதற்கு அனுமதிக்கும் வரை நாங்கள் எங்கள் பணிகளை செய்வோம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Karuna கண்காணிப்பு குழுவில் இடம் பெற்றுள்ள ஐந்து நாடுகளும் தங்களுடைய பணியாளர்கள் எவரும் பணியின் போது உயிரிழப்பதை அனுமதிக்காது எனவும் குறிப்பிட்ட அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது:

வடகிழக்கில் வன்முறைகள் ஆபத்தான விதத்தில் அதிகரித்துள்ளன. நாங்கள் இது தடுத்து நிறுத்தப்படாவிட்டால் யுத்தம் சாத்தியமென எச்சரித்திருந்தோம். நிலைமை அவ்வளவு மோசமாகவுள்ளது. திருகோணமலை தற்போது பதட்டமாகவுள்ளது. பதட்டம் மிகுந்த பகுதிகள் அடிக்கடி மாறுகின்றன. கடந்த வருடம் மட்டக்களப்பு பதட்டமாகக் காணப்பட்டது. தற்போது திருகோண மலையும் யாழ்ப்பாணமும் பதட்டமாகக் காணப்படுகின்றன.

உண்மை நிலை இதனை விட ஆழமானது. தற்போதைய நெருக்கடி தரையின் ஆழத்திலிருந்து உருவாகின்றது.

பல ஆயுதக் குழுக்கள் செயற்படுகின்றன. இவற்றில் சிலவற்றின் முகாம்களை நாங்கள் பார்வையிட்டுள்ளோம். மேலும் இந்த முகாம்கள் இராணுவ கட்டுப்பாட்டுப் பகுதியில் உள்ளதால் இராணுவத்திற்கு இது குறித்து தெரிந்திருக்கும்.

கடந்த வருடம் இன மோதல் தொடர்பான கொலைகளில் பலர் பலியாகியுள்ள போதிலும் இந்த கொலைகளுடன் தொடர்புப்பட்டவர்களை இராணுவத்தாலோ போலிஸாலோ கண்காணிப்பு குழுவினாலோ இன்னமும் இனம் காணமுடியவில்லை. யுத்த நிறுத்த உடன்படிக்கை காலத்தில் இது வழமையானதல்ல.

இந்தப் படுகொலைகள் இரண்டு தரப்பிற்கும் இடையில் நம்பிக்கையின்மையை உருவாக்கியுள்ளதுடன், பேச்சுவார்த்தை மேசைகளுக்கு இரு தரப்பும் வருவதற்கான சாத்தியக் கூறுகளை இல்லாமல் செய்துவிட்டன.

இரண்டு தரப்பும் பேச்சுவார்த்தைகள் மூலம் தீர்வைக் காணும் வரை கொலைகள் நிற்கப் போவதில்லை. ஆயுதக் குழுக்களிடமிருந்து, ஆயுதங்களைக் களைய வேண்டியதன் அவசியம் குறித்து அரசாங்கத்திற்குக் கடந்த வருடம் எடுத்துக் கூறினோம். அவர்களுடைய செயற்பாட்டிற்காகக் காத்திருந்தோம். அரசாங்கம் தனக்கும் இந்த அமைப்புகளுக்கும் எந்தத் தொடர்பும் இல்லையேனவும் இவ்வாறான அமைப்புகளின் இருப்பே தனக்குத் தெரியாது எனவும் தெரிவித்தது.

கிழக்கிற்கு சென்று கருணாவை எங்கு பார்க்கலாம் என இலங்கை இராணுவத்தைக் கேட்டபோது அவர்கள் எங்களைக் குறிப்பிட்ட இடத்திற்குச் செல்லுமாறு கேட்டனர். இதன் மூலம் அவர்களுக்கு இது குறித்துத் தெரிந்திருப்பது புலனாகிறது. இவர்களுடைய ஆயுதங்களைக் களைய வேண்டுமென அரசாங்கத்திற்கு வலியுறுத்தியுள்ளோம். அரசாங்கம் இந்த குழுவிற்கு ஆதரவு வழங்குவதற்கான நேரடித் தடயங்கள் இல்லாத போதிலும், அரசாங்கத்திற்கு இவ்வாறான அமைப்பு உள்ளது என்பது தெரியும். எனினும் இதற்கு ஒழுங்கான தீர்வைக் காண அரசாங்கம் முயலவில்லை.

இது எமது கண்காணிப்பு பணிகளை கடினமாக்கியுள்ளது. யுத்த நிறுத்த உடன்படிக்கை நல்ல ஆவணம். எனினும் இதனை வடிவமைத்தவர்கள் இவ்வாறான நெருக்கடியை எதிர்பார்க்கவில்லை. யுத்த நிறுத்த உடன்படிக்கை முன்னர் எப்போதையும் விட தற்போது பலவீனமானதாகவுள்ளது. நாங்கள் இதனை எதிர்பார்க்கவில்லை. எமது பணி அரசாங்கத்தினாலும் இராணுவத்தினாலும் பாதிக்கப்படும் சூழ்நிலைகள் உள்ளன. எனினும், பொதுவாக இரு தரப்புடனும் நல்லுறவுள்ளது.

நாங்கள் விடுதலைப் புலிகளுக்கு சார்பாக இருந்திருந்தால் இலங்கை அரசாங்கம் எப்போதோ எங்களை வெளியேற்றிருக்கும். யுத்த நிறுத்த கண்காணிப்புக் குழுவுடன் பிரச்சினையுள்ளவர்கள் இலங்கை அரசாங்கத்துடன் இது குறித்துப் பேச வேண்டும். அவர்களே நாங்கள் இங்கு தங்கியிருப்பதற்குப் பொறுப்பு. கண்காணிப்பு குழுவில் ஐந்து நாடுகளைச் சேர்ந்தவர்களும் பணியாற்றுகின்றனர். அவர்கள் பல்வேறுபட்ட தொழில்துறையைச் சேர்ந்தவர்கள். முன்னர் எப்போதும் இலங்கைக்கு வராதவர்கள் அரசியலில் ஈடுபாடு இல்லாதவர்கள். எனினும், இலங்கையில் சமாதானத்தை ஏற்படுத்தும் ஆர்வம் கொண்டவர்கள், குடும்பங்களை விட்டு நீண்ட காலம் இங்கு தங்கியிருப்பது பெருமகிழ்ச்சிக்குரியதல்ல மாறாக கடினமானது. விமர்சனங்கள் என்பது ஆரோக்கியமானவை. எனினும், பலர் என்ன நடைபெறுகின்றது என்பதை புரிந்து கொள்ளாமல் விமர்சிக்கிறார்கள்.

(தென்செய்தியில் வெளியான கட்டுரை)


இவரது மற்ற படைப்புகளைக் காண இங்கே அழுத்தவும்


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com