Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
KeetruLiteratureArticle
கட்டுரை

தலித்தியமும் இலக்கியமும்
ஆதவன் தீட்சண்யா


(இலண்டனில் 16.02.2008ல் நடைபெற்ற தலித் மாநாட்டில் ஆதவன் தீட்சண்யா ஆற்றிய உரையின் கட்டுரை வடிவம்)

1.
Aadhavan Dheetchanya
இங்கிலாந்துக்கு வந்திருக்கும் இந்த கணத்தில் நான் இந்தியாவிலிருந்து வந்திருப்பதாய் சொல்வது எனது பூர்வீகத்தை உணர்த்திடப் போதுமானதாய் இருக்கலாம். ஆனால் இந்தியாவிற்குள் என்னை இந்தியன் என்று சொல்லிக் கொள்வதற்கான அவசியம் எதுவும் நேர்ந்ததாக நினைவில் இல்லை. இதேகதிதான் தமிழன் என்பதற்கும். ஒரு பொது அடையாளம் போல் தோற்றமளிக்கும் இந்த வார்த்தைகள் தலித்துகளைப் பொறுத்தவரை அன்னியமானவை. அரசியல்ரீதியாக அறிவிப்பதாயிருந்தால் அன்னியமாக்கப்பட்டவை.

ஊர் என்றும் சேரியென்றும் பிரிக்கப்பட்ட சமூகத்தில் இந்தியன் தமிழின் என்பதெல்லாம் ஊர்க்காரர்களுக்கான அடையாளங்கள். எனவே ஆண் பெண்- என்பதும்கூட அவசியமற்ற ஒரு அடையாளம். உண்மையில் ஊர்க்காரரா அல்லது சேரிக்காரரா என்ற கேள்விக்கான பதிலோடுதான் ஒருவரது அடையாளம் நிறைவு பெறுகிறது. அதிலும் எந்தச் சேரி என்று பகுத்துக் கேட்குமளவுக்கு நுண்மையானக் கேள்விகளை உள்ளடக்கியது இந்த அடையாளம்.

ஊருக்கு ஆகாத மூலையில் சேரி என்னும் வழக்கிலிருந்து ஊரும் சேரியும் ஒன்றல்ல- அவை எதிரெதிர் நலன்களையும் குணவியல்புகளையும் பிரதிநிதித்துவம் செய்கின்றவை என்பதை அறியமுடியும். நிலவியல்ரீதியாக வாழ்விடத்தில் மட்டுமல்ல, அரசியல், பொருளாதார, பண்பாட்டுத்தளங்களில் இந்தியச் சமூகம் கடைபிடிக்கும் வெளிப்படையான ஒதுக்கல், தீண்டாமை மற்றும் பாரபட்சத்தின் குறியீடாகவும் விளங்குகின்றன சேரிகள்.

ஊருக்கும் சேரிக்குமான இந்த இடைவெளியையும் பாரபட்சத்தையும் ஒதுக்கலையும் நியாயப்படுத்திக் கொள்ளவும் அதில் வெடிப்போ உடைப்போ ஏற்பட்டுவிடாமல் தக்கவைக்கவும் குடும்பம், கடவுள், மதம், மொழி, கல்வி, கலை இலக்கியம், சட்டதிட்டங்கள், காவல், ராணுவம், நீதி, அரசு என பல்வேறு நிறுவனங்கள் மிகவும் வெளிப்படையாகவும் நுட்பமாகவும் கண்காணிக்கின்றன. எனவே தேசம், மொழி, நகரம், கிராமம் என எதுவொன்றோடும் தன்னை இணைத்து அடையாளப்படுத்திக் கொள்ள முடியாதவர் என்பதே ஒரு தலித்துக்கு பொருத்தமான அடையாளமாக இருக்க முடியும்.

‘நாட்டுக்கு ராஜா மாறினாலும் தோட்டிக்கு பொழப்பு மாறாது’ என்று என் பாட்டி சொன்ன அனுபவமொழி தலித்துகளின் வாழ்வும் இருப்பும் என்னவாக இருக்கிறது என்பதை உணர்த்திக் கொண்டே இருக்கிறது. சூரிய சந்திர வெளிச்சமும் தண்ணென்ற காற்றும் புழங்கத் தோதான விசாலப்பரப்புமற்ற சின்னஞ்சிறு சாளைகளுக்குள் தன் சொந்தபந்தங்கள் வசிப்பதையும்- அவர்கள் நிலபுலன்களற்ற பராரிகளாய் இருப்பதையும்- பிறசாதிகளின் உடைமையான நிலங்களில் கூலிகளாகவும் பண்ணையாட்களாகவும் உழன்று கிடப்பதையும்- சாதியின் பெயராலான அவமானங்களைத் தாங்கிக்கொள்ள வேண்டியிருந்தததையும்- சேரிக்கு வெளியே இருந்த ஊருக்குள் நடமாடுவதும் புழங்குவதும் தடைசெய்யப்பட்டிருந்ததையும் எண்ணியே என் பாட்டி இப்படி சொல்லியிருக்கக்கூடும்.

நிலவும் சமூக அமைப்பு குறித்த இந்த கூர்த்த விமர்சனம்தான் - சமூகம் குறித்த எனது பார்வையில் படிந்திருந்த புரைகளை நீக்கியிருக்கும் என்று சுயமதிப்பீடு செய்து கொள்கிறேன். எனவே யாதொரு நிகழ்வின்மீதும் தலித் வாழ்வை இணைத்துப் பார்க்கும் பயிற்சியும்கூட இப்படியாகத்தான் எனக்குள் ஏற்பட்டிருக்கக்கூடும்.

சாதியைப் பொறுத்தவரை, என் பாட்டியின் காலத்திற்கும் இப்போதைய நிலைமைக்கும் பெருத்த வேறுபாடுகளை என்னால் உணரமுடியவில்லை. இன்றும் எங்கள் உறவினர்களில் ஓரிருவரைத் தவிர மற்றவர்கள் நிலமற்றவராகவே உள்ளனர். அவர்களில் பெரும்பாலானவர்கள் ஆரம்பக்கல்வியை மட்டுமே எட்டியுள்ளனர். இப்பகுதியின் தொழில், வணிகத்தில் பங்கேற்குமளவுக்கு இவர்களிடம் மூலதனமில்லை. எனவே நிரந்தரத் தொழிலோ வருமானமோ அற்றவர்கள். இங்குள்ள எந்தக் கோயிலுக்குள்ளும் இவர்கள் அனுமதிக்கப்படுவதில்லை. ஊர்க்கிணற்றுக்குள் தண்ணீர் எடுக்கமுடியாது.

ஆனால் இந்த உண்மையைப் பார்க்காமல் ‘முன்புபோல் இப்போதில்லை, காலம் எவ்வளவோ மாறிவிட்டது... இப்போதெல்லாம் யாரும் சாதியே பார்ப்பது கிடையாது’ என்கிறவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். உண்மையில் அப்படி வாதாடுகிறவர்கள் யாரும் தங்கள் சுயவாழ்வில் சாதியை எந்தக்கட்டத்திலும் துறந்தவர்களில்லை. தீண்டாமையின் சில வடிவங்களை வெளிப்படையாக கடைபிடிக்கமுடியாமல் கைவிடப்பட்டதைத்தான் அவர்கள் சாதி ஒழிந்துவிட்டதாக அறிவிக்கிறார்கள்.

