Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Kathaisolli
Kathisolli Logo
மே - ஆகஸ்ட் 2006
கதையாடல்களில் கட்டபொம்மன் வரலாறு
- பேராசிரியர். வே.மாணிக்கம் நேர்காணல்

கேள்வி : பொதுவாக ஒரு வரலாற்றை ஆவணங்கள், பட்டயங்கள், அகழ்வாய்வுப் பொருட்கள், கல்வெட்டுக்கள் இவற்றை ஆதாரங்களாகக் கொண்டே எழுதுவது வழக்கம். கதைப் பாடல்களை ஆதாரமாகக் கொண்டு வரலாற்றை எழுத இயலுமா?

பதில் : வரலாற்றை எழுதுவதில் இரண்டு நிலைகள் உள்ளன. 1) தகவல் அல்லது தகவலாளி 2) அவற்றைச் சேகரித்து எழுதும் வரலாற்று ஆய்வாளன். தகவல் அல்லது ஆவணங்கள் எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம். அந்தத் தகவல்களைச் சான்றாதாரங்களாகக் கொண்டு வரலாற்றை மீட்டுருவாக்கம் செய்யும் வரலாற்றாசிரியர் பணியே முதன்மையானது. நிகழ்ச்சிகளின் மேலே கதைப்பாடகன் பூசி உள்ள இனிப்புப் பூச்சை நீக்கி, உள்ளுறையாகத் திரிந்து மறைந்து கிடக்கும் வரலாற்று உண்மைகளை மூழ்கி எடுக்க வேண்டும்.
கதைபாடல்களில் வரலாற்று உண்மைகள் கல்லுக்குள் தேரை போன்றும், மூங்கில் பட்டையில் ஒட்டியிருக்கும் மெல்லிய சருகு போன்றும் அழுந்திக் கிடக்கும். வரலாற்றுக் கதைப்பாடல்களிலும் உயர்ந்த வரலாற்றுச் செய்திகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.


கேள்வி : ஆவணங்களை ஆதாரமாகக் கொண்டு எழுதப்படும் வரலாற்றிற்கும், வாய்மொழி வழக்காறாகிய கதைப்பாடல்களையும் இணைத்து எழுதப்படும் வரலாற்று நூல்களுக்கும் வேறுபாடுகள் இருக்கின்றனவா?

பதில் : ஆம், வரலாற்று ஆசிரியர்கள் அரசு ஆவணங்களை ஆதாரமாகக் கொண்டு எழுதிய வரலாறுகள் ஆள்வோரின் கட்டுப்பாட்டில் உள்ளது. ஆனால் வாய்மொழி வரலாறுகள் இந்தக் கட்டுப்பாட்டை மீறி மக்கள் உள்ளத்தில் படிந்திருந்த உண்மையான செய்திகளை - உணர்வுகளைப் பதிவு செய்துள்ளன. ஒரு வரலாற்று நிகழ்ச்சியை மக்கள் எவ்வாறு நியாயமான உணர்வோடு அணுகி இருக்கிறார்கள் என்பதை வரலாற்றுக் கதைப்பாடல்கள் தான் உணர்த்துகின்றன. எனவே வாய்மொழி வழக்காறுகளையும் வரலாற்றுச் சான்றுகளாகக் கொண்டால் தான் சரியான-முழுமையான வரலாற்றை எழுத இயலும்.

கேள்வி .. கட்டபொம்மன் வரலாற்றை எழுதிய நூலாசிரியர்கள் கட்டபொம்மன் வரலாற்றுக் கதைப்பாடல்களைச் சான்றாதாரங்களாகப் பயன்படுத்தியுள்ளார்களா ?

பதில் : தென்னாட்டுப் பாளையங்காரர்களின் வரலாற்றை எழுதிய கிரான், கால்டுவெல், குருகுகதாசப்பிள்ளை, கணபதியாப்பிள்ளை, தேவதாஸ்நாயுடு, தி.ந.சுப்பிரமணியம் போன்றவர்கள் கதைப்பாடல்களைச் சான்றாதாரங்களாகக் கொள்ளவில்லை. பாடலுக்கு எதிராகக் கருத்துக் கூறியுள்ளனர். கதைப் பாடகன் தன்னுடைய புரவலனது புகழைச் சிறப்பித்துப் பாடியுள்ளான். இவை பொருளற்ற அற்புதச் செயல்களையும், மனிதர்களால் செயல்படுத்த முடியாத அருஞ்செயல்களையும் கூறுகின்றன. இவற்றில் தவறான செய்திகளும் மிகைப்படுத்தபப்பட்ட நிகழ்ச்சிகளும் உள்ளன. இவ்வாறு பாடுவதற்குப் பாடப்படுவரிடமிருந்து பாடகன் மிகுதியாகப் பொருளைப் பெற்றான். எனவே, தன்னுடைய தலைவனை மகிழ்விப்பதற்காக இவ்வாறு புகழ்ந்து பாடினான் என்று கட்டபொம்மன் கதைப்பாடல்களைப் பற்றி அடிகளார் கிரான் எழுதியுள்ளார்.

