Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
KeetruLiteratureArticle
கட்டுரை

மலைவேழம்
தொ. சூசைமிக்கேல்


‘கவின் மலையாளம் உன்னுதரத்(து) உதித்தெழுந்தது!’ என்று பேராசிரியர் மனோன்மணீயம் சுந்தரனார் அவர்கள் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடுகையில் செதுக்கி வைத்திருக்கும் செவ்விய குறிப்பு ஒன்று, தமிழனுக்குப் பெருமை சேர்ப்பது என்பதில் சற்றேனும் ஐயம் இல்லை. அதுவும், தான் ஒரு ‘கொடு மலையாளக் குடியிருப்பு’க் காரனாக இருந்து கொண்டே இப்படிக் குறிப்பிட்டிருக்கும் போது, தமிழ் மொழியின் வரலாற்றுச் சாளரங்களை அந்த மாமனிதர் திறந்து வைப்பதை நம்மால் பூரிப்போடு புரிந்துகொள்ள முடிகிறது.

சுந்தரனார் மட்டுமல்ல, சொலல்வல்லார் எல்லாருமே சொல்கிறார்கள், தமிழ்மொழிதான் மலையாளத்தை ஈன்றதென்று. மலையாளத்துக்குள் மறைந்திருக்கின்ற எத்தனையோ தமிழ்ச் சொற்களை அடையாளங் காட்டி நம்மை வியக்க வைக்கிறார்கள். எவ்வித மாற்றமும் அடையாமல் மலையாளத்தில் வழங்குகின்ற நேரடித் தமிழ்ச் சொற்களையும் சுட்டிக் காட்டிச் சொந்தம் கொண்டாடுகிறார்கள். திரிந்து நிற்கின்ற சில கடினமான மலையாளச் சொற்களின் திராவிட வேர்களைக் கூட நிலைநாட்டி விடுகிறார்கள். ஆனால், ‘மலையாளம்’ என்னும் அந்த மொழியின் பெயர் குறித்த விளக்கத்தைப் பொறுத்த மட்டில், அதற்குள் புதைந்து கிடக்கும் தூய தமிழ்ச் சொல்லின் சுய வடிவத்தினை வெளிக்கொணர்ந்திடும் துணிச்சலோ துல்லியமோ துளியும் இன்றித் தமிழர்கள் தோற்றுக் கிடக்கிறார்கள். இந்தத் தோல்விக்குக் காரண கர்த்தாக்களாக அறிஞர் பெருமக்களைக் குற்றம் சொல்ல முனைவது குற்றம் எனினும், அவர்களால் நமக்குத் தரப்படுகின்ற குழப்பமான விளக்கங்களைக் குற்றம் சொல்லாமல் இருக்க முடிவதில்லை என்பதுதான் இக்கட்டுரையின் மூலம் அடியேன் தெளிவுபடுத்த விரும்பும் உண்மை.

அருந்தமிழ் அறிஞர்கள் வட்டமும் ஆய்வாளர்கள் வட்டமும் இந்த ‘மலையாளம்’ என்ற சொல்லுக்குத் தந்திருக்கும் விளக்கங்களை நோக்குமுன், மலையாளத்துக்காரர்களே அந்தச் சொல்லுக்கு எப்படி விளக்கமும் பாதுகாப்பும் தருகிறார்கள் என்பதைச் சற்று அலச வேண்டிய அவசியம் ஏற்படுகிறது.

