Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Kavithacharan
Kavithaasaran Logo
ஆகஸ்டு - செப்டம்பர் 2008
இலக்கிய ஆய்வு :

பசும்பூண் பொருந்தலர்
ஜெ,அரங்கராஜ்

கடந்த அக்டோபர் மாதம் வெளியான செந்தமிழ் இதழில் பசும்பூண் பாண்டியன் என்னும் மன்னனின் பசும்பூண் என்னும் பெயர்அடை குறித்தான விளக்கங்களை ஆய்ந்து அம்மன்னனது ஆசீவக சமயத் தாக்கத்தில் அப்பெயர் உண்டாயிற்று என்பதனைப் பாண்டியானை எனும் தலைப்பில் விளக்கினம். அவ்வாறான சூழலில் சேர, சோழ மன்னர்களும் பசும்பூண் எனும் அடையில் குறிக்கப் படுவதற்கான சான்று சங்க இலக்கியத் தில் காணக்கிடக்கிறது. அவ்வாறாகில் அவர்களைப் பசும்பூண் எனும் அடை யுடன் குறிப்பிட வேண்டிய நிலைப்பாடு யாது எனும் போக்கில் ஆராய வேண்டியுள்ளனம்.

நற்றிணையில் இருநூற்று இருபத்தேழாம் பாடலில் பசும்பூண் சோழன் என்ற மன்னன் குறிப்பிடப்படுகிறான். அவனது பெயரில் வரும் பசும்பூண் என்பதற்கு பசிய பொன்னாலாகிய பூண்களை யுடைய சோழரது என நாராயணசாமி ஐயர் குறிப்பிடுவார். அவரது உரையில் சற்றே மாறுகொள்ள வேண்டியுள்ளது. ஆசீவகர் கள் அபிசாதிக் கொள்கையின் அடிப் படையில் மனிதப் பிறப்புகளைக் கரும் பிறப்பு, கருநீலப்பிறப்பு, செம்பிறப்பு, பசும் பிறப்பு, வெண்பிறப்பு, கழிவெண்பிறப்பு என ஆறு வகைகளாகப் பிரிப்பர். இந்நிற வகைப்பாடுகளில் பசும் பிறப்பு என்பது ஆசீவக இல்லறத்தார்களுக்குரியது எனும் அடிப்படையில் இச்சோழ மன்னனின் ஆசீவகச் சமயச் சார்பாலேயே பசும்பூண் சோழன் எனும் பெயர் ஏற்பட்டது என்பதற்கு அப்பாடலிலேயே பல ஆசீவகச் சான்றுகள் காணப்படுவதால் அறியலாம்.

அறிந்தோர் அறனிலர் என்றலர் சிறந்த
இன்னுயிர் கழியினும் நனியின் னாதே
புன்னையங் கானல் புணர்குறி வாய்த்த
புன்ஈர் ஓதியென் தோழிக்கு அன்னோ
படுமணி யானை பசும்பூண் சோழர்
கொடிநுடங்கு மருங்கின் ஆர்க்காட்டு ஆங்கண்
கள்ளுடைத் தடவின் புள்ளொலித்து ஓவாத்
தேர்வழங்கு தெருவின் அன்ன
கௌவையா கின்றது ஐயநின் அருளே
- நற்றினை - 227

மேற்கண்ட பாடல் அடிகளில் படுமணி யானை பசும்பூண் சோழர் எனச் சோழர் யானையுடன் இணைத்துக் கூறப்பட்டுள்ள மையை ஆய்வில் கொள்ளவேண்டி யுள்ளது. ஏனில் அகம்:162ஆம் பாடலில் பசும்பூண் பாண்டியனின் கொடியில் யானை இருந்தமைக்கு அவனது ஆசீவகத் தொடர்பே காரணம் என (பாண்டி யானையில்) விளக்கியிருந்தனம். அது போல் படுமணி யானை என இப் பசும்பூண் சோழர்க்கு அடை பெற்றமை யானையை ஆசீவகர்கள் மிகுதியும் போற்றியதன் விளைவே எனலாம். யானையை மாத்திரம் கொண்டு அம் மன்னனை ஆசீவகன் என்று கூறிவிட லாகாது எனினும் அப்பாடல் அடிகளில் ஆசீவகத்திற்கான கூறுகள் இன்னும் சில காணப்படுகின்றன.

