Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Kavithacharan
Kavithaasaran Logo
ஆகஸ்டு 2007 - பிப்ரவரி 2008


கவிதைகளில் ஒரு கல்வெட்டு
கவிஞர் எழிலவன்

கவிதையென்பது ‘காசுக்கார’ ஏடுகளில் மலிவு விலை மதுவாக விற்பனையாகிக் கொண்டிருக்கிறது. சிற்றிதழ்கள் தங்கள் தரப்பு நியாயத்தை நிரூபிக்கக் கண்ணகியாய்ப் போராட வேண்டியுள்ளது. இப்போதெல்லாம் கவிதைகளைப் பெரும்பாலும் கவிஞர்கள் மட்டுமே வாசிக்கிறார்கள் என்று கவிஞர் பாலா கடிதமொன்றில் குறிப்பிட்டிருந்தார். இது மென்மேலும் மெய்யாகிக்கொண்டு வருகிறது. கேரளாவில் முன்பெல்லாம் நான்கு பேரில் ஒருவர் பிச்சைக்காரர். தற்போது படத் தயாரிப்பாளர் என்பர். இவ்வகையில் பார்த்தால் தமிழ்நாட்டில் நான்கு பேரில் ஒருவர் கவிஞராக இருக்கக்கூடும். இது மகிழ்வுக்குரியதே! விசனமும் விதிவிலக்கல்ல!

'குளத்திற்கும்’ 'நடவுக்கும்’ மாற்றுக்கும் கடல்(லூர்) மாவட்டக் கவிஞர்கள் கணிசமாகவே கடன்பட்டிருக்கிறார்கள். (எழிலவன் உட்பட) வட்டி கட்டி மாளாது. அதற்காகக் கடனைத் தள்ளுபடி செய்துவிடவும் இயலாது. கவிஞர் பட்டி சு. செங்குட்டுவனின் 'இனிக்கும் பொழுதுகள்’ ஒரு நினைவு வேள்வியை நிகழ்த்த மேற்கொண்ட நெடும்பயணத்தின் இளைப்பாறல் எல்லை எனலாம். திராவிட இயக்கத்தின் தேவைகள் இன்றும் என்றும் தொடரவேண்டியவை என்னும் பிரகடனத்தை முன்னிறுத்தி. மூண்டெழுந்த கவிக்கனலின் பிரவாகமாய், தானறிந்த தனிமனித மற்றும் அரசியல் தலைவர்கள் வாழ்வியலின் இராகமாய் வனையப்பட்டவை இந்தக் கவிதைகள். இதுவேயன்றி இன,மொழி உணர்வுகளின் மேலீடும். கட்டிப் போடாமலே குட்டிபோடும்
காதல் சங்கதிகளும் இந்தப் பொழுதுகளின் கிளைகளில் பூத்துச் சொரிவதையும் பார்த்து மகிழலாம். படித்துப் பயன்பெறலாம். மரபில், புதுமையில் மற்றும் அர்த்த நாரீச அமைப்பில் இக்கவிதைகளின் கட்டுமானம் அமைந்துள்ளமை கவனிக்கத்தக்க ஒன்று.

விருப்பு வெறுப்பு இல்லாதவன் முனிவனாக இருக்கலாம். கவிஞனாக இருக்கமுடியாது. (முனிவர்களே கூட அவ்வாறு இல்லை என்பது வேறு விஷயம்.) ஒரு குணத்தின் அல்லது செயலின் நியாயங்களை அதன் பின்புலத்திலுள்ள காரணங்களே தீர்மானிக்கும் அளவுகோலாகத் திகழ்கின்றன. கவிஞர் பட்டி சு. செங்குட்டுவன் விரும்பப்படும் கவிஞர். அவர் கவிதைகளில் அவருக்கு விருப்பமான ஆளுமைகள் வீதியுலா வருகின்றன. களங்கள் வெவ்வேறு! காட்சி ஒன்றுதான்! தான் உருவாவதற்கும் தான் சார்ந்த இயக்கம் உருவாவதற்கும் நானாவகையிலும் பாடுபட்டு, சுமைகளால் சுருண்டு போகாமல் இயங்கிய பெருமக்களின், ஆர்வலர்களின் மற்றும் ஆசிரியர்ளின் பல்வேறு முகங்களின் ஒரு முகப்பட்ட உன்னதத்தைப் பாராட்டும் வகையில் ஒரு கவிதைத் தொகுதியையே உயில் எழுதிவைத்திருக்கிறார் சு.செ. அதற்காக அவரைப் பாராட்ட வேண்டும்.

