Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
KeetruLiteratureArticle
கட்டுரை

தேர்தல் 2006
மதிவாணன்


ஏப்ரல் 1 அன்று நண்பர் ஒருவர் குறுந்தகவல் ஒன்று அனுப்பியிருந்தார். தேர்தல் வருவதையொட்டி முட்டாள்கள் தினக் கொண்டாட்டம் மே 8க்கு தள்ளிவைக்கப்பட்டிருப்பதாக அந்தத் தகவல் சொன்னது. நடப்புகளைப் பார்த்தால் நிச்சயம் அன்று முட்டாள் தினமாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை. ஆனால் யார் முட்டாள் ஆவார்கள் என்பதில்தான் ஊகங்கள் அடங்கியிருக்கின்றன.

2006 சட்டமன்றத் தேர்தல் பல அம்சங்களில் முக்கியம் பெறுவதாக ஆகியிருக்கிறது. திமுக அணியிலிருந்து பாமக விலகவேண்டும் என்று வி.சி.க்கள் அழைப்பு விட்டதிலிருந்து அரசியல் விளையாட்டு துவங்கியதாக பலரும் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். உண்மை அதுவல்ல, அதற்கு வெகு முன்பே பாமக சீட்டில் ஜெயித்த முருகவேல் ராஜனை ஜெ வளைத்துப்போட்டார். அதற்கு வெகுமுன்னதாகவே, மக்களைப் பற்றிய தன் கரிசனையை ஜெ வெளிச்சம் போட்டு காட்டிக்கொள்ள ஆரம்பித்தார். அதற்கு வெகு முன்னதாகவே, மத்திய அரசில் தனக்குள்ள செல்வாக்கைக் கொண்டு நிறைய செய்திருப்பதாக கருணாநிதி அண்டு கம்பெனி அலறியது. அது உண்மையில்லை என்று ஜெ ஆர்ப்பாட்டம் செய்தார். எல்லாம் தேர்தலை மனதில் கொண்டு அரங்கேறிய நாடகங்கள்தான்.

இந்தத் தேர்தல் மிகவும் முக்கியமான தேர்தல் என்பதைப் பறைசாற்ற நிறைய சம்பவங்களைச் சொல்ல முடியும். முக்கியமான ஒன்று திமுக தனது சீட்டுக்களைக் குறைத்துக் கொண்டிருப்பது. முன்னெந்தத் தேர்தலிலும் இல்லாத வகையில் திமுக 130க்குக் குறைவான இடங்களில் போட்டி போடுகிறது. அவர்களின் கணக்கைப் பார்த்தால் திமுக + காங்கிரஸ் கூட்டாட்சிக்குக் கூட தயார் என்று அவர்கள் கருதுவது தெளிவாகத் தெரிகிறது. (பாண்டியில் திமுக குறைவான தொகுதிகளில் போட்டியிட காங்கிரஸ் கூடுதல் தொகுதிகளில் போட்டியிடுகிறது.) தமிழகத்தை ஆளும் தனிப்பெரும் கடமையை கருணாநிதி விட்டுக் கொடுக்க நேர்ந்தது ஏன்? வெறும் கூட்டணிக் கணக்குதான் காரணமா?

அந்தப் பக்கம் பாருங்கள். ஜெவும் கூட பதறிப்போயிருப்பது தெரியும். மக்களோடு கூட்டணி என்றவர் திருமாவளவனை வளைத்துப் போட்டார். வைகோவை அரவணைத்துக் கொண்டார். அனைவருக்கும் முன்னதாக தேர்தல் பிரச்சாரத்தை ஆரம்பித்தார். எல்லாவற்றுக்கும் முன்னதாக அள்ளி அள்ளிக் கொடுத்தார். தேர்தல் கமிஷன் மீது வழக்குப் போட்டார். பத்திரிகைகளுக்கு தனிப்பேட்டியெல்லாம் கொடுக்கிறார்.