இந்தக் கருத்தையே கால்டுவெல் முதல் தமிழ்வாணன் வரை எதிரொலிக்கின்றனர். இதிலும், தமிழ்வாணன் ஒரு படி மேலே சென்று கட்டபொம்மனின் கத்தி முனைக்குப் பயந்து உளறிக் கொட்டப்பட்டவை இந்தப் பாடல்கள் என்கிறார். இதில் வேடிக்கை என்னவென்றால் கட்டபொம்மன் கதைப்பாடல்கள் அனைத்துமே கட்டபொம்மனும் அவருடைய தம்பி ஊமைத்துரையும் ஆங்கிலேயரோடு போராடித் தூக்கிலிடப்பட்ட அவல முடிவைப் பாடுகின்றன. கட்டபொம்மனின் கத்திக்குப் பயந்து பாடும் பாடகன் அவர் உயிரோடு இருக்கும் போது இறந்ததாகப் பாட முடியுமா? அடிகளார் கிரான் சொல்வதைப் போல மிகுதியாகப் பொருளை வாங்கிக் கொண்டு இப்படிப் பாட முடியுமா? வரலாற்றுக் கதைப்பாடல்கள் வெள்ளையரை எதிர்த்த வீரர்களின் வரலாற்றை நியாயமான உணர்வுகளோடு அணுகி உள்ளன. ஆங்கில அரசுக்குச் சார்பாக எழுதியுள்ள கிரான், கால்டுவெல், குருகுகதாசப்பிள்ளை போன்றோர் கதைப்பாடல்களைக் குறை கூறி ஒதுக்கியதில் வியப்பு இருக்க முடியாது.

கேள்வி : கால்டுவெல், குருகுகதாசபிள்ளை போன்றோர் ஆங்கில அரசிற்கு ஆதரவாக வரலாற்றை எழுதியுள்ளதாக நீங்கள் சொல்வதை விளக்குங்களேன்?

பதில் : ஆம். கடந்த இரண்டு நூற்றாண்டுகளாக இந்தியவரலாறு பெரும்பாலும் இந்தியாவில் வாழ்ந்த வெளிநாட்டவராலும், ஆங்கிலக் கல்வி கற்று ஆங்கில அரசுக்கு விசுவாசமாக விளங்கிய இந்தியர்களாலும் எழுதப்பட்டன. மொழியியல் துறையில் கால்டுவெல்லின் பணியை நாம் மதிக்கிறோம். ஆனால் வரலாற்றை எழுதும் போது கால்டுவெல் வெள்ளைக்காரராகவே இருக்கிறார். அவருடைய திருநெல்வேலி வரலாற்றில் புலித்தேவரையும், கட்டபொம்மனையும் முறையற்ற ஆட்சிக்கும், ராஜவிசுவாசமின்மைக்கும் முதன்மையானவர்களாக விளங்கினார்கள் என்று குறிப்பிட்டுள்ளார். இந்த அணுகுமுறையையே குருகுகதாசப்பிள்ளையும் பின்பற்றுகிறார். பாஞ்சாலங்குறிச்சியை மேஜர் பானர்மேன் 1799 செப்டம்பர் 5-இல் முற்றுகையிட்ட போது நிபந்தனையின்றிக் கட்டபொம்மன் சரணடைய வேண்டும் என்று தூது அனுப்பினார்.

கட்டபொம்மன் அதை ஏற்க மறுத்துப் போரிட்டார். இதனைக் குருகுகதாசப்பிள்ளை, பானர்மேனின் வேண்டுகோள் விணாயிற்று. விநாசகாலே விபரீதபுத்தி என்ற பழவுரைக்கு ஏற்ப கெட்ட வழியில் மன நிலையை நாட்டிக் கொண்டிருந்த கட்டபொம்மு நாயக்கர் தனது பிடிவாத சுபாவத்திலிருந்து குணமடையவில்லை என்கிறார். கலெக்டர் ஆஸைச் சுட்டுக் கொன்ற வாஞ்சிநாதனைப் பாதகன் என்று சபிக்கிறார். வ.உ.சி. கைது செய்யப்பட்ட போது போராட்டத்தில் ஈடுபட்டவர்மீது திருநெல்வேலியில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டை இவர் நியாயப்படுத்தியே எழுதியுள்ளார். தன்னுடைய நூலின் முடிவில் நீதியே உருவெடுத்து வந்துள்ள ஆங்கில அரசு நம் நாட்டில் ஓங்கித் தளிர்த்து நீடுழிக் காலம் நிற்குமாறு பிரார்த்திருக்கிறோம் என்று எழுதியிருக்கிறார்.

