Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Kavithacharan
Kavithaasaran Logo
ஆகஸ்டு - செப்டம்பர் 2008


கவனம்

கவனம் 1

தமிழ் வளர்ச்சித் துறை இயக்குநரும் உலகத் தமிழாராய்ச்சி நிறுவன இயக்குநருமாக ஒருசேரப் பதவி வகித்திருந்த முனைவர் ம.இராஜேந்திரன் அவர்கள் தற்போது தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக் கழகத் துணைவேந்தராகியுள்ளார். குமரி இருட்டுக்குப் பின் கிழக்கு வெளுப்பதைப் போன்றதொரு விடியற்கால அறிகுறியாகவே நான் இதைப் பார்க்கிறேன்.

தமிழ்ப் புலமையாளர்கள் பலர் உள்ளனர். அவரவரும் அவரவர் துறை சார்ந்த வல்லுநர்களாயிருப்பார்கள். அதனால் தமிழுக்குக் கிடைத்த பலன் என்ன என்று கணக்கிட்டால் ஏழைத் தாயின் பிள்ளைகள் பேரும் புகழுமாக வாழ்கிறார்கள் என்னும் கதைதான். தாய் அப்படியே இருக்கிறாள் என்பதுதான் கவனிப்புக்குரிய செய்தி. எதார்த்தத்தைச் செழுமைப்படுத்தும் வலிமையும் வழிமுறையும் சிலருக்குத்தான் வாய்க்கும். அவர்களுள் குறிப்பிடத்தக்க செயற்பாட்டாளர் நம் புதிய துணைவேந்தர்.

கடந்த 60 ஆண்டுகளில் தமிழின் சிறப்பை உலகமெலாம் பரப்ப வேண்டும் எனப் பலரும் பேசினார்கள். ஆனால் ஒருவரும் இந்திய அளவில் பிற மொழிக்காரர்களிடம் பரப்பும் பணியை யோசித்து உருப்படியாகச் செய்தாற்போல் தெரியவில்லை. முதன்முதலில் தமிழ் வளர்ச்சித்துறை மூலம் தமிழ் இலக்கிய வளங்களைக் குறிப்பாக இந்தி மொழியில் மொழிபெயர்க்க முனைப்பு காட்டிப் பணியாற்றிவர் இவர். இது தமிழையும் தமிழினத்தையும் இந்தியப் பரப்பில் சரியான தளத்தில் பொருத்தும் அரிய பணி. இப்படித் தேர்ந்து செயல்படுவது இவர் போன்றவர்களுக்குத்தான் வாய்க்கும்.

இப்போது தஞ்சைக்குச் சென்றிருக்கிறார். தஞ்சையில் தமிழ்ச் செல்வங்கள் பல படிக்கப்படாத சுவடிகளாகப் பல்லாயிரக் கணக்கில் குவிந்து கிடப்பதாகச் சொல்லப்படுவதுண்டு. அவற்றை இவர்உலகின் பார்வைக்குக் கொண்டு வர வேண்டும். தமிழின் வீச்சையும் விரிவையும் புதிய அறிதலாகப் பரிமளிக்கச் செய்ய வேண்டும். அதைச் செய்யும் ஆற்றலும் திறமையும் அவரிடம் உண்டு. அவர் மூலமாகத் தமிழின் புதிய செழுமையை எதிர்நோக்கி அவரை வாழ்த்துகிறோம்.

கவனம் 2

அண்மையில் உத்தபுரம் சாதிச் சுவர் பற்றி குபீரென்று தீப்பற்றினாற்போல் பேச்சு எழுந்தது. ஆனால் அந்தச் சுவர் பல ஆண்டுகளாகச் சாதி அராஜகத்தின் வல்லடிச் சின்னமாக நிமிர்ந்து, உயர்ந்து, நீண்டு நின்ற ஒன்று. இது எப்படி இவ்வளவு காலம் வெளி உலகுக்குத் தெரியாமல் ஒதுங்கிக் கிடந்தது? வெளிப்பட்ட பிறகும்கூட தலித் அமைப்புகள் இதில் தீவிர கவனம் குவித்ததாகத் தெரியவில்லை. இது மிகுந்த அதிர்ச்சியையும் வியப்பையும் அளிக்கிறது. தமிழகமெங்கும், ஏன் இந்தியா முழுமையும் இப்படி எத்தனை கோடி சாதிச்சுவர்கள் கவனிப்பாரற்று, இது கொடுமைதான் என்னும் புரிதல்கூட அற்று நிலவி வருகின்றனவோ. தலித் இயக்கங்கள் தங்கள் கட்சிப் பணியாக இதைத் துருவியெடுக்க வேண்டாமா?

