Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
KeetruLiteratureArticle
கட்டுரை

ஆடாத ஆட்டமெல்லாம்...

அமெரிக்கப் பொருளாதாரச் சரிவும்... அதிபர் பதவியின் இறுதி நாட்களும்...

எஸ். அர்ஷியா

எழவு வீட்டில் கூட மாப்பிள்ளை தோரணைக் காட்டும் அமெரிக்காவின் உச்சந்தலையில், இடி விழுந்திருக்கிறது. அந்நாடு எழுப்பியிருந்த பிரம்மாண்டமான பொருளாதாரக் கோபுரத்தின் அஸ்திவாரக்கற்கள், பூமித்தட்டுகளைப் போல நழுவிவிட்டன. நாட்டின் பொருளாதார வளமைக்கும் பெருமைக்கும் காரணமாயிருந்த வங்கிகளும், நிதி நிறுவனங்களும் ஒன்றன்பின் ஒன்றாய் சரிந்து விழுகின்றன. திக்குத் தெரியாதக் காட்டில் சிக்கிக்கொண்டு அமெரிக்கா அல்லாடுகிறது.

Bush வளரும் நாடுகளை தனது விரல்களின் லயத்துக்கு ஏற்ப ஆடும் பொம்மைகளாக மாற்றிய புஷ், வளர்ந்த நாடுகளுக்கு சிம்மசொப்பனமாகத் திகழ்ந்த புஷ், தனது எண்ணத்துக்குப் புறம்பாக நடந்துகொள்ளும் நாடுகளை, பொ¢ய அண்ணனின் ஸ்தானத்திலிருந்து ராணுவத்தை அனுப்பி அடக்கி ஒடுக்கிவிடும் புஷ், சுழன்றடிக்கும் சூறாவளிக் காற்றில் சிக்கிய முருங்கை மரமாக ஆகிப் போயிருக்கிறார்.

அதிபர் பதவிக்காலம் முடிய சொற்ப நாட்களே உள்ள நிலையில் அமெரிக்காவில் ஏற்பட்டிருக்கும் இந்தப் பொருளாதாரச் சரிவு, அவரது புகழையும் ஆட்சியில் நடந்துள்ள சீரழிவுகளையும் ஒன்றாய்ச் சேர்த்து ஆணி அடித்திருக்கிறது.

ஈராக் மீது படையெடுத்ததற்குக் கண்டனம் தெரிவித்து, உலக நாடுகள் ஒட்டுமொத்தமாய் குரல் கொடுத்தபோது, காதில் வாங்கிக்கொள்ளக்கூட அவகாசம் இல்லாதவர் போல புன்னகைத்துக் கொண்ட அவர், அதைக் கொண்டாட ஆளரவமற்றக் கடற்கரைக்குச் சென்று, அங்கு தன் மனைவியின் பின்புறத்தைத் தடவியபடி நடந்து செல்லும் புகைப்படங்களை வெளியிட வைத்து, தான் ஓய்வில் இருப்பதை பெருமையான செய்தியாக்கிக் கொண்டார்.

நாகா£கத்தின் தொட்டிலான ஈராக்கை வேரோடும் வேரடி மண்ணோடும் சாய்த்து, அதன் தலைவனைக் குற்றவாளியாக்கி, தூக்குக்கயிற்றுக்குக் காவுகொடுத்த பின்பு, சாவகாசமாய்... மிகச் சாவகாசமாய்... 2007 செப்டம்பர் 13 ம் தேதி, 'ஈராக் மீது படையெடுத்தது சரியா?' என்று அமெரிக்கத் தொலைக்காட்சியில் தன்னிலை விளக்கம் வேறு கொடுத்தார். யார் கேட்டது, அந்த விளக்கத்தை?

ஆனால் இன்று?

தன் நாட்டின் பொருளாதாரம் சரிகிறது என்றதும், அவசர அவசரமாக அங்கும் இங்குமாய் ஓடுகிறார். ஆதரவு கேட்டு அலைபாய்கிறார். திறக்காதக் கதவுகளைத் திறந்துவைத்து, வெள்ளை மாளிகையில் அவசரக் கூட்டத்தைக் கூட்டுகிறார். உலகின் மிகப்பொ¢ய வல்லரசு நாட்டின் அதிபராகத் தன்னை பிம்பப்படுத்திக் கொண்ட அவர், அமெரிக்கக் காங்கிரஸ் உறுப்பினர்களுடன் பேச்சு வார்த்தை நடத்த, நிதித்துறைச் செயலாளர் ஹென்றி பால்சன் ஜூனியரை அனுப்பி வைக்கிறார்.

அவரது முயற்சி தோல்வியடைகிறது!

பரமபத விளையாட்டில் பாம்புக் கொத்தலுக்கு உள்ளானக் காயைப்போல, தலைகீழாகப் புரட்டப்பட்டு ஆரம்ப இடத்துக்கே வந்துநிற்கும் புஷ், தொலைக்காட்சியில் தோன்றி, அந்நாட்டு மக்களுக்கு அவசரச் செய்தி சொல்கிறார். 'வீழ்ந்து வரும் அமெரிக்கப் பொருளாதாரத்தைக் காப்பாற்ற கடும் நடவடிக்கை எடுக்க வேண்டியுள்ளது. இல்லையென்றால் நாடு பெரும் ஆபத்தைச் சந்திக்க வேண்டியிருக்கும். அதனைத் தடுத்து நிறுத்த வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். சில நிறுவனங்கள், வங்கிகள் எடுத்தத் தவறான முடிவுகள், இந்த இக்கட்டான சூழலை நாட்டுக்கு உருவாக்கிவிட்டன. அமெரிக்கப் பங்குச்சந்தை சரியான முறையில் செயல்படவில்லை. இந்நிலை நீடித்தால், நாட்டில் பலரும் வேலை இழக்க வேண்டிவரும். ஆகவே நிலைமையைச் சமாளிக்க 70 ஆயிரம் கோடி டாலர்களை பெடரல் வங்கி உடனடியாக வழங்குவதற்கு, அனைத்துக் கட்சிகளும் ஆதரவு தரவேண்டும்' என்று கேட்டுக் கொள்கிறார்.

மற்ற நாடுகளின் பொருளாதாரத்தை இஷ்டத்துக்கு சீர்குலைவு செய்யும் அதிகாரம் பெற்றவராக நடந்து கொண்ட புஷ்ஷின் வேண்டுகோளுக்கு, அவர் சார்ந்த கட்சியின் உறுப்பினர்களே எதிர்ப்பு தெரிவித்தது, அவரது கரங்கள் வலுவிழந்து விட்டதைத்தான் காட்டுகிறது.

தனது பதவியின் இறுதிக்காலத்தில் இப்படியாகிவிட்டதே எனும் குற்றவுணர்வுடன், மீண்டும் மீண்டும் விக்ரமாதித்திய முயற்சிகளில் இறங்கி, வரும் தேர்தலின் அதிபர் வேட்பாளர்களான ஜான் மெக்கெய்னையும், பாரக் ஒபாமாவையும் ஆதரவு தரும்படி கேட்டுக்கொண்டது, நிலைமையின் விபா£தத்தை நாட்டுக்கு மற்றுமின்றி உலகுக்கும் உணர்த்தியது.

