Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Seide Madal
Seide Madal LogoSeide Madal Logo
ஆகஸ்டு 2007

தெற்கே துரத்தப்பட்டோர் ஆரியரா? திராவிடரா?

பேராசிரியர் இரா.மதிவாணன்

இந்திய வரலாற்றாசிரியர்கள் ஒரு சேர இந்திய வரலாற்றைத் திசை திருப்பி வருகிறார்கள். மத்திய தரைக் கடல் நாடுகளிலிருந்து திரா விடர்கள் சிந்துவெளியில் தங்கிப் பின்னர், தென்னிந்தியாவுக்கு வந்தனர் எனப் பொய்க்கதைகளைக் கட்ட விழ்த்து விடுகின்றனர்.

பழந்தமிழர் சிறந்த கடலோடிகள் என்பதையும் கடல் வழியாகவே சிந்துவெளி சுமேரியம் எகுபது, மத்திய தரைக்கடல் நாடுகள் ஆகியவற்றில் குடியேறினர் என்பதையும் அறியாதவர் களாக இருக்கிறார்கள்.

இந்த வரலாற்றாசிரியர்களின் அண்டப் புளுகை விஞ்சும் வகையில் ஆரியச் சார்வான எழுத்தாளர்கள், சிந்துவெளிப் பகுதியிலி ருந்து திராவிடர்கள் தெற்கே துரத்தப்பட்டார்கள் எனப் பொய் சொல்வதையே தொழிலாகக் கொண்டிருக்கின்றனர். சிந்துவெளி நாகரிகம் மறைந்து 800 ஆண்டுகளுக்குப் பிறகுதான் கி.மு. 1100 - கி.மு. 1000 அளவில் இருக்குவேதப் பாடல்கள் தொகுக்கப்பட்டன.

காபூல் முதல் பஞ்சாபு வரை நடந்த அகழ்வாராய்ச்சிகளில் திராவிடர்க்கே உரிய கருப்பு சிவப்புப் பானை ஓடுகளும், ஆரியர்க்கே உரிய சாம்பல் நிறப்பானை ஓடுகளும் கிடைத்தன. இவற்றின் காலம் கி.மு. 1600 - கி.மு. 1300 என வரையறுத்துள்ளனர். இதனால் ஆரியரும் திரா விடரும் ஒருசேர வாழ்ந்த காலம் உறுதிப்படுகிறது. ருக்குவேதத்தில் கூறப்படும் ஆரிய திராவிட மோதல்கள் கி.மு. 1300 - கி.மு. 1200 எனும் ஒரு நூற்றாண்டுக் காலத்துக்கு உட் பட்டவை. மூன்று தலை முறையினரின் உட்பூசல்களில் இந்திரன் புகுந்து ஆதாயம் பெற்ற காலம் இது எனலாம்.

சிந்துவெளி நாகரிகக் காலத்தில் கோட்டையைச் சுற்றிலும் அகழிவெட்டப்படவில்லை. கோட்டை வாயிலில் அறைவட்ட வடி வில் மட்டும் அகழி அமைந்திருந்தது. ஆனால், இருக்கு வேதத்தில் கோட்டைகளைச் சுற்றிலும் வட்டமாகப் பெரிய அகழிகள் வெட்டப்பட்டிருந்தது குறிப்பிடப்படுகிறது. இதிலிருந்தும் இருக்குவேத காலம் சிந்துவெளி நாகரிகக் காலத்துக்கு மிகமிகப் பிற்பட்டது எனத் தெரிகிறது. சிந்து வெளி முத்திரைகளில் உள்ள தமிழ் வேந்தர்களின் பெயர்கள் தூய தமிழ்ப் பெயர்களாக உள்ளன. இருக்கு வேதத்தில் உள்ள திராவிடப் பெயர்கள் அனைத்தும் ஆரியச் சார்பால் திரிபுற்ற தமிழ்ச் சொற்களாக உள்ளன. கி.மு. 1200 - கி.மு. 1000 அளவில் கங்கைச் சமவெளி வரை ஆரியர் பரவிய காலத்தில் இந்திரன் தலைமையும் போர்களும் கூறப்படவில்லை.