எனக்கொரு ஆசை. குறைந்தது 600 சிற்றூர்களுக்கேனும் சென்று, தங்கி, அங்குள்ள தீண்டாமைக் கொடுமைகளை முழுமையாகப் பதிவுசெய்து உலகுக்கு அறிவிக்க வேண்டும். சமகாலத்தின் ஆகச்சிறந்த ஆவணமாக அது அமையும். இதில் அரசு உட்பட அனைவரது புறக்கணிப்பு வக்கிரங்களையும் வெளிக்கொணர முடியும். அந்தந்த ஊரிலுள்ள நண்பர்கள் உதவினால்- உதவி என்பது ஒருவாய்ச் சோற்றுக்கும் தங்கலுக்கும் தகவல்களுக்கும்தான்- பயணச் செலவெல்லாம் நானே பார்த்துக்கொள்வேன்- என் ஆசைப்பணியாக இதை ஏற்பேன்.

இந்த முயற்சி உருப்பெற்றுச் செயல்பட்டால் நன்றாயிருக்கும்- செயல்பட வேண்டும்.

கவனம் 3

எழுத்தாளர் சுஜாதா மறைவைக் கேட்டு எனக்கேற்பட்ட உணர்வை - நீங்கள் விரும்பாவிட்டாலும்கூட - நீங்கள் எதை விரும்ப வேண்டும், எதை விரும்பக் கூடாது என்று அறிவுபூர்வமாக எப்போதாவது தேர்ந்ததுண்டா என்ன?- சொல்லத் தோன்றுகிறது. வெகுநேரம் குடலுக்குள் சடுகுடு நடத்திக்கொண்டிருந்த காற்று பிரிந்து ஒரு நீண்ட ஆசுவாசம் ஏற்படுமே, அப்படி இருந்தது. செத்தவர்களைப் பற்றி நல்லவிதமாகத்தான் பேச வேண்டும் என ஒரு மரபை வைத்திருக்கிறார்கள்- ஏதோ யாருக்கும் வராத சாவு செத்தவருக்கு வந்துவிட்டாற்போல, கோட்சே செத்ததும் காந்தியின் ரட்சகனாகிவிட்டாற்போல. எனக்கான உண்மை எனக்கு நல்லவிதமானதுதான். ஒவ்வொருவருக்கும் பரந்த பரிமாணங்கள் உண்டெனினும் ஓர் உயிர்நிலை இருக்கும். சுஜாதாவின் உயிர்நிலை பார்ப்பன வக்கிரம். சினிமாத்தனமான விரிந்த வக்கிரம். அதிலும் கடைசியாக "அற்றைத் திங்கள் அவ்வெண்ணிலவில்......." தம் பிறவித் துயரங்களையெல்லாம் இறக்கி வைத்துவிட்டுப்போன பெண்பிள்ளைகளாம் அங்கவை சங்கவையை அவமதித்தது, அதற்கொரு கோமாளிப் பேராசிரியனைப் பயன்படுத்தியது- நான் ஒன்றும் செருப்பால் அடிக்கத் தோன்றியது என்று சொல்லவில்லை-வாயு பிரிந்து ஆசுவாசம் தந்தது என்றுதான் சொல்கிறேன்.

அந்த எழுத்தாளன் பிரமிக்க வைத்ததாகப் பிதற்றும் மனிதர்களைப் பார்க்க அருவருப்பும் வருத்தமும்தான் தோன்றுகிறது. உலக மயம், சாதி மேன்மை, மனித இழிவு என்று நீங்கள் எதையெல்லாம் வெறுக்க வேண்டுமோ, அவை அனைத்தின் துர்நாற்றம் மிக்க எழுத்தூற்றம்தான் அவர். அவரை விட வடுவூர் துரைசாமி ஐயங்கார், வை.மு.கோதைநாயகி அம்மாள் போன்றவர்கள் (நான் ஆரணி குப்புசாமி முதலியாரைச் சேர்த்துக்கொள்ளவில்லை. சூத்திர ஒப்புமை வேண்டாம் பாருங்கள்.) சமூக வக்கிரமற்ற சந்தோஷமான திகில்கதைகளை இவரை விடப் படு சுவாரஸ்யமாக எழுதியவர்கள்தாம்.

