Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
KeetruInformationGeneral
மண்ணுநீதியின் பெருமைகள்!


மனுதர்ம மூலம்


பிரம்மாவானவர் இந்த சாஸ்திரத்தை உண்டு பண்ணி விதிப்படி ரிஷிகளுக்கும் ஓதுவித்தார். (அத் .1.சு.59)

விவாதிப்பவன் நாத்திகனாம்!

வேதம் (சுருதி) தரும சாஸ்திரம் (ஸ்மிருதி) இவ்விரண்டையும் தர்க்க யுக்தியைக் கொண்டு மறுப்பவன் நாஸ்திகனாகின்றான். (அத்.2.சு11)

இத்தகைய நாஸ்திகன் வேதத்தை நிந்தித்தால் தெய்வத்தை நிந்திக்கின்றவனாவான். (அத்.2.சு11)

பிராமணன் இந்த மனு சாஸ்திரத்தை மற்ற வருணத்தாருக்கு ஓதுவிக்கக் கூடாது. (அத்.2.சு103)

சூதாடுகிறவன், கூத்தாடி, பாடகன், கொடிய நடையுள்ளவன், தேவ ஸ்மிருதிகளை நிந்திப்பவன்,விரத அனுஷ்டானம் இல்லாதவன், ஆபத்து இல்லாதபோது தன் ஜாதித்தொழிலை விட்டும் மற்றொரு ஜாதித்தொழிலைச் செய்பவன் , குடியன் - இவர்களை அரசன் பட்டணத்தை விட்டு ஓட்ட வேண்டியது. (அத்.9.சு226)

படைப்பில் பேதம்

அந்த பிரம்மாவானவர், இந்த உலகத்தைக் காப்பாற்றுவதற்காக தன் முகம், தோள், தொடை , பாதம் இவைகளினின்று உண்டான பிராமண, சத்திரிய, வைசிய , சூத்திர வருணத்தாருக்கு இம்மைக்கும், மறுமைக்கும் உரிய உபயோகமான கருமங்களைத் தனித்தனியாகப் பகுத்தார். (அத்1. சு. 87)

பிராமணன் முதல் வருணத்தான் ஆனதாலும் பிரம்மாவின் உயர்ந்த இடத்தில் (முகத்தில்) பிறந்ததனாலும் இந்த உலகத்தில் உண்டாயிருக்கிற சகல வருணத்தாருடைய பொருள்களையும் தானம் வாங்க அவனே பிரபுவாகிறான். (மனு .அத்.1.சு100)

பிச்சையிலும் பெருமை

ஆதலால் பிராமணன் ஒருவரிடத்தில் தானம் வாங்கினாலும் தன் பொருளையே சாப்பிடுகிறான். தன் வஸ்திரத்தையே உடுத்து கிறான்; தன் சொத்தையே தானஞ்செய்கிறான். மற்றவர்கள் அவன் தயவினாலேயே அவற்றை அனுபவிக்கிறார்கள். (மனு .அத்.1.சு101)

பிராமணன் தொழிலைச் சூத்திரன் செய்தாலும் சூத்திரன் பிராமண சாதியாக மாட்டான். ஏனென்றால், அவனுக்கு பிராமண சாதித் தொழிலில் அதிகாரம் இல்லை அல்லவா? சூத்திரன் தொழிலைப் பிராமணன் செய்தாலும் பிராமணன் சூத்திர ஜாதியாக மாட்டான். ஏனென்றால் அவன் ஈனத் தொழில் செய்தாலும் அவன் ஜாதி உயர்ந்ததல்லவா? இப்படியே இந்த விஷயங்களை பிரம்மாவும் நிச்சயம் செய்திருக்கிறார்.

பார்ப்பான் மாமிசப் பிராணியே!

