Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
KeetruLawGeneral
சட்டம்

கிரெடிட் கார்டு - வசூல் குண்டர்களை எதிர்கொள்ள சட்டரீதியான வழிமுறைகள்..!
சுந்தரராஜன்

கிரெடிட் கார்டு பயன்படுத்துபவர்களிடம் கடன் வசூல் முகவர்கள் பல தவறான செயல்களில் ஈடுபடுவதாக புகார்கள் அதிகரித்து வருகின்றன. அதை எதிர்கொள்ள சில குறிப்புகள்...

Credit cards நினைவில் நிறுத்துங்கள்

கிரெடிட் கார்டு மூலமோ அல்லது வேறெந்த வகையிலோ கடன் வாங்குவதும், வாங்கிய கடனை திருப்பி செலுத்தாத நிலை என்பதும் கிரிமினல் குற்றம் அல்ல! (கடனுக்கு விதிக்கப்படும் அநியாய வட்டியும், பலவித கூடுதல் கட்டணங்களுமே, நேர்மையான பலரும் கடனை திரும்ப செலுத்த முடியாமல் போகும் நிலையை ஏற்படுத்துகிறது)

நீங்கள் கொலை, கொள்ளை, திருட்டு, வழிப்பறி போன்ற குற்றங்களில் ஈடுபட்டால் மட்டுமே நீதிமன்ற உத்தரவு இல்லாமல் உங்களை கைது செய்ய முடியும். கட்டத்தவறிய கடனுக்காக எந்த விதமான நீதிமன்ற விசாரணையும் இல்லாமல் உங்களை யாரும் கைது செய்ய முடியாது. கடன் வசூல் நடவடிக்கை அனைத்தும் சிவில் சட்ட வழிமுறைகளின்படியே நடைபெற வேண்டும். எனவே காவல்துறையினருக்கு இதில் எந்த தொடர்பும் இல்லை.

காவல் நிலையம், கமிஷனர் அலுவலகம், மத்திய குற்றப்புலனாய்வு பிரிவு (CCB) ஆகிய இடங்களிலிருந்து போன் பேசுவதாக கூறினால் நம்பாதீர்கள். அவர்களுக்கு வேறு முக்கிய வேலைகள் இருக்கின்றன. அவர்கள் அவ்வாறு உங்களை தொலைபேசி மூலம் தொடர்பு கொள்ள மாட்டார்கள். (அவ்வாறு செய்தால் அது சட்டப்படி தவறு)

கடன் வசூல் செய்வதற்காக வழக்கறிஞர்கள் யாரும் உங்கள் வீடு தேடி வரமாட்டார்கள். தொலைபேசி மூலமாகவும் பேசமாட்டார்கள். அவ்வாறு கூறுபவர்கள் அனைவரும் பொய் பேசுகின்றனர் என்பதை புரிந்து கொள்ளுங்கள்.

கிரெடிட் கார்டு வசூல் நடைமுறை குறித்து இந்திய ரிசர்வ் வங்கி திட்டவட்டமான விதிமுறைகளை வகுத்துள்ளது. இந்த விதிமுறைகளை அனைத்து வங்கிகளும் கட்டாயமாக பின்பற்ற வேண்டும். வங்கிகளின் வசூல் முகவர்களுக்கும் இந்த நெறிமுறைகள் பொருந்தும். வசூல் முகவர்கள் இந்த நெறிமுறைகளை பின்பற்றாமல் தவறுகளை செய்தால், அந்த முகவர்கள் மட்டும் அல்ல, அவர்களை கண்காணிக்காத வங்கிகளும் சட்டததின் முன் குற்றவாளிகளே!

நீதிமன்ற விசாரணைக்கு உங்களுக்கு முறையான அழைப்பு வரும். உங்கள் தரப்பு வாதத்தை எடுத்துக்கூற உங்களுக்கு போதுமான அவகாசம் வழங்கப்படும்.

