Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Kavithacharan
Kavithaasaran Logo
ஆகஸ்டு - செப்டம்பர் 2008


சில துளிகள்

இன்று வெகுசிலர் விமர்சனத்தை ஒரு புதிய வெளிச்சத்திற்குக் கொண்டுவந்திருக்கிறார்கள். சமூகநீதி பேசும் மறுவாசிப்புத்தளத்தில் அதை ஒரு அதிர்ச்சி மதிப்பீடாக நிகழ்த்திக்கொண்டிருக்கிறார்கள். இப்படி நிகழ்த்துகிறவர்கள் விரல்விட்டு எண்ணக்கூடிய சிலர்தான். அவர்களும்கூடத் தங்களுக்கான தற்பயிற்சியில் இன்னும் முழுமையடையாதவர்கள். இவ்வகையில் கல்விப்புலம் சார்ந்த துறைபோகிய பயிற்சியளிக்க அதிகாரவர்க்கம் ஒருபோதும் முன்வராது. இந்தச் சுயதேடலில் தங்களுக்கான சொல்லடைவுகளை அவர்களே புத்தாக்கம் செய்துகொள்ள வேண்டும். விமர்சனத்தின் நம்பகத் தன்மையை விமர்சிக்கிறவனின் அரசியல் நிலைபாடு மட்டுமே தீர்மானிப்பதில்லை. சொற்படிமங்களைச் சேகரிக்கும் புரிதலற்ற வளரிளம் பருவத்தில் அவனுள் பச்சையமாக வளர்த்தெடுக்கப்பட்ட பண்பியல் தாக்கங்களாலும் மீள்கட்டமைப்புச் செய்யப்படுகிறது. அந்த வகையில் நாம் மறுவாசிப்புப் புலமையாளர்களாக முழுமை பெறுவதற்கு நமது குழந்தைகள் நமக்கு ஆசான்களாகும் வரை காத்திருக்க வேண்டியிருக்கும்.

******

தூய்மையாவது முப்பரிமாணத்தன்மையுள்ளது - அகத்தூய்மை, புறத்தூய்மை, உளவியல் ரீதியாகக் கட்டமைக்கப்பட்ட தூய்மை என. இதில் புறத்தூய்மை பார்த்தறியக்கூடியது. அகத்தூய்மை நம்பிக்கை அடிப்படையிலானது; பழகியே அறியக்கூடியது; அறிய முனைகிறவரின் தூய்மையோடு சார்புத்தன்மை கொண்டது. உளவியல் ரீதியாகக் கட்டமைக்கப்படும் தூய்மையானது பண்பாட்டுத்தளத்திலானது. வழிவழியாக கற்பிக்கப்படுவது, நம்பப்படுவது, நம்பிக்கையையே காரணியாகக் கொண்டது. காலப்போக்கில் காரணி பற்றிய புலனறிவற்று நிலைகொண்டுவிடுவது. உதாரணமாக, பார்ப்பனர்கள் தூய்மையானவர்கள் என்னும் நம்பிக்கை. இது முழுக்கமுழுக்க உளவியல் ரீதியாகக் கட்டமைக்கப்பட்ட கற்பிதத் தூய்மை. ஒருமுறை கட்டமைக்கப்பட்டு விட்டால் பின்னர் அது அகத்தூய்மை, புறத்தூய்மை பற்றிய கேள்வி களற்றதாக, தூய்மையின் குறியீடாக, அதன் அடையாளமாக, நீ வேறு-நான் வேறு என்னும் உயர்வு தாழ்வின் சின்னமாக பீடமேறிக்கொள்ளும்.

******
எனக்கு சைவம் தத்துவமாய்த் தெரிந்ததைவிட அதன் பயன்பாடாய்த் தெரிந்ததே அதிகம். அதில் ஒரு துணுக்கு: என் சகோதரி பொதுக் குழாயில் நீர்பிடிக்கச் செல்லும்போது, வீட்டிலிருந்து கொண்டு செல்லும் சொம்பு நீரில் குழாயைக் கழுவிவிட்ட பிறகே தன் குடத்தை நிரப்புவார். சுற்றிலும் ஊர்ப்பெண்களின் விதவிதமான முகங்கள் மௌனமாய் பொரிந்து கொண்டிருக்கும். அதுபற்றி என் சகோதரியிடம் ஒரு பாதிப்பும் இருக்காது. அதை இப்போது நினைத்துப்பார்த்தால் உலகிலேயே சைவம் போலொரு வன்கொடுமை வேறேதும் இல்லை என்றே தோன்றுகிறது. ஆயினும் நான் இன்னமும் சைவனாகத்தான் அடையாளம் காக்கிறேன். உலகை எத்தனை கோடி கருத்துக் கிளர்ச்சிகளும் கட்டவிழ்ப்புகளும் கலைத்துப் போட்டாலும், அதிகாரமே தன்னைத் திரும்பத்திரும்பப் புதுப்பித்துக் கொள்ளும் அறிவடையாளமாகிறது.

******

இந்தியக் கலாச்சாரத்தின் தலையாய அம்சங்களில் ஒன்று பிச்சையிடுதல். ப்பூ... இவ்வளவுதானா என்று நீங்கள் எளிமைப்படுத்தி ஒதுக்கிவிடும் அளவுக்கு இதுவொன்றும் அற்பசொற்பமான பொருளல்ல. இந்தியச் சமூகக் கட்டமைப்பின் முதுகெலும்பு, விலாஎலும்புகள் எல்லாம் இதுதான். பிச்சையிடுதல் என்றால் அதை வாங்கிக்கொள்ள ஒரு வறியவன் வேண்டும். அவனை வறியவனாக மலினப்படுத்திப்பார்க்கும் ஒரு பணக்காரத்தனம் வேண்டும். பிச்சையிடுவது என்றானபின் அதைப் பாத்திரமறிந்து இடவேண்டும். அதாவது தன்னைப் பிச்சைக்காரன் என்பதற்குமேல் தகுதிப்படுத்திக்கொள்ளாத, கூழைகும்பிடு போட்டுத் தன் நன்றியைக் காட்டும் நாயாக ஒருவன் வேண்டும். இது ஒன்றும் ஏழை- பணக்காரன் முரண் மட்டுமல்ல, இழிந்தவன்- உயர்ந்தவன் என்னும் சமூகக் கட்டுறுதியின் வெளிப்பாடுமாகும்.


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com