Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Kavithacharan
Kavithaasaran Logo
ஜூலை - டிசம்பர் 2006


எனது படைப்பு மொழியும் அனுபவங்களும்
சு. தமிழ்ச்செல்வி

மாணிக்கம், அளம், கீதாரி, கற்றாழை என நான்கு நாவல்களுக்குப் பின், ஐந்தாவது நாவலை எழுதிக் கொண்டிருக்கிறேன். ஒவ்வொரு படைப்பும் எனது பெரும் தவிப்புகளிகருந்து எழுகின்றது. பல்வேறு விதமான மனநிலைகளை நெருங்கிச் செல்வதும் அவற்றிலிருந்து விடுவித்துக் கொள்வதுமாக என் படைப்பு கணம் ஒவ்வொன்றும் உயிர்த்துடிப்பு மிக்கது. ஒரு விதை முளைக்கும் போது நடக்கும் வினைகளுக்கு ஒப்பானது. படைப்பு வெளிப்படும் என் மனதின் இயக்கம், மண், காற்று, ஈரம், வெப்பம் இவற்றோடு கொள்ளும் உறவால் விதை முளைப்பது போல படைப்பின் ஆதாரமாகத் திகழும் ஏதோ ஓர் அழியாத எண்ணம்-மொழி, சமூகம், அரசியல், கலை நுட்பம் இவற்றோடு கொள்ளும் வினைகளின் ஊடே, படைப்பு உருவாவதாக எண்ணுகிறேன். என் படைப்பிற்கான மூல விதையாக இருப்பது ‘நான் ஒரு பெண்’ என்கிற அழியாத எண்ணம்.

எனக்குக் கிடைத்த வலி, மகிழ்ச்சி, துயரம், கேளிக்கை எனும் அனுபவங்களின் தொகுப்பு என்னை ஒரு மனிதப் பிறவியாய் உணர வைத்தது என்பதைவிட ஒரு பெண்ணாக உணர வைத்தது என்பதுதான் முழுமையானதாக இருக்கும். எனக்கு மட்டுமின்றி என் தாய், சகோதரிகள், தோழிகள், உறவினர்கள், மேலும் நான் சந்தித்த பெண்கள் என இவர்களுக்குக் கிடைத்த அனுபவங்களை நெருங்கி நின்றும், கற்பனை செய்தும் விளங்கிக் கொண்டதிலிருந்து உருவானதுதான் பெண்ணாக உணரும் இந்த ‘அழியாத எண்ணம்’.

இப்போது எனது படைப்புகளைப் பற்றி மீள சிந்திக்கும்போது இத்தகைய பெண் எனும் தன்னுணர்வே ஒவ்வொரு படைப்பிற்கும் கருப்பொருளாய் அமைந்திருக்கும் எனக் கருதுகிறேன். எனது படைப்புகளில் இயங்கும் பெண்கள் அனுபவிக்கும் வறுமை, பசி, சுரண்டல், இழிவு, பாலியல் வன்முறை போன்றவை தொடர்ந்து எல்லாப் பெண்களும் எதிர்கொள்கிற நெருக்கடிகள்தான். ஆனால் இவற்றை நான் நன்கு அறிந்த, எனக்கு நெருக்கமானவர்களிடமிருந்தே உணர்ந்து கொள்கிறேன்.