வடை முக்கிய பலகாரங்கள், பாயாசம் , கிழங்கு, ருசியுள்ள இறைச்சி, நறுமணமுள்ள நீர் இவைகள் பிராமணர்களுக்கு உரியன. (மனு .அத்.3சு227)

ஒரு பிராமணன் மந்திரத்தினாற் கொல்லப்பட்ட மிருகாதிகளின் மாமிசத்தைப் புசிக்கலாம். (மனு அத் 5. சு.27)

உயிருக்கு ஆபத்து நேருங்கால் புசிக்கத்தக்க பிராணிகளை நாள்தோறும் புசித்த போதிலும் தோஷத்தை அடையமாட்டான். (மனு அத் 3. சு.10)

இன்ன இன்ன மாமிசத்தால் சிரார்த்தம் செய்தால் பிதுர்க்கள் இவ்வளவு காலம் திருப்தி அடைவார்கள் என்ற விவரம் எள், செந்நெல், அரிசி, உளுந்து, நீர், கிழங்கு , கனி இவற்றால் மனித பிதுர்க்கள் ஒரு மாதம் திருப்தியடைவர்.

மீனுணவால் இரு மாதங்கள்-மான் மாமிசத்தால் மூன்று மாதங்கள் - செம்மறியாட்டுப் புலாலால் நான்கு மாதங்கள், பட்சி மாமிசத்தால் அய்ந்து மாதங்கள் பிதுர்த்திருப்தியாகும்.

வெள்ளாட்டின் மாமிசம் ஆறு மாதம்- புள்ளிமான் புலால் ஏழுமாதம், கருப்பு மான் மாமிசம் எட்டுமாதம், கலைமான் மாமிசம் ஒன்பது மாதம்.

முள்ளம்பன்றி, காட்டெருமைக் கடா இவற்றின் மாமிசத்தால் பத்து மாதங்கள், முயல், ஆமை, இவற்றால் பதினோரு மாதங்கள்.

பசுவின் பால், தயிர், நெய், இவற்றால் ஒரு வருடம். இரண்டு காதுகளும் நீரில்பட மூழ்கிக் குடிக்கின்ற கிழ வெள்ளாட்டுக் கடா மாமிசத்தால் பன்னிரண்டு ஆண்டுகள்.

அந்தந்தத் காலத்தில் விளைகின்ற காய்கறிகள், வாளை மீன், கட்க மிருகம், சிவந்த ஆடு இவற்றின் மாமிசத்தாலும் காட்டில் முளைக்கின்ற செந்நெல் அரிசியினாலும் செய்தால் எல்லையற்ற காலமும் பிதுர்க்கள் சிரார்த்தத்தால் திருப்தியுறுகின்றனர்.

மழைக் காலத்து புரட்டாசி தேய்பிறை பதின்மூன்றாம் நாளில் தேனாலும் பாயசத்தாலும் சிரார்த்தம் செய்தால் குறைவறத்திருப்தியடைவர். (மனு. அத் 2. சு 267 முதல் 273 வரை)

சிரார்த்தத்தில் விதிப்படி விதிக்கப்பட்ட பிராமணன் மாமிசத்தைத் தோஷமென்று புசியாவிட்டால் அவன் 21 ஜனனமும் பசுவாகப் பிறப்பான். (மனு. அத்.5.சு 35)

சூத்திரனை சிரார்த்தத் தினத்தன்று வீட்டை விட்டு வெளிப்படுத்த வேண்டாம். (மனு. அத்.3.சு 242)

பெயர் வைப்பதிலும் வேறுபாடு

பிராமணனுக்கு மங்களத்தையும், சத்திரியனுக்குப் பலத்தையும், வைசியனுக்குப் பொருளையும், சூத்திரனுக்குத் தாழ்வையும் காட்டுகிறதான பெயரை இடவேண்டியது. சூத்திரனுக்குத் தாஸன் என்ற தொடர் பெயராக இட வேண்டியது. (அத் 2. சு.31-32)

பிராமணனுக்குப் பஞ்சு நூலும் சத்ரியனுக்கு சணப்ப நூலாலும் வைசியனுக்கு வெள்ளாட்டின் மயிராலும் மூன்று வடமாகத் தோளில் பூணுால் தரிக்க வேண்டியது. (அத்2. சு.44)

பன்றியும் - சூத்திரனும்

பன்றியின் மோத்தலினாலும், கோழிச் சிறகின் காற்றினாலும், நாயின் பார்வையினாலும், சூத்திரன் தொடுதலாலும் பதார்த்தம் அசுத்தமாகின்றது. (அத்3.சு,241)