உள்ளே கிழிந்த சட்டையும் வெளியே பகட்டானக் கோட்டு அணிவதுமான பம்மாத்துடன் நடந்து கொள்ளும் அமெரிக்காவின் பொருளாதாரம், பிற நாடுகளின் மீது அது செலுத்திவரும் பன்முக ஆளுமையின் மூலமும், அந்நாட்டு வங்கிகளும், நிதி நிறுவனங்களும் காட்டும் நிதிநிலை அறிக்கைகளின் மூலமுமே கட்டமைக்கப்படுகிறது.

ஒருபக்கம் ஆட்சி செய்பவர்கள் அணுஆயுதம், அன்னியநாடுகளின் மீது அத்துமீறிய தலையீடு, பிற நாடுகளில் தன் நாட்டிற்கான தொழில் வளத்தை உருவாக்குதல் என்று செயல்பட்டுக் கொண்டிருக்க... மறுபக்கம் அமெரிக்க வங்கிகளும், நிதி நிறுவனங்களும் வளர்ந்து வரும் நாடுகளில் தொழில் முதலீடு செய்து, அந்தந்த நாடுகளின் வளத்தை, டாலர்களாக அறுவடை செய்து வருகின்றன.

இந்தத்தொழிலை அந்நாட்டு வங்கிகளும், நிதி நிறுவனங்களும் கி.பி.பதினெட்டாம் நூற்றாண்டிலேயே துவங்கிவிட்டன. அவற்றின் நோக்கம், லாபம். அதிக லாபம். கூடுதல் லாபம், இன்னும் லாபம், மேலும் லாபம் என்பதேயன்றி வேறொன்றுமில்லை. அதன் மறுபெயராக, பேராசை என்றும் வைத்துக் கொள்ளலாம்.

அப்படி158 ஆண்டுகளுக்கு முன்பு துவக்கப்பட்ட ஒரு நிதி நிறுவனம் தான், அமெரிக்கப் பொருளாதாரத்தின் இன்றைய நிஜ முகத்தை வெளி உலகுக்குக் கொண்டுவந்து, 'மஞ்சக் கடுதாசி' கொடுத்திருக்கும் லேமேன் பிரதர்ஸ்!

உலகம் முழுவதும் சுற்றுப்புறச் சூழலுக்கும் சமூக மேம்பாட்டுக்குமான தீர்வு வழங்குவதை நிறுவனத்தின் இலட்சியமாக அறிமுகப்படுத்திக் கொண்ட லேமேன் பிரதர்ஸ், ஒரு முதலீ£ட்டு நிதி நிறுவனமாகச் செயல்பட்டு, தனது பங்குதாரர்களுக்குக் கூடுதல்தொகையைத் திரும்ப வழங்கும் என்று அறிவித்திருக்கிறது. ஆனால் அது, தனது பங்குக்கு முதலீடாக வெறுங்கைகளை மட்டும் நீட்டி, அறிவு மூலதனம் (intellectual capital)என்றே களமிறங்கியிருக்கிறது. அதாவது, துவங்கப்பட்டபோது அது முதலீடாய்ப் போட்டது, தன் அறிவை மட்டும் தான்!

நிறுவனத்தைத் துவங்கிய லேமேன் ஹென்றியும் பின்பு அவருடன் சேர்ந்து கொண்ட இமானுவேல், மேயர் ஆகிய இரு பிரதர்ஸ்களும் கூட்டாக, 'லேமேன் பிரதர்ஸ்' என்று சூட்டிக்கொண்ட புதிய நாம கரணத்துக்கு மூவா¢ன் ஆர்வமும் உழைப்பும் கை கொடுத்தது. அப்போது அவர்கள் செய்துவந்தது, பருத்தி வியாபாரம். கூடவே, விவசாயிகளுக்கும் கொள்முதல் செய்வோருக்கும் இடையிலான புரோக்கர் தொழில்!

அந்தத்தொழில், நல்ல லாபத்தைத் தந்து கொண்டிருந்தாலும் அவர்கள் நினைத்ததுபோல பருத்தி, புடவையாகக் காய்த்துத் தள்ளவில்லை. பருத்தியுடன் வேறு தொழிலையும் செய்யலாம் என்று அவர்கள் பலவாறு யோசித்த போது, தொழிற்சாலைகள் தொடர்பான புரோக்கர் தொழில் அவர்களை ஈர்த்திருக்கிறது. ஆழம்குறித்தக் கவலையில்லாமல் காலை வைத்திருக்கிறார்கள். அதுவே, நாட்டின் பொருளாதா ரத்தை நிர்ணயிக்கும் முக்கிய நிறுவனத்தைச் சேர்ந்தவர்களாக்கி, உப்பு... மிளகாயிலிருந்து... இன்றைய தொழில் பூங்காவரை அறிவு ஆலோசகர்களாய் அவர்களைக் கொண்டு சேர்த்திருக்கிறது.

'மிக உயர்வானது அமெரிக்க வாழ்க்கை!' என்ற பிம்பத்தை ஏற்படுத்துவது, அந்நாட்டு மக்களின் நுனிப்புல் வாழ்க்கைதான். ஐந்துநாட்கள் உழைப்பு. வார இறுதிநாட்களில் கொண்டாட்டம் என்று சொல்வதெல்லாம், வெறுமனே ஜபர்தஸ்துப் பேச்சு! அம்மக்களில் பெரும்பகுதியினர் சோம்பேறிகள். ஓட்டைக் கைக்காரர்கள். வருமானத்தைவிட அதிகமாகச் செலவு செய்வதில் ஆர்வம் உள்ளவர்கள். அதற்காகக் கடன் வாங்குவதற்கு கூசாமல் கையை நீட்டுபவர்கள். சேமிப்பு என்பதை, அவர்கள் கற்காலத்து மனிதர்களை போல அறிந்திருக்கவில்லை!

பிற நாடுகளுக்கு, அமெரிக்க மக்களின் பிம்பத்தில் கவனம் பதிய வேண்டும் என்பதற்காகவும், 'நாங்கள், எங்கள் நாட்டு மக்களின் வாழ்க்கைத் தரத்தை எப்படி உயர்த்தியிருக்கிறோம் பாருங்கள்' என்று காட்டிக் கொள்வதற்காகவும் அந்நாட்டு வங்கிகள், கடன் தொகையை அள்ளி அள்ளிக் கொடுத்திருக்கின்றன. அதற்கான வருமானம், இந்தியா உள்ளிட்ட அந்நிய நாடுகளின் வளத்தை, டாலர்களாக அவர்கள் அறுவடை செய்து கொண்டு வந்தது தான் என்பதை இங்கே மறக்காமல் குறிப்பிட்டாக வேண்டும்.

பிரதர்ஸ்களின் பக்கம் அதிர்ஷ்டம், சூறைக்காற்றாய் வீசத்துவங்கியது, அந்நாட்டு மக்களுக்கு சொந்தமாக வீடு கட்டிக்கொள்ளும் மோகம் வந்தபோது தான். கட்டுவதற்குக் காசு? இருக்கவே இருக்கின்றனவே வங்கிகள். பிறகென்ன?

