Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
KeetruLiteratureArticle
கட்டுரை

சொர்க்கம் போகலாம் நானோ காரில்
ஆதி

ஒரு இளவட்டப் பய, பூலோகத்திலேர்ந்து மேல் லோகத்துக்கு டிக்கெட் வாங்கிக் கொண்டு சமீபத்துல போனான். அங்க அவன் கடவுளப் பார்த்தான்.

Nano car "கடவுளே என்ன இன்னமும் இப்படி நடந்தே போய்க்கிட்டு இருக்கீங்க. பூமில போய்ப் பாருங்க, அவனவன் நானோ கார்ல சும்மா சர்ரு, சர்ருன்னு பறக்குறான்"னு பத்த வாச்சான்.

கடவுளுக்கு ரொம்ப அவமானமாப் போச்சு. "சை, நாம பாத்து வளர்ந்த இந்தப் பயலுக எல்லாம் காரூல பீத்திக்கிட்டு போறாய்ங்க, ரொம்ப அசிங்கம்"னு அவமானத்துல குறுகிப் போனாரு. அவருக்கு பொசுக்குனு கோபம் வந்துருச்சு. முகமெல்லாம் செவந்துருச்சு. கோபத்துல என்ன செய்யறோம்னு தெரியாம, அவசரத்துல ஒரு காரியத்தச் செஞ்சுப்புட்டாரு. அந்த இளவட்டப் பயல, "நீ மறுபடியும் பூமிக்கே போகக் கடவாய்"னு வரம் தந்து புட்டாரு.

நம்மாளுக்கோ ரொம்பச் சந்தோசம். "எதையும் அனுபவிக்காம செத்துப் போக இருந்தோம். இந்த நானோ வந்து நம்மள காப்பாத்திருச்சே. ரத்தன் டாடா, வாழ்க நீ எம்மான்"னு மனசுக்குள்ளே பாராட்டுறான். ஆகாயத்திலேயே மிதந்தவன் அவன் ஒருத்தனாத்தான் இருக்கணும். "கடவுளே..."ன்னு ஆரம்பிச்சு அவன் நாக்கு நன்றி சொல்ல ஆரம்பித்த போது, சடக்குனு மாயாஜாலப் படத்துல வருமே, அது மாதிரி திரும்பவும் பூமியில வந்து நிக்கான். "மச்சான் நீ ரொம்பக் கொடுத்து வச்சவன்டா" என்று அவனே தன்னை மெச்சிக்கிட்டான். "ஆனாலும் கடவுள் ரொம்ப ரொம்ப நல்லவரு" என்று எதிரே யாருமே இல்லாத போதும் பாராட்டிச் சொன்னான்.

அப்படியே நடந்து போய்க்கிட்டிருந்தான். அவன் எங்க அடிபட்டு முன்னதாகச் செத்து மேலோகம் போனானோ, அந்த இடம் வந்துருச்சு. அப்ப, திடீர்னு குபுகுபுவென புகை வந்துச்சு. சினிமாவுல எல்லாம் பாட்டுக்கு நடுவுல, குரூப் டான்சரெல்லாம் ஆடுவாங்களே, அதே மாதிரி புகை. கடவுள் அவன் முன்னாடி நின்னாரு.

"குழந்தாய், அவசரத்தில் ஒன்றை மறந்துவிட்டேன். என் ஞானக் கண்ணைத் திறந்தவன் நீ! என்ன வரம் வேண்டும், கேள்"

"சே, கடவுள் இவ்வளவு நல்லவரா. இவ்வளவு காலம் புரியாமப் போச்சே" மனசுக்குள் முணுமுணுத்துக் கொண்டு "கடவுளே, வந்து... வந்து... கடவுளே..."

"என்ன குழந்தாய்" என்று என்.டி. ராமாராவ் போல கடவுள் அழகாய்ச் சிரித்தார்.

"நானோ, நானோ..." என்று பிதற்றிக் கொண்டே அவன் மயங்கி விழுந்துட்டான்.

"பாதியில் இப்படி பிளாக் அவுட் ஆயிட்டானே. பரவசத்துக்கு ஒரு எல்லை வேண்டாமா" கடவுள் அவனை திட்டிக் கொண்டே, "சரி, சரி, நானோ, நானோ என்று இரண்டு முறை கேட்டுவிட்டான். என்னதான் ரிசஷன் என்றாலும், ஒரு லட்சம் எல்லாம் நமக்கு பிச்சைக்காசு. கொடுத்துத் தொலைவோம் அந்தச் சனியனை" என்று அவனுக்கு வரத்தை அருளி விட்டார்.

அவன் முழித்துப் பார்த்தால், நானோ ஷோரூமில் கார் பின் சீட்டில் படுத்துக் கிடக்கிறான். "சார், நீங்க ரொம்ப அதிர்ஷ்டசாலி சார். "சொர்க்கம்" படத்த பாத்தவங்க டிக்கெட்ட குலுக்கிப் போட்டதுல, உங்களுக்கு ஒரு நானோ கார் விழுந்துருக்கு சார்" என்று டை கட்டிய ஒருவன் தன்னால் முடிந்த அளவு பல்லை அகலமாகக் காட்டியவாறு இவனிடம் சொல்லிக் கொண்டு, கையைப் பிடித்து குலுக்கிக் கொண்டிருந்தான்.