மலையாளத்துக்காரர்கள் தாய்மொழி மீது தளராத மோகமும் வேகமும் உள்ளவர்கள். தங்கள் மொழியானது தமிழின் குழந்தை என்பதை வெளிப்படையாக ஒப்புக்கொள்ள விரும்பாதவர்கள். அதற்குச் சப்பைக்கட்டாக சமஸ்கிருதத்தைத் தூக்கிவைத்துத் துதி பாடுபவர்கள். ‘எங்கள் மொழியில் எழுபது விழுக்காட்டுக்கு மேல் சமஸ்கிருதமாக்கும்!’ என்ற எக்காளத் தொனியில், தமிழுக்கு ஏளனத் திலகம் இடுபவர்கள். எனவே மலையாளம் என்பது அவர்களது மொழிக்கு அவர்களே உருவாக்கிக் கொண்ட பெயரென்று அடித்துச் சொல்கிறார்கள். தமிழிலிருந்து மருவி வந்த பெயர்தான் ‘மலையாளம்’ என்பதை உள்@ற உணர்ந்திருந்தும் அதை அவர்கள் ஏற்க மறுக்கும் நிலையில், அறிந்தோ அறியாமலோ தமது மொழியின் பரம்பரைச் சரித்திரத்தையே பாழறைக்குள் பூட்டிவைக்கப் பார்க்கிறார்கள். ஏதோ நேற்றுதான் ‘மலையாளம்’ என்ற சொல் உருவாக்கப்பட்டது போலவும், அதற்கும் தமிழர்களுக்கும் எவ்விதத் தொடர்பும் இல்லாதது போலவும் ஒரு விறைப்பான நிலைப்பாட்டை உருவாக்கி, அதிலிருந்து அவர்கள் விலகாது நிற்கிறார்கள்.

மலையாளம் என்ற சொல்லுக்குக் கேரளத் தோழர்கள் தருகின்ற பொருள் விளக்கங்கள், இரண்டே பிரிவுகளில் அடங்கி விடுகின்றன.

முதற் பிரிவு என்னவென்றால், மலை சூழ்ந்த இடமாகக் கேரளம் இருப்பதால் அது ‘மலை அளம்’ என்று அழைக்கப்பட்டதாம். அதுதான் நாளடைவில் ‘மலையாளம்’ ஆயிற்றாம். அளம் என்றால் இடம் என்று பொருள்படும் தமிழ்ச் சொல் என்பதும் மலை என்பது குன்றுகளைக் குறிக்கும் தமிழ்ச் சொல் என்பதும் உலகுக்கெல்லாம் உள்ளங்கை நெல்லிக்கனி.

இரண்டாம் பிரிவின்படி பார்த்தால், மலைக்கும் ஆழிக்கும்(கடல்) இடைப்பட்ட நிலமாகக் கேரளம் பரந்திருப்பதால் ‘மலை ஆழி’ என்று அதற்கு வழங்கப்பட்ட சொல், காலப்போக்கில் மெல்ல மெல்ல ‘மலையாளம்’ என்று மாற்றம் பெற்றதாம். இங்கும் ஆழி என்பது கடலைக் குறிக்கும் தமிழ்ச் சொல் என்பது வெள்ளிடை மலை.

இப்போது நமது தமிழறிஞர்கள் வட்டத்துக்கு வருவோம். அவர்கள் புதிதாக எந்தப் பொருள் விளக்கத்தையும் தரவில்லை. கேரளத்தார் கூறுகின்ற மேற்கண்ட இருவகைப் பொருள் விளக்கங்களையே இவர்களும் வழிமொழிகிறார்கள். கேரளத்தார் கூற்றுக்கு மறுப்புக் குறிப்புக்களோ அல்லது வேறெந்த இணைப்புக் குறிப்புக்களோ நம்மவர் தரப்பிலிருந்து இதுவரை இல்லை.

இங்குதான் இவர்கள் தோற்றுக் கிடக்கிறார்கள் என்று நான் சொல்ல விழைந்தேன். எப்படித் தோற்கிறார்கள் என்பதும் தோற்காமல் இவர்கள் எப்படி வெற்றிக் கொடி நாட்ட முடியும் என்பதும், வள்ளுவன் சொன்ன நுழைபுலத்தின்பாற் பட்டது. நுண் மாண் நுழைபுலம் வேண்டுமெனச் சொன்ன வள்ளுவனாரைப் போதிக்கத்தான் நமக்குத் தெரிகிறதே தவிர, சாதிக்கத் தெரிவதில்லை.

‘மலையாளம்’ என்ற சொல்லின் மூலத் தோற்றம் அறிந்திட முற்படுவோர் யாராயினும், தமது மூளையைச் சரித்திரத்தின் மூலை முடுக்குகளிலே சற்று நேரமல்ல - முற்று நேரமும் உலவ விட வேண்டியது முக்கியம். அவ்வாறு, சரித்திரச் சாலைகளினூடே நுழைபுலத்தோடு நாம் பயணம் மேற்கொள்ளும் போது, ‘மலையாளம்’ என்ற சொல்லோடு தொடர்புடைய எண்ணிறந்த மொழியியல் அதிசயங்கள் நம்மை முற்றுகையிடுகின்றன. அவற்றுள் ஒரே ஒரு தூய்மையான தமிழ்ச் சொல் இப்போது இந்தக் கட்டுரைக்குத் தேவைப்படுகிறது. அதுதான் ‘வேழம்’ என்பது.

