ஹில்லா திட்டம் நீர் பாதையென்பது நீலகிரி மலையின் உச்சியிலிருந்து அடிவாரமான பில்லூர் அணைக்கு மலையை அதன் உயரத்திற்கு உள்ளேயே குடைந்து செல்வதாகும்,

25.4.2013ல் தமிழக முதல்வர் அவர்கள் சில்லஹல்லா 2000 மெகாவாட் மின் நீரேற்றுத் திட்டம் பற்றிச் சட்டப் பேரவையில் அறிவித்தார். இது 7,000 கோடி ரூபாய் செலவில் 8, 10 ஆண்டுகளில் நிறைவேற்றப்படக் கூடும் என்பதனையும் அறிவித்தார்.

தமிழக அரசின் விஷன் 2023ன் கொள்கை அறிவிப்பின் படியான தயாரிப்பு திட்டங்களில் இதுவும் ஒன்று. எனினும் இத்திட்டம் குறித்து பெரிதாக யாரும் அறிந்திருக்கவில்லை.

2013--2014 ம் ஆண்டிலேயே இத்திட்டத்திற்கான கள ஆய்வும் சர்வேயும் தொடங்கப்பட இருக்கின்றன. எனவே திட்டத்தின் முழுவடிவம் இனியே கிடைக்க வேண்டும். திட்டம் பற்றிய பொதுவான கருத்தாக்கத்திலேயே நமது ஆய்வுக்கான வாய்ப்புள்ளது.

முதலில் நீலகிரி மலையில் உள்ள அணைகள் மற்றும் நீர் மின் திட்டங்கள் குறித்தும் பொதுவான தகவல்களைத் தெரிந்து கொள்வோம். இம்மலையில் உற்பத்தியாகும் பவானி ஆறு இரு பகுதிகளாகப் பிரிந்து வருகிறது. கிழக்குப் பகுதியில் முக்குறுத்தி, பைக்காரா, அணைகள் வழியாக சிஸ்கார நீர்மின் நிலையம், அதன் கீழே மோயர் நீர்மின் நிலையம் எனக் கடந்து பவானி அணையை அடைகிறது.

இன்னொரு பகுதி தென்மேற்குத் திசையில் பயணித்து குந்தா 5,1,2,3,4 என நீர் மின் நிலையங்களை கடந்து மேட்டுப்பாளையம் வழியாகப் பாய்ந்து பவானி அணையில் சேர்கிறது. சில்ல ஹில்லா திட்டம் இந்த தென்மேற்கு பகுதியில் பாயும் ஆற்றில்தான் திட்டமிடப்படுகிறது.

இத்திட்டத்தின் முக்கியத்துவமே நீலகிரியின் மலையுச்சியில் உள்ள அவலாஞ்சி, எமரால்டு அணையையும், கிட்டத்தட்ட மலையடிவாரத்தில் உள்ள பில்லூர் அணையை நேரடியாக இணைக்கும் திட்டமாகும். இத்திட்டத்தின் நீர்ப் பாதையென்பது இன்று மலைப்பாதைகளில் உள்ள குந்தா1, குந்தா2, குந்தா3, நீர்மின்நிலையங்களை ஒதுக்கிவிட்டு, நீலகிரி மலையின் உச்சியிலிருந்து அடிவாரமான பில்லூர் அணைக்கு மலையை அதன் உயரத்திற்கு உள்ளேயே குடைந்து செல்வதாகும், இந்த மின் திட்டத்தின் மின் நிலையம், நீலகிரி மலைக்குள்ளாக, மேல்பரப்பிலிருந்து 5.7 கிலோமீட்டர் உள்ளாக குகைவீடு போன்று அமைப்பதாகும், ஆக இத்திட்டம் நீலகிரி மலையின் வயிற்றுப்பகுதியில் அமையப்போகிறது. வாயாக சில்லஹால்லா அணையென்றால், வெளிப்பகுதி பில்லூர் அணையாக அமையும்.

இத்திட்டம் பற்றி மின்வாரியத்தின் அறிக்கையையும், முதல்வர் அவர்கள் சட்டமன்றத்தில் அறிவித்துள்ளவை மட்டுமே நமக்கு தகவலாக உள்ளது. மேல் பவானி அணையிலிருந்து குந்தா 5 மின் நிலையம் வழியாக வரும் நீர் அவலாஞ்சி அணைக்கு வந்து சேர்கிறது. மேல் பவானி அணையே நீலகிரி உச்சியெனக் கொள்ளலாம்.

