Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Kavithacharan
Kavithaasaran Logo
ஆகஸ்டு 2007 - பிப்ரவரி 2008


பரந்து விரிந்த சீனப் பரவலினூடாக அடிமைப்படாத மண்ணின் நெடிய வரலாறு - தாய்லாந்து
விளாடிமிர்

இயற்கை வளம் கொஞ்சும் தென்கிழக்காசிய நாடுகளில் மாற்றான் ஆக்கிரமிப்பிற்கு உட்படாத நாடான தாய்லாந்தின், எட்டு அல்லது ஒன்பது நூற்றாண்டுக்கால வரலாற்றை ஐந்து பெரும் காலகட்டங்களாக பிரிக்கின்றார்கள். சயாமின் வரலாறு இவற்றோடு மட்டுமே முடிந்துவிடுவதாக பொருள் கொள்ளக்கூடாது. தவிர அச்சயாமின் எல்லைப்பரப்பை இன்றைய தாய் நிலத்தின் நிலப்பரப்போடு மட்டும் குறுக்கிப் பார்க்கவும் கூடாது. எனவே. இக்கட்டுரை சயாமிய வரலாற்றில் வலிமை கொண்டு விளங்கிய இராஜியங்களை மட்டுமே அடிப்படையாக்கிப் பேசுகின்றது.

சீனாவின் யூனான், குவாங்சி மற்றும் கந்தோள் ஆகிய தென் சீனப்பகுதிகளில்தான் தாயின மக்களின் வரலாறு தொடங்குகின்றது. இப்பகுதிகளில்தான் இம்மக்கள் தங்களது ஆட்சியினை ஏற்படுத்தியுள்ளனர். காலச்செலவில் பாரிய எண்ணிக்கையிலான மக்கள் தென்புலம் நோக்கி நகர்ந்து சல்பாயா பள்ளத்தாக்கு வரை வந்து. மைய சமவெளியில் கெமர் பேரரசின் ஆளுமைக்குட்பட்ட பகுதிகளில் அவர் களின் பண்பாட்டை உள்வாங்கி. நிலையாக குடியமர்ந்ததாக வரலாற்று ஆவணங்கள் சான்று பகருகின்றன.

நஞ்சாவ் காலகட்டம்

கிபி 650-கிபி 1250 வரையிலானவை நஞ்சாவ் காலகட்டமாகும். இது போர்கள் மலிந்த காலமாக இருந்துள்ளது. மங்கோலிய குப்ளைக்கான் தலையீடு வரை நீளும் பெருங்கதை. கெமர் மற்றும் மோன் அரசுகளிடமிருந்து விடுதலை பெற செங்களமாடிய ஊழி அது. சர்ச்சைக்குரிய, முடிச்சவிழ்க்கப்படாத சம்பவத் தொகுப்புகளாய் நீள்கின்ற காலகட்டத்தைத் தவிர்ப்பதே உசிதமாகும்.

சுக்கோதாய்

வட மைய தாய்லாந்தின் சுக்கோதாய் நகரைச் சுற்றி அமைந்திருந்த தொடக்க கால சாம்ராச்சியம் இது. கி.பி. 1238 முதல் கி.பி. 1438 வரை நீடித்திருந்த அரசாங்கம் இதாகும். இவற்றின் பழைய தலைநகரம். இன்றைய தம்போன் முவாங் காவ் எனும் பகுதியின் நவீன சுக்கோதாயிலிருந்து 12 கி.மீ தொலைவிலுள்ளது. இன்று இவ்விடம் பாதுகாக்கப்பட்ட வரலாற்றுப் பூங்காவாக தொல்பொருளாய்வுத்துறையின் கவனிப்பில் உள்ளது. இவ்வூர் கி.பி. 1238க்கு முன் பண்டைய கெமர் இராச்சியத்தின் பகுதியாக இருந்தது.

தாய் மக்களின் சுதந்திர அரசினை ஏற்படுத்தியவர்கள் பொ கூன் பா முவாங் மற்றும் பொ கூன் பாங் கிளாங் அல் ஆகிய இருவர். லன்னா (Lanna). பாயோ (Payao). சியாங் சென் (Cheang Sean) போன்ற அரசுகள் ஒத்த காலகட்டத்தில் தோற்றுவிக்கப்பட்டதாக இருப்பினும் அவையாவும் சுக்கோதாய் அளவு பெயவையோ பரவலாக அறியப்பட்டவையோ அல்ல. வலிமைமிகுந்ததாக இருந்தது என்றபோதும். பிற அரசுகளோடு நல்லுறவைப் பேணிவந்த அரசாக சுக்கோதாய் விளங்கியதாம்.
இந்திரதித் அல்லது இந்திரடித் என்ற பட்டப் பெயருடன் ஆட்சி புந்த பொ கூன் பாங் கிளாங் அல்விற்குப் பிறகு மகன் பொ கூன் பான் முவாங் அயனை அமர்ந்தான். கி.பி. 1278ல் அவன் இளவல் பொ கூன் இராம் காம்யேங் ஆட்சிப் பீடமேறினான். மகா இராம் காம்யேங் என்றழைக்கப்பட்டவன் ஆட்சிக் காலம் பொற்க்காலமெனத் தாய்லாந்து வரலாறு பேசுகின்றது.

தாய்மொழியின் இன்றைய வவடிவத்திற்கு வித்திட்டவர் இவரென்று கூறப்படுகின்றது. அதற்குச் சான்றாகக் கொள்ளப்படும் கி.பி. 1283ஆம் ஆண்டின் சர்ச்சைக்குய கல்வெட்டு தொடக்கத்தில் அறியப்பட்டிருந்த எழுத்தைத் தாங்கியுள்ளதாம். பேராண்மை, சாண்றான்மை, ஒழுக்கம் மற்றும் தொலைநோக்கு ஆகிய தன்மைகளால் குடிமக்களுக்கு நல்வாழ்வளித்த வீரராம். காம்யேங்கின் அரண்மனை வாயிலின் முகப்பில் மணி தொங்கியதாம். நாட்டு மக்கள் மன்னரிடம் தங்களது பிரச்சினைகளை முறைப்பாடு செய்வதற்கு ஏதுவாக கட்டப்பட்டிருந்த அந்த மணி பயன்பட்டதாம்.