வேதகாலம் என ஒன்று இருந்ததே இல்லை

வரலாற்று நூல்களிலும் பாட நூல்களிலும் வேத காலம் எனத் தலைப்பிட்டு எழுதுகிறார்கள். வேத காலம் என்றொரு காலம் இருந்ததே இல்லை. அரசர்கள் தம் நாட்டில் அல்லது வென்று குடியேறிய நாட்டில் ஆட்சிபுரிந்த காலமே வரலாற்றுக் காலம் எனப்படும்.

வெறுமனே கால்நடை மேய்ப்புத் தொழிலில் ஈடுபட்டிருந்த ஆரியர்கள் இந்திரனைத் தலைவனாகக் கொண்டு ஆங்காங்குக் கொள்ளையடித்து இடம் விட்டு இடம் ஓடித் திரிந்த நிகழ்வுக்கு யாரும் வரலாறு எனப் பெயரிடமாட்டார்கள். வேதம் ஓதுவதுபோலப் பாணர்களும் பாடித் திரிந்தார்கள். அதனால் பாணர் காலம் என்றொரு காலத்தைக் குறிப்பிட முடியுமா? நாடெங்கும் திரிந்த கூத்தாடிகளின் காலத்தை, கழைக்கூத்தாடிகள் காலம் எனக் குறிப்பிட முடியுமா? எனவே, வேதகாலம் என்று குறிப்பிடுவதை வரலாற்றா சிரியர்கள் தவிர்க்க வேண்டும்.

தாசர் தசியூக்கள்

பாரசீக ஆரியருள் கரு நிறப் பிரிவினர் தாசர் எனப்பட்டனர். இவர்கள் புதிதாக வந்த கைபர் கணவாய் ஆரியர்களுக்குப் பகைவராயினர். ஆரியருள் தாசர் எனும் கருநிறப் பிரி வினர் இருந்தனர் எனச் சிந்துவெளி நாகரிக ஆராய்ச்சியாளராகிய பின்லாந்து அறிஞர் அசுகோ பர்போலா குறிப்பிட்டுள்hர். இந்தத் தாசர் பிரிவினர் பாரசீக ஆரியருக்கும் சிந்து வெளி மேற்கு எல்லையிலும் எலாம் பகுதியிலும் வாழ்ந்த திராவிடக் கிளைப் பிரிவினர்க்கும் இடையில் கலப்பு இனமாகத் தோன்றியவர்கள்.

இவர்கள் பாரசீக ஆரிய ரோடு சிந்து வெளியில் குடியேறியபோது (கி.மு.1600 - கி.மு. 1300) தமிழரொடு நட்புறவோடு வாழ்ந்தனர். கி.மு. 1300 அளவில் புதிதாக வந்த கைபர் கணவாய் ஆரி யர்க்குப் பகைவராயினர்.

தசியூ என்றால் பகைவன் என்று பொருள். இன்றும் வடபுல மொழிகளில் திச்மன் என்னும் சொல் பகைவனைக் குறிக்கிறது. கைபர் கணவாய் வழியாக வந்த புதிய ஆரியர்கள் சிந்துவெளியில் வாழ்ந்த தமிழ் மரபினரைத் தசியூக்கள் எனக் குறிப்பிட்டனர்.

பழந்தமிழர் கோட்டைகள்

தசியூக்கள் என அழைக்கப்பட்ட பிற்காலச் சிந்து வெளித் தமிழரசர்களின் காலத்திலும் சிந்துவெளி உட்பட்ட இந்தியப் பெரு நிலத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட துறைமுகங்கள் இருந்தன. இரண்டாயிரத்துக்கும் அதிகமான கோட்டைகள் இருந்தன.

இவற்றுள் 100 கோட்டை களை இந்திரன் அழித்தான் என்பது பெரிய இழப்பு ஆகாது. ஆரியர்கள் குதிரையில் விரைந்து வந்து இருட்டில் தாக்கிவிட்டு விடியுமுன் ஓடி ஒளிந்ததால் அவர்களுக்கு வெற்றியும் ஆகாது. சிந்துவெளி மக்களில் இயற்கைச் சீற்றத்தால் குடி பெயர்ந்தவர்கள் தவிர ஏனையோர் இடம் பெயராமல் அங்கேயே தொடர்ந்து வாழ்ந்து வருகின்றனர்.

