Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Kavithacharan
Kavithaasaran Logo
ஜனவரி - ஜூலை 2007


காத்திருப்பு
மு. இரா. முருகன்

இந்த மருத்துவமனைக்குள் நான் நுழையும்போது ஒன்பது மணி. இப்போது பன்னிரெண்டை நெருங்கிக் கொண்டிருந்தது. இன்னும் எவ்வளவு நேரம் காத்திருக்க வேண்டும் என்பதும் தெரியவில்லை. ஒவ்வொரு முறையும் இப்படித்தான் ஆகிறது. எதை நொந்துகொள்வது என்றுதான் தெரியவில்லை. கடந்த ஆறுமாதங்களாக என்னுடைய துணைவியாருக்கு இங்குதான் மருத்துவம். ஒவ்வொரு மாதமும் விடுப்பு விண்ணப்பம் தகுதிச்சான்று என மாற்றி மாற்றி வரவேண்டி உள்ளது. இப்போதும் அதற்காகத்தான் காத்திருக்கிறேன். மருத்துவர் எப்போது கூப்பிடுவார் என்றுதான் தெரியவில்லை. இப்போதே பசிவயிற்றைக் கிள்ளுகிறது. அரைமணி நேரத்துக்கு ஒரு முறை அந்த செவிலிப் பெண்ணிடம் நினைவூட்ட வேண்டியுள்ளது. ஆயினும் அவர்கள் மசிவதாக இல்லை. நான் ஏதேனும் சொன்னால், அவர்கள் சட்டம் பேசுகிறார்கள். 'ஒங்களுக்கு முன்னாடி வந்தவுங்களே இன்னும் ஒக்காந்திருக்காங்கல்ல: அவசரப்படாதீங்க:

அவர் சொல்வது சரிதான். அந்த இடத்தில் ஒரு நூறு பேர்களுக்குக் குறையாமல் உட்கார்ந்திருந்தார்கள். குளிர்சாதன வசதி செய்யப்பட்டிருந்ததால், வியர்க்காமல் பேசிக்கொண்டிருந்தார்கள். பெரும்பாலான நோயாளிகள் ஆந்திராவிலிருந்து வருகிறார்கள். இந்த முறை மலையாளம் பேசுபவர்களும் நிறையப்பேர்கள் இருந்தார்கள். ஆந்திராவிலிருந்து வரும் நிறையப் பேர்கள் வசதி அற்றவர்களாகவே இருந்தார்கள். மதங்களைப் பற்றியும், மனிதர்களைப் பற்றியும் நோய்க்குத் தெரியாது. ஒரு பெண்ணுடன் பேச்சுக் கொடுத்தபோது புதுக்கோட்டையிலிருந்து வந்திருப்பதாகவும், பத்தாம் வகுப்பில் படிப்பதாகவும் சொன்னார். வயிற்றில் கட்டியிருந்ததாகவும், நான்கு மாதங்கட்குமுன் அறுவைச் சிகிச்சை மூலம் அகற்றியதாகவும், இரண்டு மாதங்கட்கு ஒரு முறை வந்து போவதாகவும் சொன்னார். பரிதாபமாக இருந்தது.

உட்கார்ந்திருந்த பல பெண்களில் பெரும்பாலோர் தலைகளில் துணிகளைக் கட்டி மொட்டைத் தலையை மறைத்திருந்தார்கள். இந்த நோய்க்கான மருத்துவத்தில் முடிகொட்டுவதும், வாய்ப்புண் வருவதும் தவிர்க்கமுடியாததாம். என்னுடைய துணைவியரும் இதற்கு விதிவிலக்கல்ல. ஆண்களைவிடப் பெண்களே நிறைய இருந்தார்கள்.

என்னுடைய துணைவியாருக்கு சித்தா, ஹோமியோ என்று பார்த்துவிட்டுக் கடைசியாகத்தான் இங்குவந்தேன். மருத்துவரை முதலில் சந்தித்தபோது கிண்டலாகவே கேட்டார். 'இன்னும் 'யுனானி’ ஒன்றுதாள் பாக்கி.’ அதை நான் உடனடியாக இடைமறித்தேன். அலோபதியில் ஒரு குறிப்பிட்ட நோய்க்கு இதற்குமேல் மருத்துவம் இல்லை என்றும் மாற்று மருத்துவத்திற்கு முயன்றுபாருங்கள் என்றும் சொன்னதன் அடிப்படையிலேயே நாங்கள் சென்றோம் என்னும் அதில் நல்லபலன் இருந்தது உண்மைதான் என்றும், ஆனால் இப்போது ஆரம்பித்த இடத்திற்கே மீண்டும் வந்துள்ளதால், எல்லா நோய்க்கும் இதுவே மூலக்காரணமாக இருக்கலாம் எனச் சந்தேகம் வந்ததால், இந்த மருத்துவமனைக்கு வந்துள்ளோம் என்றும் திருப்பிச் சொன்னேன்.

