Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
KeetruLiteratureArticle

காலச்சுவடின் ஆள்காட்டி அரசியல்: நிறப்பிரிகை

    (தமிழ் சிற்றிதழ் உலகில் இலக்கியப் ‘போலீஸாக’ செயல்பட்டுக் கொண்டிருக்கும் காலச்சுவடு இதழின் இந்துத்துவ முகத்தைத் தோலுரிக்கும் கட்டுரைகளை கீற்று இணையதளத்தில் தொடர்ந்து வெளியிட்டு வருகிறோம். அந்த வகையில் ‘நிறப்பிரிகை’ வெளியீடாக 2005ம் ஆண்டு வெளிவந்த ‘காலச்சுவடின் ஆள்காட்டி அரசியல்’ என்ற நூலின் பகுதிகளை இப்போது வெளியிடுகிறோம். மூன்றாண்டுகளுக்கு முன் வெளிவந்த இந்த நூலை இப்போது இணையத்தில் மீண்டும் வெளிவிடுவதற்கு அவசியமென்ன என்ற கேள்வி உங்களுக்குள் எழுந்தால், அந்தக் கேள்வியை எங்களிடம் கேட்பதை விட, இந்த நூலில் முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்களுக்குப் பொருத்தமாக இன்றளவும் காலச்சுவடு இதழை வைத்து விஷமத்தனம் செய்து கொண்டிருக்கும் ‘காசு’ கண்ணனிடம் கேட்பதே பொருத்தமாகும் என்பதைக் கூறிக்கொள்கிறோம் - கீற்று ஆசிரியர் குழு)

முன்னுரை

Kalachuvadu தினமலர், ஸ்ரீராம் சிட்ஸ் போன்ற நிறுவனங்களின் நிதியுதவி, உலகெங்கிலுமுள்ள ஈழத்தமிழர்களின் நூல் வேட்கை ஆகியவற்றை மூலதனமாகக் கொண்டு தமிழிலக்கியக் களத்தில் தடாலடி இலக்கிய அரசியல் செய்துவரும் ‘காலச்சுவடு’ இதழின் இன்னொரு முகத்தைத் தொடர்ந்து நாங்கள் தோலுரித்து வருகிறோம். ‘தமிழ் இனி 2000’ என்கிற பெயரில் இவர்கள் நடத்திய ‘கும்பமேளா’வின் வணிக நோக்கங்களையும் அதிகார உள்ளடக்கத்தையும், ஒற்றையாகவேனும் எதிர்த்து ஒலித்தது எங்களின் குரல். ஒற்றைக்குரலான போதிலும் மிகவிரைவில் அதன் நியாயங்களை உணர்ந்து காலச்சுவடின் இன்னொரு முகத்தைப் புரிந்த ஏராளமான குரல்கள் எங்களோடு ஒலித்தன. முழுக்க முழுக்க வணிக நோக்கம், இன்னொரு பக்கம் நவீன தமிழ் இலக்கியத்தின் ‘அத்தாரிட்டி’யாக நிறுவ முயலும் பேராசை ஆகியவற்றுடன் காலச்சுவடு செய்யும் அட்டகாசங்கள் நாளுக்கு நாள் அதிகமாகின்றன.

தமக்குப் பிடிக்காத எழுத்தாளர்களை மிக இழிவாக எழுதுவது என்பது முதல் தீவிரவாதி என்கிற ரேஞ்சில் வரையறுத்து ஆள்காட்டிக் கொடுப்பது வரை அது செய்யும் ஆபத்தான வேலைகளைத் தமிழிலக்கியச் சூழலை தொடர்ந்து கவனித்து வரும் சனநாயக சக்திகள் உணருவர். அதே சமயத்தில் அவர்களுக்கெதிராக ஒரு சிறு குரல் ஒலித்தாலும் (எ.டு: நாச்சார் மட விவகாரம்) அதற்கெதிராகத் தம்முடைய இலக்கிய அதிகாரத்தைப் பயன்படுத்தி அப்பாவித் தமிழ் எழுத்தாளர்களைத் தமக்குப் பின் அணிதிரட்டும் ஆதிக்க சக்தியாகவும் அது வளர்ந்து வருகிறது. மற்ற எழுத்தாளர்கள் குறித்துக் காலச்சுவடு செய்யும் அவதூறுகளையெல்லாம் கண்டும் காணாது போலிருக்கும் நமது எழுத்தாள சூரர்கள் நாச்சார் மட விவாகாரத்தில் கண்ணனின் பூணூலைப் பிடித்துக் கொண்டு அணி திரண்ட வேடிக்கையைப் பார்த்தோம்.