வங்கிகள், அவற்றின் கடன் வசூல் முகவர்கள் ஆகிய எவரொருவரும் கடன் வசூல் நடவடிக்கைகளின்போது , கிரெடிட் கார்டு நுகர்வோர், அவர்களுடைய குடும்ப உறுப்பினர்கள், நண்பர்கள், மற்றவர்களை வாய்மொழியாகவோ, உடல் ரீதியாகவோ அச்சுறுத்தவோ, துன்புறுத்தவோ கூடாது. அதேபோல பொது இடத்தில் அவமானப்படுத்துதல், தனிமையை குலைத்தல், தொலைபேசி மூலம் அடையாளமற்று மிரட்டுதல், தவறான மற்றும் திசை திருப்பும் தகவல்களை அளித்தல் ஆகியவையும் செய்யக்கூடாது என்று ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள வங்கிகளின் கிரெடிட் கார்டு செயல்பாடுகள் குறித்த முதன்மை சுற்றறிக்கையின் பிரிவு 7 (ii) c திட்டவட்டமாக கூறுகிறது.

இந்த நடவடிக்கைகள் இந்திய தண்டனை சட்டத்தின்படியும் குற்றமென கூறப்பட்டுள்ளது.

உங்கள் அனுமதியின்றி வீட்டில் நுழைவதே குற்றம்!

உங்கள் வீட்டில் வங்கிப்பணியாளர்களோ, வசூல் முகவர்களோ உங்கள் அனுமதியின்றி அத்துமீறி நுழைந்தால் இ.த.ச பிரிவு 441ன்படி குற்றம். வேறு ஒருவரின் உடமையில் இருக்கும் ஒரு சொத்தினுள், அதன் உரிமையாளரை மிரட்டும், அவமானப்படுத்தும் அல்லது தொந்தரவு செய்யும் அல்லது குற்றம் செய்யும் கருத்துடன் நுழைகிற, அல்லது இதற்காக அங்கேயே சட்ட விரோதமாக தங்கியிருக்கிற எவரொருவரும் “குற்றமுறு அத்துமீறல்” புரிந்ததாக கூறப்படுவார்.

இவ்வாறு குற்றமுறு அத்துமீறல் புரியும் எவரொருவருக்கும் மூன்று மாதம் வரை சிறைக்காவலோ அல்லது 500 ரூபாய் வரை அபராதமோ அல்லது இரண்டுமோ தண்டனையாக விதிக்கப்படும் என்று அதே சட்டத்தின் பிரிவு 447 கூறுகிறது. வீட்டினுள் அத்துமீறல் என்ற குற்றத்தை செய்ய உடல் உறுப்புகளில் எந்த பாகத்தையாவது வீட்டினுள் புகுத்தினாலே அத்துமீறல் குற்றத்தை செய்வதாகும். (பிரிவு 442) ஒருவருக்கு காயம் விளைவிப்பது, தாக்க முனைவது, முறையின்றி தடை செய்வது, இக்குற்றங்களை செய்வதற்கென்று வீடு புகுந்தால், அதற்கு ஏழாண்டுகாலம் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படலாம். (பிரிவு 452)

அவதூறாக பேசுதல்!

உங்கள் நற்பெயரை கெடுக்கவேண்டும் என்ற உள்நோக்கத்துடனும், உங்களை அவமானப்படுத்தும் நோக்கத்துடனும் எவரேனும் செயல்பட்டால் அதுவும் சட்டப்படி குற்றமே. ஒருவருடைய நற்பெயரை பங்கப்படுத்தி கெடுக்கவேண்டும் என்ற கருத்துடன் அல்லது அத்தகைய கேடு ஏற்படும் என்று அறிந்திருந்து அல்லது நம்பக்காரணம் பெற்றிருந்து பேச்சால், எழுத்தால், அடையாளங்களால் அல்லது காட்சிப்பொருள்களால் அவரைப்பற்றி பழி சாட்டுதல் எதனையும் செய்கிற அல்லது வெளியிடுகிற எவரொருவரும், அவதூறு செய்ததாக சொல்லப்படுவார். (பிரிவு 499)

இன்னொருவருக்கு அவதூறு செய்கிற எவரொருவருக்கும் இரண்டாண்டுகள் வரை வெறுங்காவலோ அல்லது அபராதமோ அல்லது இரண்டுமோ தண்டனையாக வழங்கப்படும். (பிரிவு 500)

அச்சுறுத்தல், நேரடியாக, தொலைபேசி, கடிதம் வழியாக மிரட்டுதல்!