பாணர்களும் விறலியர்களுமே பண்டை நாளில் ஆசீவகத்தைப் பெரிதும் போற்றினர். மற்கலி கோசரும் பாணரே என்ற வழக்கு உண்டு. இவர்கள் கள்ளினைப் பெரிதும் போற்றினர். இப்பாடலிலும் கள்ளுடைய மிடா சுட்டப்படுகிறது. மேலும் இப் பாடலைப் பாடிய தேவனார் சங்க இலக்கியத்தில் இப்பாடல் அல்லாமல் வேறு பாடல் ஏதும் பாடியதாகக் காணக் கிடைக்கவில்லை. ஈழத்துப் பூதத்தேவனார் எனும் பெயர்வழி அவரின் பூதவாதக் கொள்கையை அறியலாம் என்றும், பூதவாதம் ஆசீவகத்தின் அணுவியலோடு தொடர்புடைத்து என்றும் (பாண்டியானை) முன்னர் கண்டோம். மேலும் பூதத் தேவனார் பசும்பூண் பாண்டியனைப் பாடியமையையும் அறிந்தோம். ஆகவே அதுபோலவே இத்தேவனாரும் ஆசீவகக் கொள்கையாளர் எனக் கொள்ள வகை யுண்டு. ஏனில் தேவனார் எனும் பெயரினைப் பண்டைய நாளில் சமணர் களும் ஆசீவகர்களுமே பெரிதும் பயன் படுத்தினர் எனலாம். ஊவாசத சாரு எனும் சைந நூலுக்கு அபயதேவர் எழுதிய உரையில் தேவன் எனும் ஆசீவகன் குறிப்பிடப் படுகின்றமையை இரா.விஜயலட்சுமி குறிப்பிடுவார். தேவனார் எனும் பெயர் மாத்திரம் இல்லாமல் இவரது பாடலின் முதலடியே இவரின் ஆசீவகக் கொள்கையை விளக்குவனவாக அமைந்துள்ளது.

அறிவின் வழிப்பட்ட நிகழ்வுகளையே ஆசீவகம் தனது கோட்பாடுகளாகப் பெரிதும் வலியுறுத்தியது. அறிவுடன் பொருந்திவராத எதனையும் அது ஏற்க மறுத்தது. இதனை அறிந்தோரே அற முடையவர் என்பதன் வழியே அறியலாம். மேற்கண்ட சான்றுகளின்வழி ஆசீவகக் கொள்கையையுடைய தேவனார் பசும்பூண் சோழனைப் பாடினமையில் ஒரு சமய இழையினை அறியலாம்.

சங்கப் பாடல்களில் பாடுவோரின் சமயக் கருத்துகள் மேலோங்கியிருத்தலைப் பல் வேறு சமூகப் பாடல்களின்வழி அறிய லாம். (பரணர் எனும் புலவர் பசும்பூண் பாண்டியனைப் பாடியுள்ளார்.) பரணர் பாணர் மரபினர் எனவும் அல்லர் எனவுமான இரு வேறு கருத்துகள் உண்டு. பண்டைய நாளில் பாணர்கள் பெரிதும் ஆசீவகத் தொடர்புடையவர்களாக விளங்கினர். இவர்கள் நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கும் செல்லக்கூடிய இயல் புள்ளவர்களாக விளங்கினர்.