தனது இலக்கிய அதிகாரத்தைப் பயன்படுத்தியும், பதிப்பாசை காட்டியும் கிட்டத்தட்ட ஒரு பிள்ளைப்பிடிப்பவன் போல இளம் எழுத்தாளர்களைக் கவ்விக் கொள்ளும் முயற்சியையும் அது செய்து வருகிறது. ‘ஜெயகாந்தன் அப்படிப்பட்ட ஆளா? நேத்துவரை எனக்குத் தெரியாது இன்னைக்கு காலை காலச்சுவடு படிச்சிதான் தெரிந்து கொண்டேன்’ என்கிற ரீதியில் ஜொள்ளு வடிக்கும் இளம் எழுத்தாளர்கள் காலச்சுவடு வலையில் எளிதில் சிக்குவதையும் நாம் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறோம்.

ரவிக்குமார் போன்ற தலித் எழுத்தாளர்களை விலைக்கு வாங்கித் தனது எதிராளிகளை தாக்குவதற்குப் பயன்படுத்தி வந்த காலச்சுவடு இன்று அவர்களைத் தமது மறைமுக இந்துத்துவ அரசியலுக்கும் எடுபிடியாகப் பயன்படுத்தும் ஆபத்தையும் தொடங்கியுள்ளது.

இந்தியாவின் சனநாயகத்திற்கும் பன்முகத் தன்மைக்கும் மிகப் பெரிய ஆபத்தாக இன்று உருக்கொண்டுள்ள இந்துத்துவம் அரசியல் களத்தில் மட்டுமல்லாது பல்வேறு தளங்களிலும் தனது தாக்கத்தை நிறுவியுள்ளது. தமிழிக்கியக் களத்திலும் இந்த இந்துத்துவச் செயல்பாடுகள் பல்வேறு தளங்களில் வெளிப்படுகின்றன. இந்துச் சாமியார்களை அட்டையில் போட்டு கட்டுரை எழுதுவது முதல் பாபர் மசூதி இடிப்பது சரிதான் என்று அடங்கியக் குரலில் வாசிப்பது வரை இது பல்வேறு வடிவங்களில் தோற்றம் கொள்கிறது. இலக்கியத்தின் அரசியலை முற்றிலும் மறைத்துவிட்டு இலக்கிய உன்னதம் பற்றி பம்மாத்து பேசுவதும், வெளிப்படையாக மக்கள் சார்பு இலக்கியங்களைக் கிண்டலடிப்பதும், தமிழிலக்கியம் இந்து ஆன்மீக மரபில் வந்ததாகச் சவடால் அடிப்பதும், திராவிடர் இயக்கத்தையும்,பெரியாரையும் கொச்சைப்படுத்துவதும் எனப் பல எடுத்துக்காட்டுகளைச் சொல்லிக் கொண்டே போகலாம்.

