Keetru Dalithmurasu
Dalithmurasu
ஜுன் 2006

“ஈன ஜாதி பறப்பயலுக்கு பஞ்சாயத்துத் தலைவர் பதவியா?''

அய். இளங்கோவன்

“ஜாதி இந்துக்கள் எறும்புக்குக்கூட தீங்கிழைக்காதவர்கள்; தாங்கள் போடும் கோலங்கள்கூட எறும்புகளுக்குத் தீனியாக வேண்டும் என்று நினைப்பவர்கள்; தாங்கள் சாப்பிடுவதற்கு முன்னால் காகத்திற்கு சோறு ஊட்டிவிட்டே சாப்பிடுவார்கள்'' "இந்து இந்தியா'வின் புகழ் இவ்வாறு வெளியுலகில் பரவிக் கொண்டிருக்கும் நிலையில், "காந்தி தேச'த்தில் தீண்டத்தகாத மக்களின் உண்மை நிலை என்ன என்பதற்கு ஒரு சான்றுதான் மேலவளவு படுகொலை. ஆம், இனவெறி இந்தியாவின் "அகிம்சை' முகம் இது!

படுகொலை செய்யப்பட்ட ஆறு பேரையும் எந்தளவுக்கு சாதி இந்துக்கள் மூர்க்கத்தனமாக வெட்டிக் கொன்றனர் என்பதை, இச்சமூகத்திற்கு உணர்த்துவதற்காகத்தான் நீதிமன்றத் தீர்ப்புரைகளை (முருகேசன் வெட்டப்பட்டதை மட்டும்) அப்படியே இங்கு வெளியிடுகிறோம்.

Melore இது இறந்தகால வரலாறு மட்டும் அல்ல; பாப்பாபட்டி, கீரிப்பட்டி போன்ற இடங்களில் தேர்தல் நடந்தாலும் இதே ஆபத்து தொடரும் என்று ஆட்சியாளர்களுக்கு உணர்த்தவும்; வெட்டப்பட்ட முருகேசனின் குருதியால் கட்டப்பட்ட தலித் அரசியல் எழுச்சி, நீர்த்துப் போய்விடாமல் தடுக்கவும்; இனி பத்தாண்டுகளானாலும் போராடி வழக்கைச் சந்தித்து, குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்றுத் தந்தாக வேண்டும் என்ற உறுதியை களப்போராளிகளுக்கு வழங்கவுமே இதை வெளியிடுகிறோம்.

முருகேசன், மூக்கன், ராஜா, பூபதி, செல்லத்துரை, சேவகமூர்த்தி ஆகியோர் யாரால், எப்படி கொல்லப்பட்டனர்? (விசாரணை நீதிமன்றத் தீர்ப்புரையிலிருந்து)

1. “ஈனப்பயலான உனக்கு எதற்கு தலைவர் பதவி, எதற்கு நஷ்ட ஈடு?'' என்றபடி, தான் பதுக்கி வைத்திருந்த (அருவாள்) ஆயுதத்தால் அழகர்சாமி முருகேசனின் வலது தோளில் வெட்டினார். பேருந்திலிருந்த பயணிகள் அலறி அடித்து இறங்கி ஓடினார்கள். அழகர்சாமி முருகேசனின் தலையைத் துண்டித்து, துண்டித்த தலையோடு மேற்கு நோக்கி ஓடினார்'' (சாட்சி கிருஷ்ணன்).

2. “மார்க்கண்டன் முருகேசனின் வயிற்றில் குத்தினார். அய்யாவு முருகேசனின் வலது உள்ளங்கையை வெட்டினார். அழகர்சாமியோ முருகேசனின் தலையைத் துண்டித்து, துண்டித்த தலையை எடுத்துக்கொண்டு வடமேற்கு திசை நோக்கி ஓடினார்'' (சாட்சி ஏகாதெசி).

3. “முருகேசனின் துண்டிக்கப்பட்ட தலை, பேருந்தின் படிக்கட்டில் வந்து விழுவதைப் பார்த்தேன். அழகர்சாமி அந்தத் தலையை எடுத்துக் கொண்டு போய்விட்டார்'' (சாட்சி மாயவர்).

4. “சக்கரமூர்த்தி முருகேசனின் கைகளை அருவாளால் வெட்டினார். அழகு முருகேசனை சரமாரியாக வெட்டினார்'' (சாட்சி கல்யாணி).