சிரார்த்த உணவு சூத்திரனுக்குக் கூடாது

எவன் சிரார்த்தஞ்செய்து அன்னம் முதலியவற்றை சூத்திரனுக்குப் போடுகிறானோ அந்த மூடன் கால சூத்திரமென்னும் நரகத்தில் தலைகீழாக விழுகிறான். (அத் 3. சு. 249)

அந்த சிரார்த்தத்தில் (சூத்திரனுக்கு தானஞ்செய்யப்பட்ட சிரார்த்தத்தில்) புசித்த பிராமணன் தன் மனைவி புணர்ச்சியினாசையால் வந்தபோதிலும், அவளுடன் அன்று சம்போகஞ் செய்தால் அவளுடைய மலத்தில் அந்த மாதம் முழுவதும் அவனுடைய பிதுர்க்கள் மூழ்குகிறார்கள். (அத்.3.சு .250)

சூத்திரன் யார்?

சூத்திரன் என்பவன் ஏழு வகைப்படும்:-

1. யுத்தத்தில் புறங்காட்டி ஓடுபவன்.
2. யுத்தத்தில் கைதியாகப் பிடிக்கப்பட்டவன்.
3. பிராமணனிடத்தில் பக்தியினால் ஊழியஞ் செய்கிறவன்.
4. விபசாரி மகன்.
5. விலைக்கு வாங்கப்பட்டவன்.
6. ஒருவனால் கொடுக்கப்பட்டவன்.
7. தலைமுறை தலைமுறையாக ஊழியம் செய்கிறவன். (அத் 8. சு. 415)

சூத்திரனுக்குத் தர்மம்

சூத்திரன் சுவர்க்கத்திற்காவது , ஜீவனத்திற்காவது அல்லது இரண்டிற்குமாவது , பிராமணனையே தொழவேண்டும். இவன் பிராமணனை அண்டிய சூத்திரன் என்று ஒருவனுக்குப் பெயர் வந்தால் அதே அவனுக்குப் பாக்கியம். (அத் 10. சு .122)

பிராமணர்களை வழிபடாததனாலும் உபநயனம் முதலிய சடங்குகள் செய்து கொள்ளாததனாலும் சத்திரியர் வரவர சூத்திரத் தன்மை அடைந்தார்கள். (அத்10. சு.43)

பிராமணன் உண்டு மிகுந்த உணவு(எச்சில்) உடுத்திக் கிழிந்த ஆடை, சாரமற்ற தானியம்(பதர்) இவைகளைப் பிராமணன், சூத்திரன் ஜீவனத்திற்குக் கொடுக்க வேண்டும். (அத்.10.சு.,125)

சூத்திரனைக் கூலி கொடுத்தோ, கொடாமலோ பிராமணர் வேலை வாங்கலாம், பிராமணனுக்குத் தொண்டு செய்யவே சூத்திரனைப் பிரம்மா படைத்திருக்கிறார். (அத்.8. சு 413)

சூத்திரன் பிராமணனுக்குப் பணிவிடை செய்யும்படி அரசன் சொல்ல வேண்யது, அப்படிச் செய்யாவிட்டால் அரசர்கள் தண்டித்து அங்ஙனம் செய்யச் சொல்ல வேண்டியது. (அத் 8. சு. 235)

சூத்திரன் மற்ற மூன்று வருணத்தாருக்கும் பொறாமையின்றி பணி செய்வதை முக்கியமான தர்மமாக ஏற்படுத்தினார்; இதனால் அவனுக்குத் தானம் முதலியவையும் உண்டென்று தோன்றுகிறது. (அத் 1. சு.91)

சூத்திரன் பொருளைக் கொள்ளையிட வேண்டும்

யாகம் செய்யாதவனுடைய (சூத்திரன்) பொருள் அசுரர் பொருளாகும். ஆகையால் அதைக் கொள்ளையிடுவது தர்மமாகும். (அத். 7. சு.24)

செல்வம் உள்ள சூத்திரன் வீட்டில் சிறிதும் தயங்காமலும் கேளாமலும் பலாத்காரத்தினாலும் கொள்ளையிடலாம். (அத்.11. சு.13)