மத்திய அரசைக் கையில் வைத்துக்கொண்டு அறிவித்த ஒரே இந்தியா போன்ற திட்டங்கள் சாதாரண மக்களுக்கானது என்று கருணாநிதி புலம்பிப் பார்க்கிறார். டெலிவிஷன், அரிசி, இரண்டு ஏக்கர் நிலம் என்று தேர்தல் அறிக்கையில் அள்ளி விடுகிறார். ஜெவின் தேர்தல் அறிக்கை இந்தக் கட்டுரை எழுதப்படும்போது கைக்கு வரவில்லை. அவர் என்ன வானவேடிக்கைகளை அள்ளிவிடுவார் என்று தெரியவில்லை.

கிருஷ்ணசாமி போன்ற சிலர் தனியே விடப்பட்டுள்ளார்கள். எம்ஜிஆரிடமிருந்து புரட்சியையும் கருணாநிதியிடமிருந்து கலைஞரையும் எடுத்துக்கொண்ட விஜயகாந்த் தனியே நிற்பதாக படம் காட்டிக் கொண்டுள்ளார். ஆக, இரண்டு பிரதான அணிகள் என்பதாக தேர்தல் களம் சூடுபிடித்துக் கொண்டுள்ளது. தமிழகத்தின் நம்பர் 1 பத்திரிகையான(?!) குமுதத்திற்கு ஜெ தனிப்பேட்டியளித்துள்ளார். அந்தப் பேட்டியில் முதல் வாரம் வெளியான தகவல் விவசாயத் தொழிலாளர்களும் சிறுகுறு விவசாயிகளும் தொட்டில் துவங்கி சுடுகாடு வரை பெறப்போகும் சலுகைகள் பற்றி ஜெ பட்டியல் போட்டுள்ளார். அதுமட்டும்தான் முதல் வாரப்பேட்டியின் முக்கியமான செய்தி.

கருணாநிதி அரிசி, நிலம் என்று தேர்தல் அறிக்கை வெளியிட்டுவிட்டு மக்கள் தன்னைத் தேர்ந்தெடுத்தால் தேர்தல் அறிக்கையே நிதிநிலை அறிக்கையாக இருக்கும் என்றும் அறிவிப்பு விட்டுள்ளார். இரண்டு பேருமே கிராமப்புற ஏழை மக்களை குறிவைத்துள்ளார்கள் என்பதைக் காட்ட வேறு ஆதாரம் எதுவும் தேவையில்லை. ஏன் அவர்களை இந்தப்பிரிவினரைக் குறிவைக்க வேண்டும் என்பதில்தான் இந்தத் தேர்தலின் முக்கியத்துவம் அடங்கியிருக்கிறது.
கடந்த பத்தாண்டுகளுக்கு மேலாக இந்தியாவின் கதவுகள் திறந்துவிடப்பட்டன. நமது பொருளாதாரத்தின் அனைத்து விஷயங்களையும் பன்னாட்டு முதலாளிகள் தீர்மானிக்க ஏற்பாடுகள் வேகமாக நடந்தன, நடந்து கொண்டிருக்கின்றன. உலகமயமாக்கம் என்று பொதுவாக அறியப்படுகின்ற இந்த நிகழ்வுப் போக்கில் தமிழகத்தை வெகுவாக நகர்த்திச் சென்ற பெருமை ஜெவுக்கு உண்டு. தனது தேர்தல் பிரச்சாரத்திலேயே உலக முதலாளிகளின் மூலதனம் தமிழகத்தில் அதிகரித்திருக்கின்றது என்று அவர் பெருமைபொங்க அறிவித்துள்ளார். அதன் மறுபக்கம் அவர்களுக்கு ஏற்ற வகையில் நமது நாட்டின் பொருளாதாரக் கட்டமைப்பை மாற்றியமைப்பதாகும். அதனையும் ஜெ தமிழகத்தில் சிறப்பாகச் செய்துள்ளார்.