உடலுக்கு வெளியே தொங்கிக் கொண்டிருக்கும் தேவையற்றதொரு உறுப்பை வெட்டியெறிந்துவிட்டதைப் போல சாதியழிந்துவிட்டதாக செய்யப்படும் பிரகடனங்கள், சாதிவெறியரின் கொக்கரிப்பைவிட ஆபத்தானவை. சாதி, சுயவுணர்வாகவும் ஆழ்மனங்களில் கூட்டுநினைவாகவும் பதிவாகி பிறப்பில் தொடங்கி இறப்புக்குப் பின்னும் சடங்காகத் தொடர்கிறது. கடல்தாண்டி மலைதாண்டி கண்டம் விட்டுப் போனாலும் உள்ளிருந்து வழிநடத்துவதாய் சாதியே இருக்கிறது.

சாதிய மனநிலை பிறருக்கு பெருமிதத்தையும் சுதந்திரத்தையும் உரிமைகளையும் வழங்குகிற அதேவேளையில் தலித்துகளுக்கு துயரத்தையும் அவமானத்தையும் அச்சவுணர்வையும் ஆளுமைச்சிதைவையும் உருவாக்குகிறது. எனவே சாதியத்தை ஒழித்துக்கட்ட வேண்டும் என்ற இயல்புணர்ச்சி தலித்துகளுக்கு மட்டுமே இருக்க முடியும். தலித்தல்லாத பிறரிடம் சாதியத்துக்கு எதிரான உணர்வு அரசியல்ரீதியான முடிவாக- அமைப்பின் கொள்கையாக மட்டுமே இருக்கிறது, அது தன்னுணர்வாக மாறவில்லை. எனவேதான் பிரக்ஞைப்பூர்வமான கணங்களில் பொது இடங்களில், சாதிமறுப்பாளராக தென்படுகிறவர்களும்கூட சுயவாழ்வோடு தொடர்புடைய பல்வேறு தளங்களில் சாதிப்பற்றாளராக மாறிவிடுகிறார்.

சாதியழிப்பு தலித்துகளுக்கு மட்டுமே விடுதலையளிப்பதில்லை. பிறசாதியாரோடு ரத்தக்கலப்பு ஏற்பட்டுவிடாமல் சாதிப்புனிதம் காப்பாற்றுவதற்காக கனவுக்குள்ளும் வேவு பார்க்கும் கங்காணியாகவே வாழ்வின் பெரும்பகுதியை கழித்துக் கொண்டிருக்கும் தலித்தல்லாதவர்களுக்கே சாதியழிப்பு பெரும் நிம்மதியைத் தரக்கூடியதாயிருக்கும். இருந்தும் ஏன் சாதியை விட்டொழிக்க முடியவில்லை என்று கேள்வி எழுப்பினால் காலங்காலமாய் இருக்கிற சாதியை எப்படி ஒழிக்கமுடியும் என்று எதிர்வாதம் எழுப்புகின்றனர். உண்மையில் சாதி காலங்காலமாக, மனிதன் தோன்றியபோதே உடன் தோன்றிய ஒன்றா என்றறிய வரலாற்றுக்குள் நுழைய வேண்டியிருக்கிறது.

2.

சுருள்சுருளான காலவளையங்களுக்குள் நானும் நீங்களும் அடிமைப்படுத்தப்பட்ட வரலாறு உடலை மறைத்துக்கொண்டு வெட்கங்கெட்ட சிரிப்போடு வரவேற்கிறது என்னை. வரலாற்றின் இருட்டுக்குள் ஒளிரும் சிறு புள்ளிகளை வெளிச்சமாய்க் கருதி அதற்குள் ஓடிப்பார்க்கிறேன். அவை வெளிச்சமல்ல, இரைக்காகப் பதுங்கி நிற்கும் விலங்குகளின் கண்கள். என்னை மீட்டெடுத்துக் கொள்ள முடியும் என்று நான் பாய்ந்திறங்கிய வரலாறு என்னை கவ்விக் கொள்ளப் பாய்கிறது. இப்போது நான் வரலாற்றிலிருந்தும் வெளியேறி எனக்கான வரலாறை நானே எனது சொந்த மொழியில் எழுதத் தொடங்குகிறேன். அதற்கான ஆதாரத் தரவுகளை என் எதிரிகள் எழுதிச்சென்ற வரலாற்றின் இடைவெளிகளிலிருந்து எடுத்துக்கொள்கிறேன்.

இந்திய வரலாறு ஆரியர் ‘வருகை’யிலிருந்தும், இந்திய தத்துவஞானம் வேதங்களிலிருந்தும், இந்தியக் கலாச்சாரம் பார்ப்பனர்களின் சாஸ்திரீய சங்கீதத்திலும் பரதநாட்டியத்திலும் தொடங்குவதாய் புனையப்பட்ட கதைகளின் தொகுப்பாகவே இந்திய வரலாறு இருக்கிறது. ஆரியர்கள் இந்தியப் பரப்புக்குள் வந்தேறிகளாய் நுழைவதற்கு முன்பும் இங்கு மனிதர்கள் வாழ்ந்ததை மறைத்து ஆரியர்களை பூர்வகுடிகளாக்கும் வரலாற்று மோசடியே வரலாறாக இங்கு நிறுவப்பட்டுள்ளது.

கைபர் போலன் கணவாயின் இருமருங்கும் கடித்து வீசப்பட்ட குதிரை எலும்புகளைப் பின்தொடர்ந்து வருகிற வரலாற்றாளருக்கு ஆரியர்களின் பூர்வீகம் தெரியும். அவர்கள் திராவிடர்களை வெற்றிகொண்ட அவலத்தை தாங்கமாட்டாமல் தன்னைத்தானே அகழ்ந்து வெளிக்காட்டிக் கிடக்கின்றன ஹரப்பாவும் மொகஞ்சதாரோவும். ஆனால் ஆரியர்களின் இன்றைய வாரீசுகள் தாங்கள் வந்திறங்கியதை மறைக்க சரஸ்வதி நதிக்கரை நாகரீகம் என்ற ஒன்றை அகழ்ந்தெடுக்க முயற்சித்துக் கொண்டிருக்கிறார்கள். இன்னும் ஒருபடி மேலேறி, சிந்து சமவெளி நாகரீகத்தையே ஆரிய நாகரீகமாக மாற்றுகிற தகிடுதத்தங்களும் நடந்து கொண்டுதானிருக்கிறது.

உலகெங்கும் இடம் பெயர்ந்து அலைவது எல்லாக்காலத்திலும் மனித இயல்பாக இருக்கிறது. அப்படி ஏரல் ஏரியைச் சுற்றியுள்ள பிரதேசங்களிலிருந்து கிளம்பி வந்த த்ரேனியர்களின் வம்சா வழியினரான திராவிடர்கள் இந்த மண்ணின் பூர்வகுடிகளாகிய நாகர்களோடு கலந்தும் பொருதியும் உருவாக்கிய சிந்து சமவெளி நாகரீகத்தின் அழிமானத்திற்கு ஆரியர்களே காரணம் என்பது இன்றைக்கு நிறுவப்பட்ட உண்மை.