மிகவும் தூலமாக, இப்பெண்களை அடையாளம் காட்ட வட்டார அடையாளமும் அவ்வட்டாரத்தில் புழங்கும் மொழியும் எனக்கு படைப்பில் வெகுவாக உதவி செய்கின்றன. பொதுவான பெண்களின் பிரச்னைகளுக்கும், கிராமப்புறம் சார்ந்த உழைக்கும் பெண்களின் பிரச்னைகளுக்கும் குறிப்பிடத்தகுந்த வித்தியாசங்கள் இருக்கின்றன. எளிய விவசாயப் பின்னணி உள்ள குடும்பத்திலிருந்து வந்த எனக்கு மிகவும் நெருங்கியவை இத்தகைய உழைக்கும் பெண்களின் அனுபவங்கள். எத்தகைய நெருக்கடிகளுக்கும் மத்தியிலும் துவண்டு போகாமல் எதிர் நீச்சல் போடும் போர்க்குணமும், தட்பவெப்ப மாறுதல்கள், இயற்கை சீற்றங்கள் போன்றவற்றை எதிர்கொள்கிற மன உறுதியும் இயற்கையின் ரகசியங்களைக் கற்றறிந்திருக்கும் திறமும், மண்ணோடு கொண்டிருக்கிற உறவும் இத்தகைய பெண்களின் தனிப்பட்ட பண்பு நலன்கள். விவசாயத்தைக் கண்டுபிடித்த ஆதிதாயின் எச்சங்கள் நிரம்பியர்கள் இவர்கள்.

இத்தகைய பெண்களுடைய பார்வையின் வழியேதான் நான் காணும் உலகம் விரிகிறது. எனது படைப்புகளில் ஆண்கள் குறித்த சித்திரங்கள் மிகவும் மங்கலாகக் காட்சியளிப்பதற்கு இத்தகைய பார்வையும் காரணமாக இருக்கலாம்.

2

தமிழின் முக்கியமான படைப்பாளிகளில் ஒருவரான, கு. அழகிரிசாமி அவர்களை மையமாகக் கொண்டு, வட்டார வழக்கு குறித்து உரையாடும் இவ்வரங்கில், கீழத்தஞ்சை வட்டார வழக்கைப் படைப்புகளில் கையாளும் நான், வட்டார வழக்கு பற்றிய எனது அபிப்பிராயங்களை சுருக்கமான அளவில் உங்களோடு பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன்.

பல இனக்குழுக்கள், பல மொழி வழக்குகள், பல வழிபாட்டு முறைகள், பலவிதமான சடங்குகள், பல்வித குழுப் பண்பாட்டு முறைகள் கொண்ட பன்முகச் சமூகமாக விளங்குகிறது தமிழ் நிலம். இதில் எனது பாத்திரங்கள் என்னுடைய மண்ணின் கவுச்சியோடு, எனது இனக்குழுவிற்கு உரிய நெகிழ்ச்சியோடு, எனது மொழியின் உச்சரிப்புகளை அதற்குரிய எச்சில் தெறிப்புகளோடு வெளிப்படுத்துவதுதான் அதன் தனித்தன்மைக்கு உகந்ததாக இருக்கும் என நம்புகிறேன்.

மேலும் வட்டார வழக்கு என்பது கருத்தை வெளிப்படுத்துவதற்கான ஊடகம் மட்டுமன்று. எங்கள் பகுதியில் தாய்மார்கள் தங்கள் பெண்பிள்ளைகளை ‘தங்கச்சி’ என்றழைப்பார்கள். இதில் உள்ள நெகிழ்ச்சி மகளைப் பெயர் சொல்லி அழைப்பதில் ஒருபோதும் கிடைப்பதில்லை. வட்டாரச் சொல்லாடல்கள் அகராதிப் பொருளை மீறியும் உணர்த்துவதற்கு பலவகையான உணர்வுகளைத் தன்னுள் ஒளித்து வைத்திருக்கின்றன. நெடிய பாரம்பரியமுள்ள ஒரு இனக்குழு சமூகத்தின் வாழ்வனுபவங்கள் அவ்வழக்கிற்குள் நிரம்பிக் கிடக்கின்றன. குறிப்பாக பெண்கள் பாடும் தாலாட்டுகளில், ஒப்பாரிகளில், நலங்குப்பாடல்களில் அவர்கள் நெஞ்சுக்குள் புதையுண்டு கிடக்கும் ஆற்றாமைகள், தவிப்புகள், ஏக்கங்கள், சோகங்கள் வெளிப்படுவதை நம்மால் காணமுடியும். அவர்கள் சொல்லும் சொலவடைகள் கவித்துவக்கூறுகள் நிரம்பியவை. உளவியல் தன்மை படைத்தவை. உள்ளக் கிடக்கைகளை உருவகத்தன்மையில் பகிர்ந்துகொள்ளக் கூடியவை.