கேள்வி: கட்டபொம்மன் கதைப்பாடல்களை வரலாற்றுச் சான்றுகளாகக் கொள்ளக் கூடாது என்ற கோட்பாட்டை உடையவர்களுக்குக் கதைப்பாடல்களின் வரலாற்று உண்மைத் தன்மையை நீங்கள் எவ்வாறு நிலை நாட்டுவீர்கள் ?

பதில் : கதைப் பாடல்களாகிய வாய்மொழி வழக்காறுகளில் இருநிலைகள் உள்ளன. ஒன்று அவை கூறும் செய்திகளை வரலாற்று ஆவணங்களோடும் வரலாற்று எச்சங்களோடும் ஒப்பிட்டு உண்மைத் தன்மையை எடுத்துக் காட்டுவதற்கான தன்மை உள்ளவை. இரண்டாவது அவ்வாறு ஒப்பிட்டுப் பார்க்க முடியாதவை. கட்டபொம்மன் கதைப்பாடல்களில் உள்ள பல வரலாற்றுச் செய்திகளை ஒப்பிட்டு உணர்த்த முடியும்.

கேள்வி : ஏதேனும் ஒரு நிகழ்ச்சியை ஒப்பிட்டு விளக்கிச் சொல்லுங்களேன்.!

பதில்: பாஞ்சாலங்குறிச்சிப் போரில் நேரடியாகப் பங்கு பெற்றவர் கர்னல் ஜேம்ஸ் வெல்ஸ். இவர் இராணுவத்திலிருந்து ஒய்வு பெற்ற பின்னர் தன்னுடைய போர் அனுபவங்களை ஸ்காட்லாந்திலிருந்து வெளிவந்த பத்திரிக்கையில் எழுதினார். அந்தத் தொடர் 1830இல் இராணுவ நினைவுகள் என்ற தலைப்பில் இரு தொகுதிகளாக லண்டனில் வெளியானது. இந்த அரிய நூல் இன்னும் மறுபதிப்புச் செய்யப்படவில்லை. இந்த நூலில் அவர் பாஞ்சாலங்குறிச்சிப் போரைப் பற்றி எழுதியுள்ள செய்திகள் அனைத்தையும் கதைப் பாடலும் குறிப்பிடுகிறது.

முதல் நாள் நடந்த போர் முடிவைப் பற்றி கர்னல் வெல்ஸ் குறிப்பிடும் போது, ஏப்ரல் முதல் நாள் துயரத்துடன் உதயமானது. கோட்டையின் அருகே எங்களுடைய ஆர்வம் நிறை நண்பர்கள் பலர் புதைக்கப்படாமல் பிணமாகக் கிடந்தனர். இதைத் தொடர்ந்து கோட்டைக்குச் சமாதானக் கொடி அனுப்பி இறந்தவர்களை அடக்கம் செய்ய அனுமதி கேட்டோம். இதனை இரக்கத்துடனும் நிபந்தனை இன்றியும் ஏற்றுக் கொண்டனர். குருதி வெள்ளத்தில் உருக்குலைந்து கிடந்த பிணங்களை எடுத்து வந்து மாலை நேரத்தில் இராணுவ மரியாதையோடு அடக்கம் செய்தோம். மனிதத் தன்மைக்கே உயர்ந்த இலக்கணமாகத் திகழ்ந்த எதிரிகள் எங்களுக்குச் சிறு இன்னலும் விளைவிக்கவில்லை. அன்றைய இரவை நாங்கள் நிம்மதியாகக் கழித்தோம் என்கிறார். இதே செய்தியைக் கதைப்பாடல்,

தப்பாமல் சண்டை முனையில் செண்ணபேரைத்?
தானடக்கம் செய்ய வேணும் என்றார்
கும்பினாயர்களும் கம்பளத்தார்களும்
கூவென்று வெள்ளைகள் வீசிக்கொண்டு
நம்புதலாகவே பேசிக் கொண்டார் ஒரு
நாழிகைக்கு மனராசி யென்றார்
அவரவர் பிணம் அவரவர் தானே
அன்புடன் வாரிச் சுமந்தனராம்
என்று பாடுகின்றது. இதைப்போல எண்ணற்றச் சான்றுகளைக் கூறலாம்.

கேள்வி ... இவ்வாறு ஒப்பிட்டுப் பார்க்கும் போது வரலாற்று நூலாசிரியர்கள் குறிப்பிடாத புதிய வரலாற்றுச் செய்திகள் கதைப்பாடல்களில் உள்ளனவா?

