Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
KeetruLiteratureArticle
கட்டுரை

தமிழக முதல்வருக்கு ஒரு மனம் திறந்த மடல்!

ஆல்பர்ட் விஸ்கான்சின்

மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களுக்கு,

வணக்கம்.

Karunanidhi 85 அகவையிலும் ஈழத் தமிழருக்காக அவர்தம் நிம்மதியான வாழ்க்கைக்காக நீங்கள் சமீபத்தில் முன்னெடுத்த முயல்வுகளை எல்லாம் ஒவ்வொன்றாக எண்ணிப்பார்க்கிறேன். சர்வகட்சிக்கூட்டம், மத்திய அரசுக்கு கெடு, கொட்டும் மழையில் மனிதச் சங்கிலி போராட்டம்,எம்.பிக்கள் ராஜினாமா, நிதி வசூலித்து உயிரினுமினிய நம் உறவுகளுக்காய் உணவுப்பொருட்கள் அனுப்பிவைக்க மேற்கொண்ட அணுகுமுறைகள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் பிரதமரைச் சந்தித்து கோரிக்கையளிப்பது அதனைத் தொடர்ந்து சர்வ கட்சித் தலைவர்களோடு நீங்களே பிரதமரைச் சந்தித்து கோரிக்கையளித்து உறுதியோடு நின்றதை உலகமே உற்று நோக்கியது; உடனடியாக வெளியுறவு அமைச்சரை இலங்கைக்கு அனுப்பவேண்டியும் நீங்கள் கோரிக்கை வைத்தபோது நாங்கள் அகமகிழ்ந்தோம். ஒவ்வொரு நாளும் பிரணாப் முகர்ஜியை அனுப்புவார் பிரதமர், அனுப்பிவிட்டாரா என்று எங்கள் கண்கள் செய்தித்தாள்களில் பத்திபத்தியாகத் தேடியது; எங்கள் செவிகள் எந்த வானொலியாவது இந்தச் சேதியை காதுகுளிரச் சொல்லாதா என்று செவிமடுத்தோம்; விழிகள் காணொளிச் செய்தியிலாவது வந்துவிடாதா என்று ஏங்கியது.

ஆனால் எங்கள் கண்களில் தட்டுப்பட்ட செய்தியெல்லாம் இன்று இலங்கையில் குண்டு வீசியதில் பரீட்சை எழுதிய மாணவி சாவு; வயோதிகத்தாய் மரணம் என்றும் எங்கள் செவிகள் செவிமடுத்ததெல்லாம் தமிழர் பகுதியில் இலங்கை இராணுவம் குண்டுவீசியதில் கட்டிடங்கள் சேதம், கால்நடைகள் பலி என்றும் எங்கள் விழிகள் விழிநீர் பெருக்கிக் காணொளிச் செய்தியில் கண்டதெல்லாம் உறவுகள் கதறக் கதறக் குருதிச் சகதியில் சிதைந்து போன சடலங்களில் என் பிள்ளை இதுவா என்ற தேடுதல்களில்...குண்டுதுளைத்த உடலில் வழிந்தோடும் குருதியைக் கிடைத்த துணியில் சுற்றிக்கொண்டு மருத்துவமனைக்கு ஓடும் தாயை...அப்பா, இனி இந்த வீட்டிலிருக்க வேண்டாம் எங்காவது காட்டுப்பக்கம் போயிடலாம். அங்கே குண்டு போடமாட்டாங்கப்பா என்று பச்சிளம் பிஞ்சு சொன்ன சேதிகளை.... ஒருவேளை நீங்களும் கேட்டிருக்கலாம்.