சீறியாழ் செவ்வழி பண்ணி யாழநின்
காரெதிர் கானம் பாடினோம்
- புறம் - 142

எனும் புறப்பாட்டடிகளால் பரணர் யாழ் இசைத்தமையினை அறியலாம். இதனைக் கொண்டு அவர் பாணர் எனக் கொள்ளல் இயலாது. ஏனில், சங்கப் புலவர்களில் உறையூர் ஏணிச்சேரி முடமோசியர், அரிசில் கிழார் முதலாய பல புலவர்கள் யாழிசைக்கும் வழமை கொண்டிருந் தமையால் புலவர்களின் யாழ் இசைப்பைப் பொது வழமையாகக் கொள்ள வேண்டும் என்பார் கருத்து ஏற்புடையதே. ஆனால் பரணர் பாணர் என்பதற்குப் பின்வரும் பாடல் சான்றாக அமைகின்றது.

பாணன் சூடிய பசும்பொற் றாமரை
மாணிழை விறலி மாலையொடு விளங்கக்
கடும்பரி நெடுந்தேர் பூட்டுவிட் டசைஇ
ஊரீர் போலச் சுரத்திடை யிருந்தனிர்
யாரீ ரோவென வினவ லானாக்
காரெ னொக்கற் கடும்பசி யிரவல
வென்வே லண்ணற் காணா வூக்கே
நின்னினும் புல்லியே மன்னே யென்றும்
உடாஅ போரா வாகுத லறிந்தும்
படாஅ மஞ்ஞை கீத்த வெங்கோ
கடாஅ யானைக் கலிமான் பேகன்
எத்துணை யாயினு மீத்த னன்றென
மறுமை நோக்கின் றோ வன் றே பிறர்
வறுமை நோக்கின் றவன்கை வன்மையே
- புறம்-141

எனும் பாடலில் வறிய பாணன் ஒரு வனைப்பரணர் பேகனிடம் ஆற்றுப் படுத்துகின்ற நிகழ்வு கூறப்பட்டுள்ளது. இதில் பரணருடன் இருந்த பாணன் பசும் பொற்றாமரையைச் சூடியதாகக் காணப் படுகின்றது. இப்பசும்பொற்றாமரை எனும் சொல் சங்க இலக்கியத்திலேயே இப் பாடலில் மாத்திரமே பயின்றுள்ளதாக அறியலாம். தாமரை மலரையும் தாமரைக் குளத்தையும் தூயனவாக ஆசீவகர்கள் போற்றினர். விறலியருடன் இருந்த பாணர்கள் பசும் பொற்றாமரையைச் சூடியிருந்தனர் என்பதன் வழி அவர்களது ஆசீவகத் தொடர்பினை அறியலாம். பரணரை வறிய பாணன் யார் எனக் கேட்டபோதும், பரணர் அவனை ஆற்றுப்படுத்தியபோதும் அவர் தம்மை ஒரு பாணராகவே கொண்டமையை பாடல் அடிகளாலும் புறநாநூற்றுக்கு உரை செய்த ஒளவை துரைசாமிப்பிள்ளை, உ.வே. சாமிநாத ஐயர் முதலாயோர் கூற்றாலும் அறியலாம். ஒளவை துரைசாமிப்பிள்ளை இப்பாடலின் தொடக்க உரையில் கூறுவதாவது: நீவிர் யார் என வினவ, இவர் அவனைப் பேகன்பால் ஆற்றுப்படுப் பாராய்த் தம்மை ஒரு பாணனாக நாட்டிக் கொண்டு, "இரவல, யாமும் வள்ளல் பேகனைக் காணாமுன் நின்னினும் புல்லியேமாயிருந்தம்" என்பதன்வழி வன்பரணர் எனும் பண்டைய புலவரும் ஒரு பாணரே என்பதனை,

மாரி வண்கொடை காணிய நன்றும்
சென்றது மன்னெங் கண்ணுளங் கடும்பே
-புறம்-153: 5-6

எனும் அடிகளில் அவர் கூறுதலின்வழி அறியலாம். இதன்வழி பரணர் எனும் பெயர் வழக்கு பாணர்களுக்குரியதாக எண்ண இடமுண்டு.

