Font problem? Add us to your favorites! Press (Ctrl-D) on your keyboard.
Keetru Logo "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
கீற்று பற்றி விவாதிக்க...
கருத்துக்களை பரிமாறிக் கொள்ள...
கீற்று வலைக் குழுமத்தில் சேரவும்.
Keetru Kanavu
Kanavu
ஆகஸ்டு 2008
ஐ,லாப்தேவ்:இயற்கை உலகில் மனிதனின் உலகம்
சி,ஆர். ரவீந்திரன்

சில நல்ல புத்தகங்களைச் சொந்தமாக வைத்திருந்தாலும் கூட அவற்றை காலம் தாழ்த்தியே படிக்க நேரிடுகிறது. அவை பற்றிய அறிமுகமோ, விமர்சனமோ வெளிவராமல் போவதை ஒரு காரணமாகக் கருதலாம். காலம் கடந்து அவற்றை படிக்கும்பொழுது நிகழ்காலம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தக் கூடிய அவற்றை உரிய நேரத்தில் படிக்கத் தவறிவிட்டோமே என்ற வருத்தம் தோன்றவே செய்கிறது.

அந்த வகையில், கவனத்திற்கு உள்ளாகாத புத்தகங்களில் ஒன்று ஐ. லாப்தேவ் எழுதிய இயற்கை உலகில் மனிதனின் உலகம். கடந்த 1978ல் இரஷ்ய மொழியில் எழுதப்பட்ட இப்புத்தகம் அதற்கு அடுத்த ஆண்டிலேயே பீட்டர் டெம்பஸ்ட் என்பவரால் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டு மாஸ்கோ பிராக்ரஸ் பப்ளிஷர்ஸ் நிறுவனத்தால் வெளியிடப்பட்டது. இது, சோவியத் கூட்டமைப்பு இருந்த காலத்தில் எழுதப்பட்டு வெளியானது.

உலகமயமாதல், உலகச் சந்தை, தாராளமயம் போன்ற நடைமுறை உறவுகள் வருவதற்கு முன்பே அவை குறித்த முன்னறிவிப்பை அல்லது எச்சரிக்கையைச் செய்வது போல இந்தப் புத்தகம் அமைந்திருக்கிறது. அவற்றின் பின்னணியை அறிவியல் கண்ணோட்டத்தோடு ஆய்வு செய்திருப்பது வியக்கத்தகுந்த முயற்சியாக இருக்கிறது. அறிவியல், தொழில் நுட்பத்தில் வியக்கத்தகுந்த அவளில் வளர்ச்சியடைந்துள்ள நாடுகள், வளரும் அல்லது பின்தங்கிய நாடுகளின் இயற்கை வளங்களைத் தமக்குத் தேவைப்படும் வகையில் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ கையகப்படுத்திக் கொள்ளப் போகின்றன என்பதை முன்கூட்டியே அறிவிப்பது போல இந்தப் புத்தகம் அமைந்திருக்கிறது. சுமார், முப்பது ஆண்டுகள் கழிந்த பின்னால் இதைப் படிக்கும்போது, இன்றைய நவீன காலனியாதிக்கத்தைக் குறித்து எந்த அளவுக்கு ஆழ்ந்த ஈடுபாட்டோடு இதன் ஆசிரியர் செயல்பட்டிருக்கிறார் என்பதை உணர முடிகிறது.

மனிதன் தன் வரலாற்றை உருவாக்கிக் கொண்டே வந்த விதத்தில் தொடக்க காலம் முதலாகத் தன்னை இயற்கையோடு எப்படியெல்லாம் தொடர்புபடுத்திக்கொண்டே வந்திருக்கிறான் என்பதை இது தெளிவாக உணர்த்துகிறது. மனிதன், சமுதாயம், இயற்கை என்ற அளவில் அறிவியல் கண்ணோட்டத்துடன் வரலாற்றின் மாற்றங்களையும், வளர்ச்சியையும் இது முறையாக விளக்குகிறது.