"நானோ... நானோவா, எனக்கா" ரிசஷனில் வேலையை விட்டு துரத்தப்பட்டவனுக்கு, நானோ கார் அதிர்ஷ்டப் பரிசு. "ஹே ஹே ஹோ ஹோ நா...னா... நானோ காரு எனக்காகத்தான். படைத்தவன் கொடுத்தான் நானோவை எனக்குத்தான்" வருஷம் 16 கார்த்திக்கைப் போல முடியை சிலுப்பிக் கொண்டு பாடியவாறு, மீண்டும் அவன் வானில் மிதக்க ஆரம்பித்தான்.

அவனைப் பிடித்து உலுக்கிய அந்த டை கட்டியவன், "சார், இந்தாங்க சார் சாவி. ஒரு டெஸ்ட் டிரைவ் பாருங்க சார்." என்று சாவியைத் திணித்தான். "நீங்கதான் சார் ராஜா, நீங்கதான் சார் மந்திரி" என்றான். டிரைவர் சீட்டில் உட்கார்ந்தவனுக்கு சிம்மாசனத்தில் உட்கார்ந்தது போலிருந்தது. அரைமயக்கத்தில் "நானே ராஜா, நானே மந்திரி ஹாஹ் ஹாஹ்ஹா" என்று பிதற்றிக் கொண்டான். வண்டியை ஸ்டார்ட் செய்தான். வர்ரூம்....நானோவில் அவன் பறந்து கொண்டிருந்தான்.

டொய்ங் டொய்ங் டொய்ங்...1 வருடத்துக்குப் பிறகு...

அவன் நானோ, பெட்ரோலைக் குடித்த மயக்கத்தில் சீறிப் பாய்ந்து கொண்டுதான் இருந்தது. அவன்தான் ஆஸ்பத்திரியிலேயே விழுந்து கிடந்தான். அவனது அனைத்து பரிசோதனை ரிப்போர்ட்டுகளையும் பார்த்த டாக்டர், எந்த உணர்ச்சியும் காட்டாமல் பேசினார். "ஆக்சுவலி, உங்களுக்கு சுவாசம் சம்பந்தப்பட்ட ஒரு கோளாறு இருக்கு. அதில எந்தச் சந்தேகமும் இல்ல. ஆனா, உங்களுக்கு நுரையீரல் புற்றுநோய் இருக்கலாம்னு சந்தேகிக்கிறேன். பிரீயாடிக்கலா சோதனை செய்ய வேண்டியிருக்கும்" என்றார்.

"ரிசஷனுக்குப் பெறகு ரொம்ப கஷ்டப்பட்டு இப்பதான் ஒரு வேலை செஞ்சுக்கிட்டு இருக்கேன் டாக்டர். வேற வழியே இல்லையா."

"ஒண்ணும் முடியாது மிஸ்டர். நீங்க பீரியாடிக்கலா சோதனை செய்யலேன்னா, உங்க உயிருக்கு நான் உத்தரவாதம் கொடுக்க முடியாது"

"ஒ.கே. டாக்டர். நான் செஞ்சுக்கறேன்"

Nano car இப்படியாக அப்பப்ப மேலதிகாரி கிட்ட சாக்குபோக்கு சொல்லிட்டு, சில நேரம் உண்மையச் சொல்லிட்டு அவன் பரிசோதனைக்கு போக வேண்டி இருந்துச்சு. அதிகாரியும் அப்பப்ப அலுத்துக் கொண்டார். "என்னப்பா, உன்னோட இதே ரோதனையா போச்சு. எப்ப பார்த்தாலும், அந்த லேபுக்கு போகணும் இந்த லேபுல டெஸ்ட் எடுத்துக்கணும்னு ஓடிடுற. எல்லாம் எப்பப்பா முடியும்" அலுத்து சலித்துக் கொண்டார்.

"இல்ல சார் வந்து..."

"சரிப்பா, இப்ப போ, சீக்கிரமா திரும்ப வந்து சேரு"

"அதுதான் நம்மகிட்ட நானோ கார் இருக்கே, சௌகர்யமா வர்ரூம்னு... போய்ட்டு, உர்ரூம்னு...வந்துரலாம்"னு நெனச்சுக்கிட்டே போனான்.

ஆனா நெனப்புதான் பொழப்ப கெடுக்குமே. என்னைக்கு கார வாங்குனானோ, அன்னேலேர்ந்து எங்க போனும்னாலும் மூணு மடங்கு நேரமாவுது. "டூவீலர்ல போனா 10 நிமிசம், பஸ்ல போனா 20 நிமிசம். கார்ல போனாதான் 30 நிமிசம். என்ன இழவுடா இது" நொந்து கொண்டே சிம்மாசனத்தில் அமர்ந்தான்.