பதில் : ஆம். ஒப்பிட்டுப் பார்க்கும்போது வரலாற்று ஆசிரியர்கள் குறிப்பிடாத புதிய செய்திகளைக் கதைபாடல் கூறுவதைப் பிரித்து அறிய முடிகிறது. இந்தச் செய்திகள் பாடகனுக்கு மட்டுமே கிடைப்பதற்குரிய வாய்ப்பு யாது? அவற்றை வரலாற்று ஆசிரியர்கள் ஏன் பதிவு செய்யவில்லை? என்று ஆய்வதன் மூலம் கதைப்பாடல்கள் கூறும் புதிய வரலாற்றுச் செய்திகளின் உண்மைத் தன்மையை நிறுவ முடியும். இந்தக் கதையைப் பாடிய பாடகர்களுள் பலர் கட்டபொம்மன் காலத்தில் வாழ்ந்தவர்கள். வாழ்ந்தவர்களோடு தொடர்புடையவர்கள். தலைமுறை தலைமுறையாகக் கேட்டுப் பாடிவந்தவர்கள். எனவேதான் ஆவணங்களில் குறிப்பிடப்படாத மறுபக்கச் செய்திகள், அதாவது ஒரு நிகழ்ச்சி கட்டபொம்மனின் மனதை எவ்வாறு பாதித்தது. அதன் மூலம் எத்தகைய முடிவை யாருடன் கலந்து பேசி எடுத்தார் என்பன போன்ற செய்திகள் கதைப்பாடல்களில் தான் உள்ளன.

கட்டபொம்மன் இராமநாதபுரம் பேட்டிக்காக கலெக்டர் ஜாக்சனை ஏன் ஊர் ஊராகப் பின் தொடர்ந்தார்? முதல் நாள் போரில் வெற்றி பெற்ற போதும் தாக்குதலைத் தொடராமல் கோட்டையை விட்டு ஏன் வெளியேறினார்? எவ்வாறு வெளியேறினார்? பாளையங்கோட்டைச் சிறையை விட்டு ஏன் வெளியேறினார்? எவ்வாறு வெளியேறினார்? பாளையங்கோட்டைச் சிறையைத் தகர்த்து ஊமைத்துரையை எவ்வாறு மீட்டனர் என்பன போன்ற நிகழ்ச்சிகளுக்குக் கதைப்பாடல்களே விளக்கம் கூறுகின்றன. கதைப்பாடல்கள் வரலாற்று நிகழ்ச்சியைப் பாடுவதோடு வரலாற்று நாயகர்களின் மனநிலையையும் புறச் சூழலையும் பதிவு செய்கின்றன. ஒரு வரலாற்று நாயகனின் மன உணர்வுகள் பெரும் பங்கு வகிப்பதைக் கதைப்பாடல்கள் நுட்பமாகச் சுட்டுகின்றன. அன்றைய அரசியல் தொடர்பான கட்டபொம்மனின் வீரமனப்பான்மையையும் மானம்காக்கும் உணர்வையும் பாடல்கள் சிறப்பாகப் பதிவு செய்துள்ளன.

கேள்வி : கட்டபொம்மனின் மன உணர்வுகளைக் கதைப்பாடல்கள் பதிவு செய்துள்ளதாகக் குறிப்பிட்டீர்கள். அதனை விளக்கமாகச் சொல்லுங்களேன்.

கட்டபொம்மன் தன்னை வந்து சந்திக்க வேண்டுமென்று கலெக்டர் ஜாக்சன் 1798 பிப்ரவரி, ஏப்ரல் 28, மே 23, ஆகிய தேதிகளில் கடிதங்கள் எழுதியும் அவர் சந்திக்கவில்லை. ஆகஸ்டு 18இல் நிருவாகக்’குழுவின் வழிகாட்டுதலோடு எழுதப்பட்ட கடிதத்தை ஏற்று செப்டம்பர் 5இல் சந்திக்கப் புறப்பட்டார். கலெக்டர் குற்றாலத்திலிருப்பதை அறிந்து அங்குச் சென்றார். கலெக்டர் சந்திக்க மறுத்து அவரை ஊர் ஊராக அலைக்கழித்து இறுதியில் இராமநாதபுரம் வந்து சேர்ந்தார். கட்டபொம்மன் ஏன்? என்ன மன உணர்வோடு? எத்தகைய முடிவோடு பின் தொடர்ந்தார் என்பதைக் கதைப்பாடல்கள்தான் விளக்குகின்றன. இராமநாதபுரத்தில் கட்டபொம்மனைச் சந்தித்த கோபாலய்யர்,

பெரிய வகுத்துப் பிள்ளையல்லோ
பேர்பெத்த பாண்டியன் பொம்முதுரை
இந்தத் துக்காணி சாகுசன் சென்னலைக்
காணவும் இத்தனை தூரம் நடக்கணுமோ?
என்று கேட்டோர். அதற்குக் கட்டபொம்மன்,
பேட்டி காணாமல் திரும்பினால்,