ஆனால் நம் நாட்டில் வீடுகள் கட்டுவதற்கு வங்கிகள் கொடுக்கும் 'சப் - பிரைம்' எனும் சாதாரணக் கடனை, அந்நாட்டில் எல்லா வங்கிகளுமே கொடுப்பதில்லை. அந்த வேலையை மார்ட்கேஜ் நிதி நிறுவனங்கள்தான் மேற்கொள்ளும். அப்படி ஒருசேவையையும் லேமேன் பிரதர்ஸ் நிதி நிறுவனம் செய்து வந்தது. வீட்டுக் கடன்களுக்கு வங்கிகளில் தொழில் முதலீடு செய்தும், வாடிக்கையாளர்களுக்கு நேரடியாகக் கடன் கொடுத்தும் ஜமாய்த்தது. இதனால் அதிக வட்டி வாடிக்கையாளர்களிடமிருந்து அதற்குக் கிடைத்து வந்தது.

இதையடுத்து, கைக் கொள்ளாத அதன் கையிருப்பைக்கொண்டு லேமேன்ஸ் பிரதர்ஸ் நிதி நிறுவனம், ஐரோப்பாவிலும், ஆசியாவிலும் தனது கால்களை ஆழமாகவும் அகலமாகவும் பதித்தது. தென் ஆப்பிரிக்காவையும் லத்தீன் அமெரிக்காவையும் அந்நிறுவனம் விட்டு வைக்கவில்லை. ஆசியாவில், லேமேன் பிரதர்ஸ் ஆசியா லிமிடெட், லேமேன் பிரதர்ஸ் செக்யூரிட்டீஸ் ஆசியா லிமிடெட், லேமேன் பிரதர்ஸ் பியூச்சர்ஸ் ஆசியா லிமிடெட் என்று தனது கிளைகளை கண்காணா இடங்களுக்கும் விரித்துக் கொண்டே போனது.

இந்தத் துணைநிறுவனங்கள், அந்தந்தப் பகுதியில் செயல்பட்டு வரும் உள்நாட்டு முதன்மை நிறுவனங்களுடன் கூட்டுசேர்ந்து, தொழில் முதலீடு செய்தும், கடன் பத்திரங்கள் வழங்கியும் கித்தாய்ப்பாய் வருமானத்தைப் பெருக்கிக் கொண்டன.

நியூயார்க் நகர வால் ஸ்ட்¡£ட்டின் ஒரு நவீனக் கட்டிடத்தில் உட்கார்ந்து கொண்டு, தென்னிந்தியாவின் வரைபடத்தில் ஒருபுள்ளியில் ஆயிரத்தில் ஒருபகுதியாகச் சிந்தியிருக்கும் சிந்தாமணி கிராமத்தின் ஊடே ஓடும் சுற்றுச்சாலையை ஒட்டி, தொழில்பூங்கா வரும் என்று கணித்து, அந்த இடத்தை வளைக்கும் சாதுரியம் அந்நிறுவனத்துக்கு இருந்தது. அதன் துணைநிறுவனங்களான யூனிடெக், டி.எல்.எப்., மாதிரியான இந்திய ரியல் எஸ்டேட் நிறுவனங்கள் ஓடியோடி உழைத்தன. இந்தியாவில் குட்டிகுட்டி நகரங்களில் கூட, லேமேன் பிரதர்ஸ் நிறுவனத்தில் சம்பளம் வாங்கும் ஆட்கள் இருக்கிறார்கள்.

இந்தியாவின் இரண்டாவது மிகப்பொ¢ய வங்கியான ஐசிஐசிஐ லிமிடெட்.,(The Industrial Credit and Investment Corporation of India Limited) லேமேன் பிரதர்ஸ் நிதி நிறுவனத்தின் பங்குகளில், லண்டன் நிறுவனத்தின் மூலமாக (57 million Euro) அதாவது ரூ 375 கோடியை முதலீடு செய்திருந்தது. இந்தப்பணம் முழுவதும் அமெரிக்க மக்களுக்கு வீடுகட்டும் கடன் ஆறுகளாக அமேசான் - மிசிசிபி - முசெளா¢ - ரெட்ராக்கைக் காட்டிலும் நுங்கும் நுரையுமாகக் கரைபுரண்டு ஓடியது. இதையடுத்து லேமேன் பிரதர்ஸ் நிறுவனம், அமெரிக்காவின் நான்காவது பொ¢ய நிதி நிறுவனமாகத் தன்னை அவதானித்துக் கொண்டது.

US economy பிச்சைக்காரனுக்கு பக்கத்துத் தட்டின் மீதே கண் என்பது முதுமொழி. அந்நாட்டில் செயல்பட்டு வந்த முதன்மை இன்சூரன்ஸ் நிறுவனமான அமெரிக்கன் இண்டர்நேஷனல் குரூப் நிறுவனம், லேமேன் பிரதர்ஸ் நிதி நிறுவனம் போலவே தனது காலை அகலமாக உலகமெங்கும் 130 நாடுகளில் வைத்தது. இந்தியாவில் இந்நிறுவனம், டாடா - ஏஐஜி என்ற பெயா¢ல் இந்தியாவின் முதன்மை நிறுவனமான டாடாவுடன் கூட்டுசேர்ந்து, இந்திய மக்களின் எதிர்காலத்தை அள்ளிக்கொண்டு போகிறது. 'உங்கள் பெற்றோருக்கு நீங்கள் காட்டும் அன்பை உணரச் செய்யுங்கள்!' என்று விளம்பரம் வேறு செய்து வருகிறது.

இந்த இரண்டு நிறுவனங்களுடன் மெரில் லிஞ்ச் எனும் வங்கியும் சேர்ந்து, கடந்த செப்டம்பர் 15 ம் தேதி தங்களின் இயலாமையை உலக நாடுகளுக்கு(?) அறிவித்தன. மேலும் நூறாண்டு அனுபவமுள்ள வாஷிங்டன் மியூச்சுவல், அமெரிக்காவின் ஆறாவது பொ¢ய வங்கியான வாக்கோவியாவும் கைகளை மேலே தூக்கிவிட்டன.

இதில், 'நான் அம்பேல்!' என்று மஞ்சக் கடுதாசி கொடுத்துள்ள லேமேன் பிரதர்ஸ் நிதி நிறுவனத்துக்கு, உலகம் முழுவதும் 63 ஆயிரத்து 900 கோடி டாலருக்கு சொத்துகள் இருக்கின்றன. அதேவேளையில் கடன் 61 ஆயிரத்து 300 கோடி டாலருக்கும் அதிகமாக கடன் உள்ளதாக அந்நிறுவன அறிக்கை, தலையில் போடும் துண்டை கையில் வைத்துக்கொண்டு கூறிவிட்டது. இன்று, இந்த நிறுவனத்தைச் சீந்துவார் யாருமில்லை!

இதற்கு முன்பு, ஜே.பி.மோர்கன் எனும் அமெரிக்காவின் மிகப்பொ¢ய நிதி நிறுவனம், லேமேன் பிரதர்ஸ் நிதி நிறுவனத்தை வாங்கிக் கொள்வதாகச் சொல்லி, பின்பு அடிமாட்டு விலைக்கு பங்குகளைக் கேட்டு விலகிக் கொண்டது, உள்நாட்டு அரசியல் தனிக்கதை!

