Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
KeetruLiteratureArticle
கட்டுரை

அறிவுமதி - தாய்மைத் ததும்பும் போர்க்குணம்

இசாக்


இழந்த உயிர்களோ கணக்கில்லை
இருமிச் சாவதில் சிறப்பில்லை
இன்னும் என்னடா விளையாட்டு
எதிரி நரம்பிலே கொடியேற்று.

வீரத்தைக் குண்டுகள் துளைக்காது
வீரனைச் சரித்திரம் புதைக்காது
நாட்டை நினைக்கும் நெஞ்சங்கள்
வாடகை மூச்சில் வாழாது.!
-அறிவுமதி (சிறைச்சாலைக்காக)


‘என் ஒரு கரத்தில்
புல்லாங்குழல்
ஒரு கரத்தில் போர்முரசு.’ என்று நஸ்ருல் இஸ்லாம் எழுதியுள்ள கவிதையைப் போல மென்மையும், வன்மையும் கலந்த கலவையாக அறிவுமதி இருக்கிறார். அன்புப் பொங்க ஆதரித்து இளம் படைப்பாளிகளை 73 அபிபுல்லா சாலையில் வைத்து வளர்த்தெடுக்கும் போதும், ‘கவிஞர்களே வாருங்கள் தெருவுக்கு’ என நிரந்தர மனிதர்கள் கவிதைத்தொகுப்பில் அழைப்பு விடுத்ததைப்போல தமிழினத்திற்காக களத்தில் நிற்கிற போதும் புரட்சிக்கவிஞரை நம் கண்முன் நிறுத்துகிறார் இலட்சியக் கவி அறிவுமதி.

படைப்பாளி சமூகத்தின் குரல். அவன் வாழுகிற இனத்தின் உள்ளத்தையும், உணர்வையும் உள்வாங்கி இனத்தால் பேசமுடியாத தருணங்களில் பேசவேண்டும். இனவிரோதிகள் எவ்வளவு அதிகாரம் படைத்தவர்களாக இருந்தாலும் அவர்களின் முகத்திற்கு முன்னால் தன் கருத்துகளைப் பதிவு செய்கிறவனின் குரல்கள் காலத்தின் எல்லைகளுக்கு அப்பாற்பட்டு ஒலித்துக்கொண்டே இருக்கும். அப்படி காலங்களைக் கடந்து ஒலிக்கப்போகும் குரல்தான் அறிவுமதியின் குரல். தமிழின் மீட்சிக்காக, தமிழினத்தின் உரிமைக்காக, தமிழகத்தின் விடுதலைக்காக தனது கவிதைகளையும் கருத்துகளையும் சமூக அரங்கில் ஆழமாக பதிவு செய்யும் அறிவுமதி தன்மான தமிழர்களின் அடையாளமாக உள்ளார்.

இன்று அல்ல தனது இளம் வயதிலேயே தனது கிராமத்தில், ஊர் வழமை என்கிற பெயரில் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு அநீதி இழைப்பதை எதிர்த்தவர். பெரியாரையும், அம்பேத்கரையும், மார்க்ஸ்சையும் படித்தவரென்பதால் தனக்கு தவறெனப்பட்டதை அரங்குகளில் மட்டுமல்ல, ஊடகங்களிலும் சுட்டிக்காட்ட தயங்காதவர். ஆளும் வர்க்கத்தினரின் தவறுகளையும், ஆதிக்க சமூகத்தினரின் சதிகளையும் அந்தந்த காலக்கட்டத்தில் சுட்டிக்காட்டி வருபவர் அறிவுமதி.

‘கவிஞர்கள் குடிபெயரும் பறவைகள் அல்லர். சொந்த நாடோ, ஊரோ, வீடோ, கணப்போ இல்லாத கவிதை வேர் இல்லாத மரம். கூடில்லாத பறவை.’ என்கிற ரசூல் கம்சதோவ்வின் கருத்து மக்கள் இலக்கியம் படைக்கிற எல்லோருக்குமானது. ரசூலின் வரிகளுக்கு உயிர் கொடுத்து தமிழ் மண்ணில் நடமாட விட்டிருப்பவர் அறிவுமதி. தன் தனிப்பட்ட இழப்புகள் எதுவந்தாலும் ஏற்றுக்கொள்ளும் இவர், இனமான இழப்பை எப்போதும் அனுமதிக்காதவர். அதனால் அறிவுமதி தமிழக இலக்கிய அரங்குகளில் கலகக்காரராக எப்போதும் அடையாளப்படுத்தப்படுகிறார். தவறாக புரிந்துக் கொள்ளப்படும் மிகச் சரியான தமிழர் மட்டுமல்ல மனிதர் அறிவுமதி என்பதை அவரோடு நெருங்கிப் பழகிய நல்லவர்கள் உணர்வார்கள்.

