Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
KeetruHistoryTamilnadu
டி.கே. பட்டம்மாள் - சாதிமீறிய இசைப்பயணம்
சோழ.நாகராஜன்

தமிழை இயல், இசை, நாடகம் என வகைப்படுத்தி முத்தமிழ் என்கிறோம். மா, பலா, வாழை நமக்கு முக்கனிகள். நமது பெருமைக்குரிய தமிழ் மன்னர்கள் சேர, சோழ, பாண்டியரென்ற மூவேந்தர். குறளுக்கும் மூன்று அதிகாரங்களே-அறம், பொருள், இன்பம் என்று. அதுபோன்றே நமது செவ்வியல் இசைமரபிலும் தியாகய்யர், முத்துசாமி தீட்சிதர், சியாமா சாஸ்திரி எனும் மூவரும் தமிழிசைக்கு சீர்காழி மூவர் என அழைக்கப்படும் அருணாசலக் கவிராயர், முத்துத் தாண்டவர், மாரிமுத்துப் பிள்ளை ஆகியோரும் முன்னோடிகளாவர். இப்படி நமக்கு எங்குபோனலும் மூன்று; எதற்கெடுத்தாலும் மூன்று.

D.K.Pattammal தமிழகத்து இசை உலகில் அன்று ஆண்பாடகர்கள், கலைஞர்கள் நூற்றுக்கணக்கில் கோலோச்சிக் கொண்டிருந்தபோது பெண்கள் மூவர் இசைத் தேவதைகளாக ஒளிவீசி வலம் வந்தனர். எம்.எஸ். சுப்புலட்சுமி, எம். எல். வசந்த குமாரி மற்றும் டி.கே. பட்டம்மாள் ஆகியோரே அந்த மூன்று இசைப் பேரொளிகள். இவர்களில் எம்.எஸ்.சுப்புலட்சுமியையும் எம்.எல். வசந்தகுமாரியையும் ஏற்கெனவே நாம் இழந்துவிட்டோம். இப்போது பட்டம்மாளும் தன் இசை மூச்சை நிறுத்திக் கொண்டுவிட்டார்.

காஞ்சிபுரம் அருகிலுள்ள தாமல் எனும் சிற்றூரில் கிருஷ்ணசாமி தீட்சிதருக்கும் காந்திமதி என்ற ராஜம்மாளுக்கும் நான்கு குழந்தைகள் பிறந்தன. மூன்று ஆண் பிள்ளைகளுக்கு மத்தியில் ஒரே செல்ல மகளாக 1919 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 28 ஆம் தேதி பிறந்தார் பட்டம்மாள்.

கிருஷ்ணசாமி தீட்சிதருக்கு இசையில் மிகவும் ஆர்வமிருந்தது. அவரது மனைவி ராஜம்மாள் மிகச்சிறந்த பாடகியாகவே வளர்ந்தவர். இருந்தும் உறவினர்கள், நண்பர்கள் மத்தியில்கூட பாடுவதற்கு அவரது வைதீகக் குடும்பப் பின்னணி அவருக்குத் தடையாக இருந்தது. இந்தச் சூழலிலும் அவைகளது மகன்கள் டி.கே.ரங்கநாதன், டி.கே.நாகராஜன், டி.கே.ஜெயராமன் ஆகியோரைப் போலவே பட்டம்மாளும் மிக இளவயதிலேயே பாடுவதில் குறிப்பிடத்தக்க திறமையை வெளிப்படுத்தினார்.

சிறுமியாக இருக்கும்போதே இசைக் கச்சேரிகளைப்போய்ப் பார்ப்பதும், வீட்டுக்குத் திரும்பி வரும்போது அந்தக் கச்சேரியில் பாடகர் பாடியதுபோலவே சாலையில் பாடிக்காட்டிக்கொண்டே வருவதும் குழந்தைப் பட்டம்மாளுக்கு ஒரு விளையாட்டு. ஆனால் அப்போது அவருக்கு முறைப்படி இசைப்பயிற்சி எதுவும் தரப்படவில்லை. வீட்டிலும் தந்தை சொல்லித் தந்த ஸ்லோகங்களையும் பக்திப் பாடல்களையும் மட்டுமே அவர் பாடிக்கொண்டிருப்பார். ஒரு தெலுங்கு வாத்தியார் மட்டும் அவ்வப்போது அவருக்குக் கொஞ்சம் பயிற்சி தந்துகொண்டிருந்தார்.