வேட்டையாடுதல், வேட்டையில் உயிரோடு பிடிக்கப்பட்ட விலங்குகளை மேய்த்து வளர்த்து தேவைப்படும் போது அடித்துத் தின்பதற்காக உருவான மேய்ச்சல் தொழில், விலங்குகளையும் அவற்றுக்கான மேய்ச்சல் நிலங்களையும் தேடியலைந்தததில் கிடைத்த அனுபவங்களிலிருந்து உருவான வேளாண்தொழில் என நாகரீகத்தின் வளர்ச்சியடைந்த நிலையில் ஓரிடம் தங்கி நிலைபெற்றுவிட்ட சமூகமாக திராவிடர்கள் இருந்துள்ளனர். அதாவது இயற்கையில் கிடைப்பதை உண்டு வாழ்கிற மிருகநிலையிலிருந்து முன்னேறி, உணவைத் தாமே உற்பத்தி செய்கிற நிலையை எட்டியிருந்தனர். இங்கு விலங்குகள் இப்போது வேளாண்மைக்குப் பயன்படும் கால்நடைச் செல்வங்களாக மாறிவிட்டிருந்தன.

இப்படி ஒரு நாகரீக நிலையை எட்டாமல் வேட்டைச்சமூகமாக- அதன் பொருட்டு நாடோடிகளாக- உற்பத்தியில் ஈடுபடும் வேளாண் அறிவற்றவர்களாக- திராவிடர்களால் செல்வங்களாய் போற்றப்பட்டக் கால்நடைகளை யாகங்களில் பொசுக்கித் தின்பவர்களாக - வந்திறங்கிய ஆரியர்கள் திராவிடர்களிடமிருந்து தனித்து வாழ முற்பட்டனர். அதாவது உழைப்பில் உற்பத்தியில் ஈடுபடும் மக்களை ஒதுக்கியும் அவர்களிடமிருந்து ஒதுங்கியும் வாழத் தலைப்பட்டனர். ஒதுக்குதலும் ஒதுங்குதலுமாகிய பார்ப்பனீயத்தின் வேர் இங்கிருந்தே தொடங்குகிறது. உடலுழைப்பை தீட்டாகக் கருதுகிற மனோபாவத்தின் தொடக்கமும் இதுதான்.

ஆரிய வர்த்தம் பிரம்ம வர்த்தம் என்று ஒதுங்கி வாழ்ந்தாலும் திராவிடர்களின் உடைமைகளை ஆக்கிரமித்து அவர்களை அடிமைப்படுத்தினாலும் தஸ்யூக்கள் சுஷ்ணதேவாஸ் என்று திராவிடர்களை இழிவுபடுத்தினாலும், ஆரிய திராவிட இனக்கலப்பு தவிர்க்க முடியாததானது. எனவே இவ்விடத்தில் இனக்கலப்பை தடுத்து நிறுத்தவேண்டிய பதைப்பில் இனத்தூய்மை கோட்பாடு ஆரியர்களால் முன்வைக்கப்பட்டது. இனத்தூய்மை பாதுகாக்கப்பட முடியாதாகிவிட்ட நிலையில் உருவான புதிய நிலைமையில் ஆரியர்கள் வர்ணக் கோட்பாட்டை முன்வைக்க வேண்டியதாயிற்று.

நாடோடிகளின் வழிநடைப் பாடல்களாகிய வேதங்களின் முதன்மையை ஏற்க மறுத்தவர்களும், மக்களின் சம்பாத்தியங்களையும் செல்வங்களையும் சுருட்டிக் கொள்கிற யாகங்களை எதிர்த்தவர்களும், அடிமைகளாக்கப்பட்டவர்களும் நால்வர்ணப் பாகுபாட்டுக்கு வெளியே அவர்ணர்களாக நிறுத்தப்பட்டனர். பஞ்சவர்ணமாக பிரித்து உள்ளடக்கிக் கொள்ளாமல் வர்ணத்துக்கு வெளியே நிறுத்தப்பட்டதற்கான இந்தக் காரணங்கள் பௌத்தத்தோடும் தொடர்புடையவை.

வர்ணத்தவருக்குள்ளும், வர்ணத்தவருக்கும் அவர்ணத்தவருக்கும் இடையேயும் ரத்தக்கலப்பு ஏற்பட்டு விடாமல் தடுக்கும் பொருட்டு வர்ணத்தூய்மையை நிலைநிறுத்தும் விதிகள் உருவாக்கப்பட்டன. இதன் இறுதிப்படுத்தப்பட்ட கோட்பாடாக இருக்கிறது கி.மு.160களில் சுமதி பார்கவா என்பவனால் எழுதப்பட்ட மநுஸ்மிருதி. வர்ணத்தூய்மையும் பாதுகாக்கப்பட முடியாததாகிவிட்ட நிலையில் வர்ணக்கலப்பில் உருவான சந்ததியினரை அனுலோமச் சாதிகள்( தொடத்தக்க சாதியினர்), பிரதிலோம சாதிகள் (தொடத்தகாத- தீட்டுக்குரிய சாதியினர்) என்று பிரித்தான் மநு. வர்ணநிலைகளுக்குள் மாறிக்கொள்ளும் ஏற்றஇறக்க நெகிழ்வுத்தன்மை சாதியமைப்புக்குள் கைவிடப்பட்டது.

மநு, சப்தரிஷிகள், குரு ஆகியோரிடமிருந்த வர்ண ஒதுக்கீட்டு உரிமையை ஒழித்துக்கட்டி பிறப்பை அடிப்படையாகக் கொண்டு- அதாவது தந்தையின் வர்ணமே பிள்ளைக்கு என்று மாற்றியவர்கள் பிராமணர்களே என்பதை அம்பேத்கரின் ஆய்வுகள் தெரிவிக்கின்றன (வர்ணப்பிரிவினையில் பெண் பொருட்படுத்தப்படவேயில்லை என்பதுபோல் தோன்றினாலும் உண்மையில் பெண்ணின் வர்ணத்தைப் பொறுத்தே வர்ணங்களின் படியிறக்கம் தீர்மானிக்கப்பட்டன. பெண்ணை தீட்டுக்குரியவள் என்று மநு அறிவித்ததை இந்தப் பின்புலத்தோடு புரிந்தகொள்ளலாம்.) வர்ணகாலத்தில் பிராமண, சத்திரிய, வைசிய வர்ணங்களின் அடிமைகளாக இருத்தி வைக்கப்பட்ட சூத்திர வர்ணத்தார், சாதியமைப்பு உருவானபோது தீண்டத்தகாத சாதியினராக மாறிப் போயினர். அதாவது தலித்தகள் மீது தீண்டாமையை கடுமையாக பின்பற்றுகிற இன்றைய பிற்பட்ட- இடைநிலைச்சாதியினர்- முன்னாள் தீண்டத்தகாதவர்கள் தான் என்பதை இவ்விடத்தில் நினைவிற்கொள்க.