அறிவுமதி, தான் பங்கேற்கும் அரங்குகளில் இனமான உணர்வை சீண்டிப்பார்க்கும் செயல்கள் எது நடந்தாலும், எங்கு நடந்தாலும் தனது எதிர்ப்புணர்வை அங்கேயே வெளிப்படுத்த தயங்காதவர். சுபமங்களா விழா ஒன்றில் கலந்துக்கொண்டு பேசிய எழுத்தாளர் ஜெயமோகனின் மக்கள் விரோத கருத்துக்கு அந்த அரங்கிலேயே எதிர்ப்புக்குரல் எழுப்பியவர், ‘மக்கள் மன்றத்தில் பேசுகிறவன் தன் மனதளவிலும் உண்மையான மக்கள் நலப் பணியாளனாக இருக்கவேண்டும். ஆர்.எசு.எசு இயக்கத்தின் பயிற்சி பெற்றுள்ள ஜெயமோகனுக்கு அந்தத் தகுதி இல்லை’ என்றார் அறிவுமதி.

இயக்குனர் மணிவண்ணன் வைகோவுக்காக தொடங்கிய ‘நீதியின் போர்வாள்’ இதழ் வெளியீட்டு விழாவில் பேசிய பத்திரிக்கையாளர் சுதாங்கன், திராவிடம் என்னும் துருபிடித்த வாளை ஏன் இன்னும் வைத்திருக்கிறீர்கள் என்கிற பொருள்படும்படி பேசி தனது பார்ப்பனத் திமிரோடு திராவிட எதிர்ப்புணர்வை வெளிப்படுத்தினார், அங்கும் அறிவுமதி தான் முதல் மனிதராக எதிர்ப்பு குரல் எழுப்பினார். சரியான நேரத்தில் சரியாக பதிலடி கொடுத்தீர்கள் என்று அரங்கில் இருந்த தோழர்கள் ஆதரவு கருத்தை தெரிவித்தாலும் தொடர்ந்து பல அரங்குகளில் அறிவுமதி மட்டுமே குரல் எழுப்பவேண்டியது கட்டாயமாகி வருகிறது என்பது தான் தமிழகத்தின் சாபக்கேடு.

தாய்மைத் ததும்பும் பேரன்பும், போர்வீரனைப் போன்ற மனத்துணிவும் ஒருங்கே பெற்றவனால் மட்டுமே சமூக அவலங்களுக்காக வருந்தவும், காரணமானவற்றுக்கு எதிராக குரலெழுப்பவும் இயலும். அழகுகளை அணு அணுவாய் இரசிக்க முடிந்தவனுக்குள் அசிங்கங்களை நீக்கி சமூகத்தை அழகுபடுத்த வேண்டும் என்ற முனைப்பு உண்டாகும்.

நாடாளுமன்ற தாக்குதல் வழக்கில் அநியாயமாக அப்சல் குருவுக்கு வழங்கப்பட்ட சாவுத்தண்டனைக்குப்பின் தமிழகத்தில் எழுந்த சாவுத்தண்டனை பற்றிய ‘கருத்து’ அரங்கில் முஸ்லீம்கள் மீதான தங்களது காழ்ப்புணர்வுகளை கக்கிய பாரதிய சனதா கணேசன்களின் சமூக நல்லிணக்கத்திற்கு விரோதமான குரல்களுக்கும் பார்வையாளனாக இருந்த நிலையிலும் கலகக்குரல் எழுப்ப தயங்காதவர். வலிமையிழந்த சமூகங்களின் வலிகளை எல்லாம் தனது வலியாக கருதி மருந்திட துடிக்கும் தாயுள்ளம் அறிவுமதியுடையது. தமிழின எதிரிகளின் கூடாரங்களில் ஊடக வெளிச்சம் தேடிடும் விட்டில் பூச்சிகளுக்கு எப்போடும் இது தெரியவாய்ப்பில்லை.

தமிழின விரோத இதழ்களில் ஒன்றான இந்தியா டுடேவின் போக்கை சுட்டிக்காட்டும் விதமாக ‘இந்தியா டுடேயில் / தமிழச்சி மார்புகள் / கண்ணீரால் போர்த்தினேன்.’ என கடைசி மழைத்துளியில் அய்க்கூ எழுதியவர், தமிழின விடுதலை, தலித் விடுதலை, பெண்விடுதலை என இயங்கும் தனது அரசியல் கருத்தியலுக்கு எதிராக பாடல்கள் எழுத நேர்கிறது என்பதாலேயே தவறுதலாக எழுதப்பட்ட சில பாடல் வரிகளுக்கும் தனது வருத்ததைத் தெரிவித்துக் கொண்டு திரைைப்படத்திற்குப் பாடல்கள் எழுதும் பணிகளை முழுமையாக புறக்கணித்தார். பொருளாதார வளமற்ற வாழ்வு தன்னுடையது என்ற போதிலும் பல இயக்குநர்கள் கேட்டுக்கொண்ட பின்னரும் தனது முடிவில் பிடிவாதமாக இருந்தார், இருக்கிறார்.

