கோவை மாநகரத்தின் நீர் விநியோக உரிமையை 26 ஆண்டு கால குத்தகைக்கு எடுத்து உள்ளது சூயஸ் என்ற பிரெஞ்சு நிறுவனம். இத்திட்டத்தின் மொத்த மதிப்பு 3216 கோடி. முதல்கட்டமாக கோவை மாநகரத்தின் 60 வார்டுகளில் இத்திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. 100 கிலோமீட்டர் சுற்றுவட்ட பரப்பில், மொத்தம் 1, 50, 000 இணைப்புகள் கொடுக்கப்பட உள்ளன. மொத்தமாக கோவை மாநகரத்தின் 1200 கிலோமீட்டர் நீளத்திற்கு சுற்றுவட்ட பரப்பில் இந்த நீர் விநியோகம் இருக்கும். கோவை மாநகரத்திற்கு தேவையான நீர் விநியோகிக்கும் நீர்த்தேக்கங்கள் பராமரிப்பு மற்றும் மேல்நிலை நீர் தேக்க தொட்டிகள் பராமரிப்பு அனைத்தும் சூயஸ் நிறுவனம் வசம் சென்றுவிடும். இதன் மூலம் கோவை நகருக்கு குடிநீர் வழங்கும் மூன்று அணைகள் அதாவது பில்லூர், சிறுவாணி மற்றும் ஆழியாறு அணைகள் சூயஸ் நிறுவனத்தின் கட்டுப்பாட்டுக்குள் வரும். அது மட்டுமல்லாமல் கோவையை சுற்றி உள்ள குளங்கள், குட்டைகள் மற்றும் கிணறுகள் என அனைத்து நீர்நிலைகளும் சூயஸ் நிறுவனத்தின் கட்டுப்பாட்டின் கீழ் வரும்.

wataer privatizationஇதோடு அல்லாமல் வீட்டுக்கு நீர் இணைப்புகள் கொடுத்தல், நீர்மானிகள், வால்வுகள் அமைத்தல் என்று அனைத்து பணிகளையும் செய்ய உள்ளது சூயஸ் நிறுவனம். 1997ல் தொடங்கப்பட்ட இந்நிறுவனம் டெல்லி மாளவியா பகுதியில் நீர் விநியோகத்தை செய்து வருகிறது. தற்போது கோவை மட்டுமல்லாமல் பெங்களூரு, கொல்கத்தா, தேவநகரியிலும் நீர் விநியோகத்தை தொடங்க உள்ளது.

மேற்கண்டவை அனைத்தும் நம் கற்பனை அல்ல. பத்திரிக்கைகளில் வெளியானவை. நீர் விநியோகத்தில் ஈடுபடும் சூயஸ் நிறுவனம் ஏற்கனவே பொலிவியாவிலும், அர்ஜென்டினாவிலும் நீர் விநியோகத்தை எடுத்து இருந்தது. அங்கு உள்ள அனைத்து நீர் நிலைகளையும் தனது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்தது. மேலும் நீர் மானிகளை அமைத்து நீர் விநியோகம் செய்தது. அதன்பின் நீரின் விலையை கூட்டிக்கொண்டே சென்றது. வாங்க முடியாத மக்கள் குளங்கள், ஆறுகளில் நீர் எடுத்தனர். இதனையும் தடுத்தது சூயஸ் நிறுவனம். காரணம் ஆறுகள், குளங்கள் அனைத்தும் ஒப்பந்தப்படி சூயஸ் நிறுவனத்தின் கட்டுப்பாட்டில் இருந்தன.

ஒரு கட்டத்தில் மிகப்பெரிய மக்கள் போராட்டம் வெடித்தது. இந்தப் போராட்டத்தை பொலிவியா மற்றும் அர்ஜென்டினா அரசுகள் துப்பாக்கி முனையில் ஒடுக்கப் பார்த்தது. ஆனால் மக்களின் இடைவிடாத போராட்டத்தின் காரணமாக சூயஸ் நிறுவனம் அந்நாடுகளை விட்டு துரத்தியடிக்கப்பட்டது. இதுதான் சூயஸ் நிறுவனத்தின் தென் அமெரிக்க கண்டத்தின் வரலாறு. இப்படி மக்களால் துரத்தியடிக்கப்பட்ட சூயஸ் தான் கோவை நகருக்கு தேவையான நீரை வழங்குகிறதாம்.

தண்ணீர் விநியோகத்திற்கான கட்டணத்தை மாநகராட்சிதான் வசூலிக்கும் என்பதால் மக்கள் அச்சப்படத் தேவையில்லை என்கிறார் கோவை மாநகராட்சி ஆணையர். ஆனால், உண்மை என்ன? பிற நாடுகளில் சூயஸ் நிறுவனமே கட்டணத்தை வசூலித்ததால் மக்களின் கடுமையான எதிர்ப்புக்கு உள்ளாகியது. அதுபோல் இங்கும் நடந்துவிடக் கூடாது என்பதற்காக உத்தியை மாற்றியுள்னர். அரசே சேவைக் கட்டணம் என்ற பெயரில் மக்களிடம் பணத்தை வசூல் செய்து சூயஸ் நிறுவனத்திற்கு கொடுக்கும் ஏஜென்டாக செயல்பட உள்ளது.

மேலும், கோவை மாநகராட்சியோ இந்நிறுவனத்துடன் செய்துள்ள ஒப்பந்தத்தை வெளியிட மறுக்கிறது. இந்த திட்டம் குறித்து கருத்து தெரிவிப்பவர்கள் உடனடியாக கைது செய்யப்படுகிறார்கள். இது குறித்து சமூக வலைத்தளத்தில் கருத்து பரப்புவர்கள்மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்து உள்ளது கோவை மாநகராட்சி. உண்மையில் சரியான திட்டமெனில் கோவை மாநகராட்சி ஒப்பந்தத்தை வெளியிட மறுப்பதேன்? கோவையும் அடுத்த பொலிவியாவாகவோ அல்லது அர்ஜென்டினவாகவோ மாற உள்ளது என்பதுதான் உண்மை.

காசுள்ளவனுக்கே தண்ணீர்

கல்வி, மருத்துவம், குடிநீர், போக்குவரத்து என அனைத்து சேவைத்துறைகளையும் அரசு தனியார் கையில் தாரைவார்த்துவிட வேண்டுமென்று உலக வங்கி, உலக வர்த்தகக் கழகம் தொடர்ச்சியாக வலியுறுத்தி வருகிறது. ஏனெனில் இந்தியாவில் உள்ள பல்வேறு தேசிய இனங்களின் வளங்களை கொள்ளையடிப்பதற்காக மக்களுக்கு தெரியாமலேயே நாடாளுமன்றத்தில் காட் (வணிக மற்றும் கட்டண விகிதத்திற்கான பொது ஒப்பந்தம்) எனும் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது டெல்லி அரசு. இதன் தொடர்ச்சியே இந்த தண்ணீர் தனியார்மயமாக்கல் நடவடிக்கை.