Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Seide Madal
Seide Madal LogoSeide Madal Logo
பிப்ரவரி 2006

மத நம்பிக்கை மன்னராட்சியைக் காப்பாற்றுமா?

ஆனாரூனா

மன்னராட்சிக்கு எதிராக நேப்பாளத்தில் ஒவ்வொரு நாளும் ஆர்ப்பாட்டம்; போராட்டம் என்று நாடே அதிர்கிறது.

King Nepal எத்தனை ராணுவம் வந்தாலும், உணர்ச்சிகளை ஆயுதங்களால் அடக்கிவிட முடிவதில்லை. இப்போது, மத ஐதீக முறையில் விமோசனம் கிடைக்காதா என்று மன்னர் பரிவாரங்கள் சோதிடர்களிடம் அடைக்கலம் புகுந்திருக்கின்றன.

ஞானேந்திரர் பதவி ஏற்றபோதும் இப்படித்தான், ஐதீக முறைப்படி யாகம் நடத்தி... மறுபடியும் அதே மருத்துவம். அன்று என்ன நடந்தது?

உலகில் எந்த மதத்துக்கும் இல்லாத பெருமை(!) இந்து மதத்துக்கு உண்டு. இந்து மதத்தைத் தவிர மற்ற மதங்களுக்கெல்லாம் ஒரே ஒரு கடவுள்தான் உண்டு. இந்து மதத்துக்குத்தான் எத்தனை கடவுள்கள்! இவ்வளவு பெரிய மந்தையை அடைத்து வைக்க எத்தனை கோடிக் கோயில்கள்!

(ஒரே கடவுள்கூடப் பல ‘பினாமி’ பெயர்களில் மோசடி செய்திருப்பதும் உண்டு. நூற்றுக்கும் அதிகமான பெயர்களில் சிவன். அப்படியே விஷ்ணு. அப்பனைப் போலவே பிள்ளைகள் முருகனும் விநாயகனும். பெண்டாட்டி கடவுள்களும் வைப்பாட்டி கடவுள்களும் கூட பினாமி பெயர்களில்!)

ஆனால், இத்தனை கடவுள்கள் இருந்தும் உலகில் இந்தியா கடன்பட்ட நாடாகவே கைவிரித்து அலைகிறது. இதற்காகக் கோபப்பட்டிருப்பானா, இந்து! உலக வங்கியில் கடன் வாங்கியாவது, தான் பட்டினி கிடந்தாவது இந்தக் கடவுள் கூட்டத்தைக் கவலை தெரியாமல் வளர்த்து வருகிறான் இந்து, தனது கடவுள் கூட்டத்துக்காக இவன் கண்ணைத் தருவான்; மண்ணைத் தருவான்; பெண்ணையும் மனைவியையும், சமயத்தில் தன் உயிரையும் கூடத் தருவான். இப்படி எத்தனை கோடி மக்கள்!

இருந்தும், இந்தியா இந்து சாம்ராஜ்யம் என்று அழைக்கப்படவில்லை. இதிலே சங்கப் பரிவாரங்களுக்கும் சங்கர மடங்களுக்கும் மெத்தக் கவலையுண்டு. இந்தக் காவிக் கூட்டத்துக்கு ஆறுதலாய் விளங்கிய நாடு - நேபாளம்! அந்த நாட்டின் சொந்த மக்கள் இந்துக்களாக இல்லாவிட்டாலும் அது ‘இந்து சாம்ராஜ்யம்!’ சங்கரன்மார்களுக்கு இதிலே பெருமிதம்.

காஞ்சி சங்கர மடத்தை அலங்கரிக்கும் படங்களிலே, நேபாள மன்னர் அருளாசி பெறும் படம் பெருமையுடன் ஒளிர்கிறது. அந்த நேபாள மன்னர் வீரேந்திராதான் இப்போது குடும்பத்தோடு கொலை செய்யப்பட்டிருக்கிறார். நேபாள மன்னரின் மரணம் குறித்து ‘சோதிடம் பலித்தது’ என்று, நம்புகிறவர்கள் மற்றொரு ஐதீகத்தையும் நம்பவேண்டும்.