தமிழகப் பெண்கள் ஆட்டம் பாட்டம் என மானாடி மயிலாடி தனது திறமைகளை வெளிப்படுத்திக் கொண்டிருக்கும் சூழலில் போர்க்களத்தில் புறநானூற்றுப் பெண்களாய் இராணுவத்திற்கும் சவால் விடும் ஈழத்துத் தமிழச்சிகளின் வலிகளை உணர்ந்த எந்தத் தமிழனாலும் பெண்களைப் போகப்பொருளாக சித்தரித்து பாடல்கள் எழுதிப் பணம் பார்க்க இயலாது. அறிவுமதி, ஈழத்துத் தூயத் தமிழச்சிகளின் வலிகள் சுமந்த அண்ணன்.

பார்ப்பன மயப்பட்ட ஊடகங்கள் தன்னை உயர்த்திப் பிடிக்கின்றன என்பதால் தான்தான் பெரிய மேதாவி என்னும் நினைப்பில் புறநானூற்றுக்கு உரை எழுதப் புறப்பட்ட எழுத்தாளர் சுஜாதா, முடக்கத்தான் மரமான கதையை தமிழ்ச்சமூகத்திற்கு அறிவுமதி சுட்டிக்காட்டியதோடு, சுஜாதாவோடு விவாதிக்கவும் செய்தார். பிராமணர் சங்க விழாவில் பங்கேற்று சிறப்பு பெற்ற சுஜாதாவை தனது ‘தை’யில் கிழித்தார். ‘ஒரு வேராக, கல்லறையாக, தனித்த சுரங்கப் பாதையாக, பிணங்கள் நிறைந்த நிலவறையாகத் தொடர்ந்து நான் இருக்க விரும்பவில்லை. பேசாமல் இருப்பது மனிதர்களுக்கு மரணமாகும்.’ என்ற பாப்லோ நெரூதாவின் கருத்தில் மிகுந்த நம்பிக்கையுடையவர் என்பதால் அவர் எப்போதும் தனிமனிதனாக இல்லாமல் சமூகமாக செயல்பட்டார், தமிழ்ச் சமூகத்திற்காக குரலெழுபினார்.

பல சிந்தனையாளர்களும், படைப்பாளிகளும் உருவாக காரணமாக இருந்த கலைஞர் கருணாநிதியை ‘ஒரு எழுத்தாளரே இல்லை, அவர் எழுதுவது கவிதைகளே அல்ல.’ என்று கருத்துச் சொன்ன தமிழ்விரோத எழுத்தாளர் ஜெயமோகனுக்கு முதலில் விடையளித்து தினமணியில் கடிதம் எழுதியதும் தமிழ்ச்சமூகத்தின் சார்பில் நின்று திராவிட இயக்கப்பிள்ளையாகத்தான், வேறு தனிப்பட்ட எந்த நோக்கத்திலும் அல்ல.

தமிழகத்தின் முதலமைச்சராக இளைஞரைப் போல பணியாற்றும் கலைஞரை, ‘வயதாகிவிட்டது ஓய்வெடுங்கள்’ என்று ஆலோசனைக் கட்டுரை எழுதிய பத்திரிக்கையாளர் - நரம்பே பூணூலாகிவிட்ட ஞாநியையும், அதை வெளியிட்ட இதழையும் கண்டித்து முதலில் எழுதுகோள் எடுத்தவரும் அறிவுமதிதான், ஞாநியைக் கண்டித்து நடந்த கருத்தரங்கில் கடுமையாகப் பேசியவரும் அறிவுமதிதான். கலைஞர் விருதோ, வாரியமோ தருவார் என்பதற்காக எழுந்ததல்ல அவரின் எதிர்ப்புக்குரல். கலைஞர் கொள்கை சருக்கி தி.மு.க, பாரதிய சனதாவொடு கைக்கோர்த்தபோது ‘சூரியனே உனக்கு சூடு இல்லையா’ என நந்தனில் கவிதையில் பேசியவர் என்பது வரலாறு.