நலிந்து வரும் விவசாயத்திற்கு என்ன மாற்று என்று ஜெவைக் கேளுங்கள். கம்பெனிகளுக்குத் தேவையான விவசாய உற்பத்தி என்று ஜெ தயங்காமல் அறிவித்திருக்கிறார். தனது ஆட்சியின் துவக்க காலத்தில் சிக்கன நடவடிக்கைகள் என்ற பெயரில் ரேஷன் அரிசி முதல் நெல் கொள்முதல் வரை பல விவகாரங்களில் ஜெ கை வைத்தார். அந்தப் பட்டியல் வெகு நீண்டது. பிந்தைய பகுதியில் நிதிநிலை சீரடைந்துவிட்டதாகச் சொல்லி நிறைய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார். அவற்றில் பல செய்திகள் மறைந்து கிடக்கின்றன. உதாரணமாக மாணவர்களுக்கு சைக்கிள், இலவசப் புத்தகம் போன்ற விவவகாரத்தை எடுத்துக் கொள்ளுங்கள். துவக்கக் கல்வி முதல் தொழில் கல்வி வரை தனியாரின் கொள்ளைக்கு விட்டாகிவிட்டது. மக்களுக்குச் சேவை செய்வதில் இருந்து அரசு விலகிக் கொள்ள வேண்டும் என்ற உலக மூலதனத்தின் கட்டளைப் படி செய்யப்பட்டது. அதில் எந்த மாற்றத்தையும் ஜெ செய்யவில்லை. நிகர் நிலை பல்கலைக்கழகங்களின் கல்விக் கொள்ளையை எதிர்த்து இரத்தம் சிந்தும் போராட்டங்கள் வெடிக்கின்றன.

மாவீரன் ஜேப்பியார் பின்னங்கால் பிடரியில் பட ஓட்டம் எடுக்க மாணவர்கள் விரட்டுகின்றனர். உயர்நீதி மன்றம், உச்சநீதிமன்றம் என்று வழக்குகள் தாக்கலாகின்றன. ஜெ சுட்டுவிரலைக் கூட அசைக்கவில்லை. அதேசமயம் மாணவர்களுக்குச் சைக்கிள் என்கிறார். அது ஒருபுறம் சைக்கிள் முதலாளிகளின் சந்தையை விரிவுபடுத்தி மூலதனப் பெருக்கத்திற்கு வழிவகுக்கிறது. (அதில் கமிஷன் வாங்கினார்கள் என்பது போல திமுக குற்றம் சாட்டுகிறது. அதில் உண்மையில்லாமல் இருக்காது) மற்றொரு புறம், மக்களின் ஆதரவு ஜெவுக்குக் கிடைக்கிறது. மற்றொரு புறம் மாணவர்களுக்கான பஸ் பாஸ் சப்தம் இல்லாமல் காலியாகிறது. கூட்டிக் கழித்துப் பாருங்கள், வீசப்பட்ட எலும்புத் துண்டைக் கவ்விய நாயைப் போல மக்கள் தங்கள் சொந்த இரத்தத்தைச் சுவைத்துக் கொண்டிருக்கச் செய்துவிட்டு, மக்கள் வரிப்பணத்தை முதலாளிகளின் சந்தை விரிவாக்கத்திற்குச் சேவை செய்ய வைக்கும் அதே சமயம் போக்குவரத்துத்துறை செலவுக் குறைப்புக்கான புத்திசாலித்தனமான தந்திரம் இது என்பது புரியவரும்.

