Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
KeetruLiteratureArticle
தமிழீழம் தீர்வாகுமா?

ஏ.அழகியநம்பி


இனம் மற்றும் தேசியம் குறித்த சிக்கல்கள் பெரும்பாலும் தீர்வு எல்லையை நோக்கி பயணிப்பதே இல்லை. ஏனெனில் இவ்வகைச் சிக்கல்கள் முழுவதும் உணர்வால் வழி நடத்தப்படுகின்றன. பிரச்சனையில் தொடர்புடைய ஒவ்வொரு தரப்பும் தம் பக்கமே நியாயம் இருப்பதாகக் கொள்ளும் அந்த நம்பிக்கை சிக்கலின் முடிச்சுகளை மேலும் அதிகமாக்குகிறது. இங்கு நியாயம் என்பது பொது நியதி. இதைப்புரிந்து கொள்வதே சிக்கலின் முடிச்சுகளை அவிழ்ப்பதற்கான முதற்படி.

LTTE நீண்ட இடைவெளிக்குப்பின், அனைவரையும் ஏதோ ஒரு வகையில் சிந்திக்க மற்றும் பேச வைத்திருக்கும் நிகழ்வு இலங்கை இனச்சிக்கல். பல இலட்சம் மக்களின் வாழ்வாதாரத்தைக் கேள்விக்குறியாக்கிவிட்ட இப்பிரச்சனை பல்வேறு காலகட்டங்களில், பலதரப்பட்டவர்களால், பலவிதமாக நோக்கப்பட்டுள்ளது. இன்று தமிழர்களைத் தவிர, பெரும்பான்மை இந்தியர்களுக்கு இது ஒரு பிரச்சனையே இல்லை. முன்னெப்போதையும்விட இன்று இப்பிரச்சனையில் கருத்தொற்றுமை அருகிக் காணப்படுகிறது. சிக்கலின் நியாயம் மற்றும் அநியாயம் அப்படியே இருந்தும்கூட.

தேசியம் மற்றும் தேசிய இனங்கள் குறித்தப் புரிதலோடு இலங்கை இனச்சிக்கலை அணுகுதல் நலம். இனம், மொழி மற்றும் பண்பாட்டுக் காரணிகளால் ஒன்றுபட்டு, அதுகுறித்த சிந்தையோடு தன்னை ஒரு குழுவாக உணர்வதே தேசியம் என்கின்றனர் அரசியல் அறிவியலாளர்கள். தேசியத்திற்கு அடிப்படை பரந்துபட்ட பொதுக்குழு மனப்பான்மையும் அது குறித்த சிந்தனையும் உணர்வும்தான். நாடு என்ற இயற்காரணிகூட தேவையில்லை. அவ்வகையில் எண்ணற்ற தேசிய, இனங்கள் உள்ளன. ஒரு நாட்டில் பல தேசிய இனங்களும், பல நாடுகளில் பரவியிருக்கும் ஒரு தேசிய இனமும் அவை. தேசிய இனங்களின் தலையாயப் பணி தன்னுடைய மொழி மற்றும் பண்பாட்டைக் காப்பதாகவே உள்ளது. ஒரே இனத்தைக் கொண்ட நாடுகளில்கூட உலகமயமாதலின் விளைவாக தேசியக்காரணிகளை காக்கும் முயற்சி நடக்கிறது. ஒன்றுக்கும் மேற்பட்ட தேசிய இனங்களைக் கொண்ட நாடுகள் உலகில் பல உள்ளன. காலனியாதிக்கம் மற்றும் உலகமயமாதலின் கொடை இது.