மணியின் முன்னால் நின்று மக்கள் அதை அசைத்ததும் அவர்களின் குறைகளை செவிமடுக்க ஆயத்தமாகி விடுவாராம் அரசர். கொலுமண்டபத்திற்கு அழைத்துச் செல்லப்பட்ட மக்கள் தங்களின் நோக்கத்தினை மன்னருக்கு தெவித்தனராம். மனுநீதி சோழன் கதையைப் போல் இருக்கின்றதா? மக்களின் துயர் களைய மணி கட்டி ஆண்டிருந்தது தென்னகத்தில் மட்டுமல்ல. மாறாக பிற இடத்திலும் தான் என்பதற்கு இவை போல்வன நல்ல எடுத்துக்காட்டுகள். தலைமுறை தலைமுறையாய் சொல்லப்பட்டு வரும் இது போன்ற பழக்கம் எங்கிருந்து தொடங்கி எவ்வாறு பரவியது எனும் ஆய்வுகள் புதைந்து கிடக்கும் அரிய பல வரலாற்றுப் புதினங்களை வெளிப்படுத்துவதாய் அமையக்கூடும்.

சொல்பித்தர்களால் நிரம்பித் தளும்பும் தமிழ் நாட்டரசு இவற்றில் எல்லாம் கவனம் குவிக்காது என்பது புதியதோ, வியப்பிற்குரியதோ அல்ல! தனிமனிதர்களால் சாத்தியப்படும் ஆய்வுப்பணியும் அல்ல இவைகள். நிறுவனமயமாகி வரும் தமிழ்நாட்டு பல்கலைக்கழங்கள் இத்துறையில் அக்கறை கொள்ளலாம். தங்களது மொழி, பண்பாடு,அறிவு, மேன்மை மற்றும் பழமையான இலக்கியங்களுக்கு நிகர் வேறில்லை என்று தற்பெருமை கொள்ளும் சீனர்களைப் போல் அனைத்தும் தமிழடத்திலிருந்துதான் எனும் தென்கிழக்காசியத் தமிழ் முழங்கிகளும் புதையுண்டு கிடக்கும் வரலாற்றின் மீது ஒளிப்பாய்ச்சி அய கருவூலங்களை வெளிக் கொணரத்தாங்கள் குவித்து வைத்துள்ள செல்வத்தை அறக்கட்டளைகள் நிறுவிச் சிறிது செலவழிக்கலாம். இதற்கு தாய்லாந்தில் அரை நூற்றாண்டிற்கும் மேலாக வாழ்ந்து வரும் தமிழர்கள், அங்கு வதியும் ஈழத்தமிழர்களோடு தாயின மக்களின் உதவியையும் நாடுவது பணியை எளிதாக்கும். எங்களைப் பீடித்திருக்கும் சனாதன வெறியை விட்டு. பௌத்த பிக்குகளிடத்தில் நெருக்கம் கொள்வதும் இப்பணியில் பெருந்துணையாகும்.

வடகிழக்கில் இலாவோசின் லுவாங் பிரபாங்கை எல்லையாகவும் வடமேற்கெல்லையாக இன்றைய மியான்மான் மர்தாபனையும், மலாய்த் தீபகற்பத்தின் நக்கோன் சி தம்ராட்டை தென்பகுதி எல்லையாகவும் கொண்டு விரிந்து பரந்திருந்ததாம் வீர ராம் காம்யேங் ஆட்சிக் காலத்திய சுக்கோதாய் சாம்ராச்சியம். குடிமக்களின் நலன் பேணியவராகத் துலங்கியவராம் அவர். அவன் மைந்தன் லொய் தாயின் ஆட்சியில் முதலில் வடப்பகுதி உத்தரடித்து அரசும் விரைவிலேயே இலாவோசு நாடும் ஆக்கிரமிக்கப்பட்டிருந்த தங்களது நிலப்பகுதிகளை மீட்டெடுத்து சுக்கோதாய் கட்டுப்பாட்டிலிருந்து தங்களை விடுவித்துக் கொண்டன. கி.பி. 1319இல் மோன் மாநிலமும் (இன்றைய மியன்மார்) கி.பி. 1321இல் சுக்கோதாய் ஆளுமையில் நிண்டகாலமிருந்த லன்னா அரசின் பழமை வாய்ந்த நகரானதாக்கும். சுக்கோதாய் ஆட்சியைப் போராடி களைந்தன. இவற்றுக்கு சற்று முன்னரே தென் பகுதி சுப்ஹன்பு தனது விடுதலையை வென்றெடுத்திருந்தது குறிப்பிடத்தக்கதாகும். பதினான்காம் நூற்றாண்டில் வல்லமைமிக்க அரசான அயூத்தாயாவின் கவனம் படும் வரை புகழ் மிக்கதாய் விளங்கியதுதான் சுக்கோதாய் சாம்ராச்சியம்.

அயூத்தாயாவின் எழுச்சியில் புகழ் குன்றிய சுக்கோதாய். பிந்தைய பேரரசிற்கு திரை செலுத்தும் நாடாக குறுகிப் போனது. கி.பி. 1365 தொடங்கி கி.பி. 1378 வரை இந்நிலையே நிலவியதாக அறியவருகின்றது. முன்சொன்ன ஆண்டில் இரண்டாம் தம்மரச்சா மன்னனின் ஆளுமைக் காலத்தின் போது சுக்கோதாயின் ஆட்சியதிகாரம் அயூத்தாயா பேர ரசிடம் கையளிக்கப்பட்டது. கி.பி. 1412இல் சாம்ராச்சிய சக்கரவர்த்தியால் நான்னகாம் தம்மரச்சா சுக்கோதாயின் அரசராக முடிசூட்டப்பட்டார். பதினெட்டு ஆண்டுகளுக்குப் பின் பித்சானூலோக் தலைநகராக்கப்பட்டது என்றபோதும் அடிமைவிலங்கை உடைத்தெறிவதில் பாரிய முன்னேற்றம் ஏதும் நிகழவில்லை. கி.பி. 1438இல் அதாயா சாம்ராச்சியத்தின் பிரதேசமாக்கப்பட்ட சுக்கோதாய் ஒளி குன்றி சிறிது சிறிதாகச் சிதைந்துப் போயுள்ளது. இங்கு ஆளுகை புந்த மொத்த மன்னர்கள் ஒன்பதின்மராவர்.