நல்ல தமிழ்த் திரைப்படக் கலைஞராக வளர்ந்து வரும் தங்கர்பச்சான் திரையுலகினரால் அவமரியாதை செய்யப்பட்ட போது தனது கருத்தை நக்கீரன் மூலம் வெளிப்படுத்திய அறிவுமதி, தங்கர் தவறு செய்தபோதெல்லாம் கண்டிக்கவும் தயங்கியதில்லை. அறிவுமதியே தமிழ் ஓசை நாளிதழில் குறிப்பிட்டிருப்பது போல அவரை எந்த எல்லைக்குள்ளும் அடைக்க முடியாது. உலகத்தமிழர்களின் சார்பில் நின்று தமிழர் நலனுக்காக தொடர்ந்து குரல்கொடுப்பார். ‘சுடுகாட்டு மணலில் / இருக்கிறது / என் அறிவின் வேலி.’ என்று சொன்ன மராத்திய கவிஞர் மர்தேகர்ரின் கவிதை வரிகள் அறிவுமதிக்கு முழுமையாக பொருந்தக்கூடியது.

மேற்குறிப்பிட்ட எல்லா நிகழ்வுகளையும் போலதான் சமீபத்தில் நிகழ்ந்து முடிந்த நிகழ்வும். ஆனால் ஊடகங்கள் செய்த்தது என்ன. தமிழ்மக்களின் நம்பிக்கைகுரிய தலைவராக வளர்ந்துவரும் தொல்.திருமாவை அவமரியாதை செய்யும் வகையில் பேசுவதை நேரில் கண்டும் கண்டிக்காமல் இருப்பது வரலாற்றுப்பிழை ஆகாதா? கண்டித்தார் இதைதான்.‘அறிவு எத்தனை தான் கடிவாளம் போட்டாலும் உணர்வுப் புரவிகளை எல்லா நேரத்திலும் அடக்க முடியாது’ என்ற சிற்பியின் கருத்து குறிப்பிடுகிற்து போலும்.

இந்நிகழ்வை அநாகரீகம் எனக் கருதுபவர்கள், குஷ்புவின் வலியில் மட்டும் பங்கெடுத்துக் கொள்ள துடிப்பவர்கள் கடந்த காலங்களை மறந்தவர்கள். இவர்கள் வரலாறுகளைத் தின்று வளர்கிறவர்கள். ‘திண்ணியத்தில் மலம் திணிக்கிறபோது படைப்பாளி எதிர்வினை செய்துதான் ஆகவேண்டும். அந்தந்தக் கட்டத்தில் இயங்குவது அது. காலத்தின் குரலாக வெளிப்படுவது.’ என்று கவிஞர் தமிழச்சி கருஞ்சட்டைத் தமிழர் நேர்காணலில் சொல்லியிருக்கும் கருத்து இந்த நிகழ்விற்கும் பொருந்தும்.

குஷ்புவின் குழந்தையைக்கூட கவனிக்க முடியாமல் போன கடந்த கால ஆறாத வலியை இதழ்களில் வெளியிட்டு ஆற்றிக்கொண்டிருக்கும் இதழ்கள், அறிவின் தாய் அற்புதம் அம்மாவின் தொடரும் தவிப்பை எப்போதாவது கண்டு கொண்டதுண்டா? இது ஊடக அநாகரீகம் இல்லையா? வெளியீட்டு விழா நிகழ்வில் குஷ்பு ஒரு நடிகையாகவே பங்குபெற்ற அவரின் ‘ஆக்ஷனுக்கு’ பின்னால் தமிழின விரோதிகளின் இயக்கம் ஏன் இருக்கக்கூடாது. அது ஏற்கெனவே ஒத்திகை பார்க்கப்பட்டது போல இருந்தது என அறிவுமதி சொல்வதையும் கவனிக்க வேண்டியுள்ளது.

‘மானத்தை மறைக்க ஆடைகள் அணிந்தோம். ஆடைகளே நம்மை நிர்வாணப்படுத்தின.’ என்று கவிக்கோ எழுதியது போல அறிவுமதி யாருக்காக எழுதுகிறாரோ, பேசுகிறாரோ அவர்களே தவறாக புரிந்துக்கொள்ளூம் நிலையும் உள்ளது. எது எப்படி இருந்தாலும், எவர் என்ன நினைத்தாலும் எழுதினாலும் ‘கவிஞன் காலத்தின் குரல். ஒடுக்கப்பட்ட இனத்தின் சங்கநாதம். சமுதாய ஆன்ம சங்கீதம். மனித நேயமே உயிரும், உயிர்ப்புமாய் ஒலிக்கும்.’ என்று முனைவர் தி.லீலாவதி முட்டைவாசிகள் முன்னுரையில் சொல்லியிருப்பது போல அறிவுமதியின் குரல் தொடர்ந்து ஒலிக்கும் தமிழ்ச்சமூகத்திற்காக.

- இசாக் [email protected]

இவரது மற்ற படைப்புகளைக் காண இங்கே அழுத்தவும்


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com