இது ஒரு உதாரணம் மட்டும்தான். ஜெவின் இதுபோன்ற நடவடிக்கைகள் ஒரு பக்கம் உலகமயத்தைத் தீவிரப்படுத்திக்கொண்டே மறுபுறம் மக்கள் ஆதரவையும் பெற்றுத் தருகின்றன. மேலும் அரசு செலவைக் குறைப்பதற்கான உலகப் பொருளாதாரத் திட்டத்தின் வரையறையை ஜெ ஒரு நாளும் மீறுவதில்லை. இந்தத் திறமையின் காரணமாக உலகமயத்தால் ஆதாயம் பெறும் உள்நாட்டு வெளிநாட்டு சக்திகள் (உலக முதலாளிகள், இந்தியாவை விற்கும் இந்திய பெருமுதலாளிகள் துவங்கி பெருவணிகர்கள், குலாக்குகள் வரை) ஜெவின் ஆட்சியை வரவேற்கிறார்கள். அவர் மீண்டும் ஆட்சி அமைக்கவேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள். மற்றொரு புறம், கிராமப்புற உழைப்பாளிகள் உள்ளிட்ட மக்கள் பெரிய அளவில் நடக்கும் விவகாரங்களின் பின்னணியைப் புரிந்துகொண்டவர்கள் அல்ல. ஜெவின் அள்ளிவிடும் கவர்ச்சியிலும் தேர்தல் வருவதையொட்டிய ஜெவின் பணிவிலும் அவர்கள் மயங்கியிருக்கிறார்கள். அவர்களின் எதிர்பார்ப்புகளை புரிந்துகொண்டு ஏமாற்றும் வகையில் புதிய திட்டங்களை ஜெ அள்ளிவிட்டுள்ளார்.

உதாரணமாக உழவர் பாதுகாப்புத் திட்டத்தைச் சொல்லலாம். அந்த ஏழை மக்கள் எப்போதெல்லாம் கூடுதல் பணச்சுமைகளைச் சந்திப்பார்களோ (பிறப்பு, இறப்பு, திருமணம் இன்னபிற) அப்பொழுதெல்லாம் சில ஆயிரம் ரூபாய்களை அளிக்க ஏற்பாடு செய்துள்ளார். ஆனால் அவர்களின் வறுமையைப் போக்க அடிப்படையான வேலை உத்திரவாதம், கூலி உத்திரவாதம், அவரே அறிவித்த குறைந்தபட்ச கூலி அமுலாக்கம் பற்றி பேசவே மாட்டேன் என்கிறார்.

மக்களை அரசியல் படுத்தும் முயற்சி மிகவும் குறைவாக இருப்பதால் ஜெவுக்கு ஆதரவான நிலை தமிழகத்தில் இருப்பதாகவே நான் மதிப்பிடுகிறேன். வைகோ அணி மாறியது, மதுரை ஆதீனத்தின் ராஜதந்திர முயற்சிகள் என்று நாம் பார்க்கும் அனைத்து ஜெவுக்கு ஆதரவான நடவடிக்கைகளும் உலகமயத்தினைத் திறமையாக அமுல்படுத்தும் ஜெவை மீண்டும் ஆட்சியில் அமர்த்த வேண்டும் என்ற உலகமய ஆதரவாளர்களின் முயற்சிகளின் ஓர் அங்கம் என்பதனை நாம் புரிந்துகொள்ள வேண்டும். இப்படி எஜமானர்களும் மக்களும் ஜெவுக்கு ஆதரவாக இருப்பதால்தான் கருணாநிதி அசாத்திய முயற்சிகளையும் முடிவுகளையும் எடுக்கிறார். அவர் தனது கட்சிக்கான சீட்டுகளைக் குறைத்துக் கொண்டது இந்த அச்சத்தால்தான். இரண்டு ஏக்கர் நிலம், அரிசி போன்ற அறிவிப்புகள் இந்த அச்சத்தில் இருந்துதான் பிறக்கின்றன.

