Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
KeetruLiteratureArticle
கட்டுரை

அதிர வருவதோர் நோய்
ஆதவன் தீட்சண்யா


எந்த பத்திரிகையைப் பார்த்தாலும் நுகர்பொருட்களுக்கும் திரைப்படங்களுக்கும் இணையாக அல்லது விஞ்சும் வகையில் கல்விநிலையங்களின் விளம்பரங்கள் தென்படுகின்றன. அதேரீதியில் சிறுநகரங்கள் வரை திரையரங்குகளில், கேபிள் டி.வி.களில், சுவர்களில், தெருமுனைகளில் ஸ்லைடுகளாக, செய்திப்படங்களாக, சுவரொட்டிகளாக, தட்டிபோர்டுகளாக, பேனர்களாக கல்விநிலையங்களின் விளம்பரங்கள் தூள்பறக்கின்றன. மின்கம்பங்களும் கூட தப்பிப்பதில்லை. எப்படியாவது கல்வியை பரப்பியே தீர்வதென்று கங்கணம் கட்டிக்கொண்டு களமிறங்கியிருக்கும் இக்கல்வி நிலையங்களைப்பற்றி அறிய நேர்ந்தவை உங்களுக்குமாக.

Govt school சீருடை, காலணி, நோட்டு, புத்தகங்கள் (அதற்கான அட்டை கூட), எழுதுபொருட்களின் விற்பனையாளர்களாகவும், முறையான கல்வித் தகுதியற்றவர்களை குறைந்த சம்பளத்திற்கு ஆசிரியர்களாகவும் அமர்த்தி கல்விப்பணி ஆற்றிவரும் பள்ளிகள் ஒவ்வொரு ஊரிலும் உண்டு. பேருந்துகளை இயக்காமல் நிறுத்திவைத்திருக்கும் விடுமுறைக்காலங்களில் கூட ஒரு பைசாவையும் குறைத்து வாங்கத் தெரியாதவை இப்பள்ளிகள். தனியாக ஒரு சாலையமைத்து அதில் தான் மாணவர்கள் வரவேண்டுமென்று கட்டணம் வசூலிக்காமல் இருக்குமளவுக்கு அவைகளுக்கு மக்கள்மீது இன்னும் கருணை இருக்கிறது.

இந்த உள்ளூர் பள்ளிகளைவிடவும் இப்போது பரபரப்படைந்திருப்பவை உறைவிடப் பள்ளிகளே. இவை பத்தாம் வகுப்பு வரை, +2 வரை, +2 க்கு மட்டும் பயிற்சியளிப்பவை என்று பலவகையிலானவை. கடந்த கல்வியாண்டில் அவற்றில் படித்தவர்களில் எத்தனை பேர் நூற்றுக்கு நூறு மதிப்பெண் பெற்றவர்கள், தேர்ச்சி சதவிகிதம், மருத்துவம் மற்றும் பொறியியல் படிப்புக்கான தரவரிசையில் இடம் பெற்றவர்களின் புகைப்படங்கள் என்று இவ்விளம்பரங்கள் தம் பெருமையை பறைசாற்றுகின்றன. இதன்மூலம் மூலைமுடுக்கெங்கும் பதியவைக்கப்படும் செய்தி எதுவென்றால் படிப்பென்றாலே மருத்துவமும் பொறியியலும் தான். மற்றவற்றை படிப்பதும் படிக்காமலிருப்பதும் ஒன்றே. அடுத்து, மதிப்பெண் என்றால் நூற்றுக்கு நூறு அல்ல ஒன்றிரண்டு குறையலாம். அதில்லாமல் முதல் வகுப்பில் தேர்ச்சி என்பதெல்லாம்கூட தோல்விக்குச் சமமானதுதான்.