200 உயிர்ப்பலிக்கு காரணமான தீவிரவாதிகளை ஒப்படைக்கவேண்டும் என்று கடுமையான எச்சரிக்கை விடுகிற இந்திய அரசாங்கம், நாளும் இலங்கையில் தமிழினத்தை கொன்று குவிக்கும் சிங்கள இராணுவத்துக்கு உரக்க ஒரு எச்சரிக்கை கொடுக்கக்கூட இயலாத இந்திய அரசு?! மும்பைப் படுகொலையில் தீவிரவாதிகளை ஒப்படைக்க கெடு கொடுத்து போருக்கே தயார் என்று பாகிஸ்தானையே கிடுகிடுக்க வைக்கிற இந்திய அரசு இலங்கைத் தமிழரைக் காப்பாற்ற இன்றுவரை இந்திய அரசு ஏதும் செய்யவில்லையே!? ஏன்? பிரணாப் முகர்ஜி இலங்கை செல்ல நல்லநேரம் பார்த்துக்கொண்டிருக்கிறாரா? அவர் போவதில் என்ன தாமதம்? நாடாளுமன்ற உறுப்பினர்கள் எல்லாம் சேர்ந்துபோய்ச் சொன்னார்களே? அதற்கும் மதிப்பில்லையா? சர்வகட்சித்தலைவர்களோடு நீங்கள் போய்ச் சொன்ன உங்கள் சொல்லுக்கும் அவ்வளவுதான் மரியாதையா?

என்றைக்கு வெளியுறவு அமைச்சர் இலங்கைக்குப் போய் இராசபக்சேவின் ஒரு நாள் விருந்துண்டு பின் இந்தியா வந்து போரை விரைவில் நிறுத்திவிடப் போவதாக மகிந்த உறுதியளித்துள்ளார் என்று செய்தித்தாளில் ஒரு அறிக்கை விடப்போகிறார்? அதுவரை எம் தமிழினம் நாளும் செத்துமடியவேண்டியதுதானா? தமிழக அரசியல்வாதிகள் ஒரு விசயத்தில் கூட ஒற்றுமையில்லாதவர்கள் என்று எண்ணித்தானே அங்குள்ள இராணுவத்தலைவன் அகம்பாவதோடு இந்திய அரசியல்வாதிகள் கோமாளிகள் என்று துணிந்து சொல்கிறான்.

வெளியுறவு அமைச்சரை அனுப்பிவைக்கிறேன் என்று உத்திரவாதம் தந்துவிட்டு இந்திய இராணுவ அதிகாரியை வன்னிக்கு ஏன் அனுப்பிவைத்தார் பிரதமர் என்று உங்களுக்காவது தெரியுமா? கடந்த 15/12/08 அன்று இந்திய இராணுவ அதிகாரியோடு அமெரிக்கா, ஜப்பான், பாகிஸ்தான், வங்காளதேசம் மற்றும் மாலத்தீவு ஆகிய நாடுகளின் இராணுவ அதிகாரிகள் வன்னியின் பாண்டியன்குளத்திற்கு ஒன்றாகச் சென்று பாண்டியன்குளத்தில் நிலைகொண்டிருக்கும் இலங்கை இராணுவ அதிகாரிகளைச் சந்தித்துள்ளனர். இவர்களின் வன்னிக்கு சென்றதின் நோக்கம் இலங்கை இராணுவ அதிகாரிகளைச் சந்திப்பதற்கு என்றால் எதற்கு? போரை நிறுத்தச் சொல்லவா? சந்தித்தது குறித்து உங்களுக்குத் தகவலாவது சொன்னார்களா? சொல்லியிருக்க மாட்டார்கள்.