இலங்கை பாலி தொடர்புடைய சிங்கள மொழி பேசும் சிங்களர்கள் எனும் பெரும்பான்மை தேசிய இனத்தையும், தமிழ்மொழி பேசும் தமிழர்கள் மற்றும் இசுலாமியர்களைக் கொண்ட சிறுபான்மை தேசிய இனத்தையும் உள்ளடக்கிய நாடு. சிங்களர்கள் மற்றும் தமிழர்களின் ஆதி வரலாறு தெளிவற்றதாகவும், சர்ச்சைக்குரியதுமாகவே உள்ளது. ஆயினும் இரு தரப்பினரும் தங்களை தனித்த தேசியமாகவே கருதி வந்துள்ளது இடைக்கால மற்றும் அண்மைக்கால வரலாறுவழி தெளிவாகிறது. இங்கு தேசியம் என்பதை சமகால வரையரையுடன் நோக்காமல் முடியாட்சிக்காலத்தில் மக்களிடையே நிலவிய குழு உணர்வை அடிப்படையாகக் கொண்டே புரிந்துகொள்ள வேண்டும்.

இலங்கையில் வெளிப்படையான இனம்சார்ந்த சிந்தனை காலனியாதிக்கத்தோடு தொடங்குகிறது. உலகின் பிற பகுதிகளில் செய்தது போலவே பிருத்தானியர்கள் பல தேசிய இனங்களைக் கொண்ட ஒரு நிலப்பரப்பை, ஒரே அரசு நிர்வாகத்திடம் ஒப்படைத்து விட்டால் போதுமென்று வெளியேறினர்.

நீறுபூத்த நெருப்பாயிருந்த பெரும்பான்மை சிங்களர்களின் இனஉணர்வு, வெறியாய் மாற நீண்ட நாட்கள் ஆகவில்லை. பெரும்பான்மை தேசிய இனத்தவர்களான சிங்களர்களைக் கொண்ட இலங்கை அரசு, காலனியாதிக்கத்திலிருந்து விடுதலை பெற்ற 1948ம் ஆண்டே, இந்திய வம்சாவழித் தமிழர்களான மலையகத் தமிழர்களின் அடிப்படை உரிமைகளைப் பறிக்கும் குடியுரிமைச் சட்டத்தை இயற்றியது. இதை இலங்கையில் உள்ளத் தமிழர்களைப் பிரித்தாலும் சூழ்ச்சியாகவும், தமிழ்பேசுவோரின் எண்ணிக்கையைக் குறைக்கச் செய்யும் முயற்சியுமாகவே கருதவேண்டியுள்ளது.

இதைத் தொடர்ந்து நிகழ்ந்த, தமிழர்பகுதிகளில் சிங்களர்கள் குடியேற்றமும், 1956ல் பண்டாரநாயகேவால் கொண்டுவரப்பட்ட ‘சிங்களர்கள் மட்டும்’ சட்டமும் சிறுபான்மையினரை ஒடுக்குவதில் சிங்களப் பேரினவாதிகளுக்கு இருந்த முனைப்பைக் காட்டுகிறது. இந்த முனைப்பின் உச்சகட்டம் 1971ல் கொண்டு வரப்பட்ட கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் சிங்களர்களுக்கு முன்னுரிமை' குறித்த சட்டமாகும். மேற்சொன்ன தொடர் நிகழ்வுகள் இரு தேசிய இனங்களுக்கிடையே உராய்வையும் கொந்தளிப்பையும் ஏற்படுத்தின. அவை வன்முறைக்கு வித்திட்டு தேசிய சிறுபான்மையினரின் உயிர் மற்றும் உடைமைகள் தொடர்ந்து சூறையாடப்பட்டன. பேரினவாதம் சிங்கள தேசியவாத அரசியல்வாதிகளின் அறிவுக் கண்களை மறைத்தது. திருந்த முயலாதவர்களாய் அவர்கள் தொடர்ந்து இன ஒழிப்புக் கொள்கையை செயல்படுத்தத் துணிந்தனர். பல தேசிய இனங்களைக் கொண்டு உலகின் மிகச்சிறந்த ஜனநாயகமாய் விளங்கும் அண்டைநாடான இந்தியாவிடமிருந்துகூட அவர்கள் பாடம் கற்கவில்லை என்பது மேற்சொன்ன கூற்றை உறுதிப்படுத்தும்.