சாஞ்ச வந்தான் என்று எட்டய புரத்தானும்
சற்றுங் கெணியாமல் சொல்வானே
இத்தனை தூரங்கள் வந்திட்டுப் போனாக்கால்
மெத்த இளப்பங்கள் ஆகும் என்று
சற்றும் தருக்காமல் கட்டபொம்மன் உயிர்
வைத்திரேன் வைத்திரேன் என்று உரைத்தார்
ஊமைத்துரையும்,

பனைமரத்தில் ஏறலாமோ ஏறிப்
பாளை தொடாமல் இறங்கலாமோ
சந்திப்புத் தந்தாக்கால் பேட்டி செய்வோம் அல்லால்
சற்றே ஒருகை பார்ப்போம் என்று கூறுகின்றார்.

கட்டபொம்மன் இதனை மானப் பிரச்சனையாகக் கருதி வீரத்துடன் எதிர் நோக்கினார் என்றே கதைப்பாடல்கள் கூறுகின்றன. இராமநாதபுரம் பேட்டி மோதலிலேயே முடிந்தது என்பதையும் பார்க்க வேண்டும். கட்டபொம்மன் கவர்னருக்கு எழுதிய கடிதத்தில் அஞ்சாமல் பின் தொடர்ந்தேன் என்றே குறிப்பிட்டுள்ளார்.

கேள்வி ... கட்டபொம்மன் வரலாற்றை இந்த அளவிற்கு மக்கள் ஆர்வமுடன் பாடுவதற்குரிய காரணம் என்ன? எப்போதிருந்து பாடியிருக்கலாம்?

பதில் : கட்டபொம்மனும் அவருடைய சகோதரர் ஊமைத்துரையும் ஆங்கில அரசை எதிர்த்த அரசியல் வாழ்வில் தாங்கள் எதிர் கொண்ட சிக்கல்களில் எல்லாம், சமுதாயம் மதிக்கும் வீரப்பண்பை வெளிப் படுத்தினார்கள். இராமநாதபுரம் பேட்டி, முதலாவது போர், கயத்தாறு விசாரணை, பாளைச் சிறை தாக்குதல், இரண்டாவது போர் என எல்லா நிகழ்ச்சிகளும் அவர்களுடைய தன்மான உணர்வையும், விடுதலை உணர்வையும் வீரப்பண்பையும் வெளிப்படுத்தின. இந்தப் பண்புகளை மக்கள் போற்றினர். மேலும் 39 வயது நிரம்பிய அந்த இரு இளைஞர்களுக்கும் ஏற்பட்ட கொடிய அவல முடிவு மக்கள் உள்ளத்தில் பெரும்பாதிப்பை ஏற்படுத்தியது. எனவே அவர்களுடைய வரலாறு மக்களால் மக்கள் முன் பாடப்பட்டது. இது கட்டபொம்மன் இறந்த சில ஆண்டுகளிலிருந்து தொடர்ந்து பாடப்பட்டு வந்திருக்கலாம். ஆனால் இதனை யார் பாடியாது. யாரிடமிருந்து கேட்டுப் பாடப்பட்டது போன்ற விவரங்களை முழுமையாக அறிய இயலவில்லை.

கேள்வி... கட்டபொம்மன் வரலாறு பாடப்பட்டு வந்ததற்கான எழுத்து பூர்வமான பதிவு எந்த ஆண்டிலிருந்து கிடைக்கின்றது. இன்றும் பாடப் படுகின்றதா?

பதில் : எழுத்து பூர்வமான ஆதாரங்கள் 1873இல் கிரான் எழுதிய பாஞ்சாலங்குறிச்சிப் பாளைக்காரர் என்ற நூலிலும் 1882இல் இராபட் சுவாலால் தொகுக்கப்பட்ட தொல் பொருள் அறிக்கையிலும் கதைப்பாடல்கள்
குறித்த செய்திகள் காணப்படுகின்றன. புத்தநேரி ரா.சுப்பிரமணியம் இளமைக் காலத்தில் தான் கேட்ட கட்டபொம்மன் கதைப்பாடலைப் பற்றிப் பாட்டும் கூத்தும் என்ற நூலில் குறிப்பிட்டுள்ளார். அந்தப் பாடலுக்கு என்று தனியான இசைப்பாணி ஒன்று உண்டு. நாட்டுப் பாடல் மெட்டில் ஒரு சுகமான ஒசை நயமும் தாளக்கட்டும் இருக்கும். தானானே தானானே - தானனன்னா, தானானே தானானே - தானனன்னா என்ற சந்தத்தில் அமைந்திருக்கும். இதில் துரிதம், மடக்கு எல்லாம் இடையிடையே விரவி வரும் என்று சொல்லியுள்ளார். சிறையிலிருந்த விடுதலைப் போராட்ட கைதிகள் கட்டபொம்மன் கதையைப் பாடியதாக வ.உ.சி. தன்னுடைய சுயசரிதையில் குறிப்பிட்டுள்ளார். இன்று பஞ்சாலங்குறிச்சி சக்கம்மாள் கோயில் திருவிழாவில் ஒயில் கும்மி பாடப்படுகின்றது. மற்ற இடங்களில் முன் போலப் பாடப்படவில்லை. பல பாடல்கள் அச்சுவடிவம் பெற்று விட்டன.

