தமிழ்ச்சூழலில், சுதேசமித்திரன் (1882), செந்தமிழ் (1902), விவேகபோதினி (1908), தமிழ்ப் பொழில் (1911), ஆனந்தபோதினி (1915), தாருல் இஸ்லாம் (1923), செந்தமிழ்ச் செல்வி (1925), ஆனந்த விகடன் (1928), சித்தாந்தம் (1930), தனவணிகன் (1930), மணிக்கொடி (1930), கலைமகள் (1932), ஜோதி (1934), தினமணி (1934), சக்தி (1940), கல்கி (1941) போன்ற முக்கியமான தமிழ் இதழ்கள் The Hindu (1878), Indian Express (1932) போன்ற முக்கியமான ஆங்கில நாளிதழ்கள் உள்ளிட்ட பல இதழ்கள் டாக்டர் உ.வே. சாமிநாதையர் வாழ்ந்த காலப்பகுதிக்குள்தான் (1855 - 1942) வெளிவரத் தொடங்கியுள்ளன என்பது வரலாற்று முக்கியத்துவமான நிகழ்வாகும். இந்தியாவின் முதல் மாலைநேர நாளிதழான Madras Mail என்ற பத்திரிகையும் இவரின் காலப் பகுதியில்தான் (1928) சென்னையிலிருந்து வெளிவரத் தொடங்கியுள்ளன என்பதும் இங்கு நினைவு கொள்ளத்தக்கது. தமிழ் இதழியல் துறையின் முக்கியமான காலப்பகுதியாகக் கொள்ளத்தக்கக் காலப்பகுதியும் சாமிநாதையர் வாழ்ந்த காலப்பகுதியும் ஒரு சேர அமைந்திருப்பது வரலாற்றின் முக்கியத்துவம் வாய்ந்த ஒரு நிகழ்வாகும்.

kalaimagal 600சாமிநாதையர், கும்பகோணம் கல்லூரியிலிருந்து சென்னை மாநிலக் கல்லூரிக்குப் பணிமாறுதல் (1903) பெற்று வந்த பின்னர், சென்னையிலேயே இறுதிக்காலம் வரையில் வாழ்ந்து வந்தார். சாமிநாதையரின் வரலாற்றில் 1903ஆம் ஆண்டிற்குப் பின்னரான, அதாவது சென்னை வந்து குடியேறியதற்குப் பின்னரான காலப்பகுதி மிக முக்கியத்துவம் வாய்ந்த காலப்பகுதியாக அவருக்கு இருந்தது. சாமிநாதையர் சென்னைக்கு வந்த பின்னர் அவரது கல்லூரிப் பணி, பழந்தமிழ் நூற்பதிப்புப் பணி முன்பைவிட நாடறியும் நிலைக்கு உயர்ந்ததோடு இதழியல் துறை அறிஞர்கள், அவரோடு நெருங்கிப் பழகும் வாய்ப்பும் அவருக்கு ஏற்பட்டது. இன்னொருபுறம் தமிழ் இதழியல் துறையில் கால்பதிக்கத் தொடங்கிய இதழ்கள், பழந்தமிழ் நூற்சுவடிகளை ஆராய்ந்து அச்சிட்டு வெளியிட்டுத் தமிழின் அடையாளமாகத் திகழ்ந்த சாமிநாதையரைப் பாராட்டி மகிழும் நிகழ்வும் நடந்தேறியது. இதழியல் துறை சாமிநாதையரை எப்படிக் கொண்டாடி மகிழ்ந்துள்ளது என்பதை 6.3.1936 அன்று சென்னையில் நடைபெற்ற அவரின் எண்பதாம் ஆண்டு நிறைவுவிழா செய்தியினை வெளியிட்ட இதழ்களின் பெயர்ப் பட்டியலை நோக்கும் நிலையில் நன்கு புலப்படும்.

ஆரியதர்மம், ஆனந்தவிகடன், இந்துசாதனம், இந்துநேசன், சுதேசமித்திரன், செந்தமிழ், செந்தமிழ்ச்செல்வி, தமிழன், தனவணிகன், தாருல் இஸ்லாம், தினமணி, பாரதஜோதி என்பன போன்ற தமிழ் இதழ்கள், Educational Review, Hindu, Hindu Organ, Indian Express, Indian Review, Madras Mail, Merry Magazine என்பன போன்ற ஆங்கில இதழ்கள் என நாற்பதிற்கும் மேற்பட்ட இதழ்கள் 1936இல் நடைபெற்ற டாக்டர் உ.வே.சாமிநாதையரின் 80ஆம் ஆண்டு நிறைவு விழாவிற்கு வாழ்த்துகளைத் தெரிவித்தும், விழா தொடர்பான செய்திகளை அறிவித்தும், அவரை வாழ்த்தி அன்பர்கள் எழுதிய கட்டுரையை வெளியிட்டும் கடமையாற்றியுள்ளன. தமிழறிஞர் ஒருவருக்கு அதுவரையில் இத்தனை வகையான வாழ்த்துகளையும், செய்திக் குறிப்புகளையும் இதழியல்துறை வெளியிட்டிருக்கவில்லை என்பது இங்கு சுட்டிக்காட்டற்குரியது. சாமிநாதையர் புகழின் உச்சியில் இருந்த காலமாக இவற்றைக் கொள்ளலாம்.

