Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
KeetruLiteratureArticle
கட்டுரை

காமராஜரின் சிறப்பு எது? - எளிமையா? பெரியாரா?
வே.மதிமாறன்

... முந்தைய பகுதி

* ஒரு முறை நான் டைரக்டர் மகேந்திரன் வீட்டுக்குப் போயிருந்தப்ப, காமராஜர் பட இயக்குனர் பாலகிருஷ்ணன் அங்கே இருந்தார். அப்போ காமராஜர் படப்பிடிப்பு நடந்துக்கிட்டிருந்த நேரம். அவரை எனக்கு டைரக்டர் மகேந்திரன் அறிமுகப்படுத்தி வைத்தார். உடனே நான் பாலகிருஷ்ணன் கிட்ட கேட்டது, "பெரியாரா யார் நடிக்கிறாங்க?"

Ve.Mathimaran அதுக்கு பாலகிருஷ்ணன் சொன்னாரு, "படத்துல பெரியார் கேரக்டரே இல்ல"

நான் பதட்டமாயிட்டேன்.

"காமராஜரின் சிறப்பே பெரியாரின் பாதிப்புதான். பெரியாரின் தாக்கம் இல்லேன்னா... கிராமப்புற பள்ளிக்கூடம் வந்திருக்காது. நம்ம கல்வி இன்னும் தள்ளிப் போயிருக்கும்." என்று சொன்னேன்.

அதுக்கு பாலகிருஷ்ணன்,

"விட்டா நீங்க பெரியாரை காமராஜரை விட பெரிய தலைவர்ன்னு சொல்லுவிங்க போல." என்றார். அதுக்கு மேலே அவரிடம் விவாதிக்க விருப்பம் இல்லாமல் அமைதியாயிட்டேன். ஆனால் 'காமராஜர்' படம் வந்தபோது திரையில் பெரியார் இருந்தார் முழுக்கை சட்டை போட்டுக் கொண்டு.

* காமராஜர் - ராஜாஜியின் குலக்கல்வித் திட்டத்திற்கு எதிராகக் கொண்டுவந்த, கிராமப்புற பள்ளிக்கூடம் திட்டத்தை இருட்டடிப்பு செய்து, பார்ப்பனர்கள் திரும்பத் திரும்ப காமராஜரின் சிறப்பாக சொல்வது அவருடைய எளிமையை மட்டும்தான். காமராஜரை பார்ப்பனப் பத்திரிகைகள் புகழ்வது அவர் மேல் கொண்டு அன்பினால் அல்ல. காமராஜரை - அண்ணா, கலைஞர் போன்ற திராவிட இயக்கத் தலைவர்களை மட்டம் தட்டுதற்கான ஒரு குறியீடாகப் பயன்படுத்துவதற்காகத்தான். ஆனால் காமராஜரின் சிறப்பு பெரியாரின் ஆலோசனையோடு, அவர் ராஜாஜியை எதிர்த்து அரசியல் பண்ணியதுதான். அதை பார்ப்பனப் பத்திரிகைகள் ஒருபோதும் சொல்வதில்லை. பெரியாரையும் காமராஜரையும் இணைத்து பார்ப்பனர்கள் எப்போதும் எழுதுவதே கிடையாது. தன் கடைசிக்காலம் வரை தீவிரமாக தேசியத்தை வலியுறுத்திய காமராஜரை ஆதரிக்கிற தமிழ்த் தேசியவாதிகள்கூட, பார்ப்பனர்கள் ஆதரிக்கிற தொனியில்தான் காமராஜரை ஆதரிக்கிறார்கள்.

அதனால்தான் திராவிட இயக்க எதிர்ப்புக் குறியீடாக ஒரு பொதுக்கருத்தைப் போல, "காமராஜர் போல ஒரு முதலமைச்சரை இனி பார்க்க முடியாது" என்று சொல்கிறார்கள். காமராஜர் ஆட்சி வரமுடியாவிட்டால் கூட பரவாயில்லை. ஆனால் ஒரு போதும் ராஜாஜி ஆட்சி மட்டும் திரும்ப வந்துடக் கூடாது. போயஸ் தோட்டத்து 'பொம்பள ராஜாஜி'யையும் சேர்த்துதான் சொல்கிறேன்.

* எளிமையாகவும் நேர்மையாகவும் ஒருவர் இருந்தால் மட்டும் போதாது. அந்த எளிமையும், நேர்மையும் யார் பொருட்டு இருக்கிறது என்பதுதான் அதன் சிறப்பு. இந்தியாவிலேயே மிக எளிமையான அமைச்சராக இருந்தவர் என்று, கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த நிரூபன் சக்கரவர்த்தியை சொல்லுவார்கள். இன்றைக்கும் கூட கம்யூனிஸ்ட் தலைவர்கள் பலர் பஸ்ல போறதா சொல்றாங்க. பஸ்ல போறது பெரிய விஷயமல்ல. எங்க போறங்க அப்படிங்கறதுதான் முக்கியம். பஸ் ஏறி 'போயஸ் தோட்டத்துக்கு' போறதுனால சமூகத்துக்கு என்ன பயன்?