இயற்கையின் அங்கமான மனிதன் அதைச் சார்ந்து வாழ்ந்ததையும், அதிலிருந்து பிரிந்து அதை வேட்டையாடி வாழ்ந்து வருவதையும் இது புலப்படுத்துகிறது. இந்தப் போக்கு, மனிதனை இயற்கையிலிருந்து விலக்கித் தற்கொலைக்கு இழுத்துச் செல்லக் கூடிய பேராபத்தை விளைவிக்கக் கூடியது என்பதை அறிவியல் கண்ணோட்டத்தோடு ஆசிரியர் விளக்குகிறார்.

இன்று, உலகம் முழுவதுமாக இருந்துவரும் அடிப்படைப் பிரச்னை உயிரினங்கள் வாழ்வதற்குரிய அடிப்படையான வாழ்வாதாரங்கள் காப்பாற்றப்பட வேண்டும் என்பது தான். வளர்ச்சியடைந்த நாடுகள் தம்முடைய வாழ்வாதாரங்களைக் கடந்த காலங்களில் அளவுக்கு மீறிப் பயன்படுத்தி அவற்றை ஈடுகட்ட முடியாத அளவுக்கு அழித்துவிட்டன. வளரும் நாடுகள் அல்லது பின்தங்கிய நாடுகள் தமது வாழ்வாதாரங்களை முறையாகப் பயன்படுத்தி வளர்ந்து கொண்டிருக்கும் சூழலில், நவீன காலனியாதிக்கம் அவற்றைப் பங்கிட்டுக்கொள்ள முனைந்து வருவது, இன்று உலக மக்களின் வாழ்க்கையில் பேரழிவைக் கொண்டு வருவதற்குரிய செயலாக இருக்கிறது.

இன்னொரு வகையில் அறிவியல், தொழில் நுட்பச் சாதனங்களின் ஆதிக்கத்தினால் சுற்றுப்புறச் சூழல்கள் மிகமிக அதிக அளவில் மாசுபட்டு வருவது தெளிவாகி வருகிறது. உயிரினங்களின் வாழ்வாதாரங்களான நீர், நிலம், நெருப்பு, காற்று, விண்வெளி போன்றவை மாசுபட்டு வருகின்றன. மனிதன், உயிரினங்கள் வாழ்வதற்குரிய சூழலை மாசுபடுத்தி வருகிறான். புதுப்பித்துக் கொள்ளகூடிய இயற்கை வளங்களை தொடர்ந்து சுரண்டி அழித்து வருகிறான். இயற்கைக்கும் மனிதனுக்கும் நடக்கும் இந்தப் போராட்டத்தில் மனிதன் வெற்றியடைந்தால் தற்கொலை செய்து கொள்வான். அல்லது தானே அழிந்து போவான். அவனுடன் உயிரினங்களும் அழிந்து விடும்.

இயற்கையிலிருந்துதான் மனிதன் தன்னை உருவாக்கிக் கொண்டான். அவனுடைய தத்துவம், அரசியல், சமுதாயம், பொருளாதாரம், கலை கலாச்சாரப் பண்பாட்டை உள்ளடக்கிய வாழ்க்கையை இயற்கைக்கு வெளியே இருந்து அவன் பெறவில்லை. பெறவும் முடியாது.

மனிதன், தன்னுடைய வரலாற்றின் ஊடாகச் சமுதாயத்தை உருவாக்கி வளர்த்துக் கொண்டிருக்கிறான். அவன், தன்னுடைய கடவுள் பற்றிய கருத்தை இயற்கையைச் சார்ந்தே உருவாக்கிக் கொண்டான். சாக்ரடீஸ் தொடங்கி பியேட்டோ, அரிஸ்டாடில் போன்றவர்களின் தத்துவங்களின் ஊடாக கடவுள் பற்றிய கருத்தை கிரேக்க சமுதாயம் உருவாக்கி வளர்த்து வந்த விபரங்களை அறிவியல் ரீதியாக இந்தப் புத்தகத்தில் ஆய்வு செய்யப்பட்டிருக்கிறது. இயற்கை அறிவியலிலிருந்து, பொருளியல் தொடர்பான அறிவியல் வளர்ந்த விதத்தையும் ஆசிரியர் விளக்குகிறார். கோபர்னீகஸ், கலிலியோ, நியூட்டன், மார்ட்டின் லூதர் போன்றவர்களின் கண்டுபிடிப்புகளாலும், மாற்றங்களாலும் ஐரோப்பியச் சூழலில் அறிவியல், தொழில் நுட்ப வளர்ச்சி தொடர்ந்து நிகழ்ந்தது. அதற்கான தேவைகள் அந்தச் சூழலில் தொடர்ந்து இருந்து வந்ததுதான் அதற்குக் காரணம்.