பரணர் பேகரின் கொடைமறம் குறிப்பிடும் போது மறுமைப் பயன் கருதி ஈதல் செய்யாமல் வறுமை கருதியே ஈதல் செய்வோன் என்று கூறுகின்றதன்வழி பௌத்த சமயத்தவரின் வினைக் கோட் பாட்டிலிருந்து விலகி ஆசீவகர்களின் நியதி எனும் முறைமைக் கோட்பாட்டில் நின்றமையை விளங்கலாம். மேலும் பரணர் பிறப்பு பற்றியோ பெற்றோர் குறித்தோ எவ்வகைச் சான்றுகளும் கிட்டியில்லது. மேற்கண்ட சான்றுகளின் வழியும் அவர் தமிழகம் முழுவதும் சுற்றி வந்தமையாலும் பேகனிடம் தூது சென்றமையாலும் அவர் ஒரு பாணர் எனக் கொள்ளலாம். சில பாடல்களில் அவர் நான்மறை பற்றியும் கடவுள் குறித்தும் செய்துள்ள குறிப்புகளின்வழி அவர் இச்சமயத்தவர்தானா எனும் குழப்பம் ஏற்படுவதாகும். ஆயினும் அவரின் பெரும் பான்மைப் பாடல்கள் கடவுள் அற்ற ஆசீவகர்களின் கோட்பாடுகளை விளக்கு வனவாகவே உள்ளமையையும் அறியலாம். இவை அவ்வச் சமயங்களைச் சார்ந்த மன்னர்களுக்கு ஏற்புடையனவாகப் பாடப் பட்டனவாகக் கொள்ள இடமளிக்கிறது. மேலும் ஆசீவகச் சமயக் கருத்துகளைக் கொண்டு அவர் பாடிய பாடல்களையும் மன்னர்களையும் குறித்து நன்கு ஆய்கின்ற போது பல மெய்மைகள் வெளிப்பட வாய்ப்புள்ளது. மேற்கண்டவற்றின்வழி பசும்பூண் சோழனுக்கும் தேவனாருக்கும் பரணருக்குமான ஆசீவகத் தொடர்பை அறியலாம்.

தேவனார் சோழனைப் பசும்பூண் சோழன் எனப் பாடியது போல் அகப்பாடல் ஒன்றில் ஒளவையார் சேரமன்னனைப் பசும்பூன் பொறையன் எனக் குறிப் பிட்டுள்ளார்.

இடையிற் றறித லஞ்சி மறைகரந்து
பேஎய் கண்ட கனவிற் பன்மான்
நுண்ணிதின் இயைந்த காமம் வென்வேல்
மறமிகு தானைப் பசும்பூட் பொறையன்
கார்புகன் றெடுத்த சூர்புகல் நனந்தலை
மாயிருங் கொல்லி யுச்சித் தாஅய்த்
ததைந்துசெல் லருவியின் அலரெழப் பிரிந்தேர்
- அகம்-303:1-7

பசும்பூட்பொறையன் எனும் சேர மன்னனும் அவன் ஆண்ட கொல்லி மலையும் அம்மலையில் காணப்படும் அருவியும் மேற்கண்ட பாடலில் சுட்டப்படுகின்ற மையை அறியலாம். பேய் கண்ட கனவு பற்றியும் ஒரு குறிப்பு வருகின்றது. பண்டைய நாளில் கனவுக்குத் திறம் உரைத்தலில் ஆசீவகர்கள் திறம்பட விளங்கினர், வெள்ளருவியும் தாமரைக் குளமும் ஆசீவகர்களால் போற்றப்பட்டன முதலாய குறிப்புகளின் வழியும், நெடு முதல் அஞ்சி பசும்பூண் பாண்டியன் முதலாய ஆசீவகத் தொடர்புடைய மன்னர்கள் அக்காலத்தில் கொங்கு நாட்டுடனான தொடர்புச் சூழலியல் அடிப்படையிலும் பசும்பூண் பொறை யனின் ஆசீவகச் சார்பை அறிய முடியும். மேலும் இசைவல்ல பாணரும் விறலியரும் ஆசீவகத்தைப் பெரிதும் கடைப்பிடித்தனர்.