இயற்கையைப் படித்தும், வாழ்ந்து கற்றும், செரித்த அனுபவக் கூறுகள் வட்டார வழக்கில் ஏராளமாக உள்ளன. வேளாண்மை, கால்நடைப் பராமரிப்பு, மருத்துவம், உளவியல், தட்பவெப்ப நிலை மாற்றங்கள் குறித்த அறிவு என ஒரு குழுவின் மொழிக்குள் அக்குழு அனுபவத்தின் வழி திரட்டிய அறிவுச் செல்வங்கள் ஏராளமாக பொதிந்து கிடக்கின்றன. வட்டார வழக்குகளில் காணப்படுகின்ற தொன்மக் கதையாடல்கள் வரலாற்றுத் தன்மையும், கற்பனையும், புராணிகக் கூறுகளும் கொண்டவை. இவை நம் நீண்ட கதையாடல் மரபின் வளமான எடுத்துக்காட்டுகள்.

நிலபிரபுத்துவம், ஆணாதிக்கம் என அதிகாரத்திற்கு உட்படுத்தப்பட்ட மக்களின் மனக் கொந்தளிப்புகளையும், கலகப் பண்புகளையும் இத்தகைய வட்டார வழக்கிற்குள் அடையாளம் காணமுடியும். படைப்பு வகைமைகளுள் முக்கிய ஒரு கூறாக வட்டார வழக்கை உணர்வதாலும், கல்வி, ஊடகங்கள் போன்ற நிறுவனங்கள் வட்டார வழக்கிலுள்ள தனித்துவ அடையாளங்களை, கச்சாத் தன்மையாகக் கருதி, அதை நீக்கி, மையச் சமூகத்தின் ஒற்றைக் குரலாக மொழியை நிறுவ முயலும் நிலையிலும், இன்று வளர்ந்து வருகின்ற நவீன சிந்தனைப் போக்கு சிறு கதையாடல்களின் பன்மைத்தன்மையை ஆதரிக்கின்ற நிலையிலும் எனது படைப்புகளில் எங்கள் கீழத்தஞ்சை பகுதியின் மொழி வழக்கைக் கையாள்கிறேன். இம்மொழிநடை எனது படைப்புகளுக்கு ஈரத்தையும், உயிர்ப்பையும் வழங்குகிறது என அழுத்தமாக நம்புகிறேன். வட்டார வழக்கின் ஊடாகவே உலகின் அரிய படைப்புகளுக்கு இணையான படைப்புகளை தமிழில் உருவாக்க முடியும் எனவும் கருதுகிறேன். அவ்வகையில் ஆர்.சண்முகசுந்தரம், கு. அழகிரிசாமி, ஹெப்சிபா ஜேசுதாஸ், கி. ராஜநாராயணன், பூமணி, பெருமாள்முருகன், இமையம், கண்மணி குணசேகரன் போன்ற படைப்பாளிகளை முக்கியமானவர்களாகக் கருதுகிறேன்.