கடனை வசூலிக்க முகவர்கள் என்ற பெயரில் செயல்படும் குண்டர்கள் அனைவரும் செய்யும் அனைத்து செய்கைகளும் குற்றச்செயல்களே. ஒருவருடைய அல்லது அவர் அக்கறை காட்டும் மற்றொருவருடைய உடலுக்கு, உடமைக்கு அல்லது நற்பெயருக்கு தீங்கிழைக்கப்படும் என்று அவருக்கு பீதியை உண்டாக்க வேண்டும் என்ற கருத்துடன் அல்லது சட்டப்படி ஒரு செயலை செய்ய உரிமையற்று இருந்தபொழுது அதைச்செய்யவோ அல்லது சட்டப்படி ஒரு செயலைச் செய்யவோ உரிமை பெற்றிருந்தபொழுது அதைச் செய்யவிடாமல் விட்டுவிடும்படி வற்புறுத்த வேண்டும் என்ற கருத்துடன் ஒருவரை அந்த மிரட்டலுக்கு இணங்கி, அவர் செயல்படுமாறு செய்வதற்காக மிரட்டுவதை குற்றமுறு மிரட்டல் எனலாம். (பிரிவு 503)

குற்றமுறு மிரட்டல் செய்பவர்களுக்கு 2 வருடங்கள் சிறைக்காவலோ அல்லது அபராதமோ அல்லது இரண்டுமோ தண்டனையாக விதிக்கப்படும். பிரிவு 506

அநாமதேயக் கடிதத்தின் மூலம் அல்லது யார் மிரட்டுகிறார்கள், எங்கிருந்து மிரட்டுகிறார்கள் என்ற விவரம் மற்றவருக்கு தெரியாத வண்ணம், மறைந்திருந்து மிரட்டுவோருக்கு, முன்பிரிவில் குறிப்பிடப்பட்டுள்ள தண்டனையுடன் இன்னும் இரண்டு ஆண்டுகள்வரை சிறைக்காவல் தண்டனை அதிகப்படியாக விதிக்கப்படும்.

பெண்களை அவமதித்தல்!

ஒரு பெண்ணின் கற்புநெறியை அவமதிக்கும் வண்ணம், அப்பெண் காணும்படி அல்லது கேட்கும்படி யாரேனும் ஏதேனும் ஒரு சொல்லைக் கூறுவதும், ஒலியெழுப்புவதும் சைகை காட்டுவதும், அல்லது அந்த பெண்ணின் அந்தரங்கத்தில் குறுக்கிடுவதும் குற்றமாகும். இதற்கு ஒரு ஆண்டு வரை சிறை தண்டனையோ அல்லது அபராதமோ அல்லது இரண்டுமோ தண்டனையாக வழங்கப்படும். (பிரிவு 509)

அரசுப் பணியாளரை கடமையை செய்யவிடாமல் தடுத்தல்!

அரசுப் பணியாளர்களை அவர்களது வேலை நேரத்தில் எவ்வாறு தொந்தரவு செய்தாலும் குற்றம்தான். அரசுப் பணியாளர் ஒருவரை அவரது பணியை செய்யவிடாமல் தடுக்கும் எவரொருவரும் குற்றவாளியே. அத்தகைய குற்றத்தில் ஈடுபடுபவர்களுக்கு மூன்று மாதம் சிறை தண்டனையோ, 500 ரூபாய் அபராதமோ அல்லது இரண்டுமோ தண்டனையாக விதிக்கப்படும். (பிரிவு 186)

ஆட்கடத்தல் மற்றும் அடைத்து வைத்தல்!

கிரெடிட் கார்டு கடனை வசூலிப்பதற்காக எவரையேனும் கடத்துவதும் இந்த சட்டத்தின்படி தவறுதான். ஒரு இடத்திலிருந்து செல்லும்படி ஒருவரை வன்முறையாலோ அல்லது வஞ்சனையான முறைகளாலோ கட்டாயப்படுத்துவது ஆட்கடத்தல் ஆகும். (பிரிவு 362)

ஒரு குறிப்பிட்ட திசையில் செல்ல உரிமை பெற்றுள்ள ஒரு நபரை அத்திசையில் செல்லவிடாமல் தன்னிச்சையாக தடுத்து நிறுத்துவது முறைகேடான தடுப்பு எனக் கூறப்படுகிறது (பிரிவு 339)

