Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
KeetruLiteratureArticle
கட்டுரை

படமல்ல...நிஜம்
ஆதவன் தீட்சண்யா


Aadhavan Dheetchanya ஒவ்வொரு நாட்டின் பூர்வகுடிகளையும் கொன்றொழித்து அவர்களது உடமைகளை கொள்ளையிட கிளம்பிய கொலம்பஸ்சின் கப்பல் இன்னும் நிற்கவேயில்லை. அது எல்லைகளனைத்தையும் தாண்டி இப்போது மூன்றாம் உலக நாடுகளின் குருதிக் கடலில் நீந்தித் திளைக்கிறது. அந்த நாசகார கப்பல் முழுக்க ஆயுதங்கள், மூலதனம், அறிவாளிகள், கொள்ளையர்கள், ஒற்றர்கள் மற்றும் மாறுவேடம் தரித்த அடியாட்கள். அடியாட்கள் தமிழ் சினிமாவில் வருகிறவர்களைப் போல கைலியும் முண்டா பனியனும் அணிந்து கழுத்தில் கர்சீப்பும் புஜத்தில் தாயத்தும் கட்டிக் கொண்டு அலைய மாட்டார்கள். பார்த்தால் எளிதில் அடையாளம் கண்டுகொள்ள முடியாதபடி நேர்த்தியான உள்ளூர் அலங்காரங்களோடு கோர்ப்பசேவ், எல்ட்சின் போலவோ ஏன் நமது மன்மோகன்சிங் அல்லது சிதம்பரம் போலவோ இருப்பார்கள். இவர்கள் தான் தத்தமது நாட்டின் குரல்வலையை அறுத்து கொலம்பஸ் குடிக்க ரத்தம் தருகிறவர்கள்.

உண்மையில் இவர்கள் ஒரு பெயரில் திரிபவர்களல்ல. ஒரு கட்சியை சேர்ந்தவர்களுமல்ல. வாஜ்பாய், அருண்ஷோரி, முரசொலி மாறன், கருணாநிதி, சந்திரபாபு நாயுடு, ஜெயலலிதா என்று தொடங்கி உள்ளூரின் ஒவ்வொரு சந்திலும் இவர்கள் பரவிக் கிடக்கின்றனர். மேலோட்டத்தில் பார்த்தால் ஒருவருக்கொருவர் பகைகொண்டு வெறுப்பதுபோல் தெரிந்தாலும் இவர்கள் அனைவருமே கொலம்பஸ்சின் கொள்ளைக்கு உடந்தை. அவனது எச்சிலை இரந்தும் உண்டும் பிழைத்திருக்கும் சுயமரியாதையற்றவர்கள். மெயின் வில்லனின் மனதில் இடம் பிடிக்க இவர்களுக்குள் நடக்கும் போட்டியை நாம் ஆளுங்கட்சி எதிர்க்கட்சி மோதலாக ரசித்துக் கொண்டிருக்கிறோம். ஆகவே இனி நமக்கு ஆளுங்கட்சி ஆளாத கட்சி என்ற பாகுபாடு தேவையில்லை. அவர்கள் எல்லோரும் ஒரே அணியின் நலனுக்காக பேசிவைத்துக் கொண்டு எதிரெதிராய் நின்று ஆடிக் கொண்டிருக்கிறார்கள் என்பதை விளங்கிக் கொள்வோமாக.

இந்த ஆட்டத்தில் ஒரு எளிய இந்தியர் அல்லது பச்சைத் தமிழர் வாழ்க்கை எப்படி பணயம் வைத்தாடப்படுகிறது என்பதற்கு பொருத்தமான உதாரணம் சாலைப் பணியாளர்கள் தான். இலாகா இல்லாத மந்திரியாக எந்த வேலையுமில்லாமல் (வெட்கமுமில்லாமல்) வெட்டியாய் கிடப்பவரும்கூட தனது சம்பளத்தில் சலுகையில் லஞ்சத்தில் ஒரு பைசாவையும் குறைத்துக் கொள்ளாத இந்தக் காலத்தில் உழைப்பவனுக்கு கூலி தருகிறபோது மட்டும் உலகப் பொருளாதாரத்தையே அலசுவார்கள். சிக்கனம், சீரமைப்பு என்பார்கள். வேலையில்லாத் திண்டாட்டத்தை பெருக்கி மனித உழைப்பை மலிவாக்கி எந்தளவுக்கு குறைவான கூலியில் உழைப்பைச் சுரண்டுகிறார்களோ அந்தளவிற்குத்தான் ஒரு நிர்வாகத்தின் திறமையையும் சாதுர்யத்தையும் மதிப்பிடப்படுகிற பொருளாதாரப் புலிகளும் எலிகளும் மலிந்த நாடிது. இந்த பின்புலத்தோடு சாலைப் பணியாளர் பணிநியமனம், அவர்களது பணித்தன்மை, வேலைநேரம் மற்றும் ஊதிய நிலைமை இணைந்திருக்கிறது. ஆனால் ஏதுமில்லாத இடத்தில் இதுவாச்சும் கிடைத்ததே என்று பத்தாயிரம் குடும்பங்கள் ஒரு புதிய வாழ்க்கைக்குள் நுழைந்தன.