பன்னெடுங் காலமாக, சேர சோழ பாண்டிய நாடுகளின் புகழ்ச்சிக் குறிப்புக்களாக இருந்த மூன்று சொற்றொடர்கள் முறையே “வேழமுடைத்து மலைநாடு” என்பதும், “சோணாடு சோறுடைத்து” என்பதும், “தென்னாடு முத்துடைத்து” என்பதும் ஆகும். சேரநாட்டுக்கு வேழம்(யானை) சிறப்பு என்பதும், சோழ நாட்டுக்குச் சோறு சிறப்பு என்பதும், பாண்டிய நாட்டுக்கு முத்து சிறப்பு என்பதும் மேற்கண்ட சொற்றொடர்களின் விரிவாக்கங்கள்.

‘வேழம்’ என்பது யானை என்னும் பொருள் கொண்ட தூய தமிழ்ச் சொல். மலைவளமும் யானைகளும் நிறைந்த சேரநாட்டுச் செவ்விதனைக் குறிக்கும் வண்ணம், “மலை வேழம்” என்ற சொல் அக்காலத்தில் புழங்கியிருந்திருத்தல் வேண்டும். “வேழம் உடைத்து மலை நாடு” என்பதையே மாற்றி, ‘மலைவேழம்’ உடைய நாடு என்று வழங்குவது மொழி வழக்காற்றில் ஒன்றும் முரண்பட்ட மாற்றமல்ல: முற்றிலும் சாத்தியமான ஒன்றுதான். ‘மலை நாடு’ என்று கேரளம் இன்றும் அழைக்கப்படுவது போலவே, ‘வேழ நாடு’ என்றும் அக்காலத்தில் அழைக்கப்பட்டு வந்திருக்கிறது.

‘வேணாடு’ என்பது ‘வேழ நாடு’ என்பதன் புணர்ச்சியாகும். ‘வேள் நாடு’ என்றும் அச்சொல் பிரித்து உணரப்படுமெனினும், ‘வேழம்’தான் பொருத்தமான பொருள் என்பது ஆய்வாளர்கள் அறுதியிட்டுரைக்கும் முடிவு. எனவே, ‘மலை நாடு’ என்றும் ‘வேழ நாடு’ என்றும் தனித்தனிப் பதங்களால் வழங்கப்பட்டு வந்த கேரளம், நிச்சயமாக “மலை வேழம்” என்னும் ஆகுபெயரைத் தாங்கி நின்றிருக்க வேண்டும் என்பது முற்றிலும் பொருந்துகின்ற வாதம் ஆகும்.

‘வேழங்களாக’ விளங்கிய யானைகளை ‘மதயானை’களாகக் காண்பதைக் காட்டிலும் ‘மலை யானை’களாகவே சேரநாட்டினர் தம் வாழ்நாள் முழுவதும் கண்டு வந்திருந்த காரணத்தால் தமது வீரமிகு ஆண்மக்களைக் கூட ‘மலையானை’ என்று அழைத்து வந்ததாகச் சேரநாட்டுச் சரித்திரம் சொல்கிறது. அந்த உண்மையை அரண்செய்கின்ற வகையில், இன்றும் நாஞ்சில் நாட்டு நெய்தல் நிலத்துத் தமிழர்கள் தங்கள் ஆண்மக்களை ‘மலையானை’ என்னும் அடைமொழியால் புகழ்த்திப் பேசுவது வழக்கத்தில் இருக்கிறது. ‘அஞ்சாறு மலையானைகளப் பெத்தவளுக்கா ஒத்தக் கொமரை கரையேத்த முடியேல்ல?’ என்றெல்லாம் ஆற்றாமைக் குரலெழுப்பும் அன்னையர் பலரை இன்றைக்கும் கூட அங்கே நாம் காண முடியும். இன்றைய நாஞ்சில் நாடு பண்டைய சேர நாட்டின் ஒரு பகுதியாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. அத்தோடு, ‘மலையானை’ என்ற சொல்லால் ஓர் ஆண்பிள்ளையை அழைக்கின்ற பேச்சு வழக்கு, நாஞ்சில் நாட்டைத் தவிர தமிழ்நாட்டின் வேறெந்தப் பகுதியிலும் தற்போது நடைமுறையில் இல்லை என்பதும் கூர்ந்து கவனிக்கத் தக்கது.