சிந்தி மக்கள், இராச புத்திரர், பஞ்சாபியர் ஆகியோர் சிந்துவெளி மக்களின் எச்சமாக இன்றும் வாழ்ந்து வருகின்றனர். இம்மொழிகளில் ஏராளமான தமிழ்ச் சொற்கள் உள்ளன. அவையும் குமரிக்கண்டம் பழஞ் சொற்களாகக் காணப்படுகின்றன. சிந்துவெளியிலிருந்து திராவிடர் குடி பெயர்ந்தனர் என்பது முற்றிலும் தவறு. சிந்தி ஒரு திராவிட மொழி என நிறுவப்பட்டுள்ளது.

சென்ற இடத்திலெல்லாம் கோட்டை கட்டிக் குடியிருக்கும் கோட்டை வேளாளர் என்போர் சங்க காலத்திலிருந்தே வாழ்ந்து வருவதும் இவர்களின் முன்னோரில் ஒரு பிரிவினர் குசராத்து மாநிலத்து துவாரகையில் இருங்கோவேள் பாண்டிய மரபினராக ஆட்சி புரிந்தனர் எனக் கபிலர் கூறி யிருப்பதும் கவனிக்கத் தக்கன.

விராத்திய பிராமணர் என்னும் வேளாப்பார்ப்பனர்

வடஇந்தியாவில் ஆரியத் திராவிட இனக்கலப்பு ஏற்பட்டது. இந்நிலையில் தம் வெள்ளை நிறத்தைக் காப்பாற்றிக் கொள்வதற்காக வருணாசிரமம் என்னும் நிறவெறிக் கொள்கை உருவாயிற்று. இருக்குவேதத்தில் "இந்திரனே, அக்கினியே இங்குள்ள கருப்பர்களை அழித்துவிடு. உலகில் வெள்ளை நிறத்தவர் மட்டும் இருக்க வேண்டும் என்று வேண்டும் பாடல் உள்ளது.

கலப்பினத்து ஆரிய இந்தியரின் பிள்ளைகள் பிராமணப் பிள்ளைகளாகக் கருதப்பட்டனர். ஆனால், வேதம் ஓதவும் வேள்வி செய்யவும் அனுமதிக்கப்படவில்லை. இவர்களை வீராத்திய பிராமணர் என்றனர். இவர்களை வெள்ளை நிற பிராமணர் விரட்டியதால் தெற்கு நோக்கி வரலாயினர். தமிழகத்தில் இவர்களை வேளாப்பார்ப்பனர் (வேள்வி செய்யாத பார்ப்பனர்) என அழைத்தனர். இவர்கள் எந்த உடலுழைப்புத் தொழிலும் செய்வார்கள்.

தமிழ்ப் புலவர்களாகிய கபிலர், நக்கீரர், கழாத் தலைவர் போன்றோர் வேளாப்பார்ப்பன வகையைச் சார்ந்தவர்கள். கி.மு. 1000 அளவில் கொள்கையில் முதன்முதலாக வேளாப் பார்ப்பனர் ஒரு சிலர் காணப்பட்டதாக வேளிர் வரலாற்று நூல் குறிப்பிடுகிறது.

ஆரியர் தெற்கே துரத்தப்பட்டனர்

நடுவண் ஆசியாவிலிருந்த ஆரியர்கள் பனிப் பொழிவு காரணமாக மேய்ச்சல் நிலங்கள் பாழ்பட்டதாலும் வடமுனைப் பனிக் காற்று போன்ற இயற்கைக் காரணங்களாலும் இரு கிளைகளாகப் பிரிந்தனர். ஒரு கிளையினர் கிரேக் கத்தின் வழியாகப் பாபிலோனியாவைக் கடந்து பாரசீகத்தில் தங்கினர். மற்றொரு பிரிவினர் இந்து கூசுமலையைக் கடந்து கைபர் போலன் கணவாய் வழியாக கி.மு. 1300 அளவில் ஆப்கானித்தானத்தில் நுழைந்தனர்.