இன்னொரு நிறுவனமான மெரில் லிஞ்சின் சொத்துக்களை மட்டும் பேங்க் ஆப் அமெரிக்கா 5 ஆயிரம் கோடி டாலர் கொடுத்து வாங்கிக்கொள்ள முன் வந்திருக்கிறது. அதில் பங்குகளை வாங்கியவர்களின் கதை, இனி காலக்கிரமத்தில் தான் தெரியவரும்.

இந்நிலையில் தான், உலகமெல்லாம் செயல்பட்டுவரும் முதன்மை இன்சூரன்ஸ் நிறுவனமான அமெரிக்கன் இண்டர்நேஷனல் குரூப் நிறுவனத்தின் திவால் சரிவை மட்டும் காப்பாற்ற, தலையால் தண்ணீர் குடித்து வருகிறார், புஷ்!

ஏனென்றால் இந்நிறுவனம், மற்ற நிறுவனங்களைப் போல்லாமல் காப்பீடு தொடர்பான சேவையை(?) செய்துவருகிறது. இது சிக்கல் நிறைந்த விஷயம். இதில் சொன்னதுபோல் நடந்து கொள்ளாவிட்டால், நிறுவனத்தின் பெயரைக்காட்டிலும் நாட்டின் பெயர்தான் அதிக சேதத்துக்கு உள்ளாகும். இதில் அமெரிக்க நாட்டின் கெளரவமும், அரசின் கெளரவமும் அடங்கியிருக்கிறது. இந்த நிறுவனத்தைக் காப்பாற்ற மட்டும் 8 ஆயிரத்து 500 கோடி டாலர் தேவையாக உள்ளது.

வளரும் நாடுகள், 'தங்கள் விவசாயிகளுக்குத் தரும் மானியத்தை நிறுத்தவேண்டும்' என்று கடுமையாகக் கட்டுப்படுத்திவரும் புஷ், இப்போது உள்நாட்டின் பொருளாதாரச் சரிவிலிருந்து நாட்டைக் காப்பாற்ற உதவிகேட்டு அபயக்குரல் எழுப்பியிருப்பது, புதிய முரணாகப்படுகிறது. இந்நிகழ்ச்சி உலக நாடுகளால் கூர்ந்து கவனிக்கப்படும் ஒன்றாகவும் இருக்கிறது. அதுபோல, 'எல்லாமே தனியார் மயமாக வேண்டும்' என்று துந்தபி முழக்கம்போல் ஊதித்திரிந்த அமெரிக்காவின் நிதிநிறுவன அரசுடமையும் கேள்விக்குறியாகியுள்ளது.

அமெரிக்கக் காங்கிரஸில் முதல் முறையாகத் தோல்வியடைந்த பேச்சுவார்த்தையை அடுத்து, புஷ்ஷின் இடைவிடாத முயற்சியால் இரண்டாவது முறை ஏகப்பட்ட திருத்தங்களுடனும், மூன்றுகட்டச் செயல் பாடுகளாக, நிதி வழங்கல் ஒப்புதலுக்கு வந்திருக்கிறது.

'சரி! அவ்வளவு டாலர்களை உடனடியாக வழங்குவதற்கு பெடரல் வங்கி எங்கே போகும்? கைவசம் அதனிடம் அந்த அளவுக்கு இருப்பு இருக்கிறதா?' என்றால், அதுவும் பாப்பராகித்தான் கிடக்கிறது. முதலாளித்துவத்திலிருந்து சோசலிசத்துக்குப் போகும் பாதையை நோக்கும் முகமாக சீனா, ஜப்பான், இந்தியா உள்ளிட்ட ஆசிய நாடுகளிலிருந்தும் அரபுநாடுகளின் தயவிலிருந்தும் கையேந்தி செய்யப் போகும் வசூல் மூலம்தான்!

புஷ்ஷ¥ம் சரி, அவரது அமைச்சரவை செயலாளர்களும் சரி... அமெரிக்க உள்நாட்டு விவகாரங்களைப் பொ¢தாகக் கண்டுகொண்டதே இல்லை என்பதற்கு பல சாட்சியங்கள் உள்ளன. 'இந்தியர்கள் ருசியான உணவு வகைகளை அதிக அளவில் உண்பதால், உலகில் உணவுப்பஞ்சம் உருவாகி வருகிறது' என்று புஷ் திருவாய் மலர்ந்தருளியது, கண்டனத்துக்கு உள்ளானது. அது முடிந்த சிலநாட்களில், வெளியுறவுச் செயலாளர் கண்டோலிஸா ரைஸ், கொலராடோ மாநிலம் போல்டா¢ல் உள்ள ஆஸ்பென் ஆராய்ச்சி நிறுவனத்தில் நடந்த கருத்தரங்கில், 'இந்தியாவும் சீனாவும் தங்கள் நாட்டுக்கான மின்துறைக்கு, மிக மோசமான கழிவு நிலக்கா¢யையே பயன்படுத்துவதால், சுற்றுச்சூழல் மாசுபடுகிறது. அதைச் சொன்னால், அந்தநாடுகள் கேட்க மறுக்கின்றன!' என்று பொன்மொழி உதிர்த்து, தனது அறிவின் விசாலத்தைக் காடடிக் கொண்டார் என்பது அவற்றில் முக்கியமானவை.

இவர்களையெல்லாம் தாண்டியவர், அந்நாட்டின் நிதித்துறைச் செயலாளர் ஹென்றி பால்சன் ஜூனியர். புஷ்ஷின் மனதறிந்து எந்த நாட்டின் மீது படையெடுக்க... எவ்வளவு டாலர்களை ஒதுக்கலாம் என்ற கனவிலேயே மூழ்கிக் கிடப்பவர். ஈரான் மீது போர் தொடுக்க ஆன மதிப்பீட்டுச் செலவான 14 ஆயிரத்து 200 கோடி டாலர்களைத் தாண்டி 21ஆயிரத்து 500 துருப்புகளைக் கூடுதலாக அனுப்பியதற்கான செலவை, எப்படி... எந்தக் கணக்கில் எழுதுவது என்று யோசிப்பதிலேயே ஆழ்ந்து கிடக்கிறார். இப்படி முக்கியமானவர்களெல்லாம் வேறுவேறு திசைகளில் கவனம் செலுத்திக் கொண்டிருப்பதால், உள்நாட்டு விஷயங்கள் ஏழுவழி எழுபத்திரண்டு கோலங்களாகிப் போய் கிடக்கின்றன.

கடந்த ஓராண்டாகவே அமெரிக்க வங்கிகளும், நிதி நிறுவனங்களும் பல்வேறு நெருக்கடிகளைச் சந்தித்து வருகின்றன. 'Bear Steams' என்பது லேமேன் பிரதர்ஸ் போல மிக முக்கியமான நிதி நிறுவனம். உச்சத்தில் நின்றிருந்த அந்நிறுவனம், 'சடாரென்று' முறிந்து விழும் கொடிக்கம்பம்போல தரை மட்டமாகிப் போனது. இந்த வீழ்ச்சி, நாட்டின் நிதித்துறையை விழிக்கச்செய்தது என்னவோ உண்மை தான். உடனடியாக கீழே விழுந்த நிறுவனத்தைத் தூக்கிநிறுத்தும் முயற்சியாக அமெரிக்க மத்திய வங்கியான 'Federal Reserve System' 32 ஆயிரம் கோடி டாலர்களைக் கொடுத்து அந்நிறுவனத்தையே விலைக்கு வாங்கிக் கொண்டது.

