Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
KeetruLiteratureArticle
மயிலிறகாய் ஒரு காதல் - நூல் விமர்சனம்

வசீகரமாய் பூத்திருக்கும் பொய்கள்..!
கவிஞர். க. அம்சப்ரியா


மரபுக்கவிதைக்குப் பின் கவிதையின் தளம் இன்றைக்குப் புதுக்கவிதை, நவீனக் கவிதை, பின்நவீனக்கவிதையென்று வேர் பரவி, குதிரைப்பாய்ச்சலாய்ப் போய்க் கொண்டிருக்கிற இத்தருணத்தில் வாசகர்களும் அதற்கேற்றாற் போல் தங்கள் வாசிப்புத் திறனை மேம்படுத்திக் கொள்ள வேண்டிய கட்டாயத்திலிருக்கிறார்கள்.

சமூகப் பிரச்சனைகளை மையம் கொண்டிருந்த கவிதை நகர்ந்து வாழ்வியல் சிடுக்குகளையும், மனப் பிறழ்வுகளையும், அதீத கற்பனைச் சொற்களையும் ஏந்திக் கொண்டு பயணப்படத் துவங்கியது. துவக்க கால எழுத்தாளர்களின் முதல் தொகுப்புகளே கூட நவீனத்துவத்தின் கெட்டித்த தன்மையுடன் வரத் துவங்கிய பின் காதலின் மிக மென்மையான அனுபவங்களை பதிவு செய்கிற கவிதைகள் வாசகத்தளத்தில் விரும்பத்தகாத இறக்கத்திற்கு சென்று விட்டது என்றே கூறலாம், அல்லது அப்படியான கவிதைகளை இன்னும் வாசித்துக் கொண்டிருப்பது வாசிப்பு முதிர்ச்சியின் மீது சந்தேகப் பார்வையாக மாறிவிட்டது எனலாம்.

இந்தக் கவிதை விமர்சனக் களேபரங்களிடையில் காதல் கவிதைகளை சுமந்து கொண்டு புதிய தொகுப்புகள் வந்து கொண்டே தான் இருக்கின்றன. அப்படிப்பட்ட தொகுப்புகள் மிக எளிதில் தோல்வியை அடைவதற்கான காரணம் பொய்யான கற்பனையைக் கொண்டு போலித்தனமாய் உருகி வழிவது தான் என்றால் மிகையாகாது.

இப்போதைய காதல்கள் உண்மையில் கவிதையை ரசித்துக் கொண்டோ, மென் அனுபவங்களின் மயிலிறகால் வருடிக் கொண்டோ இல்லை. வணிக ஊடகங்களின் அபத்தக் கற்பிதங்களால் உடல் சார்ந்த வேட்கைக்கு காதல் என்று பெயர் சூட்டி வீணாகிக் கொண்டிருக்கிற யுகம் இது. காதல் மிக அளிதில் கடந்து விடுகிற வாலிபக் கிளர்ச்சியாகி அவரவர் வேலையை இனி அவரவர் பார்க்கப் போகலாம் என்கிற ரீதியில் இளமையாளர்கள் தயாராகிவிட்ட பின் இந்தக் கவிதைகள் யாருக்குத்தான் எழுதப்படுகிறது?

எப்போதும் போல் தான் கவியுள்ளம் அதைப்பற்றியெல்லாமா யோசித்துக் கொண்டிருக்கிறது...?
இதோ அப்படியான ஒரு இளம் கவிஞனின் மயிலிறகால் எழுதிய வண்ணக் கவிதைகளின் தொகுப்பு காதலை துளிர்க்கச் செய்யும்படியாக வந்திருக்கிறது.

மீராவின் கனவுகள்+கற்பனைகள்=காகிதங்கள் தொகுப்பிற்குப் பின் சில ஹைக்கூ தொகுப்புகளைத் தவிர்த்து விட்டுப் பார்த்தால் பேசப்படுகிற அளவுக்கு வெளிவந்த தொகுப்புகள் ஒன்றிரண்டு தான் . பொன்.சுதாவின் "கவிதையல்ல காதல்". அதற்குப் பிறகு தபூ.சங்கரின் பல தொகுப்புகள். தபூ.சங்கரின் காதல் கவிதைகளின் விற்பனைக்குக் கூட வண்ண மயமான அட்டைப்படங்களும், உள்ளே அட்டைப்படங்களுக்கு நிகரான வளவளப்பான அழகிய பெண்களின் உருவங்கள் தேவைப்படுகிறது. காதலை வெளிப்படுத்துகிற வரிகள் மட்டுமே தொகுப்பிற்குப் போதுமானதாக இல்லை.

நிலாரசிகனின் "மயிலிறகாய் ஒரு காதல்" புதுவரவு. இத்தொகுப்பில் மொத்தம் ஐம்பத்தியொரு கவிதைகள் இடம் பெற்றுள்ளன. ஒவ்வொன்றும் இலைகளை உதிர்த்து விட்டு பூக்களை மட்டும் ஏந்தி நிற்கிற 'மே பிளவர்' மரங்களைப் போல பொய்ம்மையை உதிர்த்து விட்டு காதலை மட்டுமே இவைகள் பூத்திருக்கின்றது.