5. “அழகர்சாமி முருகேசனை அருவாளால் வெட்டினார். அழகு முருகேசனின் இடது கன்னத்தை வெட்டினார்; பாரதிதாசன் முருகேசனின் இடது கையை வெட்டினார்; நாகேஷ் முருகேசனின் இடது மணிக்கட்டை வெட்டினார். கதிர்வேல், தங்கமணி, கணேசன், மணி ஆகியோரும் முருகேசனின் வயிற்றுப் பகுதி மற்றும் மார்புப் பகுதியில் வெட்டினார்கள். அழகர்சாமி முருகேசனை வெட்டுவதைப் பார்த்தேன். முதல் வெட்டு முருகேசனின் வலது தோளில் விழுந்தது. பின்னர் முருகேசன் இழுக்கப்பட்டு மற்ற அம்பலக்காரர்களும் முருகேசனை வெட்டினார்கள், குத்தினார்கள்'' (சாட்சி பழனி).

6. “அழகர்சாமி முருகேசனின் வலது தோளில் அருவாளால் வெட்டினார். பேருந்தில் இருந்தவர்கள் அலறி அடித்துக் கொண்டு இறங்கி ஓடினார்கள். அப்போது மேலும் சில அம்பலக்கார சாதியினர் அங்கு வந்து, ஆதி திராவிடர்களைத் தாக்கினார்கள். இத்தாக்குதல்களினால் முருகேசன், மூக்கன், ராஜா, பூபதி, செல்லத்துரை, சேவகமூர்த்தி ஆகியோர் செத்துவிட்டனர். நான் பார்த்துக் கொண்டிருந்தபோது, முருகேசனின் தலையில்லா உடல் பேருந்திலிருந்து வெளியே வீசி எறியப்பட்டது'' (சாட்சி கணேசன்).

முருகேசனின் உடலில் இருந்த காயங்கள் பற்றி மருத்துவரின் சான்று :

துண்டிக்கப்பட்ட தலையில் காணப்பட்ட காயங்கள்

1. சுமார் 37 வயது மதிக்கத்தக்க, தனியாகத் துண்டிக்கப்பட்ட ஆணின் தலை தனியாகக் காணப்பட்டது. அதைப் பரிசோதித்து ஆய்வு செய்ததில் தலை 4ஆவது மற்றும் கழுத்து எலும்புகளுக்கு இடையே உள்ள குருத்து எலும்பை வெட்டியும் அதைச் சுற்றியுள்ள தசைகள், ரத்தநாளங்கள், நரம்புகள், உணவுக்குழாய், மூச்சுக் குழாய் மற்றும் தண்டுவடம் ஆகியவற்றை வெட்டிய நிலையில் காணப்பட்டது.

2. வலது தாடையில் வலது கண் புருவத்திற்கு 15 செ.மீ. வெளிப்புறமாக 15 X 15 X எலும்பு அளவு ஆழம் வரை சென்றிருந்தது வெட்டுக்காயம். அந்தக் காயத்தை அறுத்து ஆய்வு செய்தபோது அதன் கீழ் உள்ள தசைகள், ரத்தநாளங்கள், நரம்புகள் மற்றும் கீழ்த்தாடையும் புறப்பகுதியில் வெட்டிய நிலையில் காணப்பட்டது.

3. இடது கன்னத்தில் இடதுபுற புறப்பகுதிக்கு 5 செ.மீ. மேலே இடது கன்னத்தில் 4 X 1 செ.மீ. X தசை அளவு ஆழத்திற்கு ஒரு வெட்டுக்காயம் காணப்பட்டது. அந்தக் காயத்தில் அனைத்து வெட்டுக்காயங்களின் ஓரங்கள் சீராக காணப்பட்டன.

வெட்டப்பட்ட தலையில்லாத முண்டத்தில் காணப்பட்ட காயங்கள் :

பிரேதத்தின் உடல் முழுவதும் மரண விறைப்பு காணப்பட்டது.

1. தலை தனியாகத் துண்டிக்கப்பட்ட நிலையில் அந்த பிரேம் காணப்பட்டது. கழுத்து எலும்பில் 5ஆவது எலும்பு கழுத்து எலும்பு பகுதி துண்டிக்கப்பட்ட நிலையில் காணப்பட்ட பிரேதம் கழுத்துப் பகுதியில் உள்ள தசைகள், ரத்தநாளங்கள், நரம்புகள், உணவுக்குழாய், மூச்சுக்குழாய் மற்றும் தண்டுவடம் ஆகியவற்றில் வெட்டிய நிலையில் காணப்பட்டது.