அதன் பின்பு, அந்நாட்டின் வீட்டு அடமான நிதி வங்கிகளான 'Fannie Mae, Freddie Mae' என்று இரு நிறுவனங்கள் நிலைகுலைந்து தரைமட்டமாயின. அதுபோல, அமெரிக்காவின் இரண்டாவது பொ¢ய வங்கி 'இண்டி மேக்' கடந்த ஜூலை மாதத்தின் மத்தியில் திவாலாகிப் போனது. 'நிர்வாக மேலாண்மையின் குறைபாடுகள்தான் இத்தனைக்கும் காரணம். இந்நிலையை மாற்ற பொ¢ய அளவிலான சீர்திருத்தம் தேவைப்படுகிறது. இத்துறைகள் தீவிர கண்காணிப்புக்கு உட்படுத்தப்பட வேண்டும். அதற்கான விதிமுறைகள் தெரியவில்லை. இத்துறையில் அதிக அளவில் அறிவு ஜீவிகள் உள்ளனர். அமெரிக்கப் பொருளாதாரத்தை சீர்செய்ய அவர்கள் முயலுவார்கள் என்று நம்புகிறேன்' என்று சொல்வது யார் தெரியுமா? லேமேன் பிரதர்ஸ் நிதி நிறுவனத்தில் ஒன்பது ஆண்டுகாலம் பணியாற்றிய ஊழியர் ரோஜர் பிரிமேன் என்பவர் தான்!

'நிலைமையைச் சமாளிக்க 70 ஆயிரம் கோடி டாலர்களை பெடரல் வங்கி உடனடியாக வழங்குவதற்கு, அனைத்துக்கட்சிகளும் ஆதரவு தரவேண்டும்' என்று புஷ் கேட்டுக் கொண்டதை, குடியரசுக் கட்சியின் வேட்பாளர் ஜான் மெக்கெய்ன், தனது தேர்தல் பிரசாரத்தின் ஆயுதமாகக் கையாளுகிறார். அதிபர் தேர்தலுக்கான பிரசாரத்தின் ஒருபகுதியாக, இரண்டு வேட்பாளர்களும் பங்குகொள்ளும் பொதுமேடை நிகழ்ச்சிகளில், பாரக் ஒபாமாவை வைத்துக்கொண்டு ஜான் மெக்கெய்ன் நடத்தும் அரசியல் தாக்கு, அபாரமாக எடுபடுகிறது. ஒவ்வொரு மேடையிலும் அவருக்கு ஒதுக்கப்படும் 90 நிமிடங்களும் அவர், வாய்ச்சொல்லிலே ஒபாமாவை ஓரங்காணச் செய்துவிடுகிறார். ஜனநாயகக் கட்சியின் வெளிப்படையற்ற செயல்பாடுகள், வா¢விதிப்பு, கூடுதல் செலவு உள்ளிட்டப் பிரச்சனைகளைத் தொட்டு, பழுதுபட்டுக் கிடக்கும் தேசத்தின் உடல்நிலையைக் காப்பாற்ற, தான் முயலுவதாகப் பேசுகிறார். பல்வேறு சீர்திருத்தங்களின் மூலம் அதைத்தான் செய்யப்போவதாக உறுதியளிக்கிறார்.

'என்ன செய்யப்போகிறேன் என்பது குறித்த தெளிவான வரையறை வைத்திருக்கிறேன். இன்று நாட்டில் நிலவும் பிரச்சனையைத் தீர்க்க ஆளும்கட்சியின் தலைவர் எதுவும் செய்யவில்லை. பல நிறுவனங்கள் சரிந்து கிடக்க, ஏதோ ஒரு நிறுவனத்தின் மீது அவர் கா¢சனம் காட்டுகிறார். அதற்கும் எதிர்கட்சியின் ஆளான நான் போக வேண்டியிருக்கிறது. பொருளாதாரச் சரிவை நேர்செய்ய நான் உதவியிருக்கிறேன். பொருளாதாரச் சரிவுக்குக் காரணம் நிர்வாகச் சீர்கேடுதானே? வளமை என்பது எல்லோருக்கும் மழையாகப் பொழிய வேண்டும். அதற்கான காத்திர நடவடிக்கைகளை நான் எடுப்பேன். புஷ் அரசால் இன்றைய பொருளாதாரச் சீர்கேட்டை நிவர்த்தி செய்யமுடியாது. அதை நிவர்த்தி செய்யாதவரை, இந்நிலை நீடிக்கவே செய்யும். புஷ்ஷின் நிர்வாகம் செய்ய முடியாததை, சுதந்திரமாக நான் நடத்திக் காட்டுவேன். இது எனது திட்டம். செனட்டர் ஒபாமா, இப்படியொரு திட்டத்தை யோசிக்கவே இல்லை. புஷ்ஷிடமும் இப்படியொரு திட்டம் இல்லை. எனது திட்டத்தின் மூலம், அமெரிக்கா மீண்டும் உயிர்த்து எழும். பொருளாதாரம் சீரடையும். அமெரிக்கர்களுக்காக நான் உழைப்பேன்' என்ற அவரது அறைக் கூவல், பொருளாதாரத்தில் விழுந்த அடியைக்காட்டிலும் புஷ்ஷ¥க்கு கூடுதல் அடியைக் கொடுத்து வருகிறது.

நம்மூர் அம்பிகளின் கனவுப்பிரதேசம் என்பதே அமெரிக்கா தான்! 'திரை கடலோடியும் திரவியம் தேடு' என்றதைத் தவறாகப் புரிந்து கொண்டு, நம் கலாச்சாரத்தின் வேர்களை மண்ணோடு பறித்துச்சென்று அங்கு நடுவதை பொ¢ய பாக்கியமாகக் கருதி ஓடினார்கள். எப்போதாவது பிறந்தமண் திரும்பும் அவர்கள், தாங்கள் வாழும் மண்ணைப்பற்றி பீற்றிக்கொள்ளும் சங்கதிகள் மற்றவர்களின் கண்ணில் பொறாமையையும், எப்படியாவது நாமும் அங்கே போய்விட வேண்டும் எனும் ஆவலையும் தூண்டிவிடும். 1990 வரை முப்பது டாலர் சம்பளத்துக்கு அமெரிக்காவில் வேலைசெய்த அம்பிகள், நம்மூரில் வேற்று கிரகத்து மனிதர்களாகவே அறியப்பட்டார்கள். 'நாங்க லேமேன் பிரதர்ஸ்ல வேலை பண்றோம். இண்டி மேக்ல வேலை பண்றோம்!' என்று மொன்னைத் தமிழில் சொல்வது, கெளரவமானச் செயலாக ஆகியிருந்தது. இந்திய அம்பிகளின் சின்சியாரிட்டி(?) அமெரிக்கர்களுக்கும் பிடித்திருந்தது.