ஒரு பெண்ணை நேசிக்கிற போது தான் காதல் கவிதை வசப்படும் என்பதில் எனக்கு எப்போதும் நம்பிக்கையில்லை. இந்த இயற்கையை, மக்களை, சுற்றுப்புறத்தை நேசிக்கத் தெரியாத ஒருவனால் ஒரு பெண்ணை போலித்தனமற்ற பிரியத்தால் ஒரு போதும் நேசிக்க இயலாது. அப்படியெல்லாம் கிடையாது என்றால் அவனுக்குள் ஒரு பொய் உட்கார்ந்து கண் சிமிட்டுகிறது என்று பொருள். இப்படிச் சொல்லக் காரணமிருக்கிறது. இந்தத் தொகுப்பு 'இன்னும் அறிமுகமாகாத என்னவளுக்கு..' என்று சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

இந்தத் தொகுப்பில் இப்படியொரு கவிதை வருகிறது.

கன்னம் சிவக்க
சிவக்க முத்தமிட்டுவிட்டு
போதுமாடா
என்பேன்..
அழகானதொரு வெட்கத்தினால்
முகம் திருப்பிக் கொள்வாய்.
ஆண் வெட்கம் அழகில்லை
என்று யார் சொன்னது..?

ஆண்களின் வெட்கத்தைப் பதிவு செய்திருக்கிற இந்தக் கவிதையின் பொருள் கவிஞரின் அரிய கற்பனை என்றுதான் சொல்ல வேண்டும்.

தொழில் மயமாகிவிட்ட உலகில் ஆண்களும் பெண்களும் இயல்பாக பழக வேண்டிய தருணத்தில், எதைத் தோழமை என்று அனுமதிப்பது? யாரை காதல் என்ற வட்டத்திற்குள் அனுமதிப்பது? என்கிற குழப்பத்தில் பொற்றோருக்குள் ஒரு தவிப்பு இருக்கத்தான் செய்கிறது. தன் மகன் வீட்டுக்குள் அனுமதித்திருப்பது காதலையா? நட்பையா? அதற்கு இப்படி பதில் சொல்கிறார்.

ஆரத்தி எடுக்காமல்
ஆச்சர்யப் பார்வை
பார்க்கிற உன்
அம்மாவிடம் சொல்லி வை
இவள் தோழி அல்ல என்
மனைவியாகப் போகிறவள் என்று..!

பெரும்பாலான கவிதைகள் பெண்ணின் குரலாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது. எனினும் விரசமற்ற அன்பின் ஏக்கமாக குழைந்து, நெக்குருகி இக்கவிதைகள் பூத்துள்ளன.

இத்தொகுப்பில் முழுக்க முழுக்க காதல் கவிதை தான் எனினும் அலங்காரத்திற்காகவும் அழகுக்காகவும் அகலமான மண் பாத்திரத்தில் பூக்கள் தூவி தண்ணீர் ஊற்றப்பட்டிருக்கும். தண்ணீர் அழகாகி, பூக்களை அழகுபடுத்துகிறதா? பூக்கள் அழகாக இருப்பதால் தண்ணீர் அழகாகிவிட்டதா? இரண்டையும் தன்னகத்தே வைத்திருப்பதால் மண்பாத்திரம் அழகாகிவிட்டதா? என்று ரசனைக்குறியவர்களுக்குத் தோன்றும். மிதக்கும் பூக்களைப் போல அ முதல் ஃ வரை என்று பதிவு செய்யப்பட்டுள்ள இக்கவிதைகள் மிளிர்கின்றன.

நல்லதோர் வீணை
செய்தே அதை
நலங்கெட புழுதியில்
எறிவதுண்டோ..?
செருப்பில்லாமல்
நான் நடப்பதை
இப்படி நீ சொன்னால்
செல்லமாய் உன்னை
அடிக்காமல் வேறு
என்ன செய்வேனடா
நான்..?

அரிய உவமைகள், உருவகங்கள் தொகுப்பெங்கும் குவிந்து கிடக்கின்றன.

காய்ந்த பிறகு வாசம்
வீசும் மகிழம்பூவைப் போல்
நீ பிரிந்த பிறகும்
நேசம் வீசும் உன்
நினைவைத் தவிர..!

இந்தக் கவிதை கற்பனை ஓட்டத்தில் ஒரு மென் சிலிர்ப்பு.

நவீன கவிதையில் காதல் பதிவுகள் அரிதாகிக் கொண்டு வருகையில் இம்மாதிரியான காதல் கொகுப்புகள், காதல் கவிதைகளை விரும்பி நேசிக்கிறவர்களுக்கும், காதலின் பரிசாக அளிக்கவும் ஆக மிகச் சிறந்த தொகுப்பாக வெளிவந்துள்ளது, "மயிலிறகாய் ஒரு காதல்".

கணினித்துறையில் இயங்கிக் கொண்டிருக்கும் இளைஞரால் இவ்வளவு மென்மையாய் ஒரு காதல் தொகுப்பு ஆச்சர்யம் தான்.

பொய்களில் காதல் பொய்கள் சுவாரஸ்யமானவை. எளிய வார்த்தைகளால் கட்டமைக்கப்பட்டுள்ள இக்கவிதைகள் காதலையும் காதலிப்பவர்களையும் சிகரத்திற்கு உயர்த்துகிறது என்பதில் எந்தவித ஐயமும் இல்லை.

நேர்த்தியான அச்சமைப்பு இந்தக் காதலை மேலும் உயர்த்துகிறது.

தொகுப்பு: மயிலிறகாய் ஒரு காதல் (கவிதை நூல்)
நூலாசிரியர் : நிலாரசிகன்
இணையத்தில் வாங்க: http://www.anyindian.com/product_info.php?products_id=212001

நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.



Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com