தமிழ் இனத்தைப் பொறுத்தமட்டில், வேழமும் வீரமும் ஒன்றோடொன்று இயைபுடையனவாகவே இருந்தன என்னும் ஏற்றமிகு கூற்றுக்கு, இலக்கிய வரிகளில்கூட எண்ணற்ற சான்றுகள் காணக் கிடக்கின்றன. “களிறெறிந்து பெயர்தல் காளைக்குக் கடனே!” என்ற காக்கை பாடினியும், “கைவேல் களிற்றொடு போக்கி வருபவன்” என்றும், “யானை பிழைத்த வேல்” என்றும், “குன்றேறி யானைப்போர் கண்டற்றால்” என்றும் எழுதிய வள்ளுவப் பெருமானும், வேழத்தையும் வீரத்தையும் எத்தனை வெகுவாகத் தொடர்புபடுத்தித் தத்தமது தூரிகைகளின் தூய்மையை மெத்தவும் நிலைநாட்டியுள்ளனர் என்பது சொல்லாமலே விளங்கிடும் சுகங்களாகும்.

ஆயிரம் யானைகளை வீழ்த்தியவன் மீது பரணி என்னும் பனுவல் யாத்துப் பழகிய இனம் தமிழினம். இவற்றையெல்லாம் வைத்துச் சீர்தூக்கிப் பார்க்கையில், யானைகள் மிகவும் அதிக அளவில் நடமாடும் மலைநாட்டின் வீர மைந்தர்களுக்கு யானைகளொடு பொருதுவதும் வீழ்த்துவதும் இயல்பு வாழ்க்கையாகவே இருந்து வந்தமையால், அந்தப் பகுதியிலே வாழ்ந்து வந்த குடிமக்களின் எண்ணத்திலே வீரர்கள் ‘மலையானை’களாகவே தெரிந்தனர் என்பதில் கிஞ்சிற்றும் வியப்பிற்கு இடமில்லை. அப்படியொரு மேலான உவமை அழகியலின் எச்சம்தான் இத்தனைநாட் பின்னும் ‘மலையானை’ என்னும் வடிவில் வழங்கப்பட்டு வருகிறது என்பதையும் மறுப்பதற்கு இடமில்லை.

‘வேழம்’ என்ற சொல் நாளாவட்டத்தில் உரையாடு களத்திலிருந்து ஒதுங்கிக்கொண்ட போதிலும், சேரநாட்டுக்கென வழங்கிவந்த ஆகுபெயரான ‘மலைவேழ’த்திலிருந்து அது ஒதுங்க முடியாமற் போயிருப்பது நமக்குத் தெளிவாகத் தெரிகிறது. உரையாடு களத்தில் ‘யானை’ மட்டுமே பரவலாகப் புழங்கி வந்ததன் விளைவாக, ‘வேழம்’ விடைபெற்றிருப்பதும் நம் ஆய்வுக் கண்களுக்குத் துல்லியமாகப் புலப்படுகிறது. ஆகவேதான் அந்த ‘மலைவேழம்’, வீரத் தமிழர்தம் நாவில் ‘மலையானை’ என்னும் மங்கல ஓசையுடன் இன்றும் வாழ்ந்து கொண்டிருக்கின்றது.

