Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
KeetruLiteratureArticle
கட்டுரை

சந்தானராஜ் என்னும் கலைஞன்
பவா செல்லத்துரை

பாராளுமன்ற தேர்தலன்று காலை என் பைக் விபத்துள்ளாகி கையையும், காலையும் உடைத்துக் கொண்டு பத்து பதினைந்து நாட்களாக ஒரே அறையில் அடைபட்டுகிடக்கிறேன். நண்பர்களின் வருகைகக்காக மனம் ஏங்கி தவிக்காமல் அறை முழுவதும் கொத்து கொத்தாய் நண்பர்கள் பூத்த வண்ணம் காயத்திலிருந்து வெறுமையை துடைத்து ஆறுதலை பூசிக்கொண்டிருக்கிறார்கள்.

Santhanaraj and Bava chelladurai நேற்று மதியம் என் ஆத்மார்த்த சகா ஆனந்த் ஸ்கரியா தொலைபேசியில் அழைத்து, பவா, நம் சந்தானராஜ் மறிச்சு போயிý என தழுதழுத்தார். எந்த பதட்டமுமின்றி நான் மௌனமானேன். அசைவற்று கிடந்த என்னிலிருந்து சந்தானராஜ் என்ற அந்த மகாகலைஞனை நான் அறிந்த அந்த முதல் நிமிஷத்திற்கு சில விநாடிகளில் பயணிக்க முடிந்தது. முதன் முதலில் சா. கந்தசாமி தான் எனக்கு சந்தானராஜைப் பற்றி சொன்னார்.

சந்தானராஜ் வீட்டிற்கு ஒரு நாள் காலை டிபன் சாப்பிட போயிருந்தோம். ஆவி பறக்கும் சூடான இட்டிலிகளை என் தட்டில் வைத்துவிட்டு ஓடிப்போய் பேன் ஸ்விச்சை அணைத்து விட்டு ‘இட்லி பறந்திடும்’ என எங்களைப் பார்த்து கண் சிமிட்டினார். கொஞ்சம் கொஞ்சமாய் அவரைப் பற்றிய செய்திகளையும், அவர் ஓவியங்களையும் கவனிக்க ஆரம்பித்தேன். நான் ஒரு எழுத்து சோம்பேறியாக இல்லாமல் இருந்தால் அவருடைய உடல் அடக்கத்திற்கு முன் அவருடனான எனது அனுபவங்களை தனிப்புத்தகமாக எழுதலாம். பொங்கி பொங்கி வரும் உணர்வுகளை வார்த்தைப்படுத்தும் முன் மீன்குஞ்சுகள் மாதிரி துள்ளி விடுகின்றன.

ஒரு நாள் காலை டென்மார்க்கிலிருந்து வந்திருந்த டேன் மிஷன் செகரட்ரியோடும் அவருடைய மகளோடும் சந்தானராஜை அவருடைய சென்னை வீட்டின் மூன்றாவது மாடியில் சந்தித்தோம். ஒரு காவி லுங்கி மட்டும் கட்டிக்கொண்டு சட்டை அணியாத உடலோடு ஒரு கேன்வாசில் இயங்கிக்கொண்டிருந்தார். அவரின் ஒரு திரும்பலுக்கான காத்திருப்புதான் அது எனினும் அது நிகழாமலிருக்க மனதளவில் பிராத்தித்தோம். ஒரு சிறு அசைவின் அறுதலில் அவர் எங்களோடு இருந்தார்.

நான் அவரை அறிமுகப்படுத்தினேன். கண்கள் விரிய தன் நெஞ்சோடு அவரை அணைத்துக்கொண்டு, “உன் பள்ளிக்கூடத்துலதான்யா நான் படிச்சேன். டென்மார்க்கிலிருந்து வந்து என் கல்வி கண்ணை திறந்தேயே அதுக்கு” என அவர் கையை பரிசித்து முத்தமிட்டார். உடனே தன் முன் தயாராக வைக்கப்பட்டிருந்த பாட்டிலை திறந்து விஸ்க்கியை ஊற்றி “எடுத்துக்கோ, இது என் நன்றி காணிக்கை” என்றார். தன் மீதேறியிருந்த கௌரவம் உதிர அந்த வெள்ளைக்காரன் ஒரு குழந்தை பால் குடிப்பது மாதிரி அந்த அதிகாலையில் விஸ்க்கியை அருந்திக் கொண்டிருந்தான்.