கிரேக்கத்தின் வழியாக வந்தோர் தீவழிபாட்டினராக மாறிவிட்டனர். சிந்து வெளித் தமிழருடன் நல்லுறவு கொண்டனர்.

அரசன் என்றும் சொல்லை அசுரா என மாற்றி ஒலித்தனர். தம் தெய்வத்தையும் அசுர மசுத்தா என்றனர். அரசர் - அசுரர் என்னும் சொல் உயர்ந்தோர் - சிறந்தோர் எனப் பொருள் பட்டது. உள்நாட்டு மக்களின் ஆடுமாடுகளைக் கவர்ந்து கொள்ளையடித்த பிற்கால ஆரியர்கள் சுரர் என்று சொல்லை உயர்வாகவும் அசுரர் என்னும் சொல்லைத் தாழ்வாகவும் கருதினர். இதனால் பழைய பாரசீக ஆரியர்க்கும் புதிய கைபர் கணவாய் ஆரியர்க்கும் பகை மூண்டது.

பாரசீக ஆரியர்களின் பகைக்கு அஞ்சிய கைபர் கணவாய் ஆரியர்கள் காபூல் ஆற்றைக் கடந்து பஞ்சாபி பகுதிக்கு ஓடிவரத் தொடங்கினர். இவர்களைப் பிற் காலச் சிந்துவெளி மக்கள் புத்தன் (புதிய) ஆரியர் என அழைத்தனர்.

கி.மு. 1300 முதல் கி.மு. 1100 வரை இவர்கள் காபூலில் இருந்து கங்கைச் சமவெளி வரை விரட்டப்பட்டு ஓடி வந்த வரலாற்றை இருக்கு வேதப் பாடல்களால் அறிய முடிகிறது.

இந்திரனின் ஆட்டமும் ஓட்டமும்

ஆப்கானித்தானத்தில் புகுந்தபோது புதிய ஆரியர்கள் மேய்ச்சல் நிலம் தேடினர். காபூல் ஆற்றைக் கடந்ததும் உள்நாட்டு அரசர்களுக்குள் சிண்டு முடிந்து உட்பகை வளர்த்து ஆதாயம் பெற்றனர். கால்நடைகளைக் கவர்ந்தும் தீயிட்டுக் கொள்ளையடித்தும் கொரில்லாப் போர் கொள்ளைக்காரர்களாக மாறினர். இந்நிகழ்ச்சி களை இருக்குவேதப் பாடல்களின் வாயிலாகக் குருவிக் கரம்பை வேலு தன் நூல்களில் விளக்கியுள்ளார்.

"காபூல் ஆறு. ரசா ஆறு, குருமு ஆறு ஆகியவை தடுத்து உங்களை வடக்கு நோக்கி அனுப்பாமலிருக்கட்டும்'' என இருக்கு வேதத்தில் ஆத்திரேயன் பாடியிருக்கிறான். கி.மு. 1300 - கி.மு. 1200 கால எல்லையில் பிற்காலச் சிந்துவெளியில் கோட்டை கட்டி ஆட்சி புரிந்தவர் வத்தன் என்னும் தமிழ் மன்னன் இவன் பெயரை விருத்திரன் என ஆரியர் மாற்றிக் கொண்டனர்.

"அதோ! கருத்த விருந்திரன் வருகிறான். அவனிடமிருந்து எங்களைக் காப்பாற்று, காப்பாற்று. புவி முழுவதும் எங்கு பார்த்தாலும் இவர்களே பரவி யிருக்கிறார்கள். தற்போது போர் நடக்கிறது. எங்கள் குதிரைகளையும் மாடுகளையும் காப்பாற்று. தங்களை உயர்ந்தவர்களாக நினைத் துக் கொண்டிருக்கும் கருப்பு நிறத்தவர்களைத் தாழ்த்தி ஆரியர்களை உயர்த்த வேண்டும்'' என இருக்கு வேதம் (6-19-12) புலம்புகிறது. வத்தவனோடு ஒன்பது மாதம் போரிட்ட சக்கரனுடன் இந்திரன் கூலிப் படையாகச் சேர்ந்து கொண்டு இரவில் அணைகளை உடைத்துப் பெருகிய வெள்ளத்தில் வத்தவனோடு அவன் குடும்பத்தாரை நீரில் மூழ்கிப் போகச் செய்தான்.