ஏனென்றால்,இவர்கள் பாண்டியன்குளம் போய் வந்த பின் போர் தீவிரமடைந்துள்ளது. பொதுமக்கள் மீதான தாக்குதல்கள் கூடியுள்ளன. மக்கள் குடியிருப்புக்களை இலக்கு வைத்து ஆட்லறி எறிகணைகளை ஏவுகின்றனர். இதனால் சிறுவர்கள், குழந்தைகள், வயோதிபர்கள் உட்பட பொதுமக்கள் உயிரிழப்புக்களையும் உடல் உறுப்புக்கள் இழப்புக்களையும் சொத்தழிவுகளையும் சந்திக்கின்றனர். தொடர்ச்சியாக மழை கொட்டுவதால் தமிழ் மக்களின் துன்பம் பன்மடங்காகியுள்ளது. இலங்கை வான்படை இடம்பெயர்ந்தோர் குடியிருப்புக்கள் மீது குண்டு வீச்சுக்களை அதிகாலையிலும் நள்ளிரவிலும் நடத்தி வருகின்றது. இதனால் இடம்பெயர்ந்த பொதுமக்கள் வாழ்வு படுமோசமாகியுள்ளது. அத்தோடு தடை செய்யப்பட்ட ரசியத் தயாரிப்பு கொத்துக் குண்டுகளையும் பொதுமக்களின் வாழ்விடங்கள் மீது போடுகின்றனர். ஏழு முன்னணி நாடுகளைச் சேர்ந்த இராணுவ அதிகாரிகளின் வன்னி சென்றதின் நோக்கம் மனித நேயமற்றது, இவர்கள் அமைதிக்காகவும் தமிழ் மக்களின் நல்வாழ்வுக்காகவும் உதவுவதைத் தவிர்த்து போரை ஊக்குவிக்கச் சென்றிருக்கின்றனர் என்ற அச்சம் தமிழ் நெஞ்சங்களில் நஞ்சாக இறங்கியுள்ளது.

நீங்கள் திமுக தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டீர்கள். வாழ்த்துக்கள்!

அந்த சமயத்தில் கூட உங்கள் உரை கண்டு மெய் சிலிர்த்துப்போனோம். எங்கள் மனக் கண் முன் காணொளியாக கசிந்துகொண்டே இருக்கிறது! அந்த உரையை தமிழினம் ஆகா, எங்கள் தமிழ் மண்ணின் முதல்வர் எங்கள் மேல் கருணை கொண்டு ஆற்றியுள்ள உரை எங்கள் மனக்காயங்களுக்கு மருந்திட்டதாக உள்ளது என்று சொல்லி மாய்ந்துபோகிறார்கள். நீங்கள் பேசிய உரையை நானும் நினைவில் கொண்டுவந்து அசைபோட்டுப்பார்க்கிறேன்.

"நான் மீண்டும் தலைவராகி உள்ள இந்த நேரத்தில் இலங்கைத் தமிழர்கள் அங்கு செத்து மடிந்து கொண்டிருக்கிறார்கள். அவர்களை காப்பாற்ற வேண்டியதுதான் முக்கியமான பிரச்சினை. அதற்காக குறுக்கு வழியிலோ, வன்முறை மூலமாகவோ, தேச விரோதமாக செயல்பட்டோ அதை அடைய விரும்பவில்லை. மத்திய அரசு எடுக்கும் முடிவை ஏற்றுக் கொள்வோம். என்றாலும் மத்திய அரசு வேகமாக முடிவு எடுக்காமல் காலம் தாழ்த்தி வருகிறது. மத்திய அரசு தாமதிக்கும் ஒவ்வொரு நிமிடமும் ஒரு தமிழனின் பிணம் விழுகிறது. எனவே ஏற்கனவே நானும் மற்றக் கட்சித் தலைவர்களும் சந்தித்த போது அளித்த உறுதிமொழியை விரைவில் நிறைவேற்ற வேண்டும் என்று பொதுக்குழுவிலும் தீர்மானம் நிறைவேற்றி உள்ளோம். மத்திய அரசு இதற்கு மதிப்பு அளிக்க வேண்டும் என்று உருக்கமாக வேண்டுகோள் விடுக்கிறேன்.