தானுண்டு தன் வேலையுண்டு என்று யாரும் இருந்துவிட முடியாது. அது பேராசை. நீங்கள் தரித்துக் கொண்டிருக்கும் தற்காப்பு கவசங்களை துளையிட்டுக் கிழித்து உங்கள் உடலை உயிரை வம்புக்கிழுத்து வதைக்கும் புதிய நெறி உலகெங்கும் பரவிக் கொண்டிருக்கிறது. உழைக்கும் மக்களின் ஒப்பாரியைக் கேட்டு துயிலெழுவதை வழக்கமாக்கிக் கொள்ளுமாறு அப்புதிய நெறி தனக்கிட்ட ஆணையை நிறைவேற்றுவதில் அளவில்லா ஈடுபாடு கொண்டிருக்கும் ஜெயலலிதா அந்த சாலைப் பணியாளர்களின் வேலையைப் பறித்தார். சாலைப் பணியாளர் வேலை என்பது அதிகாரமும் சொகுசும் மிக்கது போலவும் அவர்களுக்கு சம்பளமாகவும் சலுகையாகவும் கோடிக்கணக்கில் கொட்டியழ வேண்டியிருப்பதைப் போன்றும் ஊடுருவிவிட்ட திமுகவினரை களையெடுத்து அரசு நிர்வாகத்தை தூய்மைப்படுத்தும் ஒரு தேசநலன் சார்ந்த நடவடிக்கை போன்றும் ஜெயலலிதாவாலும் ஊடகங்களாலும் இப்பிரச்னை உதாசீனப்படுத்தப்பட்டது. ஆனால் சாலைகளையும் சாலை பராமரிப்புப் பணிகளையும் தனியார்மயப்படுத்தும் நடவடிக்கையின் ஒரு பகுதியாகவே சாலைப் பணியாளர்களின் வேலை பறிக்கப்பட்டது என்ற உண்மை அம்பலமானது.

தங்களுக்கு இழைக்கப்பட்ட அநீயை ஏற்றுக் கொண்டு அடங்கி விடாமல் போராட்டத்தை தொடங்கினர் சாலைப் பணியாளர்கள். எதற்காக போராட்டம் நடந்தாலும் ‘இவங்களுக்கு வேறு வேலையில்லை’ என்று கமெண்ட் அடிக்கும் விட்டேத்தி மகாஜனங்களும், தமது வக்கரித்த எண்ணங்களை செயல்படுத்தும் களமாக போராடுகிறவர்களை பார்க்கிற போலிசாரும் நிறைந்திருக்கும் தமிழகத்தில் வினோதமும் நூதனமுமான பல்வேறு வடிவங்களில் இடையறாதப் போராட்டம். மக்கள் மன்றத்தையும் நீதிமன்றத்தையும் அந்த எளிய மனிதர்களின் போர்க்குரல் உலுக்கியது. பறித்த வேலையை திருப்பிக் கொடுக்காமல் மக்களை சந்திக்க முடியாது என்கிற நெருக்கடியை ஆட்சியாளர்களுக்கு உருவாக்கியது. வேலையைப் பறித்துவிட்டு ஆயிரம் வியாக்கியானங்களை சொல்லிக் கொண்டிருந்தவர்கள் பணிய வேண்டியதாயிற்று. இப்போது சாலைப் பணியாளர்களுக்கு திரும்ப வேலை கிடைத்து விட்டது.

ஒரு ஆட்சி வேலை வழங்குகிறது. இன்னொரு ஆட்சி அதை பறிக்கிறது. பிறகு பாதிக்கப்பட்டவர்களின் போராட்ட வீச்சுக்கு பயந்து வேலையைத் திரும்பத் தருகிறது. ஆனால் இந்த முக்கோண நிகழ்வுக்குள் எல்லாமே அடங்கிவிடுமா? வேலைதான் கிடைத்து விட்டதே பிறகென்ன வேண்டும் என்று ஆசுவாசம் கொண்டுவிட முடியுமா? இடைப்பட்ட இந்த மூன்றாண்டுகளில் அந்த ஊழியர்களும் அவர்களது குடும்பங்களும் அனுபவித்த துயரங்கள் மனஉளைச்சல்கள் உயரிழப்புகளுக்கு யார் பொறுப்பேற்றுக் கொள்வது? தந்தையை இழந்து அனாதையான குழந்தைகளுக்கு எத்தனை ஜி.ஓ போட்டு அவர்களின் தந்தையை திருப்பித் தரமுடியும்? எங்கும் எழுப்பப்படாத இந்த கேள்விகளைத்தான் ‘இரவுகள் உடையும்’ ஆவணப்படம் எழுப்புகிறது.