ஒரு குறிப்பிட்ட வரம்பிற்குட்பட்ட எல்லையை மீறிச் செல்ல முடியாத வகையில், எவரையேனும் முறைகேடாக தடுப்பதை முறைகேடான சிறை வைத்தல் என்பர். (பிரிவு 340)

மறைவாகவும், முறைகேடாகவும் சிறைவைக்கும் கருத்துடன் ஆளைக்கவர்தலும், ஆளைக்கடத்தலும் குற்றமாகும். அதற்கு 7 ஆண்டுக்காலம் வரை சிறையும் அபராதமும் தண்டனையாக விதிக்கப்படும். (பிரிவு 365)

முறைகேடான தடுப்பு செய்பவருக்கு ஒரு மாதம் சிறையோ, அல்லது 500 ரூபாய் அபராதமோ அல்லது இரண்டுமோ தண்டனையாக விதிக்கப்படும். (பிரிவு 341)

முறைகேடான சிறைவைத்தல் புரியும் எவரொருவருக்கும் ஒராண்டு வரை சிறைக்காவலோ அல்லது ஆயிரம் ரூபாய் அபராதமோ அல்லது இரண்டுமோ தண்டனையாக விதிக்கப்படும் (பிரிவு 342)

தாக்குதல்!

கிரெடிட் கார்டு வசூல் என்ற பெயரில் தாக்க முயற்சிப்பதே தவறுதான். எந்த ஒருவரின் மீதாவது வன்முறையை கருத்துடன் பயன்படுத்துதல்; அத்தகு வன்முறை அந்நபரின் சம்மதமின்றி பயன்படுத்தப்பட்டிருக்க வேண்டும்; அத்தகு வன்முறை பின்வருவனவற்றிற்காக பயன்படுத்தப்பட்டிருக்க வேண்டும்,

(i)ஒரு குற்றத்தை செய்வதற்காக, அல்லது
(ii)அந்நபருக்கு கேடு அச்சம் அல்லது தொந்தரவு செய்ய வேண்டும் என்ற கருத்துடன் அல்லது அவை அநேகமாக விளையக்கூடும் என்று அறிந்திருந்து, அத்தகு வன்முறையை பயன்படுத்துதல் குற்றமுறு வன்முறை எனப்படும் (பிரிவு 350)

ஒருவர், தம் முன்னுள்ள மற்றொருவரின் மீது குற்றமுறு வன்முறையை பயன்படுத்தப் போவதாக அச்சுறுத்தும் கருத்துடன், ஒரு சைகையோ அல்லது ஒரு ஆயத்தமோ செய்தால், அது தாக்க முனைதல் ஆகும் (பிரிவு 351).

குற்றமுறு வன்முறையைப் பயன்படுத்தி தாக்கும் நபருக்கு மூன்று மாதங்கள் வரை சிறைக்காவலோ அல்லது ஐநூறு ரூபாய் வரை அபராதமோ அல்லது இரண்டுமோ தண்டனையாக விதிக்கப்படும். (பிரிவு 352).

வங்கி அதிகாரிகளும் குற்றவாளிகளே!

வசூல் முகவர்கள் செய்யும் தவறுகளுக்கு நாங்கள் பொறுப்பேற்க முடியாது என்று வங்கி அதிகாரிகள் தப்ப முடியாது. அவர்களும் குற்றவாளிகள் என்று சட்டம் கூறுகிறது.

குற்ற உடந்தை: ஒன்றினை செய்வதற்கு ஒருவர் எப்பொழுது உடந்தையாகி இருக்கிறாரென்றால், அவர்...
முதலாவதாக : அச்செயலை செய்ய எவரையேனும் தூண்டுதல், அல்லது
இரண்டாவதாக : அச்செயலைப் புரிய ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட நபர்களுடன் சதியில் ஈடுபடுதல்: அச்சதியின் விளைவாக ஒரு செயலோ அல்லது சட்ட விரோதமான ஒரு செயல் தவிர்ப்போ நிகழ்த்தி அச்செயலைச் செய்தல் அல்லது
மூன்றாவதாக : செய்கை அல்லது செயல் தவிர்க்கை ஏதேனுமென்றால் அந்தச் செயலை செய்வதற்கு கருத்துடன் உதவி செய்தல்
- ஆகியோர் குற்ற உடந்தை புரிந்தோராக கருதப்படுவர். (பிரிவு 107)

எந்தக் குற்றம் நடைபெற உடந்தையாக இருக்கிறாரோ அந்தக் குற்றத்திற்கு தண்டனைத் தொகுப்பால் கூறப்பட்டுள்ள தண்டனையை குற்ற உடந்தையாளர் அடைய வேண்டும் என்று பிரிவு 109 கூறுகிறது.

