Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
KeetruInformationGeneral
இசையின் கருவறைகள்
ஆதி


தமிழிசையில் ஐந்து வகைக் கருவிகள் உள்ளதாக சிலப்பதிகாரம் குறிப்பிடுகிறது. தோல்கருவி (தோலால் செய்யப்பட்டவை), துளைக்கருவி (துளையிடப்பட்டவை), நரம்புக் கருவி (தந்தி அல்லது கம்பிகள் பொருத்தப்பட்டவை), மிடற்றுக்கருவி (வாய்ப்பாட்டு), கஞ்சகருவி (சேகண்டி, ஜாலரா போன்ற தட்டுக்கருவிகள்). தமிழ் இசையில் (புல்லாங்) குழல், யாழ் பிரபலமானவை. தோலிசைக் கருவிகள் எண்ணிறைந்தவை. அவற்றில் அழிந்துவிட்ட, அரிய சில கருவிகள் தொகுக்கப்பட்டுள்ளன.

யாழ்

பண்டைய நாகரிகங்கள் எல்லாவற்றிலும் யாழ் என்ற கருவியோ, யாழ் போன்ற தந்தி அல்லது கம்பி இசைக் கருவியோ இருந்துள்ளது. கிரேக்க பாரம்பரியத்தில் இதைக் காணலாம். தமிழகத்திலும் ஒவ்வொரு திணைக்கும் தனித்தனி யாழ் இருந்திருக்கிறது. இன்று அந்தக் கருவி இல்லை.

பொதுக் காலம் (கி.பி.) 10ம் நூற்றாண்டில் இந்தக் கருவி மறைந்து ருத்ர வீணை, கின்னாரி, கச்சபி, பின்னர் சிதார், சாரோட், சரஸ்வதி வீணை போன்றவை பிரபலம் ஆகின. சீரியாழ் என்பது வீணை போன்ற ஒரு கருவிதான்.

யாழ் எப்படி இருந்தது என்று தெரியாவிட்டாலும், யாழ் போன்ற சில கருவிகள் இன்னும் எஞ்சியுள்ளன. அவற்றில் இரண்டு யாழ்களை இங்கே பார்க்கலாம். இது வில் யாழ். பார்ப்பதற்கு வில்லைப் போல் இருப்பதால் அப்பெயர் பெற்றது. யாழ் கருவியின் நவீன வடிவம் மயில் யாழ். கம்பி இசைக் கருவிகளில் ஒன்றான இது, மயில் வடிவில் வடிவமைக்கப்பட்டிருப்பதால் அப்பெயர் பெற்றது.

சிறு கொம்பு

கொம்பு போன்ற இந்த இசைக் கருவிகள் காற்று கருவிகள். ஆங்கில எஸ் வடிவில் வளைந்த இந்தக் கருவிகள் நான்கு பாகங்களைக் கொண்டவை. இவற்றிலேயே பிறை போன்று வளைந்திருப்பவை கோயில் திருவிழாக்கள், கிராமத்து கொண்டாட்டங்கள், பொது நிகழ்ச்சிகளின்போது பயன்படுத்தப்படும். சாதாரண மக்களின் கொண்டாட்டங்கள், துக்க நிகழ்ச்சிகள் அனைத்திலும் தாரை-தப்பட்டை, கொம்பு ஊதுவது வழக்கம். இன்றளவும் நாட்டார் தெய்வ திருவிழாக்களில் கொம்பு ஊதுவதைப் பார்க்கலாம்.

நகரா

பெரிய அரைவட்டச் சட்டி போன்ற தோலிசைக் கருவி. பழங்கால முரசைப் போலிருக்கும். கோயில்களின் முன் மரக்கதவுகளை அடுத்துள்ள பகுதிகளில் இந்தக் கருவிகள் வைக்கப்பட்டிருக்கும். கோயில் நிகழ்ச்சிகள், முக்கிய நிகழ்வுகள், திருவிழாக்களை தூரத்தில் இருப்பவர்களும் அறிவிக்க நகரா இசைக்கப்படுகிறது. தாமிரம், பித்தளையால் ஆன அடிப்பகுதியில் தோல் இழுத்து கட்டப்பட்டு, இரும்பு சட்டத்தால் இறுக்கப்பட்டிருக்கும். வளைந்த குச்சிகளால் இசைப்பார்கள். சில நேரம் யானையின் மீது இந்தக் கருவியை வைத்து இசைத்துச் செல்வதும் உண்டு.