வந்தது தாராள மயமும், உலக மயமாக்கலும். தொழில்நுட்பக் கல்வியின் கதவுகள் அகலத்திறந்தன. 'அறிவில் சிறந்தது யாரு?' என்று போட்டிபோடும் அளவுக்கு, பின்தங்கிக்கிடந்த தம்பிகள், அம்பிகளைக் காட்டிலும் மேலோங்கினார்கள். நுனிநாக்கு ஆங்கிலம் தம்பிகளுக்கும் பேச வந்தது. மீசை மழித்து, கிருதா குறைத்த அவர்களும் விமானம் ஏறினார்கள். சம்பளம், லட்சக்கணக்கான டாலர்கள் ஆயின. ஆனால், தாய்மண்ணுக்குப் பயன்படவேண்டிய அறிவுச்செல்வம் டாலர்களுக்கு விலை போனது. திரைகடலோடி, திரவியம் விற்றவர்களாகிப் போனோம்!

வாங்கிய சம்பளத்துக்கு உழைத்த அவர்களின் உழைப்பு, அமெரிக்க நிறுவனங்களை மட்டுமன்றி உலக நிறுவனங்களையும் பரமபத ஏணிகளாய் உச்சத்துக்குக் கொண்டு சென்றன. அதன் லாபம் இரு பிரிவினருக்கும் இருந்தது. உலக வரைபடத்தில் அமெரிக்கா இருப்பதுபோய், அமெரிக்காவுக்குள் உலக வரைபடம் இருக்கும் அளவுக்கு, அனைத்து நாடுகளின் அறிவாளிகளும் அங்கே மூளை வியாபாரம் செய்து கொண்டிருக்கிறார்கள்.

இப்போது இறங்கு காலம்!

உச்சத்தில் இருந்த நிறுவனங்கள் ஒரேயடியாக ஓட்டாண்டியாகக் காரணம் என்னவென்று ஆராய்ந்தால், அந்நிறுவனங்களின் கொள்கைகளும் அவற்றின் நிர்வாகமும்தான் காரணமாக இருக்கமுடியும். முதலில் கொள்கையைப் பார்ப்போம். அமெரிக்க வங்கிகளும், நிதி நிறுவனங்களும் தங்கள் செயல்பாடுகளில் நிபுணத்துவம் வாய்ந்தவையாக போலியாகக் காட்டிக்கொள்கின்றன. முதலீட்டுக் கொள்கைகளில் நேர்மையின்மையும், பாதுகாப்பின்மையும் அந்நிறுவனங்களில் மலிந்து கிடக்கின்றன. ஒரு நிறுவனத்தின் கடன் என்பது, அந்நிறுவனத்தின் சொத்து மதிப்பைக் காட்டிலும் குறைவாக இருக்கவேண்டும். ஆனால் அமெரிக்க நிறுவனங்கள், அதிக இடர்கள் உள்ள தொழில்களில் யோசனையில்லாமல் முதலீடு செய்தன. மக்கள், தங்கள் நிலையை அறியாமலேயே அல்லது அறிந்தே கூட பலமடங்குக் கடன் வாங்கினர்.

திடீரென 2005 ம் ஆண்டின் இறுதியில் வீட்டடி மனைகளின் விலை அமெரிக்காவில் சரியத் துவங்கியது. அடிமாட்டு விலைக்கு சதுரஅடி கணக்கில் நிலம் விற்பனைக்கு வந்தது. நம்மூர் காசில் வெறுமனே அறுபதாயிரம் ரூபாய்க்கு அனைத்து வசதிகளும் கொண்ட பிளாட் வீடு கிடைத்தது. இங்கே மதுரை மேலமாசி வீதியில் ஒருசதுர அடியின் விலை 22 ஆயிரம் ரூபாயாக இருக்கிறது. ஆனால் அமெரிக்காவில் அதை வாங்கவும் ஆளையே காணோம். வீட்டை விற்றுக்கடனை அடைக்க முடியாத இக்கட்டு. வங்கிகளுக்கு வசூல் பண்ண முடியாத நிலை. இதுவே அமெரிக்க நிதி நிறுவனங்களின் கழுத்துக்குக் கயிறாக வந்து சேர்ந்துவிட்டது.

நிர்வாகத்தைப் பொறுத்தவரை, அவை ஏட்டுச் சுரைக்காய் தான்!

பிரமிப்பைத்தரும் பிரம்மாண்டக் கட்டிடங்களும், நுனிநாக்கு ஆங்கிலமும், அழகியப் பெண்களின் வரவேற்பும் வியாபாரத்தைத் தூக்கிநிறுத்திவிடும் எனும் மனப்பால், நவீன கார்ப்பரேட் நிறுவனங்களின் மனதில் உள்ளது. கணிணி இயக்கும் அறிவும், ஓயாத பணியும் இலக்கைத் தொடும் காரணிகள் என்பது அவர்களின் நினைப்பு. கூடுதலாய் தரும் சம்பளம், நிறுவனத்தின் மதிப்பை உயர்த்திவிடும் என்பது அபிப்ராயம். அதனாலேயே அந்நிறுவனங்கள் உலக அளவில் பரபரப்பாகப் பேசப்படுகின்றன. திவாலாகிப் போன லேமேன் பிரதர்ஸ் நிதி நிறுவனத்தின் தலைவரும் தலைமைச் செயல்அதிகாரியுமான ரிச்சர்ட் புல்ட்டின் ஆண்டுச்சம்பளம் அதிகமெல்லாம் இல்லை. சுமார் 34 மில்லியன் டாலர் மட்டும் தான்! அதாவது 3 கோடியே நாற்பது லட்சம் டாலர்கள். ஒருடாலா¢ன் குத்துமதிப்பு இந்தியப் பணம், நாற்பத் தைந்து ரூபாயாகக் கொள்ளலாம்.

திவால் அறிவிப்பு வெளியிடப்பட்டதும் அந்நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்கள், கைக்குக் கிடைத்த பொருட்களை அள்ளிக்கொண்டு, 'இதுவாச்சும் கிடைத்ததே' எனும் சந்தோஷமும், 'வேலை போயிருச்சே' எனும் வருத்தமுமாகக் கிளம்பிப்போனார்கள். உலகம் முழுவதுமுள்ள லேமேன் பிரதர்ஸ் நிறுவனங்களில் பணிபுரிந்த நேரடி ஊழியர்கள் அறுபதாயிரம் பேரும், மறைமுக வேலைவாய்ப்புப் பெற்ற லட்சத்துக்கு அதிகமானவர்களும் இன்று வேலையில்லாதவர்களின் பட்டியலுக்கு மாறியிருக்கிறார்கள். ஏற்கனவே இருக்கும் நெருக்கடியில், இப்போது அங்கு மூச்சு முட்டுகிறது.

அமெரிக்காவின் பொருளாதாரச் சரிவு, இந்தியாவில் என்ன விதமான பாதிப்பைத் தந்துவிடும்?

மத்திய நிதியமைச்சர் ப. சிதம்பரம் கூறுவதைக் கேட்போம். 'அமெரிக்காவில் ஏற்பட்டுள்ள நிதி நெருக்கடியால், இந்தியாவுக்கு எந்த பாதிப்பும் இல்லை. இந்தியப் பொதுத்துறை வங்கிகள் எதுவும், திவாலான லேமேன் பிரதர்ஸ் நிதி நிறுவனத்தில் முதலீடு செய்யவில்லை. நிதிச்சந்தையிலும் எவ்வித நெருக்கடியும் நம்நாட்டில் இல்லை. இந்திய ரூபாயின் மதிப்பைப் பொறுத்தமட்டும், ரிசர்வ் வங்கி போதுமான ஏற்பாடுகளை செய்து வைத்துள்ளது. நமது வங்கிகளின் நிதி நிலைமையும் ஸ்திரமாக இருக்கிறது' என்று மனதைத் தேற்றிக்கொள்ளும் வார்த்தைகளாகவே பேசியிருக்கிறார்.