2. இடது மார்பின் மார்பு காம்புக்கு 5 செ.மீ. கீழே 5 X 15 செ.மீ. இடது மார்பு அறைக்கு 7ஆவது விலா இடைவெளி சென்றிருந்த படுக்கைவாட்டில் சாய்வாக செங்குத்துக்காயம். அந்தக் காயத்தை அறுத்து ஆய்வு செய்தபோது, காயம் அதன் அடியில் உள்ள தசைகள், ரத்தநாளங்கள், நரம்புகள் மற்றும் நுரையீரலின் கீழ் கதுப்பை 4 X 1 செ.மீ. அளவில் ரத்தமும் ரத்தக்கட்டிகளும் காணப்பட்டன. காயம் கீழ் நோக்கியும் பின் நோக்கியும் சென்று இருந்தது.

3. வயிற்றின் முன்பகுதியில் தொப்புளுக்கு மேலே 7 செ.மீ. தூரத்தில் மய்யப் பகுதியில் 5 X 15 செ.மீ. வயிற்று அறைக்குள் சென்றிருந்தது குத்துக்காயம். அந்தக் காயத்தின் வழியே குடல் வெளியேறிய நிலையில் காணப்பட்டன. அந்தக் காயத்தின் முன்முனை வளைவாகவும் வெளிமுனை கூர்மையாகவும் ஓரங்கள் சீராகவும் காணப்பட்டன. அந்தக்காயம் சாய்வாக மேல்நோக்கியும் பின்நோக்கியும் சென்று கல்லீரலில் 4 X 1 செ.மீ. அளவில் முழுமையாக துளைத்துச் சென்று இருந்தது.

4. வலதுபுற வயிற்றின் தொப்புளுக்கு 4 செ.மீ. கீழே வெளிப்புறத்தில் 5.5 செ.மீ. X 1.5 செ.மீ. வயிற்று அறைக்குச் சென்றிருந்த படுக்கைவாட்டில் சாய்வான குத்துக்காயம். அந்தக் காயத்தின் முன்முனை வளைவாகவும் வெளிமுனை கூர்மையாகவும் ஓரங்கள் சீராகவும் காணப்பட்டன. அந்தக் காயத்தை அறுத்து ஆய்வு செய்தபோது, காயம் சாய்வாகப் பின்நோக்கியும் கீழ்நோக்கியும் உள்நோக்கியும் சென்று சிறுகுடலின் நடுப்பகுதியின் முன்சிறுகுடலும், நடுசிறுகுடலும் சந்திக்கும் இடத்திலிருந்து 30 செ.மீ. 70 செ.மீ. இடைவெளியில் முறையே 2.5 செ.மீ. குடல் அறைக்குள்ளும் 2.5 X .5 செ.மீ குடல் அறைக்குள்ளும் சென்ற நிலையில் காணப்பட்டது.

5. இடுப்பு எலும்பு வலதுப்புற மூட்டிலிருந்து 5 செ.மீ. மேலே வயிற்றின் எல்லைப் பகுதியில் வயிற்று அறைக்குள் சென்றிருந்த குத்துக்காயம், அந்தக் காயத்தின் முன்முனை வளைவாகவும் வெளிமுனை கூர்மையாகவும் ஓரங்கள் சீராகவும் காணப்பட்டன. அந்தக் காயத்தை அறுத்து ஆய்வு செய்ததில் காயம் மய்யப் பகுதியை நோக்கிச் சென்று, சிறுகுடலின் கடைசிப் பகுதியில் பெருங்குடலும் சிறுகுடலும் சந்திக்கும் இடத்திலிருந்து 20 X 180 செ.மீக்கு முன்புறத்தில் (முன்னதாக) முறையே 2 X 5 செ.மீ. குடல் அறைக்குள் 15 செ.மீ. X 5 செ.மீ. குடல் அறைக்குள் சென்றிருந்தது.

6. வலது தோள்பட்டையின் மேல்பகுதியில் 17 X 8 செ.மீ. X எலும்பு அளவு ஆழத்திற்கு ஒரு பிளந்த வெட்டுக்காயம் காணப்பட்டது. அந்தக் காயத்தை அறுத்து ஆய்வு செய்தபோது காயம் அதன் கீழ் உள்ள தசைகள், ரத்தநாளங்கள், நரம்புகள் மற்றும் மேல் கை எலும்பில் தலைப்பகுதி பகுதியாக வெட்டிய நிலையில் காணப்பட்டது.

7. இடது முழங்கையின் வெளிப்பகுதியில் 6 X 1.5 செ.மீ. X தசை அளவு ஆழத்திற்குப் படுக்கைவாட்டில் சாய்வான ஒரு வெட்டுக்காயம் காணப்பட்டது.

8. காயம் எண் 7க்கு 2 செ.மீ. கீழே 3.5 X 1.5 செ.மீ. X எலும்பு ஆழத்திற்கு ஒரு வெட்டுக்காயம் காணப்பட்டது.