அயூத்தாயா பேரரசு கால கட்டம்

அயூத்தாயா பேரரசை கட்டியெழுப்பியவர் முதலாம் இரமதிபோடி (யூதோங்) யாவர். கி.பி. 1376இல் சுக்கோதாய் அரசுப்பகுதிகளை வென்று, வடக்குப் பகுதி உள்ளடங்கலாக 640 கி.மீ. பரப்பளவில் வலிமை கொண்டு விளங்கியது அயூத்தாயா பேரரசு. தொடர்ந்து நானூறு ஆண்டுகள் மேன்மேலும் விரிவுப்படுத்தப்பட்டு வடக்கின் லன்னாதாய் தவிர்த்த, ஏறத்தாழ இன்றைய நவீன தாய்லாந்தின் எல்லைப் பகுதிகளை உள்ளடக்கியிருந்த சயாமிய பேரரசாகத் திகழ்ந்துள்ளது. நிப்பொன். வியட்னாம். இந்தியா. சீன மற்றும் பாரசீகம் தவிர பிற்காலத்தில் மேலைத்தேய நாடுகளான போர்த்துக்கேயம். இசுபானியம். டச்சு மற்றும் பிரெஞ்சு ஆகிய நாடுகளுடன் வாணிப உறவோடு நட்புறவும் கொண்ட அரசாக விளங்கியுள்ளது அயூக்தாயா.

அரச குடும்பத்துடன் மண உறவு கொண்டிருந்த செல்வந்த வணிக சீன வமிசாவளியைச் சேர்ந்த யூதோங், துணிகரச் செயலில் ஆர்வம் மிகக் கொண்டவராம். கி.பி. 1350 தொற்று நோய் பரவலுக்கு அஞ்சி, அவற்றைத் தவிர்க்க வேண்டி, வளமிக்க சவ்பாயா ஆற்றங்கரையை ஒட்டியிருந்த திட்டில் அரண்மனையை கட்டியதோடு இரமதிபோடி என்ற பட்டப் பெயரோடு கி.பி. 1369 வரை ஆண்டுள்ளார். அசுவமேத யாகம் நடந்தேறிய அயோத்தியின் தொடர்பினாலேயே தமது இராச்சியத்திற்கு அயூத்தாயா என்று பெயட்டார் என்பது அனைவரும் ஒப்பும் கருத்தாகிறது.

கி.பி. 1360ஆம் ஆண்டில் தேரவாத புத்தத்தை நாட்டின் அதிகாரபூர்வ கடைப்பிடித்தலாக அறிவித்ததோடு, இலங்கையிலிருந்த புத்த மடாலய சமூகத்தினரான சங்க உறுப்பினர்களை வரவழைத்து தேரவாத கோட்பாடுகளை தம் நாட்டில் கற்பிக்கச் செய்ததோடு, சாணக்கியனின் அர்த்த சாஸ்திரத்தை அடிப்படையாகக்கொண்டு தாயின வாழ்வியல் ஒழுகலாறுகளை உள்ளடக்கி சட்டமியற்றியவர் இவரென்பது ஆவண குறிப்புகள் தரும் செய்தி. இச்சட்டத்தை அடிப்படையாக்கியே பின்னாளில் வரைவுகள் அமைக்கப்பட்டுள்ளன. பத்தொன்பதாம் நூற்றாண்டு வரை இத்தகைய நிலையே நீடித்துள்ளது.

அயூத்தாயா சாம்ராச்சியத்தில் மடாலயங்களே பண்பாட்டு மற்றும் கல்விக் கூடங்களாக விளங்கியுள்ளன. துறவிகள் மட்டுமின்றி ஏனைய சயாமியர்களும் (குறிப்பாய் ஆண்கள்) பயிலுவதற்கு வாய்ப்பளிக்கப்பட்டிருந்துள்ளது. வந்தேறி சீனர்கள் படிக்கும் வாய்ப்பை நன்கு பயன்படுத்திக்கொண்டனர். அத்துடன் சீனப்பெரு நிலத்திலிருந்து பிழைப்பு தேடி வந்தோன் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது.

இப்படி வந்து குடியேறியவர்கள் பொருளாதாரத்தை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்ளத் தொடங்கி விட்டதாக குறிப்பிடும் அறிஞர்கள். இது நீண்ட கால சமூகப் பிரச்சினையாக நீடிப்பதாகத் தெவிக்கின்றனர். பதவியிலிருந்து விரட்டப்பட்ட தக்சின் சீன வமிசாவளியினர்தான். பிற குடிமக்களுக்கு கடமையாக்கப்பட்டிருந்த கட்டாயப் பணியிலிருந்து சீனர்களுக்கு விதி விலக்கு அளிக்கப்பட்டிருந்ததால் அவர்களால் சுதந்திரமாக சுற்றித்திந்து வர்த்தகத்தில் ஈடுபட்டு மிக எளிதாகத் தங்கள் நிலையை உயர்த்திக்கொள்ள முடிந்துள்ளது.

பதினாறாம் நூற்றாண்டில் அயூக்தாயாவின் உள்நாட்டு வர்த்தகத்தை கட்டுப்பாட்டில் வைத்த சீனர்கள் அதனூடாக சமூக மற்றும் இராணுவத் துறைகளிலும் நுழைந்தனர். வயிற்றுப்பாட்டிற்கு வழி தேடி வந்தவர்களில் பெண்களின் எண்ணிக்கை குறைவாக இருந்தபடியால் தங்களின் இருத்தலுக்காக தாய் பெண்களை மணமுடித்தனர் என்பது ஆவணச் சான்றாகும். இன்றைக்கும் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு வணிகம் பெருமளவும் சீன வமிசாவளியினர் கையில்தான். பானியா மற்றும் மார்வாடி உண்டென்ற போதும் சடையர்கள் அளவிற்கு இல்லை. தாய்லாந்து மக்களிடமிருந்து சீனர்களைப் பித்து அடையாளம் காண்பது அத்துணை எளிதல்லõ

பதினான்காம் நூற்றாண்டின் இறுதிக்குள்ளாகவே தென்கிழக்காசியாவின் வலிமைமிக்க பேரரசாக விளங்கியபோதிலும் இவ்வட்டாரத்தைத் தமது ஆளுகைக்குட்பட்ட நிலப்பகுதியாக்குவதென்பது அயூத்தாயாவிற்கு இயலாத ஒன்றாகவே இருந்துள்ளது. மாந்த வளப் பற்றாக்குறையே அதற்குக் காரணமாக்கப்படுகின்றது. தமது ஆட்சிக் காலத்தின் இறுதியாண்டில் இரமதிபோடி வேந்தனால் கெமர் நாட்டின் தலைநகரம் அங்கோர் வெற்றி கொள்ளப்பட்டது. அத்தலைநகரை கைப்பற்றுவதற்கான முந்தைய முயற்சிகள் பலவும் முறியடிக்கப்பட்டன என்பது கவனத்தில் கொள்ளத்தக்கதாகும். வியட்னாமின் நில விவாக்கத்தைத் தடுப்பதற் காக கிழக்குப் பகுதியைத் தற்காப்பு அரணாக்க வேண்டியே இப்படையெடுப்பு மேற்கொள்ளப்பட்டது என்று காரணம் சொல்லப்பட்டதாம்.