“சங்கர மடத்துக்குச் செல்லும் அரசியல்வாதிகளின் சாவு எப்போதும் மோசமாகவே இருக்கும்” என்பது தான் அந்த ஐதீகம்! இதனால்தான் நடை பாதைக் கோயில்களில்கூட உருண்டு வழிபடும் சில செல்வாக்குள்ள அரசியல் தலைவர்கள் சங்கர மடத்தை எட்டிப் பார்ப்பதில்லை.

நேபாள மன்னரோ, பணிவுடன் வந்தார், ‘பாதக்சு மலம்’ தொட்டு வணங்கினார். சுவாமிகள் விரும்பும்போதெல்லாம் மன்னரின் அரச விருந்தினராய் - ராஜ குருவாய் - நேபாளம் சென்று வந்தார். அந்த மன்னர்தான் விருந்து மண்டபத்திலே அந்தோ, ஆட்பெரும் படையே காவலுக்கு நின்ற போதிலும் அகதியைப் போல், அனாதையைப் போல் குடும்பத்தோடு படுகொலை செய்யப்பட்டார்.

Nepal violence மன்னர் வம்சங்களுக்குப் பெருமை சேர்ப்பதே - அவர்களைப் பற்றிப் பேசுவதற்கு ஏதாவது இருக்குமானால் - அவர்களுடைய அபத்தமான நம்பிக்கைகளும், அறிவெல்லை கடந்த முட்டாள்தனங்களும்தாம். வரலாற்றில் இடம் பிடித்த மன்னர்களானாலும் சரி, புராணத்திலே புகழ் பெற்ற மன்னர்களானாலும் சரி, மூடத்தனங்களாலும் முட்டாள் தனங்களாலுமேபேர் பெற்றுப் போரிட்டு, வேரோடு சாய்ந்திருக்கிறார்கள். அறிவுக்கும் முட்டாள்தனத்துக்கும் தேச எல்லைக் கிடையாது.

இதில் அறிவைவிட முட்டாள்தனம் வேகம் கொண்டது. சோதிடத்தை நம்பாத ஒரு மன்னன் கிடையாது.

சகல மன்னர்களையும் போலவே நேபாள மன்னருக்கும் சோதிடத்தின் மீது நம்பிக்கை. மன்னர் வீரேந்திரரின் - பட்டத்து இளவரசர் தீபேந்திரா, குவாலியர் அரச குடும்பத்தைச் சேர்ந்த தேவயானி என்ற பெண்ணைக் காதலித்தார். தனது காதலியையே திருமணம் செய்து கொள்ள விரும்பினார்.

ஆனால், தேவயானியைத் தீபேந்திரா திருமணம் செய்து கொண்டால் அரச குடும்பத்துக்கு நாசம் விளையும் என்று ஒரு சோதிடமும், தீபேந்திரா 35 வயதுக்குள் திருமணம் செய்து கொண்டால் அரச வம்சம் அழிந்து போகும் என்று மற்றொரு சோதிடமும் கூறியிருக்கின்றன. சோதிடம் பலித்துவிடக் கூடாது; அரசகுடும்பத்துக்கு நாசம் வந்துவிடக் கூடாது என்பதில் உறுதியாக இருந்த அரசர் வீரேந்திரரும், அரசி ஐஸ்வர்யாவும் இளவரசரின் காதலுக்கும் காலத்துக்கு முந்திய திருமணத்துக்கும் சம்மதிக்கவே இல்லை.

மூலக் கதையைச் சோதிடம் இவ்வாறு நடத்திச் செல்கையில், கிளைக் கதை ஒன்றும் சோதிடத்துக்குள் சிக்கிக் கொண்டது. மன்னர் வீரேந்திராவின் தம்பி ஞானேந்திராதான் இந்தக் கிளைக் கதையின் கதாநாயகன். ஞானேந்திரருக்கு இரண்டு முறை பட்டம் சூட்டப்படும் என்று ஆரூடம் கூறப்பட்டிருந்ததாம். முதல் முறையாக ஞானேந்திரா நான்கு வயதாக இருக்கும்போதே பட்டம் சூட்டப்பட்டது. இத்தனைக்கும் அவர் பட்டத்து இளவரசர் அல்ல. இளவரசரின் தம்பிதான். ஆனாலும் ஞானேந்திரருக்கு பட்டம் சூட்டப்பட்டது. அது எப்படி?