சாமிநாதையர் பதிப்புப் பணியில் ஈடுபடத் தொடங்கிய காலம் முதலே பல இதழ்கள், பல்வேறு நிலைகளில் அவருக்கு உதவிபுரிந்துள்ளன என்பதையும் அவரது வரலாற்றில் பார்க்க முடிகிறது. சாமிநாதையர், இதழியல் துறையைத் தமது பதிப்புப் பணிக்கு எப்படி முறையாகத் துணைக்கொண்டு சென்றுள்ளார் என்பதற்குரிய ஏராளமான சான்றுகள் அவரது வரலாற்றில் கிடைக்கப் பெறுகின்றன. வரலாற்று முக்கியத்துவம் மிக்க சில குறிப்புகளை மட்டும் இங்கு நோக்குவோம்.

சீவகசிந்தாமணிப் பதிப்புப் பணியில் ஈடுபட்டிருந்த காலத்தில், சென்னையில் சுதேசமித்திரன் இதழைத் தொடங்கி (1882) நடத்தி வந்த ஆசிரியர் ஜி. சுப்பிரமணிய ஐயருடைய பழக்கம் சாமிநாதையருக்கு ஏற்பட்டது. அவர் சாமிநாதையர் சீவகசிந்தாமணியைப் பதிப்பித்து வருவதையறிந்து அந்த நூலைப் பற்றியும் இவர் பதிப்பிப்பதைப் பற்றியும் குறிப்பெழுதித் தரச்சொல்லி அதனைச் சுதேசமித்திரன் இதழில் வெளியிட்டிருக்கிறார். இந்தச் செய்தியறிந்த அன்பர்கள் பலர் சாமிநாதையருக்கு உதவி செய்ய முன்வந்துள்ளனர்.

அவ்வப்போது இன்ன இன்ன பகுதி, எதுவரையில் அச்சாகியுள்ளது என்ற செய்தியையும் சில இதழ்களில் சாமிநாதையர் வெளியிட்டு வந்திருக்கிறார். இந்து ஆங்கில நாளிதழில் அது பற்றிய செய்திகள் வெளிவந்ததாகச் சாமிநாதையர் குறிப்பிட்டிருக்கிறார். இதழ்களில் அவ்வப்போது வெளியாகும் சாமிநாதையரின் பதிப்புப் பணி பற்றிய செய்தியைக் கண்டு இவருக்கு அன்பர்கள் பலர் கடிதம் எழுதி பாராட்டவும், பதிப்புப் பணிநிலை பற்றி விசாரிக்கவும் தொடங்கியுள்ளனர். இதனால் முகமறியாத அன்பர்களின் பழக்கமும் உதவியும் இவருக்குக் கிடைக்கப் பெற்றன. இதழ்களில் வெளியிடப்பட்டு வந்த செய்தியால் தமக்கு ஏற்பட்ட நன்மைகள் குறித்து என் சரித்திரத்தின் ஓரிடத்தில் இப்படி எழுதியிருப்பார் சாமிநாதையர்:

தமிழ் நூல்களில் அன்புடையவர்களிடையே இந்தச் செய்தி ஒரு மகிழ்ச்சியை உண்டாக்கிற்றென்றே தோற்றியது. எனக்குப் பழக்கமில்லாதவர்கள் பலர் தங்கள் தங்கள் சந்தோஷத்தைத் தெரிவித்தும் என்னைப் பாராட்டியும் எழுதினார்கள். சிலர் அந்தப் பதிப்பில் சேர்த்துக் கொள்ளும்படி சிறப்புப் பாயிரங்கூட எழுதி அனுப்பிவிட்டார்கள்.

சிறப்புப் பாயிரம் எழுதியனுப்பியவர் நாகூர் தர்கா வித்துவான் ‘மு. செவத்தமரைக்காயர்’ என்பவர் ஆவார். இஸ்லாமியத் தமிழ்பெற்றுள்ள மூன்று அகப்பொருள் கோவை நூல்களுள் ஒன்றான ‘மக்கா கோவை’ என்ற நூலை இயற்றியவர் இவரேயாவார்.

1886ஆம் ஆண்டு ஜூலை மாதத்தில் இந்து ஆங்கில நாளிதழில் ஒரு கடிதம் வெளிவந்திருந்தது. அது ‘சாமிநாதையர் சிந்தாமணியை உரையுடன் பதிப்பிப்பதாகத் தெரிகிறது. அது நச்சினார்க்கினியரது உரையாக இருந்தால்தான் தமிழ்நாட்டினரால் ஏற்றுக் கொள்ளப்படும். சாமிநாதையர் உரையாக இருந்தால் பயன்படாது!’ என்ற செய்தியாக இருந்தது.

எழுதியவர் தம் பெயரை வெளியிடாமல் புனைபெயரில் எழுதியிருந்தார். அதுவரையில் பாராட்டுக்களையே கேட்டு வந்த சாமிநாதையருக்குக் அக்கடிதம் வருத்தத்தை உண்டாக்கியிருக்கிறது. ‘நச்சினார்க்கினியரது உரையோடு வெளியிடுவதாகத் தனிப் பிரசுரத்தால் தெரிவித்திருப்பதோடு அவ்வப்போது பத்திரிகைகளிலும் அறிவித்து வருகிறோம். அப்படியிருக்க ஒன்றும் தெரியாதவர்போல் இப்படி எழுதி விட்டவர் ஏதோ கெட்ட நோக்கமுடையவராகத் தான் இருக்க வேண்டும்’ என்று ஊகித்து ஆறுதல் அடைந்து முன்னினும் கவனமாகப் பதிப்புப் பணியில் ஈடுபட்டு உழைத்திருக்கிறார்.