வத்தனின் அடுத்த மூன்று தலைமுறையினர் தொடர்ந்து ஆரியர்களை அலறத் தாக்கிய செய்தி இருக்கு வேதத்தில் உள்ளது.

அரப்பாவிலிருந்த சாம்பன் என்னும் சம்பரன் கோட்டைகளைத் தகர்க்க மேலும் தெற்கு நோக்கி இந்திரனின் கூட்டம் ஓட்டம் எடுத்தது. சம்பரனின் பழம்பகைவன் திவோதாச னொடு கூலிப்படையாக இந்திரன் சேர்ந்து கொண்டான். அதன்பிறகு அரசனானன் அரப்பாவில் ஆட்சி புரிந்தான். இவன் பெயரை வரசினன் என்று இருக்கு வேதம் குறிப்பிடுகிறது. இருக்குவேதம் சிந்து வெளியில் அனைவரையும் வென்றதாகக் கூறுகிறது.

அப்படியானால் பெரு வெற்றி பெற்ற ஆரியர்கள் அங்கிருந்து கங்கைச் சமவெளிக்கு ஓடி வந்தது ஏன் என்று எண்ணிப் பார்க்க வேண்டும்.

தோற்ற தமிழினத்தார் மீண்டும் மீண்டும் எரித்துப் போரிட்டதைத் தாங்க முடியாமல் ஆரியர்கள் யமுனைச் சமவெளிக்கும் கங்கைச் சமவெளிக்கும் ஓடத் தொடங்கினர். இந்திரன் தலைமையில் தீயிட் டுக் கொள்ளையடிக்கும் ஆரியர் சூழ்ச்சி முடிவடைந்தது.

கங்கைச் சமவெளியில் கோட்டை தகர்ப்பது அணைகளை உடைப்பது போன்ற செயல்களில் ஆரியர் ஈடுபடவில்லை. அதற்கு மாற்றாக அரசர்களிடம் இணக்கமாகப் பழகி வேள்விகளைப் பெருமளவில் செய்து செல்வ வாழ்க்கை வாழத் தொடங்கினர். உழைக்காமல் வாழ் வதற்கு வேள்விகள் துணை புரிந்தன.

சமண சமயம் கி.மு. 1200 அளவில் செல்வாக்கு பெற்ற போது வேள்வி செய்வதற்குக் கடும் எதிர்ப்பு தோன்றியது. அப்போது மகத நாடு வரையில் பரவினார்கள். மீண்டும் பௌத்த மதமும் வேள்விகளை எதிர்த்ததால் வேறு வழியின்றி விந்திய மலையைக் கடந்து தெற்கு நோக்கி ஓட்டம் எடுத்தார்கள்.

கலிங்கத்தில் அசோகன் ஆண்டபோது ஒரிசாவிலிருந்து ஆந்திரத்துக்கு வந்தனர். ஆந்திர நாட்டு அமராவதியில் ஆட்சி புரிந்த இச்சுவாகு மரபினர் பௌத்த மதம் தழுவினர்.

அங்கும் இருக்க முடியாத நிலையில் பல்லவர் காலத்தில் காஞ்சிபுரத்துக்கும் தமிழ் நாட்டின் பிற பகுதிகளுக்கும் கேரள கரு நாடக பகுதிகளுக்கும் ஆரியர்கள் விரட்டியடிக்கப் பட்டனர்.

வேள்வி செய்வதை மட்டும் நம்பி வாழ முடியாத நிலையில் கோயில்களைக் கட்டுமாறும் பார்ப்பனர்க்குச் சதுர்வேதி மங்கலங்களை அளிக்குமாறும் மன்னர்களை மனம் மாற்றி நிலையான வாழ்வுக்கு வழி வகை செய்து கொண்டனர்.

