தலித் இலக்கியம் என்பது அம்பேத்கர் நூற்றாண்டு தந்த புதிய வகை இலக்கிய வடிவம் ஆகும். நீக்ரோவியம் என்றும், கறுப்பு இலக்கியம் என்றும் அறியப்பட்ட உலக இலக்கிய வகையில் இந்தியச் சமூகத்திற்குள் தலித் இலக்கியம் ஒரு முக்கிய வகை இனமாக அறியப்படுகிறது.

'தலித்" என்கிற சொல் சுட்டுகிற விரிந்த பொருளில் "தல்" என்கிற சொல் "மண்" என்கிற பொருளைக் குறிக்கிறது. "தலித்" என்றால் மண்ணின் மைந்தன் என்று பொருள். சாதி அமைப்புக்கு எதிரான, சாதி அமைப்புக்கு வெளியே இருக்கிற சாதி ஒழிக்கப்பட வேண்டும் என்ற கருத்தியலைத் தலித் படைப்பாளிகள் கொண்டிருக்கின்றனர். சாதி அமைப்பால் தாங்கள் பட்ட இன்னல்களை, வலிகளை, வதைகளை எழுத்து வடிவில் பதிவு செய்கிற முறை 90களில் தமிழகம் முழுமையும் வடிவெடுத்தன.

மராட்டியத்திலும், கன்னடத்திலும், ஆந்திராவிலும் இன்ன பிற பகுதிகளிலும் அதற்கு முன்பாகவே இந்த தலித் இலக்கிய வரவு தீயென பற்றிக்கொண்டது. தமிழிலும் அதற்கான விதைகள் ஊன்றப்பட்டன. அதில் ராஜ்கௌதமன், ரவிக்குமார், சுப்பையா, ராஜமுருகு பாண்டியன், உஞ்சை அரசன், பாப்லோ அறிவுக்குயில், சிவகாமி, பாமா, அழகிய பெரியவன், பிரதீபா ஜெயச்சந்திரன், கே.ஏ.குணசேகரன், விழி.பா.இதயவேந்தன் போன்றவர்கள் தலித் இலக்கியத்தை முன்னோடியாக எடுத்துச் சென்றனர். தொடர்ந்து என்.டி.ராஜ்குமார், ம.மதிவண்ணன், கோமேத. சாமிநாதன், அன்பாதவன், அபிமானி, அரங்க. மல்லிகா, சுகிர்தராணி, ஆதவன் தீட்சண்யா, பாரதி நிவேதன், ஏ.பி. வள்ளிநாயகம், பூவிழியன், யாழன்ஆதி போன்ற தலித் படைப்பாளிகள் தலித் இலக்கியத்தையும், தலித் திறனாய்வுகளையும், தலித் பண்பாட்டையும், தலித் அரசியலையும் செழுமைப்படுத்தி வருகிறார்கள். இந்த ஒட்டு மொத்த வெளிப்பாட்டின் இலக்காக தலித் விடுதலை என்பது உள்ளீடாக வைக்கப்படுகிறது. இதற்கான அடிப்படை தத்துவத்தை வழங்குவது அம்பேத்கரியம் என்னும் கருத்தியல் ஆகும். இதற்கு மேலும் துணைபுரிவது பெரியாரியம் மற்றும் மார்க்சியம் ஆகும்.

தமிழில் சாதி எதிர்ப்பு இலக்கியம் என்பது இன்றோ, நேற்றோ தோன்றியது அல்ல. சாதி தோன்றிய நாளிலிருந்தே அதற்கான எதிர்ப்பும் தோன்றிவிட்டது எனலாம். ஒளவையார், வள்ளுவர், சித்தர்கள், உத்திர கோசமங்கை, அயோத்திதாசப் பண்டிதர், இன்ன பிற தலித் படைப்பாளிகள் சாதியை மிகத் தீவிரமாக எதிர்த்து, சமத்துவ நெறியை உருவாக்குவதற்கான முயற்சிகளில் ஈடுபட்டு வந்துள்ளனர்.