1950இல் நேபாளம் எங்கும் மன்னராட்சிக்கு எதிராகக் கிளர்ச்சி வெடித்தது. அப்போதைய அரசர் மகேந்திரா உயிர் தப்பும் பொருட்டு மனைவியையும் இளவரசர் வீரேந்திராவையும் அழைத்துக் கொண்டு இந்தியாவுக்குள் தஞ்சம் புகுந்தார். தப்பி ஓடும் அவசரத்தில் இரண்டாவது மகன் ஞானேந்திராவை மறந்து அரண்மனையிலேயே விட்டுவிட்டு வந்து விட்டார்.

அரசன் இல்லாமல் ஒரு நாடு இருக்கலாமா? துதி பாடிக் கூட்டம் நான்கு வயது ஞானேந்திராவிற்குப் பட்டம் சூட்டியது. விரைவில் கிளர்ச்சி ஒடுக்கப்பட்டதால், ‘51இல் மன்னர் மகேந்திரா நேபாளம் திரும்பினார். ஆட்சிப் பொறுப்பை ஏற்றுக் கொண்டார். ஒருமுறை ஞானேந்திராவிற்கு முடிசூட்டியாயிற்று. சோதிடப்படி மறுபடியும் முடிசூட்ட வேண்டுமே! இந்தச் சோதிடம்தான் இப்போது ஞானேந்திராவைக் ‘கொலையாளி’யாகக் கூண்டில் நிறுத்திக் கொண்டிருக்கிறது.

மகேந்திராவிற்குப் பிறகு - ஞானேந்திராவின் அண்ணன் - வீரேந்திரா வாரிசுரிமைப்படி மன்னராகிச் சீரும் சிறப்புமாக வாழ்ந்து வருகையிலே, வீரேந்திராவின் மகன் இளவரசர் தீபேந்திராவின் காதல் அரச குடும்பத்தை அச்சுறுத்தியது. தீபேந்திரா - தேவயானி திருமணம் நடந்து விட்டால் அரச வம்சம் அடியோடு அழியுமென்று சோதிடம் கூறுகிறதே!

தீபேந்திரா - தேவயானி காதல் அரசர் வீரேந்திராவாலும் அரசி ஐஸ்வரியாவாலும் எதிர்க்கப்பட்டதால், எந்தக் காதலனுக்கும் ஏற்படும் இயல்பான கோபம் இளவரசர் தீபேந்திராவுக்குள்ளும் எரிந்தது. இந்தச் சூழ்நிலையை மன்னர் வீரேந்திராவின் தம்பி ஞானேந்திரா பயன்படுத்திக் கொண்டார். தனக்குக் கூறப்பட்ட சோதிடம் எப்படிப் பொய்யாகலாம்? இரண்டாவது முறையாக முடிசூட்டிக் கொள்வதற்கு இதுதான் தருணம்.

தேவயானியின் மீது கொண்ட காதல் வெறியால் அரச குடும்பத்தையே தீபேந்திரா படுகொலை செய்து விட்டார் என்று உலகத்தை நம்ப வைத்து விட்டால்...? நாட்டைக் கைப்பற்றும் வெறியை ஞானேந்திராவிடம் சோதிடம் நன்றாகவே ஊதி ஊதி வளர்த்திருக்கிறது. தனது ஆசையையும் நிறைவேற்றிக் கொள்ளலாம்; சோதிடத்தையும் காப்பாற்றி விடலாம் என்று திட்டமிட்டு ஞானேந்திராதான், அரசர் வீரேந்திராவையும், அரியாசனத்திற்கு அடுத்து வரவிருக்கும் தீபேந்திராவையும் படுகொலை செய்துவிட்டார் என்பதுதான் நேபாள மக்களின் குற்றச்சாற்று, கொந்தளிப்பு, கோபாக்கினி!

