Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Koottanchoru
Kottanchoru Logo
ஜூலை 2005

கவனமாய் கடக்கவும்

ஆதவன் தீட்சண்யா

துர்சொப்பனங்களின் நெரிப்பில்
படுக்கையில் ‘மூச்சா’போய்விடும் குழந்தைகளும்
அதிர்ந்து பேசும் சுபாவமற்ற இருதய பலஹீனர்களும்
இக்கவிதையைப் படிக்க வேண்டாமென
கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்

violence உலகை களியாட்ட மேடையாய் வரித்து
வாழ்வைத் துய்க்கிறவர்களுக்கும்
மலர் மழை மழலைச்சிரிப்பென பாடித்திளைக்கும்
நெப்பமான நுரைமனக் கவிஞர்களுக்கும்
பொருந்தும் இவ்வெச்சரிக்கை

காவல் நிலையத்தைக் கடக்கும் பெண்ணின் பதற்றத்தோடு
மாற்றுப்பாதை வழியே இக்கவிதையைக் கடப்பதன்றி
சாத்வீகத்தால் நிரப்பப்பெற்ற நற்குணவான்
தனது நம்பிக்கைகளை தற்காத்துக்கொள்ள
மறுமார்க்கமில்லை

மேற்சென்று படிக்க நேரிட்டால்
வளைந்து ஒடுங்கி விறைத்திருக்கும் எழுத்துருக்கள்
விபத்தில் சிதைந்தவர்களைப்போல் அச்சமூட்டக்கூடும்
எழுத்திலிருந்து துண்டித்து மேலேத் தெரியும்
மெய்யெழுத்துப் புள்ளி
தலைவேறு முண்டம் வேறாய் தறிக்கப்பட்ட
மேலவளவு முருகேசனை நினைவுபடுத்தி
ஒரு எழுச்சியை வீழ்த்தியதானக் கொண்டாட்டங்களை
முடிவுக்கு கொண்டுவந்துவிடலாம்

வல்லுறவுக்கு பிளக்கப்பட்ட தொடையிடையே
வழியும் உதிரம்
ஒரு சொல்லுக்கும் மற்றொன்றுக்குமான
இடைப்பள்ளத்தில் தேங்கி
உங்களது மெல்லிதயத்தை மூழ்கடித்துவிடும்
அபாயமுண்டு

ஒவ்வொரு வரியும்
கேட்பாரற்று மார்ச்சுவரியில் கடத்தப்பட்டிருக்கும்
பிரேதங்களைப்போல தெரியும்பட்சம்
வீடு திரும்பாத உறவினர்களைத் தேடியலையக்கூடும்

முதல் பாராவுக்கும் அடுத்த பாராவுக்கும்
இடையேயுள்ள வெளி
கடலோரத்தில் பொக்லைன்களால் தோண்டப்பட்ட
பெருங்குழிகளாக சாயலிடுமானால்
இக்கவிதையை சுனாமிக்கானதாய் தப்பர்த்தம்
கொள்ள வாய்ப்புண்டு

என்கவுண்டரில் தெறித்த ரத்தத்துளி போல்
சிதறிக்கிடக்கும் முற்றுப்புள்ளிகள்
தூக்கத்தில் வளர்ந்து
நடுகற்களை நினைவூட்டும் நிறுத்தற்குறிகள்
வேறெதோ பயணத்தைக் கிளப்பிவிட்டு
ஊர்திரும்பலை சாத்தியமற்றதாக்கிவிடும்

ஒரே ஊரின்
வெவ்வேறு சாதி சுடுகாடுகளைப் போலிருக்கும்
அடுத்தடுத்தப் பக்கங்களில்
வெட்டுப்பட்டு மொக்கையான
கன்னங்கரிய எழுத்துக்களாலாகி
யாவரும் வெறுக்கத்தக்கவொரு கவிதையிருக்கிறது.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com