rajapakse_manmoha சிங்களப் பேரினவாத ஆட்சியாளர்களின் இன ஒழிப்புக் கொள்கைக்கெதிரான தமிழர்களின் உரிமைப் போராட்டம் அறவழிப்பட்டதாகவே நீண்டகாலம் இருந்தது. ‘அனைத்து இலங்கை தமிழர் காங்கிரஸ்' கட்சியால் முன்னெடுக்கப்பட்ட தமிழர்களின் உரிமைப் போராட்டம் அக்கட்சியின் தலைவர் பொன்னம்பலம் குடியுரிமைச்சட்டத்தில் எடுத்த மலையகத் தமிழர்களின் நலனிற்கு எதிரான நிலைப்பாட்டால் சற்று தடுமாற்றம் கண்டது. அக்கட்சியிலிருந்து பிரிந்த செல்வநாயகம் தமது ‘இலங்கை தமிழரசுக் கட்சி'யின் ­லம் மறுக்கப்பட்ட அடிப்படை உரிமைகளை மீட்க பலகாலம் அறவழியில் போராடினார். அப்போராட்டத்தின் வழி தமிழர்களின் குறைந்தபட்ச உரிமைகளைக் காக்க எட்டப்பட்ட பண்டாரநாயகா - செல்வநாயகம் (1957) மற்றும் சேனநாயகா - செல்வநாயகம் (1965) ஒப்பந்தங்கள் சிங்களப் பேரினவாதிகளால் காலால் மிதிக்கப்பட்டன. அமைதிக்கான இரு மகத்தான ஒப்பந்தங்கள் பெரும்பான்மை சிங்களர்களின் எதிர்ப்பு மற்றும் புத்த பிக்குகளின் எதிர்ப்பைக் காரணம் காட்டி குப்பையிலிடப்பட்டன. இங்கு நாம் கூர்ந்து நோக்கவேண்டியது பெரும்பான்மை தேசிய இனத்தின் மனம் மற்றும் அதைக்காரணங்காட்டி செயல்படும் பேரினவாத அரசியல்வாதிகளின் பாசாங்கு. பண்டாரநாயகா தொடங்கி இராஜபக்சாவரை மேற்கண்ட நிலைபாட்டில் எந்த மாற்றமும் இல்லாதவர்களாகவே உள்ளனர். தற்போதைய இலங்கை இராணுத் தளபதி பொன்சேகாவின் இனத்துவேஷம் கொண்ட பேச்சு இங்கே நினைவு கூறத்தக்கது.

இயற்கையில் மனிதன் அமைதி விழைபவன் தான். தன் உரிமை மறுக்கப்படும் அல்லது பறிக்கப்படும் நிலையிலேயே போராட்டம் குறித்த எண்ணம் உதிக்கிறது. போராட்டத்தின் தன்மை மற்றும் வீச்சு தான் வஞ்சிக்கப்படுவதாக உணர்வதின் அளவைப் பொருத்தது.

ஈழப்போராட்டத்தின் பரிணாம வளர்ச்சி இக்கூற்றை உறுதி செய்யும். அறவழியில் போராடிய செல்வநாயகம் போன்ற காந்தியவாதிகளை சிறுபான்மை தேசிய இனத்தவரின் தேசமாக தமிழ்ஈழத்தை அறிவிக்கச் செய்ததன் முழுமுதற்காரணம் சிங்களப் பேரினவாத அரசியல்வாதிகள் தொடர்ந்த வரலாற்றுத் தவறுகள் தான். முன்னுரிமையோடு நடத்தப்பட வேண்டிய சிறுபான்மை தேசிய இனத்தை திட்டமிட்டு ஒடுக்கத் துணிந்த சிங்களப் பேரினவாதமே இலங்கை இனச்சிக்கலின் நியாயம் குறித்த சிந்தனையின் முதற்கூறாகும்.