கேள்வி.. இன்று எத்தனை கட்டபொம்மன் கதைப்பாடல்கள் கிடைக்கின்றன? அவற்றின் உள்ளடத்தில் மாற்றங்கள் உண்டா?

பதில் : என்னிடம் அச்சிடப்பட்ட பாடல்கள் 12, ஒலைச் சுவடிவடியில் 6, கையெழுத்துப் பிரதி 1, ஒலிப்பதிவு செய்யப்பட்டது 1 என இருபது பாடல்கள் உள்ளன. இவை கதை சொல்லும் போக்கிலும், நிகழ்ச்சிகளைச் சொல்வதிலும், எந்த சாதியார் முன்னிலையில் பாடப்பட்டது என்ற சூழ்நிலையாயலும் வேறுபடுகின்றன. அதாவது திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி, திருவைகுண்டம் ஆகிய தேவர்கள் மிகுதியாக வாழும் பகுதிகளில் கிடைத்த பாடல்களில் வெள்ளையத் தேவருக்கும், திருவைகுண்டம் நெற்களஞ்சியக் காவல்காரன் பாண்டித்தேவருக்கும் மிகுதியான வரிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. பாஞ்சாலகுறிச்சிப் பகுதியில் கிடைத்த ஏடுகளில் கட்டபொம்மன், ஊமைத்துரை, சுந்தரலிங்கம், பொட்டிப்பகடை, தானாபதிப்பிள்ளை ஆகியோரைப் பற்றிய செய்திகள் விரிவாக உள்ளன. ஒரே பாடலை ஒரு பாடகன் பலமுறை பாடுவதாலும், ஒருவரிடமிருந்து கேட்டு மற்றொருவர் பாடுவதாலும் பாடல்களில் வேறுபாடுகள் ஏற்பட்டுள்ளன. இந்தப் பின்னணிகளை எல்லாம் கணக்கில் கொண்டே வரலாற்றுச் சான்றுகளைத் தேர்வு செய்ய வேண்டும்.

கேள்வி : திருவைகுண்டத்திலிருந்து ஆங்கிலேயரின் நெற்- களஞ்சியத்தைத் தானாபதிப் பிள்ளை கட்டபொம்மனின் ஆட்கள் துணையோடு கொள்ளையிட்டார் என்ற செய்தி குறித்து நீங்கள் என்ன சொல்கிறீர்கள்?

பதில் : இது குறித்து தானாபதிப்பிள்ளை வரலாறு என்ற நூலில் நான் விளக்கமாக எழுதியுள்ளேன். உண்மை என்னவென்றால் திருவைகுண்டம், ஆழ்வார் திருநகரி, ஆத்தூர், ஆறுமுகமங்கலம் ஆகிய நான்கு பகுதிகளும் தாமிரபரணி ஆற்றங்கரையில் உள்ள வளமான நெல் விளையும் பகுதி. நவாபு காலத்தில் இங்கு வரி வசூலிக்கும் உரிமை பாஞ்சாலங்குறிச்சியாருக்கு வழங்கப்பட்டது. நவாப்பிடமிருந்து அதிகாரத்தைக் கைப்பற்றிய ஆங்கிலேயர்கள் இப்பகுதியைச் சர்க்கார் நிலமென்று அறிவித்து, தாங்களே கிராம அதிகாரிகளை நியமித்து, விவசாயிகளிடம் நெல்லை வரியாக வசூலித்தனர். கட்டபொம்மன் இதனை ஏற்கவில்லை. அவர் தானாபதி தலைமையில் வீரர்களை அனுப்பி வரிக்குரிய நெல்லை அள்ளி வந்தார்.

சார்மகால் பகுதியில் தானாபதி தலைமையில் கட்டபொம்மன் ஆட்கள் மேற்கொண்டு வரும் நடவடிக்கை குறித்து கலெக்டருக்குக் குரும்பூர் தாசில்தார் 11, 13, 16 ஆகிய நாள்களில் கடிதம் எழுதியுள்ளார். அதில், கட்டபொம்மனின் ஆட்கள் தானாபதியுடன் வந்து சார்மகால் பகுதியில் வரிதண்டுகின்றனர். வரி கொடுக்க மறுக்கும் மணியக்காரரைக் கடுமையாகத் தாக்குகின்றனர். சிலரைக் கையைப் பின் கட்டாகக் கட்டித் தூக்கிச் சென்று விட்டனர். இது குறித்து அவர்களிடம் விசாரித்ததில் கட்டபொம்மன் ஆணையை ஏற்காமல் கும்பினியர்க்கு வரி செலுத்துபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்குமாறு அவர் ஆணையிட்டுள்ளதாகத் தெரிகிறது. குடிமக்கள் என்னிடம் பாளையக்காரருக்கு எதிராகப் புகார் கூறும் போது நாங்கள் கும்பினியாரின் நேரடி நிருவாகத்தின் கீழ் இருக்கிறோமா?

