Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Kavithacharan
Kavithaasaran Logo
ஆகஸ்டு 2007 - பிப்ரவரி 2008


சவீதா முத்துகிருஷ்ணன் சிந்தனைகள்
தமிழ்மகன்

என் மகள் கொண்டு வந்த அந்த அழகிய சிறு புத்தகம் குழந்தைகளுக்கான குட்டிக் கதைகளின் தொகுப்பாகத் தான் இருக்கும் என்று நினைத்தேன். ஆனால் கொண்டுவரப்பட்டதிலிருந்து பிரிக்கப்படாமல் மேஜை மீதே மூன்று நாள்கள் கிடந்ததால் ஒருவேளை அது பெற்றோர்களுக்கானதோ என்று தோன்றியது. இரவு உணவு முடிந்து தூங்கும் முன் ஒரு அசமந்தமான நேரத்தில் அதைக் கண்ணுற்றேன்.

பெற்றோர்-ஆசிரியர் கூட்டத்தில் அது வெளியிடப்பட்டதாகவும், பள்ளியின் தாளாளர் எழுதியது என்றும், நூலுக்காக குழந்தைகள் எல்லாரும் தலா 25 ரூபாய் கொண்டு வர வேண்டும் என்றும் அதில் குறிப்பிடப்பட்டிருந்தது. ஆக, 25 ரூபாய் கொடுத்து வாங்கப்பட்ட புத்தகம் அது.

ஆசிரியர்களைச் சந்திப்பதென்பது நான் குழந்தையாக இருந்தபோதிலிருந்தே பிடிக்காமல் போய்விட்டதால் ஒவ்வொரு முறையும் எப்படியாவது அந்தச் சந்தர்ப்பத்தைத் தவிர்த்துவிடுவேன். குழந்தைகளின் படிப்பு மேம்படுவதற்காக அவர்கள் சொல்கிற ஒவ்வொரு உத்தியையும் மீற வேண்டும் என்று தோன்றுவதுதான் அதற்கு முதல் காரணம். உதாரணத்திற்கு 'தினமும் இரவு 10 மணிவரை படிக்க வேண்டும், காலையில் நான்கு மணிக்கு எழுந்து படிப்பைத் தொடர வேண்டும்’ என்பன குழந்தைகளைப் படிக்க வைப்பதற்கான அவர்கள் சொல்லும் உத்தி.

''நான் படித்த காலத்தில் பள்ளிக் கூடத்தில் படித்ததோடு சரி,’’ என்று மனைவியிடம் சொல்வேன்.

''அதுதான் இப்படி இருக்கிறீர்கள்.’’ என்பாள் கேலியாக.

''வீட்டில் இத்தனை மணி நேரம் படிப்பதற்கு பள்ளிக்கூடம் எதற்காக?’’

''பசங்க நல்லா படிக்கறதுக்குத்தான்.’’

''கொஞ்சமாகப் படித்தால் போதும்.’’

''நல்லது என்றாலே பிடிக்காதே.’’

ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விஷயம் நல்லதாக இருக்கிறது. எனக்கு நல்லதாய் இருப்பது பெரும்பாலும் கெட்டதாய் இருக்கும் என்பது என் மனைவியின் எளிய சூத்திரம்.

இப்படியான எண்ண ஓட்டத்தோடு அப்புத்தகத்தைக் கையிலெடுத்தேன். புத்தகத் தலைப்பு 'சவீதா முத்துகிருஷ்ணன் சிந்தனைகள்’.

சவீதா மெட்ரிகுலேஷன் பள்ளியின் தாளாளர் முத்துகிருஷ்ணன் எழுதிய சிந்தனைத் துளிகள் என்பது புரிந்தது. குழந்தைகள் படிப்பைக் குறித்த உத்திகள் அதில் இருக்கும் என்று நம்பினேன். ஆனால் அப்படியில்லை.