அவர்கள் தங்களுடைய வாழ்வாதாரங்களை இழந்துவிட்டதாலும், அவை குறைந்து விட்டதாலும் அவர்கள் தொடர்ந்து தங்களுக்குரிய தேவைகளை நிறைவேற்றிக் கொள் ளும் வகையில் புதிய முறையில் தேடுதலை நிகழ்த்தினார்கள். அதன் விளை வாகவே, முதலாளித்துவ உற்பத்தி முறையும், காலனி ஆதிக்கமும் மேற்கில் தோன்றி வளர்ந்தன. வளர்ச்சியடையாத நாடுகளின் வாழ்வாதாரங்கள் முறையாகப் பயன்படுத்துவதற்கான சூழல் இருந்து வருகின்றது. இந்தக் கண்ணோட்டத்திலேயே இந்தியாவை இன்றைய நவீன காலனியாதிக்கச் சூழலில் ஆய்வு செய்து பார்க்க இந்தப் புத்தகம் ஒரு தூண்டுதலாக அமைந்திருக்கிறது.

காலனி ஆதிக்கங்கள் தோன்றி வளர்ந்து உலகெங்கும் விரிந்து பரவியதன் விளைவாக இயற்கையும், அது சார்ந்த உயிரினங்களும் அழிந்த நிகழ்வுகளையும், அழிவுகளையும் புள்ளி விபரங்களோடு ஆசிரியர் குறிப்பிட்டுக் காட்டுகிறார். காலனி ஆதிக்கங்களின் விளைவாக, மனிதர்களும், பறவைகளும், உயிரினங்களும், நீர்வாழ் இனங்களும் அழிந்துபோன தகவல்களை இந்தப் புத்தகம் விரிவாகச் சொல்லுகிறது.

இயற்கை சார்ந்த வாழ்க்கையில் மனிதர்களின் முதலாளித்துவ பொருளாதார உற்பத்தி முறையையும், சோசலிச பொருளாதார உற்பத்தி முறையையும் ஒப்பிட்டு எந்த வகையான உற்பத்தி முறை இயற்கையின் பாதுகாப்பிற்கு உகந்தது என்பதை ஆசிரியர் உணரச் செய்கிறார். இலாப நோக்கத்தை முதன்மையாகக் கொண்ட முதலாளித்துவ பொருளாதார உற்பத்தி முறையின் விளைவுகளை ஆதாரங்களோடு விளக்குகிறார். அதிலிருந்து சோசலிசப் பொருளாதார உற்பத்தி முறை எப்படிப் பாதுகாப்பானது என்பதையும் உணரச் செய்கிறார். சென்ற நூற்றாண்டில் நடந்த அக்டோபர் புரட்சியைத் தொடர்ந்து 1918ல் லெனின் இயற்கையைப் பாதுகாக்கக்கூடிய சோசலிசப் பொருளாதார உற்பத்தி முறையை எப்படி வடிவப்படுத்தினார் என்பதையும் தெளிவுபடுத்துகிறார்.