அரசாங்கப் பள்ளிகளில் தரமான கல்வி கிடைக்காது என்றிருக்கும் மக்களின் அவநம்பிக்கையையும் வேலைவாய்ப்பு அருகிவரும் இக்காலத்தில் தன்பிள்ளையை போட்டிக்கு தகுதிப்படுத்தவேண்டும் என்ற பெற்றோரின் பதைப்பையும் மூலதனமாக கொண்டுதான் இப்பள்ளிகள் அனைத்துமே துவங்கப்பட்டிருக்கின்றன. தமது சக்திக்கு மீறிய கட்டணம்தான் என்றாலும் எப்படியாவது தாங்கிக்கொண்டு பிள்ளையை இங்கு படிக்க வைத்துவிட்டால் டாக்டராகவோ என்ஜினியராகவோ ஆகி வாழ்க்கையில் 'செட்டிலாகி விடலாம்' என்றெண்ணும் நடுத்தர குடும்பங்களும் ஓரளவு வசதி கொண்ட விவசாயக் குடும்பங்களும் தான் இப்பள்ளிகளின் பிரதான இலக்கு. குடும்ப வருமானத்தின் கணிசமான பகுதியை மூலதனம்போல் செலவழிக்கத் துணிந்த பெற்றோர்களால் மாநிலத்தின் பல பாகங்களிலிருந்தும் துள்ளத்துடிக்க பிடுங்கியெடுத்து வந்து சேர்க்கப்படும் மாணவர்களை இப்படியான பள்ளிகள் மதிப்பெண் பந்தயத்திற்கு எப்படி தயாரிக்கின்றன என்று பார்ப்போம்.

சொந்த ஊரில் எட்டாம் வகுப்புவரை படிக்கும் தன்பிள்ளையை ஒன்பதாம் வகுப்பிலிருந்து மிகவும் கண்டிப்பானதொரு உறைவிடப்பள்ளியில் படிக்க வைப்பவரே பொறுப்புள்ள பெற்றோராக கருதப்படும் நிலை உருவாக்கப்பட்டு வருகிறது. இங்கே மிகவும் கண்டிப்பானது என்பது மிகுந்த கவனத்திற்குரியது. அதாவது படிப்பதற்கும் எழுவதுதற்கும் நேரம் காலம் கிடையாது. இரவில் வெகுநேரம் விழித்திருக்கவேண்டும். அதிகாலையில் சீக்கிரத்திலேயே எழுந்து விடவேண்டும். குறைந்தபட்ச நேரமே தூக்கம். குளிப்பதற்கும் தயாராகி சாப்பிடுவதற்கும் போர்முனையிலிருக்கும் ஒரு ராணுவ சிப்பாய்க்கு கிடைப்பதைவிடவும் குறைவான நேரமே கொடுக்கப்படும். கனவிலும்கூட விளையாடக்கூடாது. விளையாட்டாகக் கூட வேறு கனவுகளை கண்டுவிடக்கூடாது. அதெல்லாம் தமது எதிர்காலம் பற்றிய பொறுப்புணர்வற்ற துக்கிரிகளின் செயல். இங்கு படிப்பு படிப்பு... எந்நேரமும் பாடப்புத்தகங்களை படிப்பது மட்டுமே அவர்களது தொழில், கனவு எல்லாமே. இதற்கெல்லாம் சரிப்பட்டு பொருந்திவராத மாணவர்களை பழக்கி லாயத்தில் அடைக்க மேற்கொள்ளப்படும் வழிமுறைகள் எவ்வளவு கடுமையானதாக இருந்தாலும் அதுகுறித்து புகாரற்று இருப்பதற்கான சம்மதம் பெற்றோர்களிடம் பெறப்படுகிறது. கண்ணுக்குள் வைத்து வளர்த்த தன் பிள்ளையை ''எதுவும் செய்துகொள்ளுங்கள் இவ்வளவு மார்க் எடுத்தால் சரி'' என்று சிறிதும் குற்றவுணர்ச்சியற்று வதைக்கொட்டடியில் அடைத்துவிட்டு வருகின்றனர் பெற்றோர்.