இப்படி இணக்கம் காணமுடியாத- பன்மப் படிநிலை பகைப்பிளவுகளை சமூகத்தில் உருவாக்கியவர்களும் அதை கடவுள், புராணம், விதி ஆகியவற்றுடன் இணைத்து நிலைநிறுத்தியவர்களுமாகிய ஆரியர்களின் குணங்களோடு பெரிதும் பொருந்திப் போகிற இன்றைய வாரீசுகளாக பார்ப்பனர்கள் இருப்பது தற்செயலானதல்ல. வர்ணப்பிரிவுக்குள் தீண்டத்தகாதவர்களாக இருந்த சூத்திரர்கள் காலப்போக்கில் உயர்சாதியினராக தம்மைத்தாமே அறிவித்துக்கொண்ட போதிலும், பார்ப்பனர்களைப் பொறுத்தவரை அவர்கள் இன்றளவும் தீண்டத்தகாதவர்களாகவே இருக்கின்றனர் என்ற உண்மையை தலித்துகள் மட்டுமே அம்பலப்படுத்திக் கொண்டுள்ளனர். (இதில் பார்ப்பனப் பெண்களுக்கும் விதிவிலக்கில்லை)

சாதிகள் நிலைபெற்றுவிட்ட நிலையில் ஒரு சாதி - இன்னும் துல்லியப்படுத்தவதெனில் ஒரு உட்சாதி இன்னொரு உட்சாதியின் மீது கடைபிடிக்கும் தீண்டாமையைப் பொறுத்து சாதியின் புனிதம் அல்லது சாதித்தூய்மை நிலைநிறுத்தப்படுகிறது. சாதித்தூய்மையை காப்பாற்றிக் கொள்ள விரும்புகிற ஒரு சாதி தனக்குள் சில கட்டுப்பாடுகளை வகுத்துக்கொள்வதோடு திருப்தி கொள்வதில்லை. மாறாக தன் சாதிப் புனிதத்திற்கு இன்னின்ன சாதிகளால் பங்கம் எற்படும் என்ற அச்சத்தில் அது பிற சாதிகள் மீது கட்டுப்பாடுகளையும் விதிக்கிறது. இந்த கட்டுப்பாடுகள் எல்லாமே தீண்டாமையின் மூலமாக வெளிப்படக்கூடியவை.

இப்படி ஒவ்வொரு சாதியும் விதிக்கிற கட்டுப்பாடுகள் மற்றும் அதனடியான தீண்டாமைக் கொடுமைகள் யாவற்றையும் தாங்கும் அவலம் தலித்துகளுக்கு நேர்கிறது. எனவே ஒரு தலித் தனக்கு மேலேயிருக்கிற எல்லா சாதிகளின் வரலாற்றையும், வரலாற்றைப்போல் கட்டமைத்துள்ள புனைவுகளையும், அவர்களது அரசியலையும் பண்பாட்டையும் எதிர்த்து இயங்கவேண்டியுள்ளது. மட்டுமல்ல அதற்கு சற்றும் குறையாத தீவிரத்தோடு தலித் தனக்குள் படிந்து கிடக்கிற உட்சாதிப் பெருமிதங்களையும் அதன்பேரிலான தீண்டாமை உணர்வுகளையும் எதிர்த்து தனக்குள்ளேயும் போராட வேண்டியிருக்கிறது.

ஒதுக்குதலும் ஒதுங்குதலுமே பார்ப்பனியம் என்கிற எளிமைப்படுத்தப்பட்ட சொற்களின் வழியே சாதியத்தின் தோற்றத்தை கடந்துபோக நினைப்பது எளிதே. ஆனால் இதிலுள்ள பிரச்னை என்னவென்றால் இந்த ஒதுக்குதலும் ஒதுங்குதலும் என்பது வெறும் கோட்பாடாக கெட்டித்தட்டிப் கிடக்காமல் அன்றாட வாழ்வின் அல்லது கணப்பொழுதிலும் நடைமுறை வாழ்வோடு உயிர்ப்புடன் இணைக்கப்பட்டிருப்பதுதான். இனத்தூய்மை, வர்ணத்தூய்மை, சாதித்தூய்மை என்பதன் வழியாக நிறுவப்பட்டு இறுதியில் உட்சாதித் துய்மையைக் காப்பாற்றிக் கொள்வது தனிமனிதரின் பொறுப்பாக மாற்றப்பட்டிருப்பதால்தான் சாதியால் இன்றுவரை நீடித்திருக்க முடிகிறது.

மானம், மரியாதை, சுத்தரத்தம், ஒழுக்கம், பண்பாடு ஆகிய உணர்ச்சிமயமான வார்த்தைகளின் பின்னே மறைத்து மெழுகப்பட்டுள்ள சாதியுணர்வின் எல்லா அம்சங்களையும் எதிர்த்துப் போராடுவதோடு அதற்கு மாற்றாக ஒரு சமத்துவ சமூகத்தை முன்மொழிவதே தலித்தியம் என்று கருதுகிறேன். சாதியமைப்பின் எல்லாச் சுமைகளையும் தாங்கி துயருக்குள் அமிழ்ந்து கொண்டிருக்கிற தலித்கள்தான் இந்த போராட்ட மனநிலையை எட்டுவதற்கான உடனடிச் சாத்தியமுள்ளவர்கள் என்று அம்பேத்கர் கண்டறிந்த உண்மையின்மீது கட்டியெழுப்பப்பட்டதே தலித்தியம்.

3.

ஒரு சமூகத்தின் அடிப்படைத் தேவைகள் எவை, அவற்றை எவ்வாறு ஈட்டுகிறது, ஈட்டியவற்றையும் இயற்கை வளங்களையும் தமக்குள் எவ்வாறு பகிர்ந்து விநியோகித்துக் கொள்கிறது, அம்முறைமைகளை நிலைநிறுத்துவதற்காக மக்களின் மனங்களை எவ்வாறு தகவமைக்கிறது என்பவற்றை அச்சமூகத்தின் பொருளாதார அரசியல் பண்பாட்டு முறைகளாக வரையறுக்கும் பட்சத்தில் இந்தியா ஒரு சமூகமாக இல்லை என்று எடுத்தயெடுப்பில் சொல்லிவிட முடியும். இந்திய சமூகம் தலித்துகள், தலித்தல்லாதவர்கள் என்று இருவேறு சமூகங்களாக எல்லா நிலைகளிலும் பிளவுண்டிருக்கிறது.

இருகூறாய்க் கிடக்கும் இந்த சமூகத்தை ஒன்றிணைப்பதாய் சொல்லிக் கிளம்பிய பல்வேறு தத்துவங்களையும் அமைப்புகளையும் உள்வாங்கிச் செரிப்பதாய் சாதியமும் இந்துமதமும் வலுப்பெற்றதற்கான சூட்சுமங்களை அவற்றின் வேர்வரைத் துழாவி ஆய்ந்தவர்களாகவும் அதனாலேயே அவற்றை எதிர்த்தொழிக்கும் போராளிகளாகவும் ஃபூலே, அம்பேத்கர், பெரியார் ஆகியோரை காலம் நமக்கு வழங்கியுள்ளது. ஒடுக்கப்பட்ட சாதியின் விடுதலை என்ற செயல்முழக்கத்தின் உட்பொருளான சாதியழிப்பானது இந்திய உழைப்பாளி வர்க்கத்தின் விடுதலையாகவும்- ஆகவே அது மார்க்சீயத்தோடு ஒரு இயல்புறவைக் கொண்டிருக்கிறதென்றும் வரையறுக்க முடியும்.