அய்ம்பத்திரண்டு (மூன்று?) கவிதைகளின் கங்காருவான இனிக்கும் பொழுதுகளைப் புலனாய்வு செய்கையில் பின்வரும் விவரங்கள் முன்வரும். அரசியல் தலைவர்களைக் கணிசமாய்ப் பாடியும், சிலரைச் சாடியும், மனநிலைகளையும் மனித நிலைகளையும் விவரித்தும், காதலுக்குக் கட்டியங்கூறியும் விடைகொடுத்தும்; குழந்தைகள் மற்றும் முதியோர் சார்பாக. அனுசரணையான அன்பை முணுமுணுத்தும், தீமைகள் எழும் திசை நோக்கிக் கல்லெறிந்தும், சூழல்களைக் கண்டறிய சுற்றுலா போட்டும் எனப் பல்வேறு அனுபவங்களைக் காட்சிப்படுத்துகின்ற இக்கவிதைகள் கவிஞன் ஒரு காலக்கண்ணாடி என்பதற்கு அய்.எஸ்.அய் அத்தாட்சியாக அமைந்துள்ளன. (கொஞ்சம் நாள்பட்டது என்பது சிறு குறை)

தலைவர்களைப் பாராதே! தத்துவங்களைப் பார்! என்று சொல்வதுண்டு. சு.செ. இந்தக் கோட்பாட்டின் மீது நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவந்து வெளிநடப்புச் செய்கிற தன்மையினைப் புந்து கொள்ள முடிகின்றது. தத்துவங்களைப் பார்க்கிற தருணத்தில் தலைவர்களையும் அவர் தக்கவாறு பார்க்கிறார். இரண்டுமே ஒரு நாணயத்தின் பக்கங்களெனக் கொண்டதால் பாடியும் சாடியும் பசுமைத் தமிழில் விளையாடியும் 'காயம்படாமல் கத்திச்சண்டை போடுகிற’ கண்ணதாசனின் கை பாகம் இவருக்கும் கைகொடுத்திருக்கக்கூடும்.

அன்பு நாளுக்கு நாள் எலும்புருக்கி நோய் கண்டு இளைத்து வருகிறது. குடும்ப உறவுகள் சமூகக் கட்டுப்பாடுகள் ஆகியவற்றின் கடையாணிகள் கழன்று கொண்டிருக்கின்றன. கவிஞர். சு.செ. சுருக்கெனச் சுட்டிக் காட்டுகிறார். ''ஏதமில் அன்பு எங்கே போனது? எந்தச் சூறையில் மனிதம் அழிந்தது?’’ அன்பை அழிக்க சூறையும் சுனாமியும் சுண்டைக் காய்கள்தாம்! மனிதன் என்கிற 'மகத்தான சக்திஃ’போதாதா என்ன?

சீனப்பழமொழி ஒன்று செப்பும்: '”உனது சந்ததிகளுக்கு இரண்டு உருப்படியான விஷயங்களைக் கற்றுக்கொடு. ஒன்று விவசாயம். இன்னொன்று இலக்கியம்’’. இந்தியாவில் இரண்டையும் உருப்படியில்லாமல் செய்து வரும் புண்ணியவான்கள் இல்லாமல் இல்லை. ஏர் உழவனுக்கும் சொல்லேர் உழவனுக்கும் இணைப்புப் பாலம் ஒன்று இருந்து கொண்டிருக்கிறது என்பதையே மேற்படி மூதுரையும் உணர்த்துகிறது. ஒரு விவசாயக் குடும்பத்திலிருந்து துளிர்த்து வந்து எழுதுகோல் ஏந்திய ஒருவர் மட்டும்தான் எழுதுவதற்குக் காரணமாக இப்படிக் கூறமுடியும்:-

''வறண்டாலும் பெய்து அழித்தாலும்
விட்டுவிட முடியாத விவசாயத்தைப் போல”
நூற்றுக்கு நூறு ஒப்பனையின்றிப் பேசும் உண்மையின் குரல் இது. மனதை ஏர் இல்லாமலேயே உழுது போடுகிற மந்திர வெளிப்பாடு!

இன்னொரு கவிதை இப்படி வினவுகிறது. இனிப்பான பொய் என்றால் வாங்கலாமா? என்னைக் கேட்டால் வாங்கலாம் என்பேன்! அது கவிதையாக இருக்கும் பட்சத்தில்! கவிதை கசப்பான உண்மைகளையும் கடை விரிக்கும். அதே நேரத்தில் அது வள்ளலார் கடை அல்ல வாங்குவாரில்லாவிட்டால் கட்டிவிடுவதற்குõ
''கத்தச் சொன்னது ஆர்வம்...’’
கவிதை சொன்னது காதல்...õ என்கிறார்.

காதலி கை கழுவிவிட்டுப் போய்விட்டாலும் காதல் மட்டும் கவிஞனுக்கே பொட்டு கட்டிக்கொண்டு கடைசிவரை காலம் தள்ளும். ஒன்றுமட்டும் நிச்சயம் காதலைப்போல் நல்லதும் இல்லை. அதனைப் போல் கெட்டதும் இல்லை.
அரசியல் என்பது அன்றைய நாட்களில் இலட்சியங்களில் வேரோடியிருந்தது. இப்போதோ ஆழமான சுயநலத்தின் ஆணிவேராக அசுர வளர்ச்சி பெற்றிருக்கிறது. இதனை தலைவர்களை நெஞ்சில் சுமந்த அரசியல் இன்று சட்டைப் பைகளில் படங்களைச் சுமக்கும் பாவலாவாய்ப் பமாணம் பெற்றுவிட்டதாகக் கவிஞர் சுட்டிக் காட்டுகிறார்.