தூய இலக்கியம், நடுநிலைமை என்கிற பெயருடன் உலாவரும் காலச்சுவடு இதழின் நரித்தனமான இந்துத்துவச் செயல்பாடு மிகவும் ஆபத்தான ஒன்றாக உள்ளது. தினமலர் முதலாளியின் உறவினரும் நாகர்கோயில் பார்ப்பனருமான சுந்தர ராமசாமியின் புத்திரன் கண்ணனின் காலச்சுவடு இதழ் தொடர்ந்து இந்த வேலையை மிக நுணுக்கமாகச் செய்து வந்தபோதிலும் சமீபத்திய இதழ்களில் அது அப்பட்டமாக வெளியிடப்பட்டுள்ளது. ‘கறுப்பு’, ‘சனதருமபோதினி’ ஆகிய இரு தொகுப்புகளில் ஷாஜஹான் எனும் தோழர் எழுதிய கட்டுரைகளின் அடிப்படையில் காசு கண்ணன் அவரை ஒரு தீவிரவாதியாகச் சித்தரிக்கும் வேலையைத் தொடர்ந்து செய்து வருகிறார். முஸ்லிம்களின் உயிருக்கும் உடைமைக்கும் எந்த நேரத்திலும் ஆபத்து என்கிற சூழலில் அவர்கள் எப்படித் தற்காப்புடன் வாழ வேண்டும் என்பது குறித்த சில சிந்தனைகளை மிகவும் பொறுப்புடன் அவர் முன்வைத்திருந்தது காலச்சுவடு பார்ப்பனக் கும்பலுக்குச் சகிக்கவில்லை. தற்காப்பு குறித்து முஸ்லிம்கள் கவலைப்படக் கூடாதாம். தாக்குதலைப் பணிந்து எதிர்கொள்ள வேண்டுமாம். தற்காப்பு பற்றிப் பேசினால் தீவிரவாதியாம்.

சென்னை, திருத்துறைப்பூண்டி, திண்டுக்கல், மதுரை போன்ற இடங்களுக்குச் சென்றபோது இது குறித்து சனநாயக உணர்வுள்ள எழுத்தாள நண்பர்கள் குறிப்பாக முஸ்லிம் தோழர்கள் கவலை கொண்டிருப்பதைக் காணமுடிந்தது. இதிலும்கூட முஸ்லிம் தோழர்கள்தான் அதிகம் கவலை கொண்டிருப்பதையும் இந்து மதத்தில் ஊறிய நமது எழுத்தாளர்களுக்கும், கவிஞர்களுக்கும் இது ஒரு பொருட்டாகத் தெரியாததும் வேதனைக்குரியதாக இருந்தது. மற்ற சில கூறுகளுக்காக காலச்சுவடைக் கண்டிக்கும் சிலரும்கூட இந்த விஷயத்தில் மௌனம் சாதிப்பதையும் பார்க்க முடிந்தது. இச்சுழலில் ‘சமரசம்’ இதழ் காலச்சுவடின் இந்துத்துவச் சார்பை வெளிப்படையாகத் தோலுரிக்க முன் வந்தது ஆறுதலளித்தது. இந்துத்துவத்தை எதிர்ப்பதில் தொடர்ந்து அக்கறையுடன் செயல்பட்டு வரும் மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சியின் ‘தீக்கதிர்’ இதழும் இதனைச் சுட்டிக்காட்டியது. தோழர். தய். கந்தசாமியும் தான் காலச்சுவடுக்கு எழுதிய கண்டனக் கடிதத்தின் நகலை எங்களிடம் தந்தார். சாளை பஷீர் எனும் தோழர் காலச்சுவடுக்கு எழுதிப் பிரசுரிக்க மறுக்கப்பட்ட தனது கடிதத்தை எங்களுக்கு அனுப்பினார்.

கந்தசாமி கடிதத்தை மட்டும் வெளியிட்ட காலச்சுவடு முஸ்லிம் தோழர்கள் அனுப்பிய கடிதத்தை அமுக்கியது குறிப்பிடத்தக்கது. இக்கடிதங்களையும் காலச்சுவடின் இந்துத்துவப் போக்கைக் கண்டு அதிர்ச்சியுற்றிருந்த பிற நண்பர்களின் கருத்துக்களையும் தொகுத்து வெளியிட வேண்டும் என நண்பர்கள் வற்புறுத்தினர். அதன் விளைவே இச்சிறு வெளியீடு.