மொகலாயர் ஆட்சிக் காலத்தில் கங்கைக் கரையிலிருந்த காமகோடி என்னும் இடத்திலிருந்து குடி பெயர்ந்து வந்தவர்களே கும்பகோணத்திலும் காஞ்சி புரத்திலும் சங்கரமடம் அமைத்துக் கொண்டனர் என்பதும் ஆரியர்கள் படிப்படியாகத் தெற்கு நோக்கி வந்ததை உறுதிப்படுத்துகிறது.

விராத்திய வேளாப்பார்ப்பனரையும் சேர்த்துக் கொண்டதால் ஆரிய இந்திரராகிய பிராமணர் மக்கள் தொகை மூன்று விழுக்காடாக உள்ளது.

இந்நிலையில் இவர்களை எந்த மண்ணின் மைந்தர் என்று எவரும் கணிக்க முடியாது.

வேள்விகளை ஏன் எதிர்த்தார்கள்?

இந்திய நாட்டுப்புற மக்கள் அன்பானவர்கள், புதியவர்களை விருந்தோம்பி மகிழ்பவர்கள். ஆரியர் செய்த வேள்விகளை ஏன் எதிர்த்தார்கள் என்பதற்கு இந்திய வரலாற்று ஆசிரியர்கள் ஒருவராவது தக்க காரணம் காட்டவில்லை.

இந்திய மக்கள் மாடு களைத்தாய் போன்று கருதியவர்கள். எந்த விலங் கைத் தெய்வத்திற்குப் பலி கொடுத்தாலும் மாடு வெட்டிப் பலி தரும் வழக்கம் மாட்டின்புலால் உண்பவர்களிடம் கூட இருந்ததில்லை.

ஆரியர்கள் ஆயிரக்கணக்கான ஆடுமாடுகளை மூன்று மாத ஆறுமாத வேள்விகளில் தொடர்ந்து நெருப்பிலிட்டுத் தின்றனர்.

அரசர்களே வேள்விக்கு உடந்தையாக இருந்ததால் தன் கால்நடைகளை வேள்விக்குத் தரவேண்டிய கட்டாயத்துக்குச் சிற்றூர் மக்கள் உள்ளாயினர். அரசனையும் எதிர்த்து வேள்வி களைத் தடுத்த பொது மக்களுக்கு வேள்வி தடுக்கும் அரக்கர்கள். என வேதங்கள் பெயர் சூட்டின.

முப்பதுக்கும் மேற்பட்ட இராமாயணங்களுள் ஒன்று சீதை இராமனுக்குக் கூறிய அறிவுரையைக் குறிப்பிடுகிறது.

"இராமா, நீ இந்த முனி வர்களின் பேச்சை நம்பி வேள்விக் காவலுக்கும் போகாதே. பொதுமக்கள் வேள்விகளைத் தடுப்பதில் எந்தத் தவறும் இல்லை.

கால் நடைகளை உயிராகக் கருதுகிறார்கள். ஏழைகளின் வயிற்றெரிச்சலைக் கொட்டிக் கொள்ள வேண்டாம்? என்றும் சீதையின் அறிவுரை கவனிக்கத்தக்கது.

அரசர்களின் பாதுகாப்பு இருந்தாலும், பொதுமக் களின் எதிர்ப்பு வலுத்தது. சமண பௌத்த சமயங்களும் வேள்விகளை எதிர்த்தன.

ஆரியர் வேள்வி செய்ய அஞ்சினர். விந்தியமலையைத் தாண்டித் தெற்கே ஓட்டம் எடுத்தனர். வேள்வியில் உயிர்க்கொலையை நிறுத்தி உணவுப் பண்டங்களைச் சொரியத் தொடங் கியபோது தென்னாட்டு மூவேந்தர்களையும் வேள்விக்கு இணங்கச் செய்தனர்.

அதுவும் பிசுபிசுத்தது. கோட்டை கட்டி வாழ்ந்த மன்னர்களைக் கோயில் கட்ட வைக்கும் சூழ்ச்சியில் ஆரியர் வெற்றி பெற்றனர்.

அன்று முதல் காபூலிலிருந்து குமரிமுனை வரை விரட்டப்பட்டு, தெற்கு நோக்கி ஓடிவந்த ஆரியர்களின் தொடரோட்டத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது.