இந்து இதழில் வெளிவந்த அந்தக் கடிதத்திற்குப் பதில் எழுதுவது அவசியமென்று நண்பர்கள் வற்புறுத்தியிருக்கிறார்கள். தாமே எழுதுவதைவிட வேறு தக்க ஒருவரைக் கொண்டு எழுதுவித்தல் நலமென்று கருதி, உடனே சென்னையிலிருந்த இராமசுவாமி முதலியாருக்கு இதுகுறித்து ஒரு கடிதம் எழுதித் தெரிவித்திருக்கிறார் சாமிநாதையர். அவர் சிறிதும் தாமதிக்காமல், “சீவகசிந்தாமணி மிகப் பழைய காவியம். அதைப் பல பிரதிகளைக் கொண்டு சோதித்து உழைத்து ஆராய்ந்து நச்சினார்க்கினியர் உரையுடனேதான் சாமிநாதையர் பதிப்பித்து வருகிறார். அந்த நூல் வெளிவந்தால் தமிழ் நாட்டுக்கு மிக்க உபகாரமாக இருக்கும்” என்ற கருத்தமையத் தம் கையெழுத்திட்டு ஒரு கடிதம் எழுதி அதை இந்து நாளிதழில் 05.8.1886ஆம் நாள் வெளிவரச் செய்திருக்கிறார். இது குறித்து சேலம் இராமசாமி முதலியார் 4.8.1886இல் இவருக்கு இவ்வாறு ஒரு கடிதம் எழுதியிருக்கிறார்.

My Dear sir,

தாங்களன்புட னெழுதிய கடிதம் கிடைத்தது. இன்டு பேபருக்குக் கடிதம் எழுதியிருக்கிறேன். அது நாளைய தினம் வெளியாகும். குமாஸ்தா ஐயங்காரெழுதிய கடிதம் கிடைத்திருக்குமென்று நம்புகிறேன்.

இவ்விடத்தில் யாவரும் சேக்ஷமம். அவ்விடத்திய சேக்ஷமங்களுக்கு எழுதியனுப்பவும்.

இப்படிக்கு
இஷ்டன்
சே. இராமசுவாமி.

பல்வேறு அன்பர்களின் உதவியாலும் சாமிநாதையரின் பேருழைப்பினாலும் சிந்தாமணிப் பதிப்பு 1887இல் வெளிவந்து தமிழர்களின் நன்மதிப்பைப் பெற்று விளங்கியது.

சாமிநாதையரின் நண்பரும் விவேகசிந்தாமணி இதழின் ஆசிரியருமான சி.வி. சாமிநாதையரும், யாழ்ப்பாணம் விசுவநாத பிள்ளை என்பவரும் சிந்தாமணியின் எந்த பாகங்களுக்கு இப்போது அச்சுப் பணி நடைபெற்று வருகின்றது என்பதைப் பற்றி அவ்வப்போது சுதேசமித்திரன் இதழில் எழுதியும் வந்திருக்கிறார்கள். இதழ்களின் வழியாகச் செய்தி அறிந்து அன்பர்கள் பலர் சிந்தாமணிப் பதிப்புப் பணியைப் பற்றி சாமிநாதையருக்கு அடிக்கடி கடிதம் எழுதிக் கேட்டு வந்துள்ளனர். பல அன்பர்கள் பொருளுதவியும் அளித்துள்ளனர். சாமிநாதையர், ஏட்டுச் சுவடிகளின் பெருந்துணையோடும் பல இதழ்களின் நல்லாதரவோடும் தமது பதிப்புப் பணியைச் சிறப்பாகச் செய்து வந்திருக்கிறார் என்பது அறிதற்குரியன.

சிந்தாமணிப் பதிப்பிற்குப் பின்னர் சில சிற்றிலக்கிய நூல்களைப் பதிப்பித்து வெளியிட்ட சாமிநாதையர், 1889இல் சங்க இலக்கியங்களுள் ஒன்றான பத்துப்பாட்டைப் பதிப்பித்து வெளியிட்டிருக்கிறார். சங்க இலக்கிய நூல்களுள் முதன்முதலாகப் அச்சுவடிவம் பெற்றுவந்த நூல் பத்துப்பாட்டு என்பதால் தமிழ்நாட்டார் பலரின் கவனம் சாமிநாதையரின் பக்கம் குவிந்தன. பத்துப்பாட்டுப் பதிப்பைக் கண்டு பலரும் இவருக்குப் பாராட்டிக் கடிதம் எழுதியிருக்கிறார்கள்; பல அன்பர்கள் இவரின் பதிப்புப் பணிக்குப் பொருளுதவி அளிக்கவிருப்பதாக இவருக்குக் கடிதம் எழுதித் தெரிவித்திருக்கிறார்கள்.

பத்துப்பாட்டின் அச்சுப் பதிப்பைப் பற்றி, பாலைக்காட்டில் அப்போது நகரச் சேர்மனாக இருந்த ராவ்பகதூர் பா. ஐ. சின்னசாமி பிள்ளை என்பவர் மிக விரிவாக, ‘ஹிஸ்டாரிக்ஸ்’ என்னும் புனைபெயரோடு ‘இந்து’ ஆங்கில இதழில் ஒரு மதிப்புரை எழுதியிருக்கிறார். அந்த மதிப்புரை 13-3-1890இல் வெளிவந்திருக்கிறது. இம் மதிப்புரை பத்துப்பாட்டுப் பதிப்பை மேலும் பரவச்செய்திருக்கின்றன.