கடைக்குப் போய் ஆணுறை கேட்கிறீர்கள்."பெரிசு வேணுமா? சின்னதா?" என்று கடைக்காரன் கேட்டால் என்ன சொல்வீர்கள்? உங்ளுடையது சிறிதென்று கடைக்காரன் கருதிவிடக் கூடாதே என்று அவசர அவசரமாகப் பெரிதைக் கேட்பீர்கள். ஆணுறையில் பெரிது சிறிதெல்லாம் கிடையாது தெரியுமா? ஆனால் அப்படிப் பெரிதாக விற்றுத் திரிந்தவர்தான் சுஜாதா.

கவனம் 4

இருக்கிற இருப்பில் எனக்குப் பிடித்தமான சமயம் எதுவெனில் தயங்காமல் இஸ்லாம் என்றுதான் சொல்வேன். காரணம் எனக்கு அந்த மதம் பற்றி அதிகம் தெரியும் என்பதல்ல. அந்த மனிதர்கள் என்னையும், எல்லாரையும் ஆவி கலந்த சகோதரர்களாய் நேசிக்கத் தெரிந்தவர்கள் என்று நான் மனப்பூர்வமாக நம்புவதால்தான். அதிலும் குறிப்பாகத் தமிழ்நாட்டில் அவர்களும் நானும் ஒரு சோற்றுத் தட்டில் அளையும் குழந்தைகள் போல, மனித அறிவின் வக்கிரங்களெல்லாம் தொடாத அன்பின் கை கோர்ப்பாக உணரும் சிறப்புண்டு
.
மாலிக்காபூர் தெற்கே படையெடுத்து வந்தபோது அவனை எதிர்கொண்ட படையும் படைத்தலைவனும் முஸ்லிம்களாயிருப்பதைக் கண்டு அதிர்ந்து போனானாம். மதத்தின் இடம் இங்கே மண்ணின் நேசிப்புக்கும், இன-மொழி ஒருமைக்கும் அரணாகத்தான் இருந்திருக்கிறது. அதற்கெல்லாம் மேலாக, சகோதரத்துவம் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு இலக்கணம் அந்த மதம். இந்து மதம் இந்தியச் சுதந்திரத்தைத் தன் மூதாதையர் சொத்தாகப் பாவித்துக்கொண்டு தனது கோரப்பற்களைக் காட்டத் தொடங்கியதும்தான் அவர்களும் தங்களை மதச்சார்புள்ளவர்களாகத் தற்காத்துக்கொள்ள நேர்ந்தது என்றால் அது மிகையில்லை. அதன் தொடர்ச்சியாகவோ என்னவோ அண்மையில் எனக்குச் சில அதிர்ச்சிகளை அவர்கள் வழங்கியிருக்கிறார்கள். ஈழத்தில் மாவிலாறு அணைப் பிரச்சினையில் சொல்லி வைத்தாற்போல் எல்லா முஸ்லிம் இதழ்களும் விடுதலைப் புலிகளைக் கொடும் பகையாளிகளாகச் சித்தரித்து ஒன்றுபோல எழுதினார்கள். அதாவது மையத் தமிழ் நீரோட்டத்திலிருந்து தங்களைத் தனிமைப்படுத்திக்கொண்டார்கள். புலிகள் முஸ்லிம்களை வலுக்கட்டாயமாக இடம் பெயரச் செய்தபோதுகூட நேராத சம்பவம் இது. மாவிலாறு பிரச்சினையில் சிங்கள அரசு பொய்களைக் கட்டவிழ்த்துவிட்டது என்பது பின்னர் உலகறிந்தது. அந்தப் பொய்யின் ஒரு கூறாக, இங்கே சிங்கள அரசின் துணைத்தூதுவராயிருக்கும் இஸ்லாமியரான அம்சா கொடுத்த தகவலையும் நெருக்குதலையும்தான் இஸ்லாமியத் தமிழர்கள் அப்படியே தங்கள் இதழ்களில் வடித்தார்கள். இப்படி பின்னப்பட்டு நின்றது ஒரு நீண்ட கால வருத்தத்துக்கு அடி கோலினாற்போல் இருந்தது.