சிறுபான்மை தேசிய இனத்தின் அவாவான தனிதேசியத்தை அடைய போராளிக் குழுக்களால் முன்னெடுக்கப்பட்ட ஈழப்போராட்டம் பல இக்கட்டான கட்டங்களைக் கடந்து இன்று திக்குத் தெரியாமல் நிற்கிறது. அதற்கான அக மற்றும் புற காரணிகள் பல. போராட்டத்தின் இன்றைய நிலை குறித்து ஆராயாமல், அதன் நியாயம் குறித்தக் கருத்துக்களை முன்வைப்பதே இன்றைய தேவையாகும். உலகின் ஆகச்சிறந்த ஜனநாயகங்கள் சிறுபான்மை தேசிய இனங்களைக் காக்கவும் வளர்க்கவுமே சட்டங்கள் இயற்றியுள்ளன. இலங்கையில் மட்டுமே இன ஒழிப்பை நோக்காகக் கொண்டு சட்டங்கள் இயற்றப்பட்டன. அரசு ஆதரவுடன் சிறுபான்மை தேசிய இனத்தின்மீது வன்முறைகள் கட்டவிழ்த்து விடப்பட்டன. தங்களின் உரிமைகளை மீட்டெடுக்கவும், தற்காத்துக் கொள்ளவும் போராளிக்குழுக்களால் முன்னெடுக்கப்பட்ட ஆயுதப்போராட்டம், உலக நாடுகளால் குறிப்பாக இந்தியாவால் ஆதரிக்கப்பட்டது. அந்த ஆதரவு குறிப்பிட்ட இயக்கங்களுக்கான ஆதரவு அல்ல. துயரப்படும் மக்களுக்காகவும் அவர்கள் தரப்பில் இருந்த நியாயத்திற்குமானதாகும். 1983 இனப்படுகொலையோடு ஆரம்பித்த ஈழத்தமிழர்களின் இன்னல் கடுகளவும் தீர்ந்தபாடில்லை. இலங்கை அரசின் நிலைப்பாட்டிலும் எள்ளளவும் மாற்றமில்லை. ஆனால், இப்பிரச்சனையில் இந்தியா உள்ளிட்ட உலக நாடுகளின் பார்வை முற்றாக மாறிவிட்டது. ஒரு தேசிய இனத்தின் தன்னுரிமை மற்றும் அதன் நியாயம் குறித்த பார்வை, ஒரு குறிப்பிட்ட போராளிக் குழுவின் செயல்பாடு மற்றும் அதன் இருத்தலின் நியாயம் குறித்த பார்வையாகச் சுருங்கிப் போனது.

இனச்சிக்கலில் கறுப்புத்திங்களென அறியப்படும் ஜீலை 1983 ஈழத்தமிழர்களின் தன்னுரிமைப் போராட்டத்தின் நியாயத்தையும், அதற்கான தீர்வையும் ஒருங்கே உலகிற்கு அறிவித்த முக்கிய நிகழ்வாகும். தனக்கென நிலப்பரப்பையும், தேசியத்தையும் கொண்ட ஒரு இனம், இனிமேலும் பேரினவாத வெறியுடைய சிங்களர்களுடன் இணைந்து இருக்க முடியாதென்பதையும், தங்களின் இருப்பு தன்னைத்தானே முழுமையாய் நிர்வகிக்கும் ஒரு அமைப்பாலேயே உறுதி செய்யப்படும் என்பதையும் காரணகாரியத்துடன் உலகிற்கு உணர்த்திய நிகழ்வு அது. ஆக, சீர்தூக்கி சிந்திக்கும் ஒவ்வொருவருக்கும் ஈழத்தமிழர்கள் தங்களை தனித் தேசியமாக உணர்வதின் நியாயமும், இன்னல்களுக்கான நிரந்தரத்தீர்வு அவர்களுக்கான தனிநாடு என்பதும் ஐயம் திரிபுற விளங்கும்.