தேர்வுக்காலம் என்றில்லாமல் ஒவ்வொரு நாளுமே ஒரு பொதுத்தேர்வை அல்லது ஒரு வேலைக்கான நேர்முகத்தேர்வை சந்திக்கும் மனநிலையோடு கடந்தாக வேண்டும். விடுமுறைநாட்களும் கூட கூடுதல் வேலைநாட்கள் தான். ஞாயிற்றுக்கிழமைகளில் கைதியைப் பார்த்து ஆறுதல் சொல்லிவிட்டு வருவதைப்போல ''எல்லாம் உன் நன்மைக்குத் தான், இன்னும் கொஞ்சநாள் பல்லைக் கடித்துக்கொண்டு பொறுத்துக்கொள்....'' என்று பிள்ளைகளை பார்த்துப் பேச பெற்றோர் அனுமதிக்கப்படுகின்றனர். தனது படிப்புக்காக வருமானத்தில் பெரும்பகுதியை செலவழித்திருக்கும் குடும்பத்தின் நிலையை எண்ணி வீட்டுக்கு திரும்பிப் போய்விட முடியாததாலும் பள்ளிக்குள் நடக்கும் உடல், மனரீதியான வதைக்கு பயந்தும் பிள்ளைகள் பாடங்களை உருப்போடத் தொடங்குகின்றன. கவனம், இங்கு படிப்பு என்பது புரிந்து கற்றுக்கொள்வதல்ல. எழுத்துக்கு எழுத்து, வரிக்கு வரி அதாவது அட்டை டூ அட்டை மனப்பாடம் செய்வதுதான். பள்ளி விடுதியென்ற வித்தியாசமின்றி எங்கும் எந்நேரமும் கண்மண் தெரியாமல் பிரம்பால் விளாசும் ஆசிரியர்கள் காப்பாளர்களிடமிருந்து தப்பிக்கும் வழியறியாது எந்நேரமும் பயவுணர்ச்சியால் பீடிக்கப்பட்டவர்களாக மாறி மனனம் செய்யத் தொடங்கிவிடுகின்றனர் மாணவர்கள். அப்படியிருந்தும் முட்டி உடைபடாமல் முதுகுத்தோல் உரியாமல் படித்து வந்த மாணவர்கள் என்று யாரும் கிடையாது.

சரி, இவ்வளவு முஸ்திபுகளோடு நடக்கும் பள்ளிகளில் மாணவர்கள் எவ்வாறு பயிற்றுவிக்கப்படுகிறார்கள்...? இவற்றில் பெரும்பாலானவற்றில் ஒன்பதாம் வகுப்பு பாடங்கள் நடத்தப்படுவதேயில்லை. ஒன்பதாம் வகுப்பிலேயே பத்தாம் வகுப்பு பாடங்கள் தொடங்கப்பட்டு விடுகின்றன. இதேபோல், +1 வகுப்பிலேயே +2 பாடங்கள் தான். (பத்தாம் வகுப்பு மற்றும் +2 தேர்வுகளுக்கு பாடங்களை உருப்போட்டு தயாராவதுதான் முக்கியமென்று முதல்வகுப்பிலிருந்தே அந்தப் பாடங்களை இன்னும் நடத்தத் துணியாதது ஆச்சர்யம் தான்.) ஒருவருடத்தில் படித்து எழுதவேண்டிய தேர்வுக்கான பாடங்களை இரண்டு வருடங்கள் உருப்போட வைப்பது, தொடர்ந்து அடிக்கடி மாதிரித்தேர்வுகள் நடத்தி மாணவனின் மனப்பாட நேர்த்தியை மதிப்பீடு செய்து தேவையான அளவுக்கு நல்வழிப்படுத்துவது, மீண்டும் மனப்பாடம், மீண்டும் மாதிரித்தேர்வு, மீண்டும் மதிப்பீடு.... தூக்கத்தில் எழுப்பிக்கேட்டாலும் தலைகீழாய் ஒப்பிக்குமளவுக்கு எல்லோருடைய திறமையும் பழுக்கப் பழுக்க வெளுக்கக் காய்ச்சி கூராக்கப்படுகிறது.

இப்போது பொத்தேர்வு. ஒரே பாடத்தை இரண்டு வருடங்கள் படிக்கும் சாதுர்யமின்றி போதிய ஆசிரியர்களும் வசதிகளும் அற்ற நிலையில் அந்தந்த வருடத்தின் பாடங்களை அந்தந்த வருடமே படித்துத் தயாரான விவரங்கெட்ட அரசுப்பள்ளி மாணவர்கள் ஒருபக்கமும் தேர்வு எழுதுவதற்கென்றே பயிற்சியளித்து வெறியூட்டி வளர்க்கப்பட்டதொரு மிருகம் போன்ற தனியார்பள்ளி மாணவர்கள் மறுபக்கமுமாக நிற்க, தேர்வானது ஒரு யுத்தம் போல் நடக்கிறது. எதிர்பார்த்தபடியே அரசுப்பள்ளி மாணவர்களைவிட தனியார் பள்ளி மாணவர்கள் தான் மிகக்கூடுதலான மதிப்பெண்கள பெறுகின்றனர். இத்தகைய மதிப்பெண் உயர்வானது ஊளைச்சதை போன்றதுதானேயொழிய உண்மையான பலமல்ல. ஒப்பீட்டளவில் அந்தந்த வருடத்தின் பாடத்தை படித்து தேர்வை எதிர்கொள்ளும் அரசுப்பள்ளியின் மாணவனின் கற்கும் திறன்தான் பாராட்டப்பட வேண்டியதாயுள்ளது. அரசுப்பள்ளிகளின் தரம் தான் நமது உண்மையான கல்வியின் நிலை. ஆனால் யாருக்கும் வேண்டப்படாததாகிவிட்டது உண்மை.