கட்டபொம்மன் ஆட்சியின் கீழ் இருக்கிறோமா? என்று உடனே அறிவிக்க வேண்டும் என்கிறார்கள். கும்பினி ஆணை எதையும் அவர் மதிப்பதில்லை. ஊர்த்தலைவர்களை அவர்கள் கைது செய்து கொண்டு சென்ற பின்னர் நாம் யாரிடம் வரிவாங்குவது? குடிமக்களுக்கு நான் என்ன பதில் கூறுவது? என்று எழுதியுள்ளார். வரி வசூலிப்பதில் ஏற்பட்ட நிகழ்வை கொள்ளை என்று சிலர் புனைந்து விட்டனர்.

கேள்வி ... இதைப் போலவே கட்டபொம்மன்மீதும் இத்தகைய குற்றச்சாட்டுப் பரவலாக உள்ளது. உங்கள் ஆய்வில் நீங்கள் கண்ட உண்மை என்ன?

இந்த எதிர்நிலை அணியினரில் உச்சகட்டமாகக் கட்டபொம்மன் கொள்ளைக்காரன் என்று நூலைத் தமிழ்வாணன் வெளியிட்டுள்ளார். இந்நூல் மூன்று பதிப்புக்களைக் கண்டுள்ளது. இந்த எதிர்நிலைக் கருத்துக்களைச் சான்றுகளோடு மறுத்து ஒரு கூட்டத்தில் உரையாற்றினேன். அந்தச் சொற்பொழிவைத் தொகுத்து வீரபாண்டியக் கட்டபொம்மன் விவாத மேடை என்ற நூலை 1991இல் வெளியிட்டேன். இந்த நூலில் சற்றுக் கடுமையாக நெருப்புத் துண்டுகள் தெறித்து விழுவதாகச் சிலர் கடிதம் எழுதினர். தமிழ்வாணன் எழுதியுள்ள முறையை நோக்கும்போது இந்தச் சூடு தேவை என்றே நான் கருதுகிறேன். ஒன்றை மட்டும் நான் வலியுறுத்த விரும்புகிறேன். கட்டபொம்மன், பூலித்தேவர், மருதுபாண்டியன், வ.உ.சி., பாரதி ஆகியோரைச் சாதி, மதம், இனம் என்னும் கூண்டுகளுக்குள் அடைத்து விடக்கூடாது. இவர்களெல்லாம், மண்ணில் இன்பங்களை விரும்பாது சுதந்திர மாண்பை உயிரென மதித்தவர்கள். மனித சமுதாயம் முன் மாதிரியாக நினைக்க வேண்டிய பண்பாளர்கள்.

இந்தியாவில் பகைவர்களாலும் பாராட்டப்பட்டவர்கள் இருவர். வடக்கே புருசோத்தமன், தெற்கே கட்டபொம்மன், தங்கள் உயிர் மூச்சு உள்ளவரை வெள்ளை அரசின் அதிகாரக் கொடுமையை எதிர்த்தவர்கள் கட்டபொம்மனும், ஊமைத்துரையும் ஆவர். தூக்குத் தண்டனை வழங்கப்பட்ட போது கட்டபொம்மனின் நடவடிக்கை எவ்வாறு இருந்தது என்பதைக் கவர்னருக்கு எழுதிய கடிதத்தில் மேஜர் பானர்மேன் குறிப்பிட்டுள்ளார். அதில், நேற்று விசாரணை நடைபெற்ற சமயத்தில் கூடியிருந்தவர்களின் முன்பாகப் பாளையக்காரரின் (கட்டபொம்மன்) போக்கும் நடத்தையும் அஞ்சா நெஞ்சத்துடன் ஏளனத்துடனும் இருந்ததை நான் இங்குக் குறிப்பிடாமல் இருக்க முடியாது. தூக்கிலிடப்படும் இடத்திற்கு அவர் உறுதியுடனும், வீரத்துடனும் நடந்து செல்லும் போது இருமருங்கிலும் இருந்த பாளையக்காரர்களை ஏளனத்துடனும் வெறுப்புடனும் உற்று நோக்கிக் கொண்டே சென்றார் என்று குறிப்பிட்டுள்ளார்.