ஒரு அமானுஷ்ய கணத்தில் ஒரு அமானுஷ்ய மனுஷனோடு இருப்பதாக நான் உணர்ந்தேன். பேச்சு ஓவியம் பற்றி, கலையின் உன்னதம் பற்றி, கோடுகள் பற்றி, அதன் இட்டு நிரப்ப முடியாத இடைவெளிப்பற்றி சுழன்று சுழன்று விஸ்க்கி டம்ளருக்குள் மையமிட்டது. அவரிடமிருந்து விடைபெறும் போது அந்த வெள்ளைக்காரனின் கண்கள் அவருடைய ஒரு ஓவியத்தின் மேல் நிலைபெற்றிருந்தது. எத்தனை பணமும் தரக்கூடிய மனநிலை அவனுக்கு இருந்தது. சந்தானாராஜ், இது இந்திய ராணுவ தலைமையகத்திற்கு நான் தர ஒப்புக்கொண்டு செய்து கொண்டிருக்கும் ஒர்க். நீ எனக்கு கல்வியே தந்தவனாயினும் உனக்கு இதை தரமுடியாது. அவன் என் கைகளில் விலங்கு பூட்டி அழைத்து போவான் என பாவனையால் நடித்துக் காட்டினார்.

எனக்கு சா. கந்தசாமி சொன்ன பறக்கும் இட்லிகள் நினைவுக்கு வந்தன. அச்சந்திப்பிற்கு பிறகு அவருடனான நெருக்கம் இடைவெளியற்றது. திருவண்ணாமலையிலேயே வீடு வாங்கி தன் கேன்வாஸ்களோடு வாழ நேர்ந்த பல நாட்கள் நான் அவரோடு இருந்திருக்கிறேன் அவருடைய முதுமையின் நாட்கள் வலி நிறைந்தது. “நான் ஒரு பணப்பிசாசு” என்று தன்னைத்தானே அழைத்துக் கொண்டார் அதிகாரங்களின் மீதான மனச் சாய்வுக்கு இடம் தந்தார். ஆனால் தொடர்ந்து இயங்கிக்கொண்டேயிருந்தார். ஒரு நாள் அவருடனான மூன்று மணி நேரத்தில் ஏழு ஓவியங்களை வரைந்து முடித்தார். தன் உடல் உபாதைகளை தீயாய் எரிந்துக் கொண்டிருந்த தன் ஓவியத் தகிப்பில் பொசுக்கிவிட முயன்றார்.

சமீப நாட்களில் என்னை தொலைபேசியில் அழைத்துக்கொண்டே இருந்தார். நேரம் ஒதுக்கி அவரை சந்தித்த போதெல்லாம் மிகுந்த மன வெறுமையில்தான் திரும்பியிருக்கிறேன். தான் ஒரு திரைப்படம் எடுக்க இருப்பதாகவும், அதற்கான கதை வசனம் எழுதிக்கொண்டிருப்பதாகவும் சொல்லிக் கொண்டிருப்பார். நான் ஒரு வார பத்திரிக்கைக்கு அவரைப்பற்றி ஒரு கட்டுரை எழுதினேன். அப்பிரதியோடு அவரைச் சந்தித்து அதை படித்துக் காட்டினேன். என்னை கட்டி தழுவி, ‘என்னை நானே கண்ணாடி முன் நின்று பார்த்து பேசிக்கொள்வது மாதிரி உள்ளது’ என திரும்பத் திரும்ப சொன்னார்.

வம்சி புத்தக நிலையத்தில் சந்தானராஜ், பி. கிருஷ்ணமூர்த்தி, காயத்ரி கேம்யூஸ் ஆகியோரின் ஓவியங்களை “மூன்று ஓவியர்களும் 16 படங்களும்” என்ற தலைப்பில் காட்சிப்படுத்தினோம். ஒரு மணி நேர மேக்கப்பிற்கு பிறகு ஒரு இளைஞனான உணர்வில் எங்கள் கடைக்கு வந்தார். ரொம்ப நேரம் எங்களோடு இருந்த நாள் அது. எப்போதும் சுவாரஸ்யமான உரையாடலை தேக்கி வைத்திருந்தார். லௌகீகமான அவரின் சில அதீத அக்கறைகளை நான் புறந்தள்ளினேன். எங்கள் இருவருக்குமான நட்பு இனைக்கப்படாமலேயே விலகிக் கிடந்ததாகவே உணர்கிறேன்.

