சக்தி அருளானந்தம் கவிதைகள்
சாயை
பஞ்சாரத்தினுள் அடைபட
தன்குஞ்சுகளுடன் சென்று கொண்டிருந்தது
தாய்க்கோழி
தாயைத் தொடர்ந்த குஞ்சுகளில்
பின் தங்கிய ஒன்று
அரிந்தெறியப்பட்ட
காலிபிளவர் அடிதண்டில்
ஏறி நின்று சீசா ஆடியது
தான் கண்டடைந்த புதிய அனுபவத்தை
பகிர விரும்பி
சற்றுத் தொலைவைக் கடந்திருந்த
தன் உடன் பிறப்புகளையும் தாயையும்
பார்த்தபோது
கூடடைய திரும்பிக் கொண்டிருந்த
கழுகின் நிழல் கவிகிறததன் மீது
உறவுகள்
கருவாடாய் மெலிந்த தேகம்
கசக்கி போட்ட காகிதமாய்
கசங்கிப் போன சமுகம்
சுருங்காத மனம்
"முட்டாயி வாங்கிகோ'' வாஞ்சைக் குரல்
சுருக்குப்பை சிறு வாட்டுக் காசு துழாவும்
நடுங்கும் கை நீளும்
அரியக் காட்சியில் தோன்றிமறையும்
ஆலமரமாய் விரிந்த உறவுகள் அருகி
பொன்சாய் தொட்டிச் செடிகளாய்
ஒற்றைப் பெற்றோர்களாய்
குறுகிக் கொண்டிருக்கும் குரூரம்
கடவுள் அமெரிக்கனாக பிறக்கமாட்டார்
கடவுள் இனி வரமாட்டார்
குவாண்டானாமோ சிறையில்
கைதியாக கிடக்கிறார்.
அவரிடமிருந்து தகவலுமில்லை.
கைகள் பிணைக்கப்பட்டு
ஆரஞ்சு நிற உடையில்
இருப்பதாக கடைசி நேரத் தகவல்.
அவரை அரை நிர்வாணமாக
ஓடவிட்டு ரசித்ததாகவும்
ஓரினச் சேர்க்கைக்கு
அமெரிக்கனொருவன் அழைத்தற்காகவும்
அவமானப்பட்டிருக்கிறார்.
அவர் திரும்பி வரமாட்டார்.
யாரும் திரும்ப முடியாது.
அவருக்கு
பைத்தியம் பிடித்து சாகவேண்டும்.
அல்லது தற்கொலைக்கு
முயல வேண்டும்.
எந்த நாட்டிலிருந்து
கைது செய்யப்பட்டாரென்று தகவலில்லை.
யார் காட்டிக் கொடுத்தார்களென்று
வெளியிடப்படவில்லை.
அங்கே கடவுளுக்கென்று
தனிச் சலுகை கிடையாது.
கூண்டிலடைக்கப்பட்ட கடவுள்
நின்றுக் கொண்டே
மலம் கழித்திருக்கிறார்.
அவரின் நகக் கண்கள்
மின்சார வயர்களால்
இணைக்கப்பட்டிருக்கிறது.
இந்த முறை
அவரால் உயிர்த்தெழ முடியாதபடி
மரணமிருக்கும்.
உடல் சிதைந்து போயிருக்கும்.
ஒன்று மட்டும் உறுதியாக சொல்ல முடியும்.
இன்னொரு முறை கடவுள்
பூமிக்கு வரமாட்டார்.
வந்தாலும் ஒரு
அமெரிக்கனாக பிறக்கமாட்டார்.
|
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: editor@keetru.com. படைப்புகளை அனுப்பும்போது தாங்கள் பயன்படுத்திய எழுத்துரு எதுவென்பதைத் தெரியப்படுத்தவும்.
|
Keetru | Tamil | Tamilnadu | Literature | Cinema | Recipe | Joke
|
|
 |
|