விபச்சாரத்திற்கு வறுமை மட்டுமா காரணம்?

தென்கிழக்காசியா சோசலிசமயமாவதைத் தவிர்ப்பதற்காக வல்லாதிக்க வட அமெக்காவுக்கு சென்ற நூற்றாண்டில் தாய்லாந்து தளமானது என்பதனையும் நினைவில் கொள்ளுவது புரிதலை ஆழப்படுத்தும்.

சோவியத்து ஒன்றியத்தின் மேலாண்மையை தடுப்பதற்காகத்தானே முந்நாளைய முஜாயிதீன்களுக்குத் தேவையான அனைத்தையும் செய்தது சி.ஐ.ஏ. மற்றும் வெள்ளை மாளிகை பிரைவேட் லிமிடெட். அவ்வாறுதான் கதையளக்கப்பட்டது. அதில் சீனத்தின் பங்கு சிறியதல்ல. அதன் எதிர்வினை உழைக்கும் மக்களை எவ்வாறெல்லாம் அலைக்கழித்ததுõ மானுடம் எப்படியெல்லாம் ஊனப்பட்டது. பெண்ணுமை பேசும் அட்டைப்புலிகள் அப்கானிஸ்தானையும். தாய்லாந்தையும் பற்றி உதடசைப்பதில்லையே! பேங்காக்கின் சீலம் சாலையின் இடது பக்கம் மாரியம்மன் கோயில் என்றால் வலப்பக்கம் நீண்டு செல்வது என்ன? உலகெங்குமிருந்து உல்லாசத்திற்கு வரும் சிற்றின்ப பிரியர்களின் சுவர்க்கமான ''பட் போங்’’தானே!

பாலியல் தொழிலாளிகளின் எண்ணிக்கை பெருக்கத்திற்கு வறுமை மட்டுமே காரணமல்ல. அமெக்க ஏகாதிபத்திய சிப்பாய் களின் வடிகால்தனமும்தான். இராணுவத்தினன் கபட பசப்பு வார்த்தைகளில் மயங்கி, தங்களைப் பறிகொடுத்து, வாழ்வைத் தொலைத்த பல பெண்களின் துயர் கதைகளை சொய் வைத்தியில் (தமிழர் பெயர் சூட்டப்பட்ட சாலை) வைத்து கேட்டதும் இயன்ற அளவில் உதவி நின்றதும் இதுநாள் வரை எழுத்தில் சொல்லப்படாத புதினங்களாகும். இத்தகு சோகங்களைப் புகழ் பெற்ற பத்தாயாபட்டினத்திலும். பவளத்தீவிலும். விடுதலைப்புலிகளின் முதலீட்டுத் தீவு என்று டைம்ஸ் பத்திக்கை சிலவாண்டுகளுக்கு முன்பு செய்தி வெளியீட்டு பரபரப்பு ஏற்படுத்திய புக்கெட் தீவிலும் ஏனைய பகுதிகளிலும் தொகுக்கலாம்.

இடைவெளிகளுடன் மீண்டும் மீண்டும் நடைபெற்ற ‘ஒரு நாடு பிறிதொரு நாட்டினைக் கவர்தல்’ என்ற சூழலுக்கு. அக்கால் தொய்வுற்றிருந்த கெமர் நாடு இரையானது என்றபோதும் அச்சாம்ராச்சியத்தை கட்டியாள்வது என்பது ஏமாற்றம் தந்ததாகவே தொடர்ந்துள்ளது. இடையிடையே கிளர்ந்தெழுந்த சுக்கோதாயர்களை ஒடுக்குவதிலும், சியாங்மாய் படை நகர்வுகளுக்கு முகம் கொடுத்ததிலும் அயூத்தாயாவின் விடாப்பிடியான நில விவாக்க முயற்சி பின்னடைவைக் கண்டது என்றாலும். முடிவாக முதலாம் இரமதிபோடி அரசன் மறைந்த ஓராண்டிற்குப்பின் சுக்கோதாய் பிரதேசம் முழுவதையும் அயூத்தியர்கள் தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்திருந்தனர்.

தரையில் உருண்ட அயூத்தாயா கிரீடமும். தமிழன் பாரத தேசபக்த உணர்ச்சியும்

அற்றைநாள் சயாமிய சாம்ராச்சிய ஆட்சிமுறை ஒற்றை இறையாண்மை கொண்ட நாடாக இருந்ததில்லை என்பது வரலாற்று உண்மை. பின் எப்படி இருந்ததாம் என்பதனை அறியும் ஆர்வத்தில் அக்காலகட்டத்தின் மேல் கவனம் குவித்தபோது அவை ஒட்டுவேலைத் துணியைப்போல் தன்னாட்சி கொண்ட பகுதிகளாக இளவரசர்களாலும், திறை செலுத்திய சிற்றரசர்களாலும் ஆளப்பட்டிருந்தது தெரியவந்தது. இவ்வாட்சியாளர்கள் அனைவரும் அயூத்தாயா சக்கரவர்த்திக்குக் கடப்பாடுடையவர்களாகப் பல மண்டலங்களாகப் பிக்கப்பட்டிருந்த பகுதிகளில் ஆட்சி புரிந்துள்ளனர். அவர்களில் பெரும்பாலோர் அரச குடும்பக்குருதி உறவுடையவர்களே.

சொந்த படையணிகளை கொண்டிருந்தவர்கள் தங்களுக்குள்ளேயே சமர் புந்த சம்பவங்கள் மிகப்பல. அத்தகைய சயங்களில் பாகுபாடின்றி நீதி வழங்குவதும் அவர்களிடையே சமரசம் மேற்கொள்வதோடு அவர்களில் எவரும் பகைவர்களின் அணியில் சேர்ந்துவிடாமலிருப்பதைக் கண்காணிப்பதும் பேரரசனின் பொறுப்பாக இருந்துள்ளது. அரச குடும்ப நலன்களுக்காகவும் மற்றும் வைப்பாட்டி சச்சரவுக்களுக்காகவும் மாண்டவர்கள் என்னவோ உழைப்பை மட்டுமே உடைமையாய்க் கொண்டவர்கள்தாம். மாந்த உமைகள் புறந்தள்ளப்பட்ட நிலப்பரப்புத்துவ ஆட்சிக்காலம் பொற்க்காலமாம்! சேர. சோழ. பாண்டிய அரசர்களை போற்றிக் கொண்டிருப்பவர்கள் இன்றும் எம்மிடையே உழல்வதைப்போல், அக்காலத்தில் சிங்காசனத்தில் வீற்றிருந்து அரசோச்சியவர்களை புகழ்ந்தேத்தும் சாமானிய தாய் மக்கள் மற்றும் பிக்குகளோடு விவாதம் செய்த உச்சந்தலையைச் சுட்டெத்த சூய வேளைகள் நினைவிலாடுகின்றன.