சாமிநாதையர், பத்துப்பாட்டுப் பதிப்புப் பணியில் ஈடுபட்டிருந்த காலத்தில் சுவடிகளைத் தேடித்திரட்டும் பொருட்டுத் தமிழகத்தின் பல்வேறு ஊர்களுக்குப் பயணம் மேற்கொண்டிருக்கிறார். திருநெல்வேலிப் பக்கத்தில் சுவடி தேடிச் சென்றபோது, எங்கெங்கே சென்று சுவடி தேடிப் பார்த்தேன் என்பதைச் சுதேசமித்திரன் இதழ் வாயிலாக அறிவித்து வந்திருக்கிறார். இந்த அறிவிப்பு பல நன்மைகளைச் சாமிநாதையருக்கு விளைவித்திருக்கிறது.

சுதேசமித்திரனில் சாமிநாதையர் வெளியிட்டுவரும் செய்தியை அறிந்த சென்னை அரசின் கல்வித் துறையில் பணியாற்றிக் கொண்டிருந்த தி.த. கனகசுந்தரம் பிள்ளை என்பவர் ‘தானும் பத்துப்பாட்டுப் பதிப்புப் பணியில் ஈடுபட்டு வருவதாக’த் தெரிவித்து 18-9-88ஆம் நாளில் இவருக்கு ஒரு கடிதம் எழுதியிருக்கிறார். அதற்கு “நீங்கள் உங்கள் முறையிலே அச்சிடுங்கள். நான் என் முறையில் அச்சிடுகிறேன். இருவர் புத்தகங்களையும் வாங்கிப் படிக்கத் தமிழ்நாட்டில் இடம் உண்டு” என்று அவருக்குப் பதிலெழுதிவிட்டுப் பத்துப்பாட்டுப் பதிப்புப் பணியில் ஈடுபட்டு உழைத்திருக்கிறார். தாம் மேற்கொண்டு வரும் பதிப்புப் பணி குறித்து இதழ்களில் செய்தியாக வெளியிட்டு வந்ததனாலேயே ஏனையோர் செய்திடும் பதிப்புப் பணியும் இவருக்கு அவ்வப்போது கிடைத்து வந்தது. இது இவரை மேலும் விழிப்புடனும் பொறுப்புடனும் செயல்பட வைத்திருக்கிறது என்றே சொல்லலாம்.

1892இல் பெருங்காப்பிய நூலுள் ஒன்றான சிலப்பதிகாரத்தையும், 1894இல் எட்டுத்தொகை நூல்களுள் ஒன்றான புறநானூற்றையும், 1895இல் இலக்கண நூல்களுள் ஒன்றான புறப்பொருள் வெண்பாமாலையையும் அச்சிட்டு வெளியிட்ட சாமிநாதையர் 1898இல் மணிமேகலைக்கு உரை எழுதிப் பதிப்பித்து வெளியிட்டிருக்கிறார். இந்தச் செய்தியை அறிந்த அன்பர்கள் பலர் இவருக்குப் பாராட்டிக் கடிதம் எழுதியுள்ளனர். 1899ஆம் ஆண்டு மார்ச்சு மாதம் 7ஆம் நாள் ‘விவேக திவாகரன்’ என்னும் பத்திரிகையில் ‘ஆனந்தன்’ என்ற புனைபெயரில் ‘பௌத்த சமயப் பிரபந்த பிரவர்த்தனாசாரியர்’ என்ற தலைப்பிட்டு ஒரு கட்டுரை எழுதியிருந்தார். இது சாமிநாதையரின் மணிமேகலைப் பதிப்பை விமர்சனம் செய்யும் விதமாக இருந்தது. இவ்வகை விமர்சனங்கள் மேலும் மேலும் அவரைச் செழுமைபெறச் செய்துள்ளன என்பதற்கு அவரது வரலாற்றில் பல சான்றுகள் உள்ளன.

மணிமேகலைப் பதிப்பிற்குப் பின்னர், இன்னும் பல பழந்தமிழ் நூல்களைப் பதிப்பித்து வெளியிடும் ஊக்கத்தைப் பெற்ற சாமிநாதையருக்கு 1903ஆம் ஆண்டு கும்பகோணம் கல்லூரியிலிருந்து சென்னை மாநிலக் கல்லூரிக்குப் பணிமாறுதல் பெற்றுவரும் நிலை ஏற்பட்டது. மாநிலக் கல்லூரியில் பணி ஏற்ற பின்னர், கல்லூரிக்குச் சென்றுவரும் வகையில் திருவல்லிக்கேணியில் சொந்த வீடு ஒன்றை வாங்கி நிரந்தரமாகச் சென்னையில் வாழ்ந்து வரலானார் என்பது அனைவரும் அறிந்த செய்தியாகும். சென்னை வாழ்க்கை அவருக்கு மேலும் பல நன்மைகளையும் புகழையும் சேர்த்தன; இதழியல் துறையோடு நெருங்கிப் பழகும் வாய்ப்பு முன்பைவிட மேலும் கூடியது. சாமிநாதையரின் சென்னை வாழ்க்கையின் தொடக்கமும் பல புதிய தமிழ் இதழ்களின் தொடக்கமும் ஒரு சேர அமைந்திருந்தது இங்கு சுட்டிக்காட்டற்குரியது.