இளையணிப் பொலிந்த வேந்துகோட் டல்குல்
மடவர லுண்கண் வானுதல் விறலி
பொருநரு முளரோநும் மகன்றலை நாட்டென
வினவ லானாப் பொருபடை வேந்தே
- புறம்-89:134

எனும் புறப்பாடலின் அடிகளின் வழி ஒளவையார் தமது பாடலிலேயே தம்மை விறலி எனச் சுட்டியுள்ளமை எண்ணத் தகும். ஒளவையார் அதியனுக்காக தொண்டைமானிடம் தூது சென்றமை, நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கும் பயணம் சென்றமை முதலாய இயல்புகள் மேற்கண்ட கூற்றுக்குச் சான்றாக உள்ளன. ஒளவை குறித்தான இப்பாடல் அடிகள் ஆய்விற்குரியனவாகக் கொள்ளத்தக்கவை. இதன் வழி அவரது சமயத் தொடர்பும் மிகுந்து ஆய வேண்டியவாம்.

ஒளவையாரால் பசும்பூண் சேரனைக் குறிப்பிட்டுப் பாடப்பெற்ற அகம் 303ஆம் பாடலின் வழி சில வரலாற்றுப் பகுதி களை ஒப்பீடு செய்யவேண்டியுள்ளது. கொங்கு நாட்டின் கிழக்கு எல்லையிலுள்ள கொல்லி மலையைப் பசும்பூண் பொறையன் எவ்வகையில் ஆண்டனன் எனும் வினா எழும்போது அதற்குச் சங்க இலக்கியங்களிலேயே விடை பொதிந்துள்ள மையைக் காணலாம். கொங்கு நாடு முல்லைநிலம் ஆகையால் ஆநிரைகளின் வாழ்விற்கும் வளர்ச்சிக்கும் பெரிதும் ஏற்புடைய சூழலைப் பெற்றது. இதன் பொருட்டே இனக்குழு சமுதாய காலம் தொட்டு பல்வேறு மோதல் போக்குகள் ஏற்பட்டமையை அறிய இயலும். சங்க காலச் சேரர்கள் கொங்கு நாட்டைக் கைப்பற்றுவதில் மிகுதியும் முனைப்பு காட்டினர்.

கொங்கு நாட்டிலுள்ள கொல்லிமலையை வல்வில் ஓரி என்பவன் ஆண்டனன். இதனை,

கொல்லி ஆண்ட வல்வி லோரியும்
- புறம்-158:5

எனும் பெரும் சீத்தனார் புறப்பாடல் வழி அறியலாம். வல்வில் ஓரிக்கும் திருக் கோவலூர் மன்னன் திருமுடிக் காரிக்கும் பகையுண்டாயிற்று. சேரர்களும் கொல்லி மலையைக் கொள்ளும் நோக்கில் காரி யுடன் இணைந்தனர். ஓரிக்கும் காரிக்கும் பெரும்போர் ஏற்பட்டு காரியால் ஓரி கொல்லப்பட்டான். ஓரியின் கொல்லி மலையின் தலைநகரில் காரி நுழைந்த போது ஓரியின் நகர மக்கள் பெருங் கூச்சலிட்டனர்.

ஓரிக் கொன்ற ஒருபெருந் தெருவிற்
காரி புக்க நேரார் புலம் போல்
கல்லென் றன்றால் ஊரே அதற்கொண்டு
- நற்றி-320: 5-7

மேற்கண்டவாறு ஓரியைக் கொன்று தாம் கைப்பற்றிய கொல்லி மலையை சேரர் களுக்குக் காரி வழங்கினான்.