3

எனது படைப்புகள் பெரும்பாலும் சமூகத்தின் விளிம்பிலுள்ள பிரிவினர் குறித்து அக்கறைப்படுபவை. இன்னும் குறிப்பாக பெண்ணின் பார்வையிலிருந்து பெண் குறித்த கரிசனங்களை முன்வைப்பவை. எனது படைப்பு மொழி வட்டார வழக்கில் அமைந்திருக்கிறது எனில் படைப்பின் கருப்பொருளாக பெண் திகழ்கிறாள். ஆணும் பெண்ணும் பரஸ்பர நட்புணர்வோடு, அன்போடு, விடுதலை உணர்வோடு இணைந்து வாழக்கூடிய லட்சிய பூர்வமான குடும்ப வாழ்க்கைக்கு பெண் என்கிற தன்னுணர்வு எனக்குத் தடையை ஏற்படுத்தவில்லை. ஆனாலும் நடைமுறை வாழ்க்கையில், குடும்ப அமைப்பில் பெண்ணின் இடம் ஆணுக்கு இணையானதாக இல்லாமல் இரண்டாம் நிலையில் உள்ளது வருத்தமளிப்பதாக இருக்கிறது.

பெண் என்பவள் சார்ந்து வாழ்பவளாகக் கருதப்படுகிறாள். இந்நிலையில் எனது படைப்புகளில் நான் கவனப்படுத்துகிற எளிய கிராமத்துப் பெண்கள் ஆண்களின் துணையின்றி வாழக்கூடிய மன உறுதி படைத்தவர்களாக இருக்கிறார்கள். அளம் நாவலில் தன்னையும் தனது மூன்று பெண்பிள்ளைகளையும் பிரிந்து வெளிநாடு சென்ற கணவன் இறுதிவரை என்ன ஆனான் என்று தெரியாத நிலையில் சுந்தராம்பாள் சோர்ந்து விடவில்லை. தற்கொலைக்கு முயலவில்லை. புரிந்துகொள்ள முடியாத வாழ்வின் விதி அவளுக்கு மீண்டும் மீண்டும் தோல்விகளையே பரிசாகத் தந்தபோதிலும் தொடர்ந்து போராடுகிற மனவலிமை உடையவளாக விளங்குகிறாள். மனவலிமை என்கிற பிரயோகத்தை நெகிழ்வுடைய அர்த்தத்திலேயே இங்கு கையாள்கிறேன். ஏனென்றால் வலிமையுடைய பெண் எனும் பதத்தை ஏதோ இரும்பு மனுசி என்பதுபோல் புரிந்துகொள்ளக் கூடாது. நாவலில் சுந்தராம்பாள் காதல், தாய்மை, இரக்கம், துக்கம் எனும் உணர்வுகளின் தொகுப்பாக இருக்கிறாள். இவற்றுடன் கணவனால் கைவிடப்பட்டாலும் தனித்து வாழமுடியும் என்கிற மனப்பக்குவமும் சுயசார்பும் உடையவளாக இருக்கிறாள்.

இதுபோன்ற குடிகாரக் கணவனால் அல்லலுக்கும் அவமதிப்பிற்கும் உள்ளாகும் கற்றாழை நாவலின் மணிமேகலையும் சுயமதிப்பு, சுயசார்பு உடையவளாகத் திகழ்கிறாள். சுயமரியாதைக்கு பங்கம் ஏற்படுகிற போது கணவனை விட்டுப் பிரிந்து செல்கிறாள். ஆண்துணை இன்றியும் பெண்கள் தனித்து தங்களுக்குள் இணைந்து வாழ முடியும் என்று நிரூபிக்கிறாள். மனையுறை மகளிர்க்கான மதிப்பீடுகள் மாறிவருகின்ற இன்றைய சூழலில் படைப்புத் தளத்தில் மாற்று மதிப்பீடுகளை யதார்த்தத்திற்கு உதவாத வறட்டுக் கற்பனைகளாக அன்றி எதிர்கால நிதர்சனங்களாக மாறக்கூடியவை எனும் நம்பிக்கையை ஏற்படுத்தக்கூடியவைகளாக எனது படைப்புகளை உருவாக்குகிறேன்.