வர்ரூம்... கார் கிளம்பியது. எல்லாம் ரோட்டத் தொடற வரைக்கும்தான் இந்த வர்ரூம் உர்ரூம் எல்லாம். ரோட்டாத் தொட்ட, டைட்டானிக் கப்பல் மாதிரி ரொம்ப ஸ்லோவாத்தான் வண்டி நகரும். இதோ அடிச்சுப் பிடிச்சு மெயின் ரோட்டுக்கு வந்துட்டான். நானோ, நானோ, நானோ. "எங்கும் தமிழ், எதிலும் தமிழ்" என்ற தமிழ் வளர்ச்சித் துறை கோஷம் போல, எங்கும் நானோ, எதிலும் நானோ என்று சாலையெங்கும் நானோக்கள் நிரம்பி வழிந்து கொண்டிருந்தன. தூரத்தில் "நானோ தந்த தங்கமகன் ரத்தன் டாடா வாழ்க வாழ்க" என்று ஒரு கோஷம் ஈனஸ்வரத்தில் கேட்டது. "என்னடா, இப்படியெல்லாம் எப்படா ஆரம்பிச்சாய்ங்க" என்று வடிவேலு பாணி கேள்வி மனதில் எழுந்தது. நெருங்கி காது கொடுத்துக் கேட்டால், அது எப்.எம்மில் நானோ கார் விளம்பரம். "எல்லாம் என் தலையெழுத்து" தலையில் அடித்துக் கொண்டான் நம்ம பயல்.

அவன் போக வேண்டிய லேப் 3 கி.மீ. தூரத்தில்தான் இருந்தது. ஆனால் அங்கு சென்று சேர மூன்று மணி நேரம் ஆகும் போலிருக்கிறது. ஒவ்வொரு சிக்னலையும் கடந்துவிடலாம் என்று வண்டியை விரட்டிக் கொண்டு ஓடும்போது சிவப்பு விளக்கு டபாரென்று விழுந்துவிடுகிறது. பிறகு முழுச்சுற்று காத்திருந்த பின், அடுத்த பக்கம் செல்ல முடிகிறது. மீண்டும் அடுத்த சிக்னலில் அதே கதை. "இப்படியே போனால் நேரா பரலோகத்துக்குத்தான் போக முடியும் போலருக்கு." அவன் மனசு நினைத்தது எப்படியோ கடவுளுக்குத் தெரிந்துவிட்டது போல. "உன் எண்ணங்களை நனவாக்குவதே என் தலையாய கடன்" என்று உடனடியாக நிறைவேற்றிவிட்டார். எல்லாம் ஒரு சில விநாடிகள்தான். ஒரு காம்ப்ளெக்சில் இருந்து கிளம்பிய ஒரு நான்கு சக்கர வாகனம், நம்ப ஆள் கார் மீது வந்த வேகத்தில் மோதியது. அநேகமாக அதன் டிரைவர், ஸ்பீட் பிரேக்கரில் பிரேக்கை அழுத்துவதற்கு பதிலாக, ஆக்சிலேட்டரை சற்று வலுவாகவே அழுத்தியிருக்க வேண்டும்! பொருட்காட்சியில் விற்பார்களே பெரிதாக டில்லி அப்பளம், அதுமாதிரி நம்மாள் கார் நொறுங்கிக் கிடந்தது.

அவன் வழக்கமாகப் போகும் ஆஸ்பத்திரிக்கே கொண்டு சென்றார்கள். "பேஷண்ட் பிராட் டெட்" என்று ஒற்றை வரி எழுதிவிட்டு டாக்டர் சென்றுவிட்டார்.

அப்பொழுதும் அவன் வாய் திறந்து கிடந்தது. அதிலிருந்து ரகசியம் போல் ஒரு வார்த்தை கசிந்து கொண்டே இருந்தது மெல்லிசாக, "நானோ, நானோ". எப்பொழுதும் அவன் நானோ கார் சிந்தனையாகவே இருந்ததால், சாவிலும் அதையே பிதற்றிக் கொண்டிருக்கிறான்.

"நான்கு பேர் தாராளமாக காரில் செல்ல நானோ, அனைவரும் வாங்கக்கூடிய குறைந்த விலை கார் நானோ. இந்தக் கார் உங்கள் குடும்பத்துக்கு மிகப் பெரிய வரமல்லவா" என்று ஒரு டி.வி விளம்பரம் கதறிக் கொண்டிருந்தது.

ஹலோ ஒரு நிமிஷம், நான் பாட்டுக்கு பேசிக்கிட்டிருக்கேன், நீங்க பாட்டுக்கு எங்கே போய்க்கிட்டிருக்கீங்க, "என்னது நானோ வாங்கவா இல்லை சாபம் வாங்கவா"

- ஆதி

இவரது மற்ற படைப்புகளைக் காண இங்கே அழுத்தவும்


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com