சமயத் தலைமையும் சமற்கிருத மந்திரங்களும் சமயத்தில் உதவும் சஞ்சீவி மருந்துகளாயின.

ஆரியர் ஓடிவந்த பாதையில் மாற்றிக் கொண்ட தொழில்கள்

கைபர் கணவாயைக் (கி.மு. 1300) கடந்தபோது குதிரைகளையும் மாடுகளையும் மேய்ப்பது ஆரியரின் முதல் தொழிலாக இருந்தது. சிந்துவெளியில் நன்செய் வேளாண்மைத் தொழில் பெருகியிருந்ததால் மேய்ச்சல் நிலம் கிடைக்கவில்லை. நீர்ப்பாசனத்தைத் தடுக்க அணைகளை உடைப்பது இரண்டாவது தொழிலாயிற்று.

கால்நடைகளைக் களவாடுவது மூன்றாவது தொழில். உள்நாட்டுத் தமிழரசர்களின் உட்பூசலில் ஒருசாரார்க்கு உதவும் குதிரைக் கூலிப்படையாக மாறி பொழுது விடியும் கொள்ளையடித்து ஓடுவது நான்காவது தொழில்.

சிந்துவெளியிலிருந்து விரட்டியடிக்கப்பட்ட பின்னர் நடு இந்தியாவில் குடியேறி வேள்வி செய்வதை ஐந்தாம் தெழிலாகக் கொண்டனர்.

யமுனைப் பகுதியில் வாழ்ந்த பாண்டிய அரசர்களான நார்மாறனும் பல் பூதனும் ஆரியர்க்குக் கால்நடைகளும் பொன்னும் வழங்கிய செய்தி இருக்கு வேதத்தில் கூறப்பட்டுள்ளது.

வேள்வி செய்ய எதிர்ப்பு வலுத்தபோது கங்கைச் சமவெளி நோக்கி ஓடி வந்தனர். தமிழர் தெய்வங்களைத் தம் தெய்வங்களாக ஏற்றுக் கொண்டு உபநிடதத் தொகுப்புக்கு மாறியது ஆறாவது தொழிலாயிற்று.

"பவதி பிட்சாம் தேகி'' எனக் கூசாமல் பிச்சையெடுத்தது ஏழாம் தொழிலாயிற்று. கோட்டை கட்டும் அரசர்களைக் கோயில் கட்டும் அரசர்களாக மாற்றி நிலையான வருமானம் தேடிக் கொண்டது எட்டாம் தொழிலாயிற்று.

சமற்கிருதக் கல்லூரிகளைத் தொடங்கி, தமிழிலும் பாலிபிராகிருத நூல்களிலும் இருந்த வான்நூல் கணிதம் மருத்தும், மெய்ப் பொருள் ஆகிய எண்ணிறந்த நூல்களைச் சமற்கிருதத்தால் மொழி பெயர்த்துக் கொண்டு மூல நூல்களை அழிக்கும் அழிப்புத் தொழில் மேற்கொண்டது ஒன்பதாம் தொழிலாயிற்று.

சமய ஊடகங்கள் வாயிலாக இடப்பெயர் இயற்பெயர் கலைச்சொல் ஆட்சிச்சொல் என அனைத்தையும் சமற்கிருத மயமாக்கி உள்நாட்டு மொழிகளுக்குச் சமற்கிருத எழுத்திலக்கணம் வகுத்து மண்ணின் மொழிகளை மண்ணாக்க முயன்றது பத்தாம் தொழிலாயிற்று.

செய்தி ஊடகங்களைத் தம் கையில் வைத்துக் கொண்டு இந்திய வரலாற்றை வேதகாலத்தில் தொடங்குவது பதினொன்றாம் தொழிலாயிற்று.

ஆரியர்கள் தம் தொழில்களை மாற்றிக் கொண்டாலும், வரலாற்றை மாற்ற முடியாது. `வாய்மையே வெல்லும்' என்பது உண்மை.

ஆரிய இந்தியர்

ஆங்கிலேயரின் வருகையால் ஆங்கிலோ இந்தியர் என்னும் மக்கட் பிரிவினர் தனித்து வகைப்படுத்தப்பட்டனர்.