ஒருவருட பாடத்தை இரண்டுவருட காலம் உருப்போட்டு தேர்வின் அதிகபட்ச மதிப்பெண்ணை 99, 100% என்று உயர்த்திப் பெற்று மருத்துவம், பொறியியல் படிப்புகளில் அரசு பள்ளி மாணவர்களை கீழே தள்ளி மேலேறிச் செல்கின்றனர் தனியார் பள்ளி மாணவர்கள். ஆரோக்யமற்ற இந்தப்போட்டியால் அரசுப்பள்ளிகளின் மீதான அவநம்பிக்கை கூடி ஒவ்வொரு ஆண்டும் தனியார் பள்ளிகளில் பிள்ளைகளை அடைக்கும் மனோபாவம் ஒரு நோயைப்போல் பரவிவருகிறது. கல்வியின் பெயரால் நடக்கும் இந்த மோசடி யாருக்கும் தெரியாமலில்லை. ஊரறிந்த ரகசியத்தை ஒருவரும் தெரியாதது போல் பாசாங்கு செய்கின்றனர். அல்லது தனது பிள்ளக்கு ஒரு நல்ல எதிர்காலத்தை தகவமைத்துக் கொடுக்க இதைவிட்டால் வேறு வழியில்லை என்று சமாதானம் கொள்கின்றனர். இயல்பிலேயே ஒரு மாணவனுக்கு இல்லாத திறமையை செயற்கையாக ஏற்றும் கேவலத்தை சாமர்த்தியம் என்று கொண்டாடுகின்றனர். குறுக்குவழியில் முந்திச் செல்லவேண்டுமென்ற மனப்பயிற்சியை வெகுஇயல்பாக உள்வாங்கும் தலைமுறைகளை உருவாக்கிக் கொண்டிருக்கின்றன தனியார் பள்ளிகள்.

Private school சிறுவயதிலிருந்தே ஆசிரியர்களின் வன்முறைக்காளாகி எப்போதும் அஞ்சி வாழுமாறு பழக்கப்படுத்தப்படும் மாணவர்கள் பிற்காலத்தில் சொந்தவாழ்க்கையிலும் சமூகத்தின் அங்கமாகவும் எத்தகைய ஆளுமைகளை வெளிப்படுத்துவார்கள்? படிப்புக்காலம் முழுவதும் சக மாணவர்கள் உள்ளிட்ட புறவுலகுடனும் தனது அகவுலகுடனும் முற்றாகத் துண்டிக்கப்பட்டு பாடப்புத்தகங்களோடு மட்டுமே உழல அனுமதிக்கப்பட்ட அவர்களிடமிருந்து இந்த சமூகம் பெறப்போவது எதை? இளைய தலைமுறையினரில் பெரும்பகுதி இப்படியாக உள்ளொடுங்கி தனிமைப்பட்டு சுயநலச் சிந்தனைகளால் பீடிக்கப்பட்டுவிடுமானால் சமூகத்தின் கதி என்னவாகும்? படிப்பின் பெயரால் தனது இளமைக்காலம் முழுவதும் கலாச்சார நடவடிக்கைகளிலிருந்து ஒதுக்கிவக்கப்படும் இளைஞர்களிடமிருந்து கலை இலக்கிய படைப்புகள் ஏதேனும் வெளிப்பட வாய்ப்பிருக்கிறதா? இவர்கள்தான் எதிர்காலச் சமூகம் என்றால் அப்படியொன்று உருவாவதை அனுமதிக்கும் எல்லோருமே குற்றத்தின் பங்குதாரர்கள்தான்.