உழைத்தால் உயர்வு கிட்டும், உண்மை பேசு, அன்பே சிறந்தது, கூடி வாழ்ந்தால் குடி உயரும், எளியவர்க்கு உதவினால் தர்மம் தலை காக்கும் என்ற ரீதியில் அவர் பக்கம் பக்கமாக எழுதித் தள்ளியிருந்தார். இது எதிர்பார்க்காத திருப்பம். என்னால் நம்பவே முடியவில்லை. மனித இனம் தோன்றிய காலம் தொட்டுச் சொல்லப்பட்டு வருகிற இத்தகைய அறிவுரைகளை ஒரு மனிதர் தம்முடைய சந்தனைகளாகச் சொல்லிக் கொள்வதும் அவற்றைப் புத்தகமாக வெளியிடுவதும் பெரிய அநீதியாக இருந்தது.

பள்ளி மாணவர்கள் 848 பேரும் அதை விலை கொடுத்து வாங்கியிருக்கிறார்கள். யாருமே இந்த அக்கிரமத்தைத் தட்டிக் கேட்கவில்லை என்பது மேலும் அதிர்ச்சியாக இருந்தது. ஒரே நாளில் 848 படிகள் விற்பதென்பது தமிழ் நூல் வெளியீட்டு வரலாற்றில் ஒரு மகத்தான சாதனை. சொல்லப் போனால் முதல் சாதனையாகவும் இருக்கும் என்று நினைத்தேன்.

ஒரு சிறுகதைத் தொகுதியை வெளியிட்டு விட்டு நூலக ஆணை கிடைக்கப் பெறாமல் அச்சடித்த ஆயிரம் படிகளையும் வீட்டின் இண்டு இடுக்குகளில் வைத்து. கரையானுக்குப் பாதி, அன்பளிப்பு மீதி என்று அவதிப்பட்டவனுக்குத்தான் சவீதா முத்துகிருஷ்ணன் என்ற எழுத்தாளனுக்குள் ஒளிந்திருக்கிற சாமர்த்தியம் தெரியும்.

''என்ன இது அநியாயம்?’’
"அவன் பண்ணினதும்தான் அநியாயம்.’’ என்று தொலைக்காட்சி சீரியலைப் பார்த்துக்கொண்டிருந்த என் மனைவி ஏதோ சொன்னாள். நான் மனதுக்குள் நினைத்தது வாய்வழி முணகலாகவே வெளிப்பட்டிருக்கிறது. தொலைக்காட்சியில் வேறு ஏதோ அநியாயம் நடந்து கொண்டிருக்கிறது போலும்.

''இந்தப் புத்தகத்தை ரமேஷ் வீட்டிலும் வாங்கினாங்களா?’’

''எந்தப் புத்தகம்?’’

''சவீதா முத்துகிருஷ்ணன் சிந்தனைகள்.’’

அப்போதுதான் ஞாபகம் வந்தவளாக என் கையில் இருந்த புத்தகத்தைக் கவனமாகப் பார்த்தாள்.

''எல்லோரும்தான் வாங்கியாகணும்.’’

“சட்டமா?’’

''உன்கிட்ட பேசி ஜெயிக்க முடியாது.’’

''ரமேஷ் அப்பா இந்தப் புத்தகத்தைப் படித்தாரா?’’

''அதெல்லாம் எனக்குத் தெரியாது.’’

ரமேஷ் வீடு எங்கள் வீட்டுக்கு இரண்டு வீடு தள்ளிதான். நானே அவ்வீட்டுக்குப் போய் அவனுடைய அப்பாவைப் பார்த்தேன். அவர் மேற்படி புத்தகத்தைத் தன் வீட்டிலிருந்த இரண்டே புத்தகங்களான விநாயகர் அகவல். திருப்பாவை ஆகியவற்றுக்கு அடுத்து வைத்திருந்தார். புத்தகத்தின் அளவு காரணமாக அப்படி வைத்திருக்கலாம்.

காலம் காலமாக முன்னோர்கள் சொல்லிக் கொண்டிருப்பதை ஒரு மனிதர் தன்னுடைய சிந்தனைகளாகப் புத்தகம் போட்டு. அதை வாங்கியே ஆக வேண்டும் என்று 25 ரூபாய் வேறு வாங்கிவிட்டதைச் சொன்னேன்.