இலங்கை இனப்பிரச்சனைக்கான நிரந்தரத் தீர்வு ஈழத்தமிழர்களுக்கான தனித் தாயகம்தான். அத்தீர்வை அடையும் வழியாக பேரினவாத இலங்கை அரசால் திணிக்கப்பட்டதே ஆயுதப்போராட்டம். நிர்ணயிக்கப்பட்ட ஒரு தீர்வை அடையும் வழியும் காரணமும் பிழைகளற்றதாக இருக்க வேண்டிய கட்டாயமில்லை. அண்ணல் காந்தியால் முன்னெடுக்கப்பட்ட அஹிம்சாவழியிலான இந்திய விடுதலைப் போராட்டம்கூட பல கட்டங்களில் தடுமாற்றம் கண்டுள்ளது. காந்தியடிகளே ஒரு கட்டத்தில் ஆயுதப்போராட்டத்தின் தேவை குறித்துப் பேசியுள்ளார் என்பது வரலாற்றை அறிந்தவர்களுக்குத் தெரியும். இலக்கையடைய புற்றீசலாய்த் தோன்றிய போராளிக் குழுக்கள், முன்னிலையடைய தம்மிடையேயிடும் சண்டையை அங்கு நிலவும் சூழ்நிலையை வைத்தே பார்க்கவேண்டும். போராளிக் குழுக்களின் போராட்ட முறையையும், இலங்கை அரசு மற்றும் அரசியல்வாதிகளுக்கெதிரான அவர்களின் தாக்குதலையும் அங்கு நிலவும் அரசியல், பாதுகாப்பு மற்றும் அரசின் எதிர் நடவடிக்கைகளைக் கொண்டே ஆராய்ந்து தீர்ப்பு கூறவேண்டும்.

போராளிக் குழுக்களின் அனைத்து நடவடிக்கைகளையும் நியாயப்படுத்துவது நம் நோக்கமல்ல. மாறாக, போராளிக் குழுக்களின் தவறுகள் பூதாகரமாக்கப்பட்டு, சற்றும் தன் நிலைப்பாட்டில் மாறாத இனவெறி இலங்கை அரசின் செயல்கள் காலப்போக்கில் நியாயப்படுத்தப்பட்டுவிட்ட அநியாயநிலையையே இங்கு உற்று நோக்க வேண்டும். அண்மைக்கால சான்றாக, தமிழீழ விடுதலைப்புலிகளின் அரசியல் பிரிவு தலைவர் தமிழ்ச்செல்வன், தமிழ்ப் பாராளுமன்ற உறுப்பினர்கள் அரசியல்வாதிகள், எண்ணற்ற அப்பாவிப் பொதுமக்கள் இலங்கை அரசால் படுகொலை செய்யப்பட்டதற்கு அறிவுலகம் மௌனம் சாதித்தது மேற்கண்ட கூற்றை உறுதிப்படுத்தும்.

இலங்கை இனச்சிக்கலில், தீவிரவாதம் என்ற இந்நூற்றாண்டுச் சொல்லாடலை, ஒரு குறிப்பிட்ட இயக்கத்தின் மீது திணித்து ஒட்டுமொத்த சிறுபான்மை தேசிய இனத்தின் நியாயமான கோரிக்கையை புறந்தள்ளி கொச்சைப்படுத்தும் முயற்சியில் இலங்கைப் பேரினவாத அரசியல்வாதிகள் வெற்றிகண்டுவிட்டனர். அதற்கு, இந்தியா உட்பட பல உலகநாடுகள் துணைபோனதன் மூலம், இப்பிரச்சனைக்கான நிரந்தரத்தீர்வை தள்ளிப்போட்டுவிட்டனர் என்பதே உண்மை. தங்களின் மானமுள்ள இருப்பிற்காக போராடுபவர்கள் தீவிரவாதிகள் எனில், பிரச்சனையின் சூத்ரதாரியும், ஒட்டுமொத்தத் தவறையும் தன்பக்கம் வைத்துக் கொண்டு, தானே தேர்ந்தெடுத்த தீவிரவாதம் என்ற சொல்லாடலை ஒரு இனத்தின் மீது புகுத்தி அவர்களை இழிவுபடுத்துவதோடு அழிக்கவும் தலைப்படும் இலங்கை அரசையும், அரசியல்வாதிகளையும் எந்தச் சொல்கொண்டு அழைப்பது.

இலங்கைப் பேரினவாத அரசியல்வாதிகள் தங்கள் நிலைப்பாட்டில் தெளிவாக உள்ளனர். இலங்கையின் மொத்த நிலப்பரப்பும் தங்களுடையதென்றும், சிறுபான்மைத் தமிழர்கள் இரண்டாந்தர குடிமக்களாக நடத்தப்பட வேண்டியவர்கள் என்பதுமே அது.