தற்காப்புரிமை!

கிரெடிட் கார்டு கடன் வசூல் என்ற பெயரில் குண்டர்கள் அராஜகம் செய்யும்போது நீங்கள் கைகட்டி வேடிக்கை பார்க்க வேண்டிய அவசியம் இல்லை. உங்கள் உயிரையும் உடமைகளையும் பாதுகாக்க சட்டம் உங்களுக்கு பல உரிமைகளை அளிக்கிறது.

உடல் தற்காப்புரிமை - தற்காப்புரிமையை பயன்படுத்தும்பொழுது செய்யப்படும் எதுவும் குற்றமில்லை. (பிரிவு 96)

முதலாவதாக, தனது உடலையும், மற்றவர்கள் உடலையும், மனித உடலை பாதிக்கின்ற வகையில் செய்யப்படும் குற்றம் எதிலிருந்தும் காத்துத்கொள்ள உரிமை. இரண்டாவதாக, தன்னுடைய அல்லது மற்றொருவருடைய அசையும் அல்லது அசையா சொத்தை திருட்டு, கொள்ளை, அழிம்பு அல்லது அத்துமீறல் போன்ற குற்றச் செயல்களிலிருந்து அல்லது மேற்கண்ட குற்றங்களை புரிய முயற்சி செய்வதிலிருந்து காத்துக்கொள்ள தற்காப்புரிமை ஒவ்வொருவருக்கும் உரிமை உண்டு. (பிரிவு 97)

உடலைத் தற்காத்துக் கொள்ளும் பொருட்டு மரணமோ அல்லது வேறு தீங்கு ஏதேனும் எதிராளிக்கு விளைந்தாலோ, அது பின்வரும் சூழ்நிலைகளில் எனில் அதைக் குற்றமாக கருதமுடியாது. தற்காப்புரிமை இங்கு நீடிக்கும். அச்சூழ்நிலைகள் கீழ்வருவன.

1. நம்மை எதிரி தாக்கி மரணம் விளைவிக்கலாம் என்ற அச்சத்தை உண்டாக்கத் தக்கதான ஒரு தாக்குதலின்போது,
2. நம்மை எதிரி தாக்கி கொடுங்காயம் விளைவிக்கலாம் என்ற அச்சத்தை உண்டாக்கத்தக்கதான ஒரு தாக்குதலின்பொழுது,
3. வன்புணர்ச்சி செய்யும் கருத்துடன் தாக்கும்போது,
4. இயற்கைக்கு மாறான காம இச்சையைத் திருப்தி செய்துகொள்ளும் கருத்துடன் தாக்கும்போது,
5. ஆட்கவரும் அல்லது கடத்தும் கருத்துடன் தாக்கும்பொழுது,
6. சட்டபூர்வமான பொது அதிகாரிகளை அணுகி உதவி பெறமுடியாத நிலையில் ஒருவரை முறையின்றி அடைத்து வைக்கும் கருத்துடன் தாக்கும்போது,

மேலே குறிப்பிட்ட ஆறுவகைத் தாக்குதலில் ஏதேனும் ஒன்றிற்கு உள்ளானால், அவ்வாறு தாக்குபவரைக் கொல்லவும், அல்லது எவ்விதமான உடற்காயத்தையும் விளைவிக்கலாம். இந்தச் சூழ்நிலைகளில் தாக்குபவருக்கு மரணத்தை விளைவிப்பதோ, உடற்காயங்களை விளைவிப்பதோ குற்றமாவதில்லை என்று பிரிவு 101 கூறுகிறது. எனினும், பாதுகாப்பிற்கு தேவையான அளவிற்கே தற்காப்புரிமையை பயன்படுத்த வேண்டும் என்றும், அதைவிட அதிகமாகக்கேடு விளைவிக்கும் வகையில் தற்காப்புரிமையை பயன்படுத்தக்கூடாது என்றும் பிரிவு 99 உட்பிரிவு 3 எச்சரிக்கிறது.