பல்லாற்றானும் துணை நின்ற வேறு பலரும் நினைவிற்கு வந்தாலும் அவர்களின் பெயர்களைக் குறிப்பிட இயலவில்லையே என்ற வருத்தம் வதைக்கவே செய்கின்றது. குடகில் தொடங்கி கொள்ளிடத்தில் முடியும் காவியைப்போல், சீனப்பெருநிலத்தில் துவங்கி நெடும்பயணம் தொடர்ந்து தாய்லாந்து குடாக் கடலில் கலக்கும் மெக்கோங் பேராற்றின் கரையோரத்து வனப்பகுதி யின் ஒற்றையடிப்பாதையில் பயணம் செய்த மோட்டார் சைக்கிளில் கன்னெய் தீர்ந்துவிட, அவ்வண்டியை தள்ளிக் கொண்டு நடந்த தூரம். . . நண்பரும் நானும் சோர்ந்து போனபோது உதவியவர்கள். காசு வாங்காமல் உணவளித்தவர்கள். அடி உதை வாங்குவதினின்று தப்புவித்தவர்கள் என்று நீளும் பட்டியல். எளிய மக்களின் அன்பிற்க்கு அன்று உரியவனாகியிராவிட்டால் இன்றைக்கு இவற்றினைப் படிக்கும் வாய்ப்பு உங்கட்குக் கிட்டியிராது.

உரசினால் பற்றிக் கொள்ளும் தீக்குச்சியைப் போன்ற தன்மையும் எதற்கும் சமரசம் செய்துகொள்ளாத குணவியல்பும் கொண்ட இளைஞனாக நீங்கள் உங்களை உருவகப்படுத்திக் கொள்ளுவீர்களேயானால் மேற்சொன்ன சூழலை நன்கு உய்த்துணர முடியும். ''கருத்து மக்களை பற்றிக்கொண்டால் அவை வேதியல் ஆற்றலாய் மாறும்’’ என்பன போன்ற மெய்யியல் கூற்றுகளைப் பட்டறிவாய் உணர்ந்த காலமது.

பதினைந்தாம் நூற்றாண்டில் அயூத்தாயர்களின் கவனம் மலாய்த் தீவக்குறை நோக்கித் திரும்பியது. குறிப்பாக அந்நாளில் தலைசிறந்த துறைமுக நகரமாய் விளங்கிய மலாக்காவைக் கைப்பற்றுவதை நோக்கமாய்க் கொண்டிருந்தனர். மலாய் நாட்டின் வேறு சில அரசர்கள் சயாமிய மன்னர்களுக்கு தங்கச் செடியை (தங்கத்தால் இழைக்கப்பட்டவை) கப்பமாய் செலுத்தியபோதும் மலாக்காவைக் கைப்பற்ற வேண்டும் என்ற சயாமியர்களின் நோக்கம் கனவாகவே கலைந்தது. இப்பகுதியின் பூகிஸ் இனக்குழுவினர் சயாமியர்களுக்கு கடும் எதிகளாகத் திகழ்ந்திருக்கின்றனர். மலாய்க்காரர்களின் ஒற்றுமைக்கு இஸ்லாம் மார்க்கம் அடிப்படையாகவும் அடையாளமாகவும் விளங்கியதால் அயூத்தாயர்களின் திட்டம் கைகூடாமலே போனது என்பது வரலாறாகும்.

இந்நாட்டின் அரசர்கள் அடிநாள் தொட்டு வழமையாகியிருந்த கெமர் பண்பாட்டுப் பழக்க வழக்கங்களைத் தொடரவே செய்தனர். இருப்பினும் சுக்கோதாய் மன்னர்கள் பேணிக்காத்த தந்தைக்குய தோற்றத்தை தவிர்த்ததோடு முற்றாளுமை மன்னராட்சி வடிவத்தை அமுல்படுத்தி. ''தேவராஜன்’’ என்ற பட்டப் பெயர் பூண்டு கீர்த்தி பெற்ற மன்னர்களோடு ஆதிக்கம் செலுத்திய அயூத்தாய் அரசாங்கத்திற்கு முடிவு நாள் நேரவே செய்தது. கி.பி. 1767இல் சயாம் மீது படையெடுத்த பர்மிய மன்னன் (இடைவிடாத ஆக்கிரமிப்பு போல் இது ஒரு தடவை) அயூத்தாயாவை அழித்து தரைமட்டமாக்கியபோது இறுமாந்திருந்தவர்களின் ஆட்சி பீடமும், கிரீடமும் தரையில் புரண்டன. அதுபோழ்து நிகழ்ந்த கொடூரங்களின் எச்ச சொச்சங்களை உய்த்துணரும் வகையில் சிதைக்கப்பட்ட கிடங்குகள், காப்பகங்கள், வழிபாட்டிட கட்டடங்கள் என்று பலவும் ஓரளவுக்கேனும் காணத்தக்க நிலையில் இருந்தன.

தொன்னூறுகளின் முற்கூறில் அவைகளைக் கண்டுவரச் சென்றபோது, அங்கு சமூகமளித்திருந்த மேற்குலகினர்க்கு விளக்கப்படுத்திக் கொண்டிருந்த இளம்பெண் ஒரு கட்டத்தில் தேம்பி யழுததைக் கண்டு, அணுகி நட்பேற்படுத்திக்கொண்டு, பலவற்றையும் நுணுகிப் படித்தறிந்து சேகரித்த குறிப்புகள் கட்டுநாயக்க விமான நிலையத்தில் களவுபோனது. துணை புரிந்த அவ்விளம் பெண் சிதைந்துபோன அயூத்தாய அரச வமிசாவளியைச் சேர்ந்தவர் என்பது பின்னாளில் தெரிய வந்தது. அயூத்தாய மன்னர்களின் மொத்த எண்ணிக்கை 33 அல்லது 34 எனப்படுகின்றது.

மேற்சொன்னவை அனைத்தும் ஆறாத தீக்காயங்களாக, தீராப்பகையாக தாய் பர்மிய மற்றும் இந்தோசீன மக்களிடத்தில் நிலைபெற்றிருக்கின்றன. குறுகிய காலத்திற்கு முன் எல்லைப்புறத்தே பதற்றம், மிக அண்மையில் நடைபெற்ற இரத்தம் சிந்திய பிக்குகளின் கைகலப்பு ஆகியவைகளை நன்கு உள்வாங்கியவர்கள் வடிவாய் உய்த்துணரலாம். இந்திய சமாச்சாரங்களை விலாவரியாக படித்து. ஒருவரை மற்றவர் முறைத்துக் கொள்வதில் இருக்கும் ஆர்வத்தில் ஓர் பங்குகூட வாழும் மண்ணின் அக்கம் பக்க வரலாற்றை அறிந்து கொள்வதில் எம் தமிழர்க்கு இல்லையே! என்று மாயும் இவர்களின் மௌடிக பாரத தேசபக்த உணர்ச்சிõ விதி விலக்குகள் சொற்பமே.