முப்பது ஆண்டுகால தீராப்போராட்டத்தின் பிறகு கூட தமிழர்களுக்கான தன்னுரிமை மறுக்கும் அவர்களுடைய போக்கு இக்கூற்றை வலுப்படுத்தும். ஜெயவர்தனேயில் ஆரம்பித்து, பிரேமதாசா, சந்திரிகாகுமாரதுங்கா எனத் தொடர்ந்து இன்று மகிந்தா இராஜபக்சா வரை அவர்களின் வாக்குறுதி உதட்டளவிலேயே நின்று போனது. காரணம் அது அவர்களின் உள்ளத்திலிருந்து வரவில்லையென்பது தான். இராஜபக்சா தமிழர்களை தங்கள் சகோதரர்கள் என்றும், அவர்களுடைய உரிமை பாதுகாக்கப்படும் என்கிறார். இதைச் சொல்ல அவருக்கு பிரதமராக ஐந்து ஆண்டு காலமும், அதிபராக மூன்று ஆண்டு காலமும் பிடித்தள்ளது. தமிழீழ விடுதலைப் புலிகளுக்கெதிரான போரில் தன் கை ஓங்கியுள்ள நிலையில், இவ்வகையான திடீர்ப்பாசம் ஒட்டுமொத்த ஈழத்தமிழர்களை மட்டுமல்ல தாய்த்தமிழகத்து மக்களையும் திசைமாற்றி ஏமாற்றும் முயற்சியாகவே கருத வேண்டியுள்ளது. இனச்சிக்கலுக்கான பொதுநியதி சார்ந்த ஒரு தீர்வை, சிங்கள அரசியல்வாதிகளே விரும்பினால் கூட, பெரும்பான்மை சிங்கள மக்களும், புத்தபிக்குக்களும் அதை செயல்படுத்த விடமாட்டார்கள் என்பதே வரலாறு நமக்குரைக்கும் உண்மை.

இலங்கை இனச்சிக்கலில் இந்திய அரசியல்வாதிகளின் நிலைப்பாடு தெளிவற்றதாகவும், மக்களைக் குழப்புவதாகவுமே உள்ளது. விடுதலைபெற்று பல பத்தாண்டுகள் ஆகியும் பெரும்பான்மை மக்களை சிந்திக்க விடாமல் வைத்திருந்ததில் அவர்களுக்குக் கிடைத்த வெற்றி, அக்கரையில் வாழும் மக்களின் வாழ்வாதாரப் பிரச்சனையைக் கூட தத்தம் அரசியல் ஆதாயத்திற்குப் பயன்படுத்திக் கொள்வதில் உதவியிருக்கிறது.