9. இடதுபுற முழங்கையின் பின்பகுதியில் 4 X 1.5 செ.மீ. X எலும்பு ஆழத்திற்குப் படுக்கைவாட்டில் சாய்வான ஒரு வெட்டுக்காயம் காணப்பட்டது.

10. இடது முன்கையில் முழங்கைக்கு 5 செ.மீ. கீழே 5 X 1 செ.மீ. X தசை அளவு ஆழத்திற்குப் படுக்கைவாட்டில் சாய்வான ஒரு வெட்டுக்காயம் காணப்பட்டது.

11. இடது முன்கையின் உள்பகுதியில் மணிக்கட்டுக்கு 8 செ.மீ. மேலே 8 X 3.5 X தசை அளவு ஆழத்திற்குப் படுக்கைவாட்டில் சாய்வான வெட்டுக்காயம் தோல் மேல் நோக்கிய நிலையில் காணப்பட்டது.

12. இடது கையின் பின்பகுதியில் சிறுகீரல் மற்றும் மோதிர விரல் பகுதியில் படுக்கைவாட்டில் சாய்வான வெட்டுக்காயம் காணப்பட்டது.

13. வலது முன் கையில் வெளிப்பகுதியில் 3 X 2.5 செ.மீ. X எலும்பு அளவு ஆழத்திற்குப் படுக்கைவாட்டில் சாய்வான ஒரு வெட்டுக்காயம் காணப்பட்டது.

Murugesan dead body 14. வலது முன்கையின் பின்பகுதியில் 4.5 செ.மீ. X 1 செ.மீ. X எலும்பு ஆழத்திற்குப் படுக்கைவாட்டில் சாய்வான வெட்டுக்காயம். அதன் அடியில் உள்ள முன்கையில் உள் எலும்பை பகுதியாக வெட்டிய நிலையில் காணப்பட்டது.

15. முன் கையின் மணிக்கட்டிற்கு மேலே 8 செ.மீ. மேலே 4 X 1 செ.மீ. X தசை அளவு ஆழத்திற்குப் படுக்கைவாட்டில் சாய்வான ஒரு வெட்டுக்காயம்.

16. வலது முன் கையில் மணிக்கட்டிற்கு 4 செ.மீ. மேலே 3.5 X 1 செ.மீ. X தசை அளவு ஆழத்திற்குப் படுக்கைவாட்டில் சாய்வான ஒரு வெட்டுக்காயம் காணப்பட்டது.

17. வலது முதல் விரலின் இடைவெளியில் 6 X 1.5 செ.மீ. X எலும்பு ஆழத்திற்குச் செங்குத்து வாக்கில் சாய்வான ஒரு வெட்டுக்காயம். அதன் கீழ் உள்ள தசைகள், ரத்தநாளங்கள், நரம்புகள், முதலாவது விரல் கடை எலும்புப் பகுதியாக வெட்டிய நிலையில் காணப்பட்டது.

18. வலது முழங்காலின் வெளிப்பகுதியில் 10 செ.மீ. X 2.5 செ.மீ. அளவில் எலும்பு அளவு ஆழத்திற்குப் படுக்கைவாட்டில் ஒரு சாய்வான வெட்டுக்காயம். அந்தக் காயத்தை அறுத்து ஆய்வு செய்தபோது, அந்தக் காயங்கள் அதன் அடியிலுள்ள தசைகள், ரத்தநாளங்கள் மற்றும் காலில் வலதுபுற, வெளிப்புற எலும்புப் பகுதியாக வெட்டிய நிலையில் காணப்பட்டது.

19. தொப்புளுக்கு 1 செ.மீ. வெளிப்புறமாக இடதுபுற வயிற்றில் 3 அறுவை காயங்கள். 1 செ.மீ. மற்றும் 1.5 செ.மீ. இடைவெளியில் முறையே 1.5 X 5 X தசை அளவு ஆழத்தில் 2 X .5 செ.மீ. X தசை அளவு ஆழத்தில் 1 X 5 செ.மீ. தசை அளவு ஆழத்தில் மூன்று அறுவைக் காயங்கள் காணப்பட்டன.

20. வயிற்றின் வலதுபுற உட்பகுதியில் தொப்புளுக்கு 8 செ.மீ. மேலே வெளிப்புறத்தில் படுக்கைவாட்டில் சாய்வான ஒரு அறுவை காயம் 3 X 5 செ.மீ. X தசை அளவு ஆழத்தில் காணப்பட்டது. அனைத்து அறுவைக் காயங்களின் ஓரங்கள் சீராகக் காணப்பட்டன.

முருகேசனின் துண்டான தலை மற்றும் துண்டிக்கப்பட்ட உடம்பில் மட்டும் 25 இடங்களில் 25 வகையான வெட்டு / குத்துக்கள்

அடுத்த இதழிலும்