தொன்பூ கால கட்டம்

அம்மாபெரும் வெற்றியை பர்மியர்களால் நெடுங்காலத்திற்கு தக்கவைத்துக் கொள்ள முடியவில்லை. பயா தக்சின் எனும் பெயர்கொண்ட இளம் தளபதியும் அவனின் ஆதரவாளர்களும் பர்மியர்களின் பாதுகாப்பு வளையத்தை உடைத்து சந்தபூ எனுமிடத்திற்குத் தப்பிச் சென்றனராம். அயூத்தாயா வீழ்ச்சியடைந்த ஏழு மாதங்களுக்குப்பின். முன்னர் தப்பியோடிய தக்சினும் அவனது படை மூலம் பர்மிய படை ஆக்கிரமிப்பை வலிந்து வெளியேற்றினராம். கி.பி. 1767 தொடங்கி 1772 வரை நீடித்த பயா தக்சினின் ஆட்சிக் காலம் ''தொன்பூ” கால கட்டம் என்று வரலாற்றாசியர்களால் வரையறுக்கப்பட்டுள்ளது.

புகழ் பெற்றிருந்த தக்சின் பாதுகாப்பு, பன்னாட்டு வாணிபம், பர்மிய தாக்குதல், ஆயுத கொள்வனவு ஆகியவைகளை அவதானித்து கடல் பகுதிக்கு தொலைவில் இல்லாத சவ்பாயா ஆற்றுப்படுகையின் மேற்குக் கரைப்பகுதியில் அமைந்திருந்த தொன்பூக்குத் தமது தலைநகரை மாற்றியமைத்தான் என்பது வரலாற்றுச் செய்தியாகும். அடுத்தடுத்து வந்த நாட்கள் தக்சினுக்கு சோதனை காலமாகவே அமைந்துள்ளன. அயூத்தாயாவின் கொற்றக் குடை அடிசாய்க்கப்பட்டதின் பின் ஆட்சியின் மைய அதிகாரம் வெகுவிரைவிலேயே சிதைந்தது. ஆதலால் அவனின் பிற்பகுதி ஆட்சிக்காலம் மாநிலங்களை ஒன்றுபடுத்துவதிலேயே கழிந்துள்ளது. பயா தக்சின் மட்டுமே அவற்றின் ஒரே ஆட்சியாளனாம்.

இரத்தினகோசின் காலக்கட்டம்

பரியா தக்சினின் சேனாதிபதியான ஜெனரல் சக். முதலாம் இராமா என்ற பட்டப் பெயருடன் சக் அரச வமிசத்தை தோற்றுவித்தவனாவான். இவனின் ஆட்சிக்காலம் கி.பி. 1782 முதல் கி.பி. 1809 முடிய. சக்யின் தலையாய பணி தலைநகரைப் பாதுகாப்பான இடத்திற்கு இடம் பெயரச் செய்ததேயாம். தொன்பூயில் அமைந்திருந்த தலைநகரை சவ்பாயா ஆற்றுக்கு அப்பால் பேங்காக் அல்லது இரத்தின கோசினுக்கு மாற்றியமைத்ததோடு மிகப்பெரும் அரண் மனையை கட்டியெழுப்பியவன் முதலாம் இராமாவாம். அத்துடன் நில்லாது அரண்மனையின் கிழக்குப்புறத்தில் இலாவோசு நாட்டின் வியான்தேன் நகலிருந்து தாம் கைபற்றிக் கொணர்ந்த மரகத புத்த படிமத்தை வைப்பதற்கான ஒழுங்குகளை மேற்கொண்டுள்ளான். அமைப்புப் பணிகள் முழுமையடைய ஏறத்தாழ இரண்டாண்டுகள் ஆகியுள்ளது. அதன் பின்னர். முந்தைய தொன்பூ தலைநகலிருந்து புதிய பகுதிக்கு (இன்றுள்ள இடத்திற்கு) கி.பி. 1784இல் கொண்டுவரப்பட்டு அமர்த்தப்பெற்றதாம் அப்படிமம்.

மரகத புத்தனும் அடிமைகளால் பேசப்படும் தொன்மைத் தமிழ்மொழியும்!

மரகத புத்தனின் வரலாறு அறிய விருப்பம்தானே! கி.பி. 1434இல் வடபுல தாய்லாந்தின் சியாங்ராயின் இடி மின்னலால் தாக்கப்பட்ட ஓர் தூபியின் உள்ளே சுவர் பூச்சு சாந்தால் மெழுகப்பட்ட சிலை கண்டெடுக்கப்பட்டது. பின்னொரு நாள் அப்படிமத்தின் மூக்குப் பகுதியில் சாந்து கலைந்திருந்த நிலையில் பச்சை வண்ணம் தெந்ததைக் கண்ட அம்மடலாயத்தில் தங்கியிருந்த பிக்கு. அவற்றை முழுமையாக தூய்மைப்படுத்திய பின்னர்தான் அ*தோர் மரகதத்தால் வடிக்கப்பட்ட கோதமன் சிலை என்றறியப்பட்டது.

பின்னர் நடந்தேறியவை நீங்கள் யூகிப்பதைப்போலவேதான். அப்படிமத்தை வணங்க மனித வசை நீண்டது. சியாங்ராய் எனுமூர் சியாங்மாய் மன்னன் ஆட்சியின் கீழிருந்த காலமது. இச்சம்பவம் குறித்து அறிந்த மன்னர் சாம் பாங் காயின். அரசபவாரங்களோடு பட்டத்து யானையையும் அனுப்பி அச்சிலையை சியான்மாய்க்கு கொண்டு வந்து சேர்க்க ஆணை பிறப்பித்தாராம். இலம்பாங் எனுமூருக்குப் பியும் கிளைப்பாதை முச்சந்திக்கு வந்ததும் அவ்வூர் நோக்கி ஓடியதாம் கன்று. ஒரு முறையல்ல. மும்முறை அவ்வாறே நிகழ்ந்ததை அறிந்த மன்னர், அப்படிமத்தை காத்து வரும் காவல் தெய்வம் இலம்பாங்கிலேயே குடியிருக்க விரும்புவதாக முடிவு செய்து அவ்வூரிலேயே சிலையை வைக்க உத்தரவிட்டாராம். பின் வந்த முப்பத்திரண்டு ஆண்டுகள் கி.பி. 1468 வரை அங்கேயே வைக்கப்பட்டிருந்துள்ளது அச்சிலை. அவருக்குப்பின் அயனை ஏறிய மன்னர் திலோக். அப்படிமத்தை சிவாங்மாயின் கிழக்குப்பகுதி மடலாயத்தில் சேடி லூவாங் எனும் தூபியில் அமர்த்தியதாக பிறிதொரு காலக் குறிப்பின் வழி அறிய வருகின்றது.