எனவே, முத்தமிழ் மண்ணில் நமது மூதாதையர்களால் வழங்கப்பட்டு வந்த ‘மலைவேழம்’தான், இன்று ‘மலையாளம்’ என்று மருவி வழங்குகிறது என்பது எவ்வித மறுப்பிற்கும் இடமின்றி, எவ்வித காய்தலுக்கும் உவத்தலுக்கும் இடமின்றிப் புலப்பட வேண்டிய உண்மையாகும். ஆனால், இந்த உண்மையை நிறுவ முயல்வதோடு மட்டும் நமது நுழைபுலத்தின் பணி நின்றுவிடுவதில்லை. ‘வேழம்’ கடைசியில் எப்படி ‘யாளம்’ என மருவிட நேர்ந்தது என்பதற்கான திசையை நோக்கியும் அதே நுழைபுலம் சென்றுவர வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. எனவே, அந்த ‘மலையாள’ மரூஉ உள்வாங்கிக் கொண்ட உருமாற்றங்கள் பற்றிய செய்திகளையும் இங்கே ஒருங்கு திரட்ட விழைகிறேன்.

முதற்கண், கேரளத்தார் நமக்குச் சொல்லுகின்ற ‘மலையாளம்’ என்பதன் பொருள் விளக்கங்கள் இரண்டும் எள்ளளவும் ஏற்புடையன அல்ல என்பதை நாம் கண்டறிந்துகொள்வது அவசியம்.

முதல் விளக்கப்படி, ‘மலை’யும் ‘அள’மும் புணர்கையில் அது ‘மலையளம்’ என்றுதான் ஒலிக்க முடியுமே தவிர, ‘ய’கரக் குறிலானது நீட்சி பெற்று ‘மலையாளம்’ என்று ஒலிக்க நியாயமே இல்லை. ‘உப்பு’ என்பதும் ‘அளம்’ என்பதும் புணர்ந்து ‘உப்பளம்’ என்றுதான் ஒலிக்கின்றது. எத்தனை ஆண்டுகள் வழங்கினாலும் அச்சொல் ‘உப்பாளம்’ என்று ஒரு நீட்டல் விகாரமாக மருவுவது சாத்தியமே இல்லை. இதற்குச் சாதகமான புணர்ச்சி விதிகளும் இலக்கணத்தில் எங்கெணும் இல்லை.

இரண்டாவது விளக்கப்படி, ‘மலை’யும் ‘ஆழி’யும் புணர்கையில் அது ‘மலையாழி’ என்றுதான் ஒலிக்க முடியும். காலப்போக்கில் ‘ழ’கரம் ‘ள’கரமாக ஓசைமாற்றம் பெறுவதாக வைத்துக் கொண்டாலும், அது ‘மலையாளி’ என்று வேண்டுமானால் ஒலிக்க வாய்ப்பிருக்குமே தவிர, ஒருக்காலும் அச்சொல்லின் ஈற்றில் ‘அம்’ என்னும் விகுதி இணைந்திட வாய்ப்பில்லை. ‘பாலாழி’யை யாரும் ‘பாலாளம்’ என்பதில்லை. ‘கணையாழி’ என்னும் சொல் எந்தவொரு வழக்காற்றின் கண்ணும் ‘கணையாளம்’ எனப்படுவதும் இல்லை.

‘மலையாளம்’ பற்றிய மேற்கண்ட இருவகைக் கூற்றுகளும் கொண்டுள்ள குளறுபடிக்கெல்லாம் அப்பாற்பட்டு, ‘மலைவேழம்’ எவ்வாறு மரூஉக்கான சாத்தியக் கூறுகளை உள்வாங்கிக் கொண்டு ‘மலையாளம்’ ஆயிற்று என்பதை இப்போது விளக்கமாகக் காண்போம்.