பட்டம்மாளுக்கு 10 வயதிருக்கும்போது மெட்ராஸ் கார்ப்பரேஷன் ரேடியோ (இப்போது ஆல் இந்தியா ரேடியோ) முதன்முதலில் பாட வாய்ப்பளித்தது. அதற்கு மூன்றாண்டுகளுக்குப் பிறகு 1932-இல் சென்னை ரசிக ரஞ்சனி சபாவில் பட்டம்மாளின் முதல் இசைக் கச்சேரி அரங்கேறியது. அதற்கு ஓராண்டுக்குப் பிறகு அவர் சென்னை சென்று அங்கே தொடர்ந்து இசை நிகழ்ச்சிகளை வழங்கத் தொடங்கினார். எழும்பூர் பெண்கள் கிளப்பில் இசை பாடி பலரது பாராடுதல்களைப் பெற்றார்.

1939-இல் பட்டம்மாளுக்கும் ஆர். ஈஸ்வரனுக்கும் திருமணம் நடந்தது. விரைவிலேயே அவர் ஒரு மிகச்சிறந்த பாடகியாக உயர்ந்தார். 65 ஆண்டுகள் தமிழகத்தின், இந்தியாவின் இசைவானில் அவர் ஒரு நிகரற்ற இசைப் பறவையாய் சிறகடித்து வலம் வந்தார்.

முத்துசாமி தீட்சிதரின் இசை உருவாக்கக் களஞ்சியத்திற்கு உயிரூட்டி உலவச் செய்ததில் டி.கே.பட்டம்மாள் தனியொரு தாரகையெனத் திகழ்ந்தார். பாபநாசம் சிவன் போன்றவர்களின் இசையாக்கங்களை மக்களிடம் கொண்டுசோர்ப்பதிலும் பட்டம்மாள் தனி முத்திரை பதித்தார்.

D.K.Pattammal இதெல்லாவற்றையும்விட பட்டம்மாளின் சிறப்பு இன்னும் பல புதுமைப் புரட்சி முயற்சிகளில் மிளிர்ந்தன. உயர்சாதி எனப் பெருமிதம் கொண்டிருந்த பார்ப்பன வகுப்பில் இருபதாம் நூற்றாண்டின் துவக்கம்வரையிலான காலகட்டத்தில் பார்ப்பனப் பெண்கள் கலைஞர்களாக மேடையேறும் வழக்கத்திற்கு தடை இருந்தது. பிற்போக்குத்தனமான இந்தப் பெண்ணடிமை வழக்கத்தை உடைத்தெறிந்த முதல் பெண்ணாக டி,கே. பட்டம்மாள் மிக உயரிய சாதனை புரிந்திருக்கிறார். ஆமாம். அவர்தான் தாம் பிறந்த சாதியிலேயே மேடையேறி இசை முழங்கிய முதல் பெண்மணி.

அது மட்டுமல்ல... ராகம், தானம், பல்லவியை முதன்முதலில் இசைக் கச்சேரியில் கையாண்ட முதல் பெண்ணும் பட்டம்மாள்தான். காரணம், ராகம், தானம், பல்லவி எனபது கர்நாடக இசை நிகழ்ச்சியிலேயே பாடுவதற்கு மிகக் கடினமான ஒன்றாகும். பட்டம்மாள் அதனைக் கையிலெடுக்கும் வரையில் அது ஆண்களின் வலிமை மிக்க பிடியிலேயே சிக்கிக் கிடந்தது. ஏன் ஒரு பெண்ணால் அதனைக் கைக்கொள்ள முடியாது என்று துணிந்து முயன்று வெற்றியும் கண்டவர் பட்டம்மாள். அதுமட்டுமல்ல... மிகச் சிக்கலான தாளகதியிலமைந்த பல்லவிகளைக்கூட பட்டம்மாள் மிக இலகுவாகப் பாடி, அன்றைய ஆண் இசை ஜாம்பவான்களையெல்லாம் மிகுந்த மரியாதையுடன் தன்னை கவனிக்கச் செய்தார். இதன் பொருட்டு அவருக்கு பல்லவி பட்டம்மாள் என்ற பட்டப் பெயரும் வந்து சேர்ந்தது. நைனா பிள்ளை மற்றும் வித்யாலயா நரசிம்மலு நாயுடு போன்றோரிடம் சில பல்லவிகளை அவர் பயின்றார்.