பெண் ஆண் உறவு நிலைக்கு அடுத்ததாக பெண்ணுக்கும் இயற்கைக்கும் உள்ள உறவு எனது படைப்புகளில் மிகுந்து காணப்படுவதாக உணர்கிறேன். பெண் என்கிற அளவில் என்னை நான் இயற்கையின் மகளாகக் கருதுகிறேன். இயற்கை ஒருபோதும் மனிதர்களை கைவிட்டு விடாது என்பதில் அழுத்தமான நம்பிக்கை கொண்டிருக்கிறேன். அதிகாரமும், பேராசையும் பிடித்த மனிதர்கள்தான் இயற்கையை அபகரிக்க, வெற்றிகொள்ள நினைக்கிறார்கள். ஆனால் பெண் இயற்கையின் புதிர்களைத் தன் உள்உணர்வின் வழி அறிந்திருக்கிறாள். ஐம்பூதங்களாலும் ஆன தான் இயற்கையின் ஒரு பகுதியென அவள் அறிந்திருக்கிறாள். புயலை, வெள்ளத்தை, பஞ்சத்தை எதிர்கொள்கிற ரகசியத்தை இயற்கை அவளிடம் பகிர்ந்து கொள்வதை அளம், கீதாரி நாவல்களை வாசித்தவர்கள் உணரமுடியும்.

4

எனது படைப்பு வெளி, படைப்பு மொழி இவை சிறுவயதிகருந்து சயேச்சையான அனுபவத்தின் வழியாக நான் பெற்றவை. எனது படைப்புகள் படைப்பின் நிமித்தமாக கள ஆய்வு மேற்கொண்டு எழுதப்பட்டவை அன்று. பிறந்த மண்ணிலிருந்து வெகு தூரத்தில் வசிக்க நேரிட்டதால் அவ்வப்போது எழும் சந்தேகங்களை தீர்த்துக் கொள்வது, தகவல் பிழைகளைத் தவிர்ப்பது போன்றவற்றிற்காக களப்பயணங்களை மேற்கொண்டிருக்கிறேன். அப்போதும் ஒரு பார்வையாளராக, பேட்டி காண்பவராக எனது இயக்கம் இருப்பதில்லை. உறவினர்கள் வீடுகளில் தங்கியிருப்பது போல் உப்பு விளைவிப்பவர்கள், மீன் பிடிப்பவர்கள், ஆடு மேய்ப்பவர்கள் இவர்களுடன் தங்கியிருந்திருக்கிறேன். இவர்களுடனான எனது நெருங்கிய தோழமை உழைக்கும் மக்களின்பால் அன்பையும், மிகுந்த மதிப்பையும் மேலும் மேலும் உறுதி செய்வதாக இருக்கிறது. சிறு வயதில் வறுமையை அனுபவித்தவள் என்பதால் கண்ணீர், வியர்வை இவற்றின் முழு பொருளையும் அதற்குண்டான அத்தனை பரிமாணத்துடன் அறிந்து வைத்திருப்பதால் இவர்களுடனான நெருக்கம் எனக்கு உளப்பூர்வமானதாகவும் இருக்கிறது.

கிராமிய மதிப்பீடுகள் சார்ந்த உழைக்கும பெண்கள் வாழ்க்கையில் பாலியல் வெளிப்பாடு என்பது இலைமறை காய்போன்றது. அவர்களது மீறல்கள், கேளிக்கைகள் என்பவற்றை அதற்குண்டான தொனியிலேயே வெளிப்படுத்துகிறேன். பெண் எழுத்து என்பது முற்றிலுமாக பாலியலை மையமாகக் கொண்டு அமையவேண்டியது அவசியமில்லை என்பது எனது எளிய அபிப்பிராயம். பாலியல் பிரச்சனைகள் பெண் எழுத்துக்கு வலுசேர்க்கும் ஒரு துணைக் கூறுதான். வலிந்து அவற்றைத் திணிப்பதில் எனக்கு விருப்பமில்லை.