தமிழ் மொழியில் ‘ஏ’கார ஓசையைக் கொண்டு தொடங்கும் சொற்களுள் பெரும்பாலானவையும், வழக்காற்றில் ‘ஏ’காரத்திற்குப் பதிலாக ‘இயா’ என்னும் அசைவைத் தழுவி ஒலிப்பது இயற்கை. இலக்கணத்தில் ‘மியா’ என்னும் அசைச்சொல்லே இதற்குச் சான்றாக இருக்கிறது. காண்பதற்கு அது ‘நிரை’ அசையாக இருப்பினும், சிற்சில யாப்பிலக்கணப் பயன்பாடுகளில், தளை கெடாமல் இருக்கும் பொருட்டு, அது ‘நேர்’அசையாகவே நிலைகொள்கிறது. எவ்வாறெனில், அதன் தொடக்கத்தில் வரும் ‘இ’கர ஓசையானது மாத்திரையில் குறைந்து ஒலிக்கிறது. பவணந்தி முனிவன் தனது நன்னூல் சூத்திரத்தில் குறிப்பிடுகின்ற “அஃகிய இ” என்னும் குற்றியலிகரம் இதுதான். இந்த ‘இ’கரத்தைத் தொடர்ந்து வருகின்ற ‘ய’கர ஓசை, உடம்;படு மெய் ஆகும். இது “இ,ஈ ஐவழி யவ்வும், ஏனை அவ்வழி வவ்வும், ஏமுன் இவ் விருமையும் உடம்படு மெய்யென் றாகும்” என்ற சூத்திரத்தின் அடிப்படையில் உருவாகிறது. ஆக, உடம்படு மெய்யான ‘ய’கர ஒற்றோடு ‘ஆ’கார உயிர் தழுவி ஒலிக்கும் ‘யா’ என்னும் நெடில் உயிர்மெய் எழுத்தின் ஓசை மட்டும் எஞ்சுகிறது. இதன் முன்னிற்கும் ‘இ’கரம் குற்றியலிகரமாதலால் அதன் ஓசையானது மாத்திரை குறைந்து மங்கிப் போகிறது. இறுதியாக, ‘ஏ’காரத்திற்குப் பதில் ‘யா’காரம்தான் ஒலிக்கிறது.

இந்த ‘மியா’ அசைச்சொல்லின் இலக்கண விளக்கம், நடைமுறைப் பேச்சு வழக்கிற்கும் பொருந்துகிறது என்பதை நாம் நன்றாகப் புரிந்து கொள்ள முடியும். இவ்வாறு, ‘ஏ’காரத்தைத் தழுவிக்கொண்டு, அதை இடமாற்றம் செய்திடும் ‘இயா’ என்னும் அசையானது, இறுதியில் “யா” என்னும் ஓசையை மட்டுமே மிச்சப்படுத்துகின்ற செயல், சொல் வழக்காற்றில் ஒரு தவிர்க்க முடியாத மாற்றமாக இடம் பெற்றிருப்பது கண்கூடு. இலக்கணமும் இதற்கு வழிவிடத்தான் செய்கின்றது. இதற்கான எடுத்துக்காட்டுக்கள் பேச்சு வழக்கில், அதுவும் அன்றைய சேர நாட்டின் ஒரு பகுதியாக விளங்கிய இன்றைய நாஞ்சில் நாட்டு வட்டார வழக்கில் மிகவும் அதிக அளவில் உலவிடக் காணலாம்.

‘ஏன்’ என்ற சொல்லையே எடுத்துக்கொள்வோம். தொடக்கத்தில் ‘ஏ’காரம் இருக்கிறது. இந்தச் சொல், குமரிமாவட்டத்து வழக்காற்றில் ‘யாங்?’ என்ற ஓசையுடன் வினவப்படுகிறது என்பது பலருக்கும் வியப்பைக் கொடுக்கலாம். ஆனால் உண்மையான வழக்காறு அது. இங்கே ‘ஏ’காரம் ‘யா’காரத்தால் இடம் பெயர்ந்திருப்பது தெரியவரும். ‘தேவையில்லாமல் பேசாதே!’ என்ற சொற்றொடரானது, குமரிமாவட்ட வட்டார வழக்கில் ‘தியாவையில்லாம பியாசாத!’ என்று ஒலிப்பதை யாரும் மறுக்க முடியாது. இங்கே ‘தே’ மற்றும் ‘பே’ எழுத்துக்களில் உள்ள ‘ஏ’காரத்தில் ‘இயா’ அசை புகுந்துகொண்டு ஒலிப்பதை நாம் புரிந்துகொள்ள முடிகிறது.

