கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக பிரான்ஸ் நாட்டில் நடைபெற்றுவரும் மஞ்சளங்கிப் போராட்டம் சர்வதேச அளவில் கவனத்தைப் பெற்றுள்ளது. அதன் எதிரொலியாக  பல்வேறு நாடுகளில் அதற்கு ஆதரவாக போராட்டங்கள்  நடைபெற்று வருகிறது. இதனால் ஏகாதிபத்தியங்கள் கலங்கிப்போய் உள்ளன.  இப்போராட்டச் செய்திகளை   வெளி உலகிற்கு செல்லாமல் தடுப்பதற்காக பிரான்ஸ் அரசு ஈபிள் கோபுரம் உட்பட பல்வேறு வகையான சுற்றுலாத் தலங்களை உடனடியாக மூடியது.  தமிழ் ஊடகங்களும் இச்செய்திகளை இருட்டடிப்பு செய்து வருகின்றன.

paris 600ஏன் இந்தப் போராட்டம்?

உலகமயமாக்கல் கால கட்டத்திற்கு பின்பு பிரான்சில் சமூகச் சூழல் முற்றிலும் தலைகீழாக மாறியுள்ளது. தொடர்ச்சியாக பெட்ரோல், டீசல் மற்றும் எரிவாயுவின் விலை ஏற்றம்  காரணமாக பொருட்களின் விலை பன்மடங்கு உயர்ந்தது.  கார்ப்பரேட் நிறுவனங்கள் தங்களின் பொருட்கள், சேவைகள் ஆகியவற்றின் விலையை பன்மடங்கு கூடியது. இதனால் மக்களின் வாழ்வாதார நிதி(cost of Living)  மிகவும் அதிகமானது. இது ஒருபுறம் என்றால் மற்றொருபுறம் மலிவான உழைப்பு சக்திக்காக ஆசிய, ஆப்பிரிக்க நாடுகளிலிருந்து பெருமளவில் தொழிலாளர்கள் வேலைக்கு அமர்த்தப்பட்டனர். இந்நிகழ்வால் பிரான்ஸ் நாட்டின் வேலைவாய்ப்பின்மை(2018 ஆம் ஆண்டு நிலவரப்படி) ஒன்பது சதவீதமாக உயர்ந்தது. மேலும் பிரான்ஸ் அரசு பல்வேறு வகையான சமூக நலத்திட்டங்களுக்கு ஒதுக்கும் நிதியைப் பெருமளவு குறைத்தது.                                                                                                                                    

இது போதாதென்று பிரான்ஸ் அரசு எரிபொருள் வரி, கார்பன் வரி என்று பல்வேறு வகையான வரிகளை மக்கள் மீது சுமத்தியது. இது ஒருபுறம் என்றால் மறுபுறம் கார்ப்ரேட் நிறுவனங்களுக்கு பல கோடி மில்லியன் யூரோ அளவிற்கு மானியம், வரிச்சலுகை மற்றும் கடன் தள்ளுபடி என்று அனைத்து வகையான சேவைகளையும் செய்தது பிரான்ஸ் அரசு. இதனால்  பல லட்சக்கணக்கான ஏழை மற்றும் நடுத்தர மக்கள்  தெருவிற்கு தள்ளப்பட்டுள்ளனர்.

இந்தச் சூழ்நிலையில் தான் கடந்த மே மாதம் பிரிச்சிலா  என்ற பெண்மணி, பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மக்ரான் தலைமையிலான அரசு  கொண்டுவந்த எரிபொருள் விலை

ஏற்றத்திற்கு எதிரான ஒரு புகார் மனுவை இணையத்தில் பதிவேற்றம் செய்தார். பதிவேற்றம் செய்த உடனே கிட்டத்தட்ட மூன்று லட்சம் மக்கள் இதற்கு  ஆதரவளித்தனர். அதன்பின் இக்கருத்து மக்களிடையே காட்டுத் தீ போல் பரவியது. அதன் தொடர்ச்சியாக நவம்பர் மாதம் 14ஆம் தேதியன்று ஒரு சிறிய போராட்டம் நடத்துவது என சமூக வலைத்தளங்களில் அழைப்பு விடுக்கப்பட்டது . அதன்பின்னர்  நவம்பர் 17  தொடங்கிய இப்போராட்டம், விலையேற்றத்தை திரும்பப் பெற்ற பின்பும் ஓய்ந்தபாடில்லை. இதுவரையில் எந்த போராட்டங்களிலுமே  கலந்து கொள்ளாத பல்லாயிரக்கணக்கான ஏழை மற்றும் நடுத்தர வர்க்க மக்கள் வீதியில் இறங்கி போராடிக் கொண்டுள்ளனர்.   ஐந்து பேர் போராட்டக் களத்தில் இறந்த பின்பும் கூட  போராட்டத்தின் வீரியம் சிறிதளவும் குறைந்தபாடில்லை.

இமானுவேல்  மக்ரான் அரசின் முன்பு போராட்டக்காரர்கள்   முன்வைத்துள்ள கோரிக்கைகள்.

  1. வீடற்றவர்கள் இல்லாத நிலைமையை உருவாக்க வேண்டும்.
  2. அனைவருக்கும் நிரந்தர வேலை வேண்டும்.
  3. அனைத்து முதியோர்களுக்கும் ஓய்வு ஊதியம் 1200 யூரோ கொடுக்க வேண்டும்
  4. எரிபொருள் விலை உயர்வை நிறுத்த வேண்டும்.
  5. குறைந்தபட்ச ஊதியம் 1200 யூரோ அளவுக்கு நிர்ணயம் செய்ய வேண்டும்
  6. இமானுவேல் மக்ரான் உடனடியாக பதவி விலக வேண்டும்.

மேற்கண்ட கோரிக்கைகளை பிரான்ஸ் அரசு செவிசாய்க்காமல் போராட்டக்காரர்களை மிகக்கடுமையாக ஒடுக்கி வருகிறது.  செயற்கையாக வன்முறையைத் தூண்டுவது, குண்டு வெடிப்புகளை ஏற்படுத்துவது போன்ற காரியங்களைச் செய்து போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவர நினைக்கிறது .                     

பிரான்சில் நடக்கும் போராட்டத்தைப் போலவே வடக்கு ஆப்பிரிக்க நாடான துனிசியாவிலும் மக்கள் போராட்டங்கள் வெடித்துள்ளன.  உலகமயமாக்கல் காலகட்டத்தில் பல்வேறு நாடுகளை ஈவிரக்கமற்ற வகையில் சுரண்டி வருகிறது ஏகாதிபத்தியங்கள். மனித குலத்தை அழிவுப்பாதைக்கு கொண்டு செல்லும் இத்தகைய ஏகாதிபத்தியங்களுக்கு முடிவு கட்டும் நாள் வெகு தொலைவில் இல்லை.