அரசியல் களத்தில் இந்துத்துவத்தைக் கூர்மையாகக் கவனித்துவரும் சில நண்பர்கள்கூட காலச்சுவடு போன்ற இதழ்கள் நுணுக்கமாகச் செய்துவரும் இவ்வேலையைக் கவனிப்பது இல்லை. இதைப் பயன்படுத்திக் கொண்டு அறிவுத் தளத்தில், நடுத்தர வர்க்க மக்கள் மத்தியில் முஸ்லிம் வெறுப்பையும், முஸ்லிம் பயங்கரவாதப் பூச்சாண்டியையும் காலச்சுவடு இதழ் தொடர்ந்து கட்டமைத்து வருகிறது. பார்ப்பனர்களுக்கே உரித்தான நயவஞ்சகத்துடன் இந்தப் பணியைக் காலச்சுவடு கும்பல் நிறைவேற்றி வருகிறது. காலச்சுவடு ஆசிரியர் கண்ணன் இணையத் தளத்தில் இந்துத்துவ ஆதரவுக் கருத்துக்களையும், இஸ்லாமிய வெறுப்பையும் தொடர்ந்து செய்து வருபவர் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது. இதன் மூலம் அவர் இந்த இணையத் தளங்களின் வாசகர்களும், ஆதரவாளர்களுமான என். ஆர். அய். பார்ப்பனர்களை குஷிப்படுத்துவதையும், ஈழத்தமிழர்கள் மத்தியில் தவறான கருத்துக்களைப் பரப்புவதையும் தொடர்ந்து செய்து வருகிறார்.

நாங்கள் இரண்டு கருத்துக்களையும்தானே போட்டு வருகிறோம். ‘அவுட்லுக்’ போன்ற பத்திரிக்கைகள் இப்படிச் செய்வதில்லையா- என்பது காலச்சுவடு கும்பலின் வாதம். இதற்குத் தோதாக விடுதலை ராசேந்திரன், பேராசிரியர் ஜவாஹிருல்லாஹ் போன்ற இந்துத்துவ எதிர்ப்பாளர்களின் கட்டுரைகளையும் அவ்வப்போது காலச்சுவடு வாங்கி வெளியிட்டுக் கொள்ளும். பேரா. ஜவாஹிருல்லாஹ்வின் கட்டுரையை ஆர்.எஸ்.எஸ். குருமூர்த்தியின் கட்டுரையோடு சேர்த்து வெளியிடும். பெரியாரைத் தொடர்ந்து இழிவு செய்துகொண்டே விடுதலை ராசேந்திரனிடம் தமிழ் வழிக்கல்வி பற்றி கட்டுரை வாங்கி வெளியிடும்.

இப்படியான வேலைகளுக்கு ‘அவுட்லுக்’ போன்ற பத்திரிகைகளை உதாரணம் காட்டுவது கவனிக்கத்தக்கது. ‘அவுட்லுக்’, ‘ஃப்ரண்ட் லைன்’ போன்ற இதழ்கள் தொடர்ந்து இந்துத்துவத்தைத் தோலுரிக்கும் பணியைச் செய்து வருபவை. ஏதோ ஒரு சமயத்தில் மாற்றுக் கருத்தை வெளியிடுகின்றன. தவிரவும் ‘அவுட்லுக்’ இதழ் சமீபத்தில் இந்துத்துவச் சக்திகளிடம் சரணாகதி அடைந்திருப்பது குறிப்பிடத்தக்கது. (லிட்டில் ஆனந்துகளுக்கு ஜாலிதான்). சிற்றிதழ் பாரம்பரியத்தில் வந்ததாகச் சொல்லிக் கொள்ளும், நவீன தமிழ் இலக்கியத்தின் ‘அத்தாரிட்டி’யாகக் காட்டிக்கொள்ளும் ஒரு இதழ் ஆர்.எஸ்.எஸ். குருமூர்த்தியின் கட்டுரையை வெளியிடுவது இதுதான் முதல்முறை.

காலச்சுவடின் பார்ப்பனத் தன்மையைப் பாதிக்கப்பட்டவர்களுக்கே உரித்தான நியாயாவேசத்துடன் கண்டித்திருத்த ‘சமரசம்’ இதழ்கூட ரவிக்குமாரின் தந்திரத்தைப் புரிந்து கொள்ளவில்லை. ரவிக்குமாரின் ‘பொய் முகத்தை’ அவர்கள் அறியமாட்டார்கள். எதற்கெடுத்தாலும் அம்பேத்கரையும், அயோத்திதாசரையும் துணைக்கழைத்து எழுதும் ரவிக்குமார் மதச்சார்பின்மையை விமர்சிக்கும்போது மட்டும் அந்த இரு பார்ப்பன எதிர்ப்பாளர்களையும் புறக்கணித்துவிட்டு தர்மாகுமார், சஞ்சய் சுப்ரமணியம் போன்றவர்களைத் துணைக்கழைத்திருக்கும் ‘வஞ்சகம்’ கவனிக்கத்தக்கது. இந்நூலிலுள்ள அ.மார்க்சின் கட்டுரை இதனைத் தோலுரிக்கிறது.