ஆனால், சாதியைத் தாங்கி நிற்கிற கருத்தியல்களான பார்ப்பனியம் (அ) இந்துசமயம் (அ) இவற்றை நியாயப்படுத்தக்கூடிய வேத, இதிகாச, புராணங்கள் மற்றும் பகவத்கீதை, மனுநீதி உள்ளிட்ட அனைத்தையும் அம்பேத்கர் கேள்விக்கு உட்படுத்துகிறார். எனவே, சாதி ஒழிப்பை மையமாகக் கொண்டு சாதி ஆதிக்க வன்முறைகளைப் பதிவு செய்கிற தலித்ó இலக்கியம் அம்பேத்கரியத்தின் விளைவாகும்
.
அம்பேத்கரியத்தை உள்வாங்கிக் கொள்ளாத, சாதி அமைப்பை கேள்விக்கு உட்படுத்தாத, பார்ப்பனியக் கருத்தியலை மனதில் கொண்டு எழுதுகிற எதுவும் தலித் இலக்கியம் ஆகாது. பிறப்பால் ஒருவர் தலித்தாக இருப்பது மட்டுமே தலித் இலக்கியப் படைப்பாளியின் தகுதி ஆகாது. ஒருவர் உணர்வால் தலித்தாகவும், சிந்தனை முறையால் சாதி அமைப்பை எதிர்க்கிறவராகவும் இருப்பவரே தலித் படைப்பாளி ஆவர்.

தலித் இலக்கியத்திற்கான வகைமை, அழகியல் (அ) வடிவம் போன்ற கோட்பாடுகளைத் தாங்கி வருவது அல்ல. எழுத்துமுறையை, தனக்கான இலக்கிய மதிப்பை, சிந்தனையைத் தலித் இலக்கியம் தன்னுள் தானே உருவாக்கிக் கொள்கிறது. அது நாவலாகவோ, சிறுகதையாகவோ, கவிதையாகவோ, நாடகமாகவோ, கட்டுரையாகவோ அல்லது நடவுப் பாடல்களாகவோ கூட இருக்கலாம்.

யாருடைய அங்கீகாரத்திற்காகவும் எழுதப்படுவது அல்ல தலித் இலக்கியம். யார் சொல்லியும் தலித் இலக்கியம் தேங்கி விடுகிற பலவீனமான எழுத்தாகவும் இல்லை. மேலும் மேலும் தலித் இலக்கியம் தன்னை செழுமைப்படுத்திக்கொண்டு வளர்ந்து வருவது சிலருக்கு இடையூறாக இருக்கிறது. இதைச் சகித்துக்கொள்ள முடியாதவர்கள்தான் தலித் இலக்கியத்தின் மீதான காழ்ப்பை அவ்வப்போது வெளியிட்டு வருகிறார்கள். தலித்களைப் பற்றி எழுதுவதால் மட்டமே அது தலித் இலக்கியம் ஆகிவிடாது. மாறாக தலித் விடுதலையை எவன் முன்னெடுக்கிறானோ, அவனே சிறந்த தலித் படைப்பாளியாகத் திகழ்கிறான்.

தமிழ் இலக்கியம் என்பது பார்ப்பன, வெள்ளாள இலக்கியப் பதிவுதான் என்பதை யாரும் மறுக்க முடியுமா? தலித்களையோ, பெண்களையோ இழிவாகச் சித்தரிக்காத எந்த இலக்கியமாவது தமிழில் உண்டா? ஒவ்வொரு இலக்கிய வகையின் உள்ளேயும் ஊடுருவிப் பார்த்தால் சாதி நாற்றமெடுத்துக் கிடப்பதை அறியலாம்.