1970களில் மராட்டியத்தில் உருவான தலித் பேந்தர்ஸ் இயக்கத்தின் பிரகடனத்தில் காணப்படும் தலித் என்ற வரையறையும், உழைக்கும் வர்க்கம் என்ற மார்க்சீய வரையறையும் சற்றேறக்குறைய ஒன்றாக இருப்பதைக் காணமுடியும். ஆனால் ஒடுக்கப்பட்ட சாதியினரையும் உள்ளடக்கிய இந்த பொதுஅடையாளத்தின் கீழ் மற்றவர்கள் யாரும் அணிதிரள முன்வராத நிலையில் தலித் என்பது தீண்டாமைக்குள்ளாகும் சாதிகளை மட்டுமே குறிப்பதாய் சுருங்கிப்போனது. எனவேதான் 1993இல் தமிழகத்தில் வெளியிடப்பட்ட ‘தலித் அரசியல்’ என்ற ஆவணம் ‘ஏதோவொரு வகையில் தீண்டாமைக்குள்ளாகும் சாதியைச் சார்ந்த மக்களே தலித்துகள்’ என்று புதிய வரையறையை முன்வைக்க வேண்டிய நெருக்கடி உருவானது. ஆனாலும் தீண்டாமைக்குள்ளாகும் எல்லாச் சாதிகளும் இணைந்த ஒரு அரசியல் இயக்கமோ அல்லது கூட்டமைப்போ உருவாகவேயில்லை.

நாடுமுழுதும் தலித்துகளிடம் தனக்கிருந்த செல்வாக்கைப் பயன்படுத்தி அவர்களை தேசியஅளவில் ஒரே அமைப்பின்கீழ் ஒன்றுதிரட்ட அம்பேத்கர் என்ற தன்னிகரற்ற ஆளுமையாலும்கூட முடியவில்லை. நாட்டின் பலபாகங்களிலும் இயங்கிவந்த பல்வேறு அமைப்புகளின்மீது கருத்தியல்ரீதியாக அவர் செல்வாக்கு செலுத்தக்கூடியவராக இருந்தபோதும் இந்துமதத்திலிருந்து வெளியேறி பௌத்தத்தைத் அவர் தழுவிய போதும்கூட அது மராட்டியத்திற்கு வெளியே இந்துமதத்திற்கு பெருத்த சேதாரம் எதையும் விளைவிக்கவில்லை. எனவே அவருக்குப் பிந்தைய தலித் இயக்கங்களின் செயற்களம் மாநில எல்லைக்குள்ளான உட்சாதி அணிதிரட்டலாக சுருங்கிப் போனதில் வியப்புகொள்ள ஒன்றுமில்லை.

80க்கும் மேற்பட்ட உட்சாதிகளைக் கொண்ட தீண்டத்தகாதாரின் ஒட்டுமொத்தப் பிரதிநிதியாக ஒவ்வொரு தலித் அமைப்பும் உரிமை கொண்டாடினாலும் நடைமுறையில் சுயசாதி வட்டத்தைவிட்டு வெளித்தாவ முடியாமல் சுருங்கிக் கிடக்கின்றன. ஒவ்வொரு தலித் அமைப்பு உருவாகும்போதும் இதுவாவது, சாதியமைப்பை முன்னேறித்தாக்குமா என்ற எதிர்பார்ப்பு உருவாகிறது. ஆனால் கெடுவாய்ப்பாக, வெகுவிரைவியே அவ்வமைப்பும் ஒரு தற்காப்பு மனோபாவத்திற்குள் முழுகிவிடுகிறது. இந்த பலவீனம்தான், இயக்கங்களுக்குள் அணிதிரண்டிருப்பவர்களின் உணர்வுநிலைகளை உயர்த்தி சாதியழிப்புப் போராளிகளாக மாற்றுவதற்குத் தடையாக இருக்கிறது.

தலித்துகளிடம் செலாவணியாகத்தக்க ஒரே அடையாளமாக அம்பேத்கர் மாறிவிட்டபோதிலும் அவரது கருத்தியல் போதங்களை பின்பற்றக்கூடியவையாக அவருக்குப் பிந்தைய தலித் இயக்கங்கள் செயல்படவில்லை. அவரது புகைப்படங்களையும் சிலைகளையும் வணக்கத்திற்குரியதாய் மாற்றிவிட்டு நடப்புலக அரசியல் சூழலுக்குள் தம்மைப் பொருத்திக்கொள்ளும் இயக்கங்களாக அவை தம்மைத்தாமே கீழிறக்கம் செய்துகொண்டன. தலித் மக்கள் மீதான தீண்டாமைக் கொடுமைகளை எதிர்ப்பதில் மட்டுமே இவ்வியக்கங்களின் அக்கறைகள் குவிந்துள்ளன. அதுவும்கூட, மிகவும் வெளிப்படையான வடிவங்களில் வெளிப்படுகிற தீண்டாமைகளைத்தான் எதிர்க்கின்றன.

இந்த நாட்டின் இயற்கைவளங்கள், பொதுச்சொத்துகள், நிதிசார் நடவடிக்கைகள், கலாச்சார சின்னங்கள், பண்பாட்டு நடவடிக்கைகள் ஆகியவற்றிலிருந்து தலித்துகள் முற்றாக ஒதுக்கி வைக்கப்பட்டிருக்கின்றனர். அரசு அலுவலகங்கள், மருத்துவமனைகள், வங்கிகள், கல்விக்கூடங்கள் எல்லாவற்றையும் தலித் குடியிருப்புகளுக்கு வெளியே ‘ஊருக்குள்’ மட்டுமே அமைப்பதன் மூலம் அரசாங்கமே தன்னியல்பாக தலித் புறக்கணிப்பை கைக்கொண்டிருக்கிறது அல்லது தலித்தல்லாத சாதிகளின் சார்புடையதாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.

தலித்துகளின் கல்வி வேலை சுகாதாரம் உள்ளிட்ட வாழ்வாதார உரிமைகள் ஆட்சியாளர்களின் கருணைக்கு உட்பட்டதென்ற கேவலம் நீடிக்கிறது. உதவித்தொகை பெற்று தலித் மாணவர்கள் கல்வி பயில்வதைத் தடுக்க 60 சதம் மதிப்பெண்கள் ஈட்டியாக வேண்டும் என்ற நிபந்தனையை விதித்ததன் மூலம் அரசின் செயல்பாடுகள் எந்தளவிற்கு தலித் விரோதமானது என்பதை உணரமுடியும். தலித்துகள் கையிலிருந்த பஞ்சமி நிலங்கள் அரசுஇயந்திரத்தின் உதவியோடுதான் பிறசாதியினரால் அபகரிக்கப்பட்டிருக்கிறது உன்பதையும் இணைத்துப் பார்க்க வேண்டும்.