அதற்கு நேர்மாறானதாக இருக்கிறது, திட்டக்கமிஷன் துணைத்தலைவர் மாண்டேக்சிங் அலுவாலியாவின் எச்சரிக்கை.

இந்த இரண்டு பொருளாதார மேதைகளுடன் மற்றுமொரு பொருளாதார மேதையான பிரதமர் மன்மோகன் சிங், எந்தக் கவலையுமில்லாமல் 'அணுசக்தி... அணுசக்தி' என்று அலைபாய்ந்து கொண் டிருக்கிறார். 'இந்தியாவில் பொருளாதார சிக்கல் இல்லை' என்று அவர்கள் மாறி மாறி சாமரம் வீசுவது, அமெரிக்காவுக்கான அடிவருடித்தனமாக மட்டுமே இருக்கமுடியும்.

லேமேன் பிரதர்ஸின் திவாலானத் தகவல் பரவத்தொடங்கிய உடனேயே, திருப்பூரின் ஜவுளி மையத்திலிருந்து பூனேயின் ஆட்டோ உதிரிபாகத் தயாரிப்பாளர்கள், ராஜ்கோட்டின் இயந்திர பாகங்கள் உற்பத்தியாளர்கள் வரை முகம்வாடிப் போயினர். சிறுதொழில் முயல்வோர், தாங்கள் பாதுகாப்பானத் தொழிலில்தான் இருக்கின்றோமா எனும் சந்தேகத்துக்கு ஆளானவர்களாகிப் போயினர்.

தமிழ்நாட்டின் தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டினத்தின் ஐசிஐசிஐ., ஏ.டி.எம்.மும், வங்கியும் அவ்வூர் மக்களால் சூழப்பட்டது. ஆந்திர மாநிலம் ஐதராபாத்தில் பங்குச்சந்தை புரோக்கராகச் செயல்பட்ட உபேந்தர், சரிவால் ஏற்பட்ட கடனைச் சமாளிக்க முடியாமல் குடும்பத்துடன் தற்கொலை செய்து கொண்டார். மத்தியபிரதேச மாநிலம் இந்தூரில் ஸ்டாக் புரோக்கராகச் செயல்பட்ட ரவி ஷர்மாவும் இதே முடிவுக்குப் போய்விட்டார்.

பிரம்மாண்டமான லேமேன் பிரதர்ஸ் நிதி நிறுவனம், மெரில் லிஞ்ச், இண்டி மேக் உள்ளிட்ட நிறுவனங்களுக்கான தொழில்நுட்ப வேலைகளையெல்லாம் செய்து கொடுத்தது, இந்தியத் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களான டி.சி.எஸ்., சத்யம், விப்ரோ ஆகியவை தான்!

பலகோடி டாலர்களை பணிக்கான பகரத் தொகையாக இதுவரைப் பெற்றுவந்த இந்நிறுவனங்கள், பல ஆயிரம் தொழிலாளர்களை கைவசம் வைத்திருக்கின்றன. போதாததற்கு, கல்லூரி வளாகங்களுக்கு நேரடியாகச் சென்று, அதிக சம்பளம் தருவதாகச்சொல்லி, படிக்கும் மாணவர்களை அள்ளிக்கொண்டும் போகின்றன. இனி அது நடக்குமா என்பதும் சந்தேகமே!

அதுபோல, ஏற்கனவே பணியிலிருக்கும் தொழிலாளர்களுக்கு தொடர்ந்து வேலை இருக்குமா என்பதும் சந்தேகமே. அதன் அறிகுறியாக பல ஆயிரம் பேர் வேலைநீ£க்கம் செய்யப்படுவதும் ஆரம்பமாகி விட்டது. அமெரிக்காவில் எழுந்துள்ள இப்பிரச்சனையால் மட்டுமே உலகம் முழுவதும் கிட்டத்தட்ட ஆறுலட்சம் பேர் வேலை இழக்கும் நிலை உருவாகிவிட்டது.

கடந்த நூற்றாண்டின் இறுதியில் அமெரிக்க அதிபராக இருந்த பொ¢ய புஷ் சந்திக்காத, கிளிண்டன் சந்திக்காத இந்தப் பிரச்சினை, சின்ன புஷ்ஷ¥க்கு உள்நாட்டிலேயே தலைவலியை ஏற்படுத்தி விட்டிருக்கிறது. இப்போது ஏற்பட்டிருக்கும் இந்தப் பொருளாதாரச் சிக்கலிலிருந்து, அமெரிக்கா உடனடியாக மீள வாய்ப்பில்லை. அமெரிக்கா தற்போது எடுத்திருக்கும் இந்த அவசரக்கால நடவடிக்கை என்பது, அனைத்து சிக்கல்களையும் ஒருமுடிவுக்குக் கொண்டு வந்துவிடும் சூத்திரமுமல்ல! சிக்கலின் ஓர் அத்தியாயம் முடிவதற்கான வாய்ப்பு. அவ்வளவு தான். அதேவேளையில், இது அடுத்த சிக்கலுக்கான ஆரம்பம் என்பதையும் மறந்துவிடக்கூடாது. காலக்கிரமத்தில் அமெரிக்கா தன்னை சிக்கல்களிலிருந்து மீட்டுக்கொள்ளும் சூழ்ச்சிகள் தெரிந்த நாடுதான். பாரக் ஒபாமாவோ, ஜான் மெக்கெய்ன்னோ யார் அதிபராக வந்தாலும் புஷ்ஷைக்காட்டிலும் அதிக சூழ்ச்சியைக் கைக் கொள்பவர்களாகவும், வெளிப்படையற்றவர்களாகவுமே இருப்பார்கள். அந்த சோகத்தையும் ஏற்றுக்கொண்டு வாழும் பக்குவம் பெற்றவன் ஆகிவிடுவான், உலக மனிதன்!

கடந்த ஏப்ரல் 1 ம் தேதி. லேமேன் பிரதர்ஸ் நிதி நிறுவனத்தின் ஆசியத் தலைமையகம் பரபரப்புக்கு உள்ளானது. 'அந்த முதலீட்டு வங்கியில், போதுமான நிதி இல்லை... நிறுவனம் திவாலாகிவிட்டது' என்று செய்தி பரவியது. அதன் வாடிக்கையாளர்கள் விழுந்தடித்து ஓடிவந்து அலுவலகத்தை மொய்த்தனர். அவர்களை ஆசுவாசப்படுத்திய அதிகாரிகள், 'ஏப்ரல் 1 முட்டாள்கள் தினம் என்பதால், யாரோ வதந்தி பரப்பியிருக்கிறார்கள். 3000 கோடி டாலர் கையிருப்பு இருப்பதாக'ச் சொல்லி, இனிப்புத்தடவி அனுப்பி வைத்தார்கள்.

அந்த வதந்தி, ஆறே மாதங்களில் நிஜமாகியிருக்கிறது!

மேலே...மேலே...மேலே...