பட்டம்மாளுக்கு பாபநாசம் சிவன் மூலமாக சினிமாவில் பாடும் வாய்ப்பு வந்துசேர்ந்தது. ஆனால், தேச பக்திப் பாடல்களையும் இறைவன் துதிப்பாடல்களையும் மட்டுமே பாடமுடியும் என்று பிடிவாதம் காட்டியவர் பட்டம்மாள். காதல்ரசம் கொண்ட பாடல்களைப் பாட வந்த வாய்ப்புகள் அனைத்தையும் கண்டிப்புடன் மறுத்தார் அவர். திரைப் படத்துறைக்கு அவர் போவதை முதலில் விரும்பாத அவரது தந்தை, அவர் பாடப்போகும் முதல் படமானது அன்றைய மிகச் சிறந்த திரைப்பட இயக்குநரான கே. சுப்பிரமணியம் எடுக்கும் 'தியாக பூமி' என அறிந்து மிக மகிழ்ச்சியோடு அதற்குச் சம்மதம் தெரிவித்தார். பிறகு 'நாம் இருவர்' படத்தில் பாடினார். மகாகவி சுப்பிரமணிய பாரதியின் தேசபக்திப் பாடல்கள் பட்டம்மாளைப்போல மனம் லயித்துப் பாடி பிரபலப்படுத்தியவர் அன்றைக்கு வேறு எவரும் இல்லை. இந்தியாவின் அனைத்து மாநிலங்களின் அனைத்து முன்னணி சபாக்களிலும் இசை மழை பொழிந்த பெருமை பட்டம்மாளுக்கு உரியது. உலகின் பல்வேறு பகுதிகளிலும்கூட அவர் சென்று இசை விருந்து படைத்திருக்கிறார். தனது இசை வாழ்க்கையினூடாக ஏராளமான விருதுகள் அவரைத் தேடி வந்து சேர்ந்திருக்கின்றன. அவற்றுள் கான சரஸ்வதி, சங்கீத சாகர ரத்னா, சங்கீத கலாநிதி, பத்ம பூஷண், பத்ம விபூஷண் என்று வரிசை வரிசையாக விருதுகள் அவரைப் பெருமைப்படுத்திக் கொண்டேயிருந்தன.

அந்த நாளில் கர்நாடக சங்கீதம் என்றாலே தெலுங்கும் சமஸ்கிருதமும்தான் என்றிருந்த நிலையில் பட்டம்மாள் துணிச்சலுடன் தமிழ்ப் பாடல்களைப் பாடி ரசிகர்களைப் பரவசப்படுத்தினார். பாபநாசம் சிவனின் தமிழ் கிருதிகள் அவரது இனிய குரலில் எங்கும் ஒலித்தன. பாரதியின் தேசபக்தப் பாடல்களை பட்டம்மாள் பாடிக் கேட்க வேண்டுமென்றே பலரும் தவம் கிடந்தனர். இந்தியா விடுதலை பெற்ற தினத்தன்று அகில இந்திய வானொலியில் பல மணிநேரங்களுக்கு பட்டம்மாள் பாரதியார் பாடல்களைப் பாடிப் பரவசப்படுத்திய அந்த நாளை பலரும் பல சந்தர்ப்பங்களில் நினைவுகூர்ந்துள்ளனர். பட்டம்மாள் ஒரு இசை சகாப்தம். தனித்த மேதமை கொண்டது அவரது இசைத் திறன். தமிழக இசை வரலாற்றில் டி.கே. பட்டம்மாளின் இடம் வேறெவராலும் இட்டு நிரப்பப்பட இயலாததாகும்.

- சோழ.நாகராஜன் ([email protected])


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

வாசகர்களின் கவனத்திற்கு...

நீங்கள் படித்து ரசித்த வரலாற்றுச் செய்திகளை கீற்று இணைய தளத்திற்கு அனுப்பலாம். அவ்வாறு அனுப்பும்போது செய்திக்கான ஆதாரத்தை தவறாமல் குறிப்பிடவும். அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected].


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com