சென்னை வாழ்க்கைக்குப் பின்னர், செந்தமிழ் இதழை இவர் சீராட்டி வளர்த்தார், கலைமகள் சாமிநாதையர் கையில் தவழ்ந்து வளர்ந்து நடைபோட்டது. ஆனந்தவிகடன் இவரை ஆராதித்துப் போற்றியது என்று சொன்னால் அது மிகையாகாது. இந்த மூன்று இதழ்களும் சாமிநாதையரின் படைப்புகள் பலவற்றை வெளியிட்டுச் சாமிநாதையரின் தமிழ்த் தொண்டிற்குத் துணைநின்றன. ஆடல் பாடல், ஆனந்த போதினி, கல்கி, கலைமகள், சக்தி, சித்தாந்தம், சிவநேசன், சுதேசமித்திரன், தனவணிகன், தாருல் இஸ்லாம், தென்னிந்திய வர்த்தமானி, மணிக்கொடி, விவேகபோதினி, ஜயபாரதி, ஜோதி, ஹனுமான் போன்ற பல இதழ்கள் சாமிநாதையரின் படைப்புகளை வெளியிட்டுத் தமிழுக்குக் கடமையாற்றின.

சிங்கப்பூரிலிருந்து வெளிவந்து கொண்டிருந்த ‘முன்னேற்றம்’ என்ற இதழும், மலேசியாவிலிருந்து வெளிவந்து கொண்டிருந்த ‘தமிழ்நேசன்’ என்ற இதழும் சாமிநாதையரிடமிருந்து கட்டுரையைக் கேட்டுப்பெற்று வெளியிட்டுப் பெருமை கொண்டன.

1906ஆம் ஆண்டு சாமிநாதையரின் தமிழ்ப் பணியைப் பாராட்டி ‘மகாமகோபாத்தியாயர்’ என்ற பட்டத்தை ஆங்கில அரசு அளித்துப் பெருமை கொண்டது. தமிழில் அதுவரையில் யாரும் பெற்றிராத பட்டத்தைச் சாமிநாதையர் பெற்றது குறித்துப் பலரும் பாராட்டி எழுதினார்கள்; இதழுலகம் இவரைப் பாராட்டி மகிழ்ந்தன. சுதேசமித்திரன் இதழ் சாமிநாதையரை இப்படிப் பாராட்டி எழுதியிருந்தது.

“ஸ்ரீமான் ஸ்வாமிநாதையர் தமது பாஷாபிமானம், தேசாபிமானம் என்னும் பெரிய ஆயுதங்களைக் கொண்டே அசௌகர்யங்களை வென்று உயர்வுற்றிருக்கிறார் என்பதில் ஐயமில்லை. இவருடைய அருந் திறமையை நன்கு மதித்துக் கவர்ன்மெண்டார் இவருக்குப் புதுவருஷப்பட்டமாக மகாமகோபாத்தியாயர் என்ற உயர்பட்டமளித்திருப்பதைப் பெருமகிழ்ச்சியுடன் தெரிவிக்கிறோம். மகாமகோபாத்தியாய ஸ்வாமிநாதையர் அவர்கள் இன்னும் நெடுங்காலம் இருந்து, அவருக்கு நெடுங்காலம் முன்னரே கிடைத்திருக்க வேண்டியதாகிய மதிப்பு முழுதையும் அடைந்தவராகி, இத்தமிழுலகத்தாருக்குப் புதிய புதிய விருந்துகள் ஊட்டிக் கொண்டிருப்பா ரென்று மனப்பூர்த்தியாக விஸ்வசிக்கின்றோம்” 1906, ஜனவரி, 30

பெரும்பாலான பழந்தமிழ் நூல்களைப் பதிப்பித்து வெளியிட்டு முடித்திருந்தும், கல்லூரிப் பணியிலிருந்து ஓய்வு பெற்றும் இருந்த காலப்பகுதியில் மேலும் இதழியல் துறையோடு நெருக்கம் கொண்டிருந்தார். தமிழின் ஆகச்சிறந்த நூல்களையெல்லாம் அயராத உழைப்பின் வழியாகப் பதிப்பித்து வெளியிட்டுத் தமிழின் அடையாளமாகத் திகழ்ந்த சாமிநாதையரை இதழியல் உலகம் இன்னும் போற்றிக் கொண்டாடியுள்ளன. பல இதழ்கள் தமது அடையாளத்தை முன்னிறுத்திக்கொள்ள சாமிநாதையரிடமிருந்து கட்டுரைக் கேட்டுப்பெற்று வெளியிட்டுக்கொண்ட வரலாறும் உண்டு. சாமிநாதையர் தமது சமகால இதழ்கள் அத்தனையுடனும் நெருங்கிய தொடர்புகொண்டிருந்தார் என்பது நாம் அறிந்துகொள்ளத்தக்க செய்தியாகும்.

உத்தமதானபுரத்திலிருந்து மாயூரம் சென்று (1870) மகாவித்துவான் மீனாட்சிசுந்தரம் பிள்ளை அவர்களிடம் மாணவராகச் சேர்ந்து பயின்ற காலம் தொடங்கி, கல்லூரிகளில் (1880 - 1919) தமிழாசிரியராகப் பணியாற்றியது வரையிலான அனுபவங்களையும், இந்தப் பணிகளுக்கிடையில் செய்துவந்த பழந்தமிழ்நூல் பதிப்பாக்கத்தில் ஏற்பட்ட அனுபவங்களையும், ஆசிரியர் பணியிலிருந்து ஓய்வுபெற்ற பின்னர் இறுதிக் காலங்களில் தமக்கு ஏற்பட்ட அனுபவங்களையும் கட்டுரைகளாக எழுதி இதழ்களில் வெளியிட்டுவரத் தொடங்கியது ஒரு முக்கிய வரலாற்று நிகழ்வாகும்.