ஆறாவது ஐந்தாண்டுத் திட்டம் முதற்கொண்டு அரசின் வரவு செலவுத் திட்டத்தில் சிறப்புக்கூறு திட்டத்திற்கு ஒதுக்கப்பட வேண்டிய ஆயிரக்கணக்கான கோடிகளை முழுமையாக ஒதுக்காமல் மத்திய அரசு குறைத்தனுப்புவதும், அதை முறையாக செலவழிக்காமலே மாநில அரசுகள் திருப்பியனுப்புவதும் கூட தலித்விரோத நடவடிக்கைகள்தான். இப்படியான பிரச்னைகளை வலுவான குறுக்கீட்டின் மூலம் மாற்றியமைக்கும் ஏட்டளவிலான திட்டம்கூட இப்போதைய தலித் அமைப்புகளிடம் இல்லை. எனவே தலித் இயக்கங்களின் திட்டங்கள் செயல்பாடுகள் வழியாக தலித்தியம் என்பதற்கான அர்த்தத்தை நம்மால் வருவித்துக் கொள்ள இயலாது.

வலியுறுத்தப்படும் மேற்கண்ட செயல்பாடுகள் எல்லாமே இந்த சாதிய சமூகத்திற்குள் தலித்துகளின் இருப்பை உறுதிப்படுத்துவதற்கான சாத்தியங்களைப் பற்றிய முன்மொழிவுகள்தான். இவை ஒருபோதும் தலித்தியத்தின் மிக அடிப்படைப் பண்பான சாதியழிப்புக்கு மாற்றாகிவிட முடியாது.

4.

இந்த வரியை வாசிக்கத்தொடங்கும் இந்த கணத்தில் வன்புணர்ச்சிக்கும், தாக்குதலுக்கும், உயிரிழப்புக்கும் தலித்துகள் ஆளாகிக் கொண்டுதானிருக்கின்றனர். மனிதப்பண்புகளும் நாகரீகச் சமூகத்தின் விழுமியங்களும் துளியுமற்ற கீழ்மையான வடிவங்களில் அவர்கள் மீது வன்கொடுமைகள் நிகழ்ந்தபடியே இருக்கின்றன. அரசியல் சட்டம் வகுத்தளித்துள்ள உரிமைகளும்கூட அவர்களை எட்டுவதில்லை. தங்கள் வீட்டு பெட்டைநாயின் கற்பை காப்பாற்றிக் கொள்வதற்காக தலித்துகள் ஆண்நாய் வளர்க்கக்கூடாது என்று தடைபோடுமளவுக்கு சாதிவெறியர்களின் கொட்டம் உச்சத்தில் நின்றாட்டுகிறது இச்சமூகத்தை. ஆனாலும் காலத்தின் கண்ணாடி என்று போற்றப்படுகின்ற கலை இலக்கியத்தில் இக்கொடுமைகளெல்லாம் பதிவு செய்யப்படுவதேயில்லை.

சுற்றிலுமுள்ள சமூகத்தை பரந்து நோக்காமல் தனக்குள் சுருங்கி தனக்குள்ளேயே ஆழ்ந்து உள்ஆழ் விவகாரங்களைத் தேடி எழுதுகிற - துளியும் அரசியல் பார்வையற்றவர்களாகவே பெரும்பாலான படைப்பாளிகள் உள்ளனர். சொந்த வாழ்வனுபவங்களை எழுதுவதன் பெயரால் தாங்கள் பிறந்து வளர்ந்த சாதியின் மனநிலைக்குள் நின்றே உலகத்தைப் பார்ப்பதால் சாதிய ஒடுக்குமுறையோ தலித்துகளின் துயரமோ அவர்களுக்கு இயல்பானவையாகத் தோன்றுகின்றன. எனவே அவர்களது படைப்பு மனமும் தொந்தரவடைவதில்லை. தவிரவும் இந்தியச் சமூகம் பதிய வைத்துள்ள பொதுப்புத்தியிலிருந்து விடுபடுவதற்கும் அவர்கள் முயற்சிக்காதிருக்கின்றனர். இத்தனைக் குறைபாடுகளுடனேயே ஒருவர் இலக்கியவாதியாய் இருந்துவிடுவதும் சாத்தியம்தான். அப்படியானவர்களின் படைப்புகள் யாருடைய மனசாட்சியோடும் உரையாடப் போவதில்லை. இருந்தபோதும் அப்படியான படைப்புகள் வெகுவாக கொண்டாடப்படுகின்றன.

ஏடறிந்த இலக்கியங்கள் யாவிலும் தாங்கள் எங்கே என்று கேள்வியெழுப்பிய தலித்துகள், தாங்களே தங்களை எழுத வந்தார்கள். இதுவரையான இலக்கியப்பிரதிகள் யாவிலும் பொதிந்து கிடக்கிற சாதிய மனோபாவங்களையும் பார்ப்பனீய கருத்தியல் செல்வாக்கையும் ஒடுக்குமுறையின் கூறுகளையும் அம்பலப்படுத்தினார்கள். கலை இலக்கியத்தைச் சுற்றிச் சுழன்று கொண்டிருந்த ஒளிவட்டங்களை கீழிறக்கி தங்களது விமர்சனங்களின் எதிரொளியால் நிறம் மங்கச் செய்தார்கள். லலித் இலக்கியம் என்று கொண்டாடப்பட்ட இதுவரையான எல்லாப் படைப்புகளுக்கம் எதிர் நடவடிக்கையாக தலித் இலக்கியத்தை முன்வைத்தார்கள்.

ஒடுக்குமுறையின் வலி தாளாத புலம்பல்களும் விசும்பல்களும் சாதியமைப்பு தமக்கிழைத்தக் கொடுமைகளின் சுயரூபங்களையும் தொடக்ககாலத்தில் வெளிப்படுத்திய தலித் படைப்புகள், நாளாவட்டத்தில் இச்சமூக அமைப்பை தூக்கியெறிவதற்கான அறைகூவல்களையும் விடுக்கத் தொடங்கியது. அய்யய்யோ கலை இலக்கியத்தில் பிரச்சாரம் புகுந்துவிட்டதே என்ற புனித இலக்கியவாதிகளின் பொருமல்களைப் புறந்தள்ளி கலக இலக்கியமாக உருவெடுத்தது. வாழ்நாளில் ஒருபோதும் சேரிக்குள் நுழைந்துவிடாமல் சாதியாசாரம் காப்பாற்றிக் கொண்டிருந்த வாசக மனத்தின் மீது தலித் படைப்பாளிகள் தங்கள் கையிலிருந்த மலக்கரண்டியைத் துடைத்தார்கள். இந்துமதத்தின் எல்லாக் கடவுள்களையும் செத்தமாடு தூக்க அனுப்பிவைத்தார்கள். தலித் அரசியல் தீவிரம் கண்டபோது அதன் மனசாட்சியைப் போல தலித் படைப்புகளும் உடனெழுந்து வந்தன. தனிமனிதனின் அந்தரங்கமாய் இருந்த வாசிப்புமுறைக்கு எதிராக தெரு முச்சந்திகளில் நின்று மக்களுக்காக வாசித்தார்கள்.