பஞ்சமுக வாத்தியம்

மிகப் பெரிய இசைக்கருவிகளில் ஒன்று என்று இதைக் குறிப்பிடலாம். தமிழகத்தில் இன்னும் ஓரிரு இடங்களில் மட்டுமே எஞ்சியுள்ளது. ஐந்து முகங்கள் கொண்ட இந்த தோலிசை கருவி கோயில்களில் பயன்படுத்தப்பட்டது. வெண்கலத்தால் செய்யப்பட்ட இந்தக் கருவியை எடுத்துச் செல்ல சக்கரம் பொருத்திய இரும்புச் சட்டங்கள் இருக்கும். ஐந்து முகங்களில் தோல் இழுத்து கட்டப்பட்டிருக்கும். இதை வாசிப்பது தனிக்கலை. இந்தக் கருவியைப் பற்றி அருணகிரிநாதர் குறிப்பிட்டுள்ளார். குடபஞ்சமுகி என்ற வேறொரு பெயரும் உண்டு. இவற்றை இசைப்பவர்கள் பற-சைவர்கள் என்றழைக்கப்படுகின்றனர்.

வீணை

சிதாரை போன்றிருக்கும் இந்த (பால)சரஸ்வதி வீணை, மயிலின் அகவலைப் போல் ஒலியெழுப்பும். ஒலி மென்மையாக இருக்கும். இந்த வீணையின் வடிவமும் நின்று கொண்டிருக்கும் மயிலைப் போன்றிருக்கும். வயலினை இசைப்பது போல் ஒரு வில்லைக் கொண்டே இதை இசைக்க முடியும். இந்த வீணையின் தண்டுப் பகுதியை இடது தோளுக்கு நேராகப் பிடித்து, வலது கையால் வில்லைப் பிடித்து இசைக்க வேண்டும். இதற்கு மயூரி, மயில் சிதார், மயில் வயலின் என்றும் பெயர்கள் உண்டு. நாகவீணை எனப்படும் இந்த வீணையின் சிற்பங்கள் புதுக்கோட்டை, கர்நாடக மாநிலம் பேலு£ரில் உள்ளன. வீணையின் அடிப்பகுதிகள் பாம்பின் தலை போல் செதுக்கப்பட்டிருக்கும்.

ஜலதரங்கம்

பல வெளிநாட்டு கருவிகள் நமது இசைக்கருவிகளாக மாறிவிட்டன. அப்படிப்பட்ட ஒரு கருவி ஜலதரங்கம். இதற்கு நீர் அலைகள் என்று பொருள். பெரியதிலிருந்து சிறிதாகும் வகையில் 18 பீங்கான் கிண்ணங்கள் இந்த கருவியை கட்டமைக்கின்றன. இவற்றை அரைவட்ட வடிவில் அடுக்கி, தண்ணீரின் அளவை வரிசைகிரமமாக கூடுதலாகவோ, குறைவது போலவோ ஊற்ற வேண்டும். குச்சியால் அடித்து இசைக்கப்படும். காலி கிண்ணங்கள்கூட வித்தியாசமான அலைவரிசை ஒலியை எழுப்பும். வீட்டிலுள்ள பாத்திரங்களைக் கொண்டே இக்கருவியை நீங்கள் உருவாக்கலாம்.

கண்ணாடி டோலக்

டோலக் என்பது தோல் இசைக்கருவி. வட மாநிலங்களில் புகழ்பெற்றது. மிருதங்கத்தைப் போலிருக்கும் இந்த சிறப்புவகை டோலக் கண்ணாடியால் செய்யப்பட்டது. இரு கண்ணாடி பூந்தொட்டிகளை பின்பக்கம் இணைத்தது போலிருக்கும். உள்புறம் ஏதுமற்ற இந்த கண்ணாடிக் கருவி எழுப்பும் இசை வித்தியாசமாக இருக்கும். இது அலங்கார இசைக்கருவி.


கஷ்டதரங்

மரப் பலகையால் செய்யப்பட்ட இந்தக் கருவியை இரண்டு மர சுத்தியல்களால் அடிக்க வேண்டும். இடது புறத்திலிருந்து வலது புறமாக குறுகிச் செல்லும் வகையிலான செவ்வக மரப்பலகைகள் ஒரு சட்டத்தில் பொருத்தப்பட்டிருக்கும். வெளிநாட்டு ஸைலபோன் கருவியைப் போன்றது.

(இந்தக் கருவிகளை நேரில் பார்க்க வேண்டுமானால் சென்னை அருங்காட்சியதுக்குச் செல்லுங்கள்)


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com