5

எழுதுவதற்குச் சாதகமான காரணிகள் ஏதுமில்லாத குடும்பப் பின்னணியிலிருந்து வந்த எனக்கு வாசிப்பு வேட்கையின் மூலமே இலக்கிய ஈடுபாடு ஏற்பட்டது. விளையாட்டாகத் தொடங்கிய எனது படைப்பு முயற்சியில் நாவல் கட்டுமானம், நாவல் அழகியல் போன்றவை என் உண்ளுணர்வின் வழிகாட்டுதலாலேயே அமைந்திருந்தது. ஆனால் தொடர்ந்து எழுதவேண்டும் என தீர்மானித்தபோது நாவல் கலை குறித்து கவனிக்கவும் கற்கவும் தொடங்கிவிட்டேன்.

தமிழ்ச் சூழலில், யதார்த்த வகை மாதிரி புதினங்களில் இன்னும் சாதிக்க நிறைய உள்ளதாகவே எண்ணுகிறேன். தங்கள் கதையாடும் உரிமை மறுக்கப்பட்ட எத்தனையோ சமூகத்தினர் இன்று இலக்கிய வெளிக்குள் பிரவேசித்திருக்கின்றனர். இவர்களை வரவேற்பதும் அங்கீகரிப்பதும் சமூக நீதியிலும் இலக்கியத்திலும் அக்கறை கொண்டிருப்பவர்களின் கடமையாகும். விமர்சனங்கள் இவர்களது குறைபாடுகளை நேர்மறையான தொனியில் சுட்டிக்காட்டி இவர்களுக்குப் புதிய பார்வைகளை, புதிய பாதைகளைக் காட்டுவதாக அமைய வேண்டும். மாறாக இவர்களை இலக்கியப் புலத்திலிருந்து வெளியேற்றுவதற்கான தந்திரமாக விமர்சனங்கள் இருக்கக்கூடாது.

என்னைப் பொறுத்த அளவில் நான் மதிக்கும் என்னுடைய முன்னோடிப் படைப்பாளிகள் மற்றும் சிந்தனையாளர்கள் எனது படைப்புகளை வாசித்து பொறுப்புணர்வோடு அபிப்பிராயங்கள் தெரிவித்து வருகின்றனர். இத்தகைய அபிப்பிராயங்கள் எனக்குத் தொடர்ந்து இயங்குவதற்கான ஊக்கத்தை அளிக்கின்றன. எனது சமகாலப் பெண் எழுத்தாளர்களின் புத்தெழுச்சியான இயக்கமும் நான் எழுதுவதற்கு உற்சாகம் அளிப்பதாய் இருக்கிறது.

சுருக்கமாக எனது படைப்பு அழகியலைத் தொகுத்துக் கூறினால் சமூகத்தின் விளிம்பு நிலை மனிதர்கள், பெண்கள், உழைக்கும் களங்கள், இயற்கை இவை படைப்புப் பொருளாகவும், கீழத்தஞ்சை வட்டார வழக்கு நாவல் கட்டுமானத்தின் மொழிநடையாகவும், நாவல் வகைமையில் யதார்த்தவகையாகவும் அடையாளப்படுத்தலாம். இப்படி வசதி கருதி யாதார்த்தவாத வகைமாதிரியாக எனது படைப்புகள் இனங்காணப்பட்டாலும் அவை முற்றிலுமாக யதார்த்தத்தின் பிரதிபலிப்புகள் மட்டுமே அல்ல. நிலவுகின்ற யதார்த்தத்தைக் கடந்து நாம் விரும்புகின்ற யதார்த்த உலகை எனது படைப்புகளின் வழியாகக் கட்டமைக்கிறேன். அக்கனவு அல்லது லட்சிய யதார்த்தம் விரைவில் வசப்படும் என உளப்பூர்வமாக நம்புகிறேன்.

குறிப்பு: 23.09.2006ஆம் நாள் சென்னைப் பல்கலைகழக தமிழ்த் துறையில் நடைபெற்ற கு.அழகிரிசாமி பிறந்தநாள் விழா கருத்தரங்கில் வாசிக்கப்பட்ட கட்டுரை.


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com