ஆண் வாரிசு இல்லாத சியாங்மாய் மன்னர் கி.பி.1551இல் மரணமடைந்ததும் இலாவோசு நாட்டின் மன்னரை மணந்த மகள் வழிப்பேரனான இளவரசனை அமைச்சர்கள், பெருமக்கள் ஆகியோர் சேர்ந்து அரியணை அமர்த்தினராம். பதினைந்து வயதில் அரசபீடம் ஏறினான் சாய்சேத்தா. பதின்ம வயதினன் அரியணை அமர்ந்து ஏறத்தாழ ஓராண்டு ஆகியிருந்த நிலையில் மன்னன் சாய்சேத்தாவின் தந்தையான லாவோசு நாட்டு மன்னர் மரணமடைந்துள்ளார். ஆகவே தந்தை நாட்டிற்குத் திரும்ப அணியமான சாய்சேத்தா லூவாங் பிரபாங் சென்ற போது வெறுங்கையோடு திரும்பவில்லை. மாறாக மரகதத்திலான அச்சிலையையும் உடன்கொண்டு சென்றதோடு தாம் வெகுவிரைவிலேயே சியான்மாய் திரும்புவதாகவும் உறுதி வழங்கிச் சென்றானாம். அதன்பின்னர் மன்னர் திரும்பி வரவுமில்லை அப்படிமத்தை அனுப்பிவைக்கவுமில்லை. பன்னிரெண்டு ஆண்டுகள் லாவோசு நாட்டு தலைநகரிலேயே வைக்கப்பட்டிருந்தது அப்புத்தன் சிலை.

பர்மிய மன்னன் மயின் நாவூங்சின் படையணிகளுக்கு முகம் கொடுக்க இயலாத சாய்சேத்தா தனது தலைநகரை வியான்தேன்னுக்கு மாற்றியமைத்தானாம். நவீன லாவோசு நாட்டின் தலைநகரம் வியான்தினே. இளவரசரே புரட்சி யாளராக மாறும் வரலாற்றை திரைப்படங்களில் மட்டுமே காணும் தமிழர்களுக்கு லாவோசு நாட்டு இளவரசர் புரட்சி யாளராக மாறிய இருபதாம் நூற்றாண்டு நிகழ்வு வியப்பிற் குயதாக இருக்கும் என்பதில் கிஞ்சிற்றும் ஐயமில்லை. ''மானுடம் பாடும் வானம்பாடி” என்று தோழர்கள் எம்மை விளிப்பதுண்டு. அதேபோது பிழைக்கத் தெரியாதவன் என்று பாமரர்கள் குறிப்பதுமுண்டு. இத்தகு சுட்டலுக்கெல்லாம் தகுதியுடையவனாக்கியது மாணிக்க பெருஞ்சித்தரனாரும் மகத்தான பொல் பொட் தோழரும் மட்டுமல்ல. குறிப்பாக இந்தோசீன மற்றும் தாய்லாந்து மக்களுடனான உறவும் தான் என்பதை பதிவு செய்வது தவிர்க்கக் கூடாததாகின்றது.

லுவான் பிரபாங்கில் 214 ஆண்டுகள் இருந்துள்ளது அச்சிலை. சிலை. கீடம் மற்றும் மன முறுகல்களினால் ஏற்பட்ட சாம்ராச்சிய சண்டைகள் கசப்பான அனுபவங்களை விளைத்துள்ளன. இவ்வாறான நிலைகள் எல்லாம் பிரெஞ்சுக்காரர்களுக்கு சாதகமாய் அமைந்தன. சனநாயக கம்பூச்சியா மீது வியாட்னாம் படையெடுத்ததற்கான காரணங்களுள் வழிவழியாய் ஊறிப்போயிருந்த நிலவுடமைக்கான பகைமையும் ஒன்று என்று தொட்டுக் காட்டுகின்றனர் ஆய்வாளர்கள்.

கி.பி. 1778இல் தொன்பூ அரசாட்சிக் காலத்தில் ஜெனரல் சக் வியான்தேன் மீது படையெடுத்து, அச்சிலையை தாய்லாந்திற்கே கொண்டு வந்து சேர்த்துள்ளான். பேங்காக் நகரம் தலைநகராக கட்டியமைக்கப்பட்டது தொடங்கி, பண்டைய ட்ராய் நகரத்தைப் பாதுகாத்ததாக கருதப்பட்ட பலாசு அதீனா தெய்வத்தைப் போல் அப்புத்த சிலையும் தாய்லாந்தை காத்து வருகின்றதாம். தாய் நாட்டு மக்களின் பாரம்பய நம்பிக்கை அது. ''உலகம் தானே ஆனது. சிலை வணக்கம் கூடாது. வேதங்கள் பாலைவனங்கள். பாதையற்ற பெருவளங்கள்’’ என்ற புத்தனுக்கு நேர்ந்த நிலை அது. புத்தனின் கருத்துக் குவியல்களை மேற்கோள்களாக்கி பல பத்து பெண்களின், குறிப்பாக பிக்குனிகளின் எதிர்ப்பை சம்பாதித்தது எல்லாம் பழங்கதையாச்சு. அழகுப் புன்முறு வலும். அமுதனைய தீஞ்சொற்களும் கொண்டு கானிடமிருந்து இத்தகைய எதிர்ப்பை எதிர்கொள்ளாததற்குக் காரணம் அவ்வெழிலார் ஆரணங்கிற்கிருந்த தத்துவப் புதல்தான் என்பது மிகைக்கூற்றல்ல.

அமர்ந்த நிலையிலிருக்கும் படிமத்தின் மடிப்பகுதி 48.3 சென்டி மீட்டர். அடிப்பாக ஈறான உயரம் 66 செ.மீ. வடபகுதி சியாங்மாய் அல்லது சியாங்சென் புத்த பள்ளியில் பதினைந்தாம் நூற்றாண்டிற்கு முன்னர் வடிவமைக்கப்பட்ட சிலை இது என்பது பொதுவான கூற்றாக இருப்பினும், அப்படிமத்தின் தியான நிலை சாயலையிட்டுப் பார்க்கும் போது அவை இலங்கை அல்லது தென்னிந்தியாவைச் சார்ந்தவையாக இருக்கக்கூடும் என்பது ஆய்ந்தறிந்தோர் முன் வைக்கும் கருதுகோள்.