கிரெடிட் கார்டு வசூல் என்ற பெயரில் குண்டர்கள் மிரட்டினால் என்ன செய்வது?

கிரெடிட் கார்டு பிரசினைக்காகவோ, அல்லது வேறு எந்த கடன் பிரசினைக்காகவோ உங்களை யாராவது இழிவாக பேசினாலோ, மிரட்டினாலோ, வேறெந்த வகையிலாவது தொந்தரவு செய்தாலோ உடனடியாக அருகில் உள்ள காவல் நிலையத்தில் புகார் செய்யுங்கள். அந்தப் புகாரில் வசூல் முகவர்களுடன் மற்றும் வங்கி அதிகாரிகளையும் எதிர் தரப்பினராக சேருங்கள். வங்கி அதிகாரிகள் நேரில் வராவிட்டாலும், அவர்களின் உத்தரவின்படிதான் வசூல் முகவர்கள் செயல்படுகின்றனர். எனவே வசூல் முகவர்(குண்டர்)களின் செயல்களுக்கு வங்கி அதிகாரிகளும் பொறுப்பாவர்.

காவல் நிலையத்தில் உங்கள் புகாரை ஏற்றுக்கொண்டதற்காக ரசீது ஒன்றை அளிப்பார்கள். அதை பெற்றுக்கொள்ளுங்கள். அந்த புகாரின் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்படுகிறதா என்பதை கண்காணியுங்கள். காவல் நிலையத்தில் உங்கள் புகாரை பதிவு செய்து விசாரிக்க மறுத்தால், காவல்துறை ஆணையர் போன்ற உயரதிகாரிகளிடம் புகார் செய்யுங்கள்.

அப்போதும் புகார் பதிவு செய்யப்படவில்லை என்றால் அப்பகுதியில் உள்ள குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து உங்கள் புகாரை பதிவு செய்யவும், உங்களை தற்காத்துக் கொள்ளவும் முடியும். நீங்கள் அரசு அல்லது அரசு சார் துறைகளில் பணியாற்றுபவர் என்றால், அலுவல் நேரத்தில் உங்கள் பணிக்கு இடையூறு விளைவிப்பது சட்டப்படி குற்றம். எனவே உடனடியாக காவல்துறையில் புகார் அளியுங்கள்.

மிரட்டல், அச்சுறுத்தல், அவமானப்படுத்துதல் மூலம் உங்களிடமிருந்து பணம் வசூல் செய்யமுடியாது என்பதை வசூல் முகவர்களுக்கு உணர்த்துங்கள். சட்டரீதியான நடவடிக்கைகளை எதிர்கொள்ள தயாராக இருப்பதாக கடன் வசூலுக்கு வரும் குண்டர்களிடம் உறுதிபட தெரிவியுங்கள். கடன் வசூல் முகவர்களிடம் எந்த ஆவணங்களிலும் கையெழுத்திட வேண்டிய அவசியம் இல்லை.

கடன் வசூல் குண்டர்களால் உங்கள் உயிருக்கோ, உடைமைக்கோ ஆபத்து நேரும் காலத்தில், உங்களை தற்காத்துக் கொள்ளும் உரிமை சட்டப்படி உங்களுக்கு உள்ளது. அதற்காக நீங்கள் (தற்காப்பு) தாக்குதலிலும் ஈடுபடலாம்.

(கிரெடிட் கார்டு குறித்த நுகர்வோர் பாதுகாப்பு தகவல்களுக்கு http://www.creditcardwatch.org/ என்ற இணையதளத்தை பார்வையிடவும்)

- சுந்தரராஜன் ([email protected])

(நன்றி: மக்கள் சட்டம்)


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

வாசகர்களின் கவனத்திற்கு...

நீங்கள் படித்து ரசித்த அறிவியல் செய்திகளை கீற்று இணைய தளத்திற்கு அனுப்பலாம். அவ்வாறு அனுப்பும்போது செய்திக்கான ஆதாரத்தை தவறாமல் குறிப்பிடவும். அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected].


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com