வேலை பறிபோன அதிர்ச்சியில் இறந்தவர்கள், மனநிலை பிறழ்ந்து சுடுகாட்டில் உழன்றலைகிறவர்கள், நின்று போன திருமணங்கள், குடும்பத்தைக் காப்பாற்ற தீப்பெட்டி ஆபிசிலும் செங்கற்சூளையிலும் அடைக்கலம் தேடிய பெண்கள், எதுவும் பேசத்தோன்றாமல் கையில் கட்டியிருக்கும் கயிற்றின் பிரிந்த நூலை திருகிக்கொண்டு மெளனத்தில் உறைந்த விதவை, பொங்கிவரும் கண்ணீரை அடக்கமாட்டாமல் தலைகவிழ்ந்தபடி உண்ணாவிரதமிருக்கும் பெண்கள் - என்று பார்வையாளனை பதட்டம் கொள்ள வைக்கும் காட்சிகளாலானது இப்படம். உலகமும் தெரியாமல் உலகமயமும் தெரியாமல் கிடக்கும் அந்த எளிய மனிதர்களின் வாழ்க்கையில் உலகமயமும் அதன் பிரிக்கமுடியாத பெருங்கேடுகளில் ஒன்றான தனியார்மயமும் நிகழ்த்திய வெறியாட்டத்தையும், அதை எதிர்த்து அவ்வூழியர்கள் நடத்தியப் போராட்டங்கள் அனைத்தையும் பேருழைப்பால் இப்படம் கோர்வைப்படுத்தியிருக்கிறது. நீதிமன்றத்தில் வழக்காடிய விவரங்கள், தனியார் மயமாக்கப்பட்டதால் அரசுக்கு ஏற்படும் கூடுதல் செலவினங்கள், போதிய பராமரிப்பின்றி ஏற்பட்ட விபத்துகள், மோசமடைந்த சாலைகள், மாநிலத்தின் பல பகுதிகளிலும் பரவியிருக்கும் பணியாளர்களது பேட்டிகள் என்று ஒரு ஆவணப்படத்தின் கட்டமைப்புக்குள் இருக்கவேண்டிய நுட்பமான பதிவுகள் எதையும் படம் தவறவிடவில்லை.

Iravukal Udaiyum பொலிவியாவின் கொச்சபம்பா நகரமக்கள் குடிநீர் வினியோக தனியார்மயத்தை எதிர்த்து உயிரையும் கொடுத்து போராடி வென்றிருக்கிறார்கள். அதைப்போலவே தனியார்மயத்தினால் பணியிழந்த சாலைப் பணியாளர்களும் போராடி வெற்றி கண்டுள்ளனர். இந்த வெற்றியின் துயரம் மிகுந்த சாட்சியமாக ‘இரவுகள் உடையும்’ படம் அமைந்திருக்கிறது. ஆட்சியாளர்கள், அதிகாரிகள், போலிஸ், சட்டம், நீதி எல்லாமே ஒரே அலைவரிசையில்தான் இயங்கிக் கொண்டிருக்கின்றன என்பதையும் அவை ஒன்றுக்கொன்று இசைவானவைதான் என்கிற நுண்ணரசியலையும் கூட படம் கவனத்திற்கு உட்படுத்துகிறது.