சாமிநாதையர் கட்டுரைகள் வழியாக உரைநடையில் ஒரு புதிய பாதையை அமைத்துக் காட்டினார். 1930 - 1942 எனும் கால இடைவெளியில்தான் சாமிநாதையரின் கட்டுரைகள் பல இதழ்களில் வெளிவந்திருக்கின்றன. பன்னிரண்டு ஆண்டு கால இடைவெளியில் நூற்றைம்பதிற்கும் மேற்பட்ட கட்டுரைகளை அவர் எழுதி வெளியிட்டிருக்கிறார் என்பது நினைவுகொள்ளத் தக்கது. சாமிநாதையரின் வயதைக் கணக்கில் கொண்டு நோக்கும்பொழுது 75ஆம் வயது முதல் 87ஆம் வயது வரையிலான காலப்பகுதியில்தான் கட்டுரைகள் எழுதி இதழ்களில் வெளியிட்டிருக்கிறார் என்பது தெரிகிறது.

சாமிநாதையர், 1935ஆம் ஆண்டு பாரதியின் 14ஆம் ஆண்டு நினைவு தினத்தில் தினமணி வெளியிட்ட பாரதி மலருக்கு ‘முள்ளால் எழுதிய ஓலை’ என்ற கட்டுரையை எழுதி அளித்திருக்கிறார். அதன் பின்னர் தினமணி வெளியிடும் ஒவ்வொரு ஆண்டு மலருக்கும் தவறாமல் கட்டுரை எழுதி அளித்திருக்கிறார் சாமிநாதையர். 1936ஆம் ஆண்டு மலருக்குப் ‘பெரிய வைத்தியநாதையர்’ என்ற கட்டுரையையும், 1937ஆம் ஆண்டு மலருக்குக் ‘கும்மாயம்’ என்ற கட்டுரையையும், ‘மணிமேகலையும் மும்மணியும்’ என்ற கட்டுரையை 1938ஆம் ஆண்டு மலருக்கும் எழுதி அளித்திருக்கிறார். தாருல் இஸ்லாம், ஆடல் பாடல், சிவநேசன், ஹனுமான் ஆகிய இதழ்களின் ஆண்டு மலரிலும் சாமிநாதையரின் கட்டுரைகள் தவறாமல் இடம்பெற்றன. தீபாவளி, பொங்கல் மலர்களில் இவரிடம் கட்டுரை கேட்டு வெளியிட்டுக்கொண்ட இதழ்கள் பலவாகும்.

டாக்டர் சாமிநாதையரின் எண்பதாம் ஆண்டு விழா, 1935, மார்ச்சு, 6ஆம் நாள் நடத்தப்பெற்றுள்ளது. இந்த விழாவைக் கொண்டாடுவதற்கு அன்றைய பொதுப் பணித்துறை அமைச்சராக இருந்த கனம் பி. டி. ராஜன் அவர்களைத் தலைவராகக் கொண்ட ஒரு விழாக்குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த விழாக் குழுவில் டி. சிவராமசேதுப்பிள்ளை, பெ. நா. அப்புசுவாமி, எஸ். வையாபுரிப்பிள்ளை ஆகிய மூவரும் உறுப்பினர்களாகவும், கே. வி. கிருஷ்ணசாமி ஐயர் பொருளாளராகவும் இருந்து செயல்பட்டுள்ளனர்.

சாமிநாதையரின் எண்பதாம் ஆண்டு விழா குறித்த செய்தியைப் பல்வேறு இதழ்கள் வெளியிட்டு வாழ்த்தியுள்ளன. தினமணி நாளிதழ் 14.2.1935ஆம் நாள் ‘டாக்டர் உ.வே.சாமிநாதையர்’ என்ற தலைப்பில் இவ்வாறு வெளியிட்டுச் சாமிநாதையருக்குத் துணைநின்றது.

தமிழ்நாட்டின் இலக்கியச் செல்லவம் அழிந்து போகாதவாறு பாதுகாத்துத் தந்தவர்களுள் மகாமகோபாத்தியாய உ.வே. சாமிநாதையரும் ஒருவர். அவருக்கு 6-3-35 தேதியோடு 80-ஆவது ஆண்டு பூர்த்தியாகிறது. அந்த ஆண்டுவிழாவைச் சிறப்பாகக் கொண்டாடவும், ஞாபகார்த்த நிதி திரட்டவும் தமிழறிஞர் சிலர் முன்வந்திருப்பதைப் பாராட்டுகின்றோம்.

ஸ்ரீதாக்ஷிணாத்யகலாநிதி சாமிநாதையர் வெளியிட்டுள்ள பழந்தமிழ் நூல்கள், அவரது பெயர் நீண்டகாலம் தமிழகத்தில் உலவுமாறு செய்யுமெனின், அவரது காலத்திலேயே இப்பெருந் தமிழ்க்கிழவருக்குத் தமிழகம் நன்றி தெரிவிக்கக் கடமைபட்டிருக்கிறது.

டாக்டரவர்கள் இன்னும் நீண்ட காலம் ஆயுளோடிருந்து அவரது அரிய தமிழ்த் தொண்டை ஆற்றுவாராக!