என்னுடைய துணைவியார்க்கு 'லிம்போமா’ (புற்று நோயில் ஒருவகை) என்று கண்டுபிடிக்கப்பட்டதும், அந்த நோயைப் பற்றி ஓரளவு படித்துத் தெரிந்து கொண்டேன். மேலும் மருத்துவத்துறைசார்ந்த தோழர்கள் மூலமும் இந்த நோய் பற்றி முழுமையாகத் தெரிந்து கொண்டேன். அடுத்த முறை மருத்துவரைச் சந்தித்தபோது, அவர் சொன்னது போக, எனக்குத் தெரிந்த சில செய்திகள், படித்தது ஆகியவற்றையும் சேர்ந்து, 'இந்த நோய்க்குப் பெயர், அந்த நோயைக் கண்டுபிடித்தவர் பெயராலேயே’ அழைக்கப்படுவதையும் சொன்னேன். மருத்துவர் முகம் இலேசாக மாறியதையும் அப்போது நான் கண்டு கொண்டேன். மருத்துவர்கள் சிலரிடம் இது மாதிரியான போக்கு இருப்பதை நண்பர்கள் சொல்லக் கேட்டிருக்கிறேன். எனக்கும் அந்த அனுபவம் உண்டு. இது இரண்டாவது அனுபவம்.

மருத்துவமனைக்குச் சென்ற என் முதல் அனுபவம் வித்தியாசமானது. அப்போது நாங்கள் கடலூர் மஞ்சக்குப்பத்தில் குடி இருந்தோம். என் அண்ணியார் அங்கே இருந்த அரசினர் தலைமை மருத்துவமனையில் செவிலியராக இருந்தார். எனக்கு வயிற்றுவலி இருந்துவந்ததால், ஒரு மருத்துவரிடம் அழைத்துச் சென்று என்னை அறிமுகப்படுத்தியதோடு, 'நல்லபடிப்பாளி’ என்றும் சொல்லிவைத்தார். அதன்பின் எனக்கும் மருத்துவருக்குமிடையே நடந்த உரையாடலை அப்படியே உங்களுக்குச் சொல்லிவிடுகிறேன்.

'ஒங்க பேரு...

சொன்னேன்.

'என்ன படிக்கிறீங்கஃ

'பி.ஏ; எக்கனாமிக்ஸ் சார்”

'அப்படியா. அப்ப மால்தூசியன் தியரியப்பத்திக் கொஞ்சம் சொல்லுங்க.”

ஓரளவு சொன்னேன்.

''முழுசாச் சொல்லுங்க. அவரோட தியரி எங்க டிபார்ட்மென்ட் சம்பந்தப்பட்டதாகவும் இருக்கும். டாக்டரான நானே எக்கனாமிக்ச சரியாப்படிச்சிருக்கேன். நீங்க சரியாச் சொல்லமாட்டேங்குறீங்களே.’

அந்த மருத்துவருக்கு என்னுடைய நோயைக் கண்டுபிடிப்பதைவிட, அவரது மேதமையைக் காட்டுவது மிக முக்கியமாய் உள்ளதை உணர்ந்தேன். போகுமுன்பு இவருக்கு நான் யார் என்பதைக் காட்ட வேண்டுமென்று எண்ணிக் கொண்டேன். ஒருவழியாக என்னைச் சோதித்துவிட்டு, மருந்துச் சீட்டில் மருந்தை எழுதி என்னிடம் நீட்டினார். நான் வாங்கிக் கொண்ட உடனே எழுந்து போய் கைகளைக் கழுவிக் கொண்டுவந்தவரிடம்,

''டாக்டர், டாக்டரான நீங்க எக்கனாமிக்ஸ் பத்தித் தெரிஞ்சு வச்சிருக்கிறது ரொம்பச் சந்தோசமாயிருக்கு. ஆனா, ஆல்பிரட்மார்சலோட தியரி நமக்கு ஒத்துவருதுன்னும் ரொம்ப அழுத்திச் சொன்னீங்க. ஆனா, அதுக்கும் மேல ரெண்டு விசயம் இருக்கு. அதையும் சேர்த்துப் படிங்க. மார்சல் என்ன சொன்னாரு? பிறக்குற ஒவ்வொரு குழந்தையும் ஒரு வயித்தோட பிறக்குதுன்னாரு. ஆனா, அதுக்குப் பெறகு, எட்வின் கேனன், காரல் மார்க்சுன்னு ரெண்டுபேரு. இவுங்க என்ன சொன்னாங்கன்னா, பொறக்குற கொழந்த வயித்தோட மட்டும் பொறக்குறதில்ல; ரெண்டு கைகளோடயும் பொறக்குது’- அப்படின்னாங்க. மார்ஷல கட்டிக்கிட்டு நீங்க அழுங்க.. நா வாறேன்னுட்டு வெளியில் வந்தேன். அண்ணிக்குத் தர்ம சங்கடமாயிற்று.