படமாக்கலுக்கான தொழில்நுட்பங்கள் ஏதுமில்லாத ஒரு சின்னஞ்சிறு நகரமான சாத்தூரிலிருந்து வெளியான இப்படத்தில் தேர்ந்த கலைஞர்களின் செய்நேர்த்தி இருக்கிறதா இல்லையா என்கிற மயிர்பிளக்கும் விவாதங்கள் இப்போது தேவையில்லை. அதே நேரத்தில் ரூரல் கோட்டா என்ற அடிப்படையிலாவது இந்தப் படத்தை சலுகை மனப்பான்மையோடு யாரும் பார்க்க வேண்டிய அவசியமுமில்லை. தான் வாழும் சமூகத்தின் ஒரு சமகால நடப்பின்மீது சமூகப் பொறுப்புள்ளதொரு கலைஞனின் செயல்பாட்டில் இருக்கும் நேர்மையும் எளிமையும்தான் இங்கே கவனப்படுத்த வேண்டியதாயிருக்கிறது. அதிகாரத்தின் ஒடுக்குமுறையை எதிர்த்து எளியமக்கள் போராடும்போது அவர்கள் தரப்பு நியாயத்தை யாவருக்கும் எடுத்துச் செல்வதும், அந்த நியாயத்தை ஆதரிக்குமாறு மற்றவர்களின் மனசாட்சியை தட்டியெழுப்புவதும்தான் ‘கலைஇலக்கியம் யாவும் மக்களுக்கே’ என்பதன் மெய்யான பொருள். அந்தமட்டில் படத்தின் இயக்குநர் மாதவராஜூம் இணைந்து பணியாற்றிய காமராஜூம் பிரியா கார்த்தியும் அவர்களது குழுவினரும் வெற்றி கண்டுள்ளனர். திரைப்படம் எடுக்கும் வாய்ப்பைத் தேடித் தருகிற துருப்புச் சீட்டாக ஆவணப் படங்களையும் குறும்படங்களையும் அவர்கள் கருதவில்லை. தாங்கள் நம்பும் கொள்கைகளை பரந்த மக்கள் திரளுக்கு கொண்டு செல்லும் சாதனமாகவே திரை வடிவத்தையும் கைக்கொண்டிருக்கும் அவர்கள், தமது உழைப்பின் அனுபவத்தினூடாக புதிய எல்லைகளைத் தொடுவார்கள் என்ற நம்பிக்கையை தருகின்றனர்.

இப்படியானதொரு படத்தை தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் சாத்தூர் கிளை தயாரித்திருக்கிறது என்ற தகவலால் பதற்றமடைந்த ஆட்சியாளர்களும், காவல்துறையினரும் படம் வெளியாவதற்குள் அதை முடக்கிவிட வேண்டுமென்று துடித்தனர். கருத்துச் சுதந்திரத்தை பறிப்பதில் கருணாநிதிக்கும் ஜெயலலிதாவுக்கும் வித்தியாசம் ஏதுமில்லை. சினிமா என்கிற காட்சி ஊடகம் மக்கள் மீது செலுத்தும் தாக்கத்தையும் விளைவுகளையும் பயன்படுத்தி ஆட்சிக்கு வந்தவர்கள் என்பதால் அவர்களது மக்கள் விரோதக் கருத்துக்களை அம்பலப்படுத்தும் படங்கள் என்றால் அஞ்சுகின்றனர். அதனால்தான் நதியின் மரணத்தை தடை செய்தனர். மூழ்கும் நதியை திரையிடக்கூடாதென்று தடுத்தனர். ஆனால் திட்டமிட்டபடி இரவுகள் உடையும் ஆவணப்பட வெளியீட்டுவிழா 30.03.2006 அன்று விருதுநகரில் நடந்துவிட்டது. படத்தின் குறுந்தகடுகள் பறக்கும் தட்டுக்களைப்போல மாநிலமெங்கும் சுழன்றோடி இனி மக்களை சென்றடைய வேண்டும்.

மைக்கேல் மூர் தயாரித்த பாரன்ஹீட் 9/11 என்ற ஆவணப்படம் ஜார்ஜ் புஷ்ஷை அம்பலப்படுத்தியதென்றால், ஆனந்த் பட்வர்த்தனின் ‘போரும் அமைதியும்’ பா.ஜ.க.வின் போர்வெறியை அம்பலப்படுத்தியதென்றால் ‘இரவுகள் உடையும்’ படம் உலகமயத்தையும் அதன்மீதான ஜெயலலிதாவின் விசுவாசத்தையும் அம்பலப்படுத்துகிறது. இப்படத்தை தெருத்தெருவாக திரையிட்டு மக்களை உஷார்படுத்த வேண்டிய காலமிது. ஏனென்றால் சோதித்துப் பார்க்க சத்துணவு ஊழியர்கள், டாஸ்மார்க் ஊழியர்கள் என்று இன்னும் ஆட்சியாளர்களிடம் ஏராளமான வெள்ளெலிகள் உள்ளன. ஒருவேளை அது எல்லோர் கழுத்திலும் விழப்போகும் வெட்டுக்கு ஒத்திகையாகவும் இருக்கக்கூடும். கவனம்.கவனம். கவனம்.


- ஆதவன் தீட்சண்யா ([email protected])

இவரது மற்ற படைப்புகளைக் காண இங்கே அழுத்தவும்


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com