சூத்திரன் பொருள் சம்பாதிக்கத் தக்கவனாயிருந்தாலும், குடும்பத்திற்கு உபயோகமானதைவிட அதிகப் பொருளை சம்பாதிக்கக் கூடாது. அப்படிச் சம்பாதித்தால் தன்னால் உபசரிக்கத்தக்க பிராமணனையே இம்சை செய்யவேண்டிவரும். (அத்.10.சு.129)

சூத்திரர்களுக்குத் தண்டனை

சூத்திரன், பிராமணர்களைத் திட்டினால் அவன் நாக்கை அறுக்க வேண்டும். (அத்.8.சு.270)

சூத்திரன் பிராமணன் பெயர்,சாதி இவைகளைச் சொல்லித் திட்டினால் அவன் வாயில் பத்து அங்குல நீளமுள்ள இரும்புக் கம்பியைக் காய்ச்சி எரிய எரிய வைக்க வேண்டும். ( அத்.8.சு.271)

சூத்திரன் பிராமணனைப் பார்த்து "நீர் இதைச் செய்ய வேண்டும்'' என்று உபதேசம் செய்தால் அவன் வாயிலும், காதிலும் எண்ணெய்யைக் காய்ச்சி ஊற்ற வேண்டாம். (அத்.8.சு.272)

பிராமணனுடைய தலைமயிர் தாடி, மீசை, கால், கழுத்து, ஆண்குறி இவைகளைப் பிடித்த சூத்திரனின் கைகளை யோசிக்காமல் அறுக்க வேண்டும். (அத்,8,283.)

சூத்திரன் பிராமணனுடன் ஒரு ஆசனத்தில் உட்கார்ந்தால், இடுப்பில் சூடுபோட வேண்டும்; அல்லது ஊரைவிட்டுத் துரத்த வேண்டும். (அத்.8.சு.281)

சூத்திரன் பிராமணனின் எந்தெந்த உறுப்புகளை கையினாலும் தடியினாலும் தாக்குகிறானோ, அந்தந்த உறுப்புகளை நறுக்கவேண்டும் அடித்தால் கையையும், உதைத்தால் காலையும் வெட்டிவிட வேண்டும். (மனு. அத் 9. சு.280)

சூத்திரன் பிராமண சாதிக்குறியை - பூணுால் முதலியதைத் தரித்தால் அரசன் சூத்திரனின் அங்கங்களை வெட்டிவிட வேண்டும். (மனு. அத் 9. சு.224)

சூத்திரன் பிராமணர் பொருளை அபகரித்தால், சித்ரவதை செய்து கொல்ல வேண்டும் (மனு. அத் 9. சு.248)

சூத்திரன் தன் தொழிலைவிட்டு உயர்குலத்தோனுடைய தொழிலைச் செய்தால் அவன் பொருள் முழுவதையும் பறித்துக் கொண்டு அரசன் அவனை நாட்டை விட்டுத் துரத்திவிட வேண்டும். (மனு. அத் 9. சு.96)

விபசார தண்டனை

பிராமணரல்லாதார் பிராமணன் மனைவியைக் கூடினால் அவர் உயிர் போகும்வரை தண்டிக்க வேண்டும். (மனு. அத் 8. சு.359)

சூத்திரன் காவல் இல்லாது திரிகிற பிராமணப் பெண்ணைக் கூடினாலும் அவனது பீஜம், ஆண்குறியை அறுக்க வேண்டும்! காக்கப்பட்ட பிராமணப் பெண்ணைக் கூடினால் உடல் முழுவதையும் துண்டு துண்டாய் வெட்டி அவனுடைய பொருளையும் கொள்ளையிட வேண்டும். (மனு. அத் 8. சு.374)

சத்தியம் கேட்க வேண்டிய முறை

சூத்திரனை நெருப்பில் பழுக்கக் காய்ந்த மழுவைக் கையால் எடுக்கச் செய்யவேண்டும் அல்லது தண்ணீரில் அமிழ்த்த வேண்டும். (மனு. அத் 8. சு.114)