முள்ளூர் மன்னன் கழல்தொடிக் காரி
செல்லா நல்லிசை நிறுத்த வல்வில்
ஓரிக் கொன்று சேரலர்க் கீந்த
சேவ்வேர்ப் பலவின் பயங்கெழு கொல்லி
- அகம்-209:12-15

காரியால் கைப்பற்றிய கொல்லிமலைப் பகுதி யைப் பெற்று ஆண்ட சேர மன்னனே வெண்வேல்.
- வெண்வேல்
மறமிகு தானைப் பசும்பூட் பொறையன்
கார்புகன் றெடுத்த கூர்புகல் நன்தலை
மாயிருங் கொல்லி யுச்சித் தாஅய்த்
- அகம்-303:4-6

என்னும் அகநாநூற்றுப் பாடல் அடிகள் சுட்டும் பசும் பூட் பொறையன் ஆவான் எனலாம். கொங்கு நாட்டை ஒட்டிய பாலக்காட்டுக் கணவாய்க்கு மேற்கில் உள்ள சேரநாட்டுப் பகுதிகளை ஆண்ட வர்கள் சேரமரபினருள் பொறையன் மரபினரே. மேற்கண்ட பாடலடிகளாலும் இவர்கள் கொங்கில் நுழைந்து கொல்லி யைக் காரியின் துணையுடன் கைக் கொண்டனர் என்பதும் தெளிவாகின்றது.

இக்காலகட்டத்தில் அதற்குச் சற்று முன்னர் களங்காய்க் கண்ணி நார்முடிச் சேரல் எனும் சேரவேந்தன் நெடுமிடல் அஞ்சியை வென்றதாக,

நெடுமிடல்சாயக் கொடுமிடல் துமியப்
பெருமலை யானையொடு புலங்கெட இறுத்து
(4ஆம் பத்து -2:10-11)

நெடுமிடல் அஞ்சியின் இயற்பெயராம் என பதிற்றுப்பத்தின் பழைய உரை விளக்கம் கூறுதலான அதியன் நெடுமிடல் அஞ்சி என அறியலாம்.
யாழிசை மறுகின் நடூர் கிழவோன்
வாய்வாள் எவ்வி ஏவல் மேவார்
நெடுமிடல் சாய்த்த பசும்பூண் பொருந்தலர்
அரிமண வாயில் உறந்தூர் ஆங்காண்
கள்ளுடைப் பெஞ்சோற்று எல்லிமிழ் அன்ன
- அகம் 266:10-14

நீடூர்த் தலைவனான எவ்வி என்பவனது ஏவலை ஏற்க மறுத்த பசும்பூண் பொருந் தலரை பசும்பூட்பாண்டியனின் தலை வனான அதியன் நெடுமிடல் அஞ்சி அரிமண வாயில் உறந்தூரில் வெற்றி கொண்டான் என்பதனை அறியலாம். இப் பசும்பூண் பொருந்தலர் என்பவர்கள் அகம் 303ஆம் பாடலடிகளில் வரும் பசும்பூட் பொறையன் எனும் சேர மன்னனின் துணைவர்களான ஆசீவகர்கள் எனக் கருத இடமுண்டு. ஏனெனில் சேரர் களுக்கும் பசும்பூட் பாண்டியனுக்குமான ஆட்சியில் போட்டிக்குரிய பகுதியாக கொங்குநாடு அன்று நிலவியுள்ளது. இதனடிப்படையிலேயே,

நசைபிழைப் பறியாக் கழல்தொடி அதிகன்
கோளற வறியாப் பயங்கெழு பலவின்
வேங்கை சேர்ந்த வெற்பகம் பொலிய
வில்கெழு தானைப் பசும்பூண் பாண்டியன்
குளிறனி வெல்கொடி கடுப்பன் காண்வர
- அகம் 162: 18-22

இப்பசும்பூண்பாண்டியனின் சமயச் சின்னமான யானைச்சின்னம் பொறிக்கப் பட்ட கொடியைத் தனது கோட்டையில் பறக்கவிட்டிருந்த அவனது படைத்தலை வனான அதியன் நெடுமிடல் அஞ்சி கொங்கில் ஆட்சி செய்த பசும்பூண் பொறையன் முதலாய சேரர்களை எதிர்த்தனன் எனலாம்.