இந்த அவலாஞ்சி அணையுடன், எமரால்டு என்ற அணையின் நீரும், இணைக்கப் பட்டுள்ளன. இந்த அணைகளின் நீரே குந்தா 1,2,3, இறுதியாக பில்லூருக்கும் பிறகு (குந்தா 4) மின் நிலையங் களுக்குள் செல்கிறது. இத்திட்டத்தின் படி ”சில்ல ஹல்லா” என்ற ஆற்றினைத் தடுத்து அணைக் கட்டுவதாகும். இந்த அணையின் நீரை அவலாஞ்சி, எமரால்டு அணை யுடன் சுரங்கப்பதை மூலம் இணைக்கப்படும். இந்த இணைப்புச் சுரங்கப் பாதை மலையின் மேல் பகுதியிலிருந்து சமமட்டத்தில் இருக்கும். இதன் நீளம் 2.75 கிலோமீட்டர் ஆகும். இவ்வாறு இணைக்கப்பட்ட அணைகளின் நீர்க் கொள்ளளவு (5.5+2.25) 7.75 டி.எம்.சி.யாக இருக்கும்.

இந்த நீரை 3,800 மீட்டர் (3.8 கிலோ மீட்டர்) ஆழத்திற்கு தலைநீர்ப்பாதையாக (head race tunnel) மின் உற்பத்தி நிலையத்திற்கு கொண்டுச் செல்லப்படும். இந்த உயர் அழுத்த நீர் பாதையினை காக்கும், நீர்த்தடையை வாங்கும் கோபுரமாக ‘‘சுர்ஜி” சுரங்கம் இரண்டு அமைக்கப்படும் என்கிறது. இது தலை நீர் பாதையிலிருந்து மலையின் பரப்புக்கு வரும். இதன் ஆழம் 3900 மீட்டர் (3.9 கிமீ) ஆகும். இதில் இரண்டு சுரங்கம் அமைக்கப்படும். எனவே தலை நீர் பாதை, ஒன்றாக இல்லாமல் இரண்டு பாதையாக இருக்க வேண்டும். அது மலைப்பரப்பிலிருந்து 3.9 கிலோ மீட்டர் ஆழத்தில் இருக்கக்கூடும்.

இத்தலைநீர் மின்உற்பத்தி இயந்திரங்களைக் கடந்து கடை வழிநீராக (tail race) 8.98 கிலோ மீட்டர் சுரங்கப் பாதை வழியாக பில்லூர் அணைக்கு வந்து சேரும்.

இப்பொழுது மின் உற்பத்தி நிலையம், மலையின் வயிற்றுப் பகுதியில் உள்ளதால், இதற்கு செல்வதற்கான பாதை அமைப்பு வேண்டும், (access tunnel). இந்தப் பாதை மலைக்குள்ளாக 5.75 கிலோ மீட்டர் தூரத்திற்கு அமைக்கப்படும். இது பாதை, மற்றும் இயந்திரங்களை மலைக்குள் கொண்டு போகும் வழி என்பதால் கூடம் பாறையில் உள்ளது போல குதிரையின் லாட அமைப்பிலான 45 அடி வட்டமாக இருக்கலாம்.

இது போக கடை நீர் போகும் பாதை யிலும் “சர்ஜூ” கோபுரங்கள் வரும். மின் உற்பத்தி சாதனங்கள் தொடர் பான கேபிள்கள், மலைக்குள்ளிருக்க தேவையாக காற்றோட்டப் பாதைகள் என துணைச் சுரங்க வழி களும் தேவைப்படும்.

இதில் பெரிய இடர்பாடு, பில்லூர் அணையின் நீர் தான், இதன் கொள்ளளவு 1.5 டி.எம்.சி தான். இந்த அணையிலிருந்து தான், கோவை பல்லடம் இடைப்பட்ட கிராமங் களுக்கு குடிநீர் கொண்டு செல்லப் படுகிறது. இந்த அணையின் வெளியேற்று நீர் தான் அவிநாசி திருப்பூர் இடைப்பட்ட பகுதிகளுக்கும் குடிநீர் செல்கிறது. பில்லூர் அணைக்கு குந்தா மின்னிலையங் களிலிருந்து வரும் நீருடன், கேரளத்திலிருந்து ‘‘முக்காலி” வழியாக வரும் நீரும் செருகிறது. இப்பொழுது கேரளத்தில் தடுப்பணைகள் கட்டுப்படுவதால், ஏற்கனவே கோவை நகரில் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. எதிர்காலத்தில் இந்த நீர் பில்லுருக்கு வருவதில் சிக்கல் உருவாக்கலாம்.