''பரவாயில்லை விடுங்க, எவ்வளவோ செலவு பண்றோம். வீட்டில் புக்குன்னு ஒண்ணு இருக்கறது நல்லதுதானே?’’ என்றார்.

இரண்டே புத்தகங்கள் உள்ள தம் பூஜையறையில் மூன்றாவதாக ஒன்று சேர்ந்த மகிழ்ச்சி அவர் முகத்தில் தெந்தது.
அவருக்கும் மெகா சீரியல் கவலைதான். 'இவ்வளவுக்கும் காரணம் இந்த இன்ஸ்பெக்டர்தான்.’’ என்றார் தொலைக்காட்சிப் பெட்டியைக் காட்டி.

மக்களின் அறியாமை, அலட்சியம், கொடுமை கண்டு பொங்காத மனநிலை, மரத்தனம், அக்கறை இன்மை எல்லாமுமாகச் சேர்ந்து என்னுடைய ஆவேசத்தை அதிகப்படுத்தின. இதற்காக உச்சநீதி மன்றம் வரைகூடச் செல்லலாம் எனத் தீர்மானித்தபோது மணி இரவு 12ஐக் கடந்துவிட்டது.

காலையில் நான் பள்ளிக்கூடம் சென்று பள்ளித்தாளாளர் அறையை நோக்கி வேகமாக நடந்தேன். தாளாளரின் கார் பிரமாண்டமாக நின்றிருந்தது. சில வாரங்களுக்கு முன்பு அவர் வார இதழ் ஒன்றுக்கு அளித்த பேட்டி நினைவுக்கு வந்தது. வேலை ஏதும் கிடைக்காமல் தாம் பட்ட கஷ்டத்தையும். பிறகு பள்ளிக் கூடம் தொடங்க முடிவெடுத்து வாழ்க்கையில் முன்னேறியதையும் பற்றி கூறியிருந்தார். 'வாழ்க்கையில் வென்றவர்கள்’ என்ற தன்னம்பிக்கைத் தொடரில் அது வெளியாகியிருந்தது. இரவு ஏற்பட்ட ஆவேசம் சற்றும் குறையவில்லை எனக்கு. அவருடைய காரைப் பார்த்ததும் அது அதிகரித்தது என்றுதான் சொல்ல வேண்டும்.

நான் தாளாளர் அறை நோக்கி வேகமாகச் செல்வதைப் பார்த்த காவலாளி படு வேகமாக வந்து என்னைத் தடுத்தான்.

''யாரைப் பார்க்கணும்?’’

''கரஸ்பாண்டன்டை.’’

''அதெல்லாம் சாயங்காலம் நாலு மணிக்கு மேலதான். கிளம்புங்க.’’

''வழி விடுய்யா.’’

''யோவ் நில்லுய்யா.’’ என்றான் அதே மரியாதையுடன்.

கழுத்தைப் பிடித்து வெளியே தள்ளி விடுவானோ என்று தோன்றியது. அவமானப்படுத்திவிட்டால் பிறகு எல்லாமே ஏடாகூடமாகிவிடுமே!

சட்டென என் விசிட்டிங் கார்டை எடுத்து நீட்டினேன். இரவு நேரங்களில் வீடு திரும்பும்போது போலீஸ்காரன் சந்தேக கேஸ் என்று மடக்கினால் காட்டுவதற்காக அச்சடித்து வைத்திருந்த கார்டு. அதைப் பார்த்து அவன் உடனடியாக மரியாதை கொடுத் தான் என்று சொல்ல முடியாது. என் பெயருக்கு முன்னால் எழுத்தாளர் என்று போட்டிருந்தேன். ''இதைச் சொல்ல வேண்டியதுதானே? என்னமோ புர்ருனு போறீயே? இங்கயே நில்லு. கேட்டுட்டு வந்து சொல்றேன்.’’ என்றான்.