‘வேளாங்கண்ணி’ என்பது வழக்காற்றில் ‘வியாளாங்கண்ணி’ என்றுதான் வழங்கப்படுகிறது. சில கிராமங்களில் அது ‘யாளாங்கண்ணி’ என்றுகூட வழங்கப்படுவதுண்டு. இங்கும் நாம் கவனிக்க வேண்டியது: ‘ஏ’காரத்தை ‘இயா’ அசை ஆக்கிரமித்துக்கொள்கிறது, இறுதியில் ‘யா’ ஓசைதான் மிஞ்சுகிறது. குறிப்பாகச் சொல்லப்போனால், ‘வியா’ என்று தொடங்கும் எந்தச் சொல்லுமே வழக்காற்றில் ‘வி’யைப் பறிகொடுத்துவிட்டு ‘யா’வை மட்டுமே கைப்பிடித்துக் கொள்ளுகிறது. இப்படிப் பற்பல சொற்கள் வழக்காற்றில் ஓசை மாற்றங்களுடன் உலா வருவதை நாம் குமரி மாவட்டத்தில் சர்வ சாதாரணமாகக் கண்டுணர முடியும்.

இப்போது ‘வேழம்’ என்ற சொல்லுக்கு வருவோம். மேற்கண்ட ஓசைமாற்ற நடைமுறை விதிகளுக்கு வேழமும் உட்படும் போது, அது ‘வியாழம்’ என்று ஓசைமாற்றம் பெற்று ஒலித்திருக்க வேண்டும். அந்த வகையில் ‘மலைவேழம்’ என்பது ‘மலைவியாழம்’ என்று மருவி ஒலிப்பது சாத்தியமாகி இருக்கிறது. நாளடைவில் ‘வி’ என்னும் குற்றியலுகரம் மாத்திரைக் குறைவால் மங்கி ஒலிக்க, பின்னொரு காலகட்டத்தில் அது மறைந்தே போயிருக்கிறது. பின்னர் ‘யா’ மட்டுமே எஞ்சியிருக்க, ‘மலை(வி)யாழம்’ என்பது ‘மலையாழம்’ என்ற மரூஉ நிலையை எய்தியிருக்கிறது. ‘இலை வியாபாரம்’ என்பது வழக்காற்றில் எவ்வாறு ‘இலையாபாரம்’ ஆகிறதோ, அதைப் போலவே ‘மலைவேழ’த்திலிருந்து திரிந்த ‘மலை வியாழம்’ என்பதும் ‘மலையாழம்’ ஆகிறது என்று காண்கிறோம். இது வழக்காற்று நடைமுறையில் மிகமிகச் சாத்தியமானதே என்பது எவ்வித மறுப்புக்கும் இடமின்றிப் புலனாகிறது.

இறுதிக் கட்டமாக, ‘மலையாழம்’ என்ற சொல்லின் ‘ழ’கரமும் திரிந்து, ‘மலையாளம்’ என்ற வடிவத்தை எட்டியிருப்பதைக் காண்கிறோம். ழகர உச்சரிப்பில் தாங்கொணாத் தவறு இழைக்கும் தமிழர்களுடன் இணைந்து, சேர நாட்டினரும் ‘மலையாழம்’ என்ற மரூஉ சுமந்து நின்ற ‘ழ’கரத்திற்குத் தவறிழைத்து, ‘மலையாளம்’ என்று மாற்றி வழங்கிடத் தொடங்கினர் என்பதை இன்னமும் மலையா‘ள’ம் பறைசாற்றிக் கொண்டிருக்கிறது. ஒருவேளை இந்த ‘ள’கரமும் இடையினம்தானே என்ற தைரியத்தில் அப்படியொரு ‘இடை’ச் செருகல் நேர்ந்ததோ, என்னவோ! பாவம், மலையாளம்! தமிழ் என்ற மொழிப்பெயரில் தனிமகுடம் புனைந்து நிற்கும் ‘ழ’கர தேவதையின் நிரந்தர தரிசனம், ‘மலையாள’ மொழிப்பெயர்க்குக் கிட்டாமலேயே போய்விட்டது!..

இதுதான் ‘மலைவேழம்’ மருவிநின்ற கதை. ‘வேழமுடைத்து மலைநாடு’ என்னும் ஒற்றை வரிக்குள் உலா சென்று வந்த தமிழனின் தரம் வாய்ந்த நுழைபுலம், தரணிக்கு வழங்கி நிற்கும் ‘மலையாள’ வரலாறு இதுதான்.

- தொ.சூசைமிக்கேல் ([email protected])

இவரது மற்ற படைப்புகளைக் காண இங்கே அழுத்தவும்


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com