''மழலைகட்கு அந்த மனிதர் சோறூட்டிய போது
திருவோடு ஏந்திவிட்டதாகத் திட்டித் தீர்த்தீர்கள்’’
என்னும் அரசியல் திறனாய்வு அட்சரங்களில் பட்டி சு. செங்குட்டுவன் என்னும் கவிஞர் பேசவில்லை. அவரது மனசாட்சி பேசுகிறது. மனிதாபிமானம் கண்டனக் கணைகளை வீசுகிறது. அரசியலுக்குள் அரசியல் இருக்கலாம். ஆனால் ஒரு கவிஞனுக்குள்ளே மனிதன் மட்டும்தான் இருக்கவேண்டும்.

சொல்லாற்றல் கவிதையின் தனித்துவத்தை நிச்சயப்படுத்தும். அது இந்தத் தொகுதியில் சில கவிதைகளின் தலைப்புகளில் (உம். மடல் எந்த சாம்பலின் மிச்சம். கானம் பாடிய கைவிரல்கள்) சோடியம் வெளிச்சமாய் சுகமாக விழுகிறது. அனல்நதி, வாழ்வெழுத்தின் வகைகள், வாக்குவரம், அசிவெட்டினாய், புரிநூல்கள் போன்ற கூட்டு வார்த்தைகளில் அது கூட்டணி வைத்துக்கொண்டு குதூகலப்படுத்துகிறது. ஒரு மெலிதான ஒலி நயம் தழுவலாகவும் நழுவலாகவும் கவிதைகள் வழி ஊடுருவலாக வருவதை உணர்ந்து கொள்ளலாம். அதே போழ்து பேருந்துகள். சரக்குந்துகள் என்று தடம் பதித்துள்ள எழுதுகோல் பாக்கெட்டுகள், பிக்னிக் கேப்சூல்கள், ஸ்டேஷன் காமிரா மைக், பேங்க் ஆபிசர் என்றெல்லாம் வெள்ளைக்கார மழை பொழிந்துள்ளமை விசனப்படுதற்குரியது. தவிர்த்து விடுங்கள் சு.செ. தமிழைக் கவிதையால் தரப்படுத்துங்கள்.
நீங்கள் எழுதியதைச் சற்றே நினைவு கொள்ளுங்கள். (பாராண்ட தமிழாண்டால் நமக்கெல்லாம் மகிழ்ச்சி. பக்.46 வ.8) தமிழ் பாராளவேண்டுமென்றால் நல்ல தமிழை நாம் (நாமாவது) ஆளவேண்டும்! அந்தத் திசையில் இப்போது பயணப்பட்டிருக்கிறோம். சரி தானே?

அவரவர்கள் கவிதை (மட்டுமே) எழுதிக் கொண்டிருக்கிற சூழலில் கவிஞர்களையும் சேர்த்தே எழுதிக் கொண்டிருப்பவர் பட்டி சு. செங்குட்டுவன். கவிதை எழுதுவதை ஏகலைவனாகக் கூட கற்றுக்கொள்ளலாம். கதகதப்பான நட்புணர்வினையும் கூட்டு மனப்பான்மையினையும் இவரிடம்தான் கற்றுக் கொள்ளவேண்டும். இத்தகைய மனப்போக்கே 'இனிக்கும் பொழுதுகள்’ போன்ற ஒரு நூலுக்கு ஊசியாகவும் நூலாகவும் இருந்து உள்ளத்தைத் தைக்கிறது. சிறுமைகண்டபோது சினம் கொண்டு எழுதவும் செயல்படவும் தூண்டுகிறது. அடுத்து மேலும் ஒரு நல்ல தொகுதிக்கு அச்சாரம் கொடுக்கிறது.

இயக்க வரலாற்றுத் தகவல்களை/தலைவர்களைக் கவிதையில் பதிவு செய்ய முனைகையில் சார்ந்த நிகழ்வுகள் மற்றும் பெருமக்கள் பற்றிய விவரக் குறிப்புகளைப் பின்னணிப்பில் கொடுத்திருந்தால் அது இடம், காலம் என்கிற எல்லைகளைத் தாண்டி இதரர்களாலும் தெரிந்து கொள்ளவும் அதன் காரணமாகவே கவிதை சார்ந்த புதல் கனம்பெறவும் வழிவகுக்கும்.

மரபு இக்கவிஞருடன் மகிழ்வோடு கைகுலுக்குகிறது. ஆனால் புதுக்கவிதையோ வெறியோடு கட்டியணைத்து காயம் யாவினும் கைகொடுக்கிறது. எனவே முன்னதை விட பின்னதில் முழுக்கவனம் செலுத்தினால் இன்னும் சிறப்பாக வரும் என்பது எனது எண்ணம். மரபில் கவிஞன் திறந்த புத்தகமாக மாறியாக வேண்டும். பூடகங்களின் ஊடகமான புதுக்கவிதையிலோ அவன் புன்னகை மட்டும் (மோனலிசா போல்) புரிந்தால் போதும். எனவே நிறைய புன்னகை புரியுங்கள் சு.செ!


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com