தமிழ்மொழியின் சிறப்புகளில் தலையாயவை, அவை அடிமைகளால் பேசப்படும் தொன்மையான மொழி என்பதேயாகும். அம்மொழியை உலகத்தரத்திற்கு செம்மொழியாக்கிவிட்டதாக வாய்ப்பறை கொட்டுபவர்கள் இது குறித்தெல்லாம் கவனம் செலுத் தினால் மெய்யாகவே தமிழன் வரலாற்று விழுமியங்கள் பிற மக்களின் கவனத்தை ஈர்ப்பதோடு கூலிகள், குடிகாரர்கள், வெட்டிப்பேச்சு வீணர்கள், நம்பிக்கையின் பேல் ஒட்டு மொத்த அறிவையும் பிராமணியத்திடம் அடகு வைத்து விட்ட மூடர்கள் என்பன போன்ற கருத்துகளை அவர்கள் மாற்றிக் கொள்ள வழிவகுக்கும். ஏனெனில். ஆழ்ந்து எண்ணும் நிலையிலான அமைப்பு முன்சொன்ன இருநாடுகளின் தேரவாத புழக்க முறைகளுடன் ஒத்திருப்பதோடு. தாய்நாட்டு புத்த படிம அமைப்பில் காணப்படாத இருக்கை நிலை அதுவாகும் என்கின்றனர் புத்த அறிஞர்கள்.

இரண்டாம் இராமாவின் ஆட்சிக்காலம் கி.பி. 1809 முதல் 1824 வரையிலாகும். தம் தந்தை வழியிலேயே ஆட்சிப்புந்து இராச்சிய விவாக்கத்தை மேற்கொண்டவன் பிரா பாட் சொம்டெட் பிரா புத்த இலொய்த்ல நப்பலை. மூன்றாம் இராமாவான மன்னன் பிரா பாட் சொம்டெட் பிர நாங் கிளாவ் சாவ் யூ வூவா 1824 முதல் 1851 வரை ஆட்சி புரிந்தவன். மேலைத்தேயத்தோடு விடுபட்டிருந்த உறவுக்கு வழிவகுத்ததோடு சீனத்துடனான வாணிப உறவுகள் வளர்ச்சியடைந்ததற்கும் பெரும்பங்காற்றியவனாக இவ்வரசனைக் குறிப்பிட்டுச் சொல்கின்றனர்.

கி.பி. 1851 முதல் கி.பி.1868 ஈறாக சயாமை ஆண்ட மன்னன் பிரா பாட் சொம்டெட் பிர சோம் கிளாவ் சாவ் யூ வூவா என்றப் பட்டப் பெயர் கொண்ட மொங்குட் தான் நான்காம் இராமா. நவீன தாய்லாந்தின் தந்தை எனப்படும் மொங்குட். சயாம் பிறர்க்கு அடிமைப்படுவதை தவிர்த்தவன் என்பதோடு சமூக மற்றும் பொருளியல் சீர்த்திருத்தங்களை முன்னெடுத்தவனாகவும் தாய்நாட்டு வரலாற்றில் அடையாளப்படுத்தப்படுகின்றான்.

ஐந்தாம் இராமாவானவன் கி.பி. 1869 முதல் 1910 வரை ஆட்சி புந்த மன்னன் பிரா பாட் சொம்டெட் பிர சூல சோம் கிளாவ் சாவ் யூ வூவா எனப்பட்ட சூலாலங்கோன். இவன். தம் தந்தை தொடங்கி வைத்தவைகளைத் தொடர்ந்து முன்னெடுத்ததோடு அடிமை முறையை ஒழித்து, சமூக நலனில் கவனம் குவித்து நிர்வாகத் துறையிலும் மாற்றங்களை ஏற்படுத்தியவன் என்று தொடக்கப் பள்ளியில் படித்த வரலாறு இன்றைக்கும் கைகொடுக்கின்றது.

கட்டாயக் கல்வியோடு கல்வித் துறையில் சீர்த்திருத்தங்களை மேற்கொண்டவர். ஆறாம் இராமாவான மன்னர் வஜ்ரவூட் ஆவார். பிரா பாட் சொம்டெட் பிர மொங்குட் கிளாவ் சாவ் யூ வூவா என்ற பட்டப் பெயர் கொண்டிருந்தவனின் ஆட்சிக்காலம் 1910 முதல் 1925 முடிய.

கி.பி. 1925இலிருந்து கி.பி. 1935 வரை அரசாண்ட பிரா பாட் சொம்டெட் பிரபொக் கிளாவ் சாவ் யூ வூவா என்ற மன்னர் பிரஜடிபொக் ஏழாம் இராமாவார். முற்றாளுமை மன்னராட்சி மாறி நாடாளுமன்ற அரசியல் அமைப்பிற்குத் தக்கதான மன்னராட்சி தொடங்கியதற்கு வழிவகுத்த இராணுவ புரட்சி அறிமுகமானது இவன் ஆட்சிக் காலத்தில்தான் என்பது கவனங்கொள்ளத்தக்கதாகும்.
1933இல் ஆட்சியைத் துறந்த ஏழாம் இராமாவிற்கு மாற்றாக உறவுக்காரனான பிரா பாட் சொம்டெட் பிற போரமிந்தார மகா ஆனந்த மகிடோல் அயாசனம் ஏறினான். கி.பி. 1935 தொடங்கி 1946 வரை ஆளுமை செலுத்தியவனின் ஆட்சியில் தான் சயாம் என்ற பெயர் அடிமைப்படாத நாடு என்னும் பொருளில் 'தாய்லாந்து’ என்று பெயர் மாற்றம் கண்டதோடு 1939இல் மக்களாட்சி அரசாங்கத்திற்கு அடிகோலப் பட்டுள்ளது. ‘பச்சை மால் மேனி பருவச் செங்கன் வாய’ என்று பாடப்படும் திருமாலின் தோற்றரவான இராமனின் சக்கரத்தோடு தொடர்புப் படுத்தப்படும் சக் பரம்பரையின் ஒன்பதாம் இராமா 1946 தொடங்கி இன்றைய இருபத்தோராம் நூற்றாண்டிலும் ஆண்டுகொண்டிருக்கும் பரா பாட் சொம்டெட் பிர போரபமிந்தார மகா பூமிபோல் அடூல்யாடேச் ஆவார்


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com