சாமிநாதையரின் எண்பதாம் ஆண்டு விழா குறித்த செய்தியை மையமிட்டு அவரது அன்பரொருவர் ‘தமிழன்’ என்ற பெயரில் ‘தமிழ் பழுத்த பழம்’ என்று எழுதி யிருந்த ஒரு கட்டுரை 23.2.35இல் தினமணி நாளிதழ் வெளியிட்டு மகிழ்ந்திருக்கிறது. அந்தக் கட்டுரையின் ஓரிடத்தில் சாமிநாதையர் பற்றி இப்படி எழுதியிருப்பார் அந்த அன்பர். காலம் கடந்தும் கருத்தில் கொள்ளத்தக்க குறிப்பாக இது விளங்குகிறது.

ஸ்ரீமகாமகோபாத்தியாய சாமிநாதையரவர்கள் வேறு, தமிழ் வேறு என்பவர்கள் அவர்களை அறியாதவர்கள்; தமிழையும் அறியாதவர்களென்றே சொல்ல வேண்டும். பழைய இலக்கியப் புதையல்களை எடுத்துத் துலக்கிப் புதுப் பவுன்களாக அடித்துத் தந்த அவர்களுடைய எண்பதாவது ஆண்டு நிறைவைத் தமிழ் நாட்டினர் சிறப்பாகக் கொண்டாட வேண்டும்....தமிழர் வீரம், தமிழர் அரசியல் முறை, தமிழ்ப் புலவர் பெருந்தன்மை, தமிழ் மக்கள் மாண்பு, தமிழர் நாகரிகம், தமிழர் கைத்தொழில் முயற்சி, தமிழர் மொழி முன்னேற்றம் - இன்னும் உங்களுக்குத் தெரிந்ததெல்லாம் அடுக்கிக் கொள்ளுங்கள் - இவ்வளவும் அந்த மகான் பிறந்திராவிட்டால் நாம் பேசுவதெங்கே? நேற்றுப் பிறந்த பாஷைகளெல்லாம் அவையேறி நிற்க, சதங்களிலும் மாலைகளிலும் அந்தாதிகளிலும் மறைந்தொடுங்கித் தமிழ் மொழியை அறியாமல் காப்பாற்றிவிட்ட தமிழ் வள்ளலுக்கு நீங்கள் என்ன செய்யப்போகிறீர்கள்? நாட்டில் நூற்றுக்கணக்கான இடங்களில் அவர்களுடைய உருவச் சிலை நின்று விளங்குவதை நாம் கண்டு கண்குளிரவேண்டாமா? ஒரு சிலையாவது நம்மால் நிறுத்த முடியுமென்ற வீரம் பேச அன்பர்கள் முன்வருவார்களாக!

1948இல் சாமிநாதையருக்குச் சிலை நிறுவிய நிகழ்வு இங்கு நினைத்தற்குரியது. சாமிநாதையரின் எண்பதாம் ஆண்டு நிறைவு விழாவினைத் தமிழகத்தின் பல்வேறு ஊர்களிலும் வெளிநாடுகளிலும் கொண்டாடி மகிழ்ந்தார்கள். பல இதழ்கள் எண்பதாம் ஆண்டு நிறைவு விழாச் செய்தியினை வெளியிட்டுச் சாமிநாதையரை வாழ்த்தி மகிழ்ந்தன. இந்து ஆங்கில நாளிதழ் சாமிநாதையரை இவ்வாறு வாழ்த்தி செய்தி வெளியிட்டுத் தொண்டாற்றியுள்ளது.

The eighty-first birthday of Mahamahopadhyaya Dr. V. Swaminatha Aiyar falls on the 6th March next. It is proposed to celebrate the occasion by unveiling a portrail of the Mahamahopadhyaya and presenting him with an address in appreciation of his labours in the cause of the promotion of the study of Classical Tamil literature. As the Birthday Celebration Committee observe. The Mahamahopadhyaya has accomplished, “single handed and at enormous personal sacrifices the work of deciphering, editing and publishing the great classies of the Golden Age of Tamil literature, with the result that our conception of the culture of the ancient Tamils is very different to-day from what it was when he began his life’s work.” The Committee appeal for adeguate financial aid to enable the work of puplication of Tamil classies to be continued. We trust lovers of Tamil will co-operate with the Committee in celebrating the birthday in a fitting manner (The Hindu, 7-2-35).

எண்பதாம் ஆண்டு நிறைவு விழா காணும் சாமிநாதையரை வாழ்த்தி K. Vyasa Rao எழுதியிருந்த ‘A Consecrated Career Pandit Swaminatha Aiyar’ என்ற கட்டுரையையும் இந்து ஆங்கில நாளிதழ் 05.03.1935ஆம் நாள் வெளியிட்டுச் சாமிநாதையருக்குப் பெருமை சேர்த்திருக்கிறது. எண்பதாம் ஆண்டு நிறைவு விழா நடைபெற்று முடிந்தவுடன் இந்து நாளிதழ் இவ்வாறு செய்தி வெளியிட்டிருந்தது.

FITTING tributes were paid Mahamahopadhyaya Dr. V. Swaminatha Aiyar yesterday at the public function organised to felicitate him on his attaining his eighty – first birthday. As the result of his strenuous labours, extending to over half-a- century, many a palm-leaf record in Tamil has been made to yield its secret and a flood of light thrown on life in the Sangham age. The Mahamahopadhyaya brought to bear on the task infinite patience, critical acumen and a rare scholarship. It was as difficult to get at the palm-leaf records as to decipher them. In saving precious works from oblivion, he has rendered invaluable service to Tamil literature. His example and his enthusiasm, we hope, will act as a spur to younger men to play their part in restoring Tamil to its ancient glory. We wish the Mahamahopadhyaya many more years of useful activity (THE HINDU, 7-3-35.)