அனேகமாக ஜெ ஜெயிக்கலாம் அதற்கான வாய்ப்பிருக்கிறது என்று நான் கணிப்பது ஜெ மீது உள்ள பாசத்தால் அல்ல, இருக்கும் நிலைமை மீது உள்ள கவலையால். உலகமயத்தின் இரண்டு பிரதிநிதிகள் முகவும் ஜெவும். மிகவும் திறமையான பேர்வழி என்று ஜெ இன்று பெயர் வாங்கியிருக்கிறார். அவரை ஜெயிக்க வைக்க உலகமயமாக்கலின் ஆதரவாளர்கள், அன்னிய அடிவருடிகள், உள்நாட்டு ஊழல் பெருச்சாளிகள் கடுமையாகப் பாடுபடுகிறார்கள். நாட்டை அன்னியர்களுக்கு விற்கும், உழைக்கும் மக்களை ஓட்டாண்டியாக்கும் இந்தப் போக்கை எதிர்க்கும் மக்களின் ஆங்காங்கேயான போராட்டத்தை மையம்கொண்டதாக பிரதான அரசியல் தளம் இல்லை. இந்தச்சூழலில், கருணாநிதியை ஜெவுக்கான மாற்று என்று மக்கள் ஏற்றுக்கொள்ளவும் இல்லை. விஜயகாந்த் போன்றவர்கள் ஜெவுக்கு எதிரான வாக்குகளை வாங்குவது போன்ற காரணங்களையும் நாம் சேர்த்துக்கொள்ள வேண்டும். இந்தக் காரணங்களால் ஜெ வெல்வது தவிர்க்கமுடியாத ஒன்றாக நிகழ்ந்து தீரும் என்று எனக்குத் தோன்றுகிறது.

இந்தப் போக்கை புரிந்துகொள்ளாத சிபிஐ மற்றும் சிபிஐ எம் கட்சிகள், உலகமயத்தின் மற்றொரு பிரதிநிதியான முக வைச் ஜெயிக்க வைக்க உறுதியேற்றுள்ளார்கள். சிபிஎம் கட்சியின் தமிழ் மாநில செயலாளர் கருத்தியல் ரீதியில், அமைப்பு ரீதியில், பிரச்சார ரீதியில் திமுக அணியை வெற்றிபெற வைப்போம் என்று சபதம் செய்வதை சன் டிவி காட்டியது. (இப்போது அது பேரன் டிவி என்பது வேறு கதை.) என்ன வெட்கக்கேடு போங்கள். உலகமயத்திற்கு எதிரான மக்களின் உணர்வுகளின் உண்மையான பிரதிநிதியாக இருப்பதற்கு பதிலாக முக வைத் தூக்கிநிறுத்தும் வேலையைச் செய்வதை என்னவென்று சொல்வது? இந்தத் தேர்தலில் ஜெவுக்கும் முகவுக்கும் எதிரான வாக்குகள் கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு விழ வாய்ப்பிருப்பதால் அவர்களின் சட்டமன்ற பிரதிநிதித்துவம் அதிகரிக்கக்கூட வாய்ப்பிருக்கிறது. ஆனால், அது முக ஆதரவு நிலை காரணமாக குஷ்டரோகி கையிலிருந்து பெற்ற வெண்ணெய் போல பயனற்றுப் போகும்.

உழைக்கும் மக்களின் நலனை ஆளும் வர்க்கக் கட்சிகளுக்கும் போக்குகளுக்கும் அடகு வைக்காத ஒரு இடதுசாரிக் கட்சியின் வருகைக்காகத் தமிழகம் இனியும் காத்திருக்கும். ஆனால், அந்தக் காத்திருப்பு ஆண்டு பலவாக நீளக்கூடாது என்பதுதான் எனது கவலை.

சரி. யார் மே 8 அன்று முட்டாளாகப் போகிறார்கள்? யார் ஜெயித்தாலும் அது மக்களாக இருக்காது. மாற்றத்திற்கான விதைகள் இந்தத் தேர்தலில் முளைத்தெழுவதை பார்க்கப்போகிறோம். யார் ஆட்சியை ஏற்றாலும் மக்களின் போராட்ட அலைகளில் அவர்கள் திக்குமுக்காடுவதைப் பார்க்கப்போகிறோம். எவ்வாறு என்கிறீர்களா? எழுதப்போனால் அது தனிக் கட்டுரையாக நீளும். எனவே, இப்போது இங்கே முடித்துக்கொள்கிறேன். வாய்ப்பிருக்கும்போது பார்ப்போம்.

- மதிவாணன் ([email protected])

இவரது மற்ற படைப்புகளைக் காண இங்கே அழுத்தவும்


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com