நெடுமிடல் அஞ்சி எதிர்த்தது சேரர்களைத் தான் என்பதினை மேலும் ஒரு சான்றின் வழி உறுதி செய்யலாம். தங்களை எதிர்த்த பசும்பூட்பாண்டியனின் படைத்தலை வனான நெடுமிடலை வாகைப்பறந்தலை எனுமிடத்தில் நிகழ்ந்த போரில் சேரர்கள் கொன்று அன்றைய நாள் பெரிதும் ஆர்ப்பரித்தனர்.

கூகைக்கோழி வாகைப் பறந்தலைப்
பசும்பூண் பாண்டியன் வினைவ லதிகன்
களிறொடு பட்ட ஞாற்றை
ஒளிறுவாட் கொங்கர் ஆர்ப்பினும் பெரிதே
- குறுந் - 393: 3-6

எனும் அடிகளில் பசும்பூட்பாண்டியனின் படைத்தலைவனை சேரர் கொன்றமை யையும், இதன்வழி கொங்கு நாட்டில் சேரருக்கும் பாண்டியருக்குமான மோதல் போக்கையும் அறியலாம்.

பரணர் பாடிய மேற்கண்ட குறுந்தொகை அடிகளில் சுட்டப்படும் கொங்கன் என்பவர் கொங்கு நாட்டினர் எனும் பொருளுடையதல்ல. ஏனெனில் 'நெடு மிடலும்" கொங்கு நாட்டவனே. இதன்வழி கொங்கர் என இவ்விடத்தில் கொங்கு நாட்டார் சுட்டப்படின் குழப்பம் மிகும். எனவே கொங்கர் என்போர் இவ்விடத்தில் சேரரேயாகும். திவாகரம் முதலாய நிகண்டுகளும் சேரரின் பெயர் வழக்கு களில் கொங்கர் என்பதனையும் குறிப் பிடும். மேலும் ஆய்அண்டிரன் சேரரை மேற்குக் கரைக்கு ஓட்டியைமையைக் குறிக்கும் பாடலில் சேரரைக் கொங்கன் எனக் குறிப்பதனையே காணலாம்.

அண்ணல் யானை யென்னிற் கொங்கர்க்
குடகட லோட்டிய ஞாற்றைத்
தலைப்பெயர்த் திட்ட வேலினும் பலவே
- புறம்-130