வரலாறு அறியாத, சிந்திக்க மறுக்கும் சமுதாயம் எடுத்தார் கைப்பிள்ளையே. இங்கே நியாயமும், தர்மமும் சக்தி வாய்ந்த அரசியல்வாதிகளாலேயே சமைக்கப்படுகின்றன. இது புறமிருக்க, அறிவுஜீவிகளின் நிலை படுமோசம். எந்த ஒரு பிரச்சனையையும் அதன் மூலம் மற்றும் வரலாறு அறிந்து நடுவுநிலைமையோடு அணுகுவதே முறை. அதைவிடுத்து நிகழ்காலக் காரணிகளை மட்டும் கொண்டு தீர்வை முன்வைப்பது நுனிப்புல் மேய்வதற்கு ஒப்பாகும். இங்குள்ள சில அரசியல்வாதிகள் மற்றும் அறிவுஜீவிகளின் திரிபுவாதத்தில் முதன்மையானது ஈழத்தமிழர்களுக்கான தனித்தாயகம் இந்திய இறையாண்மைக்கு குந்தகமாகும் என்பதாகும். இந்தியாவின் இறையாண்மை அதன் தலைசிறந்த அரசமைப்புச் சட்டத்திலும், சகிப்புத்தன்மையிலும் உள்ளதேயன்றி அண்டை நாட்டின் நட்பைச் சார்ந்து இல்லை என்பது சிந்திப்பவர்களுக்குத் தெரியும். மற்றொரு அபத்தம் ஈழப்பிரச்சனையை காஷ்மீரோடு ஒப்பிடுவது. இவ்வகை ஒப்பீடு இலங்கையை இந்தியாவோடு ஒப்பிடுவதற்குச் சமம். சகமாநிலங்களுக்கு இல்லாத சிறப்புச் சலுகைகளை அரசியலமைப்புச் சட்டப்பிரிவு 370 மூலம் காஷ்மீருக்குக் கொடுத்து அழகு பார்க்கும் இந்தியா எங்கே? அடிப்படை உரிமைகளைக்கூட தொடர்ந்து சட்டமியற்றிப் பறிக்கும் இலங்கை இனவாத அரசு எங்கே? காஷ்மீரோடு ஈழப்பிரச்சனையை ஒப்பிடுவது தமிழ்மக்களின் நியாயமான கோரிக்கைகளை இருட்டிப்புச் செய்யும் பல வழிகளில் ஒன்றாகும்.

எந்த ஒரு சிக்கலுக்கும் தீர்வு உண்டு. அந்தத் தீர்விற்கான விலையும் உண்டு. இலங்கை இனச்சிக்கலில் நிரந்தரத்தீர்வு தமிழர்களுக்கான தனித்தாயகம்தான். அதற்கான விலை ஏற்கனவே கொடுக்கப்பட்டுவிட்டது. 1956ல் தொடங்கி எத்தனை உயிர்த்தியாகங்கள், எவ்வளவு பொருட்சேதம், இடம்பெயர்வு அது சார்ந்த சோகங்கள். இவ்வளவு இழந்தும் ஒரு இனத்திற்கு தன்மொழி, பண்பாட்டைக் காக்கும்பொருட்டு தன்னைத்தானே நிர்வகிக்க உரிமையில்லையா? என்பதே நம்முன் உள்ள கேள்வி

நாற்பது ஆண்டுகளுக்கு முன் ஒரு ஒப்பந்தத்தைச் செயல்படுத்தியிருந்தால் கிடைத்திருக்கக்கூடிய உரிமைகளை ஒட்டுமொத்த தமிழினத்தையே உருக்குலையச் செய்துவிட்டு, நிராயுதபாணியாக்கி பிச்சைபோட உத்தேசிக்கும் சிங்களப் பேரினவாதத்தின் நரிந்தந்திரத்திற்கு அப்பாவித் தமிழினம் பலியாகி விட்டது என்பதை காரண காரியத்தோடு வரலாறு கொண்டு நோக்காத மேம்போக்குச் சிந்தனைவாதம் இனச்சிக்கலில் தமிழர்பக்க இருந்த நியாயத்தை, ஒரு போராளிக் குழுவின் செயல்பாட்டைத் திறனாய்வதில் மறைந்து அம்மக்களையே குற்றவாளிக் கூண்டில் ஏற்றிவிட்டது.

விடுதலைப் புலிகளை அழிப்பதிலேயே இனப்பிரச்சனையின் தீர்வு இருப்பதாக பலர் நம்புகின்றனர். நிரந்தரத் தீர்வுக்காகப் போராடும் ஒரு இயக்கத்தின் அழிவு அல்லது பின்னடைவு சிக்கலை அதன் தொடக்கப்புள்ளிக்கே இட்டுச் செல்வதன் மூலம் மக்களின் இன்னலையும் சிக்கலின் முடிச்சுக்களையும் மேலும் அதிகமாக்குமே தவிர தீர்க்க உதவாது. இப்பிரச்சனையில் எதிர்வினையாற்றும் அறிவுலகமும், அரசியல்வாதிகளும் சமன் செய்து சீர்தூக்கும் கோலாய் அமைந்து சிந்திக்க வேண்டிய தருணம் இது.

- ஏ.அழகியநம்பி([email protected])


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com