சாமிநாதையரின் எண்பதாம் ஆண்டு நிறைவு விழா நடைபெறுவதற்கு முன்னும் பின்னுமாக அது குறித்த செய்தியை வெளியிட்டு இந்து ஆங்கில நாளிதழ் சாமிநாதையருக்குத் துணைநின்றிருப்பது கவனிக்கத்தக்கதாகும். சாமிநாதையரின் பழந்தமிழ் நூற்பதிப்புப் பயணத்தின், தனிப்பட்ட வாழ்க்கைப் பயணத்திலும் உடனிருந்து கடமையாற்றியது மட்டுமின்றி, அவர் எழுதிப் பதிப்பித்த பல நூல்களுக்கு மதிப்புரை வெளியிட்டும் துணைபுரிந்துள்ளன.

1936, ஏப்ரல், 2ஆம் நாள் ‘இந்து சாதனம்’ இதழ் ‘நான் கண்டதும் கேட்டதும்’ என்ற நூலுக்கும், 1936, செப்டம்பர், 28ஆம் நாள் ‘ஈழகேசரி’ புதியதும் பழையதும், கோபாலகிருஷ்ண பாரதியார், கனம் கிருஷ்ணையர் ஆகிய மூன்று நூல்களுக்கும் மதிப்புரை வெளியிட்டிருக்கின்றன.

இந்து ஆங்கில நாளிதழில் 1936, அக்டோபர், 11ஆம் நாள் ‘கோபாலகிருஷ்ண பாரதியார், புதியதும் பழையதும் என்ற இரு நூல்களுக்கும், 1937, மார்ச், 28ஆம் நாள் மகாவைத்தியநாதையர் என்ற நூலுக்கும் மதிப்புரை வெளிவந்திருக்கின்றன.

மகாவைத்தியநாதையர் என்ற நூலுக்குரிய மதிப்புரை 1937, ஜனவரி, 17ஆம் நாள் ‘இந்து நேசன்’ இதழிலும், 1937, ஜனவரி, 21ஆம் நாள் ‘தனவணிகன்’ இதழிலும் 1937, ஜனவரி, 28ஆம் நாள் ‘தாருல் இஸ்லாம்’ இதழிலும் வெளிவந்திருக்கின்றன. இறுதியாக ஒன்றைச் சொல்லி இந்தக் கட்டுரையை நிறைவு செய்யலாம்.

1935, டிசம்பர், 6ஆம் தேதி நடைபெற்ற சாமிநாதையரின் எண்பதாம் ஆண்டு நிறைவு விழாவின்போது ஏராளமான அன்பர்கள் வாழ்த்துப் பாடல்களையும் அவர் பதிப்புப் பணிக்கு உதவும் வகையில் நிதி உதவியையும் அளித்து வாழ்த்தி வணங்கி மகிழ்ந்தனர்.

சாமிநாதையர் எழுதியிருந்த மகாவித்துவான் மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்களின் சரித்திரத்தைப் படித்து இன்புற்ற அன்பர் ஒருவர், சாமிநாதையரின் வரலாறு அதனினும் பன்மடங்கு அரிய, உயரிய செய்திகளையும் தமிழின் சரித்திரத்தையும் வெளிப்படுத்தித் தமிழுலகுக்கு வழிகாட்டியாக நின்று நிலவுமென்ற கருத்தில் அவர் அச்சரித்திரத்தை அவரே எழுதி வெளியிட வேண்டுமென்ற தமது விருப்பத்தைச் சபையினருக்கு ரூ.501 அனுப்பி வேண்டியிருந்தார்.

பெயர் வெளியிட விரும்பாத அன்பர் அளித்த அத்தொகை விழாக் குழுவின் சார்பில் சாமிநாதையருக்கு வழங்கப்பட்டது. மேலும் பல அன்பர்கள் சதாபிஷேக வாழ்த்துக் கட்டுரையில் அவர் சரித்திரத்தை அவரே எழுதி வெளியிட வேண்டுமென்று சாமிநாதையருக்கு வேண்டுகோள் விடுத்திருந்தனர். சதாபிஷேக விழா நடைபெற்று முடிந்த ஏழு ஆண்டுகள் கழித்து ஆனந்த விகடன் இதழில், தமிழ் சுயசரிதை வரலாற்றில் பெரும் புகழ்பெற்று விளங்கும் ‘என் சரித்திரம்’ 1940, டிசம்பர் 6 முதல் அத்தியாயம் வெளிவரத் தொடங்கி, 122 அத்தியாயங்கள் வரை வெளிவந்து பெருமை பெற்றது. இதழியல் துறையின் துணையோடு பல ஆக்கப்பூர்வமான பணிகளைச் செய்துவந்த சாமிநாதையர், இறுதியாகத் தம் சுயசரித்திரத்தைத் தமிழ் வரலாற்றின் பேராவணமாக அளித்துச் சென்றிருக்கிறார். உ.வே. சாமிநாதையருக்கு வாழ்க்கையின் இறுதிவரையில் இதழியல் துறை துணைநின்று பெரும்பங்காற்றியிருப்பதைத் தமிழர்கள் அனைவரும் நன்றியோடு நினைத்துப் போற்றுதல் நலமாகும்.