விசிட்டிங் கார்டுக்கு ஒரு மரியாதை இருந்தது. போன வேகத்தில் வந்து என்னைப் போகச் சொன்னான். காவலாளியிடம் அலட்சியத்தைக் காட்டிவிட்டு தாளாளர் அறைக்குள் நுழைந்தேன். அவரைத் தவிர அங்கு மூன்று பேர் இருந்தார்கள். இருவர் பணியாட்கள். அவருடைய மேற்பார்வையில் நூலின் வெளியீட்டு விழா படத்தைப் பெரிதாக பிரேம் போட்டு, அதைச் சுவரில் மாட்டும் வேலை நடந்து கொண்டிருந்தது.

''வாங்க எழுத்தாளர், இந்த போட்டோவை இங்கே மாட்டலாமா பாருங்கள்.’’ என்று அபிப்ராயம் கேட்டார் தாளாளர். முரட்டு உருவம். கட்டட மேஸ்திரி ஆறுமுகம் ஞாபகத்துக்கு வந்தார். விபூதியும் குங்குமமும் நெற்றி நிறைய ஆக்ரமித்திருந்தன. அவருக்கு எதிரில் வேறொருவர் உட்கார்ந்திருந்தார். ''இவர்தான் கவிஞர் கவிமுகிலன்.’’ என்று என்னை நோக்கிச் சொல்லிவிட்டு. ''இவர்...’’ என்றபடி என் விசிட்டிங் கார்டில் பெயரைத் தேடினார். கவிமுகிலன் அந்த போட்டோவில் புத்தகம் வெளியிட்டுக் கொண்டிருந்தார்.

''உங்க புத்தகத்தைப் பார்த்தேன்.’’

அவருடைய மேஜை அறையைத் திறந்து ஒரு படியை எனக்கு அன்பளிப்பாகத் தர எத்தனித்தவர். நான் இப்படிக் கூறியதும் மறுபடி உள்ளே வைத்து விட்டு. ''எப்படி இருந்தது. சொல்லுங்க.’’ என்று கேட்டுப் பெருமிதம் பொங்க பாராட்டுகளைப் பெறுவதற்காகக் காத்திருந்தார்.

அந்தச் சூழலை எதிர்கொள்ள முடியாமல் சிறிது தயங்கினேன்.

''உண்மை பேச வேண்டும் என்பதும் உழைத்து முன்னேற வேண்டும் என்பதும் எப்படி உங்களுடைய சிந்தனையாகும்?’’ என்றேன் ஒரு திடீர் உந்துதலில்.


அந்த அறையில் இருந்த நான்கு பேருமே அதிர்ச்சியுடன் திரும்பிப் பார்த்தனர். தாளாளர் இதை எதிர்பார்க்கவில்லை. போட்டோ மாட்டிக்கொண்டிருந்தவர்களுக்கு என்ன சைகை செய்தாரோ இருவரும் வெளியேறினர்.

''நீ மட்டும் என்ன பிரமாதமா எழுதிட்டே?’’ என ஒருமையில் கேட்டார்.

''நான் உங்களைவிட சிறப்பா எழுதுவேன் என்று நிரூபிப்பதற்காக வரவில்லை. எழுத்தாளர் என்ற முறையிலும் வரவில்லை. என் குழந்தையிடம் இந்தப் புத்தகத்தைக் கொடுத்து 25 ரூபாய் வாங்கியிருக்கிறீர்கள். அது எனக்கு உடன்பாடில்லை.’’

''இப்ப என்ன 25 ரூபாய் வேண்டுமா?’’ என்றபடி ஆவேசமாக பர்சைப் பிரித்து ஒரு நூறு ரூபாய்த் தாளை எடுத்து என் முன் வீசினார்.

''எனக்கு 25 ரூபாய் தந்தால் போதும்.’’ என்றேன்.

“பீஸ் கவுண்டல் போய் வாங்கிக்க.’’ என்றபடி இண்டர்காமில் தகவல் சொன்னார்.

''நீ போகலாம்... வயிற்றெச்சல் கிராக்கிங்க.’’

''எழுதுகிறவர்களுக்குள் சச்சரவு ஏற்படுவது சகஜம்தான்... கம்பனுக்கும் ஒட்டக்கூத்தனுக்கும் ஏற்படாத சச்சரவா?’’

கவிஞர் கார்முகில் சமாதானம் செய்து கொண்டிருந்தார்.


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com