சூத்திரன் மழுவெடுத்ததனால் கை வேகாமலும் தண்ணீரில் அமிழ்த்தப் பட்டதனால் மிதக்காமலும், சாகாமலும் இருந்தால் தான் அவன் சொல்லும் பிரமாணத்தை சத்தியம் என்று உணர வேண்டும். (அத் 8. சு.115)

சூத்திரன் அடிமைத் தொழிலைத் தவிர வேறு தொழிலைச் செய்ய தகுதியற்ற தேசம் யாதோ அந்த இடம் பிராமணன் வசிக்க உரியதாகும். (அத் 2. சு.24)

சூத்திரன் ராசாவாயிருக்கும் இராச்சியத்திலும், தருமம் அறியாதவர்கள், பாஷாண்டிகள் இவர்கள் வசிக்கும்படியான கிராமத்திலும் சமீபத்தில் சண்டாளர் வசிக்கின்ற கிராமத்திலும் பிராமணர் வாசஞ்செய்யப்படாது. (அத் 4. சு.61)

சூத்திரன் வேதம் ஓதக் கூடாது

சூத்திரனுக்கு இம்மைக்கு உபயோகமான அர்த்த சாஸ்திரத்தை சொல்லி வைக்கலாகாது. தனக்குச் சிஷ்யனாகாத சூத்திரனுக்கு உச்சிட்ட அன்னத்தைக் கொடுக்கக்கூடாது ஓமம் பண்ணி மிகுதியை சூத்திரனுக்குக் கொடுக்கலாகாது. தருமம், விரதம் இவைகளை ஒரு பிராமணனை முன் வைத்துக்கொள்ளாமல் நேராய் அவனுக்கு உபதேசிக்கக்கூடாது.

சாவிலும் பேதம்

சூத்திரன் இறந்துபோனால் ஊருக்குத் தெற்குப் பக்கத்திலும், வைசியன் இறந்துபோனால் மேற்குப் பக்கத்திலும். சத்திரியன் இறந்து போனால் வடக்குப்பக்கத்திலும், பிராமணன் இறந்துபோனால் கிழக்குப் பக்கத்திலும் எடுத்துக்கொண்டு போக வேண்டியது. (அத் 5. சு.92)

பிராமணன் சொல்படியே அரசு நிர்வாகம்

அரசன் தினந்தோறும் காலையில் எழுந்து மூன்று வேதமோ தினவர்களாயும், நீதி சாஸ்திரவித்வான்களாயும் இருக்கிற பிராமணனை உபசரித்து அவர்கள் சொல்லுகிறபடி நீதிசெலுத்த வேண்டியது. (அத் 7. சு.37)

எந்த அரசன் ராச்சியத்தில் வேதமோதினவன் சாப்பாட்டுக் கில்லாமல் துன்பப்படுகிறானோ, அந்த அரசன் தேசமெல்லாஞ் சீக்கிரத்திலேயே துன்பப்பட்டு அழிந்துவிடும். (அத் 7.சு.134)

மனுதரும (வர்ணாசிரம) முறைப்படி ராஜ்யபரிபாலனம் செய்யாமல் இருக்கிற அரசனை அந்தத் தண்டத்தைக்கொண்டே மந்திரி முதலானவர்கள் கொன்றுவிடலாம். (அத் 6. சு.26)

சூத்திரன் ஒருபோதும் தீர்மானம் செய்யலாகாது

பிராமணன் அரசனுடைய சக்தியை லட்சியம் செய்யாமல் தன் சக்தியைக் கொண்டே சூத்திரனை அடக்கவேண்டும். வர்ணாசிரமப்படி நடக்கவில்லையானால் பிராமணர்கள் ஆயுதம் எடுத்து சண்டை செய்ய வேண்டும். (அத் 8. சு.348)

சூத்திரன் நீதி செய்யக்கூடாது

எந்தத் தேசத்தில் அரசன் செய்ய வேண்டிய தரும விசாரணையைச் சூத்திரன் செய்கிறானோ அந்தத் தேசம் முழுவதும் பார்த்துக் கொண்டிருக்கும்பொழுதே சேற்றில் அகப்பட்ட பசுவைப்போலவே துன்பப்படுகிறது. (அத் 8. சு.21)