அதன் தொடர்பாகப் பின்னாளில் முதலாளித்துவ நாடுகளைச் சேர்ந்த அறிவியலாளர் களுக்கும் சோசலிச நாடுகளைச் சேர்ந்த அறிவியலாளர்களுக்கும் இடையில் நிகழ்ந்த ஆய்வுகளையும், விவாதங்களையும், முடிவுகளையும், விளைவுகளையும் கோடிட்டுக் காட்டுகிறார். முதலாளித்துவ பொருளாதார உற்பத்தி முறையில் இயற்கையையும், சுற்றுப்புறச் சூழலையும் பாதுகாக்கும் முறைகளையும் விமர்சிக்கிறார். மாகடலை நுரையீரல்களுடன் ஒப்பிட்டு, நதிகளின் வாயிலாக தொழிற்சாலைகளின் இரசாயனக் கலவைகள் அதில் கலப்பதன் விளைவாக நிகழும் பேராபத்துக்களை அடையாளப் படுத்துகிறார். மறுசுழற்சி முறைக்குக் கழிவுகளை உள்ளாக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்துகிறார். கடந்த காலங்களில் ஊடகங்கள் வளர்ச்சியடைந்த நாடுகளிடம் பணம் பெற்றுக்கொண்டு உண்மைச் செய்திகளை மாற்றிச் சொல்லி இருட்டடிப்புச் செய்த விபரங்களைக் குறிப்பிடுகிறார்.

மக்களாட்சி நிலவிவரும் நாடுகளில் மண்ணுக்கு உள்ளேயும் வெளியேயும் உள்ள வளங்களைக் கொள்ளையடிக்க வளரும் நாடுகள் நவீன காலனியாதிக்கத்தை மறை முகமாக நிறுவ முயற்சிக்கின்றன. இலத்தீன் அமெரிக்கா, தென்னாப்பிரிக்கா, தென்கிழக்கு ஆசிய நாடுகள் போன்றவற்றில் உள்ள இயற்கை வளங்களைக் கையகப்படுத்த வளர்ச்சியடைந்த நாடுகள் பல வகைகளிலும் தீவிரமாக முயன்று வருகின்றன.

மதவாதம், இனவாதம், பயங்கரவாதம் என்ற பெயரில் மக்களின் அமைதியான வாழ்க்கை சீர்குலைக்கப்படுகிறது. இயல்பான வளர்ச்சியை ஆதிக்கப் போட்டிகளை ஏற்படுத்துவதன் வாயிலாகச் சிதைக்கும் முயற்சிகள் தொடர்ந்து வளர்கின்றன. உலகின் தட்பவெப்ப நிலைமைகளைச் சீர்குலைப்பதன் விளைவாக இயற்கையையும், அதைச் சார்ந்த உயிரினங்களையும் தொடர்ந்து அழிக்கும் முயற்சி விரிவாகி வருகிறது. மண், கடல், விண்வெளி, காற்று போன்றவற்றின் தன்மைகள் தாறுமாறாகி வருகின்றன. சந்தைப் பொருளாதார உற்பத்தி இலாபத்தை மட்டுமே முதன்மையானதாகக் கருதக்கூடியது. மக்கள் சமுதாயத்தின் வளர்ச்சிக்கும், மேன்மைக்கும் உரிய உற்பத்தி முறையால் மட்டுமே உலகம் அமைதியுடன் வாழும் என்பதை வரையறை செய்கிறது இந்தப் புத்தகம். இயற்கையோடு இயைந்த வாழ்க்கையின் முக்கியத்துவம் குறித்த இந்தியக் கண்ணோட்டத்தை இந்தப் புத்தகம் நினைவுபடுத்துவதாக உணர முடிகிறது. இதன் பின்னணியில் உலக வாழ்க்கையை மறுபரிசீலனைக்கு உள்ளாக்குவது பொருத்தமாக இருக்கும். நவீன வாழ்க்கைச் சூழலில் இதைப்பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்துவதே இதன் நோக்கமாக இருக்கிறது.


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...



படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: editor@keetru.com. படைப்புகளை அனுப்பும்போது தாங்கள் பயன்படுத்திய எழுத்துரு எதுவென்பதைத் தெரியப்படுத்தவும்.

Keetru | Tamil | Tamilnadu | Literature | Cinema | Recipe | Joke
Submit Your Feedback
Name
Email
Message
 



Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

www.anaruna.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.punnagai.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com
Hosted & Maintained by india intellect
Best viewed in Windows 2000/XP