உயர், நடுத்தர வர்க்க மனக்கிளர்ச்சிகளும் அவசங்களும் எழுதிக் குவிக்கப்பட்டு வந்த காலத்தில், எளிய உழைப்பாளி மக்களை கதைமாந்தர்களாகவும் பாடுபொருளாகவும் முன்னிறுத்திய இடதுசாரி இலக்கியத்தையே தலித் இலக்கியத்தின் முன்னோடியாகக் கொள்ளமுடியும் என்பார் தலித் இலக்கிய முன்னோடிகளில் ஒருவராகிய அர்ஜூன் டாங்ளே. ரஷ்யப்புரட்சியின் தாக்கத்தில், ஒடுக்கப்பட்ட உழைக்கும் வர்க்கத்தின் பாடுகளை எழுதப்புகுந்த இடதுசாரி இயக்கப் படைப்பாளிகள், அடிப்படைத் தொழிலாளி வர்க்கமாய் இருக்கின்ற தலித்துகளைப் பற்றி எழுத நேர்ந்தது இயல்பான ஒன்றே.

ஏற்றத்தாழ்வுகளற்ற ஒரு சமூகத்திற்கான கனவில் தலித்துகளுக்கும் இடமளித்த அவ்வகை இலக்கியங்களிலிருந்தும், எழுத்தறிவு மறுக்கப்பட்டதொரு சமூகம் என்ற வகையில் வாய்மொழி மரபையும் நிகழ்த்துக் கலைகளையும் வெளிப்பாட்டு வடிவமாகக் கொண்டிருந்த தமது முன்னோர்களிடமிருந்தும் தலித் படைப்பாளிகள் தமக்கான மொழியையும் வடிவையும் பெற்றுக் கொள்ள வேண்டியிருக்கிறது. நிலவும் சமூக அமைப்பின் மீதான விமர்சனங்களை அல்லது விரும்பும் சமூகத்திற்கான கனவுகளை கதையாக, பாடலாக, பழமொழிகளாக, கூத்தாகப் புனைந்து தலைமுறை தலைமுறையாக வெளிப்படுத்தி வந்துள்ள தலித் மரபின் அறுபடாதக் கண்ணியாக தன்னை உணர்கிறவர்களிடமிருந்து அந்தந்தக் காலத்திற்கான தலித் இலக்கியம் எழுகிறது.

ஒருவரது வாழ்வனுபவங்களே படைப்புகளாக வெளிப்படுகிறது எனில், தலித்துகளின் வாழ்வனுபவம் என்னவாக இருக்கிறது?. சிறையைப்போல் குறுக்கப்பட்ட சேரியில் பிறந்து, ஏவல் பணி செய்து, ஒடுக்குமுறையாளர்களிடம் பணிந்தும் அண்டியும் வாழ்வதை இயல்புணர்வாய்க் கொண்டு, போதிய சத்தும் ஆகாரமும் கல்வியும் சுகாதாரமும் மறுக்கப்பட்ட நிலையில் வாழ பழக்கப்படுத்தப்பட்டு, அவமானங்களால் மனஉளைச்சலுக்கும் ஆளுமைச் சிதைவுக்கும் ஆளாக்கப்பட்டு, சுதந்திரவுணர்வை வெளிப்படுத்தவே வாய்ப்பின்றி வளரும் ஒரு தலித், இந்த சமூகத்தோடு பகிர்ந்துகொள்ளவும் உரையாடவும் என்னதான் இருக்கிறது?

துன்பதுயரங்களும் அதிலிருந்து விடுபட வேண்டுமென்ற தவிப்பும் கண்ணியமானதொரு வாழ்க்கைக்கான விழைவுகளை அடைவதற்கான ஆவேசமும் சூழ தத்தளித்துக் கிடக்கும் மனதை படைப்பின் எந்த வடிவத்திலாவது வெளிப்படுத்திவிட முடியாதா என்ற ஆதங்கமே தலித் இலக்கியமாக படைப்புலகத்திற்குள் பாய்கின்றன. இந்த மனநிலைக்குள் கிடந்து உழன்று பொறுமி திமிறிக் கொண்டு வராத எதுவொன்றையும் தலித் படைப்பாக கொண்டாடும் சலுகையை எதன் பேராலும் யாருக்கும் வழங்கமுடியாது.

தலித் இலக்கியம் இலக்கு இருவகையாகப் பிரிகிறது. ஒன்று, துயரங்களை பகிர்ந்துகொள்வது, ஆற்றுப்படுத்துவது, சுயமரியாதை உணர்வு கொள்வது, தமது வாழ்வியற் பண்புகளின் தனித்துவத்தைக் கொண்டாடுவது, ஒடுக்குமுறைக்கு எதிராக கிளர்ந்தெழுவதற்கான அறைகூவலை விடுப்பது ஆகிய உள்ளடக்கப் பண்புகளோடு தன் சொந்த மக்களுடன் உரையாடுவது. மற்றொன்று, தீட்டு - புனிதம், உயர்வு - தாழ்வு, நல்லது - கெட்டது என்று இந்துமதமும் சாதி முறைமையும் வகுத்துள்ள நம்பிக்கைகள் எல்லாவற்றையும் கேள்விக்குட்படுத்துவது, பகடி செய்வது, சாதிப் பெருமித உணர்விலிருந்து கிளம்புகிற ஒடுக்குமுறை மனோபாவத்தை சிதறடித்து நிலைகுலைய வைப்பது, சாதி உணர்விலிருந்து விடுபட்டு மனிதாய உணர்வுகளைத் தழுவிக் கொள்வதன் மூலம் ஒரு சமத்துவ சமூகத்திற்கான நிர்மாணத்தில் பங்கேற்குமாறு அறைகூவல் விடுப்பது ஆகிய உள்ளடக்கங்களை முதன்மைப்படுத்தி தலித்தல்லாத வாசகர்களோடு உரையாடுவது.

தமிழ் வாசகப்பரப்பு தலித்தல்லாதவர்களாலேயே நிரப்பப்பட்டுள்ளது என்பதை கவனத்தில் கொள்கிற தலித் படைப்பாளி, ஒரு மாற்றுக்கருத்தாளனோடு விவாதிக்கிற ஜனநாயகவாதியாகவும், எதிர்த்தாக்குதல் தொடுக்கிற போராளியாகவும் மட்டுமல்ல, சாதியால் பீடிக்கப்பட்ட ஒரு மனநோயாளியை குணப்படுத்துகிற மருத்துவரைப்போலவும் தன்னை தகவமைத்துக் கொள்ள வேண்டியிருக்கிறது. எனவே தலித் படைப்பாளி தனக்கு முன்னுதாரணமாய் தானே வாழ்ந்துகாட்ட வேண்டியிருக்கிறது - சொந்த வாழ்விலும் படைப்பின் வழியேயும்.