இவர்கள் ஆங்கிலத் தந்தைக்கும் இந்தியத் தாய்க்கும் பிறந்தவர்கள். இதைப் போன்றே கருப்புநிற ஆண்களுக்கும் வெண்ணிறப் பெண்களுக்கும் பிறந்த பிள்ளைகள் ஆரிய இந்தியர் என அழைக்கப்படுவதே முறையாகும்.

இந்தியக் கலப்பினால் இந்திய ஆரியர் தம் வெள்ளை நிறத்தை இழந்தனர். செம்பட்டை தலை முடி கருமையாயிற்று. நீலக் கண்கள் கருங்கண்களாகி விட்டன.

சமண சைவ தாக்கத்தால் மாடு குதிரை திண்பதை விட்டுவிட்டுச் சைவ உணவினராகி விட்டனர். இருக்கு வேத தெய்வங்களை விட்டு, பழந்தமிழ்த் தெய்வங்களை வணங்கத் தொடங்கிவிட்டனர்.

தாம் பேசிய வேத கால மொழியும் மறைந்து விட்டது. இப்படி எல்லா வகையிலும் கருப்பு நிறத்தவர் பண்பாட்டை ஏற்றுக் கொண்ட பிறகு தம்மை ஆரியர் என்று சொல்லிக் கொள்வது எள்ளளவும் பொருந்தாது.

ஆங்கிலோ இந்தியரைப் போன்று ஆரிய இந்தியராகிய பிராமணரும் தம் ஐரோப்பிய உறவையே பெரி தாக நினைக்கின்றனர். இந்திய மொழி எதனையும் இவர்கள் தம் தாய்மொழியாகச் சொல்லிக் கொள்வதில்லை.

இந்நிலையில் மண்ணின் மக்களை மத்திய தரைக் கடல் பகுதியிலிருந்து வந்தவர்கள் எனக் கதை கட்டுவது எள்ளி நகையாடுவதற்குரியது.

இனிமேல் பிராமணர் எனக் குறிப்பிடாமல் ஆரிய இந்தியர் எனக் குறிப்பிட்டால்தான் மண்ணின் மைந்தர் யார் தெற்கே துரத்தப்பட்டவர் என்பது வரலாற்று ஆசிரியர்களுக்குத் தெளிவாக விளங்கும்.

இந்திய வரலாற்றைச் சிந்துவெளி தமிழர் காலத்திலிருந்து தொடங்கி எழுதுவதற்குத் தமிழக அரசும் வரலாற்று ஆய்வாளர்களும் முயற்சி மேற்கொள்ள வேண்டும்.

சிந்துவெளித் தமிழர்கள் தெற்கே கடல் கொண்ட குமரி நாட்டிலிருந்து வடக்கு நோக்கிப் பரவியவர்கள்.

இதனை மேலும் நிறுவுவதற்குப் பல்கலைக் கழகங்களில் சிந்துவெளி திராவிட நாகரிக ஆய்வுக்குத் தனித்துறை ஏற்படுத்தப்பட வேண்டும். ஆதிச்சநல்லூர், கொற்கை, பூம்புகார் போன்ற பகுதிகளில் விரிவாக அகழ்வாராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.

குமரிநாட்டு நாகரிகம், சிந்துவெளி நாகரிகம், வடபுலத்தில் தமிழராட்சி, தென்னக மூவேந்தராட்சி, ஆரியர் வரவு, பிறநாட்டுப் படையெடுப்புகள், என்னும் வகையில் இந்திய வரலாறு மாற்றி எழுதப்பட வேண்டும்.

தெளிவான வரலாறு கையிலிருந்தால் தெளிவில்லாத குழப்பங்களை எவரும் புகுத்த முடியாது. வரலாறு என்பது மண்ணின் மக்களுக்கே உரியது. வந்தேறிகளுக்கு வரலாறு எழுதப்பட்டால் அது மண்ணின் வரலாறு ஆகாது. மண்ணின் வரலாறு எழுதுவதற்கு இந்திய அரசு முன்வர வேண்டும்.


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com