எத்தகையதொரு சிறு வாய்ப்புக் கிடைத்தாலும் அதை முஸ்லிம் வெறுப்பைக் கக்குவதற்குப் பயன்படுத்திக் கொள்ளும் பணியை ரவிக்குமார் தொடர்ந்து செய்து வருகிறார். காலச்சுவடு 50வது இதழில் வெங்கடாசலபதியை அவர் நேர்காணல் செய்திருக்கிறார். (காலச்சுவடு கும்பல் ஒருவரையொருவர் பேட்டியெடுத்துக் கொள்ளும் நகைச்சுவை குறிப்பிடத்தக்கது. அடுத்த இதழில் காசு கண்ணனை கனிமொழி பேட்டி எடுக்கலாம். அதற்கடுத்த இதழில் அரவிந்தனை நஞ்சுண்டனும், நஞ்சுண்டனை எமகண்டனும் பேட்டியெடுக்கலாம்.) ரவிக்குமார் கணக்கில் வெங்கடாசலபதி historian of books (ஆனால் முனைவர் வீ.அரசுதான் வேற மாதிரியாய்ச் சொல்கிறார்). சரி, ரவிக்குமார் கேட்கும் ஒரு கேள்வியைப் பாருங்கள். “நீங்கள் ஆதாரங்களைத் தேடிப் போகிறீர்கள். உங்களுடைய சார்புக்கு குந்தகம் விளைவிக்கிற மாதிரியாக ஒரு ஆவணம் கிடைக்கிறது. உதாரணத்திற்கு எடுத்துக்கொள்வோம்: ஒரு மதசார்பற்ற வரலாற்றாசிரியர் பாபர் மசூதியைப் பற்றி ஆய்வு செய்யும்போது அது ஒரு கோயிலை இடித்துக்கட்டப்பட்ட மசூதி என்ற உண்மை அவருக்குத் தெரியும்பட்சத்தில் அவர் அதை மூடி மறைக்கிறார் என்று வைத்துக் கொள்வோம். இது ஒரு இக்கட்டான சூழலல்லவா?” ‘கேள்வியின் அடிப்படையையே என்னால் ஏற்றுக் கொள்ள முடியவில்லையே’ என்று சலபதியே எரிச்சலடைகிற அளவுக்கு ரவிக்குமாரின் கேள்வி கொடூரமானதாக உள்ளது.

இப்படி எந்தவொரு சந்தர்ப்பத்தையும் இஸ்லாமியருக்கெதிராகத் திருப்பும் இவர்களின் சாமர்த்தியத்தைத் தோலுரிக்கும் சிறு முயற்சியாக இவ்வெளியீட்டை உங்கள் முன் வைக்கிறோம். பல்வேறுபட்ட தோழர்கள் பல்வேறு நோக்கில் ஆற்றியிருக்கும் எதிர்வினைகளைத் தொகுத்துள்ளோம். அவரவர்கள் தன்னிச்சையாக வெளிபடுத்திய கோபங்கள் இவை. இவற்றின் நியாங்களைத் தோழர்கள் சீர்தூக்கிப் பார்க்க வேண்டுகிறோம். இது பாசிஸ்டுகளின் காலம். இரண்டாம் புஷ்யமித்திர சுங்கன்கள் வெற்றிகரமாக வலம்வரும் நேரம். மதச்சார்பற்ற சக்திகளும் சனநாயக உணர்வுடையோரும் இன்னும் எச்சரிக்கையாக இருக்க வேண்டிய தருணம் இது. இவர்களைத் தோலுரிப்பது என்பது மட்டுமல்ல இவர்களின் ஆள்காட்டி அரசியலை முடிவுக்கு கொண்டு வருவது எப்படி என்றும் நாம் யோசிக்க வேண்டும்.


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com