இவற்றையும்விட இன்று பில்லூர் அணையில் படிந்திருக்கும் “ அடி வண்டல்” இதன் கொள்ளளவை பாதிக்கும் மேல் குறைத்துவிட்டது வண்டல் படிவம் 65 சதம் இருப்பதாக கணக்கிடப்படுகிறது எனவே வண்டலை அகற்றும் பணியே எல்லாத் திட்டங்களுக்கும் முதன்மையாக இருக்கும், இருக்க வேண்டும். இத்திட்டம் சாத்தியமா? இல்லையா? என்பதற்கு அப்பால் வண்டலை அகற்றும் பணி முதன்மையானதாக இருக்கும்.

நீலகிரி மலையையே குடைந்து கொண்டு போகும் இத்திட்டம் எதிர்கால மின் பற்றாக்குறைக்கான திட்டமல்ல. இது மின் பற்றாக்குறையை சந்திக்காது. இது உபரியாக மின் உற்பத்தி கிடைக்கும் போது அதைப் பயன்படுத்தி மின்சாரம் நீரை உயரத்தில் சேமித்துக் கொள்வதும் பின்பு மின்சாரம் அதிகம் தேவைப்படும் நேரத்தில் அதே நீரைக்கொண்டு உற்பத்தி செய்து கொள்வதுமாகும். ஒருவழியில் இது மின்சார சேமிப்புத் திட்டம் என்று சொல்லலாம்.

ஆனால் பில்லூர் அணையின் நீர், குடிநீர், விவசாயத் தொழில் களுக்கான ஆதாரமாக இருக்கும் நிலையில் மின் உற்பத்திக்காக மட்டும் எப்படி எதிர்காலத்தில் தேக்கி வைக்க முடியும்? அத்துடன் பில்லூர் அணைக்குப் பிறகு சமவெளி ஆறாக (பவானி ஆறாக) மாறும் நிலையில், குறைந்தபட்ச சுற்றுச்சூழலுக்கான நீரோட்டமும் அவசியமாகும். இவையெல்லாம் நீரோட்டம் குறித்தவை.

கிட்டத்தட்ட 22.5 கிலோமீட்டர் தூரத்திற்கு மேலாக மலையின் உட்பகுதியை குடைவது எவ்வளவு பெரிய சுற்றுச்சூழல் கேடுகளை உண்டாக்கும்! இத்திட்டம் நிறைவேறும் காலத்தில், நீலகிரியின் காடு எவ்வளவு பாதுகாப்பாக இருக்கும்? வெட்டி எடுக்கப்படும் பகுதி எங்கே கொட்டப்படும்?

இது மலை மேல்பகுதி மீது அமைக்கப்படும் அணைகளை இணைக்கும் சுரங்கம் போன்றதல்ல. மலையின் நடுப்பகுதியையே குடைந்து செல்லும் பாதை. சுற்றுச்சூழல் குறித்த பெரிய விவாதம் தேவைப்படுகிறது. மின்சாரம் வேண்டும் அதற்காக இயற்கையுடன் போரிட வேண்டுமா? இத்திட்டம் நீர் ஆதாரத்தை பாதிக்காதா?

உத்திரகாண்டில் பாகிரதி நதியில் “டெஹரி” அணை கட்டிய பின்னர் நதியின் நீர்வரத்து வினாடிக்கு ஆயிரம் கன அடியிலிருந்து 200 கன அடியாக குறைந்து விட்டது என்று சொல்லப்படுகிறது. “பாகிரதி” ஆறு, மத நம்பிக்கையுடன் தொடர்புடையது இன்று கடவுள் கோபம் கொண்டுவிட்டதாக நம்பிக்கை பரவுகிறது. எப்படியாயினும் இயற்கை நமது அன்னை, அவள் தொழுவதற்கு மேம்பட்டவள். அவளை பகைக்குமா இத்திட்டம்? அறிவு சார் வல்லுனர்கள் இதை அலசி ஆராய வேண்டும்.