அரசர் குடும்பம் படுகொலை செய்யப்பட்டதில் மக்களுக்கென்ன இத்தனை ஆத்திரம்? இதிலே பாமரத்தனமும் உண்டு; புதிய சிந்தனைகளின் புரட்சிக்கனலும் உண்டு. 1950 முதலே மன்னராட்சி ஒழிக்கப்பட வேண்டும்; மக்களாட்சி மலர வேண்டும் என்கிற புரட்சிகரச் சிந்தனைகள் நேபாள மக்களிடம் விதைக்கப்பட்டு விட்டன. சட்டங்களாலும் படைகளாலும், மக்கள் எழுச்சி கட்டுப்படுத்தப்பட்டுக் கொண்டிருந்தாலும், புரட்சிக் கனல் மக்கள் மனதின் அடியாழத்தில் முற்றிலும் அணைந்துவிடவில்லை.

உலகெங்கிலும் மன்னராட்சி முறை மறைந்து கொண்டு வரும்போது, ஒரு சமரசத்துக்கு வந்தால் மாத்திரமே இங்கிலாந்தில் இருப்பதுபோல், ‘ஏதோ பழைய மரியாதையைக் காப்பாற்றிக் கொண்டு காலந் தள்ளலாம் என்ற முடிவுக்கு வந்தார் மன்னர் வீரேந்திரா. விட்டுக் கொடுத்தலுக்கும் கட்டுப்படுத்தலுக்கும் மன்னர் தயாரானார்.

வீரேந்திராவின் இந்தப் போக்கு நாளடைவில் மன்னராட்சி முறைக்கே முற்றுப் புள்ளி வைத்துவிடும். மன்னராட்சி மறைந்து விடுமானால், ‘இந்து சாம்ராஜ்யம்’ என்ன ஆகும்?

ஒரு சோஷலிசக் குடியரசு மலர்வதை ஆதிக்க சக்திகளால் ஏற்க முடியவில்லை. இந்த இந்துத்துவ வெறியர்களின் சதித்திட்டமே மன்னர் குடும்பத்தை நிர் மூலமாக்கியிருக்கிறது. இந்த விவகாரத்தை அம்பலப்படுத்தியதால்தான் ‘டெய்லி காந்திப்பூர்’ பத்திரிகை ஆசிரியர் யுவராஜும் இரு இயக்குநர்களும் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். பத்திரிகை ஆசிரியரைக் கைது செய்தவுடன், நேபாளம் பற்றி எரியத் தொடங்கி விட்டது.

மன்னர் வீரேந்திராவையும், இளவரசர் தீபேந்திராவையும் படுகொலை செய்து விட்டு, இந்து வெறியர்களின் கூலிப்படையாகச் செயல்பட்டு, மகுடம் சூட்டிக் கொண்ட ஞானேந்திராவை ஆட்சியிலிருந்து இறக்கும் வரை ஓய மாட்டோம் என்று மக்களாட்சி ஆதரவாளர்கள் கிளர்ச்சியில் ஈடுபட்டிருக்கிறார்கள். சமரசவாதியாய் விளங்கிய முந்திய அரசரின் ஆதரவாளர்கள் மொட்டையடித்துக் கொண்டு தங்கள் எதிர்ப்பைக் காட்டி வருகிறார்கள்.

நேபாள மக்களையும், உலகின் கவனத்தையும் ஏமாற்றும் விதத்தில், இந்து வெறியனும் ஞானேந்திராவின் ஆதரவாளனுமான டாக்டர் ராஜீவ் சாஹி படுகொலையை நேரில் பார்த்தவன்போல் புளுகி வருகிறான்.

காவிப்படைக்குப் பிடித்தமான சம்ஸ்கிருத முழக்கத்தைச் சட்டையில் பொறித்துக் கொண்டு அரசியல் பேசுகிற எவனும் உண்மை பேச மாட்டான்! என்பதற்கு ராஜீவ் சாஹி சரியான எடுத்துக்காட்டு.

Nepal violence மன்னர் வீரேந்திராவை இளவரசர் தீபேந்திராதான் சுட்டுக் கொன்றார். அதை நான் நேரிலே பார்த்தேன் என்று ராஜீவ் சாஹி வரை படத்துடன் விளக்கினாலும் அவன் சொல்வதனைத்தும் பொய் என்பதைப் பத்திரிகையில் படிக்கும் எவரும் தெரிந்து கொள்ள முடியும் என்று நேபாள மக்கள் கொதிப்புடன் சொல்கிறார்கள்.