அமெரிக்காவின் தேசிய வளர்ச்சியுடனும் அந்நாட்டின் அயல்நாட்டுப் பணிகளுடனும் பின்னிப் பிணைந்தது, அங்கு செயல்பட்டு வரும் வங்கிகள், நிதி நிறுவனங்கள், தனியார் நிறுவனங்கள் என்றால் மிகையாகாது. தேசத்திற்கான கடமையாக 1900 களின் துவக்கத்தில் Sears, Roebuck & Company, F.W. Wool worth Company, May Department Stores Company, Gimbel Brothers Inc and R.H. Macy & Company உள்ளிட்ட நிறுவனங்கள், பெரும்பங்காற்றி இருக்கின்றன. இவற்றுக்கெல்லாம் மூத்த நிறுவனம் லேமேன் பிரதர்ஸ் ஆகும்!

1844 - ல் அலபாமா மாகாணத்தின் மாண்கோமெரி எனும் பகுதியில், சிறிய பெட்டிக்கடை துவங்கிய தன் மூலம் ஹென்றி லேமேன் என்பவர் தனது இன்னிங்ஸை துவங்குகிறார். ஆறு ஆண்டுகளுக்குப் பின்னர் 1850 - ல் அவருடன் இமானுவேல், மேயர் எனும் இரு சகோதரர்கள், தொழில் பங்காளிகள் ஆகிறார்கள். நிறுவனம் லேமேன் பிரதர்ஸ் என்று பெயா¢டப்படுகிறது. பருத்தி வியாபாரம் துவங்குகிறது.

1858 - ல், நாட்டின் வர்த்தக மையமான நியூயார்க்கில் ஒரு அலுவலகம் துவக்கப்படுகிறது. 1860 - 1869 வரை உள்நாட்டுப் போரில் வியாபாரம் தள்ளாடுகிறது. அதன்பிறகு அவர்கள் தேசம் முழுமைக்கும் பருத்தித் தொழிலை விஸ்தா¢க்கிறார்கள். போருக்குப் பின்பான காலத்தில், நாடு விவசாயத்திலிருந்து தொழிற்சாலைகளுக்கு மாறுகிறது. ரயில் பாதை அமைக்கும் பணி துவங்குகிறது. Kuhn, Loeb ஆகிய நிறுவனங்கள், அப்பணியை செய்யத் துவங்கின. அவற்றுக்கு லேமேன் பிரதர்ஸ் நிதி நிறுவனம் பணமும், ஆலோசனையும் தருகிறது. ரயில் பாதைகளுக்கான அரசின் பங்குகளை வாங்கி விற்பனையும் செய்கிறது. லேமேன் பிரதர்ஸ் நிறுவனத்துக்கு அங்கீகாரம் கிடைக்கிறது.

1880 - 1889 இந்த காலகட்டத்தில் தான் அந்நிறுவனம் தங்களின் எல்லையை வங்கித்துறை, நிதி நிறுவனம், சில்லரை வணிகம் என்று பல்துறைகளுக்கு விரிவுபடுத்துகிறது. தொட்டதெல்லாம் பொன்னான காலம், அது. 1900 - 1909 நாட்டின் முக்கிய நிறுவனங்களான Sears, Roebuck & Company, F.W. Wool worth Company, May Department Stores Company, Gimbel Brothers Inc and R.H. Macy & Company ஆகியன லேமேன் பிரதர்ஸ் நிறுவனத்திடம் ஆலோசனைகளையும் நிதி உதவியையும் பெறுகின்றன.

1920 - 1929 நுகர்வோர் துறையில் காலடி பதிக்கிறது லேமேன் பிரதர்ஸ். அமெரிக்காவின் முக்கிய திரைப்பட ஸ்டூடியோக்களான RKO, Paramount, 20 th Century Fox ஆகிய நிறுவனங்களுக்கு யோசனை சொல்லும் நிறுவனமாகவும், வழிகாட்டி நிறுவனமாகவும் ஆகிறது. அந்நிறுவனங்களுக்கான நிதி ஏற்பாடுகளையும் செய்கிறது.

1930 - 1939 ஊடகத்துறையில் பெரும்புரட்சி ஏற்படக் காரணமாக இருந்தத் தொலைக்காட்சிப் பெட்டி உற்பத்தி நிறுவனமான DuMontடுக்கும், Radio Corporation of Americaவுக்கும் ஆலோசகர்களாக லேமேன் பிரதர்ஸ் ஆகிப்போனார்கள். 1940 - 1984 வரை லேமேன் பிரதர்ஸ் கால் வைக்காதத் துறையே இல்லை எனும்படிக்கு மின்சாரம், மின்னணுப் பொருட்கள், வாகனங்கள், விமானப்போக்குவரத்து, மருத்துவப் பாதுகாப்பு, மருந்து உற்பத்தி என்று பரபரப்பாக இயங்கியது.

1984 - ல் லேமேன் பிரதர்ஸ் நிறுவனத்தை அப்படியே மொத்தக் கொள்முதலாக American Express விலைக்கு வாங்கி, Shearson நிறுவனத்துடன் இணைத்துவிட்டது.

1990 - 1999 ஆடிய கால்களும் பாடிய வாயும் சும்மா இருக்குமா? 1993 - ல் Shearsonலிருந்து பிரிந்து American Expressலிருந்து விலகி, மீண்டும் லேமேன் பிரதர்ஸ் தனித்து உருவானது.

1994 - ல் பங்குச் சந்தையில் நுழைந்த லேமேன் பிரதர்ஸ் உலகமெங்கும் தனது கிளைகளை பரப்பியது.

2000 - ம் ஆண்டில் தனது 150 வது ஆண்டுவிழாவை விமா¢சையாகக் கொண்டாடி, உலகின் முதல் IPO துவங்கியது. மன்ஹாட்டன், நியூயார்க், நியூ ஜெர்ஸி ஆகிய இடங்களில் அலுவலகங்கள் திறந்தது.


2005 - ல் மும்பையிலும், 2006 - ல் லண்டனிலும், கனடாவிலும் அலுவலகங்களைத் திறந்தது.

நிறுவனம் திவாலானதாக அறிவிக்கப்பட்ட நாள் வரை, அதன் பரபரப்பில் சிறிது கூட பின்னடைவு ஏற்படவே இல்லை!
இந்தாப் பிடி!

பருத்தி மூட்டைகளைப் போலவே டாலர்களையும் மூட்டை மூட்டையாக வாரிக்குவித்த லேமேன் பிரதர்ஸ் நிதி நிறுவனம், அதை அள்ளிக் கொடுக்கவும் தயங்கியதில்லை. நாட்டின் அதிபர்களாக இருந்த அத்தனை பேருமே அங்கு கையையும், பையையும் நிறைத்தவர்களாகவே இருந்திருக்கிறார்கள்.

தற்போதைய அதிபர் வேட்பாளர்களான பராக் ஒபாமா, ஜான் மெக்கெய்ன், ஏன் ஹிலாரி கிளின்டன் கூட தேர்தல் நிதியாக லட்சக்கணக்கான டாலர்களைப் பெற்றிருக்கிறார்கள்.

- எஸ். அர்ஷியா ([email protected])

இவரது மற்ற படைப்புகளைக் காண இங்கே அழுத்தவும்


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com