இன்னொருபுறம் அரசுப்பள்ளி மாணவர்கள். நிலவும் சூழலால் அதிகம் பாதிக்கப்பட்டவர்கள் இவர்கள்தான். ஆரோக்யமற்றதொரு போட்டியின் பலிதானமாக ஆக்கப்பட்டவர்கள். அரசுப்பள்ளிகளில் படித்து எதற்கு பிரயோஜனம் என்று உலவும் கருத்தை உள்வாங்கிக் கொண்டிருப்பதால் இயல்பிலேயே தாழ்வுணர்ச்சி கொண்டுள்ளனர். தங்களது கற்கும் திறன் மதிக்கப்படாதது குறித்தும் பொருத்தமற்றவர்களுக்கு கிடைக்கிற அங்கீகாரத்தாலும் கொள்கிற குமைச்சலால் அவர்களின் கற்கும் ஆர்வம் குறைகிறது. என்ன படித்து என்ன செய்ய... மதிக்கத்தக்க வாய்ப்புகளெல்லாம் தனியார் பள்ளியில் படிப்பவர்களுக்குத்தான் கிடைக்கப்போகிறது என்ற விரக்தியால் அவர்களது கவனம் சிதறுகிறது. அவர்களை ஒருமுகப்படுத்தி தன்னம்பிக்கையூட்டி படிப்பதில் ஆர்வம் கொள்ளவைக்கும் ஆசிரியர்கள் அருகி வருகின்றனர்.

சுயநல படாம் கட்டிக்கொண்டு திரியுமொரு சமூகத்தில் ஆசிரியர்கள் மட்டும் அர்ப்பணிப்பு உணர்வு, தியாகம், புனிதம் என்றெல்லாம் லட்சியத்திரைகளை சுமக்கவேண்டுமென்று எதிர்பார்ப்பது நியாயமில்லை. எதிர்கால சமூகத்தை உருவாக்குகிறோம் என்ற குறைந்தபட்ச கவனத்தோடு மாணவர்களை கையாளும் வெறும் சம்பளக்காரர்களாக அவர்கள் இருந்தால்கூட போதுமானது. ஆனால் நிலையோ தலைகீழ். அரசுப்பள்ளிகளில் நிலவும் பொறுப்பின்மையை தட்டிக் கேட்குமளவுக்கு செல்வாக்கற்றவர்களாய் இருக்கும் எளியவர்களின் பிள்ளைகளே இங்கு படிப்பதால் தடுப்பற்று நிலைமை சீரழிந்துவருகிறது. படித்து அதன்வழியில் வாழ்வை அமைத்துக்கொள்ள முடியாதவர்களாக அரசுப்பள்ளி மாணவர்கள் மாற்றப்பட்டு வருகின்றனர்.

போட்டியிலிருந்து அரசுப் பள்ளி மாணவர்களை விலக்கிவைப்பதற்காக தனியார் பள்ளிகள் கடைபிடிக்கும் மலிவான தந்திரங்களை உடனடியாக தடுத்து நிறுத்தவும், அரசுப்பள்ளிகளின் கல்வித்தரத்தை மேம்படுத்தவும், மாணவர்களை கண்ணியமாக நடத்துமாறு தனியார் பள்ளி நிர்வாகங்களையும் ஆசிரியர்களையும் அறிவுறுத்துவதோடு கண்காணிப்பதற்கான அமைப்புகளை உருவாக்கவும், கல்வி பெறுவதில் மக்களுக்குள்ள உரிமைகளை பரப்பவும், கல்வியை ஒரு பண்டமாக மாற்றுவதைத் தடுக்கவும் அரசு தலையிடவேண்டும். சுயசிந்தனையும் தன்னம்பிக்கையும் கொண்டதொரு ஆளுமைமிக்க அறிவார்ந்த சமூகம் உருவாவதை தடுக்கும் இன்றைய கல்விச்சூழலின் அபாயத்தை முன்னுணரும் கல்வியாளர்களும் சமூக அக்கறையுள்ளவர்களும் இதற்காக செயலாற்ற முன்வர வேண்டியது அவசியம்.

- ஆதவன் தீட்சண்யா ([email protected])

இவரது மற்ற படைப்புகளைக் காண இங்கே அழுத்தவும்


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com