ஆனால் இரண்டுமொழிகள் தெரிந்த ஒருவர் தன்னை பன்மொழிப்பாவலராக கருதிக் கொண்டு மொழிபெயர்ப்புத் திலகமாக மாறிவிடுகிற அபத்தத்தைப் போலவே இரண்டு தலித்துகளை கதாபாத்திரங்களாக வைத்து எழுதப்பட்டதையெல்லாம் தலித் இலக்கியமாக வகைப்படுத்திவிடுகிற அபத்தமும் இங்கு நிகழத்தான் செய்கிறது. தலித்துகளின் அகநிலைப் பாடுகளை புறக்கணித்துவிட்டு வெறுமனே பொருளியல் சார்ந்த புறவாழ்க்கையை எட்டியெட்டிப் பார்த்து எழுதிய பதிவுகளையெல்லாம் தலித் இலக்கியம் என்று கொண்டாடுகிற போக்கு இங்குள்ளது. நிலவும் சமூகத்தின் மீது யாதொரு விமர்சனமும் குறுக்கீடும் இன்றி உள்ளதை உள்ளவாறே சொல்லிச் செல்லும் படைப்புகளை தலித்தல்லாதவர்களாலும் எழுதமுடியும். அவற்றை தலித் ஆதரவு எழுத்தாக வகைப்படுத்துவதற்கு பதிலாக அவையே தலித் இலக்கியம் என்பதாக சித்தரிக்கும் மோசடிகள் இங்கு பரவலாக நடப்பதன் பின்னுள்ள கபடம் நாமறிவோம்.

தலித்தாக பிறந்ததற்காக அடைய வேண்டிய இழிவுகளைப் பற்றிய ஒருவரது விமர்சனம் தவிர்க்க முடியாத வகையில் தலித்தல்லாத பிற சாதியார் மீது வாசிக்கப்படும் குற்றப்பத்திரிகையாகவும் அமைந்துவிடுகிறது. எனவே வெறும் வாசிப்பனுபவத்திற்காக மட்டுமே வாசிக்கிற உல்லாசிகள் தலித் இலக்கியம் முன்வைக்கும் உண்மைகளை எதிர்கொள்ளும் திராணியற்று மொழி, வடிவம், நுட்பம், கலைநயம் என்று அழகியல் கோட்பாடுகளை திரையாகப் பிடித்துக்கொண்டு ஒளிந்து கொள்கின்றனர்.

இந்தியப் பத்திரிகை மற்றும் பதிப்புத்துறையில் கொள்கை முடிவெடுக்கும் அதிகாரமுள்ள பொறுப்புகள் அனைத்தும் தலித்தல்லாதவர்களாலேயே ஆக்ரமிக்கப்பட்டிருக்கிற நிலையில் எத்தனை நுட்பங்களோடு ஒரு தலித் படைப்பு உருவாகிவிட்டாலும் அது பிரசுரமாவது பெரும்பாடாகத்தான் இருக்கிறது. இங்கே படைப்புகளை தேர்வு செய்வதில் சாதி வகிக்கும் பங்கு கவனிக்கத்தக்கது. தலித்துகள் மத்தியில் பரவலாக அறிமுகம் பெற்ற சிலரது படைப்புகள் பிரசுரமாகாமலில்லை. அது நேர்மையான தேர்வின் பொருட்டு நிகழ்வதல்ல. கல்வி பெற்ற தலித்துகளில் ஒருபகுதியினர் இலக்கியவாசிப்பில் ஆர்வம் கொண்டிருப்பதால் அவர்களையும் தமது வாசகராக ஈர்த்துக்கொள்ள வேண்டும் என்கிற அப்பட்டமான வியாபாரத் தந்திரமே அது. எனவே இங்கு தலித் படைப்புகளை வெளியிடவும் பதிப்பிக்கவும் அவற்றை தலித்தல்லாதவர் கைக்கும் எட்டக்கூடியனவாக மாற்றுவதற்கும் பரவலாக்குவதற்குமான திட்டங்களை வகுக்க வேண்டியுள்ளது.

5.

தலித் இலக்கியம் என்பதை, எழுத்து வடிவிலான இன்றைய படைப்புகள் என்று சுருக்கிப் புரிந்துகொள்ள வேண்டியதில்லை. எழுத்தறிவு மறுக்கப்பட்ட அவர்களது மூதாதைகளின் வாய்மொழிக் கதைகளையும் நிகழ்த்துக்கலைகளையும் எழுத்துவடிவில் ஆவணப்படுத்தி தலித் இலக்கியத்திற்கு முழுப்பரிமாணத்தை உருவாக்குவது அவசியம்.

தலித் அமைப்புகள் அதிகரித்துவிட்ட போதிலும் தலித்துகள் மீதான வன்கொடுமைகள் குறைந்தபாடில்லை. இதனால் பெரிதும் தொந்தரவடைகிற தலித் படைப்பாளிகள் தங்களது படைப்பின் மையக்கருவாக தீண்டாமையையே முன்னிறுத்த வேண்டியுள்ளது. இதை தலித் படைப்பாளிகளை தடம் மாற்றி விடக்கூடிய ஒரு சூது என்று புரிந்துகொள்ள வேண்டியதில்லை என்றாலும் அவர்கள் வேறுதளங்களையும் களங்களையும் படைப்புக்கள் கொண்டு வருவதற்குத் தடையாக இருக்கிறது. மந்தகதியில் தலித் அரசியல்களம் இருக்கும்போது அதைத் தூண்டும் பொறுப்பும்கூட தலித் படைப்புகளுக்கு இருக்கிறது. எனவே தலித் படைப்பாளிகள் அவ்வப்போது முகாமாக ஒன்றுகூடுவதும் நடப்புலகின் நிலவரத்தில் வலுவான கருத்தியல் தலையீடுகளை உருவாக்கும் குழுவாக சேர்ந்தியங்குவதும் இன்றைய அவசியமாகிறது. தேசத்தின் விவாதக்களத்தில் தலித்துகளின் தலையீடுகளை உறுதிப்படுத்த தலித் படைப்பாளிகளே பங்களிப்பு செய்யமுடியும்.

தலித் எழுத்தாளர்கள் சந்திக்கும் இன்னொரு உளவியல் நெருக்கடி, அங்கீகாரம் தொடர்பானது. பரிசுகள், விருதுகள், நூலகத்திற்கான தேர்வுகள், மொழிபெயர்த்தல் ஆகியவற்றில் சாதியமும் செல்வாக்கு செலுத்தும் நிலையில் தலித் படைப்புகளுக்கான அங்கீகாரத்தை முதலில் தலித்துகள் வழங்க வேண்டியுள்ளது. இதன்பொருட்டு மொழிவாரியாகவும் சர்வதேச அளவிலும் தலித் இலக்கியத்திற்கான விருதுகள் உருவாக்கப்பட வேண்டும். விருதுகள் சிறந்த இலக்கியத்தை உருவாக்கிவிடாது என்ற சமாதானங்கள் இங்கு தேவையற்றது. தன் சொந்த மக்களுக்காக இயங்குகிற படைப்பாளிகளை அந்த மக்கள் கொண்டாடுவதில் தவறொன்றும் இல்லையே?

- ஆதவன் தீட்சண்யா ([email protected])

இவரது மற்ற படைப்புகளைக் காண இங்கே அழுத்தவும்


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com