புதையலிலும் பிராமணனுக்குப் பங்கு

அரசன் பூமியிலிருந்து புதையல் கண்டெடுத்தால் அதில் பாதியை பிராமணர்களுக்கு தானஞ்செய்து மற்றதை தன் பொக்கிஷத்தில் சேர்த்துக்கொள்ளவேண்டியது. (அத் 8. சு.38)

பிராமணனுக்குக் கொலை தண்டனை கிடையாது

பிராமணனுக்குத் தலையை முண்டிதஞ் செய்வது (மொட்டை அடிப்பது) கொலைத் தண்டனையாகும். மற்ற வருணத்தாருக்கு கொலைத் தண்டனையுண்டு. (அத் 8. சு.379)

சர்ப்பம், பிராமணன் இளைத்திருந்தாலும் அவனை அவமானம் செய்யக் கூடாது. (அத் 4. சு.135-6)

பிராமணன் கொடிய குற்றம் செய்தவன் ஆயினும் அவனைக் கொலை செய்யாமலும் துன்பப்படுத்தாமலும் அவன் பொருளைக் கொடுத்து அயலுாருக்கு அனுப்ப வேண்டும். (அத் 8. சு.380)

பெண்ணடிமையின் கொடுமை

படுக்கை, ஆசனம், அலங்காரம், காமம், கோபம், பொய் ,துரோக சிந்தை இவற்றினை மாதர் பொருட்டே மனுவானவர் கற்பித்தார். ( அத் 9. சு.17)

பிள்ளை இல்லாமல் அந்தக் குலம் நசிக்கிறதாக இருந்தால் அப்போது ஸ்திரீ தன் கணவன், மாமனார் முதலானவர்களின் உத்திரவு பெற்றுக்கொண்ட தன் மைத்துனன் அல்லது தன் கணவனுக்கு ஏழு தலைமுறைக்குட்பட்ட பங்காளி இவர்களோடு மேற்சொல்லுகிறபடி புணர்ந்து குலத்திற்குத் தக்கதான ஒரு பிள்ளையைப் பெற்றுக்கொள்ளலாம். (அத் 9. சு.59)

கணவன் துராசாரமுள்ளவனாக இருந்தாலும் அந்நிய ஸ்திரீலோலனாயிருந்தாலும், நற்குணம் இல்லாதவனாக இருந்தாலும் பதிவிரதையான ஸ்திரீயானவள் அவனைத் தெய்வத்தைப்போல பூசிக்கவேண்டியது. (அத் 5. சு.154)

பால்யத்தில் தகப்பன் ஆக்ஞையிலும், யெளவனத்தில் கணவன் ஆக்ஞையிலும், கணவன் இறந்த பின்பு பிள்ளைகள் ஆக்ஞையிலும் இருக்க வேண்டியதல்லாமல் ஸ்திரீகள் தன் சுவாதீனமாக ஒருபோதும் இருக்கக் கூடாது. (அத் 5. சு.148)

பெண்களையும், பிராமணரல்லாதாரையும் கொல்லுதல் பாதகமாகாது. (அத் 11 சு.65)

தனக்கு பொக்கிஷ நாசம் முதலிய மேலான ஆபத்து வந்தாலும் அரசன் அதிகத் தீர்வையை ஏற்படுத்தி பிராமணர்களுக்குக் கோபம் வரச் செய்யக்கூடாது. அவர்கள் கோபித்தால் இவன் சேனையோடும். வாகனத்தோடும் அழிந்துபோகும்படி சபிப்பார்கள். ( அத் 9. சு.343)

வைதீகமாக இருந்தாலும், லெளகீகாக இருந்தாலும் மூடனாயிருந்தாலும் பிராமணனே மேலான தெய்வம். (அத் 9. சு.317)

ஒளியுள்ள அக்கினியானது மயானத்தில் பிணத்தைத் தகித்தாலும் நிந்தனை இல்லாமல் எப்படி ஹோமத்தினால் விர்த்தி செய்யப்படுகின்றதோ அப்படியே பிராமணன் கெட்ட காரியத்தில் ஈடுபட்டிருந்தாலும் பூஜிக்கத் தக்கவன்; மேலானவன். (அத் 9. சு.318)

அனுப்பி உதவியவர்:
விடாது கருப்பு ([email protected])


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com