மணியைப் பார்த்தேன். ஒன்றரை என்னுடைய பொறுமையின் மீது எனக்கே சந்தேகம் வந்தது. வயிற்றுப் பசியும் யோசிக்க வைத்தது. நேரமானால் காதுவலி வந்துவிடும். வெளியில் போய் சாப்பிட்டு வந்தேன். மருத்துவமனையில் திட்டுத்திட்டாய் நிறையப்பேர்கள் சாப்பிட்டுக் கொண்டிருந்தார்கள். எத்தனை மணிக்குக் கிளம்பி இருப்பார்களோ தெரியாது. பெரும்பாலோர் சின்னச் சின்னப் பாத்திரங்களில் உணவு கொண்டுவந்திருந்தார்கள். சிலர் மட்டும் சாம்பார் வகையறாக்களுடன் வசதியாக உட்கார்ந்து சாப்பிட்டுக் கொண்டிருந்தார்கள். இவ்வளவையும் எத்தனை மணிக்குச் சமைத்திருப்பார்கள்?

பல 'வள்ளல்கள்’ கட்டிக்கொடுத்த கட்டிடங்களில் ஒவ்வொரு பிரிவும் இயங்கியது. மார்வாரிகள், தெலுங்கர்கள் என்று வாரி வழங்கி இருந்தார்கள். 'வள்ளல்களின்” பெயர்கள் கட்டிடத்தில் பொறிக்கப்பட்டிருந்தது. இலவச மருத்துவம் என்று நான் கேள்விப் பட்டிருந்தேன். ஆனால் நாங்கள் பணம் கட்டி மருத்துவம் பார்க்கும் பிரிவுக்கு அனுப்பப்பட்டோம். இலவச மருத்துவம் இல்லை என்பதை ஒருவாரு யூகிக்க முடிந்தது.

‘'தப்பு லேதம்மா”

'பீடி பிடிக்கிறதுக்குத் தப்பு இருந்துச்சுல்ல. இப்ப எவ்வளவு காசு வச்சிருக்க. அதக் கட்டு.’

'தெலுங்கு செப்பம்மா’

'தெலுங்கா- இரு. அந்தம்மாகிட்டப் போயிக் கேட்டுட்டு வா’

இப்படிப்பட்டவர்களைப் பார்க்கவே பரிதாபமாக இருந்தது. நம்மால் உதவி செய்யவும் இயலாது. நிறையப்பேர்களுடைய நிலைமை இதுதான். மருத்துவச் செலவும் குறைவெனுறு சொல்ல முடியாது. மதிப்புக்கூட்டுவரியினால் விலை குறையுமென்று மற்றவர்களைப் போலவே நானம் ஏமாந்தேன். ஏனென்றால் ஒவ்வொரு முறையும் மருத்துவத்திற்கென்று- சோதனைகள் நீங்களாக- எட்டாயிரம் ரூபாய்க்குக் குறையாமல்தான் செலுத்திவந்துள்ளேன். மருத்துவருக்கான கட்டணம் மட்டும் நானூற்றி எழுபத்தைந்து ரூபா. இத்தொகை அநேகமாக வருமானத்தைப் பொறுத்து வேறுபடும். ஒருசராசரி மனிதனுக்கு இது போன்ற நோய் ஏற்பட்டால் சாவதத்தவிர வேறு வழியில்லை. நினைத்தாலே என் ஈரக்குலை நடுங்குகிறது.

மணி ஏறக்குறைய நான்கைத்தொட்டது. நான் இருந்த பகுதியில் இப்போது ஓரிருவர் மட்டுமே இருந்தனர். எனக்குக்கோபம் இன்ன அளவென்றில்லை. நேரே செவிலியரிடம் போய்க் கேட்டேன். உள்ளே ஒரு நோயாளி இருப்பதாகச் சொன்னார். கோபத்துடன் கதவைத் தள்ளினேன்.

மருத்துவர் ஏறிட்டுப் பார்த்தார்.

''காலைல ஒம்பது மணிக்கு வந்து, ஒரு லீவு லெட்டர்ல கையெழுத்து வாங்க நாலு மணிவரைக்கும் ஒக்காந்திருக்கணுமா? அப்படி என்னசார் புரொசிசர் வச்சிருக்கீங்க.

'மொதல்ல ஒக்காருங்க.”

'இருக்கட்டுங்க.. என்னோட லீவு அப்ளிகேசன்ல கையெழுத்தப் போட்டுக் குடுங்க’. சத்தம் போட்டுச் சொன்னேன்.

'நீங்க காலைல வந்த ஒடனேயே இதச் சொல்லிக் கையெழுத்து வாங்கிருக்க வேண்டியதுதான.’

'யாருகிட்டச் சொல்லணும்; அந்த நர்சு நான் சொன்னதச் சட்டசெய்யல. சத்தத்தைக் கேட்டுப் பணியாளர்கள் இருவர் ஓடிவந்தனர். மருத்துவரிடம் என்னைப் பற்றிச் சொன்னார்கள்.

'இனிமேல் நீங்க எப்பவந்தாலும் மொதல்ல நீங்களே வந்து எங்கிட்ட விசயத்தச் சொல்லிக் கையெழுத்து வாங்கிக்கங்கஃ

'இப்பப் போட்டுட்டீங்களா, பரவாயில்ல இனிமே இங்க வரமாட்டேன்’

மருத்துவர் என்னையே பார்த்துக் கொண்டிருந்தார்.


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com