‘போப் ஆண்டவரால் புரட்சி செய்ய முடியாது’ என்பதுபோல் ‘ஓம்’ அணிகிறவனால் உண்மை சொல்ல முடியாதுதான்! இரண்டு சோதிடத்தால் ஒரு தேசமே பற்றி எரிந்து கொண்டிருக்கையில் இந்தத் தீயை அணைப்பதற்கு மன்னர்களுக்கே உரிய மடத்தனத்துடன் ஓர் ஐதீகம் அரங்கேற்றப்பட்டிருக்கிறது. இது குறித்து தினமணி (12 ஜூன், 2001) நாளிதழ் இவ்வாறு எழுதுகிறது:

“நேபாளத்தில் மன்னர் குடும்பம் படுகொலை செய்யப்பட்டதற்கு, தேசத்தைப் பிடித்த தீய ஆவிகள்தாம் காரணம் என்ற நம்பிக்கை மக்களிடையில் ஏற்பட்டுள்ளது. அத் தீய சக்திகளை விரட்டுவதற்காக, கொல்லப்பட்ட மன்னர் வீரேந்திரா, இளவரசர் தீபேந்திரா ஆகியோரைப்போல் இரு பிராமணர்கள் வேடமணிந்து யானைமீதேறி காட்டுக்குச் சென்றுவிடவேண்டும் என்பது ஐதீகம்.

அப்படிச் செய்தால் நாட்டைப் பிடித்த பிசாசுகள் காட்டுக்குள் போய்விடும் என்பது நம்பிக்கை. அதன்படி துர்கா பிரசாத் சப்கோதா என்ற புரோகிதர் மன்னர் வீரேந்திரா போல் வேடமணிந்து யானை மீதேறிக் காட்டுக்குச் சென்றார். எப்போதும் சைவ உணவைச் சாப்பிடும் அவர், ஐதீகப்படி இதற்காக அசைவ உணவைச் சாப்பிட்டுப் புறப்படுகிறார். இனி அவர் நகருக்குள் வரக்கூடாது.

மனிதன் தன்னைப் போலவே தனது கடவுளையும், சாத்தானையும், ஆவிகளையும் படைத்துவிட்டான் என்பதற்கு இது ஒரு சான்று. மாறுவேடமிட்டுக் கொண்டால் மனிதன் ஏமாந்துவிடுவான். ஆவிகளும் கூடவா ஏமாந்து விடும்? இந்த ஐதீகத்தைப் படித்து நம்புகிற பாமரர்கள் கொஞ்சம் தீவிரமாகச் சிந்தித்துச் செயல்படுத்தத் தொடங்கினால் என்ன?

ஒரு பார்ப்பனரை நகருக்குள் நுழையக் கூடாது என்று விரட்டினாலேயே நேபாளத்தைப் பிடித்த தீய சக்திகள் எல்லாம் ஓடிவிடக் கூடுமானால், எல்லாப் பார்ப்பனர்களையும் இந்தியாவை விட்டு - குறைந்த பட்சம் தமிழ்நாட்டை விட்டாவது - விரட்டிவிட்டால் இந்த நாடு எத்தனை மகிழ்ச்சியுடனும் நிம்மதியுடனும் இருக்கும் என்று அவர்கள் முடிவெடுத்தால் அது தவறா?

இந்த ஐதீகத்தின் கோமாளித்தனத்துக்குப் பின்னே ஓர் அபாயகரமான அரசியல் இருக்கிறது என்பதை யாரும் மறந்துவிட வேண்டும். நகரை விட்டு காட்டுக்குள் சென்ற சாணக்கியன் பல சாம்ராஜ்யங்களைச் சாய்த்திருக்கிறான். காட்மண்டுக்கு வெளியே சென்ற புரோகிதன் எந்தப் பேரழிவைக் கொண்டு வருவான் என்று யாருக்குத் தெரியும்?


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com