* ஒரு கம்யூனிஸ்ட் எளிமையாக இருப்பது அதிசயம் அல்ல. அவர் அப்படித்தான் இருக்க வேண்டும். அதை ஒரு செய்தியாக சொல்லிக் காட்டுவதுதான் ஆபாசம். ஆனால் ஒரு காங்கிரஸ்காரர் எளிமையாக இருப்பது சாதாரணமல்ல. அப்படிப் பார்த்தால் இந்தியாவிலேயே மிகவும் எளிமையான, நேர்மையான மந்திரி என்றால் அது கக்கன் அவர்களைத்தான் சொல்லமுடியும். ஆனால் அவருடைய எளிமையும், நேர்மையும் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு எந்த வகையிலும் உதவவில்லை. செத்துப்போன சங்கராச்சாரி சந்திரசேகரன், ஒரு தாழ்த்தப்பட்டவரை நேரடியாக கண்ணால் பார்க்கக் கூடாது என்பதற்காக, அமைச்சர் கக்கனுக்கும் தனக்கும் இடையில் ஒரு பசுமாட்டை நிறுத்தி வைத்துப் பார்த்தான். அப்பாவியான அமைச்சர் கக்கனின் எளிமையும், நேர்மையும் அவருடைய சுயமரியாதையைக் காப்பதற்குக் கூட பயன்படவில்லை.

* தான் கொண்ட கொள்கைக்காக தன்னையே தியாகம் செய்வது பெரிய விஷயம்தான். ஆனால் அந்த உயிர் ஆதிக்கத்திற்கு ஆதரவாகப் போகிறதா? இல்லை ஆதிக்கத்திற்கு எதிராகப் போகிறதா? என்பதின் பொருட்டே அந்தத் தியாகம் மதிக்கப்படுகிறது. கோட்சேக் கூட தான் கொண்ட கொள்கைக்காக தூக்கில் தொங்கினான். ஆனால் பகத்சிங்தான் நமக்கு மாவீரன். அவர் தியாகம்தான் நாம் பின்பற்றுவதற்குரியது.

* ஆக, காமராஜர் வெறும் எளிமையாகவும், நேர்மையாகவும் மட்டும் இருந்து, பெரியாரின் தாக்கம் இல்லாமல் இருந்திருந்தால், அவர் சத்தியமூர்த்தி என்கிற பார்ப்பனரின் சீடராக இருந்து மறைந்திருப்பார். நமது நினைவுகளிலும் இருந்திருக்க மாட்டார். அதேபோல், அண்ணா முதல்வராக இருந்தார் என்பது சிறப்பல்ல. அவர் பெரியாரோடு இருந்தார் என்பதுதான் அவருக்கான சிறப்பு. பெரியாருக்கு எதிராக தீவிரமாக இயங்கிய மிக மோசமான முதலமைச்சரான பக்தவச்சலத்தை எத்தனை பேர் ஞாபகம் வைத்திருக்கிறார்கள். காங்கிரஸ்காரர்களுக்குக்கூட அவருடைய ஞாபகம் கிடையாது.

கடைசியாக ஒன்றை சொல்லி முடிக்கிறேன். இன்றைய சூழலில் பெரியார்-அம்பேத்கரின் பாதிப்பு இல்லாமல் ஒரு முற்போக்கு இயக்கம் தமிழகத்தில், இந்தியாவில் இருக்க முடியாது. இவர்கள் இருவரையும் தவிர்த்து முற்போக்காளர்களாக தன்னை காட்டிக் கொண்டால், அவர்கள் ஏதோ ஒரு வகையில் பார்ப்பனியத்திற்கு வால் பிடிப்பவர்களாக இருப்பார்கள்.

பார்ப்பனியம் என்பது இந்து மத சடங்குகளை கடைப்பிடிப்பது மட்டுமல்ல. ஜாதிய கண்ணோட்டமும், சுயஜாதி அபிமானமும்கூட பார்ப்பனியம்தான். இந்து மதமே ஜாதியாகத்தான் இருக்கிறது. ஆக, சுயஜாதி அபிமானத்தோடோ, கிறிஸ்த்தவர், இஸ்லாமியர் என்கிற மத உணர்வோடோ - இந்து மதத்தை பார்ப்பனியத்தை எதிர்கொள்ள முடியாது. இந்த உணர்வுகள் எதிராகவே பதிவானால் கூட, அது பார்ப்பனியத்தையும், இந்து மதத்தையும் வளர்க்கவே உதவும். பார்ப்பனியத்தை, இந்து மதத்தை வீழ்ந்த வேண்டும் என்றால் அதற்கு ஒரே வழி பெரியாரின் பகுத்தறிவு பாதைதான்.

நன்றி, வணக்கம்.
- வே.மதிமாறன் ([email protected])

இவரது மற்ற படைப்புகளைக் காண இங்கே அழுத்தவும்


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com