ஏராளமான தலித் இதழ்கள், புதிய தலித் படைப்பாளிகளை உருவாக்கிக் கொண்டுதான் இருக்கின்றன. அவ்வகையில் புதிய கோடாங்கி, தலித்முரசு, தலித், கவிதாசரண், தமிழ்மண் போன்றவைகள் தமிழ்ச் சூழலில் ஆற்றி வருகிற பங்களிப்பை அவ்வளவு எளிதாகப் புறக்கணித்துவிட முடியாது.

தற்போதைய சூழலில் தலித் அரசியல் கூர்மைப் படுத்தப்பட்டு வருகிறது. தலித் விடுதலையை நோக்கிய நகர்வாக அதிகப்படியான தலித் இலக்கியங் கள் சாதி ஒழிப்பை மையமாக வைத்து இயங்கி வருவதைத் தமிழக அரசியல் சூழலில் நாம் காணலாம்.

பெண்ணியத்தின் ஒரு பகுதியாக இன்றைக்கு தலித் பெண்ணியம் முன்வைக்கப்பட்டுள்ளது. இதற்கான ஒரு விரிவான கருத்தரங்கையும், கருத்தியல் வடிவத் தையும் உள்ளடக்கிய 'தலித் பெண்ணியம்" என்கிற நூலை மதுரையில் இயங்கி வருகிற தலித் ஆதார மையம் வெளியிட்டு இருக்கிறது. அம்பேத்கர் பிறந்த மாதமான ஏப்ரல் மாதத்தை தலித் வரலாற்று மாதமாகக் கொண்டா டத் தொடங்கியுள்ளனர். அயோத்திதாசரின் சிந்தனைகள் பல்வேறு கோணங்களில் ஆய்வுக்கு உட்படுத்துகின்ற போக்கு தற்போது இருந்து வருகிறது. இவையெல்லாம் தலித் இலக்கியம், தலித் அரசியல் வளர்ச்சிக்கான உந்துதல் ஆகும்.

தலித் தலைமை என்பதுகூட தலித் கருத்தியலை உள்வாங்கிக் கொண்ட தலைமையாகவும், அதிலும் குறிப்பாக ஆகக் கடைசியில் ஒடுக்கப் பட்டிருக்கிற தலித் பெண் தலைமையே இந்திய மானுடத்தை விடுதலை செய்யக்கூடிய ஆற்றல் மிக்கதாக அமையும் என்பதும் காலத்தின் தேவையாக இருக்கிறது.

எனவே வருங்காலம் என்பது தலித்கள் அதிகாரத்தினை நோக்கி நகர்வதற்கான காலமாகவும், தலித் அதிகாரம் என்பது சாதி ஒழிந்த சமத்துவ உலகத்திற்கான அதிகாரமாகவும் அமையும் என்பதும் குறிப்பிடத் தக்கது.

வெண்மணியாயினும், விழுப்புரம் ஆயினும், மேலவளவு ஆயினும், கொடியங்குளமாயினும், திண்ணியமாயினும், கயர்லாஞ்சியாயினும், இது போன்று கனன்று கனிந்த தலித்களின் வலியை தலித் அல்லாத யாராலும் உணர முடியாது. மேலும் சாதிய வன்கொடுமைகள் நிறுத்தப்படுகின்றவரை தலித் இலக்கியத்தின் தேவையை யாரும் நிறுத்த முடியாது. இது காலத்தின் கட்டாயம்.

மார்க்சியக் கருத்தியல் என்பது கார்ல் மார்க்ஸ் கோட்பாட்டை அடிப்படையாகக் கொண்டு இயங்குகிறது. உளவியல் கருத்தியல் என்பது ஃபிராய்ட் கோட்பாட்டை அடிப்படையாகக் கொண்டு இயங்குகிறது. அதேபோல் தலித்தியக் கருத்தியல் என்பது அம்பேத்கரின் கோட்பாட்டை, சிந்தனையை அடி ஒட்டியே அமைய முடியும்.

Pin It