இலங்கை தமிழர்களுக்காக வாதாடுவதை சிலர் விடுதலைப்புலிகளுக்கு ஆதரவாக செயல்படுவதாக சொல்லி வக்கிரப் புத்தியுடன் நடந்து கொள்கிறார்கள். அவர்களை புறம் தள்ளி இலங்கை தமிழர்களை காப்பாற்ற அனைவரும் உறுதி ஏற்போம். இலங்கை தமிழர்களுக்காக எதையும் துறப்போம். தேவைப்பட்டால் உயிரையும் துறப்போம்". எங்களின் இதயத் துடிப்பாகநரம்புகளின் நாதமாக, உயிரின் ஓசையாக இருப்பவர் எம் முதல்வர் என்றெல்லாம் கடந்த சிலநாட்களாக சிலாகித்துப் பேசிக்கொண்டிருக்கிறார்கள், இலங்கைவாழ் தமிழர்கள்! இலங்கை தமிழர்களுக்காக எதையும் துறப்போம். தேவைப்பட்டால் உயிரையும் துறப்போம் என்ற உங்கள் வீராவேசமான பேச்சு ஒவ்வொரு இலங்கைத் தமிழன் உயிரிலும் கலந்துவிட்டது. இந்த நேரத்தில் ஒன்றை நான் உங்களுக்கு நினைவுபடுத்தக் கடமைப்பட்டிருக்கிறேன். மத்தியில் உள்ள ஆட்சியாளர்களுக்கு நீங்கள் கொடுத்த வாக்குறுதி மட்டும் இன்றளவும் காப்பாற்றப்பட்டுள்ளது; ஆனால் அவர்கள் உங்களுக்கு கொடுத்த வாக்குறுதியை இம்மிகூட நிறைவேற்றவில்லை.

எனவே இந்தச் சந்தர்ப்பத்தை நீங்கள் நழுவவிடக்கூடாது. நீங்கள் இலங்கை தமிழர்களுக்காக எதையும் துறப்போம்; தேவைப்பட்டால் உயிரையும் துறப்போம் என்றீர்களே. எதையும் துறக்கவேண்டாம். நீங்கள் வாக்குறுதி கொடுத்த அந்த ஆயுதத்தை மீண்டும் உயர்த்திப்பிடிக்கவேண்டிய நேரம் வந்துவிட்டது. 24மணி நேரத்துக்குள் போரை நிறுத்தி இலங்கைத் தமிழர்களை இந்தியா காக்கத் தவறினால் எங்கள் திமுக எம்பிக்கள் இராஜினாமா செய்வார்கள் என்று அறிவியுங்கள்! இது சாத்தியப்படாதவரை இது குறித்து பிரதமரிடமோ அல்லது வேறு எவரிடமும் திமுக அரசு சமரசம் செய்யாது என்பதைத் தெளிவாக தெரிவித்துவிடுங்கள். சரியாக 24மணி நேரம் முடிந்ததும் தயாராக மத்திய அமைச்சர் ஒருவர் மூலம் எம்பிக்கள் ராஜினாமாவைச் சமர்ப்பியுங்கள். இந்திய அரசு வழிக்கு வருகிறதா இல்லையா பார்ப்போம்!

உங்கள் காலத்தில் இதற்கு தீர்வு பிறக்கவில்லையென்றால் எப்போதும் இலங்கைத் தமிழர்களுக்கு விடிவு வரப்போவதில்லை; இதைச் சாதித்தால் வரலாறு உங்களை பொன்னெழுத்துக்களில் பொறிக்கும்! சரித்திரத்தில் தனிச் சரித்திரம் படைப்பீர்கள்! இல்லையென்றால்....கலைஞர் அவர்களே வாழ்நாள் சாதனை நிகழ்த்தும் பாக்கியம் உங்களுக்கு கிட்டாமலே போய்விடும்!

(உங்களுக்கிருக்கும் பணிப்பளுவில் ஒரே மடலில் எல்லாவற்றையும் எழுதவிரும்பவில்லை. இன்னும் மடல் என்னிடமிருந்து வரும்)
இப்படிக்கு,
அசாதாரணத் தமிழன்,
ஆல்பர்ட்.
- ஆல்பர்ட் பெர்னாண்டோ, விஸ்கான்சின், அமெரிக்கா. ([email protected])

இவரது மற்ற படைப்புகளைக் காண இங்கே அழுத்தவும்


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com