ஊமைத்துரையைப் பற்றி சிறிதும் தன்னலம் இல்லாத உயர்ந்த தூய நாட்டுப் பற்றிற்குப் பரிசாக இரக்கத்திற்குரிய ஊமைத்துரை தூக்குமேடை ஏற வேண்டிய நிலை ஏற்பட்டது என்று வெல்ஸ் வருந்துகிறார். ஊமைத்துரை சரபோஜி மன்னருக்கு எழுதிய கடிதத்தில் என் உயிர் மூச்சு உள்ளவரை ஆங்கிலேயரின் ஆதிக்கத்தை எதிர்ப்பேன் என்று தன்நிலைப்பாட்டைத் தெளிவுபடுத்தியுள்ளார். இத்தகைய வீரப்பண்பும் மான உணர்வும் நிரம்பிய வரலாற்று நாயகர்களைக் குறுகிய கண்ணோட்டத்தில் பார்த்துக் கொச்சைப்படுத்தக் கூடாது. அதிலும் உண்மைக்கு மாறாக எழுதுவதை வன்மையாகக் கண்டிக்க வேண்டும்.

கேள்வி : இத்தகைய வரலாற்று நூல்களால் சமூகத்திற்கு என்ன பயன் என்று நீங்கள் கருதுகின்றீர்கள்.

பதில் : கடந்த கால வரலாற்றைச் சரியாக உணர்ந்து கொண்டால் தான் சிறந்த எதிர்காலத்தை உருவாக்க முடியும் என்பது வரலாற்றுத் தத்துவம். அது ஒருபுறம் இருக்க, கட்டபொம்மன் ஊமைத்துரை, மருது பாண்டியர் போன்றவர்கள் ஆதிக்க சக்தியின் அடக்குமுறையை எதிர்த்த ஒரு பண்பின் கூறு, அல்லது வடிவமாகும்.
இத்தகைய பண்பு மனித சமுதாயத்திற்கு வேண்டிய ஒன்று. எல்லாக் காலங்களிலும் அதிகாரத்தில் இருப்பவர்கள். அடக்கு முறையை ஏவி மக்களை ஒடுக்குவதையே குறிக்கோளாகக் கொண்டுள்ளதை வரலாறு உணர்த்துகிறது. எல்லாக் காலங்களிலும் ஏதாவது ஒரு இயக்கம் உரிமைக்காகப் போராடிக் கொண்டே இருக்கிறது.

இன்று நுகர்வுக் கலாச்சாரத்தில் மூழ்கிக் கொண்டிருக்கும் இளைஞர்களிடம் இந்தப் போராட்ட உணர்வுகள் மங்கிக் கொண்டு வருகின்றன. ஒப்பந்தம் என்ற பெயரில் நம் நாட்டில் நுழைந்த பன்னாட்டு நிறுவனங்கள் நம்முடைய விவசாய நிலங்களைச் சீரழித்ததோடு நில்லாமல் இயற்கை வளங்களை அதிலும் குறிப்பாக நீர் ஆதாரத்தை உறிஞ்சி வருகின்றன. இதைப் பற்றி எவ்வளவு பேர் கவலைப் படுகிறீர்கள்? உண்மையாகச் சொல்வதானால் ஒரே ஒரு இயக்கமும் அந்தக் இயக்கத்திலிருந்து சித்தாந்த அடிப்படையில் பிரிந்து சென்ற அமைப்புகளுமே குரல் கொடுக்கின்றன. இத்தகைய கால கட்டத்தில் மண்ணின் மீது பற்று கொண்டிருந்த விடுதலைப் போராட்ட வீரர்களின் வரலாற்றைப் பேச வேண்டியது சமூகத் தேவையாகும். இதன் மூலம் அநீதிக்கும் அடிமைத் தனத்திற்கும் எதிராகக் குரலையும் கரத்தையும் உயர்த்தும் சமுதாயம் உருவாகும்.

விடுதலைப் போராட்ட காலத்தில் மக்களிடம் விடுதலை உணர்வை ஏற்படுத்த கட்டபொம்மன் கதைப்பாடல்கள் பாடப்பட்டதை இங்கு நினைவில் கொள்ள வேண்டும். எனவே தென்னாட்டு விடுதலைப் போராட்ட வீரர்களாகிய அழகுமுத்து சேர்வை, புலித்தேவர், கட்டபொம்மன், மருதுபாண்டியர், ஊமைத்துரை, வ.உ.சி., பாரதி போன்றவர்களைச் சாதிக் கூண்டுக்குள் அடைத்துவிடாமல், ஆதிக்கச் சக்திகளின் கொடுமையை எதிர்த்த விடுதலைப் போராட்ட வீரப் பண்பின் அடையாளமாக - வடிவமாகக் கொண்டு சென்றால் மனித குலத்திற்கு நன்மை விளையும் என்பது திண்ணம்.

- நேர் காணல் - கிருஷி



Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com