நான் அழைத்து போன சில நாண்பர்களுடனான போதையூட்டின கொண்டாட்டங்கள் அபூர்வமானவை. காயத்ரி கேம்யூஸ்ஸின் படங்களை ரொம்ப பிடித்திருப்பதாக திரும்பத் திரும்ப சொன்னார். ஏதோ ஒரு புள்ளியில் துவங்கி சுழன்று சுழன்று பயணித்து நிலை பெறாமல் காற்றில் அலையும் உரையாடல்கள் அவருடையது. மரணத்திற்கு மிக அருகில் அவருடைய படுக்கை இருந்தது. தன் மனைவி மகாலஷ்மிதான் அதை இன்னும் நெருக்கமாக்குகிறாள் என சொல்லிக் கொண்டிருந்தார். கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன் மரித்த தன் மனைவி மகாலட்சுமியின் மீது மிகுந்த காதலோடு இருந்தார். மிதமிஞ்சிய அக்காதலே ஒரு ஓவியரான மகாலஷ்மியால் திருமணத்திற்கு பிறகு ஒரு படமும் வரைய முடியாமல் போனதிற்கு காரணம்.

“குக்கூ” நடத்தின குழந்தைகள் திருவிழாவிற்கு அவரை அழைத்து டேனிஷ் மிஷன் மேல்நிலை பள்ளியில் பேச்ச்சொன்னோம். மிகுந்த உற்சாக மனநிலையில் இருந்தார். இதோ இதுதான் என் வகுப்பறை. ஏழாம் வகுப்பு படிக்கும் போது என் மீதிருந்து பீடி நாற்றம் வருவதாக (பீடி பிடித்தால் பீடி நாற்றம் வரும்தானே) என் வாத்தியர் அடித்து துரத்தினார். அதன் பிறகு எழுவது வருஷத்திற்கு அப்புறம் இப்போதுதான் இந்த ஸ்கூலுக்கு வருகிறேன். என குழந்தைகளின் குதுகலத்திற்கிடையே நீண்ட நேரம் பேசினார். அண்ணாமலையார் கோவிலுக்கு போனால் சித்த நேரம் இருந்து விட்டு போகத் தோனுதே, ஏன் சர்ச்சுக்கு போனா உடனே வீட்டுக்கு போகலாம்ணு தோணுது? கடைசி ஜெபத்திற்கு முன்னாலேயே அங்கிருந்து வந்துடறோம் என துவங்கிய அவரின் ஒரு ஞாயிற்றுக்கிழமை உரையாடல், அது அந்த கட்டிட கலை சம்மந்தப்பட்டது. கிருஸ்துவ சர்ச்சுகள் வெளிநாட்டு கட்டிட கலைகளால் ஆனாது. லௌகீக வாழ்விற்கு அது உந்தும். இந்து கோவில்கள் தமிழ் மரபு சம்மந்தப்பட்டது. அது இன்னும் கொஞ்ச நேரம் இருக்கச் சொல்லும். அதனால் இனி சர்ச்சு கட்டுகிற போது அதை மரபுப்படுத்தனும். நவீனத்திலிருந்து அதை மீட்டெடுக்கலாம் என்பது மாதிரியான தர்க்க ரீதியான உரையாடல்கள் என் வாழ்வில் மிக முக்கியமானது.

நான் சந்தித்த பல ஓவியர்கள், குறிப்பாக மருது, ஆதிமூலம், வல்சன் என்று எல்லோருக்குமே சந்தானராஜ் ஆதர்சமாக இருந்தார். அவரை நீண்ட பேட்டி எடுக்க வேண்டுமென்று நானும் சிநேகிதி திலகவதியும் எடுத்த முயற்சி, அவருடனான ஒரு நாளை படமாக்க வேண்டும் என நானும் காஞ்சனை சீனுவாசனும் எடுத்த முயற்சி, அவரை எனக்காக மட்டும் ஒரு படம் வரையச்சொல்லி வாங்கி விட வேண்டும் என நான் ரகசியமாய் நான் எடுத்த முயற்சி எல்லாமும் நொடிகளின் இடைவெளிகளில் வாழ்வை கொண்டாடிய அந்த கலைஞனிடம் தோற்றுவிட்டது.

- பவா செல்லத்துரை ([email protected])

இவரது மற்ற படைப்புகளைக் காண இங்கே அழுத்தவும்


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com