அடுத்து, மலேசியத் தமிழர்கள் இந்துக்கள் என்னும் அடையாளத்துடன் பேரணி நடத்தியபோது, அது முஸ்லிம் அரசுக்கு எதிரான பேரணி என்னும் புரிதலில் இங்கே இஸ்லாமிய இதழ்களால் விமர்சிக்கப்பட்டது. இது தமிழ் முஸ்லிம்களின் சீர்தூக்கும் கோலின் சமனிழப்பை மிகுந்த வலியோடு உணர வைத்தது.

இதற்கெல்லாம் மேலாக இன்று "தலித் முஸ்லிம்" என்று ஒரு பிரிவினர் முத்திரை குத்தப்பட்டு அடையாளப்பட்டுள்ளதை முஸ்லிம் தமிழர்கள் மௌனமாக ஏற்றுக்கொண்டுவிட்டார்கள். இது எப்படி? இந்தியாவில் எல்லா மதங்களும் இந்து மதச் சாரத்தை ஏற்றுக்கொண்டுவிட்டன. இஸ்லாமும் அதற்கு விதிவிலக்கல்ல! இனி எல்லா மதங்களைப்போல இஸ்லாமும் ஒன்றுதான், இல்லையா?

அழுதாலும் தீராத தலைகுனிவு. இதுவரை அவர்களது நெற்றித் தழும்பை என்னைத் தழுவிக் கொள்ளும் சகோதரச் சின்னமாகவே கண்டு மகிழ்ந்தேன். இனி அது வெறும் மதச்சின்னம்தான்.

கவனம் 5

இதழ் நடத்துவது எனக்கு சுவாசம் போல இயல்பாய் இருக்க வேண்டும். ஆனால் அப்படி இல்லை. பொருளோ வயதோ காரணமல்ல. ஒத்த கருத்துள்ளவர்களின் ஒத்துழைப்பு அறவே இல்லை. ஒவ்வொரு இதழுக்கும் எழுத்தைச் சேகரம் பண்ணக் காத்திருக்கும்படியாகிறது. விற்பனையாளர்கள் ஏறக்குறைய ஒருவர்கூடப் பணம் அனுப்புதில்லை என்றாலும் அதைவிடவும் எழுத்துத் தேடல்தான் என்னைத் துன்புறுத்துகிறது. இதழ் தாமதத்திற்கு அதுவே காரணமாகிறது.

நானே நிரப்பி விடலாம்தான். எனக்கும் சொல்ல நிறைய உண்டுதான். ஆனால் அது இதழாக இருக்காது. புத்தகம் கொண்டுவர வேறு வழிகள் உள்ளன. இதழாக இருக்கப் பிறர் பங்களிப்பு தேவை.

இயலாவிடில் நிறுத்திவிடலாம். சரி, நிறுத்திவிட்டு என்ன செய்ய? அதனால்தான் இந்த இழுபறி. பார்க்கலாம்.

கவனம் 6

முத்துராமலிங்கத் தேவரின் அடுத்தடுத்து வரும் பிறந்த நாள்களில் கூடுதல் நெரிசலோடும் தீவிரப் பதற்றத்தோடும் அனைத்துத் தலைவர்களும் சாதிச் சங்கங்களும் அரசியல் கட்சிகளும் அவர் சிலைக்கு மாலை போடவும் வணங்கி வாழ்த்துப் பெறவும் துடிப்பதைப் பார்க்க பிரமிப்பாயிருக்கிறது. தேவர் இனி யாராலும் சேதப்படுத்திவிட முடியாதபடி புனிதச் சின்னமாக, தெய்வாம்சமாக மாற்றப்பட்டுவிட்டார்; ஏற்கப்பட்டுவிட்டார்.

தமிழ்ச் சாதிகளின் சாதி அபிமானத்திற்கும் தலித் சாதிகளின் முடிவில்லாத இருத்தலுக்கான போராட்டத்துக்கும் இதைவிடச் சிறந்த அளவுகோல் ஏது?

பித்தலாட்டக்காரர்களால் வடிவமைக்கப்பட்ட புனிதமான சமூகம் இது.


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com