இவ்வடிகளுக்கு உரை கண்ட உ.வே. சாமிநாதையர், ''கொங்கு நாட்டாரோடு போர் செய்து அவர்களைப் புறங்காட்டி யோடச் செய்தோன்" எனக் குறிப்பிடுவார். இது ஏற்புடையதன்று. ஏனெனில் கொங்கு நாட்டார் புறங்காட்டியோடினால் கொங்கு நாட்டிற்கோ அல்லது கொங்குநாட்டிற்கு உள்ளேயெனில் ஏதேனும் பகுதிக்கோ விரட்டப்பட்டிருக்க வேண்டும். ஆனால் இவ்விடத்தில் மேலைக் கடற்பரப்பிற் விரட்டப்பட்டதாக வருகிறது. சேரரை யல்லவா மேலைக்கடற்புறத்திற்கு ஓட்ட வேண்டும்? எனவே இவ்விடத்தில் கொங்கன் எனும் சொல்லுக்கு கொங்கு நாட்டார் எனப் பொருள் கொள்ளாமல் சேரர் எனப் பொருள் கொள்ளலே பொருந்தும் எனலாம். அதுபோலக் கொண்டு பசும்பூண்பாண்டியனின் படைத் தலைவனை சேரரே கொன்றனர் எனலாம். மேலும் பாடலடிகளில் ''களிற்றொடு பட்ட ஞாற்றை" என்னும் அடிக்கு இலக்கணம் கூறும் உ.வே. சாமிநாதையர் ''களிற்றொடுபடுதல் களிற்றுடனிலை என்னும் துறைபாற்படும். வென்ற வீரர் ஆர்த்தல் இயல்பு. பெரிதே, ஏ, அசைநிலை தேற்றமுமாம்," எனப் புறத்துறை கூறி அமைவர். இது இலக்கண அமையவியலில் ஏற்புடையதே. ஆயினும் இதன் உள்ளீடான செய்திகளை நோக்க வேண்டியுள்ளது. நெடுமிடல் அஞ்சி, பசும் பூண்பாண்டி யனின் படைத்தலைவன். பசும்பூண் பாண்டியன் ஆசீவக சமயத்தைச் சார்ந்தவன். அவனது கொடியிலும் ஆசீவகர்கள் போற்றிய யானைச் சின்னம் உண்டு. இதனடியாகக் கொண்டு இவ்வடி களை நோக்கும்போது ஆசீவகர்கள் வெள்ளை யானையினைப் பெரிதும் போற்றினர். வீடணைகுபவர் வெள்ளை யானையின்மேலேறிச் செல்வர் என நம்பினர். அதுகொண்டு நெடுமிடல் அஞ்சி வீடனைந்தமையை அவ்வாறு பரணர் உரைத்தனரோ என எண்ண வேண்டி யுள்ளது. மேற்கண்ட பாடல்களால் கொங்கின் பல பகுதிகளை அக்கால கட்டத்தில் சேரர்கள் காரி முதலானோ ரின் துணை கொண்டு கைப்பற்றினமையை அறியலாம். இச்சேரர்களின் கொங்கு மேலாண்மையை எதிர்த்தும் தமது படைத் தலைவனின் இறப்பிற்கு ஈடுசெய்தற் பொருட்டும் பசும்பூண்பாண்டியன் சேரர் களைக் கொங்கிலிருந்து ஓட்டியமையை,

வாடா பூவிற் கொங்கர் ஓட்டி
நாடுபல தந்த பசும்பூண் பாண்டியன்
பொன்மலி கூடல் நெடுநகர் ஆடிய
இன்னிசை யார்ப்பு
- அகம் 253:4-7

எனும் அடிகளின் வழி கொங்கிலே ஆசீவகத்தைச் சார்ந்த பாண்டியனுக்கும் சேரர்களுக்கும் நடைபெற்ற மேலாண் மைப் போட்டியை விளக்கலாம்.
மேற்கண்ட வரலாற்று நிகழ்வுகளின் வழி சேர, சோழ, பாண்டிய மற்றும் குறுநில மன்னர்களும் ஆசீவக சமயத்தைப் பின் பற்றிமையின் பின்புலத்தில் ஆசீவக சமயத்தின் தளம் விரவிக் கிடப்பதனைக் காணலாம். அக்காலச் சூழலில் கொல்லி மலையை ஆண்ட சேரரும் ஆசீவகத் தினைக் கைக் கொண்டமையினை அவர்களது பெயர் வழக்கிலிருந்து காணவியலும் இன்றளவும்.

கொங்கு நாட்டுப் பல்வேறு பகுதிகளில் காணப்படும் குகைகளிலும் அங்கு கிடைக் கும் கல்வெட்டுகளிலும் ஆசீவகத்தின் சாயலைக் காணவியலும். மேலும் கொங்கு மக்களின் வாழ்வியலில் ஆசீவகத்தின் தன்மைகள் பலவற்றை இன்றும் காண வியலும். (சான்றாக இறந்தவர்களைப் புதைத்தலை குகை வைத்தல் எனும் வழக்கு) இதனை மொழிவழக்கிலும் சடங்கியல் முறையிலும் பெரிதும் காணலாம். இவற்றை மென்மேலும் ஆய்வு செய்தால் சிறப்பான பல மெய்மைகளை வெளிக் கொண்டுவர இயலும்.


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com